ஒரு கம்யூனிஸ நாட்டில் கடவுள்மீதான விசுவாசத்தால் வழிநடத்தப்படுதல்
ஆன்ட்ரேகாட்லெட்ஸ் சொன்னபடி
நான் 1966-ன் கோடைகாலத்தின்போது, என்னுடைய சொந்த நகரில்—செக்கோஸ்லோவாகியாவிலுள்ள ப்ராக்கில்—ஒரு சுற்றுப்பயணத்தை நடத்திக்கொண்டிருந்தேன். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட என்னுடைய விசுவாசத்திற்கு வைராக்கியமுள்ளவனாய், எங்கள் நகரின் கவரத்தக்க சர்ச்சுகளையும் ஆலய கட்டடங்களையும் அந்தத் தொகுதியினருக்கு நான் காண்பிக்கையில் கடவுளைப் பற்றி பேசினேன்.
“நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரா?” என்று அமெரிக்காவைச் சேர்ந்த, பொருளியல் பேராசிரியர் ஒருவர் கேட்டார்.
“இல்லை,” என்று நான் பதிலளித்தேன். “நான் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. நான் ஒரு ரோமன் கத்தோலிக்.”
கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவனாகுதல்
கல்வி, அரசியல், மருத்துவம் ஆகிய துறைகளில் பிரபலமாக இருந்த பெற்றோரால் நான் வளர்க்கப்பட்டேன். 1944-ல் நான் பிறந்ததற்குக் கொஞ்சகாலத்திற்குப் பின்னும், அதற்கடுத்த வருடம் இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கு சற்றுப் பின்னரும், என்னுடைய தந்தை ஒரு கம்யூனிஸவாதி ஆனார். உண்மையில், கம்யூனிஸ சீர்திருத்த இயக்கத்தின் இணை ஸ்தாபகராக அவர் இருந்தார்; 1966-ல், ப்ராக்கிலுள்ள பொருளியல் பல்கலைக்கழகத்தின் வேந்தரானார். இரண்டு வருடங்களுக்குப் பின், அவர் செக்கோஸ்லோவாகியாவின் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்; அதற்குள்ளாக ஒரு கம்யூனிஸ நாடாகவும் நாத்திக நாடாகவும் அது இருந்தது.
என் தாயார், சிறிதும் நெறிபிறழாத நேர்மையுள்ள, திறமைவாய்ந்த பெண்மணி. அவர் ஒரு கண் அறுவை மருத்துவராக, அந்த நாட்டிலேயே மிகச் சிறந்தவர் என்று அறியப்பட்டவராக இருந்தார். இருந்தாலும், தேவையிலிருப்பவர்களுக்கு தன் சிகிச்சையை இலவசமாகச் செய்தார். அவர் இவ்வாறு சொல்வதுண்டு: “ஒருவருக்கு எந்தெந்த வரங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அவை சமுதாயம் மற்றும் நாட்டின் நன்மைக்கேதுவாய் பயன்படுத்தப்பட வேண்டும்.” அவர் தன் க்ளினிக்கில் இருக்க வேண்டும் என்பதற்காக, நான் பிறந்தபோது, அவர் மகப்பேறு விடுப்பைக்கூட எடுக்கவில்லை.
நான் கல்வியில் சிறந்துவிளங்கும்படி எதிர்பார்க்கப்பட்டேன். தந்தை இவ்வாறு கேட்பார்: “வேறு யாராவது உன்னைவிட சிறந்து விளங்குகிறார்களா?” நானும் அந்தப் போட்டியை அனுபவித்து வரலானேன், ஏனென்றால் தலைசிறந்து விளங்கியதற்குரிய கல்விசார்ந்த விருதுகளை நான் அடிக்கடி பெற்றேன். ரஷ்யன், ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளை நான் கற்றேன்; கம்யூனிஸ உலகிலும் அதற்கு அப்பாலும் பரவலாக பயணம் செய்தேன். பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகளென மதக் கருத்துக்களை எதிர்த்து வாதிடுவதை விரும்பினேன். மேலும் நான் முழுமையாக நாத்திகத்தைத் தழுவியபோதும், அதன் அரசியல்பூர்வ நடவடிக்கைகளை வெறுக்கலானேன்.
எனக்கு 21 வயதாக மட்டுமே இருந்தபோது, 1965-ல் இங்கிலாந்திற்கு நான் மேற்கொண்ட பயணம் என்மீது ஓர் ஆழ்ந்த பாதிப்பைக் கொண்டிருந்தது. ஒப்புயர்வற்ற ஒருவர் மீது தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை உறுதியான நம்பிக்கையுடனும் தர்க்கரீதியாகவும் ஆதரித்துக்காக்கும்படி வாதாடும் மக்களை சந்தித்தேன். ப்ராக்குக்குத் திரும்பி வந்தபின், எனக்குப் பழக்கமாயிருந்த ரோமன் கத்தோலிக்கர் ஒருவர் இவ்வாறு ஆலோசனை கூறினார்: “கிறிஸ்தவத்தைப் பற்றி வாசிக்காதீர்கள். பைபிளை வாசியுங்கள்.” நான் அதையே செய்தேன். அதை முடிப்பதற்கு எனக்கு மூன்று மாதங்கள் எடுத்தன.
பைபிள் எழுத்தாளர்கள் தங்கள் செய்திகளை அளித்த விதமே என்னைக் கவர்ந்தது. அவர்கள் நேர்மையானவர்களாகவும், தங்கள் குறைகளையே எடுத்துரைப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் பேசிய மகத்தான எதிர்காலம், ஒரு தனிப்பட்ட கடவுளால் மட்டுமே யோசித்து, அளிக்க முடிந்த ஒன்று என்று நான் நம்பத் தொடங்கினேன்.
மாதக்கணக்கில் சொந்தமாக பைபிளைப் படித்து, தியானித்தப்பின், என் தந்தையையும் நண்பர்களையும் எதிர்ப்பட தயாராய் இருந்ததாக உணர்ந்தேன். புதிதாகக் கண்டுகொண்ட என் விசுவாசத்தை அவர்கள் சவால்விடுவார்கள் என்று எனக்குத் தெரியும். அதற்குப் பின்னர், நான் பேராவலுடன் மதமாற்றுபவனாக செயல்படலானேன். என்னருகில் எவர் இருந்தாலும் சரி—தொடக்கத்தில் சொன்ன அந்த அமெரிக்க பேராசிரியரைப் போல—என்னுடைய மதமாற்ற முயற்சியை எதிர்ப்பட வேண்டும். என்னுடைய விசுவாசத்தைக் குறித்து எல்லாரும் அறிந்திருக்கும்படியாக, சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் உருவம் ஒன்றை என் படுக்கைக்கு மேலாக சுவரில் மாட்டியும் வைத்திருந்தேன்.
என்றபோதிலும், ஆர்வமிக்க கம்யூனிஸவாதியாக இருந்த என் தந்தையைப் போலவே நான் அதிகப்படியாக இருந்ததால், ஒரு கிறிஸ்தவனாக இருப்பது எனக்குக் கொஞ்சம்கூட பொருந்தாது என்று என் தாயார் மறுப்புத் தெரிவித்தார்கள். ஆனால், நான் விடாப்பிடியாக இருந்தேன். நான் பைபிளை இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் வாசித்தேன். மேலுமாக முன்னேற எனக்கு வழிநடத்துதல் அவசியம் என்று அதற்குள்ளாக உணர்ந்துகொண்டேன்.
என்னுடைய தேடல் பலனளிக்கப்பட்டது
நான் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுடன் தொடர்பு கொண்டேன். சர்ச்சின் கோட்பாடுகளை எனக்குப் போதிப்பதே ஓர் இளம் பாதிரியின் முக்கியமான அக்கறையாக இருந்தது; அதை நான் முழுமையாக ஏற்றுக்கொண்டேன். பின்னர், 1966-ல்—என் தந்தைக்கு வெட்கம் ஏற்படும் வகையில்—நான் முழுக்காட்டப்பட்டேன். என்மீது தண்ணீரைத் தெளித்த பின்னர், நான் பைபிளை வாசிக்க வேண்டுமென அந்தப் பாதிரி ஆலோசனை கூறினார்; ஆனால் அவர் மேலுமாகச் சொன்னார்: “போப்பானவர் ஏற்கெனவே பரிணாமக் கொள்கையை ஏற்றிருக்கிறார், ஆகவே கவலைப்பட வேண்டாம்; நாம் கோதுமையிலிருந்து களைகளைப் பிரித்துக் கண்டுகொள்ளலாம்.” எனக்கு விசுவாசத்தை அளித்த புத்தகம் சந்தேகிக்கப்பட வேண்டும் என்பது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.
இதற்கிடையில், 1966-ன் இலையுதிர் காலத்தில், ஒரு கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் பேசி, அவரிடம் என் நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொண்டேன். அவரும் பைபிளை நன்கு அறிந்தவராக இருந்தார்; அர்மகெதோனைப் பற்றி என்னிடம் பேசினார். (வெளிப்படுத்துதல் 16:16) அவர் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொண்டிருந்ததாகச் சொன்னார்; சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட அந்த சுற்றுப்பயணத்தை நான் நடத்திக்கொண்டிருந்தபோது முதல்முதலாக நான் கேள்விப்பட்டிருந்த அவர்கள். என்றபோதிலும், பலம்வாய்ந்த, செல்வ செழிப்புள்ள, மக்கள் திரளுள்ள என்னுடைய ரோமன் கத்தோலிக்க சர்ச்சுடன் ஒப்பிடுகையில் அவருடைய தொகுதியை முக்கியத்துவமற்றதாக நான் கருதினேன்.
கூடுதலான கலந்தாலோசிப்புகளின்போது, மூன்று அடிப்படை முக்கியத்துவம்வாய்ந்த பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தோம். முதலாவது, ரோமன் கத்தோலிக்க சர்ச்சானது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தின் சுதந்தரவாளியாக இருக்கிறதா? இரண்டாவது, முடிவான அதிகாரம் செலுத்துவதாய் எதைக் கருத வேண்டும்—என் சர்ச்சையா அல்லது பைபிளையா? மூன்றாவதாக, எது சரி, படைப்பைப் பற்றிய பைபிள் பதிவா அல்லது பரிணாமக் கொள்கையா?
எங்கள் இருவருக்குமே விசுவாசத்தின் ஊற்றுமூலமாக பைபிள் இருந்ததால், கத்தோலிக்க சர்ச்சின் போதனைகள், ஆரம்ப கிறிஸ்தவத்தின் போதனைகளிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டவை என்று என்னை நம்பவைப்பதில் என் நண்பனுக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. உதாரணமாக, கவனிக்கத்தக்க சர்ச் போதனையாகிய திரித்துவம், இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்று கத்தோலிக்க மூலங்கள்கூட ஒத்துக்கொள்கின்றன என்பதை நான் அறிந்தேன்.
முடிவான அதிகாரம் செலுத்துவதாய் எது இருக்க வேண்டும்—சர்ச்சா அல்லது பைபிளா—என்ற அதோடு சம்பந்தப்பட்ட அடுத்த கேள்விக்கு அது எங்களைக் கொண்டு வந்தது. செயின்ட் அகஸ்டினுடைய மேற்கோளை நான் எடுத்துப் பார்த்தேன்: “ரோமா லோக்கூட்டா எஸ்ட்; கௌஸா ஃபினீட்டா எஸ்ட்,” அதாவது “ரோம் தீர்மானம் எடுத்துவிட்டது; அந்த விஷயம் முடிந்தது.” ஆனால் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளே நம்முடைய பிரதானமான அதிகாரமாக இருக்க வேண்டும் என்பது என் நண்பரின் கருத்து. அப்போஸ்தலன் பவுலுடைய வார்த்தைகளை நானும் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது: “தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.”—ரோமர் 3:4.
பரிணாமத்திற்கு எதிராக புதிய உலகு என்ற தலைப்பை உடைய தெளிவில்லாத, தட்டச்சிடப்பட்ட பிரதி ஒன்றை முடிவாக என் நண்பர் என்னிடம் தந்தார். செக்கோஸ்லோவாகியாவில் பிற்பட்ட 1940-களில் யெகோவாவின் சாட்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் தங்கள் பிரசுரங்களின் நகல்களை எடுத்து, யார் அதைப் பெறுவார்கள் என்பதில் கவனமாக இருந்தார்கள். இந்தச் சிறிய புத்தகத்தை நான் வாசித்ததும், சத்தியம் அதில் இருந்தது என்று அறிந்தேன். என்னுடைய நண்பர் என்னோடு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தார். “கடவுளே சத்தியபரராக விளங்கச் செய்யுங்கள்” என்ற பைபிள் படிப்பு உதவி புத்தகத்தின் பல பக்கங்களை ஒவ்வொரு முறையும் எனக்குத் தற்காலிகமாக பயன்படுத்துவதற்கு அவர் தருவார்; நாங்கள் சேர்ந்து இந்தப் பக்கங்களைக் கலந்தாலோசிப்போம்.
இந்தக் கலந்தாலோசிப்புகளை நாங்கள் தொடங்கி சிறிது காலத்திற்குப்பின்—1966-ன் கிறிஸ்மஸ் காலப்பகுதியில்—மேற்கு ஜெர்மனியிலிருந்து நண்பர்கள் என்னைச் சந்திக்க ப்ராக்குக்கு வந்தார்கள். எங்களுடைய கலந்தாலோசிப்புகள் ஒன்றில், போரை நாடும் மாய்மாலக்காரர்கள் என்பதாக அவர்கள் கிறிஸ்தவர்களை இகழ்ந்து கூறினார்கள். “கம்யூனிஸ வார்ஸா ஒப்பந்தத்திலுள்ள நாட்டில் வாழும் ஒரு கிறிஸ்தவனாக உரிமைபாராட்டும் உமக்கு விரோதமாக, NATO நாடுகளைச் சேர்ந்த போர்வீரர்களாக நாங்கள் போரிடலாம்,” என்று அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய முடிவு: “மாய்மாலமானவர்களாக இருப்பதைவிட வெறுப்பு மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பது நல்லது.” அவர்கள் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கும் என்று நான் உணர்ந்தேன். ஆகவே என்னுடைய அடுத்த பைபிள் படிப்பின்போது, போர் மற்றும் அதற்கான பயிற்சியைக் குறித்ததில் உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று நான் என் நண்பரைக் கேட்டேன்.
நான் எதிர்ப்பட்ட தீர்மானங்கள்
என்னுடைய நண்பரின் தெளிவான விளக்கத்தைக் கேட்டு ஸ்தம்பித்துப் போனேன். என்றாலும், ‘பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்பதற்கான’ பைபிள் போதனைக்கு நான் இசைந்து செல்ல வேண்டும் என்பது, என்னுடைய வாழ்க்கையிலும் எனக்கு உத்தேசிக்கப்பட்ட வாழ்க்கை தொழிலிலும் திடீர் மாற்றத்தைக் குறிக்கும். (ஏசாயா 2:4) இன்னும் ஐந்து மாதங்களில் நான் மருத்துவ பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெறவிருந்தேன்; அதற்குப் பின்னர் ஒரு காலப்பகுதிக்குக் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடும்படி கேட்கப்படுவேன். நான் என்ன செய்ய வேண்டும்? நான் பதற்றமடைந்தேன். ஆகவே கடவுளிடம் ஜெபம் செய்தேன்.
நாட்கணக்கான மிக ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், உண்மை கிறிஸ்தவர்கள் சமாதானத்திற்குரியவர்களாய் இருக்க வேண்டும் என்ற தேவைக்கு இசைந்து செல்லாமல் இருப்பதற்கு என்னால் எந்த காரணத்தையும் காண முடியவில்லை. பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம்பெற்று வந்தபின், நான் மனச்சாட்சியினிமித்தம் படைத்துறைப் பணியை மறுப்பவர் என்பதாகத் தீர்க்கப்படும் வரையாக நான் ஒரு மருத்துவமனையில் ஒரு பதவியை ஏற்றுக்கொள்ளலாமென தீர்மானித்தேன். ஆனால் இரத்தத்திலிருந்து விலகி இருப்பதைக் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது என்று பின்னர் கற்றறிந்தேன். என்னுடைய வேலை, இரத்தமேற்றுதல்களைக் கொடுப்பதில் என்னை ஈடுபடுத்தக்கூடும் என்பதை உணர்ந்தவனாய், அந்த மருத்துவமனையில் வேலை செய்வதை விட்டுவிடும்படி தீர்மானித்தேன். (அப்போஸ்தலர் 15:19, 20, 28, 29) பரவலான பொது மானக்கேடை நான் அனுபவிப்பதில் என்னுடைய தீர்மானம் விளைவடைந்தது.
என்னுடைய தந்தை, அவருடைய அரசியல் ஈடுபாட்டுத் தொழில்முறையை நாசமாக்க வழிதேடி, வேண்டுமென்றே தொல்லை தருபவனாக நான் இருக்கவில்லை என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டபின், அவர் குறுக்கிட்டு என்னுடைய கட்டாய ராணுவ சேவை ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்கப்படும்படி செய்தார். 1967-ன் அந்த கோடைகாலம் எனக்குக் கடினமானதாக இருந்தது. என்னுடைய நிலைமையை எண்ணிப்பாருங்கள்: நான் ஒரு புதிய பைபிள் மாணவன்; நான் இதுவரை அறியவந்திருந்த ஒரே ஒரு சாட்சியாகிய எனக்கு படிப்பு நடத்துகிற அவர், அந்தக் கோடைகாலத்திற்கு வெளியூர் சென்றிருந்தார். மேலும் “கடவுளை சத்தியபரராக விளங்கச் செய்யுங்கள்” என்ற புத்தகத்தின் ஒருசில அதிகாரங்களை மட்டுமே என்னுடைய தனிப்பட்ட படிப்புக்காக அவர் விட்டுச் சென்றிருந்தார். இவையும் என்னுடைய பைபிளும் மட்டுமே, ஆவிக்குரிய வழிநடத்துதலுக்கான என்னுடைய ஊற்றுமூலங்கள்.
பின்னர், நான் மற்ற சாட்சிகளுடன் பழக்கப்பட்டேன்; மார்ச் 8, 1968 அன்று, யெகோவா தேவனிடம் என்னுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலமாக அடையாளப்படுத்தினேன். அதற்கடுத்த வருடம், இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்காக ஒரு இரண்டு வருட பாடதிட்டத்திற்கான வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, சாட்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டிராத நாடாகிய இங்கிலாந்துக்குச் சென்று அங்கு ஆவிக்குரிய விதத்தில் முன்னேற்றமடையலாம் என்று சிலர் ஆலோசனை அளித்தனர். அதேநேரத்தில், நான் ஒரு சிறந்த வாழ்க்கைத் தொழிலைக் கொண்டிருக்கவும் தயாராகலாம். இருந்தாலும், செக்கோஸ்லோவாகியாவில் தேவைப்படும் அளவுக்கு என்னுடைய சேவை இங்கிலாந்தில் தேவைப்படவில்லை என்பதாக ஒரு கிறிஸ்தவ மூப்பர் என்னிடம் சொன்னார். ஆகவே நான் உலகப்பிரகாரமான என் கல்வியைத் தொடருவதற்கான அந்த வாய்ப்பை ஏற்க மறுக்கும்படி தீர்மானித்து, தலைமறைவாகச் செய்யப்படும் பிரசங்க வேலையில் உதவும்படி செக்கோஸ்லோவாகியாவிலேயே இருந்துவிட்டேன்.
1969-ல், கிறிஸ்தவ கண்காணிகளுக்கு விசேஷித்த போதனையை அளிக்கக்கூடிய ஒரு ராஜ்ய ஊழிய பள்ளிக்கு வரும்படி அழைக்கப்பட்டேன். அதே வருடத்தில், செக்கோஸ்லோவாகியாவிலேயே மிகச் சிறந்த இளம் மருந்தியல் வல்லுநராக ஒரு உதவித்தொகையை வென்றேன். அதன் விளைவாக, ஸ்விட்ஸர்லாந்தில் சர்வதேச மருந்தியல் சங்க மாநாட்டிற்குச் சென்றிருந்தேன்.
ஓர் அறிவியலாளர் தன் கருத்துக்களை மாற்றுகிறார்
1970-ல் நான் ஆஜராகியிருந்த ஒரு விரிவுரையின்போது, ஃப்ரான்டிஷெக் விஸ்காச்சில் என்ற பெயருள்ள ஓர் அறிவியலாளர், நரம்பு தூண்டுதல் கடத்தல் (nerve-impulse transmission) என்ற சிக்கல்வாய்ந்த பொருளை விவரித்தார். ஒரு உயிரிக்கு எப்போதெல்லாம் ஒரு தேவை ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் ஒரு தீர்வு அளிக்கப்பட்டது. “இயற்கை, அந்த வசியக்காரி இதை எப்படிச் செய்வதென்று அறிந்திருக்கிறாள்,” என்று அவர் முடிவாகச் சொன்னார்.
அந்த விரிவுரைக்குப்பின், நான் அவரை அணுகினேன். “உயிருள்ள காரியங்களில் காணப்படும் மிகச்சிறந்த திட்டமைப்பிற்கான பாராட்டு கடவுளுக்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?” என்று நான் கேட்டேன். அவர் ஒரு நாத்திகனாக இருந்ததால், நான் கேட்ட கேள்வி அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் வேறு வகையான கேள்விகளால் பிரதிபலித்தார். அவர் கேட்டார்: “தீமை எங்கிருந்து வந்தது?” மேலும், “எத்தனையோ பிள்ளைகள் அநாதைகளாக இருப்பதற்கு யார் பொறுப்பாளி?”
நியாயமான, பைபிள்-அடிப்படையிலான பதில்களை நான் அளித்தபோது, அவருடைய ஆர்வம் தூண்டப்பட்டது. ஆனால், பைபிளின் நூலாசிரியர்தான் படைப்பாளர் என்பதை மக்கள் எளிதில் கண்டறிந்து கொள்ளும்வண்ணம், ஒரு செல்லின் அமைப்பைப் பற்றிய விவரம் போன்ற திட்டவட்டமான அறிவியல்பூர்வ தகவலை பைபிள் ஏன் அளிப்பதில்லை என்று அவர் கேட்டார். “விவரிப்பதா அல்லது படைப்பதா, எது அதிக கடினமானது?” என்று நான் பதிலுக்குக் கேட்டேன். மனிதன் இங்கு வந்தது பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தை அவருக்கு வாசிக்கக் கொடுத்தேன்.
அதை மேலோட்டமாக வாசித்தப்பின், அது சாதாரணமானது என்றும் சரியற்றது என்றும் ஃப்ரான்டிஷெக் பழித்துக் கூறினார். பலதார மணம், தாவீதின் விபசாரம், மற்றும் ஓர் அப்பாவி மனிதனை தாவீது கொன்றது பற்றி பைபிள் சொல்வதைக் குறித்தும் அவர் குறைகூறினார். (ஆதியாகமம் 29:23-29; 2 சாமுவேல் 11:1-25) கடவுளுடைய ஊழியர்களுடைய தவறுதல்களையும் அவர்களுடைய நேரடியான மீறுதல்களையும்கூட, பைபிள் நேர்மையாக அறிக்கை செய்கிறது என்பதைச் சுட்டிக்காண்பித்து, நான் அவருடைய ஆட்சேபங்களை மறுத்துக் கூறினேன்.
கடைசியில், எங்களுடைய கலந்தாலோசிப்புகள் ஒன்றில், ஒருவர் நல்ல உள்நோக்கை உடையவராய் இல்லையென்றால், ஒருவருக்கு சத்தியத்திற்கான பிரியம் இல்லையென்றால், எந்த வகையான தர்க்கமோ நியாயவாதமோ, கடவுள் இருப்பதைக் குறித்து அவரை நம்பவைக்க முடியாது என்று ஃப்ரான்டிஷெக்கிடம் சொன்னேன். நான் போவதற்குத் தயாரானபோது, அவர் என்னை நிறுத்தி, ஒரு பைபிள் படிப்புக்காகக் கேட்டுக்கொண்டார். அவர் மறுபடியுமாக, மனிதன் இங்கு வந்தது பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தை—இந்த முறை திறந்த மனதுடன்—வாசிக்கப்போவதாகச் சொன்னார். அதற்குப் பின்னர், அவருடைய கடிதங்களில் ஒன்றில் அவர் உட்படுத்திய பின்வரும் மேற்கோள் காண்பிக்கிறபடி, அவருடைய மனப்பான்மை முற்றிலுமாக மாறியது: “அப்பொழுது நரரின் மேட்டிமை தாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.”—ஏசாயா 2:17.
1973-ன் கோடைகாலத்தில், ஃப்ரான்டிஷெக்கும் அவருடைய மனைவியும் யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டப்பட்டார்கள். தற்போது, ப்ராக்கிலுள்ள சபைகளில் ஒன்றில் அவர் மூப்பராகச் சேவை செய்து வருகிறார்.
தடையின்கீழ் பிரசங்கித்தல்
தடையின்போது மிகவும் ஜாக்கிரதையாக எங்கள் வெளி ஊழியத்தைச் செய்யும்படி எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஒருமுறை, இளம் சாட்சி ஒருவர் பிரசங்க வேலையில் அவருடன் செல்லும்படி என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பில் முதன்மையான பொறுப்பு வகிப்பவர்கள்தாமே உண்மையில் ஊழியத்திற்குச் செல்கிறார்களா என்று அவர் சந்தேகித்தார். முறைப்படி அமையாமல் செய்த எங்கள் ஊழியத்தின்போது நாங்கள் அநேக நல்ல உரையாடல்களை அனுபவித்தோம். ஆனால் கடைசியில் நாங்கள் ஒரு மனிதரை சந்தித்தோம்; எனக்கு அப்போது அது தெரியவில்லை என்றாலும், நாட்டின் ரகசிய போலீஸாரின் நிழல்பட ஆல்பத்தில் கண்ட ஒரு படத்தை வைத்து அவர் என்னுடைய முகத்தை அடையாளம் கண்டுகொண்டார். அப்போது நான் கைது செய்யப்படவில்லை என்றாலும், அப்போது முதல், கடும் அதிகாரப்பூர்வ கண்காணிப்பிற்கு உள்ளானேன்; தலைமறைவாக செய்யப்பட்ட எங்களுடைய பிரசங்க வேலையில் நான் திறம்பட்ட விதத்தில் செயல்படுவதை அது தடுத்தது.
1983-ன் கோடைகாலத்தில், முந்தின வருடங்களில் என்னுடைய பழக்கமாக இருந்தவிதமாகவே, நாட்டின் தொலைகோடியான ஒரு பகுதியில் முறைப்படி அமையாத வகையில் ஒருசில நாட்கள் சாட்சி பகருவதற்காக இளம் சாட்சிகளின் ஒரு தொகுதியை ஒன்றுகூட்டினேன். ஞானமுள்ள ஆலோசனைக்குச் செவிகொடுக்க தவறி, நான் என் காரை ஓட்டிச் சென்றேன், ஏனென்றால், பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதைவிட அது அதிக வசதியானதாக இருந்தது. ஒரு பல்பொருள் அங்காடியில் ஒருசில பொருட்களை வாங்குவதற்காக நாங்கள் சற்று இறங்கியபோது, என் காரை முன்னால் நிறுத்தி வைத்திருந்தேன். அந்தச் சாமான்களுக்கான பணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கையில், அங்குள்ள இளமையான கடை உதவியாளர் சிலரை சுட்டிக்காண்பித்து, அங்கு வேலைசெய்த வயதான ஒருவரிடம் நான் சொன்னேன்: “எதிர்காலத்தில், நாம் அனைவரும் இளமையுடன் இருக்கலாம்.” அந்தப் பெண்மணி புன்னகை செய்தார். “என்றாலும், அது மனிதனின் சாத்தியத்திற்கு உட்பட்டதல்ல,” என்று தொடர்ந்தேன். “பரலோகத்திலிருந்து உதவி தேவைப்படும்.”
மேலுமான பிரதிபலிப்பு எதுவும் இல்லாததால், நான் அங்கிருந்து சென்றேன். எனக்குத் தெரியாமலேயே, அந்த வேலையாள், நான் மதக் கருத்துக்களை முன்னேற்றுவிப்பதாகச் சந்தேகித்து, நான் என்னுடைய காருக்குள் அந்தப் பொதியை வைக்கையில், ஜன்னல் வழியாக என்னைக் கவனித்தார். பின்னர் அவர் போலீஸுக்குத் தெரியப்படுத்தினார். மணிநேரங்களுக்குப்பின், அந்த நகரின் மற்ற பாகங்களில், முறைப்படி அமையாத வகையில் சாட்சி கொடுத்துவிட்டு நானும் என் கூட்டாளியும் காருக்குத் திரும்பினோம். திடீரென்று, இரண்டு போலீஸார் தோன்றி எங்களைப் பிடித்துக்கொண்டு சென்றனர்.
காவல் நிலையத்தில், எங்களைப் போகவிடுவதற்கு முன்பு, பல மணிநேரங்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டோம். அன்று நாங்கள் பெற்றிருந்த அக்கறையுள்ள நபர்களின் முகவரிகளை என்ன செய்வது என்பதே என் முதல் யோசனையாக இருந்தது. ஆகவே அவற்றை நீக்கிப்போடுவதற்காக நான் கழிவறைக்குச் சென்றேன். ஆனால் அவற்றைப் போடுவதற்குள், ஒரு போலீஸ்காரரின் பலமான கை என்னைத் தடுத்தது. கழிவறை கோப்பையிலிருந்து அவர் அந்தக் காகிதங்களை எடுத்து, துப்புரவாக்கி வைத்துக்கொண்டார். இது எனக்குக் கூடுதலான மனவேதனையைத் தந்தது, ஏனென்றால் தங்கள் முகவரிகளை என்னிடம் தந்திருந்த மக்கள் இப்போது ஆபத்திற்குள்ளானார்கள்.
பின்னர், நாங்கள் அனைவரும் எங்களுடைய ஹோட்டலுக்குக் கொண்டு செல்லப்பட்டோம்; அங்கு போலீஸார் ஏற்கெனவே எங்கள் அறையில் திடீர்ச்சோதனை நடத்தியிருந்தனர். ஆனால் அக்கறையுள்ள நபர்களின் முகவரிகள் வேறு எவற்றையும், அவை கவனமாக மறைத்து வைக்கப்படாமல் இருந்தபோதிலும், அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. பின்னர், நரம்பு மருந்தியல் வல்லுநர் ஒருவராக நான் பணிபுரியும் இடத்தில், சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக நான் வெளிப்படையாகக் கடிந்துகொள்ளப்பட்டேன். மேலுமாக, செக்கோஸ்லோவாகியாவில் பிரசங்க வேலையின் கண்காணியாலும் கடிந்துகொள்ளப்பட்டேன்; ஊழியத்தில் பங்கெடுப்பதற்காகச் செல்லுகையில் என்னுடைய காரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் ஏற்கெனவே என்னை எச்சரித்திருந்தார்.
சிட்சைக்குக் கீழ்ப்படுத்துதல்
1976-ல், செக்கோஸ்லோவாகியாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையை கண்காணிக்கும் குழுவில் சேவை செய்யும்படி நான் நியமிக்கப்பட்டேன். ஆனால், ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது போன்ற காரியங்களில் முன்யோசனையின்றி செயல்பட்டதன் காரணமாக, என்னுடைய வாழ்க்கை, ரகசிய போலீஸின் கடும் கண்காணிப்பின்கீழ் வந்திருந்ததால், நாட்டின் ஆலோசனை குழுவில் செயல்படுவதிலிருந்தும் மற்றும் பல்வேறு சிலாக்கியங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டேன். நான் விசேஷமாக போற்றிய இந்தச் சிலாக்கியங்களில் ஒன்று என்னவென்றால், பயணக் கண்காணிகளுக்கும் பயனியர்கள் என்றழைக்கப்படும் முழுநேர ஊழியர்களுக்குமான பள்ளியில் போதிப்பதாகும்.
எனக்குக் கிடைத்த சிட்சையை ஏற்றுக்கொண்டேன்; ஆனால் மத்திப 1980-களிலிருந்து பிற்பட்ட 1980-கள் வரையான இந்தக் காலப்பகுதி, எனக்குக் கடினமான சுய பரிசோதனையின் காலமாக இருந்தது. இன்னும் விவேகமாக வேலை செய்யவும் மேலுமாக விவேகமற்ற முறையில் செயல்படமால் இருக்கவும் கற்றுக்கொள்வேனா? சங்கீதம் 30, வசனம் 5 சொல்லுகிறது: “சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.” நவம்பர் 1989-ல் செக்கோஸ்லோவாகியாவில் கம்யூனிஸ ஆட்சிமுறையின் வீழ்ச்சியுடன் அந்தக் காலை எனக்கு வந்தது.
மகத்தான ஆசீர்வாதங்கள்
ஊழியத்தில் வெளிப்படையாகப் பங்கெடுப்பதும் நியூ யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்துடன் வெளிப்படையாக தொடர்பை அனுபவிப்பதும் என்னே ஓர் மாற்றம்! சீக்கிரத்தில் நான் ஒரு பயணக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன்; ஜனவரி 1990-ல் இந்த வேலையை ஆரம்பித்தேன்.
பின்னர், 1991-ல், இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் ஊழியப் பயிற்சி பள்ளிக்குச் செல்லும்படி சிலாக்கியம் பெற்றேன். முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவ ஆண்களுடன் கூட்டுறவை அனுபவித்தும் அவர்களிடமிருந்து போதனையைப் பெற்றும் இரண்டு மாதங்களை செலவிடுவது எவ்வளவு ஆசீர்வாதமாக இருந்தது! ஒவ்வொரு நாளும் ஒரு காலப்பகுதியில், மாணவர்களாகிய எங்களுக்கு வேலை நியமிப்பு ஒன்று இருந்தது; மும்முரமான படிப்புசார்ந்த போதனையிலிருந்து அது சற்று ஓய்வு அளித்தது. ஜன்னல்களைச் சுத்தம் செய்வது எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை.
இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்தவுடன், ப்ராக்கிலுள்ள பெரிய ஸ்ட்ராஹாஃப் அரங்கத்தில் ஆகஸ்ட் 9-லிருந்து 11 வரையாக நடத்தப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய மிக முக்கியமான கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு உதவத் தொடங்கினேன். அந்த நிகழ்ச்சியில், அநேக நாடுகளிலிருந்து 74,587 மக்கள் நம் கடவுளாகிய யெகோவாவை வணங்குவதற்குத் தடையின்றி ஒன்றுகூடியிருந்தனர்!
அதற்கடுத்த வருடம், நான் நரம்புசார்ந்த மருந்தியல் வல்லுநராக பணிபுரிவதை நிறுத்திவிட்டேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு, நான் ப்ராக்கிலுள்ள அலுவலகத்தில் வேலை செய்துவந்திருக்கிறேன்; செக் குடியரசில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையைக் கண்காணிக்கும் ஆலோசனை குழுவில் நான் மீண்டும் சேவை செய்கிறேன். சமீபத்தில், யெகோவாவின் சாட்சிகளுக்காக நன்கொடை அளிக்கப்பட்ட புதிய பத்து-மாடி கட்டடம் ஒன்று புதுப்பிக்கப்பட்டு, ஒரு கிளை அலுவலகமாக பயன்படுத்தப்பட்டது. மே 28, 1994-ல், இந்தச் சிறந்த வசதி, யெகோவாவின் சேவைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
என்னுடைய உறவினர்கள் உட்பட, மற்றவர்களுக்கு பைபிள் சத்தியங்களைப் பகிர்ந்தளிப்பது என்னுடைய மிகப் பெரிய ஆசீர்வாதங்களில் அடங்கும். இது வரையிலும், என் அப்பாவும் அம்மாவும் சாட்சிகளாகவில்லை, ஆனால் என்னுடைய நடவடிக்கைக்கு இப்போது சாதகமாக இருக்கிறார்கள். கடந்த ஒருசில வருடங்களாக, அவர்கள் நம்முடைய கூட்டங்கள் சிலவற்றிற்கு வந்திருக்கின்றனர். அவர்களும், இன்னுமதிக லட்சக்கணக்கான நேர்மை இருதயமுள்ளவர்களுடன் சேர்ந்து, கடவுளுடைய ராஜ்ய ஆட்சிக்குத் தங்களைக் கீழ்ப்படுத்தி, தம்மைச் சேவிப்பதைத் தெரிந்துகொள்கிறவர்களுக்காகக் கடவுள் வைத்திருக்கும் நித்திய ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள் என்பதே என் உளமார்ந்த விருப்பமாக இருக்கிறது.
(இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரசுரங்கள், உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டவை.)
[பக்கம் 12-ன் படம்]
நான் ஒரு பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது
[பக்கம் 13-ன் படங்கள்]
செக்கோஸ்லோவாகியாவின் கல்வி அமைச்சரான என் அப்பாவும், பிரபல கண் அறுவை மருத்துவராக இருந்த என் அம்மாவும்
[பக்கம் 15-ன் படம்]
ஒரு அறிவியலாளராகவும் நாத்திகராகவும் இருந்து, ஒரு சாட்சியான ஃப்ரான்டிஷெக் விஸ்காடில்
[பக்கம் 16, 17-ன் படம்]
கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்குப் பின், யெகோவாவின் சாட்சிகள் அநேக பெரிய மாநாடுகளை கிழக்கு ஐரோப்பாவில்
[பக்கம் 18-ன் படம்]
நடத்தியிருக்கின்றனர். 1991-ல் ப்ராக்கில் நடந்த இதற்கு 74,000-க்கும் அதிகமானோர் ஆஜராகி இருந்தனர்
[பக்கம் 18-ன் படம்]
இங்கிலாந்தில் ஊழியப் பயிற்சி பள்ளிக்குச் சென்றிருந்தபோது என் வேலையில்
[பக்கம் 18-ன் படம்]
மே 28, 1994 அன்று ப்ராக்கில் பிரதிஷ்டை செய்யப்பட்ட எங்கள் கிளை அலுவலக வசதிகள்