விசுவாசிகள் எங்கே இருக்கின்றனர்?
ஸ்பெய்னிலிருந்து விழித்தெழு! நிருபர்
“அசட்டை மனப்பான்மையை விட மதத்துக்கு அதிக ஆபத்தான ஒன்று இருக்க முடியாது.”
எட்மண்டு பர்க், 18-வது நூற்றாண்டு பிரிட்டிஷ் அரசியல் மேதகை.
ஸ்பெய்னின் வட பகுதியிலுள்ள காற்று-புயல் பாதுகாப்பற்ற ஒரு சமவெளியில், காலெர்வேகா என்ற சிறிய நகர் அமைந்துள்ளது. அந்த இடைக்கால நகர், கவர்ச்சியான ரோமாபுரி பாணியிலமைந்த கான்வென்ட்டால் செல்வாக்கு செலுத்தப்படுகிறது. டொமினிக்கன் ஒழுங்கை தோற்றுவித்தவரும், இங்குப் பிறந்தவருமான டோமிங்கோ டி கூஸ்மேன் என்பவரை கௌரவிக்கும்படியாக அது 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அமைதியாகவும் தனிமையாகவும் வாழத் தெரிவுசெய்யும் மாடக்கன்னிகளுக்கு ஏழு நூற்றாண்டுகளாக அந்தக் கான்வென்ட் புகலிடம் அளித்து வந்திருக்கிறது.
அந்தக் கான்வென்ட்டின் கூரை ஒழுகுகிறது, அதன் பழைய சுவர்கள் இடிந்துவிழ ஆரம்பிக்கின்றன. ஆனால் அந்தக் கன்னிமாடத் தலைவி, இன்னும் அதிகமாகப் பரவிவரும் சிதைவுக்காகவே—இடிந்து விழுந்து கொண்டிருக்கும் மதத்துக்காகவே—கவலை தெரிவிக்கிறார்கள். “சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கான்வென்ட்டில் நான் நுழைந்த போது, 40 மாடக்கன்னிகள் இருந்தனர். இப்போது 16 பேராகிய நாங்கள் மட்டுமே இருக்கிறோம். இளம் வயதினர் ஒருவரும் இல்லை. மதத்துறவிகள் ஆவதெல்லாம் ஏதோ கடந்தகால நிகழ்வாகத் தோன்றுகிறது,” என்பதாக அவர் விளக்குகிறார்.
காலெர்வேகாவில் நடந்துகொண்டிருப்பது, ஐரோப்பா முழுவதிலுமுள்ள பெரும்பாலான நாடுகளில் நடைபெறுகிறது. அங்கெல்லாம், மதத்துக்கெதிரான உணர்வு, ஒட்டுமொத்தமாக ஏற்படவில்லை, வெறுமனே ஓர் அமைதியான, பிடிவாதமான வகையில் மதத்தைக் கைவிட்டுவிடுதலாக இருந்திருக்கிறது. மாபெரும் ஐரோப்பிய கத்தீட்ரல்கள், உள்ளூரிலுள்ள “விசுவாசிகளுக்கு” சேவை செய்வதைக் காட்டிலும் டூரிஸ்ட்டுகளுக்கு சேவை செய்கின்றன. ஒரு காலத்தில் முறியடிக்க முடியாததாய் இருந்த சர்ச்—அது புரொட்டெஸ்டன்ட் சர்ச்சோ, கத்தோலிக்க சர்ச்சோ—அக்கறையின்மையால் முறியடிக்கப்பட்டு வருகிறது. மதசம்பந்தமான அக்கறைகளைவிட மதசம்பந்தமல்லாத அக்கறைகளே மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகின்றன—மதசார்பின்மை என்பதாக சர்ச் சார்புரிமைத் தகவலர்களால் அழைக்கப்படும் ஒரு போக்கு. மதம் இனிமேலும் முக்கியமானதாகத் தோன்றுவதில்லை. ஐரோப்பாவிலுள்ள மதச் சூழ்நிலை, அதைப் போன்றதொரு வீழ்ச்சி உலகின் பிற பாகங்களிலும் பரவப்போவதற்கான ஒரு முன்னறிகுறியாக இருக்கக் கூடுமா?
சர்ச்சுக்குச் செல்லுவதற்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது?
இவ்வுண்மையானது, வட ஐரோப்பாவில் புதிதாக சம்பவிக்கும் ஒன்றல்ல. ஸ்காண்டினேவியாவின் லுத்தரன் பிரிவைச் சேர்ந்தவர்களில் 5 சதவீதத்தினர் மட்டுமே ஒழுங்காக சர்ச்சுக்குச் செல்லுகின்றனர். பிரிட்டனில், ஆங்கிலிக்கன்களாக சொல்லிக்கொள்ளுபவர்களில் வெறும் 3 சதவீதத்தினர் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் வழிபாட்டுக் கூட்டங்களுக்குச் செல்லுகின்றனர். ஆனால் இப்பொழுது, தென் ஐரோப்பிய கத்தோலிக்கர்கள், தங்கள் அயலாராயிருக்கும் வட ஐரோப்பிய கத்தோலிக்கர்களின் மாதிரியைப் பின்பற்றுவதாகத் தோன்றுகின்றனர்.
கத்தோலிக்கரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் ஒரு நாடாகிய பிரான்ஸில், ஒவ்வொரு 10 குடிமக்களில் ஒரே ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை சர்ச்சுக்குச் செல்லுகிறார். கடந்த 25 ஆண்டுகளாக, “மும்முர கத்தோலிக்கர்” என்பதாகத் தங்களைத்தாங்களே கருதிக்கொள்ளும் ஸ்பானியர்களின் சதவீதம் 83 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 1992-ல், ஸ்பானிய பேராயராயிருந்த ராமோன் டோரெயா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், “கத்தோலிக்க ஸ்பெய்ன் என்பது இனிமேலும் இல்லை; புனித வார ஊர்வலங்களுக்கும் கிறிஸ்மஸ் பூசைக்கும் மக்கள் செல்லுகின்றனர்—ஆனால் ஒவ்வொரு வாரமும் [பூசைக்குச்] செல்லுவதில்லை.” 1993-ல் மாட்ரிட்டுக்கு போப் விஜயம் செய்தபோது, “ஸ்பெய்ன் அதன் கிறிஸ்தவ மூலங்களுக்குத் திரும்ப வேண்டும்” என்று ஜான் பால் II எச்சரித்தார்.
இந்த மதப் பற்றற்ற மனோநிலை, குருவர்க்கத்தையும் பாமர மக்களையும் ஒரே விதமாக பாதித்துள்ளது. புதிதாக நியமனம் பெற்ற குருக்களின் எண்ணிக்கையானது, பிரான்ஸில் 1988-ல் 140 ஆகக் குறைந்தது (1970-ல் இருந்த எண்ணிக்கையில் பாதியை விடக் குறைவானது), அதே சமயம் ஸ்பெய்னில் சுமார் 8,000 பேர் திருமணம் செய்துகொள்ளுவதற்காக குருத்துவத்தைத் துறந்திருக்கின்றனர். மறுபட்சத்தில், தங்கள் மந்தைக்கு தொடர்ந்து ஊழியம் செய்துவரும் சிலர் தாங்கள் அளிக்கும் பிரசங்கத்தைக் குறித்து சந்தேகத்துடன் இருக்கின்றனர். ஸ்வீடனைச் சேர்ந்த லுத்தரன் பாதிரிகளில் 24 சதவீதத்தினர் மட்டுமே தாங்கள் பரலோகம் மற்றும் நரகத்தைப் பற்றி “ஒரு சுத்தமான மனசாட்சியுடன்” பிரசங்கிக்கலாம் என்று உணருகின்றனர், அதே சமயம் பிரெஞ்சு குருக்களில் கால் பாகத்தினர், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றியும்கூட நிச்சயமற்றவர்களாய் உள்ளனர்.
பக்திக்கு மேலாக இன்பமும் முன்னுரிமையும்
எது மதத்தின் இடத்தை எடுத்துக்கொள்ளுகிறது? பல வீடுகளில் இன்பப் பொழுதுபோக்கு வழிபாட்டின் இடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பங்கள் சர்ச்சுக்குச் செல்லுவதைக் காட்டிலும் கடற்கரைகளுக்கு அல்லது மலைகளுக்குச் செல்லுகின்றனர். “பூசைக்குச் செல்லுவது சலிப்பூட்டுகிறது” என்று சொல்லி தன் தோள்களைக் குலுக்கினார் ஓர் எடுத்துக்காட்டான ஸ்பானிய இளைஞரான குவான். ஜனக்கூட்டங்களைக் கவர்ந்திழுத்து ஸ்டேடியங்களை நிரப்பும் கால்பந்தாட்டப் போட்டிகள் அல்லது பாப் இசைக் கச்சேரிகளோடு மத சேவைகள் போட்டியிட முடியாது.
சர்ச்சுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருப்பது மட்டுமே மதத்தின் வீழ்ச்சிக்கான ஒரே நிரூபணமாக இல்லை. பல ஐரோப்பியர்கள் தங்களுக்குப் பிடித்தமான மத கருத்துக்களை மட்டும் தெரிவுசெய்துகொள்வதையே விரும்புகின்றனர். மத சம்பந்தமான கருத்துக்களை முயன்று தெரிந்தெடுப்பதைத் தெரிவு செய்கின்றனர். இப்போதெல்லாம் சர்ச்சுகளின் அதிகாரப்பூர்வ கொள்கைகள், ஒரு குறிப்பிட்ட மதத்தில் தான் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கையோடு அதிகம் ஒத்திருப்பதில்லை. ஐரோப்பியர்களில் பெரும்பாலானோர்—அவர்கள் கத்தோலிக்கர்களோ அல்லது புரொட்டெஸ்டன்டினர்களோ—மரணத்துக்குப் பிறகு வாழ்வு இருக்கிறது என்பதை இனிமேலும் நம்புவதில்லை, அதே சமயத்தில் பிரெஞ்சு, இத்தாலிய, ஸ்பானிய கத்தோலிக்கர்களில் 50 சதவீதத்துக்கும் மேலானோர் அற்புதங்களை நம்புவதுமில்லை.
ஒத்துவராமை என்ற இக்கருத்துக்கள் பரவிவருவதைத் தடுப்பதற்கு குருக்களாட்சி வலிமையற்றதாகத் தோன்றுகிறது. குடும்ப நலத் திட்டத்திற்கு எதிரான போப்பின் பிரச்சாரத்தில் அறியப்பட்டதைவிட வேறெங்கும் இது அவ்வளவு தெளிவாக அறியப்படவில்லை. 1990-ல், கருத்தடை சாதனங்களை விற்கக்கூடாது என்று கத்தோலிக்க பார்மசிஸ்ட்களை போப் ஜான் பால் II துரிதப்படுத்தினார். இப்பொருட்கள் “ஒரு நபரின் மரியாதைக்குத் தீங்கு விளைவிக்கும் விதத்தில் இயற்கைச் சட்டங்களை மீறுவதாக” அவர் உறுதியாகக் கூறினார். அதைப் போலவே, “ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே உள்ள விவாக சம்பந்தமான உறவு இரட்டிப்பான கடமையாகிய உண்மைத்தன்மைக்கும் கருவுறுதிறனுக்கும் இடையே உட்பட்டிருக்கிறது” என்பதாக கேட்டகிஸம் ஆஃப் தி கேத்தலிக் சர்ச் வலியுறுத்துகிறது.
இக் கடுமையான தடைக்கட்டளைகள் விதிக்கப்பட்டபோதிலும், சராசரி கத்தோலிக்க தம்பதிகள் உல்லாசமாக, தங்கள் மனம்போன போக்கில் போகின்றனர். தென் ஐரோப்பாவிலுள்ள கத்தோலிக்க நாடுகளில், இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகளையுடைய குடும்பங்கள் இப்போது விதிவிலக்காக இருக்கின்றன. ஸ்பெய்னில், கருத்தடை உறைகள்—இரு பத்தாண்டுகளுக்கு முன்பு, பெரும்பாலும் ஒரு கறுப்புச் சந்தைப் பொருளாக இருந்துவந்தவை—தொலைக்காட்சியில் ஒழுங்காக விளம்பரம் செய்யப்படுகின்றன, மேலும் பிரெஞ்சு கத்தோலிக்க பெண்களில் 3 சதவீதத்தினர் மட்டுமே தாங்கள் குடும்ப நலத் திட்டத்தின்மீதுள்ள அதிகாரப்பூர்வ கத்தோலிக்க சட்டங்களைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர்.
தெளிவாகவே, சர்ச்சுகளுக்கும் அவற்றின் போதனைகளுக்கும் ஐரோப்பியர்கள் தங்கள் முதுகைக் காட்டுகின்றனர். கான்ட்டர்பர்ரியின் ஆங்கிலிக்கன் பேராயர் ஜார்ஜ் கேர்ரி சர்ச்சிலுள்ள சூழ்நிலையைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கினார்: “அங்கத்தினர் குறைந்துகொண்டே போவதால் படிப்படியாக சர்ச் இல்லாமற்போகிறது, ஆகவே அது நாம் எதிர்ப்பட வேண்டிய ஒரு மிக அவசரமான விவாதமாய் இருக்கிறது.”
சீர்திருத்த எழுச்சிகள் ஆரம்பித்ததிலிருந்து ஐரோப்பாவின் மத மாளிகை அவ்வளவு ஆட்டங்காணுவதாய்த் தோன்றவில்லை. ஏன் பல ஐரோப்பியர்கள் மதத்தின்மீது அசட்டை மனப்பான்மை உடையவர்களாய் இருக்கின்றனர்? மதத்தின் எதிர்காலம் என்ன?