உங்கள் உடம்புக்கு ஏன் தூக்கம் தேவை
“நல்ல தூக்கத்திற்கு ஈடாக நான் எதைக் கொடுப்பேன்!” இத்தகைய புலம்பல் இன்று பொதுவானதாக ஆகிவிட்டது. அநேகர் இடைவிடாது அளவுக்கு மீறி உழைப்பதால், நவீன வாழ்க்கையின் அனுதின அழுத்தமும் இறுக்கமும் மக்களுக்குக் கேடு விளைவிக்கிறது.
மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்புப் படையினர், ட்ரக் ட்ரைவர்கள், ஷிஃப்ட் டூட்டி பணியாளர்கள், இளம் பிள்ளைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் ஆகியோரும், மற்றுமநேகரும், தங்களுடைய உடம்புக்குத் தேவையான தூக்கத்தை இழக்கும் பிரச்சினைக்கு பலியாகும் ஆட்களில் உட்படுகின்றனர். தூக்கத்தை இழப்பதோடு சம்பந்தப்பட்ட ஏமாற்றங்களை அனுபவிக்கிற லட்சக்கணக்கான மக்கள், புத்துணர்ச்சியூட்டும் ஆழ்ந்த நித்திரையை அடைவது எப்படி என்பதை அறிந்துகொள்ள மிகுந்த ஆவலோடிருக்கின்றனர்.
தூக்கத்தின் பங்கு
தூங்குவது அல்லது குறைந்தபட்சம் குறிப்பிட்ட நேரம் ஓய்ந்திருப்பது, உயிருள்ள எல்லா படைப்புகளுக்கும் பொதுவான காரியமாக தோன்றுகிறது. பூனைகள், நாய்கள், அல்லது பறவைகள் போன்ற செல்லப் பிராணிகளை வைத்திருந்தீர்களானால், பூனைகளும் நாய்களும் தவறாமல் சுருண்டு படுத்து தூங்குவதையும், பறவைகள் அமைதியாக இருந்து இருட்ட ஆரம்பிக்கும்போது தூங்குவதையும் கவனித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அநேகமாக அனைத்து விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தூக்கம் தேவைப்படுகிறது, அல்லது குறைந்தபட்சம் குறைவாய் செயல்படும் சமயங்களாவது தேவையாயிருக்கின்றன. மனிதர்களுக்கு தூக்கம் மிக மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.
தூக்கம் என்பது ஏதோ ஓய்ந்திருக்கும் நேரம் மட்டுமே என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது அதற்கு மேலான ஒன்றாக இருக்கிறது. “தூக்கம் என்பது மெய்யாகவே, தசைகள் இறுகி தளர்வது, நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் கூடிக்குறைவது, மனது தனது சொந்தக் காட்சிகளை உருவாக்குவது ஆகிய செயல்கள் அடங்கிய ஒரு சிக்கலான செயல்முறையாக இருக்கிறது” என்பதாக தி டோரன்டோ ஸ்டார் சொல்கிறது. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்வதாவது: “ஒரு நபர் தூங்கும்போது, செயல்களெல்லாம் குறைந்து தசைகள் தளர்வடைகின்றன. இதயத் துடிப்பும் சுவாசிக்கும் வேகமும் குறைவடைகின்றன.”
விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் பல்லாண்டுகளாக தூக்கத்தைப்பற்றி ஆராய்ந்துவந்திருக்கின்றனர். இருந்தபோதிலும், அதன் முக்கியமான பங்கைப் பற்றிய தகவல்கள் இன்னும் புரியாப் புதிராகவே இருக்கின்றன. தூக்கம் என்பது உண்மையில் என்ன அல்லது நாம் ஏன் தூங்குகிறோம் என்பதைக்கூட இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடிக்காமல் இருக்கின்றனர். “நமக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் தூக்கத்தின்போது நடைபெறும் இன்றியமையாத உயிரியல் சம்பவங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது,” என்று டோரன்டோவில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையின் தூக்க ஆராய்ச்சி சோதனைக்கூடத்தைச் சேர்ந்த, டாக்டர் எலியட் ஃபிலிப்ஸன் கூறுகிறார்.
தூங்கும் சமயத்தில், நம்முடைய நோய்த்தடைகாப்பு அமைப்பைப் பாதிக்கக்கூடிய மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றன. உடலின் பாகங்கள் தளர்வடைந்து ஓய்வு பெற்று, பகல் நேரத்தில் ஏற்பட்ட தேய்மானங்களுக்கு ஈடுகட்டுகின்றன. ரத்த ஓட்டத்தின்மூலம் செய்யப்படும் முழு துப்புரவு வேலை திறம்பட்டவிதத்தில் செய்யப்படுகிறது. ரசாயன சமநிலை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரப்படுகிறது. எனவே அடுத்த நாளைக்குத் தேவையானவற்றை பழுது பார்த்து மற்றும் துப்புரவு வேலைகளைச் செய்கிற இரவு பணியாளர்களின் குழுவுக்கு தூக்கத்தை ஒப்பிடலாம்.
பகல் நேரத்தில் உபயோகப்படுத்தப்பட்டதன் விளைவாக நரம்பு மண்டலத்திற்கு ஏற்பட்ட களைப்பை அகற்றுவது தூக்கத்தின் மிக முக்கியமான வேலைகளில் ஒன்றாக இருக்கிறது. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறபடி, “தூக்கம் உடலுக்கு, குறிப்பாக மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் சக்தியைப் புதுப்பித்துத் தருகிறது.”
எவ்வளவு நேர தூக்கம்?
வயதுவந்தோர் பெரும்பாலானோருக்கு ஒவ்வொரு இரவும் ஏழு அல்லது எட்டு மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது. சிலருக்கு குறைவாகவும், மற்றவர்களுக்கு அதிகமாகவும் தேவைப்படுகிறது. நான்கு அல்லது ஐந்து மணிநேர தூக்கம் இருந்தாலே போதும் என்று சொல்லுகிற சிலரும் இருக்கின்றனர்; ஆனாலும் அவர்களில் சிலர் பகல் நேரத்தில் சற்று தூங்கிக்கொள்வார்கள். குழந்தைகளுக்குப் பெரியவர்களைவிட மிக அதிக தூக்கம் தேவைப்படுகிறது.
குறிப்பாக ஆட்களுக்கு வயதாகும்போது, அவர்கள் இரவில் அநேக தடவைகள் விழித்துக்கொள்வதை உணரலாம். இது மோசமான தூக்கப் பிரச்சினைகள் தொடங்குவதற்கான ஒரு அறிகுறி என்பதாக சிலர் நினைக்கலாம். வயதானவர்கள் தாங்கள் வாலிபர்களாக இருந்தபோது தூங்கியதுபோல நன்கு அயர்ந்து தூங்கமுடியாமல் போகலாம். இருந்தாலும், இரவில் சில தடவைகள் விழித்துக்கொள்வது கவலைப்படக்கூடிய அளவுக்குப் பிரச்சினை இல்லை என்பதாக பரிசோதனைகள் காண்பித்திருக்கின்றன. வழக்கமாக, இவ்வாறு விழித்துக்கொள்ளும் பெரும்பாலானோர் சிறிது நேரம் மட்டுமே, ஒருவேளை ஒருசில நிமிடங்களுக்கு மட்டுமே, விழித்திருந்துவிட்டு மீண்டும் தூங்கிவிடுகின்றனர்.
ஒருவருடைய வயது எவ்வளவாக இருந்தாலும், இரவு முழுவதும் ஒரேமாதிரி அயர்ந்து தூங்க முடியும் என்று எதிர்பார்க்கக்கூடாது. தூக்கமானது அயர்ந்த தூக்கம், லேசான தூக்கம் என்று மாறிமாறி சுழற்சிமுறையில் ஏற்படுகிறது. ஒரு நபர் இரவில் தூங்கும்போது இதுபோல பல சுழற்சிகள் ஏற்படலாம்.
தூக்கமின்மையால் ஆபத்துக்கள்
“மிகமிகக் குறைவான தூக்கத்தையே பெறும் ஆட்களின் எண்ணிக்கையைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் அதிகமதிகம் அக்கறை காண்பிக்கின்றனர். அடிக்கடி ஏற்படும் நீண்ட நேர தூக்கமின்மை நம் மீதும் நம்மைச் சுற்றியிருப்போர் மீதும் கெடுதலான விளைவுகளைக் கொண்டுவரலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்,” என்பதாக அறிக்கை செய்கிறது தி டோரன்டோ ஸ்டார்.
தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறதாவது: “தூக்கம் கிடைக்காமல் போகிறவர்கள் சக்தியிழந்து, முன்கோபிகளாக மாறிவிடுகின்றனர். இரண்டு நாட்களுக்கு தூக்கமில்லாமல் போனால், நீண்ட நேரம் கவனம்செலுத்துவது கஷ்டமாக இருப்பதாக ஒரு நபர் காண்கிறார். . . . வேலைகளில், முக்கியமாக வழக்கமுறையில் செய்யக்கூடிய வேலைகளில், அதிக தவறுகள் ஏற்படுகின்றன; சில சமயங்களில் கவனத்தை ஊன்றவைக்க முடியாமல் போகிறது. . . . மூன்று நாட்களுக்குமேல் தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கு, தெளிவாக சிந்திப்பது, பார்ப்பது, கேட்பது ஆகியவற்றில் பிரச்சினை ஏற்படுகிறது. சிலருக்கு குறிப்பிட்ட இடைவெளியில், உண்மையிலேயே இல்லாதவற்றை காட்சியில் காணும், பிரமைகள் தோன்றும்.”
நான்கு நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் இருந்த பிறகு, பரிசோதனைக்கு உள்ளானவர்களால் வழக்கமாக செய்யும் ஒருசில வேலைகளை மட்டுமே செய்ய முடிந்ததாக பரிசோதனைகள் கண்டுபிடித்திருக்கின்றன. கவனம் செலுத்தி செய்யப்படக்கூடிய வேலைகளோ அல்லது மூளையை சிறிதளவு சுறுசுறுப்பாக வைத்திருப்பதோகூட தாங்கமுடியாததாக இருந்தது. கவனமிழப்பும் மூளையை சுறுசுறுப்பாக வைக்கமுடியாததும் மோசமான அம்சங்களாக இருந்ததில்லை. நாலரை நாட்களுக்குத் தூக்கம் இல்லாமல் இருந்த பின்பு, வெறிப்பிதற்ற நிலைக்கான அறிகுறிகள் தோன்றின, அந்த ஆளைச் சுற்றியுள்ள காட்சிகள் அனைத்தும் மிகவும் விகாரமாகத் தோன்றின.
தூக்கமின்மை பெரிய பிரச்சினைகளுக்கு வழிநடத்தலாம். கார் ஓட்டும்போது தூங்கியதால் சாவுக்கேதுவான விபத்திற்கு ஆளானவர்கள் அநேகர். தொடர்ந்து தூக்கமில்லாமல் இருப்பது ஒருவரை எரிச்சலடையச் செய்து அவரோடு ஒத்துப்போவதை மிகக் கடினமானதாக ஆக்குகிறது. ஆகவே தூக்கமின்மை குடும்ப மற்றும் திருமண பிரச்சினைகளுக்கும் வழிநடத்தக்கூடும். இரவில் நன்றாக தூங்குவது சிலர் நினைப்பதைவிட மிக முக்கியமானதாக இருக்கிறது.
இரவில் நன்றாக தூங்குதல்
டோரன்டோ மாநகரத்தின் தூக்கக் கோளாறு ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த, தூக்க நிபுணர் டாக்டர் ஜெஃப்ரி ஜே. லிப்ட்ஸ், இரவில் நன்றாக தூங்குவதற்கு கீழ்க்கண்ட ஆலோசனைகளைத் தருகிறார். பாதுகாப்பான, அமைதியான, இருட்டான சுற்றுச்சூழலில், வசதியான படுக்கையில் படுத்து தூங்குங்கள். முந்தின இரவு நன்றாக தூங்காமல் போயிருந்தாலும், பகல் வேளையின் பிற்பகுதியில் அதிக நேரம் தூங்காதீர்கள்; விழித்திருந்து உங்களுடைய வழக்கமான நேரத்தில் படுக்கைக்குச் செல்ல முயற்சியுங்கள். படுக்கைக்குப் போகுமுன் கேஃபின் உட்கொள்ளுவதைத் தவிருங்கள். வாசிப்பதற்கோ டிவி பார்ப்பதற்கோ படுக்கையை உபயோகிக்காதீர்கள். படுக்கைக்குப் போவதற்கு சற்றுமுன் கடினமான உடற்பயிற்சி செய்வதையும் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்த்திடுங்கள். தூங்குவதற்கு ஒழுங்கான நேரம் வைத்திருங்கள்; இதனால் உடல் கிரமமாக உறங்கி-எழும் இயல்பைப் பெறுகிறது.
படுக்கைக்குப் போகுமுன் படிப்படியாக உடலையும் மனதையும் தளர்த்துவதை ஒழுங்கான பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கிளர்ச்சியூட்டி உங்களை அதிக விழிப்புறச் செய்யும் காரியங்களைச் செய்வதைத் தவிருங்கள். உதாரணமாக, கிளர்ச்சியூட்டும் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், அல்லது பிரசுரங்கள் ஆகியவற்றைத் தவிர்த்திடுங்கள். தூங்குவதற்கு சற்றுமுன் சிந்தனையைத் தூண்டும் வகையில் கலந்துரையாடுதலும்கூட உங்களை விழித்திருக்க வைக்கலாம்.
வெதுவெதுப்பான நீரில் (சூடான நீரில் அல்ல) குளிப்பது அல்லது பொழுதுபோக்காக அமையக்கூடிய பிரசுரங்களை வாசிப்பது சிலருக்கு உதவிபுரிகிறது. ஆகையால் வெதுவெதுப்பான பால், மோர், சிறிது ஒயின், அல்லது ஹாப்ஸ், புதினா, கேமமைல் ஆகியவற்றால் செய்யப்பட்ட மூலிகைக் கஷாயம்—ஆனால் கேஃபின் இல்லாத கஷாயங்கள்—போன்ற தூக்கத்தைத் தூண்டிவிடும் பொருட்களை உட்கொள்ளுவதும் உதவி செய்யலாம்.
எனினும், படுக்கைக்குப் போகுமுன் உடலையும் மனதையும் படிப்படியாக தளர்த்துவது போதாது என பொதுவாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஒழுங்கான உடற்பயிற்சியோடுகூடிய முழுமையான, சமநிலையுள்ள ஒரு வாழ்க்கை இரவில் நன்றாக தூங்கமுடிவதற்கு உதவி செய்யும். அதுபோலவே, பேராசை, பொறாமை, பகைமை, பேராவல் போன்றவற்றால் விளையும் கவலைகளும், ஏமாற்றங்களும் இல்லாத வாழ்க்கையும்கூட இரவில் நன்கு தூங்க உதவுகிறது. அளவுக்கு மீறி உண்பதனாலும் குடிப்பதனாலும் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதனாலும் உண்டாகும் வேதனை இல்லாத ஒரு வாழ்வும்கூட நல்ல தூக்கத்திற்கு உதவிபுரிகிறது.
நம்முடைய ஆவிக்குரிய தேவையைப் பூர்த்தி செய்வதானது நிம்மதியான அயர்ந்த தூக்கம் கிடைப்பதற்கு ஒரு முக்கிய பாகத்தை வகிக்கக்கூடும். சிக்கல் நிறைந்த இந்த உலகத்தைப்பற்றி புரிந்துகொண்டு, சமநிலையுள்ள, திருப்தியளிக்கும் ஒரு வாழ்க்கையை நாடுவதற்கு இது உதவி செய்யும். நாம் உட்பார்வையை வளர்த்துக் கொள்ளும்படியும், யெகோவாவுடைய ஞானத்தில் தொடர்ந்து நடக்கும்படியும் ஞானமுள்ள, யெகோவாவின் ஊழியக்காரர் ஒருவர் உற்சாகப்படுத்துகிறார். ஏனென்றால் இதுவே “இன்பமும் மகிழ்ச்சியுமான ஒரு வாழ்க்கை”க்கு வழிநடத்தும். அவர் மேலும் கூறுகிறார்: “நீ படுக்கைக்குச் செல்லும்போது பயப்படமாட்டாய்; நீ இரவு முழுவதும் நிம்மதியோடே உறங்குவாய்.”—நீதிமொழிகள் 3:21-24, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.
[பக்கம் 18-ன் சிறு குறிப்பு]
வயதுவந்தோர் பெரும்பாலானோருக்கு ஒவ்வொரு இரவும் ஏழு அல்லது எட்டு மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது
[பக்கம் 18-ன் படம்]
தூக்கம் வருவதற்கு அநேகர் மிகவும் கஷ்டப்படுகின்றனர்
[பக்கம் 18-ன் படம்]
நாள்பட்ட, தீராத தூக்கமின்மை கேடு விளைவிக்கலாம்