உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 3/8 பக். 12-15
  • ஆறு தூதுவர்கள் புறவெளியிலிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆறு தூதுவர்கள் புறவெளியிலிருந்து
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மின்காந்த நிறமாலை
  • கட்புலன் ஒளி—முதலாவது தூதுவர்
  • கதிர்வீச்சு அலைகள்—இரண்டாவது தூதுவர்
  • எக்ஸ் கதிர்கள்—மூன்றாவது தூதுவர்
  • அகச்சிவப்பு கதிரியக்கம் —நான்காவது தூதுவர்
  • புறஊதா கதிரியக்கம் —ஐந்தாவது தூதுவர்
  • காமா கதிர்கள்—ஆறாவது தூதுவர்
  • இந்தப் பிரபஞ்சத்தை உற்றுநோக்குதல்
    விழித்தெழு!—1992
  • ஹபிள் குழப்பம்—அதன் விளைவு எப்படி இருந்தது?
    விழித்தெழு!—1995
  • அவ்வளவு புதிரானது, ஆயினும் அவ்வளவு அழகானது
    விழித்தெழு!—1996
  • வானொலி உலகை மாற்றியஒருகண்டுபிடிப்பு
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 3/8 பக். 12-15

ஆறு தூதுவர்கள் புறவெளியிலிருந்து

ஜப்பானிலிருந்து விழித்தெழு! நிருபர்

புறவெளியிலிருந்து தூதுவர்கள் வந்துசேர்ந்த வண்ணமாய் இருக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள பரந்த அண்டத்தைப் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவலைத் தங்களோடு எடுத்து வருகின்றன. மொத்தத்தில் இந்த ஆறு தூதுவர்களும், ஒளியின் வேகத்தில், அதாவது நொடிக்கு 3,00,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்கின்றன. அவற்றுள் ஒன்று காணக்கூடியது, மற்றவை எல்லாம் மனிதக் கண்களுக்கு காணக்கூடாதவை. அவை யாவை?

மின்காந்த நிறமாலை

ஒரு முப்பட்டகத்தின் வழியே ஒளி கடந்து செல்லுகையில், அது வானவில்லின் ஏழு முக்கிய நிறங்களாய் வெளிவருகிறது என்பது 300 ஆண்டுகளுக்கும் மேல் அறியப்பட்டிருக்கிறது. சாதாரண ஒளியில் வானவில்லின் எல்லா ஏழு நிறங்களும், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என்ற வரிசையில் அடங்கியுள்ளது என்று இது காட்டுகிறது.

அலைகளின் தன்மைகளையும் உடைய ஃபோட்டான்கள் என்றழைக்கப்படும் எடையற்ற துகள்களின் ஓட்டமே ஒளி என்பதாகக் கருதப்பட்டது. ஓர் ஒளி அலையின் முகட்டிலிருந்து மற்றோர் ஒளி அலையின் விளிம்பு வரையுள்ள தூரம் ஓர் அலைநீளம் என்றழைக்கப்படுகிறது, அது சுருக்கெழுத்தில் Å என்பதாய் குறிப்பிடப்படும் ஆங்ஸ்ட்ராம் எனப்படும் ஓர் அலகால் அளக்கப்படுகிறது. அது நூறு கோடியில் 390-க்குச் சமமானது. கட்புலன் ஒளி 4,000 முதல் 7,000 வரையுள்ள ஆங்ஸ்ட்ராம்கள் அளவுடையது, மேலும் வெவ்வேறு அலைநீளமுடைய ஒளி வித்தியாசமான நிறங்களாகத் தோன்றுகிறது.—விளக்கத்தைக் காண்க, பக்கம் 15.

என்றபோதிலும், ஃபோட்டான்கள் மற்ற அலைநீளங்களையும் உடையனவாயிருக்கலாம். மின்காந்த கதிரியக்கம் என்றழைக்கப்படும் ஃபோட்டான்களின் ஓட்டங்கள், அவற்றின் அலைநீளங்களின் அடிப்படையில் வெவ்வேறு பெயர்கள் இடப்படுகின்றன. 4,000 ஆங்ஸ்ட்ராம்களுக்குக் கீழே, கட்புலன் ஒளியின் அலைநீளத்தைவிடக் குறைவாகையில், மின்காந்த அலைகள் படிப்படியாக புற ஊதா கதிரியக்கம் (UV), எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் என்பதாகத் தோன்றும். 7,000 ஆங்ஸ்ட்ராம்களைவிட நீளமாகையில், அலைகள் இனிமேலும் காணக்கூடியனவையாய் இராமல், அகச்சிவப்பு முதல் கதிர்வீச்சு வரையான அலைகளைக் கொண்ட மின்காந்த நிறமாலையின் பகுதியில் இருக்கும். புறவெளியிலிருந்து வரும் இந்த ‘ஆறு தூதுவர்களை’ அதில் நாம் கொண்டிருக்கிறோம். அவை விண்பொருள்களைப்பற்றி ஏராளமான தகவலை எடுத்து வருகின்றன. பெருமதிப்புடைய தகவலுக்காக அவை பரிசோதிக்கப்படும் விதத்தைப்பற்றி இப்பொழுது நாம் காண்போம்.

கட்புலன் ஒளி—முதலாவது தூதுவர்

1610-ம் ஆண்டில் கலிலியோ தன் தொலைநோக்கியை வான்முகமாய்த் திருப்பினதிலிருந்து 1950 வரை, வானவியல் வல்லுநர்கள், அண்டத்தை ஆய்வு செய்வதற்காக முதன்மையாக ஒளி தொலைநோக்கியை பயன்படுத்தினர். மின்காந்த நிறமாலையின் காணக்கூடிய பகுதியை மட்டும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். சில விண்பொருள்கள் ஒளி தொலைநோக்கியின் உதவியுடன் வெகு மங்கலாகவே காணப்பட்டன, ஆகவே அவற்றை ஆய்வு செய்வதற்காக அவற்றின் பிம்பத்தை ஒளிப்படச் சுருளில் வானவியல் வல்லுநர்கள் பதிவு செய்தனர். இப்பொழுது, ஒளிப்படச் சுருளைவிட 10 முதல் 70 மடங்கு அதிக துல்லியமான, மின்னேற்ற முழுச்செறிவு இணைக்கப்பட்ட கருவிகள் (charge-coupled devices) எனப்படும் எலக்ட்ரானிக் காட்டிகளே (detectors) அதிகமாக வழக்கமாய் பயன்படுத்தப்படுகின்றன. நட்சத்திர அடர்த்தி, வெப்பநிலை, இரசாயன மூலகங்கள், தூரம் போன்றவற்றைப் பற்றிய தகவலை இந்த கட்புலன் ஒளி அளிக்கிறது.

ஒளியைக் கைப்பற்றுவதற்காக, இதுவரையாகக் கட்டப்பட்ட எல்லாவற்றையும்விட மிகப் பெரிய தொலைநோக்கிகள் கட்டப்படுகின்றன. 1976-லிருந்து, ரஷ்யாவைச் சேர்ந்த ஜலென்குஸ்காயா அஸ்ட்ரோஃபிஸிக்கல் ஆப்ஸர்வேட்டரியில் 236-அங்குல தொலைநோக்கி வைக்கப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், ஏப்ரல் 1992-ல், புதிய கெக் எதிரொளிப்பு தொலைநோக்கி, ஹவாயில் மோன கேயவின்மீது கட்டிமுடிக்கப்பட்டது.a இந்த கெக் தொலைநோக்கியில், ஒரு தனி ஆடிக்குப் பதிலாக, 36 அறுகோண ஆடிப்பகுதிகளின் ஒரு தொகுப்பு உள்ளது. அப்பகுதிகள் அனைத்தும் சேர்ந்து, பத்து மீட்டர் விட்டம் உடையன.

முதல் தொலைநோக்கியின் பக்கத்தில், கெக் I என்று இப்போது அழைக்கப்படும் ஓர் இரண்டாவது தொலைநோக்கி கட்டப்பட்டு வருகிறது, மேலும், ஒளியின் குறுக்கீட்டு விளைவுமானி செய்யும் வேலையை, இவ்விரண்டு தொலைநோக்கிகளும் செய்யமுடிந்தவையாய் உள்ளன. பத்து மீட்டர் விட்டமுள்ள அந்த இரண்டு தொலைநோக்கிகளைக் கம்ப்யூட்டரால் இணைப்பதையும், அதன் விளைவாக, 85 மீட்டர் விட்டமுள்ள ஒரு தனி ஆடியின் பிரிப்புத்திறன் எவ்வளவோ, அவ்வளவு திறனுள்ளதாய் ஆக்குவதையும் இது உட்படுத்துகிறது. “பிரிதிறன்” (resolving power) அல்லது “பிரிப்புத்திறன்” (resolution) என்பது, நுட்பவிவரத்தைப் பிரித்துக்காட்டும் திறனைக் குறிப்பிடுகிறது.

டோக்கியோ நேஷனல் அஸ்ட்ரனாமிக்கல் ஆப்ஸர்வேட்டரியில், மோன கேயவில் சூபாரூ (கார்த்திகை நட்சத்திர முடிச்சின் [Pleiades star cluster] ஜப்பானிய பெயர்) என்ற 8.3 மீட்டர் அளவுள்ள ஒளியியல்/அகச்சிவப்பு தொலைநோக்கி கட்டப்படுகிறது. அது 261 உந்துமானிகளால் தாங்கப்பட்டுள்ள ஒரு மெல்லிய ஆடியை உடையதாயிருக்கும். அந்த உந்துமானிகள், ஆடியில் ஏதேனும் வடிவ மாறுபாடு இருந்தால் அதை ஈடுசெய்வதற்காக, ஒவ்வொரு நொடிக்கும் ஒருமுறை ஆடியின் வடிவத்தை சரிப்படுத்தும். மற்ற பெரிய தொலைநோக்கிகளைக் கட்டும் வேலையும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது, ஆகவே முதலாவது தூதுவரிடமிருந்து—கட்புலன் ஒளியிடமிருந்து—அதிகத்தைக் கற்றுக்கொள்ள நாம் நிச்சயமாயிருக்கிறோம்.

கதிர்வீச்சு அலைகள்—இரண்டாவது தூதுவர்

பால்வழியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு அலை முதலாவதாக 1931-ல் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் 1950-களில்தான் கதிர்வீச்சு வானவியல் வல்லுநர்கள் ஒளியியல் சார்ந்த வானவியல் வல்லுநர்களோடு சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தனர். புறவெளியிலிருந்து கதிர்வீச்சு வெளிவருவதைக் கண்டுபிடித்ததிலிருந்து, ஒளியியல் சார்ந்த தொலைநோக்கியால் காணப்பட முடியாதவையாய் இருந்தவையும், கண்டறியப்பட முடிந்தவையாய் ஆயின. கதிர்வீச்சு அலைகளைக் கண்டறிந்ததானது, நமது பால்வழி மண்டலத்தின் மையத்தைக் காண்பதற்கு உதவியது.

கதிர்வீச்சு அலைகளின் அலைநீளம் கட்புலன் ஒளியின் அலைநீளத்தைக் காட்டிலும் பெரியது, ஆகவே அந்த அறிவிப்புக்குறியைப் பெறுவதற்காக பெரிய ஆன்டெனாக்கள் தேவைப்படுகின்றன. கதிர்வீச்சு வானவியல் ஆராய்ச்சியில் பயன்படுத்துவதற்கென்று, 90 மீட்டர் அல்லது அதைவிட அதிக விட்டமுடைய ஆன்டெனாக்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அவ்வளவு பெரிதாயிருக்கும் கருவிகளிலும்கூட, பிரிப்புத்திறன் குறைவாயிருப்பதால், வானவியல் வல்லுநர்கள் கதிரியக்க குறுக்கீட்டு விளைவியல் என்றழைக்கப்படும் நுணுக்க முறையுடன் கதிர்வீச்சு தொலைநோக்கிகளை அணியணியாக கம்ப்யூட்டரால் இணைக்கின்றனர். தொலைநோக்கிகளுக்கு இடையிலுள்ள தூரம் அதிகமாகையில், கண்டறியும் திறன் மேம்படுகிறது.

அத்தகைய ஓர் இணைப்பு, ஜப்பானிலுள்ள நோபியாமா ரேடியோ ஆப்ஸர்வேட்டரியின் 45 மீட்டர் அளவுள்ள ஆன்டெனாவையும்; ஜெர்மனியைச் சேர்ந்த போனிலுள்ள 100 மீட்டர் அளவுள்ள ஆன்டெனாவையும்; ஐக்கிய மாகாணங்களிலுள்ள 37 மீட்டர் அளவுள்ள தொலைநோக்கியையும் உட்படுத்துகிறது. இத்தகைய இணைப்பு, மிக நீளமான தொலைவுடைய குறுக்கீட்டு விளைவியல் [very long baseline (VLBI)] என்று அழைக்கப்படுகிறது; அது, ஒரு வட்ட வில்லின் ஆயிரத்தில் ஒரு பகுதி பிரிப்புத்திறன் உடையது, அதாவது, சந்திரனில் உள்ள 1.8 மீட்டர் சதுர அமைப்பையும் பிரித்துக்காட்டும் திறன் உடையது.b அத்தகைய VLBI பூமியின் விட்டத்தால் மட்டுப்படுத்தப்படுகிறது.

புறவெளியில் பத்து மீட்டர் அளவுள்ள ரேடியோ ஆன்டெனாவை வைப்பதன்மூலம், இத்தூதுவரைப் பெறுவதில் நோபியாமா ரேடியோ ஆப்ஸர்வேட்டரி இன்னும் ஒரு படி மேலே செல்கிறது. அது 1996-ல் ஜப்பானிலிருந்து செலுத்தப்பட இருக்கிறது; மேலும் அது, 30,000 கிலோமீட்டர் தொலைவை ஏற்படுத்தும் விதத்தில் ஜப்பான், ஐரோப்பா, ஐக்கிய மாகாணங்கள், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலுள்ள கதிர்வீச்சு தொலைநோக்கிகளுடன் இணைக்கப்படும். அதாவது, இவ்விணைப்பு, பூமியைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரிதான ராட்சத தொலைநோக்கியைப் போன்றதாயிருக்கும்! அது 0.0004 வட்ட வில்லளவு நொடி பிரிதிறன் உடையதாயிருக்கும், அதாவது, சந்திரனிலுள்ள 70 சென்டிமீட்டர் அளவுள்ள ஒரு பொருளையும்கூடப் பிரித்துக்காட்டும் திறனுடையதாய் இருக்கும். VLBI ஸ்பேஸ் ஆப்ஸர்வேட்டரி புரோகிராம் என்பதாக, அல்லது சுருக்கமாய் VSOP என்பதாக அழைக்கப்படுவதாய், அது, பிரம்மாண்டமான எடையுள்ள கருந்துளைகள் அமைந்திருப்பதாகக் கருதப்பட்ட அண்ட அணு உட்கருக்கள் (galactic nuclei) மற்றும் குவாசர்களை வரைபடம் வரைந்து ஆய்வுசெய்வதற்குப் பயன்படுத்தப்படும். அண்டத்திலிருந்து இரண்டாம் தூதுவராக, கதிர்வீச்சு அலைகள் பிரமிக்கத்தக்க விதமாக செயல்புரிவதோடுகூட, அவற்றின் மூலங்களைப் பற்றிய தகவலை தொடர்ந்து அளிக்கும்.

எக்ஸ் கதிர்கள்—மூன்றாவது தூதுவர்

முதலாவது எக்ஸ் கதிர் ஆய்வுகள் 1949-ல் நடத்தப்பட்டன. எக்ஸ் கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தை ஊடுருவ முடியாததாகையால், இத்தூதுவரிடமிருந்து தகவலைப் பெறுவதற்கு, வானவியல் வல்லுநர்கள் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக் கோள்களின் முன்னேற்றத்திற்காகக் காத்திருக்க வேண்டியவர்களாயிருந்தனர். எக்ஸ் கதிர்கள் மிதமிஞ்சிய அதிக வெப்பநிலையில் உண்டாக்கப்படுவதால், வெப்ப நட்சத்திரங்கள் அடங்கிய வளிமண்டலங்கள், சிதைவுறு ஒளிர் விண்மீன்களின் சிறு தொகுதிகள், பால்வழி மண்டல முடிச்சுகள், குவாசர்கள், கோட்பாட்டளவான கருந்துளைகள் ஆகியவற்றின்மீதான தகவலை அளிக்கின்றன.—விழித்தெழு!, மார்ச் 22, 1992, பக்கங்கள் 5-9-ஐக் காண்க.

ஜூன் 1990-ல், ரான்ட்ஜன் செயற்கைக் கோள் செலுத்தப்பட்டு, எக்ஸ் கதிர் அண்டம் முழுவதையும் வரைபடம் எடுப்பதில் வெற்றி காணப்பட்டது. 40 லட்சம் எக்ஸ் கதிரின் மூலங்கள் ஆகாயம் முழுவதிலும் பரவியுள்ளதாக அதிலிருந்து பதிவு செய்யப்பட்ட தகவல் குறிப்பிட்டுக் காட்டியது. என்றபோதிலும், இம்மூலங்களுக்கிடையே, அறியப்படாத ஒளிர்வுப் பின்னணி இருக்கிறது. “காணக்கூடிய அண்டத்தின் விளிம்பு” என்பதாக சில வானவியல் வல்லுநர்கள் அழைக்கும் விளிம்பிற்கு அருகிலுள்ள பால்வழி மண்டலங்களின் சக்தியுள்ள மையப்பகுதியாக நம்பப்படும் குவாசர் முடிச்சுகளிலிருந்து அது வருவதாய் இருக்கலாம். தக்க சமயத்தில், எக்ஸ் கதிர் தூதுவரிடமிருந்து அதிகமான தகவலைப் பெறுவதை நாம் எதிர்நோக்கலாம்.

அகச்சிவப்பு கதிரியக்கம் —நான்காவது தூதுவர்

முதல் முறையாக அகச்சிவப்பு கதிரியக்க ஆய்வுகள் 1920-களில் செய்யப்பட்டன. அகச்சிவப்பு கதிரியக்கத்தை நீராவி உறிஞ்சுவதால், இத்தூதுவரைக் கண்டறிவதில் மிகச்சிறந்த பலனை அடைவதற்காக சுற்றிவரும் செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1983-ல், அகச்சிவப்பு ஆகாயம் முழுவதையும் வரைபடம் எடுப்பதற்கு அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள் [Infrared Astronomical Satellite (IRAS)] பயன்படுத்தப்பட்டு, 2,45,389 அகச்சிவப்பு கதிரியக்கத்தின் மூலங்களைக் கண்டுபிடித்தன. இப்பொருள்களில் சுமார் 9 சதவீதம் (22,000), பார்ப்பதற்கு வெகுதொலைவிலுள்ள பால்வழி மண்டலங்களாக உள்ளன.

ஒளியியல் சார்ந்த தொலைநோக்கிகளால் புறவெளியிலிருக்கும் வாயு மற்றும் தூசு அடங்கிய பகுதிகள் அனைத்தின் ஊடேயும் காண முடியாது. இருந்தபோதிலும், இந்நான்காவது தூதுவர் தூசுகளின் ஊடே வெகுதொலைவில் “காண” முடிந்ததாய் ஆக்குகிறது, இது நமது பால்வழி மண்டலத்தின் மையப்பகுதியைக் கண்டறிவதில் குறிப்பிடத்தகுந்த வகையில் மதிப்புள்ளதாய் இருக்கிறது. IRAS-ன் நுட்பத்திறனைக் காட்டிலும் 1,000 மடங்கு அதிகத் திறனுள்ள புறவெளி அகச்சிவப்பு தொலைநோக்கி வசதி என்றழைக்கப்படும் ஓர் அகச்சிவப்பு தொலைநோக்கி சுற்றிவருவதற்கான திட்டத்தை விஞ்ஞானிகள் திட்டமிடுகின்றனர்.

புறஊதா கதிரியக்கம் —ஐந்தாவது தூதுவர்

முதல் முறையாக புறஊதா (UV) கதிரியக்கத்தின் வானவியல் சார்ந்த ஆய்வுகள் 1968-ல் செய்யப்பட்டன. பெரும்பாலான இக்கதிரியக்கம் பூமியின் பரப்பை அடையாதவாறு ஓசோன் அடுக்கு தடுக்கிறது. ஏப்ரல் 1990-ல் செலுத்தப்பட்ட ஹபிள் புறவெளி தொலைநோக்கியானது, கட்புலன் கதிரியக்கம், புறஊதா கதிரியக்கம் ஆகிய இவ்விரண்டையுமே கண்டறியும் விதத்தில் திறமையுடையது, மேலும் 1000 கோடி ஒளியாண்டு தொலைவிலிருக்கும் சிலவற்றை உள்ளடக்கும் 30 குவாசர்களை நோக்கி அவை விடப்படும்.c அதாவது, புறஊதா தூதுவரைக் கண்டறிவதன்படி, சுமார் 1000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த அண்டம் எப்படியிருந்தது என்பதைப் பார்க்க முடியும். இந்த அண்டத்தைப் பற்றிய பல மர்மங்களை இத்தூதுவர் வெளிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

காமா கதிர்கள்—ஆறாவது தூதுவர்

காமா கதிர்கள் மிகவும் குறைந்த அலைநீளங்களையுடைய மிகுசக்தியுடைய கதிரியக்கமாகும். மகிழ்ச்சிகரமாக, இந்தத் தீமை பயக்கும் கதிர்கள் பெரும்பாலானவை பூமியை அடையாதவாறு வளிமண்டலம் தடுக்கிறது. இத்தூதுவர், அண்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளோடு தொடர்புடையது. ஏப்ரல் 5, 1991-ல், நேஷனல் ஏரோனாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன், காமா கதிர் ஆய்வுநிலையத்தை புறவெளியில் செலுத்தியது. அது குவாசர்கள், சிதைவுறு ஒளிர் விண்மீன்கள், பல்சார்கள், கோட்பாட்டளவான கருந்துளைகள் மற்றும் பிற பொருள்களை உள்ளடக்கும் வன்முறை நிகழ்ச்சிகளைக் கண்டறியும்.

புறவெளி யுகத்தின் வருகையை முன்னிட்டு, வானவியல் வல்லுநர்களால், கதிர்வீச்சு அலைகள் முதல் காமா கதிர்கள் வரை, முழு மின்காந்த நிறமாலையையும் இப்போது கண்டறிய முடிந்திருக்கிறது. உண்மையிலேயே, வானவியல் வல்லுநர்களுக்கு இது ஒரு பொற்காலம் ஆகும். நாம் நம் ‘கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில்,’ அவற்றையெல்லாம் உருவாக்கினவரின் பிரமிக்க வைக்கும் ஞானத்தை—நட்சத்திரம் சார்ந்த மூலங்களிலிருந்து ஆறு தூதுவர்களின் உதவியோடு—இப்போது நம்மால் ‘பார்க்க’ முடிகிறது. (ஏசாயா 40:26; சங்கீதம் 8:3, 4) இத்தூதுவர்களால் கொண்டுவரப்படும் தகவலை, வானவியல் வல்லுநர்கள் தொடர்ந்து தெரியப்படுத்துவதால், 3,000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக யோபு உணர்ந்தவிதமாகவே நாமும் தொடர்ந்து உணருவோம்: “இதோ! இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்!”—யோபு 26:14.

[அடிக்குறிப்புகள்]

a செல்வந்தரான கொடையாளர், டபிள்யூ. எம். கெக் என்பவரின் பெயரை வைத்து அவ்விதம் பெயரிடப்பட்டது.

b மனிதக் கண்ணின் பிரிப்புத்திறன் வட்ட வில்லளவு நிமிடம் ஆகும். ஆகவே, வட்ட வில்லளவு நொடியில், ஆயிரத்தில் ஒரு பங்கு பிரிப்புத்திறன் என்பது கண்ணின் பிரிப்புத்திறனைவிட 60,000 மடங்கு அதிகமாகும்.

c ஓர் ஒளியாண்டு என்பது 946,000,00,00,000 கிலோமீட்டருக்குச் சமமானது.

[பக்கம் 15-ன் அட்டவணை]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

0.1 Å காமா கதிர்கள்

1 Å எக்ஸ் கதிர்கள்

10 Å

100 Å UV

1,000 Å

4000 - 7000Å கட்புலன் ஒளி

10,000 Å அகச்சிவப்பு

10μ

100μ கதிர்வீச்சு கதிரியக்கம்

1 மி.மீ.

1 செ.மீ.

10 செ.மீ.

1 மீ.

[பக்கம் 15-ன் அட்டவணை]

VSOP புறவெளி கதிர்வீச்சு தொலைநோக்கியால், சந்திரனிலுள்ள 70 சென்டிமீட்டர் அளவுடைய ஒரு பொருளைக்கூட பிரித்துக்காட்டுவது சாத்தியமாகும்

[படத்திற்கான நன்றி]

VSOP: Courtesy of Nobeyama Radio Observatory, Japan

[பக்கம் 15-ன் படம்]

இப்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒளியியல்/அகச்சிவப்பு தொலைநோக்கி சூபாரூவின் வரைபடம்

[படத்திற்கான நன்றி]

Subaru: Courtesy of National Astronomical Observatory, Japan

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்