உலகை கவனித்தல்
திருமணங்களில் உலுக்கல்
ஜப்பானில், கோப் பகுதியைச் சேர்ந்த பல மனைவிமார், 1995-ன் ஆரம்பத்தில் அப்பகுதியைப் பாழாக்கிவிட்ட பூமியதிர்ச்சியின்போதும் அதற்குப்பிறகும் தங்கள் கணவன்மார் நடந்துகொண்ட வித்தியாசமான நடத்தையின்மீது திருப்தியற்றவர்களாய் உள்ளனர். “எங்கள் வீட்டில் மட்டும் பிளவு ஏற்படவில்லை, எங்கள் உறவிலும் பிளவு ஏற்பட்டுவிட்டது, ஏனெனில் என் கணவனை நம்பமுடியாது என்று இப்போது நான் உணருகிறேன்” என்பதாக ஆசாஹி ஈவினிங் நியூஸ் பத்திரிகையில் மேற்கோள் கூறப்பட்டிருந்த ஒரு மனைவி கூறினார். உணர்ச்சியற்றவர்களாய் இருந்ததற்காகவும், தேடியலைகையில் ஆறுதல் அளிக்காமல் இருந்ததற்காகவும், எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்பவர்களாய் இருந்ததற்காகவும் கணவன்மார் குற்றங்காணப்படுகின்றனர். ஒரு மனைவி, “அவர்களுக்காக அளிக்கப்பட்டிருந்த சோற்று உருண்டைகள் அனைத்தையும் தனக்கென்று கொஞ்சம்கூட மீதம் வைக்காமல் தன் கணவன் உண்டதால் அதிர்ச்சியடைந்தார்” என்று ஹியோகோ பிரிஃபெக்ச்சர் விமென்ஸ் சென்டர் அறிக்கை செய்கிறது. மற்றொரு மனைவி அந்த சென்டரிடம் கூறினதாவது: “அவர் எங்கள் குழந்தைகளின் பெயரையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு, என் பெயரை மட்டும் குறிப்பிடாமல் போனபோது என் கணவன்மீது முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டேன்.” என்றபோதிலும், அந்த சென்டர் மேலும் கூறினதாவது: அதே எண்ணிக்கையினர் பூமியதிர்ச்சியின்போது தங்கள் உறவுகள் பலப்படுத்தப்பட்டதாகக் கூறினர்.
கிட்டத்தட்ட அற்றுப்போனவற்றின் மறு வருகை
ஓர் “இத்தாலிய அற்புதம்”—கோரியீரே டேல்லா சேரா என்ற மிலானில் வெளியிடப்படும் ஒரு செய்தித்தாள் கூறுவதன்படி, அப்படித்தான் சிலர் பல வகை விலங்கினங்கள் அற்றுப்போன அளவுக்குச் சென்றுவிட்டு பிறகு மீண்டும் காணப்படுவதை விளக்குகின்றனர். ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலும் அபினைன்ஸ் மலைப்பகுதியிலும், பெரும்பாலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இருப்பதால், மான், மலை மான், மஞ்சள்நிற மான், பெண் மான் போன்ற விலங்குகள் இத்தாலியில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. எண்ணிக்கையில் பெருகிவரும் அல்பினைன் ஓநாய் இனம், இப்போது இத்தாலியிலிருந்து ஃபிரெஞ்சு கடற்பகுதியிலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குள் பரவிவருகிறது. என்றபோதிலும், இன்னும், நீர் நாய், மங்க் கடல் நாய் போன்றவை அற்றுப்போகும் அபாயத்தில் உள்ளன, ஆனால் கடும் பாதுகாப்புத் திட்டங்கள், “நீண்டகால, உண்மையான, உடன்பாடான விளைவுகளை ஏற்படுத்துவதில் தவற முடியாது” என்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர் என்று கூரியர் டெல்லா செரா கூறுகிறது.
பூரண குளிர்கால உரோமம்
ஆகாயவிமானங்களிலிருந்து துருவக்கரடிகளைக் காண முயலும் விஞ்ஞானிகள் சிரமப்படுகின்றனர்—கரடிகள் வெண்மை நிறமுடையனவாயும், பனிப்பிரதேசங்களில் வாழ்வனவாயும் இருப்பதால் மட்டுமல்ல. பாப்புலர் சயன்ஸ் பத்திரிகையின்படி, விஞ்ஞானிகள் அப்பிரச்சினைக்கு, தந்திரமான தீர்வாகத் தோன்றிய ஒன்றை வைத்திருந்தனர்: அவர்கள் துல்லியமான அகச்சிவப்பு ஒளிப்படச் சுருளைப் பயன்படுத்தினர், அது இப்பெரிய விலங்குகளின் உடலிலிருந்து வெளிவரும் உடல் வெப்பத்தை எளிதில் கண்டறியும் என்று எண்ணினர். ஆனால் அந்த ஒளிப்படச் சுருள் அப்படியே காலியாகத் திரும்பி வந்தது! துருவக்கரடியின் உரோமம் அரிதில் கடத்தியாய் இருப்பதில் அத்தனை பலனுள்ளதாய் இருந்ததால், குறைந்தளவு வெப்பமும்கூட அவ்விலங்கிலிருந்து வெளிவருவதில்லை என்பதாகத் தோன்றுகிறது. இதன் உரோமத்திலுள்ள இழை சூரியனின் புற ஊதாக் கதிர்களை, கரடியின் ‘சோலார் செல்களாக’ இருக்கக்கூடியவற்றுள் உட்செலுத்துவதன் மூலம் நல்ல கடத்தியாக செயல்படுவதாகத் தோன்றுகிறது என்றும், இந்த செல்கள் தங்களுக்குள் செலுத்தப்படும் ஒளியை எப்படியோ வெப்பமாக மாற்றமுடிகிறது என்றும் அப்பத்திரிகை குறிப்பிடுகிறது.
மயங்கும் அபிமானிகள்
ராக் இசைக் கச்சேரியின்போது ஏன் அத்தனை அபிமானிகள் மயங்கி விழுகின்றனர்? ஜெர்மனியிலுள்ள பெர்லினைச் சேர்ந்த யுனிவர்சிட்டி ஹாஸ்பிட்டலின் நரம்பியல் நிபுணர் ஒருவர் சமீபத்தில் அவ்வுண்மையைக் கண்டுபிடித்தார். பெர்லினில், இளம் பெண்கள் பிரதானமாகக் கலந்துகொண்ட ஒரு ராக் இசைக் கச்சேரியில், சுமார் 400 பேர், நிகழ்ச்சியின்போது மயங்கி விழுந்தனர். டிஸ்கவர் பத்திரிகை கூறுவதன்படி, மயங்கி விழுந்தவர்களில் 90 சதவீதமானோர் முன் வரிசைகளில் நின்றுகொண்டிருந்தவர்கள் என்பதாக அந்த நரம்பியல் நிபுணர் கண்டுபிடித்தார். தங்களுக்குப் பிடித்தமான இந்த இருக்கைகளைப் பெறுவதற்காக, அவ்விளம்பெண்கள் மணிக்கணக்காக நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர்; நிகழ்ச்சிக்குமுன்பு, பலர் சாப்பிடாமலும், அதற்கு முந்திய இரவில் தூங்காமலும் இருந்தனர். பிற காரணிகள்—தாங்கள்தாமே கூச்சலிடுவதும், பின்னாலிருந்த கூட்டம் நெருக்கித் தள்ளுவதும்—நெஞ்சில் அழுத்தத்தை ஏற்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைத்துவிட்டன. அதன் காரணமாக, மூளைக்குச் செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் தடைபட்டது. அதன் விளைவாக மயக்கம் ஏற்பட்டது. அபிமானிகள் தாங்கள் நிகழ்ச்சிக்கு வருமுன்னதாகவே சாப்பிடும்படியும் தூங்கும்படியும், இருக்கையில் உட்கார்ந்திருக்கும்படியும், அமைதியுடன் இருக்கும்படியும், நிகழ்ச்சியின்போது நெருக்கித் தள்ளும் கூட்டத்தைவிட்டு சற்று விலகி இருக்கும்படியும் சிபாரிசு செய்கையில், அவர் சொன்னதைக் கேட்டு அதன்படி நடக்கும் பருவவயது அபிமானிகள் அநேகர் இல்லை என்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இலவச குழந்தை பராமரிப்பு?
புறநகர்ப்பகுதியில் வாழும் தொல்லைகள் நிறைந்த பெற்றோர், தாங்கள் நிதானமாய் கடைக்குச் சென்று பொருட்களை நுகருவதற்கு ஏற்றாற்போல், தங்கள் குழந்தைகளை மற்றவர்கள் பார்த்துக்கொள்வதற்காக ஒரு புது வழியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை, விளையாட்டு சாமான்கள் விற்கும் ஒரு கடையிலோ, பல்வழி கம்ப்யூட்டர் கடையிலோ விட்டுச் செல்கின்றனர். உயர்நுட்ப இயந்திரங்களால் வசீகரிக்கப்பட்ட குழந்தைகள், அவற்றின் சிறிய மாதிரி இயந்திரங்களை வைத்து, தங்கள் பெற்றோர் திரும்பும்வரையில் விளையாடுகின்றனர். என்றபோதிலும், அத்தகைய போக்கை விற்பனையாளர்கள் இஷ்டப்படுவதில்லை என்பதில் ஆச்சரியமேதுமில்லை என்று நியூஸ்வீக் பத்திரிகை அறிக்கை செய்கிறது. குறைந்தபட்ச பிரச்சினையானது, காட்சிக்கு வைக்கப்படும் மாதிரிப் பொருட்களை, நிஜமான நுகர்வோர் தாங்கள் வாங்க முடியாதவாறு குழந்தைகள் தங்களிடம் வைத்துக்கொள்வது; அதிகபட்ச பிரச்சினை என்னவென்றால், குழந்தைகள் விளையாட்டு சாமான்களை உடைப்பது என்பதாக அவர்கள் புகார் செய்தனர். அதே சமயத்தில், சில பெற்றோர் திரும்பி வந்து, தங்கள் குழந்தைகள் கவனிக்கப்படாமல் இருப்பதாலோ, எவருமே அவர்களைக் கழிவறைக்கு எடுத்துச் செல்லாமல் இருப்பதாலோ புகார் செய்கின்றனர் என்பதாக மற்றவர்கள் கண்டறிந்துள்ளனர்! ஆகவே, சில கடைகள் இப்போக்கை எதிர்த்துப் போராடுகின்றன—ஒன்று, பார்வைக்காக வைத்துள்ள கம்ப்யூட்டர்களை குழந்தைகளுக்கு எட்டாதபடி வைப்பது, அல்லது கவனிப்பாரில்லாமல் இருக்கும் குழந்தைகளைக் கண்டால், காவலர்களை அழைப்பது.
மணல்மேடுகள் ஆபத்தில் இருத்தல்
“இஸ்ரேலில் மணல் தீர்ந்துபோகிறது.” சமீபத்திய நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அவ்வாறு அறிக்கை செய்தது. ஏன் இந்த அரிதாய் தொனிக்கும் தட்டுப்பாடு? ஏனெனில் மணல், கான்கிரீட்டிலுள்ள கலவையின் முக்கியக் கூட்டுப்பொருளாகவும், அதற்காகவே அந்நாட்டின் முக்கியமான கட்டுமானத் தொழிற்துறை திருப்தி செய்யப்பட முடியாத ஒரு தேவையிலும் இருக்கிறது. ஆகவே, கடந்த 30 வருடங்களாக, அரசாங்கத்தின் குறைந்த தலையீட்டுடன், முன்பு ஜாஃபாவிலிருந்து காஜா வரை நீண்டிருந்த இஸ்ரேலின் பெரிய கடற்கரை மணல்பரப்புகளிலிருந்து கட்டடம் கட்டுவோர் டிரக்குகள் மூலம் மணலை எடுத்திருக்கின்றனர். அதோடுகூட, கறுப்புச் சந்தையில் விற்பதற்காக, திருடர்கள் ஒவ்வொரு வருடமும் பத்து லட்சம் டன் மணலைத் திருடுகின்றனர். சில தாவர மற்றும் விலங்கினங்களே தப்பிப்பிழைக்கும் வகையில் இருந்த, சிறுத்துக்கொண்டுவரும், மென்மையான மண்மேடுகளின் சூழலியல் கெடுக்கப்படுவதைக் குறித்து சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் இஸ்ரேலின் மணலின் இருப்பு தீர்ந்தபிறகு, எங்கிருந்து தங்களுக்கு மணல் கிடைக்கும் என்பது குறித்து கட்டடம் கட்டுவோர் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
மேற்கத்திய செல்வாக்கால் ஜப்பானியரின் உடல்நலம் பாதிக்கப்படுதல்
ஜப்பானிய மக்கள் உலகிலேயே மிக நீண்ட ஆயுசு எதிர்பார்ப்பை உடையோராவர், ஆனால் மேற்கத்திய வாழ்க்கைபாணியின் செல்வாக்கு அந்நிலையை படிப்படியாக அரிப்பதாய் இருக்கலாம். 1994-ல் உடல் பரிசோதனை செய்யப்பட்ட 21 லட்சம் மக்களில், 18 சதவீதத்தினர் மட்டுமே மருத்துவ பிரச்சினை எதுவும் இல்லாதிருந்ததாக நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை சமீபத்தில் அறிக்கை செய்தது. பத்து வருடங்களுக்கு முன்னதாக, அந்த எண்ணிக்கை 30 சதவீதமாய் இருந்தது. ஜப்பான் ஹாஸ்பிட்டல் அசோஸியேஷனால் கொடுக்கப்பட்ட ஓர் அறிக்கையின் ஆசிரியர்களாயிருந்தவர்களில் ஒருவர் கூறியதன்படி, இதற்குக் காரணமாயிருப்பது, புகைப்பதிலும் ஆல்கஹால் அருந்துவதிலும் ஏற்பட்ட அதிகரிப்போடுகூட, மேற்கத்திய உணவு வகைகளிலுள்ள அதிகக் கொழுப்புச்சத்தும் மிகுதியான கொலஸ்ட்ராலும் ஆகும். ஒசாகா-கோப் பகுதியைப் போன்ற மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவு உடல்நல பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக, மிகச் சிறந்தளவு உடல்நலம் உடையவர்களைக் கொண்ட மக்கள் நிறைந்துள்ள பகுதி, வடபுறத்திலுள்ள ஹொக்கைடோ தீவின் கிராமிய பகுதியாகும்.
நேரம் எங்குதான் போகிறதோ
நேரம் எங்கே போய்விட்டது? அக்கேள்வியை அறிவினாவாக அநேகர் கேட்கின்றனர், ஆனால் அதற்கு விஞ்ஞான ரீதியில் பதிலளிக்க ஒரு சமீபத்திய ஆய்வு முயற்சி செய்தது. அ.ஐ.மா.-வைச் சேர்ந்த இல்லினாய்ஸிலுள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனம், தங்கள் நேரத்தை செலவிடும் விதத்தைக் குறித்துவைத்துக் கொள்ளும்படியாகக் கேட்டுக்கொள்ளப்பட்ட சுமார் 3,000 மக்களின் அன்றாட நடவடிக்கையைப் பற்றிய மூன்று-வருட ஆய்வு ஒன்றை நடத்தியது. அத்தொகுதியில், பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள், 18 முதல் 90 வரையான வயது வரம்பில் இருந்தனர். அதிகப்படியான நேரத்தை தூக்கம் எடுத்துக்கொள்வதாயிருந்தது. பிறகு, ஒரு நாளுக்கு சராசரியாக 184 நிமிடத்தை வேலை எடுத்துக் கொண்டது. அடுத்ததாக, 154 நிமிடத்தை டிவி பார்ப்பதும் வீடியோ பார்ப்பதும் எடுத்துக்கொண்டன. வீட்டு வேலைகள் 66 நிமிடத்தையும், பிரயாணம் செய்து திரும்பி வருவது 51 நிமிடத்தையும், சிகை அலங்காரம் 49 நிமிடத்தையும், குழந்தை மற்றும் செல்லப் பிராணி கவனிப்பு 25 நிமிடத்தையும் எடுத்துக் கொண்டன. பட்டியலின்படி, மிகக் குறைந்தளவு நேரம் எடுத்த வேலை, வணக்கத்திற்கான நேரமாயிருந்தது. அது சராசரியாக ஒரு நாளுக்கு 15 நிமிடத்தை மட்டுமே எடுத்துக்கொண்டது.
கூடுதலான சர்ச்சுகள் விற்பனைக்கு
ஆஸ்திரேலியாவின் வடபகுதியிலுள்ள மாநிலமாகிய க்வீன்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனிலுள்ள அரிதாக பயன்படுத்தப்படும் சர்ச் கட்டடங்களைப் பெறுவதற்கு, முதலீடு செய்பவர்களின் கைகள் துடிக்கின்றன என்பதாக வீடு, நில உடைமைகளின் ஏஜென்டுகள் தெரிவித்தனர். அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றன: சர்ச்சுக்குச் செல்லும் ஆட்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதும், “தனித்தன்மை வாய்ந்த ஏதோவொன்றை” வாங்குவதற்காக முதலீடு செய்வோர் தேடிக்கொண்டிருப்பதும் ஆகும். தற்சமயம் ஒரு டஜனுக்கும் அதிகமான சர்ச்சுகள் விற்பனைக்குத் தயாராய் இருப்பதாகவும் அவற்றுள் சில பிரிஸ்பேனில் வீடு, மற்றும் அலுவலகங்களாக ஏற்கெனவே மாற்றப்பட்டிருப்பதாகவும் தி கூரியர்-மெயில் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. சர்ச்சுகளில் “மிகப் பல, சிற்றுண்டிச் சாலைகளாகவும், கலைப்பொருட்களின் காட்சியரங்குகளாகவும், பழங்காலப் பொருட்களின் விற்பனைத்தலங்களாகவும், அலுவலகங்களாகவும், வீடுகளாகவுங்கூட பயன்படுத்தப்”பட்டிருப்பதாக வணிக விற்பனைத்துறையின் இயக்குநர் ஒருவர் தெரிவித்ததை அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. வீடு, நில உடைமைகளின் ஏஜென்ட் ஒருவர் கூறினார்: “அவற்றுள் அநேகத்தை விற்பனை செய்வதையே நான் விரும்புகிறேன்.”
முற்றிலும் மதசார்பற்றதாக்கப்படுதல்
ஜெர்மானிய மாநிலமான பவெரியா, தீவிர ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தது. உண்மையில், அந்த மாநிலத்துக்குச் சொந்தமான பள்ளிகள் அனைத்திலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் சிலுவை அடையாளம் ஒன்று வைக்கப்பட வேண்டும் என்பதாக பவெரியப் பள்ளி ஒழுங்குமுறைச் சட்டம் வற்புறுத்தியது. என்றபோதிலும், மத சுயாதீனத்துக்கு உத்தரவாதமளிக்கும் ஜெர்மனியின் அடிப்படைச் சட்டத்தோடு ஒத்திசையாததாய் இருப்பதால், இந்த ஒழுங்குமுறைச் சட்டம் தளர்த்தப்பட்டுவிட்டதாக சமீபத்தில் ஃபெடரல் கான்ஸ்ட்டிட்யூஷனல் கோர்ட் அறிவித்தது என்பதாக ஜெர்மானிய செய்தித்தாளான சூட்டோய்ஷ ஸைட்டுங் அறிக்கை செய்கிறது. வெஸ்ட்ஃபாலிஷ் ஆல்கமேய்ன் ஸைட்டுங் பத்திரிகை கூறுவதன்படி, “நம் மக்களின் வரலாற்றில் மிகவும் துக்கமான நாள்” என்று கோலோனின் தலைமைப் பேராயர் மைஸ்னர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். சிலர், அளிக்கப்பட்ட தீர்ப்பைக்குறித்து ஆச்சரியமடைவதைக் காட்டிலும் அதைப் பற்றிய முரண்பாட்டைக் குறித்து அதிக ஆச்சரியமடைந்தனர். சொல்லப்போனால், ஜெர்மானிய சமுதாயம் “முற்றிலும் மதசார்பற்றதாக்கப்பட்டுள்ளது” என்றும், “பொருளாசை, நுகர்வோரின் ஆசை அதிகரிப்பு, தெளிவான அகவுணர்வு ஆகியவற்றுக்கு மரியாதை தெரிவிக்கிறது” என்றும் ஹேம்பர்க்கின் செய்தித்தாளான டி ஸீட் எழுதுகிறது.