உலகம் முடிவடையுமென அநேகர் நம்புவதேன்
அநேகர் இன்று உடனடியாக ஒப்புக்கொள்ளுகிறது போலவே உலகம் உண்மையிலேயே நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறது. “எதிர்காலத்துக்கான நம்முடைய வாய்ப்பைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று உலகின் பல பாகங்களிலிருந்தும் வருகிற ஜனங்களைக் கேட்டிருக்கிறேன்,” என்று எழுதினார் நற்செய்தி பிரசங்கிப்பாளரான பில்லி கிரஹாம். “அவர்களில் அநேகருடைய கருத்து நம்பிக்கையற்றதாகவே இருக்கிறது. . . . ‘ஆர்மகெடன்’ மற்றும் ‘அப்பாக்கலிப்ஸ்’ என்ற ஆங்கில வார்த்தைகள் உலகக் காட்சியில் நடைபெறும் சம்பவங்களை விவரிக்க அடிக்கடி உபயோகிக்கப்படுகின்றன.”
இன்றைய நிலைமையை விவரிப்பதற்கு ஏன் “ஆர்மகெடன்” மற்றும் “அப்பாக்கலிப்ஸ்” என்ற வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன? அவற்றின் முக்கியத்துவம் என்ன?
பைபிள்பூர்வமான தொடக்கம்
பைபிள் ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்தை’ குறித்துப்பேசி, இந்த யுத்தத்தை “எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட” அல்லது ஆர்மகெடன் என்ற இடத்தோடு தொடர்புபடுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 16:14-16) வெப்ஸ்டர்ஸ் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி ஆர்மகெடனை, “நல்ல சக்திகளுக்கும் கெட்ட சக்திகளுக்கும் இடையேயான இறுதி மற்றும் முடிவு போராட்டம்” என்பதாக விவரிக்கிறது.
“அப்பாக்கலிப்ஸ்” என்ற வார்த்தை “வெளிப்படுத்துதல்,” அல்லது “திரையை விலக்குதல்” என்று அர்த்தப்படுத்தும் கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறபோதிலும், இது வேறொரு அர்த்தத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல், அல்லது அப்பாக்கலிப்ஸ், கடவுள் தீயவர்களை அழிப்பதையும் அவருடைய மகன், இயேசு கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியையும் சிறப்பித்துக் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 19:11-16; 20:6) எனவே ‘அப்பாக்கலிப்ஸை’ வெப்ஸ்டர்ஸ் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி, “சீக்கிரத்தில் நடக்கவிருக்கும் அண்டப் பேரழிவு நிகழும்போது ஆட்சியில் இருக்கும் தீய சக்திகளைக் கடவுள் அழித்துவிட்டு, மேசியானிய ராஜ்யத்தின்கீழ் நீதிமான்களை உயிருக்குக் கொண்டுவருவார்” என்பதாக விவரிக்கிறது.
இன்று மக்கள் உலகத்தையும் அதிலுள்ள நிலைமையையும் பற்றி பேசும்போது, தெளிவாகவே, பைபிளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதால் செல்வாக்கு செலுத்தப்பட்டிருக்கின்றனர். உலகத்தின் முடிவைப்பற்றி பைபிள் உண்மையிலேயே என்ன சொல்கிறது?
பைபிளும் உலகத்தின் முடிவும்
உலகத்தின் முடிவை பைபிள் தெளிவாக முன்னறிவிக்கிறது. இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் முடிவு காலத்தைப்பற்றி சொன்னார்கள். (மத்தேயு 13:39, 40, 49; 24:3; 2 தீமோத்தேயு 3:1; 2 பேதுரு 3:3) என்றபோதிலும், இந்தப் பூமியே அழிக்கப்படப் போகிறது என்று அவர்கள் அர்த்தப்படுத்தவில்லை. சொல்லர்த்தமான இந்தப் பூமியைப்பற்றி பைபிள் சொல்கிறது: ‘பூமி ஒருபோதும் நிலைபேராது.’ (சங்கீதம் 104:5) “உலகத்தின் முடிவு” என்ற சொற்றொடர் “இக்காரிய ஒழுங்குமுறையின் முடிவு” என்று மட்டுமே அர்த்தப்படுகிறது.—புதிய உலக மொழிபெயர்ப்பு.
ஜலப்பிரளயத்துக்கு முன் நோவாவின் காலத்தில் இருந்த உலகத்தைப்பற்றி அப்போஸ்தலன் பேதுரு சொன்னார்: ‘அப்பொழுது இருந்த [தேவ பக்தியற்ற ஜனங்களடங்கிய] உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்தது.’ பின்னர் பேதுரு, நம்முடைய தற்கால உலகம் “தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது” என்று தொடர்ந்து சொன்னார். (2 பேதுரு 3:5-7) “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்,” என்று அப்போஸ்தலன் யோவானும்கூட எழுதினார்.—1 யோவான் 2:17.
இந்த உலகத்தின் முடிவின்போது, அதன் தேவபக்தியற்ற, காணக்கூடாத ஆட்சியாளனும் பாதாளத்துக்குள் தள்ளப்படுவான். (வெளிப்படுத்துதல் 20:1-3) இந்தப் பொல்லாத ஆட்சியாளனைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘இப்பிரபஞ்சத்தின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.’ “இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி [பிசாசாகிய சாத்தான்] புறம்பாகத் தள்ளப்படுவான்,” என்று இயேசு அவனைப்பற்றி சொன்னார்.—2 கொரிந்தியர் 4:4; யோவான் 12:31.
இந்த உலகத்தையும் அதன் பொல்லாத ஆட்சியாளனையும் நீக்கிப் போடுவது ஒரு ஆசீர்வாதமாக இருக்கும் அல்லவா? இது நடப்பதற்காகவே, கடவுளுடைய ராஜ்யம் வரவேண்டும் என்றும், அவருடைய சித்தம் பூமியில் செய்யப்படவேண்டும் என்றும் கிறிஸ்தவர்கள் நீண்டகாலமாக ஜெபித்திருக்கின்றனர். இயேசு கிறிஸ்து தமது பிதாவுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து செயல்பட்டு அனைத்துப் பொல்லாப்புகளையும் பூமியிலிருந்து நீக்கிப்போடுவதற்காக அவர்கள் ஜெபித்துவருகிறார்கள்!—சங்கீதம் 110:1, 2; நீதிமொழிகள் 2:21, 22; தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10.
எனினும், இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: பைபிளின் உண்மையான தீர்க்கதரிசனங்களைத் தவறாகப் புரிந்துகொண்டதன் அல்லது தவறாகப் பொருத்தியதன் அடிப்படையில் மக்கள் உலகத்தின் முடிவுக்கு ஒரு தேதியை முன்னறிவித்ததன் காரணமாக, இதைப் பற்றிய பொய்யான அல்லது தவறான முன்னறிவிப்புகள் விளைந்திருக்கக்கூடுமோ? நாம் கவனிக்கலாம்.
முதல் நூற்றாண்டில் தவறாகப் புரிந்துகொள்ளுதல்
முதல் நூற்றாண்டில் என்ன சம்பவித்ததென்று கவனியுங்கள். இயேசு பரலோகத்திற்கு ஏறிப் போகும் தறுவாயில், அவருடைய அப்போஸ்தலர், “ஆண்டவரே இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்,” என்று ஆர்வத்துடன் கேட்டார்கள். ராஜ்யத்தின் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அவர்கள் உடனடியாக அனுபவித்து மகிழ விரும்பினர். ஆனால் இயேசுவோ, “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல,” என்று சொன்னார்.—அப்போஸ்தலர் 1:6, 7.
அவர் மரிப்பதற்கு மூன்றே நாட்களுக்கு முன், இயேசு இதைப்போலவே சொன்னார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.” அவர் தொடர்ந்து கூறினார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திரு”ங்கள். (மத்தேயு 24:42, 44; மாற்கு 13:32, 33) ஒருசில மாதங்களுக்கு முன்புதான் இயேசு: “நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்,” என்று சொல்லி உற்சாகப்படுத்தியுமிருந்தார்.—லூக்கா 12:40.
இயேசு இவ்வளவு எச்சரிக்கைகளைக் கொடுத்திருந்தபோதிலும், கிறிஸ்துவின் வந்திருத்தலுக்காகவும், அது கொண்டுவரும் ஆசீர்வாதங்களுக்காகவும் ஆர்வத்தோடு காத்திருந்த பூர்வீக கிறிஸ்தவர்கள், ராஜ்ய வாக்குறுதிகள் எப்பொழுது நிறைவேறவிருக்கின்றன என்பதைக்குறித்து ஊகிக்கத் தொடங்கினர். ஆகவேதான் அப்போஸ்தலன் பவுல் தெசலோனிக்கேயர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய [“யெகோவாவுடைய,” NW] நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.”—2 தெசலோனிக்கேயர் 2:1, 2.
பூர்வீக கிறிஸ்தவர்களில் சிலர் தவறான எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டிருந்தனர் என்பதை பவுலின் வார்த்தைகள் குறித்துக் காட்டுகின்றன. தெசலோனிக்கேயாவில் இருந்த கிறிஸ்தவர்கள் தாங்கள் ‘கிறிஸ்துவோடு பரலோகத்தில் சேர்க்கப்படுவதற்கு,’ ஒரு குறிப்பிட்ட தேதியை முன்னறிவிக்காமல் இருந்திருக்கலாம். எனினும் அவர்கள், தெளிவாகவே அது சீக்கிரத்தில் சம்பவிக்கும் என்று நினைத்தனர். அவர்கள் தங்களுடைய எண்ணங்களை சரிப்படுத்திக்கொள்வது தேவையாக இருந்தது. இதைத்தான் பவுலுடைய கடிதம் செய்தது.
மற்றவர்களுக்கும் சரிப்படுத்துதல் தேவை
முதல் கட்டுரையில் நாம் கண்டதுபோல, முதல் நூற்றாண்டிற்குப் பிறகு, கடவுளுடைய வாக்குறுதி ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிறைவேறும் என்று மற்றவர்களும் எதிர்பார்த்தனர். இயேசுவின் பிறப்பிலிருந்தோ அல்லது அவருடைய இறப்பிலிருந்தோ கணக்கிடப்படும் ஓராயிர வருஷங்களின் முடிவில் உலகம் முடிவடையும் என்று சிலர் முன்னறிவித்தனர். ஆனால் அவர்களுடைய முன்னறிவிப்புகளும் அதேபோல பொய்த்துப் போயின அல்லது தவறிப் போயின.
இது பின்வரும் கேள்விகளை எழுப்புகிறது: பைபிள் வாக்குறுதிகளின் நிறைவேற்றம் சம்பந்தமாக ஏற்பட்ட தவறுகள் அந்த வாக்குறுதிகள்தாமே தவறானவை என்று அர்த்தப்படுத்தியிருகின்றனவா? கடவுளுடைய வாக்குறுதிகள் நம்பத்தகுந்தவையா? இந்த விஷயத்தில் நவீன கிறிஸ்தவர்கள் எவ்வாறு சரிப்படுத்துதலை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்?