இளைஞர் கேட்கின்றனர்
உண்மையில் என்னால் கடவுளின் நண்பனாயிருக்க முடியுமா?
கடவுளுக்கு ஒரு நண்பனாகவா? இயலவே இயலாது என்று 20 வயது டாரஸ் நம்புகிறார். “நான் மிகவும் தாழ்வாக நினைக்கிறேன், யாரேனும் என்னை விரும்புமளவுக்கு தகுதியில்லாதவள். அவருடைய பிரசன்னத்தில் இருப்பதற்கு தகுதி உடையவள் என்று நான் நினைக்கவில்லை, அதனால் அவரிடம் ஜெபிப்பதைக்கூட தவிர்க்கிறேன்,” என்று புலம்புகிறார் இந்த இளம் பெண். இளம்வயதினர் சிலர் கடவுளுடைய நட்புறவுக்கு முற்றிலும் தகுதியே அற்றவர்கள் என்ற உள்ளுணர்வு உடையவர்களாக இருக்கிறார்கள். கடவுளுக்கு நண்பனாக இருக்கும் எண்ணத்தை அவர்கள் ஒருவேளை போற்றியபோதிலும், அதை அவர்களால் அடையமுடியாது என்று நினைக்கிறார்கள். எப்போதாவது நீங்கள் அவ்வாறு உணர்ந்ததுண்டா?
சில சமயங்களில் ஒரு இளைஞரின் சொந்த பலவீனங்களே கடவுளை அணுகுவதற்குக்கூட அவரை தகுதியற்றவராக உணரச்செய்யும். உதாரணத்திற்கு இளம் மைக்கலை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கடவுளுடைய வழிகளை போற்றுவதற்கு முன்னர், “கிட்டத்தட்ட எல்லா விதமான பாவச்சிந்தையாலும் துர்சிந்தையாலும் செயலாலும் பீடிக்கப்பட்டிருந்தான்.” ஆயினும், அவர் பைபிளில் கற்றவற்றிலிருந்து, தான் கடவுளுக்கு துக்கத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்ததை அறிந்துகொண்டார். அவர் விளக்கினார்: “ஒவ்வொரு சபை கூட்டமும், ஒரு தவற்றையாவது எடுத்துக் காட்டியது. . . என்னையே என்னால் மன்னிக்க முடியாதபோது, முடிவில்லாத என் பாவங்களை யெகோவா மன்னிப்பார் என்பதை எதிர்பார்க்க முடியவில்லை.”
மற்ற சிலருடைய காரியங்களில், ஒரு இளைஞர் மற்றவர்களால் நடத்தப்படுகிற விதம் அவரை யெகோவாவின் நட்புரிமைக்கு தகுதியற்றவராக உணரச்செய்கிறது. உதாரணமாக முன்பு மேற்கோள் காட்டப்பட்ட டாரஸ், சிறுகுழந்தையாக இருந்தபோதே தன் தாயால் கைவிடப்பட்டார். அவர் வெளிப்படுத்தினார்: “யாராவது என்னை நேசிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறதில்லை. என் சொந்தத் தாயும் குடும்பமும் என்னைத் தனியாக விட்டுவிட்டார்கள் என்றால், வேறு எவராவது என்னை நேசிக்கிறார்கள் என்பதற்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?” ஒரு இளைஞர் சிறுபிராயம் முதலே இழிவாகவும் கொடுமையான வழியிலும் நடத்தப்பட்டாராகில், கடவுள் தன்னை என்றுமே நண்பனாகக் கொண்டிருக்க விரும்பமாட்டார் என்று உண்மையிலேயே நம்பக்கூடும்.
மறுபட்சத்தில், ஒரு இளைஞர் கடவுளிடம் நட்புறவை உடையவராக இருந்திருப்பார், ஆனால் சொந்த பலவீனத்தினால், பெரும் பாவத்தில் விழுந்து விடுகிறார். இது ட்ரேஸிக்கு நேர்ந்தது. “நான் மிகவும் வெட்கப்படுகிறேன், என்னுடைய வேதனையும் குற்ற உணர்வும் தாங்க முடியாதவை. என் தகப்பன் யெகோவாவை அவ்வளவாகப் புண்படுத்திவிட்டேன்,” என்று இந்த 21-வயது பெண் புலம்புகிறார்.
மேற்சொன்ன நிலைமைகள் ஒன்றில் ஒருவேளை உங்களை நீங்கள் காணக்கூடும். ஆனால் நம்பிக்கை இருக்கிறது: கடவுளை உங்கள் நண்பனாக வைத்திருக்க முடியுமே!
ஏன் நீங்கள் கடவுளின் நண்பனாகக்கூடும்
பாவ நடவடிக்கைகள் ஒருவரை கடவுளின் நண்பனாக இருப்பதிலிருந்து தடுக்கிறது என்பது உண்மைதான். சந்தோஷகரமாக, நம் அன்பான தகப்பன் நமக்கு உதவி செய்ய அவர்தாமே முந்திக்கொண்டிருக்கிறார். “நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார். (ரோமர் 5:8) தன் மரணத்தின் மூலம், போற்றுதல் மனப்பான்மையுள்ளவர்களை பாவத்தின் முழுமையான ஆதிக்கத்திலிருந்து மீட்க கிரயத்தைக் கொடுத்துள்ளார். (மத்தேயு 20:28) இவ்வாறாக அப்போஸ்தலன் மேலும் கூறுகிறார்: “நாம் தேவனின் சத்துருக்களாக இருந்தோம், ஆனால் தம்முடைய குமாரனின் மரணத்தின் மூலம், நம்மை அவருடைய நண்பர்களாக ஆக்கினார்.”—ரோமர் 5:10, டுடேஸ் இங்லிஸ் வர்ஷன்.
நாம் முன்பு குறிப்பிட்ட, மைக்கல் போன்ற இளைஞர் சிலர், யெகோவாவின் தராதரங்களைப் போற்ற அறிந்துகொள்வதற்கு முன்பே பயங்கரமான பாவங்களில் ஈடுபட்டிருக்கலாம். என்றபோதிலும், எத்தகைய கொடிய பாவமாக இருந்தபோதிலும், ஒருவரின் கடந்தகாலத்து பாவங்கள், இயேசுவின் கிரயபலியின் மூலம் மன்னிக்கப்படும். இருதயத்துக்கு இதமளிக்கும் இந்த உறுதியை பைபிள் அளிக்கிறது: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றபோதிலும், ஒருவர் அத்தகைய சுத்திகரிப்பைப் போற்றுகிறார் என்பதை கடவுளுக்குக் காண்பிக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடும் நியமம் ஒருவேளை பொருத்தப்படலாம்: “அசுத்தமானதைத் தொடாதிருங்கள்” என்று யெகோவா சொல்கிறார், “அப்பொழுது, நான் உங்களுக்குப் பிதாவாக இருப்பேன்.” (2 கொரிந்தியர் 6:17, 18) ஒருவர் அத்தகைய தவற்றை விட்டுவிலகி, உண்மையிலேயே மனந்திரும்புவாராகில், கடவுள் அவரைத் தம்முடைய அனுக்கிரகத்துக்குள் சேர்த்துக்கொள்ள சித்தமுள்ளவராய் இருக்கிறார் என்று அறிந்துகொள்வது எவ்வளவு இதமளிப்பதாய் உள்ளது.
துர்ப்பிரயோக சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட பிள்ளைகளைப்பற்றி என்ன? தங்களுடைய விருப்பத்திற்கு எதிராக செய்யப்பட்ட காரியங்களுக்காக அவர்களைக் குற்றமுடையவர்கள் என்று யெகோவா கருதுவதில்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அவர்கள் பாவத்திற்கு இரையானவர்களே அன்றி பங்குகொண்டவர்கள் அல்லர். ஒரு நபராக உங்களுடைய மதிப்பு, மற்ற மனிதரின் தீர்ப்பைச் சார்ந்தில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய சூழ்நிலைமைகள் எதுவாக இருந்தபோதிலும் யெகோவா உங்கள் நண்பராக முடியும். மோரீன், அவர் தன்னுடைய குடிகார அப்பாவின் காரணமாக வன்முறை நிறைந்த வீட்டில், கிறிஸ்தவ அம்மாவால் வளர்க்கப்பட்டாள். என்றபோதிலும் அவள் கூறினாள்: “அத்தகைய குழப்பங்களின் மத்தியிலும், எப்படியோ யெகோவாவுடன் உறவை என்னால் வளர்த்துக்கொள்ள முடிந்தது. என்னை என்றுமே கைவிடாதவர் என்று அவரைப்பற்றி அறிந்துகொண்டேன்.”
ஒருவேளை கொடூரமானப் பாவத்தில் நீங்கள் வீழ்ந்துவிட்டால்?
கிறிஸ்தவ பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட டக், தன் 18-வது வயதில் பால்சம்பந்தமான ஒழுக்கக்கேட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இது அவருடைய கெட்ட கூட்டுறவின் காரணமாகும். “அது தவறு என்று தெரியும், ஆனாலும் அதைத் தொடர்ந்து செய்தேன், ஏனென்றால் உல்லாசமான நேரத்தை அனுபவிக்க விரும்பினேன்,” என்று மனந்திறந்து கூறினார். கொஞ்ச நாட்களுக்குப்பின், அவருடைய நடத்தையின் பயனின்மையைக் கண்டார். “பெயரளவில் நண்பர்கள் என்று அழைக்கப்பட்ட அனைவரும், பணத்தைப் பறிப்பதற்கும் உல்லாசமான நேரத்தை அனுபவிப்பதற்கும்தான் என்னை உபயோகித்தனர் என்பதை நான் உணர ஆரம்பித்தேன்,” என்று ஒத்துக்கொள்கிறார். பின்னர் யெகோவாவின் நட்புறவை மீண்டும் பெற அவர் நடவடிக்கைகள் எடுக்கத் துவங்கினார். ஆனால் அவரின் முன்னேற்றத்தை பெரும் முட்டுக்கட்டை தடுத்தது.
“நான் திரும்பி வர கடினமாக்கிய முக்கியமான காரியம் எதுவென்றால், மிகவும் தகுதியற்றவனாக உணர்ந்ததே. நான் செய்தது அனைத்தும் யெகோவாவின் கண்களுக்கு முன்பாகக் கெட்டதாய் இருப்பதாக உணர்ந்தேன். அவர் எவ்வளவு நல்லவர், என்னிடமாக எவ்வளவாய் சகித்துள்ளார் என்பதை அறிந்தபோது, அவர் என்னை மன்னிப்பதற்கே வழியில்லை. ஏனென்றால் நான் அவ்வளவு பாவியாக இருந்தேன்,” என்று டக் மனந்திறந்து கூறுகிறார். என்றாலும், சபை மூப்பரின் உதவியோடும், மனாசேயைப்பற்றிய பைபிள் பதிவைக் கவனமாக எண்ணிப்பார்த்ததன் மூலம் டக் இந்த முட்டுக்கட்டையை மேற்கொண்டார்.
மனாசே யார்? பண்டைய யூதாவின் அரசன். கடவுள் பக்தியுள்ள அவருடைய தந்தை எசேக்கியாவால், யெகோவாவை நேசிக்க கற்றுக்கொடுக்கப்பட்டார் என்று பைபிள் காட்டுகிறது. ஆனால், அவருடைய தந்தை இறந்த பின்னர், அவர் 12-ம் வயதில் அரசனானார். தான் விரும்பும் அனைத்தையும் தன்னால் இப்போது செய்யமுடியும் என்று மகிழ்ச்சியடைந்தார். பாகாலை வழிபடுவதற்காக யெகோவாவை விட்டுவிட்டார். அத்தகைய வழிபாடு, கொடூரமான ஒழுக்கக்கேட்டாலும், கட்டுப்பாடற்ற பால்சம்பந்தமான களியாட்டங்களாலும் அடையாளப்படுத்தப்பட்டது. மனாசே “கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.” தம்முடைய உண்மையுள்ள பிரதிநிதிகள் வாயிலாக, “கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.” எனவே யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் அடையாளமாக, மனாசே விலங்குப்பூட்டப்பட்டவராய் பாபிலோனுக்கு கைதியாகக் கொண்டுசெல்லப்பட்டார்.—2 நாளாகமம் 31:20, 21; 33:1-6, 10, 11.
அப்போது, மனாசே கடந்த காலத்தில் தான் செய்த காரியங்களை அமைதியாக யோசித்தார். அவற்றை தன் நினைவிலிருந்த யெகோவாவின் சட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், குற்ற உணர்வால் பீடிக்கப்பட்டு, மன்னிப்புக்காக மன்றாடினார். கடவுளுக்கு முன் தன்னைத் தாழ்த்தி, ‘அவரிடத்தில் விண்ணப்பம் பண்ணினார்.’ கடவுள் ‘தன்னை அவருடைய கெஞ்சுதலுக்கு இரங்கும்படி அனுமதித்து, அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவனை திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்.’ ஆம், ‘இரக்கங்களின் பிதா’ இந்த மனந்திரும்பிய பாவியை தம்மிடமாக மீண்டும் நெருங்கிவர அனுமதிக்கச் சித்தமுள்ளவராய் இருந்தார். இத்தகைய இரக்கத்தை அனுபவப்பூர்வமாய் மனாசே பெற்றுக்கொண்டபோது, ‘யெகோவா உண்மையுள்ள கடவுள் என்பதை அறிந்துகொண்டான்.’—2 நாளாகமம் 33:12, 13, NW; 2 கொரிந்தியர் 1:3.
யெகோவா மனாசேயையும்கூட மறுபடியும் ஏற்றுக்கொண்டார் என்றால், வழிதடுமாற்றமடைந்த இன்றைய இளைஞரும், மனந்திருந்திய மனப்பான்மையைக் காட்டுவாராகில், தம்முடன் உறவை மீண்டும் நிலைநாட்ட நிச்சயமாகவே அவர் அனுமதிப்பார். தன்னுடைய சபையின் ஆவிக்குரிய மேய்ப்பர்களின் உதவிக்கு டக் செயல்பட்டார். கடவுள் “எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்,” என்பதை தெளிவாகக் காணும்படி டக் உதவிசெய்யப்பட்டார்.—சங்கீதம் 103:9.
கடவுளின் நண்பனாக நிலைத்திருங்கள்
கடவுள் உங்களுடைய நண்பராக ஆன உடனேயே, நிரந்தரமாக நிலைக்க வைக்க அதைப்போற்ற வேண்டும். முழுக்காட்டுதல் பெற்ற 18-வயது பெண், திருமணமாகாத தாயாக ஆனார். அப்படி இருந்தபோதிலும் யெகோவாவுடன் காரியங்களைச் சரிப்படுத்திக்கொள்ள அவர் உதவிசெய்யப்பட்டார். (காண்க: ஏசாயா 1:18.) பழையநிலைக்கு அவரைத் திரும்பச்செய்த திருப்புமுனை? “யெகோவா அன்பான தகப்பன், உயிரைவாங்க காத்திருப்பவர் அல்லர் என்பதை கற்றுக்கொண்டேன். நான் செய்தது அவரைப் புண்படுத்தியது என்பதை உணர்ந்துகொண்டேன். கடவுளை ஒரு நண்பனாக, உணர்ச்சிகள் உள்ள ஒருவராகப் பார்க்கவேண்டும், வெறும் புலனாகாத ஆவி ஆளாக வணக்கத்தைமட்டும் கொடுத்து, ஆனால் என்றுமே நேசிக்கப்படாதவராக கருதக்கூடாது என்பது மிகவும் முக்கியம்,” என்று அவர் விளக்கினார். மனாசேயைப்போல், யெகோவாவின் வணக்கத்தில் முழுமையாக ஈடுபட அவர் உந்தப்பட்டார். (2 நாளாகமம் 33:14-16) இது அவருக்குப் பாதுகாப்பாக இருந்தது. அவர் மற்ற இளைஞர்களுக்கு அறிவுரை கூறுகிறார்: “சூழ்நிலை கடினமாக இருந்தாலும், யெகோவாவைத் துதிக்க முயன்றுகொண்டே இருங்கள். யெகோவா உங்களுடைய பாதையை மீண்டும் அன்பாகவே சீர்ப்படுத்துவார்.”
கடவுளுடன் நண்பர்களாக இருப்பவர்களோடு நட்புறவைத் தேடுவதும்கூட முக்கியமானது. தேவ நியமங்களுக்கு முற்றிலும் மதிப்பே அற்றவர்களை, கொள்ளைநோய் போல தவிர்த்துவிடுங்கள். (நீதிமொழிகள் 13:20) பால்சம்பந்தமான ஒழுக்கக்கேட்டில் ஒரு இளைஞனுடன் ஈடுபட்ட இளம் லிண்டாவிற்கு அவனின் நட்புறவே “எவற்றைக் காட்டிலும் மிகமுக்கியமாக ஆனது.” தன்னுடைய ஆவிக்குரிய குணமடைதலுக்குப்பின் ஒப்புக்கொண்டார்: “யெகோவாவிற்கும் உங்களுக்கும் இடையே தனிப்பட்ட பந்தம் வைத்திராவிட்டால், முழு வாழ்க்கையையும் நீங்கள் அழித்துவிடக்கூடும்.”
நீங்கள் அத்தகைய பந்தத்தைக் கொண்டிருக்கிறீர்களா? இல்லை என்றால், அதையடைய உழையுங்கள். கடவுளுடன் வைத்திருக்கும் நட்புறவின் மதிப்பை லிண்டா சுருக்கிக் கூறுவதாவது: “யெகோவாவுடன் உள்ள நல்ல தனிப்பட்ட உறவே, முழு உலகத்திலும் மிகவும் முக்கியமான காரியம். இவ்வுலகில் எந்தப் பையனோ பெண்ணோ மற்ற எதுவுமே அதைக்காட்டிலும் பெரியதல்ல. யெகோவாவின் நட்புறவு இல்லையென்றால், பிறகு எதுவுமே முக்கியம் அல்ல.”
[பக்கம் 15-ன் படம்]
சில இளைஞர்கள் கடவுளுக்கு நண்பர்களாக இருக்க தகுதியற்றவர்களாக உணரக்கூடும்