நொறுங்குண்ட இருதயத்தினால் நீங்கள் இறக்க முடியுமா?
விசனகரமாய், இது மிகச் சாதாரணமாய் நடக்கும் ஒன்றாயுள்ளது: சுகநலமுடையவராய்த் தோன்றும் வயதான அம்மாள், தன் மணத்துணையை மரணத்தில் இப்போதுதான் இழந்து, சோர்வுற்று சில நாட்களுக்குள் அல்லது வாரங்களுக்குள் இறக்கிறார்கள். அந்த மரணத்தின் காரணம்? “நொறுங்குண்ட இருதயம்,” என்று நண்பர்கள் சொல்கின்றனர்.
சொல்லர்த்தமாய் இதுவே காரணமாக இருந்திருக்கலாம். தீர்க்கப்படாத மன வேதனை இருதயத்தை ஒழுங்கற்று துடிக்கும்படி அல்லது மும்முரமாகத் துடிதுடிக்கும்படி செய்விக்கக்கூடிய இரசாயனங்களால் நிரப்புகிறதென்று ஆராய்ச்சியாளர்கள் வெகு காலமாக அறிந்திருக்கின்றனர். ஆனால் இந்த நடவடிக்கை மூளையில் எவ்வாறு தொடங்குகிறதென்பது விளங்காப் புதிராகவே நிலைத்திருக்கிறது.
அ.ஐ.மா., மேரிலாந்து, பால்டிமோரிலுள்ள ஜாண் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ பள்ளியில், நரம்பு மருத்துவ வல்லுநராகிய ஸ்டீஃபன் எம். ஓப்பன்ஹீமர், இருதயத்தை உணர்ச்சிவேகங்களோடு இணைக்கிற மூளையின் ஒரு பாகத்தை, தான் அடையாளம் கண்டுகொண்டிருப்பதாக நம்புகிறார். மூளைமீதுள்ள சாம்பல் நிறப்பொருள், சுவாசிப்பது, இருதயத் துடிப்பு போன்ற இயக்கங்களை அடக்கியாளுகிற தன்னியக்கமுடைய, கோபம், பயம், இன்பம் போன்ற உணர்ச்சிகளைக் கையாளுகிற நரம்பு மண்டலம் லிம்பிக் மண்டலத்தோடு ஒத்தியலுகிற மூளையின் ஒரு சிறிய பாகமாகும். எலிகளில் மூளையினுடைய சாம்பல்நிறப் பொருளின் கிளர்ச்சியூட்டம், மனிதரில் காணப்படுகிற திடீர் இருதய தசைநார் ஒழுங்கற்று சுருங்குதலால் ஏற்படுவதாகக் கண்டதைப்போன்ற இருதய தசை சேதத்தில் விளைவடைந்ததென்று டாக்டர் ஓப்பன்ஹீமர் கண்டார். மனிதரிலும் கூட மூளையின் சாம்பல்நிறப் பொருளின் கிளர்ச்சியூட்டம் இருதய வேகத்திலும் இரத்த அழுத்தத்திலும் மாற்றங்களை உண்டாக்குவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. நொறுங்குண்ட இருதயத்தினால் இறப்பது நிச்சயமாகவே கூடியதாக இருக்கிறதென்று இந்தக் கண்டுபிடிப்புகள் குறிப்பாகத் தெரிவிக்கின்றன.
நொறுங்குண்ட இருதயம் இயேசு கிறிஸ்துவின் மரணத்தில் ஒரு காரணமாக இருந்ததென்று சிலர் சொல்கின்றனர். அவரைக் குறித்து இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது: “நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது.” (சங்கீதம் 69:20) இந்த வார்த்தைகளைச் சொல்லர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டுமா? அவ்வாறும் இருக்கலாம், ஏனெனில் இயேசுவின் மரணத்துக்கு முந்தின மணிநேரங்கள்—சரீரப்பிரகாரமாக மட்டுமல்ல, உணர்ச்சி சம்பந்தமாகவும்—கடும் வேதனை தரும் அனுபவமாக இருந்தன. (மத்தேயு 27:46; லூக்கா 22:44; எபிரெயர் 5:7) மேலும், இயேசு இறந்தவுடன் ஈட்டியால் அவரைக் குத்தின காயத்திலிருந்து “இரத்தமும் தண்ணீரும்” ஏன் ஒழுகியதென்பதற்கும் நொறுங்குண்ட இருதயம் விளக்கம் அளிப்பதாக இருக்கலாம். இருதயத்தின் அல்லது பெரும் இரத்தக் குழாயின் வெடிப்பு, மார்பு குழிவுக்குள் அல்லது இதய உறைக்குள்—இருதயத்தைத் தளர்ச்சியாக மூடியிருக்கும் ஊறல்நீர் அடங்கிய சவ்வு—இரத்தம் கசியும்படி செய்யும். இந்த இரு இடங்களில் எதிலாவது துளை ஏற்பட்டால் “இரத்தமும் தண்ணீரும்” போன்று தோன்றுவது வடியும்படி செய்யக்கூடும்.—யோவான் 19:34.
நிச்சயமாகவே, ஒப்பிட்டுக் காண்கையில் இயேசுவின் விரைவான மரணத்திற்கு, அவர் அறையப்பட்ட முறையும், அதற்கு முன்பாக அவர் சகித்த நிந்தனையும் உட்பட மற்ற காரணங்களும் சந்தேகமில்லாமல் இருந்தன. இந்தக் கடும் சூழ்நிலைகளின்கீழ் இயேசு தம்முடைய உண்மைத்தவறாமையைக் காத்ததற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! இதன் பலனாக, அவர் தம்முடைய பிதாவாகிய யெகோவா தேவனால் மிக மேலாக உயர்த்தப்பட்டார். (பிலிப்பியர் 2:8-11) மேலும், நாம் பரதீஸான ஒரு பூமியில் என்றென்றுமாக வாழ்வதற்கும் சாத்தியமாக்கினார்.—யோவான் 17:3; வெளிப்படுத்துதல் 21:3, 4.