உலகத்தைக் கவனித்தல்
அகதிகள் மத்தியில் பில்லி சூனியம்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ருவாண்டாவிலிருந்து வந்த அகதிகள் டான்ஜானியாவின் வடபகுதியைச் சேர்ந்த ங்காராவிலுள்ள தங்கள் முகாமில் மற்றுமொரு பிரச்சினையால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்: பில்லி சூனியம். ரோய்ட்டர்ஸ் நியூஸ் சர்வீஸ் சொல்லுகிறபடி, இந்த முகாம்களில் பில்லி சூனியம் ஒரு “பெரிய பிரச்சினையாக” இருப்பதாக ஐக்கிய நாட்டு அகதிகளின் ஹைகமிஷன், (UNHCR) தனிகவனம் செலுத்திவருகிறது. UNHCR பிரதிநிதி க்ரிஸ் பவர்ஸ் சொல்கிறதுபோல, ஒவ்வொரு இரவும் மாயமந்திர சடங்குகளால் இரண்டு அல்லது மூன்று பேர் கொல்லப்படுகின்றனர். “சடலங்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் உருக்குலைக்கப்பட்டிருப்பதால், பில்லி சூனியம் அதில் ஈடுபட்டிருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும்,” என்று விவரிக்கிறார் அவர். 1994-ன் பிற்பகுதியில், ங்காரா முகாம்களில் சுமார் 5,80,000 பேர் வாழ்ந்துவந்தனர், ஒவ்வொரு நாளும் 2,000 புதிய அகதிகள் வந்துகொண்டிருந்தனர். ஒரு ஐநா ஆதாரம் சொன்னதாக ரோய்ட்டர்ஸ் மேற்கோள்காட்டி கூறியதாவது: “பில்லி சூனியத்தில் அதிகரிப்பு இருக்கிறது, ஆனால் அதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்றுதான் எங்களுக்குத் தெரியவில்லை.”
பாதிரிகள் “துண்டிக்கப்பட்டனர்”
வசதியான தொலைத்தொடர்பில் நடமாடும் தொலைபேசிகள் மிகவும் உயர்ந்தவையாக இருக்கலாம். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என பின்லாந்திலுள்ள ஒரு பிஷப் தீர்மானித்தார். ரோய்ட்டர்ஸ் கூறியதுபோல, அந்த பிஷப், “ஒரு நடமாடும் தொலைபேசியானது, உபயோகிப்பவர்களுக்கு சேவைபுரிய வேண்டுமே தவிர, அவர்களை அடிமையாக்கக்கூடாது,” என்று வலியுறுத்திக்கூறி, சர்ச் பணியாளர்களும் ஊழியர்களும் இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். சர்ச் சர்வீஸ் நடந்துகொண்டிருக்கும்போதும் சில குருமார்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தனர் என்ற சர்ச் அங்கத்தினர்களின் புகார் பிஷப்பின் காதுகளுக்கு எட்டிவிட்டது போலும். அப்படிப்பட்ட அழைப்புகளில் ஒன்று சரியாக சவ அடக்க நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது வந்தது. இதைப்போலவே, பாவ சங்கீர்த்தன கூண்டுக்குள் வரும்போது பாதிரிமார்கள் தங்களுடைய தொலைபேசிகளைக் கொண்டுவரவேண்டாம் என்பதாக இத்தாலியைச் சேர்ந்த கத்தோலிக்க பத்திரிகை ஒன்று சமீபத்தில் அறிவுரை கூறிற்று. தன்னுடைய பாவங்களை மனம்விட்டு சொல்லிக்கொண்டிருக்கையில் அந்தப் பாதிரியின் தொலைபேசி மணி ஒலிப்பதைக் கேட்கமுடிந்தது என்று ஒரு பெண்மணி புகார் செய்ததற்குப்பின் இந்த அறிவுரை விடுக்கப்பட்டது.
அம்மாமாருக்கு நல்லது—குழந்தைகளுக்கு கெடுதி
ரத்தக்குறைவை நிவாரணம் செய்து தங்கள் உடல்நலத்தைப் பாதுகாக்க அநேக பெண்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதுண்டு. ஆனால் அதே மாத்திரைகளை குழந்தைகள் உட்கொள்ளும்போது எவ்வளவு ஆபத்தானவை என்பதை ஒருசிலர் அறியாமலிருக்கின்றனர். பாதுகாப்பு+உடல்நலம் என்ற ஆங்கில பத்திரிகை சொல்கிறபடி, ஆறு வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகள் மத்தியில் விஷத்தால் மரணம் விளைவிப்பதில் இரும்புச் சத்து மாத்திரைகள் முன்னணியில் நிற்கின்றன. அத்தகைய மாத்திரைகள் அனைத்தையும் பாட்டில்களில் அடைப்பதற்குப் பதிலாக, தனித்தனியாக எளிதில் திறக்கமுடியாதவாறு பிளாஸ்டிக்கில் அடைக்கவேண்டும் என்று ஐ.மா. அரசாங்கம் திட்டம் வகுத்தது. இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் இரும்புச் சத்து மாத்திரைகளை, மற்ற மாத்திரைகளையும் மருந்துகளையும் வைப்பதைப் போன்றே, பிஞ்சு கரங்களுக்கு எட்டாத இடத்தில் வைக்கும்படி தாய்மார்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.
ஜப்பானில் துப்பாக்கி சண்டைகள் அதிகரித்திருக்கின்றன
ஜப்பான் உலகிலேயே மிகப் பாதுகாப்பான நாடுகளில் ஒன்று என அறியப்படும் நாடாகும். அதன் வருடாந்திர கொலை வீதம் 1,00,000 பேருக்கு ஒரு கொலை மட்டுமே. ஆனால் தாய்லாந்து, ஐக்கிய மாகாணங்கள் போன்ற நாடுகளில் இந்த வீதம் கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது. இருந்தபோதிலும், சமீபத்தில், துப்பாக்கிகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் கொலைகளின் அதிகரிப்பு ஜப்பானை குலுக்கிவிட்டிருக்கிறது என்பதாக ஏசியாவீக் பத்திரிகை அறிவிக்கிறது. 1990 முதல் 1993 வரை வருடத்திற்கு 180 பேர் சுடப்பட்டிருக்கின்றனர், இவையனைத்திலும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுக்களின் அங்கத்தினர்கள் உடந்தையாக இருந்திருக்கின்றனர். ஆனால் அச்சந்தருகிற வகையில், 1994-ல் துப்பாக்கிச் சூட்டின் எண்ணிக்கை அதிகரித்தது. இவற்றிற்குப் பலியானவர்களில் ஏழு பேர் சாதாரண குடிமக்களாக இருந்தனர். தனிப்பட்டவகையில் சொந்தமாக துப்பாக்கி வைத்திருப்பதற்கு எதிராக ஜப்பானில் கடுமையான சட்டதிட்டங்கள் இருந்தபோதிலும், இந்த நாட்டில் சுமார் 1,00,000 கள்ளத் துப்பாக்கிகள் இருக்கின்றன என்று போலீஸ் கூறியிருக்கிறது. ஜனநெருக்கடி நிறைந்த ரயில் நிலையம் ஒன்றில் மனக்குறையுள்ள முன்னாள் நோயாளி ஒருவரால், ஒரு டாக்டர் சுடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு கல்லூரி மாணவன் ஒருவன் பேட்டியின்போது, “அமெரிக்காவில் மட்டும்தான் இதெல்லாம் நடக்குமென்று நினைத்தேன்,” என்று கூறினான்.
தொழில்நுட்பமும் ஓய்வுநாள் ஓட்டைகளும்
இஸ்ரேலில், உயர்-தொழில்நுட்ப உலகில் ஓய்வுநாளை அனுசரிப்பதானது, ஹாலாக்கா அல்லது பூர்வீக யூத நியாயப்பிரமாண தொகுப்பின்படி கண்டிப்பாக வாழ்பவர்களுக்கு மெய்யான சில சவால்களைக் கொடுக்கிறது. உதாரணமாக, ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் உலோகக் கண்டுபிடிப்பானூடே (metal detector) நடந்துபோவதுபற்றி கவலைப்படுகின்றனர். அவர்களுடைய சாவிகள் கண்டுபிடிப்பானை இயங்கும்படி செய்தால், அவர்கள் தங்களை அறியாமலேயே ஒரு மின்சார சுற்றை முழுமை பெறச் செய்வதாகிறது. எனவே இது தீ மூட்டுவதற்கு எதிரான ஹாலாக்காவின் தடையை மீறிவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர். எனவே ட்ஸோமெட் என்ற ஒரு அமைப்பு சாவிகளைப் போன்ற சாதாரணமாக உபயோகிக்கும் பொருட்களால் பாதிக்கப்படாத ஒரு உலோகக் கண்டுபிடிப்பானைக் கண்டுபிடித்தது. இது ஓய்வுநாள் அனுசரிப்புக்கு எவ்வித பாதகமும் செய்யாதிருந்தது. இதைப்போலவே, ஓய்வுநாளில் வழக்கமுறையாக ஏதாவது எழுதவேண்டிய தேவையிலிருந்த ஆர்த்தடாக்ஸ் டாக்டர்களின் பிரச்சினையை வேறொரு அமைப்பு தீர்த்துவைத்திருக்கிறது. இது நாரிழை-நுனி கொண்ட ஒரு பேனாவைக் கண்டுபிடித்தது. மையினால் இந்தப் பேனாவைக் கொண்டு எழுதுவது ஒருசில நாட்களுக்குப் பிறகு அழிந்துவிடுகிறது. இது எவ்வாறு பிரயோஜனமாக இருக்கிறது? ஹாலாக்கா ஓய்வுநாளில் எழுதுவதற்குத் தடைவிதிக்கிறது, ஆனால் எழுதுவது என்றால் நிரந்தரமான அடையாளங்களை விட்டுச் செல்லுதல் என்பதாக விளக்கமளிக்கிறது. “[கடவுள்] ஓட்டையை விட்டுவைத்திருக்கிறார் என்றால், அது பயன்படுத்தப்படுவதற்காகவே விட்டுவைத்திருக்கிறார்,” என்று நன்கு அறியப்பட்டிருந்த ஒரு ரபீ கூறியதாக தி நியூ யார்க் டைம்ஸ் மேற்கோள்காட்டுகிறது.
நசியும் ஆபத்திலிருக்கும் ராட்சதர்கள்
கலாபகஸ் தீவுகளைச் சேர்ந்த ராட்சஸ ஆமை சர்வதேசத்திலும் நசிந்துபோகும் ஆபத்திலிருக்கும் இனமாக அறியப்பட்டதாயும் பாதுகாக்கப்பட்டதாயும் இருக்கிறது. இருப்பினும், சமீபத்தில், பிரமாண்டமான இந்த ஊர்ந்துசெல்லும் பிராணி புதிய ஒரு ஆபத்தை எதிர்ப்படுகின்றனவென்பது தெளிவாயிற்று. கலாபகஸ் தீபகற்பத்தைச் சேர்ந்த இசபெல்லா தீவு முழுவதும் ஒரு மாதத்திற்கு தீ கொழுந்துவிட்டெரிந்தது. அந்தத் தீவின் விலையேறப்பெற்ற 6,000 ஆமைகளைக் காப்பாற்ற மீட்புப்பணியினர் அகழிகளைத் தோண்டினர், மேலும் அவற்றில் 400 ஆமைகளை விசேஷித்த பாதுகாப்பிடங்களுக்கும்கூட மாற்றினர். இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட இந்த நடவடிக்கையானது, தீயிலிருந்து ஆமையைப் பாதுகாப்பதற்காக எடுத்ததைவிட அதிகம் மக்களிலிருந்து பாதுகாக்க எடுத்ததாகும். தி யுனெஸ்கோ கூரியர் சொல்லுகிறபடி, “ஆமை வேட்டையாடுதல் சட்டவிரோதமானதுதான், இருந்தாலும் இது சந்தேகமின்றி ஒரு பாரம்பரியப் பழக்கமாக இருந்துவருகிறது. ஆமைகளின் இறைச்சியும், முக்கியமாக பெண் ஆமைகளின் இறைச்சியும், அவற்றின் ரத்தமும் சுவையுள்ளவையாக இருப்பது மட்டுமல்லாமல், மருந்தாக பயன்படும் தன்மை உள்ளவையாகவும் கருதப்படுகின்றன.” மனிதனால் உண்ணப்பட்ட 42 ஆமைகளின் எஞ்சிய பாகங்களை மீட்புப் பணியாளர் கண்டுபிடித்தனர்.
“அரசாங்கத்தால் மரணம்”
மேலே கொடுக்கப்பட்டது ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆர். ஜே. ரம்மலால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புதிய புத்தகத்தின் தலைப்பாகும். இந்த நூற்றாண்டின்போது ஏற்பட்ட மனித கொலைகளில் அரசாங்கங்களின் பங்கு என்ற பொருளின்பேரில் Mr. ரம்மல் எட்டு வருடங்களாக, “ஆயிரக்கணக்கான மூலங்களிலிருந்து” தகவல்களைத் திரட்டினார். தி ஹானலுலு அட்வர்ட்டைஸர் சொல்லுகிறபடி, அந்தப் புத்தகம் சொல்வதாவது: “அநேகமாக 17 கோடி ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சுட்டுக் கொல்லப்பட்டு, அடித்து, சித்திரவதை செய்து, கத்தியால் குத்தி, எரித்து, பட்டினிபோட்டு, குளிரில் உறையவைத்து, நசுக்கப்பட்டு, அல்லது கட்டாயப்படுத்தி வேலைவாங்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர்: உயிரோடு நிலத்தில் புதைத்து, நீரில் மூழ்கடித்து, தூக்கிலிடப்பட்டு, குண்டு வீசியும் கொல்லப்பட்டனர் அல்லது மற்ற பல்லாயிரக்கணக்கான வழிகளிலும் பாதுகாப்பற்ற நாதியற்ற குடிமக்களும் அயல்நாட்டவரும் அரசாங்கங்களால் கொல்லப்பட்டனர்.” “நம்முடைய இனம் நவீன கொள்ளை நோயினால் அழிக்கப்பட்டிருப்பதுபோல தோன்றுகிறது,” என்பதாக ரம்மல் கூறுகிறார். “வேறெந்த நூற்றாண்டும் இத்தகைய பேரளவான ஒரு கொலைபாதகத்தைக் கண்டதில்லை,” என்று ரம்மலின் கண்டுபிடிப்புகளைப்பற்றி இந்தச் செய்தித்தாள் அறிவிக்கிறது.
பயனுள்ள புழுக்கள்
“இன்னொருமுறை கொள்ளை நோய் பரவாமல் தடுப்பதில் இந்தியாவின் ரகசிய கருவியாக இருப்பவை மண்புழுக்களாகும்,” என்று நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிவிக்கிறது. கழிவுகள் சேர்ந்துகிடக்கும்போது, மரணத்தை விளைவிக்கும் நோய்களைத் தாங்கியிருக்கும் எலிகளும் கெடுதிவிளைவிக்கும் மற்ற உயிரினங்களும் பெருகுகின்றன. தற்போது உள்ளூர் இனத்தைச் சேர்ந்த, நிலத்தை ஆழமாகத் தோண்டும் புழு, பெரிட்டிமா எலாங்கேட்டா கழிவுப் பொருட்களை பயனுள்ள கலப்பு உரமாக மாற்றும்படி செய்யப்படுகின்றனர். குப்பைத் தொட்டிகளுக்குள் விடும்போது, இந்தப் புழுக்கள் கழிவுகளைத் தின்று, உடனடியாக கரையக்கூடிய மெல்லிய கலப்பு உரத்தை உற்பத்தி செய்கின்றன. பம்பாயில் ஏற்கெனவே பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் நாளொன்றுக்கு நான்கு டன் இறைச்சிக் கொட்டில் கழிவுகளை மாற்றுகிறது. தற்காலம் எரிதொட்டிகளையும் குப்பைக்குழிகளையும் நம்பியிருக்கும் உள்ளூர் நிர்வாகங்கள், இப்போது பயனுள்ள இந்தப் புழுக்களைப்பற்றி அக்கறையோடு சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
சர்ச்சும் யுத்தமும்
பால்கன் தீவுகள் சண்டையில் செர்பியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் என்ன பங்கை வகித்திருக்கிறது? இந்தக் கேள்வி இங்கிலாந்து, ஜெர்மெனி, கிரீஸ், ரஷ்யா, செர்பியா, ஸ்வீடன், ஸ்விட்ஸர்லாந்து, ஐக்கிய மாகாணங்கள் ஆகிய நாடுகளிலிருந்து வந்த ஆர்த்தடாக்ஸ் மற்றும் புராட்டஸ்ட்டன்ட் மதத்தலைவர்கள் மத்தியில், சமீபத்தில் நடந்த வட்டமேஜை கலந்தாலோசிப்பில் சிந்திக்கப்பட்டது. அந்தப் பேச்சுகள் உலக சர்ச் கவுன்ஸிலால் ஒருங்கமைக்கப்பட்டு, ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஜெனிவாவில் கொடுக்கப்பட்டன என்று ஜெர்மனியில் பிரசுரிக்கப்படுகிற க்ரிஸ்ட் இன் டெர் கேகென்வார்ட் (சமகாலத்துக் கிறிஸ்தவன்) என்ற ஒரு கத்தோலிக்க செய்தித்தாள் அறிக்கை செய்தது. யுத்தத்தில் செர்பியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் தனக்கு விருப்பமான தரப்பினருக்கு மட்டும் “அமோக ஆதரவு கொடுத்து,” ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டது என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு இந்தப் பேச்சுகள் எற்பாடு செய்யப்பட்டன. பேச்சுகளில் பங்குகொள்ள வந்தவர்களில் பெரும்பாலானவர்கள், பெருங்குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், செர்பியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை உலக சர்ச் கவுன்ஸிலில் அங்கமாக தொடர்ந்திருப்பதற்கு வாக்களித்தனர். இருந்தபோதிலும் “அனைத்து கருத்து முரண்பாடுகளும் தீர்த்துவைக்க [முடிய]வில்லை”
போதைப்பொருள் வியாபாரம் கொள்ளை லாப வியாபாரம்
“சர்வதேசிய போதைப்பொருள் வியாபாரம், போர்க்கருவிகளின் வாணிபத்திற்கு அடுத்ததாக, உலகிலேயே இரண்டாவது கொள்ளை லாபம் தரும் வாணிபமாக ஆகியிருக்கிறது. இது வருடந்தோறும் 400 பில்லியன் யுஎஸ் டாலரை விழுங்கி ஆசியாவின் அரசியல் அமைப்புகளை சீரழியச்செய்கிறது,” என்று ஆஸ்திரேலிய செய்தித்தாளாகிய தி சிட்னி மார்னிங் ஹெரல்ட் சொல்லுகிறது. இந்தத் தொகை “கிட்டத்தட்ட அனைவரையும் கறைப்படுத்தும் வல்லமையுள்ளதாய் இருக்கிறது,” என்பதாக இன்டர்போலின் பொதுச் செயலாளர் கூறுகிறார். கோல்டன் ட்ரையேங்கிள் பகுதியில், மியன்மார், தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கருகில், மற்றும் ஆப்கானிஸ்தானம், பாகிஸ்தான் போன்றவற்றின் கோல்டன் க்ரெஸென்ட்டிலும் உலக ஹெராயின் உற்பத்தியில் 80-க்கும் அதிகமான சதவீதம் உற்பத்தி செய்யப்படுவதால் ஆசியாதான் முக்கிய கவனத்துக்குரிய இடமாக இருக்கிறது. “போதைப்பொருள் வாணிபம் பயங்கரவாதத்திற்கு பணம்கொடுத்து ஆதரிக்கும் முக்கிய வழியாக ஆகிவிட்டிருக்கிறது,” என்பதாக இன்டர்போலின் முதன்மை போதைப்பொருள் அலுவலர் தொடர்ந்து கூறுகிறார்.