முன்னுரைக்கப்பட்ட உலக முடிவு சமீபமாயிருக்கிறதா?
“அணு யுகம் பிறந்தபோது உலகப் பேரழிவு சமீபித்திருப்பதைப் பற்றிய எண்ணங்கள் ஆட்டிப்படைக்கும் கருத்துக்களாக மாறிவிட்டன,” என்று குறிப்பிட்டது பிப்ரவரி 6, 1994-ம் தேதியிட்ட டெட்ராய்ட் ஃப்ரீ ப்ரஸ் மேகஸின். ஆகஸ்ட் 6, 1945-ல் ஹிரோஷிமா தீக்கிரையாக்கப்பட்டதற்குப் பிறகு, எல்லாருக்கும் ஒரு காரியம் தெட்டத்தெளிவாயிற்று: இப்பொழுது உலகம் முடிவடைவது உண்மையிலேயே சாத்தியம்தான்!”
கடந்த டிசம்பர் மாதம், நியூ யார்க்கைச் சேர்ந்த உளப் பகுப்பாய்வாளரும் வரலாற்றுப் பேராசிரியருமாக இருக்கும் சார்ல்ஸ் பி. ஸ்ட்ரோஸியர் சொன்னதாவது: “இதெல்லாம் ஒரு பெரும் வெடியோசையோடோ அல்லது சப்தமின்றியோ அல்லது எய்ட்ஸின் வேதனையோடோ முடிவடையும் என்பதை நம்மிடம் சொல்ல இனியும் புலவர்கள் தேவையில்லை.” உண்மையிலேயே, “மனித முடிவைப்பற்றி நினைக்காதிருக்க இப்போது உயிரூட்டமுள்ள கற்பனை தேவையாய் இருக்கிறது,” என்று அவர் தொடர்ந்து சொன்னார்.
உலகம் முடிவடையும் என்று இயேசு கிறிஸ்து கற்பித்ததால், முடிவு உண்மையில் சமீபத்தில்தான் இருக்கிறதா என்று அவருடைய போதனைகளிலிருந்தே நாம் தீர்மானிக்க முடியுமா?
முடிவு—எப்போது?
இந்த உலகம் அல்லது இக்காரிய ஒழுங்குமுறை எப்போது முடிவடையும் என்பதற்கான ஒரு “அடையாளம்” வேண்டுமென்று இயேசுவிடம் அவருடைய சீஷர்கள் கேட்டனர். “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் [“இக்காரிய ஒழுங்குமுறையின்,” NW] முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும்,” என்று கேட்டார்கள். (மத்தேயு 24:3) இந்தக் கேள்விக்கான பதிலைப் பெற இயேசு கொடுத்த அந்த ‘அடையாளத்தை’ நீங்கள் ஆராய்ந்து பார்க்கலாம். இது பைபிளில் மத்தேயு 24-ம் அதிகாரம், மாற்கு 13-ம் அதிகாரம், லூக்கா 21-ம் அதிகாரம் ஆகிய இடங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த அடையாளத்தை உருவாக்கும் ஒருசில பெரிய சம்பவங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன:
பெரிய போர்கள்: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” (மத்தேயு 24:7) அந்த அடையாளத்தின் இந்தப் பகுதி நிறைவேறுவதை சந்தேகமின்றி நாம் கண்டிருக்கிறோம். “[1914-ல் தொடங்கிய] முதல் உலகப்போர் முதல் ‘முழு’ போராக இருந்தது,” என்று குறிப்பிட்டார் ஒரு வரலாற்று ஆசிரியர். எனினும், சுமார் ஐந்து கோடி ஆட்களைக் காவுகொண்ட இரண்டாம் உலகப்போர் பலமடங்கு மோசமானதாக இருந்தது. மேலும், போர் பூமியைத் தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது.
உணவுப் பற்றாக்குறைகள்: ‘பஞ்சங்கள் ஏற்படும்.’ (மத்தேயு 24:7) முதல் உலகப்போரைத் தொடர்ந்து கடும் பஞ்சம் ஏற்பட்டது. அச்சமயத்திலிருந்து உலகின் அநேக பாகங்களில் பஞ்சம் தொடர்ந்து தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. பணக்கார நாடுகளிலும்கூட, பட்டினி, ஊட்டச்சத்துக் குறைவு ஆகியவை பரவலாக காணப்படுகின்றன.
மகா பூமியதிர்ச்சிகள்: ‘மகா பூமியதிர்ச்சிகள் ஏற்படும்.’ (லூக்கா 21:11) பெரிய பூமியதிர்ச்சிகளில் ஒருசிலவற்றை மட்டும் சிந்தித்துப் பாருங்கள்: 1920, சீனாவில் 2,00,000 பேர் கொல்லப்பட்டனர்; 1923, ஜப்பானில் 1,43,000 பேர் உயிரிழந்தனர்; 1970, பெருவில் 66,800 பேர் கொல்லப்பட்டனர்; 1976, சீனாவில் 2,40,000 பேர் (சிலர் சொல்லுகிறபிரகாரம் 8,00,000 பேர்) மாண்டனர். பூமியதிர்ச்சி-தாங்கு பொறியியல் நிபுணர் ஒருவர், 1976-ல் சீனாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை, “மனிதவர்க்க வரலாற்றிலேயே மிகப் பெரிய பூமியதிர்ச்சிப் பேரழிவு” என்பதாக அழைத்தார்.
நோய்: ‘பல இடங்களில் கொள்ளைநோய்கள் உண்டாகும்.’ (லூக்கா 21:11) முதல் உலகப்போர் முடிந்தவுடனேயே, ஸ்பேனிஷ் ஃப்ளூவின் காரணமாக சுமார் 2.1 கோடி பேர் மரித்தனர். சயன்ஸ் டைஜஸ்ட் இவ்வாறு அறிக்கை செய்தது: “வரலாறு முழுவதிலும், மரணம் இவ்வளவு கடுமையாகவும் விரைவாகவும் ஒருபோதும் தாக்கியது கிடையாது.” அப்போதிலிருந்தே, இருதய நோய், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களும் மற்ற அநேக வியாதிகளும் கோடிக்கணக்கானோரைக் கொன்றிருக்கின்றன.
குற்றச்செயல்: ‘அக்கிரமம் மிகுதியாகும்.’ (மத்தேயு 24:12) பல நாடுகளில் குற்றச்செயல்கள் கட்டுக்கடங்காமல் போய்விட்டன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பயங்கரவாதம், ஊழல்—இதுபோன்ற குற்றச்செயல்களைத்தான் நாம் அனுதினமும் கேள்விப்படுகிறோம் அல்லது நம் வாழ்க்கையில் அனுபவிக்கிறோம்.
கடைசி நாட்களில் நிலவுகிற நிலைமைகளை மற்ற பைபிள் தீர்க்கதரிசனங்களும் முன்னுரைத்தன. உதாரணமாக, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் நான்கு குதிரைவீரர்களின் சவாரியைப் பற்றிய ஒரு காட்சி விவரிக்கப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 6:1-8) முதல் சவாரிக்காரர் வெற்றிவாகைசூடும் ராஜாவாக இயேசுவையே படமாகக் காட்டுகிறார். மற்ற சாவாரிக்காரர்களும் அவர்களுடைய குதிரைகளும் இயேசுவின் ஆளுகையின் தொடக்கத்தைக் குறிப்பிட்டுக் காட்டும்வகையில்—போர், பஞ்சம், பல வழிகளிலும் ஏற்படும் அகால மரணம் போன்ற—பூமியில் நடைபெறும் சம்பவங்களைப் படமாகக் காட்டுகின்றனர்.
இன்னும் மற்ற பைபிள் தீர்க்கதரிசனங்கள் “இவ்வுலகின் இறுதி கால”த்தின்போது பரவலாக இருக்கும் மனநிலைகளையும் சூழ்நிலைகளையும் விவரிக்கின்றன. இயேசுவின் அப்போஸ்தலரில் ஒருவர் என்ன எழுதினார் என்பதைச் சிந்தியுங்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தை நீங்கள் வாசிக்கும்போது, உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: துன்பங்கள் நிறைந்த இன்றைய காலங்களை இது உள்ளபடியே விவரிக்கிறதல்லவா?
அப்போஸ்தலன் எழுதியதாவது: “இவ்வுலகின் இறுதி காலம் துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும். மனிதர்கள் பணத்தையும் தங்களையும் தவிர வேறொன்றையும் நேசிப்பதில்லை; வீம்புக்காரர்களாகவும், அகந்தையுள்ளவர்களாகவும், தூஷிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்; பெற்றோர்களை மதிக்காதவர்களாகவும், நன்றிகெட்டவர்களாகவும், கடவுள் பக்தியற்றவர்களாகவும், சுபாவ அன்பில்லாதவர்களாகவும் இருப்பார்கள்; தீராப் பகையினராகவும், வீண்பழி சுமத்துகிறவர்களாகவும், தன்னடக்கமற்றவர்களாகவும், கொடுமைப்படுத்துகிறவர்களாகவும், நற்குணம் அனைத்தையும் வெறுப்பவர்களாகவும், நம்பிக்கைத் துரோகிகளாகவும், துணிகரமுள்ளவர்களாகவும், சுயமுக்கியத்துவம் நாடுபவர்களாகவும் இருப்பார்கள். கடவுளின் இடத்தில் சிற்றின்பங்களை வைப்பவர்களாகவும், மதத்தின் வெளித்தோற்றத்தைக் கடைப்பிடித்து ஆனால் அதன் பலனை கண்கூடாக மறுதலிப்பவர்களாகவும் இருப்பார்கள்.”—2 தீமோத்தேயு 3:1-5, தி நியூ இங்லிஷ் பைபிள்.
உலகத்தின் முடிவைப்பற்றிய மற்றொரு முக்கியமான தீர்க்கதரிசனம் என்னவென்றால், கடவுள், ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்’ என்ற வாக்குறுதியாகும். (வெளிப்படுத்துதல் 11:18) முன்பிருந்த தலைமுறையில் வாழ்ந்த மனிதர்களிடம் இந்தப் பூமியை அழிப்பதற்கான தொழில்நுட்ப திறன் இல்லாதிருந்தது, ஆனால் இன்றோ அது அவர்களிடம் இருக்கிறது. இன்று சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் புதிய தொழில்நுட்பங்கள் ஒரு பெரிய பங்கை வகித்துவருகின்றன. நவம்பர் 1992-ல், செய்தித்தாள்கள் இதைப்போன்ற தலைப்புச் செய்திகளைத் தாங்கிவந்தன: “பூமியின் அழிவைப்பற்றி முன்னணி விஞ்ஞானிகள் எச்சரிக்கை.”
உண்மைத் தீர்க்கதரிசனங்களைப் பிரித்தறியுங்கள்
இதைப்பற்றி எவ்வித சந்தேகமுமில்லை. “இவ்வுலகின் இறுதி காலம்” அல்லது “இக்காரிய ஒழுங்குமுறையின் முடிவு” காலத்தின்போது சம்பவிக்கும் என்று பைபிள் முன்னுரைத்த அனைத்து காரியங்களும் இப்பொழுதே சம்பவிக்கின்றன. உண்மை தீர்க்கதரிசனங்களை நாம் அவை நிறைவேறிக்கொண்டிருக்கும் கட்டத்தில் காண்கிறோம். ஆகவே அதற்கு நாம் செவிசாய்க்க வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது. “நீதியைப் பிரசங்கித்தவனாகிய” நோவாவின் காலத்தில், அந்நாளைய உலகம் முடிவுக்கு வருவதற்கு சற்றுமுன் இருந்த நிலைமையை விவரிப்பதன்மூலம் இயேசு இதைக் காண்பித்தார்.—2 பேதுரு 2:5.
இயேசு விவரித்ததாவது: “ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.” (மத்தேயு 24:38, 39) உண்மை தீர்க்கதரிசனம் அசட்டை செய்யப்படும்போது விளைவு பேரழிவாக இருக்கிறது.
‘ஆம், இந்த பைபிள் தீர்க்கதரிசனங்களை நான் விசுவாசிக்கிறேன்; என்றாவது ஒருநாள் முடிவு வரப்போகிறது, ஆனால் அது வர இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும்,’ என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். என்றாலும் அது உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? எச்சரிக்கைக்கு நீங்கள் இப்போது செவிசாய்க்க வேண்டாமா?
செவிகொடுக்கவேண்டிய எச்சரிக்கைகள்
சந்தேகமின்றி, சில எச்சரிக்கைகள் ஆதாரமற்றவையாய் இருக்கின்றன, ஆகவே அவற்றிற்குச் செவிசாய்ப்பது மடத்தனமாக இருக்கும். ஆனால் மற்றவை அப்படியல்ல. ஏதோ அநேகர், சமுதாயத்தின் பிரமுகர்களையும் உட்பட, ஒரு எச்சரிக்கையைத் துச்சமாகப் பேசுகிறார்கள் என்பதுதானே அதை அசட்டை செய்வதற்கான காரணம் கிடையாது. ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள்.
மார்ச் 1902-ம் ஆண்டு, கரிபியன் கடலின் அழகான தீவாகிய மார்ட்டினிக்கில் உள்ள எரிமலை மவுண்ட் பெலே தீவிரமடையத் தொடங்கிற்று. ஏப்ரலில் புகையையும், சாம்பலையும், பாறைத் துண்டுகளையும் நெடியேற்றும் ஆவியோடு சேர்த்து கக்கிற்று. சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள செயின்ட் பியர் நகரத்தில் வாழ்ந்த மக்கள் பீதியடைந்தனர். “நகரமே சாம்பலால் நிரம்பிற்று. கடுமையான அந்த ஆவியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, அநேகர் நனைத்த கைக்குட்டையை வைத்து வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டியதாயிற்று,” என்று எழுதினார் அந்நகரவாசிகளில் ஒருவர்.
மே மாத தொடக்கத்தில் அந்த எரிமலையின் செயல் அதிகரித்தது. உள்ளூர் செய்தித்தாள் சொன்னதாவது: “அந்தச் சாம்பல் மழைபோன்று பொழிவது நிற்கவேயில்லை . . . எந்த வாகனங்களின் சப்தமும் இனியும் தெருக்களில் கேட்கப்படவில்லை. சக்கரங்கள் நகரமுடியாதபடி புதைந்துபோயின.” வெப்பம் மூச்சுத்திணற வைத்தது.
பின்னர், மே 5-ம் தேதி, அந்த எரிமலை கொதிக்கும் குழம்பைப் பெருக்கெடுத்து ஓடச்செய்து, அது வழிந்தோடும் பாதையில் டஜன்கணக்கில் ஆட்களை கொன்றுபோட்டது. ஆனால் அந்த நகரத்தின் தலைவர்கள் என்ன சொன்னார்கள்?
கரும்பு அறுவடைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது, அப்படியொன்றும் பெரிய ஆபத்து இல்லை என்பதாக வியாபாரிகள் மக்களுக்கு உறுதியளித்தனர். அரசியல்வாதிகளும் மே 10-ம் தேதி நடக்கவிருந்த தேர்தலில் மிகவும் அக்கறை காட்டியதன் காரணமாக, மக்கள் விட்டு ஓடிப்போவதை விரும்பவில்லை. ஆகவே மக்களுக்கு இருந்த பயத்தைப் போக்க அவர்களும் முயற்சித்தனர். அதுமட்டுமல்லாமல், வியாபார மற்றும் அரசியல் வர்க்கத்தினரோடு குருமார்கள் ஒத்துழைத்தனர்; ஆகவே தங்களுடைய சர்ச் அங்கத்தினர்களை ஓடிப்போக வேண்டாம் என்று வற்புறுத்தினார்கள்.
அப்பொழுதுதான் இது சம்பவித்தது. மே 8-ம் தேதி, காலை 8:00 மணிக்கு சற்றுமுன், மவுண்ட் பெலே ஒரு பெரும் கர்ஜிப்புச் சத்தத்தோடு வெடித்தது. பிரமாண்டமான, மிகுந்த சூடான மேகக்கூட்டங்கள் நம்பமுடியாதளவு வேகத்தில் செயின்ட் பியர் நகரத்தை நோக்கி ஓடிவந்தன. அந்தச் சூடான காற்று விரைவில் ஆயிரக்கணக்கான உயிர்களை மாய்த்தது. செயின்ட் பியர் நகரவாசிகள் ஏறக்குறைய அனைவரும்—சுமார் 30,000 அல்லது அதற்கு மேற்பட்டோர்—மாண்டனர். அதில் தப்பித்த ஒரே ஆள் ஜெயிலுக்கு அடியில் நிலவறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு வாலிப சிறைக் கைதியே.
இன்றைய நிலைமை
அதைப்போலவே இன்றும், பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கும் கட்டத்தில் இருப்பதற்கான சான்றுகளை துச்சமாகப் பேசுபவர்கள் அநேகர் இருக்கின்றனர். இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு சமீபத்தில் இருக்கிறது என்பதை, நியாயமாக சிந்தித்துப் பார்க்கும் எந்த ஆளையும் நம்பவைக்கக்கூடியதாக இருக்கும் சான்றுகளுக்குச் செவிசாய்க்க அவர்கள் மறுக்கின்றனர். எனினும், அவர்களுடைய மனநிலையையும்கூட பைபிள் பின்வருமாறு முன்னுரைத்தது: “கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.”—2 பேதுரு 3:3, 4.
ஆனால் இன்று பரியாசக்காரர்கள் தப்பாக புரிந்துகொண்டிருக்கின்றனர். உண்மை என்னவென்றால் நிலைமை மாறிவிட்டிருக்கிறது. பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக்கொண்டு இருக்கின்றன. முடிவு சமீபமாயிருக்கிறது என்பதற்கு சான்றுகளோ ஏராளம்.
புத்திசாலித்தனமாக, உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுக்க நீங்கள் தாமதிக்கக்கூடாது. ஆனால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?