தாத்தாபாட்டிக்கு என்ன சம்பவிக்கிறது?
இத்தாலியிலுள்ள விழித்தெழு! நிருபர்
“ஒரு தாத்தாவாக பேரப்பிள்ளைகளால் அவ்வளவு மென்மையான உணர்ச்சிகளை என்னிடம் காட்டமுடிகிற நபராக என்னால் இருக்கமுடிந்தது என்பதை நம்பவே முடியவில்லை. அவர்கள் ஒரு அன்பளிப்பாக—பாசத்தின் கட்டுகளை வலுப்படுத்தும் இனிய, கள்ளம்கபடமற்ற தூதுவர்களாக—இருக்கின்றனர்.”—தாத்தா எட்டோரே.
மேலே குறிப்பிடப்பட்டதைப் போன்ற நல்ல உறவுமுறை இருந்துவருகிறபோதிலும், இந்நாட்களில் தாத்தாபாட்டிகளும், பெற்றோர்களும், பேரப்பிள்ளைகளும் எப்போதுமே சுமுகமாக உறவாடுவது கிடையாது. ஒத்துழைப்பதற்கு பதிலாக, இம்மூன்று தலைமுறையினரும் அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்கின்றனர். அதன் விளைவுகள்? வயதானவர்கள் மத்தியில், அதாவது தாத்தாபாட்டி மத்தியில் அதிகரிக்கும் தனிமை உணர்ச்சியும், சந்தோஷமின்மையுமே. இவர்கள் மிகவும் எளிதில் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகிறவர்களாகவும் தனிமையில் விடப்படுகிறவர்களாகவும் இருக்கிற குடும்ப அங்கத்தினர்கள். குடும்ப அங்கத்தினர்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு உள்ளாகும்போது தாத்தாபாட்டிகளிடமே உதவியை நாடிவருகின்றனர். உங்கள் குடும்பத்தில் நிலவரம் எப்படி இருக்கிறது? தாத்தாபாட்டி உண்மையிலேயே உயர்வாக மதிக்கப்படுகின்றனரா?
கடந்த சில பத்தாண்டுகளாகவே, உலகமுழுவதிலும் சமுதாயத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்கள், குடும்பத்தையும் அதனுள் நிலவியிருக்கும் உறவுமுறைகளையும் பாதித்திருக்கின்றன. இதன் விளைவாக வம்சாவழிக் குடும்பம் ஏறக்குறைய முழுக்க முழுக்க இல்லாமலே போய்விட்டது. ஐரோப்பாவில், வயதானவர்களில் 2 சதவீதத்தினர் மட்டுமே தங்களுடைய பிள்ளைகளோடு வாழ்கின்றனர். இருந்தபோதிலும், தொழில்வளர்ச்சி முன்னேற்றமடைந்த தேசங்களில், சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பில் ஏற்பட்ட தற்போதைய அதிகரிப்பின் விளைவாகவும், பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவின் விளைவாகவும், தாத்தாபாட்டிக்கும் பொது மக்களுக்கும் இருக்கும் விகிதாச்சாரம் எப்பொழுதும் இருந்ததைவிட அதிகமாகவே இருக்கிறது. ஐரோப்பாவின் மக்கள்தொகையில் 26 சதவீதத்தினர் தாத்தாவும் பாட்டியுமாக இருக்கின்றனர். யூரோப்பியன் யூனியனால் பிரசுரிக்கப்பட்ட ஒரு சுற்றாய்வு சொல்லுகிறபடி, இந்த எண்ணிக்கை “அதிகரித்தே தீரும்.” ஜப்பான் “தனது முதிய குடிமக்களை கவனித்துக்கொள்ளும் பாரம்பரியத்தைப்பற்றி பெருமையடைகிறது,” என்று அஸாஹி ஈவ்னிங் நியூஸ் சொல்லுகிறது. எனினும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கான உண்மையான தேவையே இல்லையென்றாலும்கூட தாத்தாபாட்டியை ஆஸ்பத்திரிகளிலோ, சிறப்பு வசதிகளுள்ள க்ளினிக்குகளிலோ விட்டுவிட்டு செல்லும் பழக்கம், முக்கியமாக நகரங்களில், மிகப் பரவலாக இருக்கிறது. வயதானோரைப் பரம்பரை பரம்பரையாக கனம் செய்துவந்திருக்கும் தென் ஆப்பிரிக்காவிலும்கூட, வயதானவர்களை ஒதுக்கித்தள்ளும் வருந்தத்தக்க மனநிலை இப்போது நிலவிவருகிறது என்று சொல்லுகிறது தி கேப் டைம்ஸ் என்ற கேப் டவுன் செய்தித்தாள். குடும்பங்கள் “வாழ்க்கையில் இருந்து எவ்வளவதிகத்தைப் பெறமுடியுமோ அவ்வளவையும் பெற” விரும்புகின்றன. ஆகவே, “பாட்டியைப் பத்திரமாக முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டால், அவர்கள் செய்யவேண்டிய கடமை தீர்ந்துவிட்டது என்று நினைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்” என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒரு வயதான பாட்டியின் மூன்று பிள்ளைகள் அவருக்கு “ஆதரவாக இருப்பதாகவும், தவறாமல் வந்து பார்ப்பதாகவும் உறுதிகூறி,” அவரை மிகவும் சிறந்த முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுப் போன ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப்பற்றி அதே செய்தித்தாள் பேசுகிறது. ஆனால் அவருடைய கதி என்ன? “தொடக்கத்தில் அவரைப் பார்க்க தினமும் வருகிறார்கள். சில வாரங்களுக்குப்பின், அவர்கள் தினமும் வருவது குறைந்து, வாரத்திற்கு மூன்றுமுறை வருகிறார்கள். அவர்கள் வருவது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை ஆகிறது. ஒரு வருடம் கழிந்தபின் மாதத்திற்கு இரண்டோ மூன்றோ தடவைகளும், கடைசியாக வருடத்திற்கு ஐந்தோ ஆறோ முறையுமாக ஆகி இறுதியில் அவர்கள் வருவதேயில்லை.” முடிவுக்கே வராததுபோல் தோன்றும் சலிப்பூட்டுகிற நாட்களை அந்தப் பாட்டி எப்படி கழிக்கிறார்? நெஞ்சத்தைத் தொடும் விவரிப்பு சொல்கிறது: “ஒரு மரம் தெரிகிற அளவுக்கு அவர்களுடைய அறையில் ஒரு ஜன்னல் இருந்தது. அதில் தங்கியிருந்த புறாக்களும் பூவையினப் பறவைகளும் மட்டுமே அவர்களுடைய உயிருள்ள கூட்டாளிகளாக இருந்தன. ஏதோ நெருங்கிய உறவினர்களுக்காக காத்திருப்பதைப்போல அவற்றின் வருகைக்காக அவர் வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பார்.”
தென் ஆப்பிரிக்கர்களின் வாழ்க்கை-பாணி மேற்கத்திய முறைக்கு மாறியதன் விளைவாக, பழங்குடி குடும்பங்களிலும் இதேதான் நடக்கிறது. இம்மாற்றம்தானே நகரங்களுக்குச் சென்று வேலை தேடும்படி அநேகரைத் தூண்டுவிக்கிறது. தாத்தாபாட்டியைக் கைவிடுவதற்கு, மாறிவரும் சமூகச் சூழ்நிலைகள் மட்டுமன்றி வேறு காரணங்களும் உள்ளன. இவை, சந்தோஷமான சமூக மற்றும் குடும்ப வாழ்க்கையை உருவாக்கும் நற்குணம், ஒருவர் தன்னுடைய அயலாருக்குக் காண்பிக்கும் மதிப்பு, குடும்ப பாசம் ஆகிய மனிதாபிமான குணங்கள் மறைந்துபோவது, பரவலாக நிலவியிருக்கும் தன்னல ஆவி, இன்பத்திலேயே நாட்டமாய் இருப்பது, பெருமை, எதிர்த்தெழுதல் போன்றவையே ஆகும். வேதவசனங்களின்படி அத்தகைய தார்மீகச் சீரழிவு நாம் “கடைசிநாட்களில்” வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) எனவே, தங்களுடைய தாத்தாபாட்டியை வளமூட்டுதல் மற்றும் நிலையானத் தன்மையின் உற்பத்தி ஸ்தலமாக மதிப்பதற்கு பதிலாக, பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும், அவர்களை பாரமான தடையாகவும் வேகமான சமுதாய மாற்றங்களோடு ஒத்துப்போகாதவர்களாகவுமே கருதுகின்றனர்.a
சந்ததிப் பிளவு அதிகமதிகம் விரிவடைந்துகொண்டே போவதால், வயதானவர்கள் தங்களுடைய குடும்பத்தாரோடு சேர்ந்து வாழும்போது, கணிசமான மன இறுக்கம் ஏற்படுகிறது. இருப்பினும், தாத்தாபாட்டியின் பங்கு அவ்வளவு பயனுள்ளதாக இருக்கக்கூடும்! அப்படியானால், தாத்தாபாட்டிகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு இடையில் இருக்கும் பாசமான உறவைக் கெடுக்கும், தலைமுறைகளுக்கு இடையில் இருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் சில யாவை? குடும்ப வட்டாரத்திற்குள் தாத்தாபாட்டிகள் தங்களுடைய மதிப்புள்ள பங்கை எவ்வாறு திரும்பவும் நிலைநாட்டலாம்?
[அடிக்குறிப்புகள்]
a முதிர்வயதின் தளர்ச்சி மற்றும் மிகவும் மோசமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் சில சந்தர்ப்பங்களில், வயதான சில பெற்றோர்களுக்கு நிபுணர்களைக் கொண்ட நர்ஸிங் ஹோம் மிகவும் அன்பான மற்றும் நடைமுறையான ஏற்பாடாக இருக்கலாம் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.