நம்மைச் சுற்றியிருக்கும் அழகைக் காண்பதெப்படி
“எல்லா மொழிகளிலும், முதன்முதலாக நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் ‘எங்க நான் பார்க்கிறேன்!’ என்பவை இருக்கின்றன.”—வில்லியம் ஒயிட், ஜூனியர்.
சிறகடித்துச் செல்லும் வண்ணத்துப்பூச்சியை உற்றுப் பார்க்கும் சிறுபிள்ளை, மகிமையான சூரிய அஸ்தமனத்தைக் கூர்ந்து நோக்கும் வயோதிபத் தம்பதி, தான் அழகுபடுத்தி வைத்த ரோஜாப் பூக்களின் அமைப்பைப் பார்த்து வியக்கும் குடும்பத் தலைவி—இவர்கள் அனைவரும் அழகுக்கு தங்களுடைய கவனத்தை கணநேரம் ஒருமுகப்படுத்துகின்றனர்.
கடவுளுடைய படைப்பின் அழகு எங்குபார்த்தாலும் இருப்பதால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சென்று அதைக் காணவேண்டிய அவசியமில்லை. மலைப்பூட்டும் காட்சி ஒருவேளை தூரத்திலிருக்கலாம், ஆனால் தேடிப் பார்ப்பீர்களானால்—இன்னும் முக்கியமாக—எப்படித் தேடுவது என்று அறிந்திருந்தீர்களானால், மனதில் பதியும் ஓவியம் உங்களுக்கு அருகாமையிலேயே காணப்படலாம்.
“பார்ப்பவரின் கண்களில்தான் அழகு இருக்கிறது,” என்பது அடிக்கடி கவனிக்கப்படுகிறது. எனினும், அழகு இருந்தாலும், ஒவ்வொருவரும் அதைக் கண்டுபிடிப்பதில்லை. நம்மை ஆர்வம்காட்டி கவனித்துப் பார்க்கும்படி செய்ய ஒரு ஓவியமோ அல்லது ஒரு போட்டோவோ தேவையாயிருக்கிறது. மெய்யாகவே, வரைவதில் அவர்களுக்கிருக்கும் திறமையைவிட பார்ப்பதற்கான திறமையிலேயே அவர்களுடைய வெற்றி சார்ந்திருக்கிறது என்பதாக பல ஓவியர்கள் நம்புகின்றனர். “ஓவியன் தன்னுடைய கைகளால் அல்ல, ஆனால் தன்னுடைய கண்களாலேயே ஓவியத்தைத் தீட்டுகிறான். எதையெல்லாம் பார்க்கிறானோ, அதைத் தெளிவாக பார்ப்பானேயாகில், அதை அவனால் வரையமுடியும். . . . தெளிவாக காண்பதே மிக முக்கியமாக இருக்கிறது,” என்பதாக மாரிஸ் க்ராஸர் என்பவரால் எழுதப்பட்ட பெயிண்டரின் கண்ணோட்டம் என்ற ஆங்கில புத்தகம் விளக்குகிறது.
நாம் கலைஞர்களோ இல்லையோ, அதிகத் தெளிவாக பார்க்க, நம்மைச் சுற்றியிருக்கும் அழகை கவனிக்க நாம் கற்றுக்கொள்ளலாம். அதாவது, நாம் வெளியே சென்று காரியங்களை ஒரு புதிய கோணத்தில் பார்க்கவேண்டும்.
இது சம்பந்தமாக இயற்கை வரலாற்று எழுத்தாளர், ஜான் பேரிட், சுய ஈடுபாட்டின் (personal involvement) மதிப்பை அழுத்திக் காட்டுகிறார். அவர் சொல்வதாவது: “இயற்கைச் சூழலில் வாழும் விலங்குகளையும் தாவரங்களையும் ஒருவர் தன் சொந்தக் கண்களால் பார்ப்பதற்கும், தொட்டு முகர்ந்து பார்ப்பதற்கும், தன் சொந்தக் காதுகளால் கேட்பதற்கும் எதுவும் ஈடாகாது. அந்த அழகு மனதில் ஆழப் பதிவதாக . . . ஒருவர் எங்கிருந்தாலும், முதலாவது பார்த்து, மகிழ்ந்து, மீண்டும் பார்ப்பாராக.”
ஆனால் நாம் எதைப் பார்க்கவேண்டும்? முதலாவதாக அழகின் நான்கு அடிப்படைக் கூறுகளைப் பார்த்து ரசிக்கக் கற்றுக்கொள்வதில் தொடங்குவோம். யெகோவாவின் படைப்பின் கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்திலும் இந்த நான்கு கூறுகளையும் நம்மால் உணரமுடியும். அவற்றைக் கவனிக்க நாம் எவ்வளவு அடிக்கடி நேரத்தை ஒதுக்குகிறோமோ, அந்தளவுக்கு அவருடைய கலை வேலைப்பாடுகளை அனுபவித்து மகிழலாம்.
அழகின் அடிப்படைக் கூறுகளை அடையாளம் காணுதல்
வடிவங்களும் அலங்கார அமைப்புகளும். பல வடிவங்கள் அடங்கிய ஒரு உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சிலவை மூங்கில்கூட்டத்தில் உள்ள தண்டுகளைப்போல நேர்கோடுகள் வடிவிலோ அல்லது சிலந்தி வலையைப் போன்ற வடிவிலோ இருக்கின்றன. ஆனால் மற்றவையோ இடைவிடாமல் மாறிக்கொண்டே இருக்கும் மேகத்தைப் போல வடிவமேயற்றவையாகவும் இருக்கின்றன. கிளர்ச்சியடையச் செய்யும் ஆர்க்கிட்களானாலும்சரி, கடல் சிப்பியின் சுழிகளானாலும்சரி, அல்லது இலைகளை உதிர்த்த மரத்தின் கிளைகளானாலும்சரி, அநேக வடிவங்கள் அழகாக இருக்கின்றன.
அதே வடிவம் திரும்பத்திரும்ப வரும்போது, அது பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகவும் இருக்கக்கூடிய ஒரு அலங்கார அமைப்பை உருவாக்குகிறது. உதாரணமாக, அடிமரங்களால் நிற்கும் மரக் கூட்டம் ஒரு காட்டில் இருப்பதாகக் கற்பனை செய்துபாருங்கள். அவற்றின் வடிவங்கள்—ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தாலும் ஒரேமாதிரி இருந்து—மிகவும் அழகான ஒரு அலங்கார அமைப்பை உருவாக்குகின்றன. ஆனால் அவை உருவாக்கும் வடிவங்களையும் அலங்கார அமைப்புகளையும் புரிந்துகொள்வதற்கு, ஒளி அவசியமாய் இருக்கிறது.
ஒளி. ஒளிப் பரவுதலானது கவர்ச்சியானதாக நாம் காணக்கூடிய வடிவங்களுக்கு ஒரு விசேஷ தரத்தைக் கொடுக்கிறது. விவரங்கள் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன, இழைகள் வண்ணம்பூசப்படுகின்றன, ஆகவே ஒரு மனநிலை உண்டாக்கப்படுகிறது. நாளின் நேரம், வருடத்தின் பருவம், காலநிலை ஆகியவற்றையும், நாம் வாழுமிடத்தைப் பொறுத்தும்கூட ஒளி வித்தியாசப்படுகிறது. மங்கிய ஒளியைக்கொண்ட மப்பும் மந்தாரமுமான ஒரு நாள் காட்டுப் புஷ்பங்களின் மென்னயமிக்க வண்ணங்களை அல்லது இலையுதிர்கால இலைகளை ரசித்துப் பாராட்ட பொருத்தமானதாகும். ஆனால் ஒரு மலைத்தொடரின் உச்சிகளும் முகடுகளும் உதிக்கிற அல்லது அஸ்தமிக்கிற சூரியனால் வடிவூட்டப்படும்போது மட்டுமே தங்களுடைய வியப்பூட்டும் வடிவங்களைக் காட்டுகின்றன. வட அரைக்கோளத்தின் இதமான, குளிர்கால சூரியவொளி பசும்புல்தரையோடு சேர்ந்து காதல் புரிகிறது. மறுபட்சத்தில், வெப்பமண்டல பிரதேசத்தின் பிரகாசமான சூரியவொளி ஆழம்குறைந்த கடலை, ஸ்னார்க்களிங் செய்வோருக்கு தெள்ளத்தெளிவான ஒரு விந்தை உலகமாக மாற்றியிருக்கிறது.
ஆனாலும் இன்னுமொரு முக்கியமான அடிப்படைக்கூறு குறைவுபடுகிறது.
வண்ணம். நம்மைச் சுற்றி நம் கண்ணுக்குப் புலப்படும் பல்வேறு பொருட்களுக்கும் இது உயிரூட்டமளிக்கிறது. அவற்றின் வடிவங்கள் அவற்றை வித்தியாசப்படுத்தினாலும், அவற்றின் வண்ணம் அவற்றின் தனிச்சிறப்பு வாய்ந்த தன்மையை சிறப்பித்துக் காட்டுகிறது. கூடுதலாக, இசைவான அலங்கார அமைப்பில் இந்த வண்ணங்கள் பரவியிருக்கும்போது அதற்கே உரித்தான அழகைப் படைக்கிறது. அது நம்முடைய கவனத்தை ஈர்க்கும் சிகப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தைப்போல பளிச்சிடும் வண்ணமாக ஒருவேளை இருக்கலாம், அல்லது நல்மனநிலையை ஏற்படுத்தும் நீலம் அல்லது பச்சை கலராகவும் இருக்கலாம்.
காட்டினுள் இருக்கும் திறந்தவெளியில் மஞ்சள் நிறப்பூக்கள் கூட்டம் ஒன்று இருப்பதாக கற்பனை செய்துபாருங்கள். ஒளி அந்த மஞ்சள்நிற பூக்களில் படுகிறது, அப்போது காலைத் தென்றலில் அது சுடர் விடுவதைப்போல தோன்றுகிறது. காலை வெளிச்சத்தால் பார்டர் அமையப்பெற்ற கருத்த மரங்களின் அடிமரங்களோ மிகச் சரியான பின்னணியாக அமைகிறது. இப்போது நமக்கு ஒரு படம் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதை “ஃப்ரேம்” பண்ணவேண்டும். இங்குதான் இணைப்பாக்கம் (composition) வருகிறது.
இணைப்பாக்கம். வடிவம், ஒளி, நிறம் ஆகிய இந்த மூன்று அடிப்படைக் கூறுகளும் இணையும் விதமே இணைப்பாக்கத்தை நிர்ணயிக்கிறது. கவனிப்பவர்களாக நாம் இதில் மிக இன்றியமையாத பங்கை வகிக்கிறோம். முன்போ பின்போ, ஒரு பக்கத்திலோ, உயரத்திலோ, அல்லது கீழ் மட்டத்திலோ சற்று நகர்வதன்மூலம் மட்டுமேகூட, நம்முடைய படத்திலுள்ள அடிப்படைக்கூறுகளை அல்லது ஒளியை நம்மால் மாற்றியமைக்க முடியும். இவ்வாறு நமக்கு விருப்பமான அடிப்படைக் கூறுகளை மட்டுமே நாம் உள்ளடக்கும்படி அந்தப் படத்தை வரையறுத்துக் கொள்ளலாம்.
அடிக்கடி, அற்புதமான ஒரு காட்சியை நாம் பார்க்கும்போது, அருகிலிருக்கும் மரங்கள் அல்லது தாவரங்களை வைத்து ஃப்ரேம் பண்ணியதுபோலவே, தானாகவே இணைத்தாக்கிக் கொள்கிறோம். ஆனால் சிறிய அளவிலான நேர்த்தியான, அநேக படங்கள், நமது காலுக்கடியில் இருக்கலாம்.
சிறியதையும் பெரியதையும் கவனித்தல்
கடவுளின் கைவேலைப்பாட்டில் சிறியது பெரியது ஆகிய இரண்டுமே அழகாகத்தான் இருக்கின்றன. ஆனால் இதமாகவும் இணையும் நுண்விவரங்களைப் பார்க்கக் கற்றுக்கொள்வோமானால், நம் சந்தோஷம் பன்மடங்காகும். இயற்கையின் பரந்த திரைச்சீலை முழுவதும் சிதறியிருக்கும் சிறு மாதிரி ஓவியங்களாக அவை அமைகின்றன. அவற்றைப் போற்றுவதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் கீழே குனிந்து அருகாமையிலிருந்து பார்க்கவேண்டியது மட்டும்தான்.
ஒரு படத்திற்குள் இருக்கும் இந்தப் படங்களைப்பற்றி புகைப்படக்காரர் ஜான் ஷா க்ளோஸப்ஸ் இன் நேச்சர் என்ற தனது புத்தகத்தில் விவரித்ததாவது: “இயற்கையின் ஒரு விவரத்தை நான் அருகாமையிலிருந்து பார்ப்பது எப்போதுமே இன்னும் அருகில் போய்ப் பார்க்கும்படி செய்கிறது. அந்தளவுக்கு அது என்னை வியப்பில் ஆழ்த்த ஒருபோதும் தவறுகிறதில்லை. . . . முதலில் ஒரு பரந்த காட்சியைக் காண்கிறோம், பின்னர் ஃபிரேமின் ஒரு மூலையில் ஒரு சிறிய பகுதியில் வண்ணத்தைக் காண்கிறோம். அருகில் சென்று பார்க்கும்போது பூக்கள் தெரிகின்றன, அப்பூக்கள் ஒன்றின்மேல் ஒரு வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்திருக்கிறது. அதன் இறக்கைகள் தனித்தன்மை வாய்ந்த ஒரு அலங்கார அமைப்பை வெளிக்காட்டுகின்றன. இந்த அமைப்பு இறக்கைச் செதில்களாலான ஒரு துல்லியமான அமைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. செதில் ஒவ்வொன்றும் தன்னில்தானே எவ்வித குறையற்றதாய் இருக்கிறது. வண்ணத்துப்பூச்சியின் இந்த ஒரு இறக்கைச் செதிலை உண்டாக்கும் குறையற்றத்தன்மையை நம்மால் மெய்யாகவே அறிந்துகொள்ள முடியுமானால், புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வடிவமைப்பில், அதாவது இயற்கையில் உள்ள குறையற்றத்தன்மையை நம்மால் புரிந்துகொள்ளத் துவங்கமுடியும்.”
அழகிற்கான சந்தோஷத்தை நமக்குக் கொடுப்பது மட்டுமல்லாமல், இயற்கையின் கலைவண்ணம்—பெரியதாக இருந்தாலும்சரி, சிறியதாக இருந்தாலும்சரி—நம்முடைய படைப்பாளரிடம் நம்மை நெருங்கி இழுப்பதாய் இருக்கிறது. “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்,” என்று அறிவுரை கூறுகிறார் யெகோவா. நாம் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தைப் பார்க்கிறோமோ அல்லது கடவுளுடைய மற்ற ஏதாவது படைப்பைப் பார்க்கிறோமோ, பார்ப்பதற்கும், கூர்ந்து நோக்குவதற்கும், ஆச்சரியப்படுவதற்கும் நாம் சமயத்தை ஒதுக்குவதன் மூலம், “அவைகளைச் சிருஷ்டித்தவர்” ஒருவர்பற்றி நாம் ஞாபகப்படுத்தப்படுகிறோம்.—ஏசாயா 40:26.
காணக் கற்றுக்கொண்ட ஆட்கள்
பைபிள் காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் படைப்பில் அலாதி அக்கறை காண்பித்தார்கள். 1 இராஜாக்கள் 4:30, 33 சொல்கிறபடி: “சகல கிழக்கத்திய புத்திரரின் ஞானத்தை . . . பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரையுமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.”
படைப்பின் மகிமைகளின்பேரில் சாலொமோனுக்கு இருந்த இந்த அக்கறை ஒருவேளை அவருடைய அப்பாவின் முன்மாதிரியின் காரணமாக ஓரளவு இருக்கலாம். தனது வளரும் பிராயத்தில் இடையனாக அநேக ஆண்டுகளைக் கழித்த தாவீது, கடவுளின் கைவேலைப்பாடுகளைக் குறித்து அடிக்கடி தியானம் செய்தார். ஆகாயத்தின் அழகு குறிப்பாக அவருடைய மனதில் ஆழப்பதிந்தது. சங்கீதம் 19:1-ல் அவர் எழுதினார்: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.” (சங்கீதம் 139:14-ஐ ஒப்பிடுக.) தெளிவாகவே, படைப்புகளோடு அவருக்கு இருந்துவந்த தொடர்பு கடவுளிடமாக அவரை நெருங்க ஈர்த்தது. அது நம்மையும் அவ்வாறே ஈர்க்கமுடியும். a
கடவுளுடைய கைவேலைப்பாடுகளை உணர்ந்து போற்றுவது நம்முடைய ஆவிக்கு எழுச்சியூட்டி, நம்முடைய வாழ்க்கைக்கு வளமூட்டுகிறது என்று கடவுள் பயமுள்ள இந்த மனிதர்கள் அறிந்திருந்தனர். முன்முயற்சியையோ சுறுசுறுப்பான பங்கெடுப்பையோ தேவைப்படுத்தாத, பெரும்பாலும் கீழ்த்தரமான பொழுதுபோக்குகளால் பீடிக்கப்பட்டிருக்கும் நம்முடைய நவீன உலகில், யெகோவாவின் படைப்புகளை கவனிப்பது நமக்கும் நம்முடைய குடும்பங்களுக்கும் ஆரோக்கியமான நடவடிக்கையைக் கொடுக்கக்கூடும். கடவுளால் வாக்களிக்கப்பட்ட புதிய உலகத்திற்காக ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு இது எதிர்காலத்தை அளிக்கும் ஒரு பொழுதுபோக்காக இருக்கிறது.—ஏசாயா 35:1, 2.
நம்மைச் சுற்றியுள்ள கலையை மட்டும் காணாமல், அவற்றையெல்லாம் படைத்த கைதேர்ந்த கலைஞரின் குணாதிசயங்களையும் உணர்வோமானால் சந்தேகமின்றி, “ஆண்டவரே, . . . உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை,” என்ற தாவீதின் வார்த்தைகளையே நாமும் எதிரொலிக்கும்படி உத்வேகப்படுத்தப்படுவோம்.—சங்கீதம் 86:8.
[அடிக்குறிப்புகள்]
a ஆகூர், எரேமியா போன்ற மற்ற பைபிள் எழுத்தாளர்களும்கூட இயற்கையின் வரலாற்றைக் கூர்ந்து கவனிப்பவர்களாக இருந்தனர்.—நீதிமொழிகள் 30:24-28; எரேமியா 8:7.
[பக்கம் 10-ன் படங்கள்]
அலங்கார அமைப்பிற்கும் வடிவத்திற்கும், ஒளிக்கும், வண்ணத்திற்கும், இணைப்பாக்கத்திற்கும் உதாரணங்கள்
[படத்திற்கான நன்றி]
Godo-Foto