கடன் அட்டைகளும் சம்பளப்பட்டியல் காசோலைகளும் நிஜமானவையா போலியானவையா?
அவை எவ்வளவு வசதியானவை! அவ்வளவு சிறியவையாயும், எடுத்துச் செல்வதற்கு எளிதானவையாயும் இருக்கின்றன. ஓர் ஆணின் பணப்பையிலோ அல்லது ஒரு பெண்ணின் கைப்பையிலோ அவை நன்றாகப் பொருந்தும். உங்கள் பாக்கெட்டில் ஒரு பைசாவும் இல்லாமலேயே, உங்களால் அத்தனை அநேக பொருட்களை வாங்க முடிகிறது. கடன் அட்டையைப் பயன்படுத்துதல், உலகெங்குமுள்ள விமான போக்குவரத்துக் கம்பெனிகள், பயணக்கப்பல் கம்பெனிகள், ஹோட்டல்கள், ரிஸார்ட்டுகள் ஆகியவற்றால் ஊக்குவிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது. மக்களுக்கு இவ்வாறு ஆலோசனை அளிக்கப்படுகிறது: “அதில்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்லாதீர்கள்.” சில வியாபார நிறுவனங்கள் பணத்தை ஏற்றுக்கொள்வதற்கு மாறாக அவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள். பணத்தைப் போலில்லாமல், அவை திருடப்பட்டாலோ இழக்கப்பட்டாலோ மாற்றீடு செய்யப்படலாம். அது உங்களுடைய பெயரும் தனிப்பட்ட கணக்கு விவர பதிவு எண்ணும் முன் பக்கத்தில் புடைத்திருக்கும்வகையில் செதுக்கப்பட்டிருக்கிற உங்களுக்குச் சொந்தமாக்கப்பட்ட பணம்.
பிளாஸ்டிக் பணம்—கடன்-பின்னர் வசூல்-அட்டைகள் (credit and charge cards)—என்பதாக நீங்கள் அவற்றை அறிந்திருக்கலாம். 1985-ல், சில வங்கிகள், முப்பரிமாண ஒளிப்படங்களாகத் தோன்றும் தங்கள் சொந்த நுட்பமிக்க லேசரால் ஏற்படுத்தப்பட்ட ஹோலகிராம்களையும், விசேஷித்த குறியீடுகளை உடைய காந்த சக்தியுள்ள நீள்துண்டுகளை பின்பக்கத்தின் குறுக்காகக் கொண்டிருப்பதிலிருந்து புற ஊதா வெளிச்சத்தின்கீழ் தெரியக்கூடிய ஒரு காணக்கூடாத அடையாளக்குறி வரையாகவுள்ள மற்ற பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்தின. இவையனைத்தும் கள்ளத் தயாரிப்பைத் தடுப்பதற்காக! உலகெங்கும் 60 கோடிக்கும் மேலான கடன் அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றன.
1990-களின் ஆரம்பத்தில் பல்வேறு வகைகளான கடன் அட்டை மோசடிகளின் காரணமாக உலகம் முழுவதிலும் ஏற்பட்ட இழப்புகள் 100 கோடி டாலராகவாவது இருந்ததாகக் கருதப்படுகிறது. பல்வேறு வகைகளான அந்த மோசடியில், கள்ளத் தயாரிப்பு செய்தல்தானே மிக விரைவாக அதிகரித்து வரும் வகையாக—மொத்த இழப்புகளில் குறைந்தபட்சம் 10 சதவீதமாகவாவது—இருப்பதாய் அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
உதாரணமாக, கள்ளத் தயாரிப்பு செய்தல், 1993-ல், மிகப் பெரிய கடன் அட்டை நிறுவனங்களில் ஒன்றுடன் தொடர்புடைய வங்கிகளுக்கு $13 கோடியே 38 லட்சம் செலவை ஏற்படுத்தியது; இது கடந்த வருடத்தைவிட 75 சதவீத அதிகரிப்பாக இருந்தது. சர்வதேச அளவிலான, மற்றொரு பிரசித்தி பெற்ற கடன் அட்டை நிறுவனமும், கள்ளத் தயாரிப்பின் காரணமாக தடுமாறச் செய்யும் அளவிலான இழப்புகளை அறிக்கை செய்தன. “அது கடன் அட்டை கள்ளத் தயாரிப்பை, வங்கிகளுக்கும், அட்டை நிறுவனங்களுக்கும், பண வழங்கீடாக அவற்றை ஏற்கும் வியாபாரிகளுக்கும் மட்டுமல்லாமல், உலகெங்குமுள்ள நுகர்வோருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக ஆக்குகிறது,” என்பதாக நியூ ஜீலாந்து செய்தித்தாள் ஒன்று தெரிவித்தது. நியாயமாகக் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் அந்த இழப்புகளுக்குப் பொறுப்புள்ளவர்களாக இல்லையென்றாலும், அந்த செலவுகள் வேறுவழியின்றி நுகர்வோருக்குக் கடத்தப்படுகின்றன.
கள்ளத் தயாரிப்பாளர்களுக்குத் தடையாக நின்ற, லேசரால் ஏற்படுத்தப்பட்ட ஹோலகிராம்கள் மற்றும் விசேஷித்த குறிகளை உடைய காந்த சக்தியுள்ள நீள்துண்டுகள் போன்ற உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் குறித்து என்ன? இந்த அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபின், ஒரே வருடத்திற்குள், செம்மையற்ற முறையில் செய்யப்பட்ட முதல் கள்ளத் தயாரிப்புகள் தோன்ற ஆரம்பித்தன. அதற்கு சற்றுப் பின்னர், எல்லா பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்பட்டன அல்லது போலியான இழிச்செயல்களும் செய்யப்பட்டன. “பாதுகாப்பு அம்சங்களை எப்போதும் முன்னேற்றுவிக்க வேண்டியுள்ளது,” என்கிறார் ஹாங்காங் வங்கி அதிகாரி ஒருவர். “அயோக்கியர்கள் எப்போதுமே உங்களை தந்திரமாக ஏமாற்ற முயலுகிறார்கள்.”
அக்கறைக்குரிய விதத்தில், நிபுணர்கள் சொல்லுகிறபடி, ஆரம்ப 1990-களில் போலி அட்டைத் தயாரிப்பினால் ஏற்பட்ட மொத்த இழப்புகளில் பாதி ஆசியாவில் நிகழ்ந்தது; அதுவும் இதில் கிட்டத்தட்ட பாதி, ஹாங்காங்கில் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டது. “உயர் பாணி நவீன உடைகளுக்கு பாரிஸ் பெயர்பெற்றதாக இருப்பதுபோல கடன் அட்டைகளின் கள்ளத் தயாரிப்புக்கு ஹாங்காங் பெயர்போனதாக இருக்கிறது,” என்று ஒரு நிபுணர் அறிவித்தார். கடன் அட்டை கள்ளத் தயாரிப்பில் ஹாங்காங் உலகின் தலைநகராய் இருப்பதாக மற்றவர்கள் அதைக் குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்—“கடன் அட்டை ஏய்ப்பில், தாய்லாந்து, மலேசியா, தற்போது தெற்கு சீனாவையும் உட்படுத்துகிற ‘பிளாஸ்டிக் முக்கோணத்தின்’ மையமாக அது இருக்கிறது.” “சீனாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றயிழைப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய உள்ளூர் குற்றயிழைப்பு கும்பல்கள், ஊழல் பழக்கமுள்ள சில்லறை விற்பனையாளர்களால் கொடுக்கப்பட்ட எண்களைப் பயன்படுத்தி, போலி அட்டைகளில் அவற்றைப் பதிக்கும்படியும், புடைத்திருக்கும்படியும் செதுக்கி அமைத்து, தகவலை மாற்றீடு செய்கின்றன. பின்னர் போலியாகத் தயாரித்த அந்த அட்டைகளை வெறுமனே அயல் நாடுகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள் என்று ஹாங்காங் போலீஸார் சொல்கின்றனர்,” என்பதாக நியூ ஜீலாந்து செய்தித்தாள் அறிக்கை செய்தது.
“கடன் அட்டையில் புடைத்திருக்கும்படி செதுக்கும் இயந்திரம் ஒன்று ஆசிய கும்பல் அங்கத்தினர்களால் [கனடாவில்] வாங்கப்பட்டு, போலி கடன் அட்டைகளை உண்டாக்குவதற்குத் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இயந்திரம் ஒரு மணிநேரத்தில் 250 கடன் அட்டைகளை அச்சிடுகிறது; மேலும் பல கோடி டாலர் ஏய்ப்பு ஒன்றில் அது பயன்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸார் நம்புகின்றனர்,” என்பதாக கனடாவின் க்ளோப் அண்ட் மெய்ல் செய்தித்தாள் அறிக்கை செய்தது. கடந்த ஒருசில வருடங்களில், ஆஸ்திரியாவிலிருந்து ஆஸ்திரேலியா வரையாக, குவாம், மலேசியா, மற்றும் ஸ்விட்ஸர்லாந்து உட்பட குறைந்தபட்சம் 22 நாடுகளிலாவது போலி கடன் அட்டைகளை வைத்திருந்ததற்காக ஹாங்காங்கைச் சேர்ந்த சீனர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஜப்பானிய கடன் அட்டைகள், அவற்றைப் பயன்படுத்துகிறவர்கள் செலவிடுவதற்கான உச்சளவு வரையறைகளை மிகவும் உயர்ந்த அளவுவரை வைத்திருப்பதால், அவை விசேஷமாக நாடப்படுகின்றன.
கடன் அட்டை ஏமாற்று வேலைகளும் கள்ளத் தயாரிப்புகளும் பெருகி வருதலானது, “கடன் அட்டை வழங்குகிற நிறுவனங்கள், அதிகரித்துவரும் அளவிலான ஏய்ப்பின் செலவை அட்டையைப் பயன்படுத்துகிறவர்களுக்கிடையே பகிர்ந்துவிடும் கட்டாயத்திற்குள்ளாக்குகிறது,” என்று கனடாவைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் சொன்னார். ஆக, அவ்வாறே சம்பவிக்கிறது. ஒரு கடன் அட்டை, அதைப் பயன்படுத்துகிறவரிடம் போதிய பணம் இல்லாதபோது, வசதியான ஒன்றாகவும் உயிர்காக்கும் ஒன்றாகவும் இருக்கக்கூடும். என்றாலும், அந்தக் கள்ளத் தயாரிப்பாளர்களுக்குத் தெரியவேண்டியதெல்லாம் உங்களுடைய கணக்குப் பதிவு எண்ணும் அட்டையின் காலாவதி தேதியுமே, மீதியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். “அது பிளாஸ்டிக் பணம், ஆனால் மக்கள் பணத்தைப்போல அதே ஜாக்கிரதையுடன் அதை இன்னும் கையாளுவதில்லை,” என்று அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இன்டர்நேஷனலின் மண்டல பாதுகாப்புத் தலைமை அதிகாரி ஒருவர் எச்சரித்தார்.
“அந்த அமைப்புமுறை எங்கும் பலவீனங்கள் பரவியதாய் இருக்கிறது,” என்று போலீஸ் கண்காணிப்பாளர் ஒருவர் சொன்னார். “அந்த வில்லன்கள் எல்லா குறைகளையும் கண்டுபிடித்திருக்கின்றனர். அவை அனைத்தையும் அவர்கள் மோசமான வகையில் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்,” என்று அந்தக் கள்ளத் தயாரிப்பாளர்களைக் குறித்து அவர் சொன்னார்.
காசோலை கள்ளத் தயாரிப்பு
எந்தவொரு காகித நாணயத்தையும் குறையின்றி நகல் எடுக்கக்கூடிய டெஸ்க்டாப் அச்சடிப்பின் வருகையுடன், அதைத் தொடர்ந்து விரைவில் என்ன சம்பவித்ததோ அது தவிர்க்க முடியாததாகவே இருந்தது. போலி தயாரிப்பாளர்கள் தற்போது பலதர பத்திரங்களை ஒத்த போலி நகல்களை உருவாக்க முடிகிறது: பாஸ்போர்ட்டுகள், பிறப்புச் சான்றிதழ்கள், குடியேறுதலுக்குரிய அட்டைகள், இருப்புச் சான்றிதழ்கள், கொள்முதல் ஆர்டர்கள், மருந்து மருத்துவக்குறிப்புச் சீட்டுகள், மற்றும் பல. ஆனால் சம்பளப் பட்டியல் காசோலைகளைப் போலியாகத் தயாரிப்பதிலேயே மிக அதிக லாபம் கிடைக்கும்.
அந்த செய்முறை குறிப்பிடத்தக்க வகையில் எளியதாக இருக்கிறது. உள்ளூர் அல்லது மாகாணமெங்குமுள்ள வங்கிகளில் கோடிக்கணக்கான டாலர் வைப்புத் தொகை இருக்கும் பெரிய நிறுவனம் ஒன்றின் சம்பளப் பட்டியல் காசோலை ஒன்று கள்ளத்தயாரிப்பாளர் ஒருவரின் கைக்கு வந்து சேர்ந்தால் போதும், அவர் வேண்டியதைச் செய்துவிடுவார். தன்னுடைய டெஸ்க்டாப் பிரின்டர், ஆப்டிக்கல் ஸ்கேனர், இன்னும் மற்ற மின்னணுசார்ந்த கருவிகளைத் தயாராக வைத்திருப்பதால், அவற்றின் உதவியுடன் அவர் அந்த காசோலையை தன் சொந்த நோக்கத்திற்குப் பொருந்தும்படி மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்—தேதியை மாற்றி, பணம் பெறுபவரின் பெயரை அழித்துவிட்டு தன்னுடைய பெயரையும் அந்த டாலர் தொகையில் பூஜியங்களைச் சேர்த்தும் இதைச் செய்துவிடலாம். பின்னர், மிக அருகிலுள்ள எழுதுபொருள்கள் விற்கும் கடையில் அந்தக் காசோலையின் நிறத்தில் வாங்கிய காகிதத்தைப் பயன்படுத்தி தன்னுடைய சொந்த லேசர் பிரின்டரில் அந்த மாற்றியமைக்கப்பட்ட காசோலையை அச்சிடலாம். ஒரே சமயத்தில் டஜன் கணக்கில் அல்லது அவற்றிற்கும் அதிகமான போலி காசோலைகளை அச்சிடுவதால், அவற்றை எந்த ஒரு நகரிலுள்ள அந்த வங்கியின் கிளை அலுவலகம் ஒன்றிலும் கொடுத்து பணத்தைப் பெறலாம்.
இந்த எளிய மற்றும் செலவற்ற போலி காசோலை தயாரிப்பு பெருகுதல், அவ்வளவு அதிகமாக இருப்பதால், பொருளாதாரத்திற்கு $100 கோடி வரையாக இழப்பு ஏற்படலாம் என்று வங்கி மற்றும் சட்ட அமல்படுத்தும் அதிகாரிகள் சொல்கிறார்கள். குறிப்பாக துணிச்சலான சம்பவம் ஒன்றில், லாஸ் ஏஞ்சலிஸைச் சேர்ந்த கும்பல் ஒன்று அந்த நாடெங்கும் சுற்றித்திரிந்து, ஆயிரக்கணக்கான போலி சம்பளப்பட்டியல் காசோலைகளை வங்கிகளில் கொடுத்து மொத்தமாக $20 லட்சத்துக்கும் அதிகமான பணத்தைப் பெற்றது என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. ஐக்கிய மாகாணங்களில் மட்டும் தற்போது காசோலை ஏய்ப்பின் மொத்த வருடாந்தர தொகை $1,000 கோடி என்பதாக தொழில்துறை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். “நிதி நிறுவனங்களின் முதன்மையான குற்றச்செயல் சம்பந்தமான பிரச்சினை என்னவென்றால், காசோலை ஏய்ப்பு, பண அஞ்சல் ஆணை ஏய்ப்பு போன்ற போலி செலாவணி முறிகள்,” என்பதாக FBI (ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்) அதிகாரி ஒருவர் சொன்னார்.
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
சம்பளப்பட்டியல் காசோலைகளைப் போலியாகத் தயாரிப்பதிலேயே மிக அதிக லாபம் கிடைக்கிறது