மீன்வளர்ப்பு—‘பண்ணை பிராணிகளாக’ மீன்கள்
நார்வேயிலுள்ள விழித்தெழு! நிருபர்
ஆயிரக்கணக்கான வருடங்களுக்குமுன், சீனர்களும் எகிப்தியர்களும் மீன் வளர்ப்பதற்கு, ஒருவேளை மீன்களுக்கு உணவளிக்கவும்கூட நன்னீர் குளங்களை அமைத்தனர். இன்றைய காலத்தில் மீன்களை வளர்ப்பது ஒரு தொழில்துறையாகவே மாறியிருக்கிறது. இது மீன்வளர்ப்பு என்றழைக்கப்படுகிறது. இதை வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி “நீரின் இயற்கை உயிரினங்களை வளர்த்தல்” என்பதாக விவரிக்கிறது. இது வளர்ச்சிக்குத் தகுந்த சூழ்நிலைமைகளை உருவாக்குதலையும், நீரில் வாழும் விலங்குகளை மற்றும் தாவரங்களை நன்னீரிலோ அல்லது உவர்நீரிலோ இனப்பெருக்கம் செய்தலையும் வளர்த்தலையும் உட்படுத்துகிறது.
இந்நாள்வரை, தீவிர மீன்வளர்ப்பும், மீன் இனப்பெருக்கமும் மிகவும் நன்கு அறியப்பட்ட மீன்வளர்ப்பு முறைகளாக இருக்கின்றன. அநேக நாடுகளில், முக்கியமாக நன்னீர் வெப்பநிலை ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கும் தேசங்களில், நன்னீர் மீன்களைக் குளங்களிலும் தொட்டிகளிலும் வளர்க்கும் முறை பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. மற்ற நாடுகளோ தங்களுடைய கடல்பகுதிகளை உபயோகிப்பதில் அதிக கவனம் செலுத்திவருகின்றன. இரண்டாவதாக குறிப்பிடப்பட்டதற்கு நார்வே ஒரு உதாரணமாக இருக்கிறது. உலகத்திலே மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றையும், தகுந்த தட்பவெப்ப நிலையையும், மற்ற தேசங்களோடு ஒப்பிடுகையில் சுத்தமான தண்ணீரையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்நாடு கடல்நீர் மீன்வளர்ப்புக்கு ஏற்றதொரு இயற்கை அனுகூலத்தைப் பெற்றதாய் இருக்கிறது. சிறப்பாக அட்லான்டிக் சால்மன் மற்றும் ட்ரௌட் மீன்களைக் கடலில் வளர்ப்பதில் நார்வே முன்னோடியாக இருந்துவருகிறது.
முட்டையிலிருந்து விற்பனைக்கான மீனாக
இலையுதிர் காலத்தின்போது பொரிப்பகத்தில் உற்பத்தி தொடங்குகிறது. முட்டையை வெளியே எடுக்க பெண் மீன்கள் “நீவிவிடப்படுகின்றன.” இந்த முட்டை தெரிந்தெடுத்த ஆண் மீன்களிலிருந்து பெறப்பட்ட விந்துவோடு சேர்ந்து கருவுறச் செய்யப்படுகிறது. கருவுற்ற முட்டை கவனமான மேற்பார்வையின்கீழ் பொரிப்பகத்தில் குளிர்காலத்தைக் கழிக்கிறது. குஞ்சு பொரிக்க ஆறு மாதங்களாகின்றன. முதல் சில வாரங்களுக்கு இக்குஞ்சு தனது வயிற்றில் இணைந்திருக்கும் மஞ்சட்கருப்பையில் இருந்து உணவைப் பெறுகிறது. அதன் பிறகு முதன்முதல் கவனமாக உணவளிக்கும் படலம் தொடங்குகிறது. இயற்கைச் சூழலில், சால்மன் மீன்குஞ்சு ஒன்று, உணவுக்காக சத்துள்ள உணவு அதிகமாக கிடைக்கும் கடலுக்கு இடம்மாறி போகுமுன், தான் பொரிந்து வெளிவந்த ஆற்றில் இரண்டு முதல் ஐந்து வருடங்களைக் கழிக்கிறது. பொரிப்பகத்தில் அந்தக் குஞ்சு ஒன்றரை வருடகாலத்தில் ஸ்மோல்ட் (இடம்பெயர தயார்நிலையில் இருக்கும் ஒரு இளம் சால்மன்) என்ற பருவத்தை அடைகிறது.
பின்னர் இந்த மீன்கள் நன்னீரிலிருந்து உவர்நீருக்கு மாற்றப்படுகின்றன. இவை வழக்கமாக கடலில் மிதக்கும் கூடுகள் அல்லது பட்டிகள் போன்ற கட்டமைப்புகளில் விடப்படுகின்றன. கடல் பண்ணையில் ஓரிரு வருடங்கள் இருந்த பிறகு சால்மன் மீன்கள் தகுந்த அளவுக்கு வளர்ந்ததும் பதப்படுத்துவதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. இவையெல்லாம் கேட்பதற்கு மிகவும் எளிதாகவும் சுலபமானதாகவும்தான் இருக்கும். ஆனாலும் மீன்களை ‘பண்ணை பிராணியாக’ வளர்ப்பது அநேக சவால்களைக் கொண்டுவருகிறது.a
உயிரியல் புதிர்களும் மாறுபாடுகளும்
தொடக்கத்தில் மீன் வளர்ப்போர் முன் அனுபவம் ஏதுமின்றி புத்தம்புதிதாக தொடங்கினர். ஆகவே அவற்றின் இனப்பெருக்கம், உணவு விருப்பங்கள், வித்தியாசப்பட்ட சிற்றினங்களின் இயல்பூக்கங்கள் போன்றவற்றைப் பற்றிய தெளிவான அறிவைப் பெறவேண்டியிருந்தனர். தீர்க்கப்படாத எண்ணற்ற உயிரியல் புதிர்களும், தவறிப்போகக்கூடிய அம்சங்களும் இருந்ததாகத் தோன்றின. தண்ணீரின் தன்மை, வெப்பநிலை, உணவு, ஒளி ஆகியவை சம்பந்தமான மீன் குஞ்சு மற்றும் மீன்களின் தொடர்ந்து மாறுபட்டுக்கொண்டிருக்கும் தேவைகளைப் பூர்த்திசெய்வது எப்பொழுதாவது சாத்தியமாகுமா?
இப்பிரச்சினைகளில் அநேகம் வெகு நாட்களுக்கு முன்பே தீர்க்கப்பட்டிருக்கின்றன. இன்றைய ஆராய்ச்சித் திட்டங்களில் அநேகம், நிர்வாகம், ஒளியைத் திறம்பட பயன்படுத்துதல், தகுந்த அளவு தரமான உணவு போன்ற அம்சங்களால், வெவ்வேறு இனங்களின் வளர்ச்சியும் நடத்தையும் எவ்வாறு கட்டுப்படுத்தப்படலாம் என்பதன்பேரில் கவனம் செலுத்துகின்றன.
தூய்மைக்கேடும் பாசிகளின் ஆக்கிரமிப்பும்
மீன்வளர்ப்புக்குச் சுத்தமான ஒரு சுற்றுச்சூழல் முக்கியமானதாக இருக்கிறது. சமநிலையற்ற சூழல்களும், தூய்மைக்கேட்டின் அளவுகளும் மீன்வளர்ப்புத் துறையில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. தண்ணீரிலுள்ள நச்சூட்டும் பொருட்களைக் கண்டுபிடிக்கும் வல்லமையுள்ள, இயற்கைச் சூழலில் வாழும் மீன்கள் ஆபத்தைத் தவிர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் கடல் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களோ கூடுகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால் அதைத் தவிர்க்கமுடியாது. இதன் காரணமாக, எண்ணெய்க் கசிவுகள் அல்லது நச்சுள்ள ரசாயனப் பொருட்கள் சிந்தப்படுதல், மீன்பண்ணைகளுக்கு அழிவை ஏற்படுத்தும் சாத்தியம் இருக்கிறது.
1988-ல் ஸ்வீடனின் தென்மேற்கு கடற்கரையோரமெங்கும், நார்வேயின் தென்பகுதியிலுள்ள கடலிலும் நச்சுத் தன்மையுள்ள பாசிகள் அளவுக்குமீறி உற்பத்தியானதால் சிலருக்கு ஒரு பேரதிர்ச்சி ஏற்பட்டது. கடலின் பெரும்பகுதியிலுள்ள பாசிகளால் மீன்களும் மற்ற உயிரினங்களும் கொல்லப்பட்டன. அநேக மீன் பண்ணைகள் இழுத்து மூடப்பட்டன; பாசிகள்தானே பாதி காரணமாகவும் அவசரநிலையின் காரணமாக வெட்டப்பட்டது பாதி காரணமாகவும் இருந்தது. ஆனால் கூடுகளில் பெரும்பாலானவை இந்தப் பாசி மரணத்திலிருந்து பாதுகாக்கப்பட்டன; ஏனென்றால் மீன் வளர்ப்போர் இந்தக் கூடுகளைப் பாதுகாப்பான கடற்கால்களுக்குள் (fjords) இழுத்துச் சென்றனர். இந்தப் பாசிப் பேரழிவை சிலர் “கடல் செர்னோபிள்” என்றழைத்தனர், அதிகரித்த தூய்மைக்கேடுதான் ஒருவேளை அளவுக்குமீறிய பாசி உற்பத்திக்குக் காரணமான அம்சமாக இருந்திருக்கலாம் என்பதாக வல்லுநர்கள் உறுதியாகக் கூறினார்கள்.
கடலில் உள்ள மீன் கூடுகள் அனைத்து வகை வானிலைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றன. ஆகவே இவை பனிக்கட்டி, கொந்தளிக்கும் கடல், புயல்காற்றுகள் போன்றவற்றைத் தாங்கியிருக்கவேண்டும். கூடு ஒன்று சேதமடைந்து அதிலுள்ள மீன்கள் தப்பித்துவிட்டால், அந்த மீன்களை வளர்த்தவர் விலைமதிப்புள்ள சொத்தை இழக்கிறார், அதுமட்டுமல்லாமல், தப்பித்துப்போன மீன்கள் இயற்கைச் சூழலில் உள்ள மீன்களுக்கும் நோயைப் பரப்பிவிடலாம். இது சிக்கலான ஒரு பிரச்சினையாக இருந்துவந்திருக்கிறது. தப்பிப்போன மீன்கள் இயற்கைச் சூழலில் உள்ள மீன்களோடு உணவுக்கும் இனப்பெருக்கம் செய்வதற்கான இடத்திற்கும் போட்டியிடுகின்றன. இதுதானே உள்ளூரிலுள்ள மீனினத்தின்மீது எதிர்மறையான ஒரு பாதிப்பையும் ஏற்படுத்திவிடுமோ என்ற பயமும் இருக்கிறது.
ஆகவே மீன்கள் தப்பிப் போவதைத் தவிர்க்கவேண்டும் என்றால் கூடுகள் நன்கு பாதுகாப்பாக கட்டிவைக்கப்பட வேண்டும் என்று அனைவரும் ஏகமனதாக ஒப்புக் கொள்கின்றனர். இத்துறையிலும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமீப வருடங்களில் “படுமோசமான வானிலையையும்கூட தாங்கக்கூடிய மீன்வளர்ப்புக் கூடுகளை உற்பத்தி செய்வதில் பெரும் சாதனை [புரியப்பட்டிருக்கிறது]” என்பதாக நார்வேயில் மீன்வளர்ப்பு சொல்லுகிறது.
நோய்க் கட்டுப்பாடு
மீன்களின் இயல்புக்கு முரண்படுகிற அனைத்தும், அல்லது அவற்றின் இயற்கைச் சூழலிலிருந்து வித்தியாசப்படும் அனைத்தும் அவற்றிற்கு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே இது அவற்றின் நோய்த்தடைகாப்பு அமைப்புக்கு ஊறு விளைவிக்கிறது. அதிக மீன்களை மிக நெருக்கமாக இருப்பு செய்தல், தீவிர உணவளிப்பு, கரிமப் பொருட்கள் சேர்தல், மீன்களைப் பாதிக்கும் வெவ்வேறு நோய்க்கிருமிகள் அதிகளவில் இருத்தல் போன்ற காரணிகள் சேர்வதானது, இயற்கைச் சூழலில் வாழும் மீன்களுக்கு ஏற்படுத்துவதைவிட பண்ணையில் வளர்க்கப்படுகிற மீன்களில் மிக மோசமான நோய்ப் பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது. இது மீன்துறைக்குப் பேரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
உண்மையிலேயே, இது போன்ற மீன் நோய்களில் அநேகத்தை குணப்படுத்தலாம், உதாரணமாக, நோயுயிர்முறிகளை உபயோகித்துச் சுகமாக்கலாம். ஆனால் நோயுயிர்முறிகளை நெடுநாட்களுக்கு உபயோகித்துவருவதானது சுற்றுச்சூழலுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். இதன் முக்கிய காரணம் என்னவென்றால், இது எதிர்ப்பு சக்தியுள்ள பேக்டீரியாக்களையே உருவாக்குகிறது. இது புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதை அவசியமாக்குகிறது. மீன்கள் மற்ற நோய்களுக்கு எளிதில் ஆளாகக்கூடிய அளவுக்கு மருந்துகள் மீன்களைப் பலவீனப்படுத்தவும் செய்கின்றன. சந்தேகமேயின்றி, மீன் வளர்ப்பவர்கள் இந்த நச்சுச் சுழற்சியிலிருந்து தப்பித்துக்கொள்ள விரும்பினர்.b
ஆகவே, வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும் என்ற பழமொழி மீன்வளர்ப்புக்கும் பொருந்துகிறது. மீன்களின் இயற்கை நோயெதிர்ப்பு அமைப்பைப் பலப்படுத்துவது எப்படி என்பதன்பேரில் அதிக அறிவைப் பெறுவதற்கு பெரு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆராய்ச்சியானது, சரியான உணவளித்தல், வளரும் சுற்றுச்சூழல் மற்றும் நடைமுறையான வழக்கமுறைகள், குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி அதிகமுள்ள மீன்களை இனப்பெருக்கம் செய்தல், பலன்தரக்கூடிய தடுப்பூசி மருந்துகளையும் தடுப்பூசி போடும் முறைகளையும் கண்டுபிடித்தல் போன்ற அம்சங்களின்பேரில் கவனம் செலுத்துகிறது. இந்த ஆராய்ச்சி பலனளித்திருக்கிறது. ஆகவே, நோயை எதிர்த்துப் போராடுவதில் மீன்வளர்ப்புத் தொழில் மேலோங்கி நிற்பதாகத் தெரிகிறது.
வளரும் ஒரு தொழில்துறை
மீன்வளர்ப்பு எண்ணற்ற கரையோரக் குடியிருப்புகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, மிகவும் ஏற்ற வட்டார தொழில்துறையாக இருக்கிறது. மீன்வளர்ப்புத் தொழில் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து பிரமிக்கத்தக்க வளர்ச்சியடைந்திருக்கிறது. 1990-ல், உலகம் முழுவதிலும் உற்பத்தியான மீன்களின் மொத்த மதிப்பு 2,300 கோடி டாலருக்கும் அதிகமாக இருந்தது. உலகமுழுவதும் பண்ணையில் வளர்க்கப்படுகிற அட்லான்டிக் சால்மனில் பாதியளவு நார்வேயில் இருந்து வருகிறது. இந்நாடு உலகளாவ 90-க்கும் அதிகமான நாடுகளுக்கு சால்மன் மீன்களை ஏற்றுமதி செய்கிறது.
அட்லான்டிக் சால்மன் இதுவரை கடல் பண்ணையின் முக்கிய உற்பத்திப் பொருளாக இருந்துவந்தாலும், பண்ணையில் வளர்க்கப்பட்ட காட் மற்றும் ஹாலிபுட் மீன்கள் ஏற்கெனவே ஓரளவு மட்டுப்பட்ட அளவுகளில் வாங்கக் கிடைக்கின்றன. மீன்வளர்ப்புத் தொழில்துறை புதிய, தரமான மீன்களை ஆண்டு முழுவதும் தரும் நம்பகரமான சப்ளையராக இருக்க விரும்புகிறது.
வருந்தத்தக்க வகையில், மனிதர்கள் அடிக்கடி பேராசையால் உந்துவிக்கப்படுகின்றனர். இது சில சமயங்களில் மீன்வளர்ப்புத் தொழில்துறையிலும் நடந்திருக்கிறது. சிலருடைய விஷயத்தில் சுற்றுச்சூழல் ஆய்வுகள் விரைவில் லாபம் சம்பாதிப்பதற்கான ஆசைக்கு அடிபணிந்திருக்கின்றன. அத்தகைய எண்ணம் கொண்ட மீன்வளர்ப்போர் இயற்கை எவ்வளவு விரைவில் திரும்பத் தாக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டியிருக்கிறது. சுற்றுச்சூழலைப் பராமரிப்பது தங்களுடைய சொந்த அக்கறைக்காகவே என்பதை அவர்கள் உணரவேண்டும். பூமியின் வளங்களை படைப்பாளரின் ஆதி நோக்கத்திற்கு—இயற்கைக்கும் அதன் நுணுக்கம்வாய்ந்த சூழல்களுக்கும்—இசைவாக நிர்வகிப்பது தற்காலத்திலோ பிற்காலத்திலோ எப்பொழுதுமே நிச்சயம் விவேகமுள்ளதாக இருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a நார்வே மீன் வளர்ப்போர் சங்கத்தால் பிரசுரிக்கப்பட்ட நார்வேயில் மீன்வளர்ப்பு என்ற ஆங்கில சிற்றேட்டிலுள்ள தகவல்களின் அடிப்படையில்.
b நார்வே அரசாங்கம் நுகர்வோரின் நலனைக் கருத்தில்கொண்டு, மருந்துகளை உபயோகிப்பதன் சம்பந்தமாக கெடுபிடியான விதிமுறைகளை ஏற்படுத்தினது. மீன் வளர்ப்பவர்கள் கால்நடை மருத்துவர்கள் மூலமாக மட்டுமே மருந்தைப் பெற்றுக்கொள்ள முடியும். மீன்களை விற்பனை செய்யுமுன், அவையனைத்தும் மருந்துகளின் பாதிப்புகளிலிருந்து விடுபடும்படி பார்த்துக்கொள்ள மீன்கள் தொற்றுத்தடைகாப்பு (quarantine) செய்யப்படுகின்றன.
[பக்கம் 15-ன் படங்கள்]
கடலில் மிதக்கும் கூடுகளில் மீன்கள் விடப்படுகின்றன
முட்டையை வெளியே எடுக்க பெண் மீன்கள் நீவிவிடப்படுகின்றன
மீன்கள் தகுந்த அளவுக்கு வளர்ந்ததும் அவை எடுத்துச் செல்லப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன
[படத்திற்கான நன்றி]
Photos: Vidar Vassvik/Norwegian Seafood Export Council