உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 4/8 பக். 15-18
  • உரையாடல் ஒரு கலை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உரையாடல் ஒரு கலை
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நாம் பேசுவது அவசியம்!
  • உரையாடலுக்குத் தடைகள்
  • ‘நான் என்ன சொல்வது?’
  • நன்கு செவிகொடுத்துக் கேட்பவராக இருங்கள்
  • நேர்மையான அக்கறைக்குப் பிரதிபலிப்பு உண்டு
  • ஒற்றுணர்வு—உரையாடலின் அடித்தளம்
  • அதை உங்களால் செய்ய முடியும்!
  • உரையாடும் திறமைகளை வளர்ப்பது எப்படி
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • கட்டியெழுப்பும் சம்பாஷணை
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • பிறருடன் சம்பாஷிப்பதை நான் எப்படி விருத்திசெய்து கொள்ளலாம்?
    விழித்தெழு!—1990
  • பேசுவதை நிறுத்த வேண்டுமா?
    அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 4/8 பக். 15-18

உரையாடல் ஒரு கலை

சாப்பிடுதல், தூங்குதல், வேலை செய்தல் ஆகிய இவை அடிப்படை மனித தேவைகள். ஆனாலும், மற்றொரு தேவை பூர்த்திசெய்யப்படுவதற்கு மிக அவசியமானதாய் இருக்கிறது. அது என்ன?

வாழ்க்கையின் மிகவும் அரிய தேவைகளில் ஒன்று இல்லாமல், தனியறைச் சிறையடைப்பில் ஐந்து வருடங்களைக் கழித்த ஒருவரின் வார்த்தைகளைக் கவனியுங்கள். “நான் தோழமைக்காக, பேசுவதற்கு அல்லது உரையாடுவதற்கு ஒருவர் இருக்கும்படியாக ஏங்கினேன்,” என்று அவர் ஒத்துக்கொள்கிறார். “தனிமைக்கு ஈடுகட்ட நான் வேறு எதையாவது செய்யவேண்டும் என்பதை உணர ஆரம்பித்தேன். என்னுடைய தனிமையிலும் அமைதியிலும், என் மனது பாதிக்கப்படும்,” என்றார்.

ஆம், பேச்சுத்தொடர்பு கொள்வதற்கான இயல்பான தேவையை நாம் கொண்டிருக்கிறோம். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய உரையாடல் உதவுகிறது. டென்னஸ் ஆர். ஸ்மித் மற்றும் எல். கித் உவில்லியம்சன் என்ற ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறார்கள்: “நேர்மையாக நம்பிக்கை வைக்கக்கூடிய, நம்முடைய மிகப் பெரிய சந்தோஷங்களையும் மிகவும் கலக்கமூட்டும் பயங்களையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய, பேசக்கூடிய மக்கள் நமக்குத் தேவை.”

நாம் பேசுவது அவசியம்!

பேச்சு என்னும் மகத்தான வரம் மனிதருக்கு இயல்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம், நாம் உரையாடுவதற்கு ஏற்றபடி உண்டாக்கப்பட்டிருக்கிறோம். ஒருவர் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்: “நாம் கூடிப்பழகும் இயல்புடையவர்களாய் இருக்கும்படி கடவுளால் படைக்கப்பட்டோம். பேசும் வாய்ப்பு உங்களுக்கு இல்லையென்றால், அல்லது பேச்சுத்தொடர்பு கொள்ளக்கூடிய உங்கள் திறமையை எவராவது எடுத்துப்போட்டால், அது ஒரு தண்டனையைப்போல இருக்கிறது. நீங்கள் உரையாடும்போது, ஒரு மதிப்புவாய்ந்த காரியம் நிகழ்கிறது. நீங்கள் உங்களைப்பற்றி சிறந்த உணர்வு கொள்கிறீர்கள்; மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், உணர்கிறார்கள் என்பதை அறிவதிலிருந்து பயனடைகிறீர்கள்.”

பயண ஊழியர் ஒருவரின் மனைவி இலேன் சொல்கிறார்: “வார்த்தைகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. நம்முடைய மணத்துணைவர் நமக்கு எவ்வளவு அருமையானவர் என்பதை அவர் அல்லது அவள் அறிந்திருப்பதாக நாம் ஊகித்துக்கொள்ள முடியாது. அது சொல்லப்படவேண்டும்; அந்த வார்த்தைகளை காது கேட்க வேண்டும். நாம் உரையாடுவது அவசியம்.”

கிறிஸ்தவ மூப்பர் ஒருவரின் மகனாகிய டேவிட், தன்னைப்பற்றி இவ்விதமாகக் கூறுகிறார்: “சில சமயங்களில் குழப்பமடைந்தவனாகவும், உண்மையில் நான் எப்படி உணருகிறேன் என்று அறியாதவனாகவும் இருக்கிறேன். முதலாவதாக அமைதியாகும் மனப்போக்கைக் கொண்டிருக்கிறேன்; பின்னர், உள்ளுக்குள் உணர்ச்சி அழுத்தம் அதிகரிக்கிறது. நான் யாரோடாவது பேசினால், அந்த அழுத்தத்தை வெளியேற்றுவதற்கு ஒரு வடிகாலைப்போல் அது இருப்பதாகக் காண்கிறேன். நான் பேசும்போது, உண்மையிலேயே என்னைப்பற்றி எவ்வாறு உணருகிறேன் என்பதைக் கண்டுபிடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது; அதற்கான தீர்வைக் காண முடிகிறது.”

உரையாடலுக்குத் தடைகள்

உண்மையில், உரையாடல் ஒரு தேவையைப் பூர்த்தி செய்கிறது. என்றபோதிலும், உரையாடலுக்குத் தடைகள் இருக்கின்றன. சிலருக்கு, உண்மையில், உரையாடல்—ஒரு போராட்டமாக—ஒரு தவிர்க்கப்பட வேண்டிய செயலாக ஆகிவிடுகிறது.

“என் வாழ்க்கையில் பெரும்பாலும், மற்றவர்களோடு உரையாடலைத் தவிர்ப்பது எனக்கு எளிதாக இருந்தது,” என்று காரி சொல்கிறார். அவர் விவரிக்கிறார்: “என்னுடைய நம்பிக்கையின்மையே அதற்கு அடிப்படைக் காரணம். நான் மக்களோடு உரையாடும்போது, முட்டாளாக தோன்றுவேன் அல்லது நான் சொன்னவற்றிற்காக யாராவது ஒருவர் என்னை மதிப்புக்குறைவாகப் பேசக்கூடும் என்ற பயத்தால் இன்னும் கஷ்டப்படுகிறேன்.”

கூச்சவுணர்வே தன்னுடைய பிரச்சினை என்று இலேன் கூறுகிறார். அவர் விவரிக்கிறார்: “அர்த்தமுள்ள உரையாடல்களைக் கொண்டிராத ஒரு குடும்பத்தில் நான் வளர்க்கப்பட்டேன். என்னுடைய தந்தை அளவுக்கதிகமாக மிரட்டி அடக்குபவராக இருந்தார். ஆகவே நான் வளர்ந்தபோது, சொல்வதற்குத் தகுதியான எதுவும் என்னிடம் இல்லாததுபோல உணர்ந்தேன்.” ஆம், கூச்சவுணர்வு, உரையாடலை அனுபவிப்பதற்குக் கடுமையான தடைகளை உருவாக்க முடியும். ஏன், அது உங்களை மெளனத்தின் சுவர்களுக்குள் அடக்கிவைத்துவிடலாம்!

“அது ஒரு கொள்ளைநோயைப்போல் இருக்கிறது,” என்று தன்மதிப்பு குறைவினால் போராடிக்கொண்டிருப்பதாக ஒத்துக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவ மூப்பராகிய ஜான் சொல்லுகிறார். “நீங்கள் கூச்சவுணர்வுக்கு இடங்கொடுத்துவிட்டீர்களென்றால், உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக் கொள்கிறீர்கள். ஓர் அறையில் நூறு பேர் இருந்தால்கூட, நீங்கள் உரையாட மாட்டீர்கள். அதன் விளைவாக நீங்கள் மிகவும் கஷ்டப்படுவீர்கள்!”

மறுபட்சத்தில், டானியல் என்ற பெயருடைய ஒரு மூப்பர் இவ்வாறு சொல்கிறார்: “பேசுவது என்றால், அது எனக்கு இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஆனால் நான் உணருவதற்கு முன்பு, யாராவது ஒருவரைக் குறுக்கிட்டு அந்த உரையாடலின் பெரும்பாகத்தை ஏற்றிருப்பேன். என் மனைவியின் முகத்திலுள்ள அந்தப் பார்வையை வைத்தே நான் இதை அறிந்துகொள்வேன்; ‘ஐயோ, நான் மீண்டும் அவ்வாறு செய்துவிட்டேனே,’ என்று அப்போது எனக்கு நானே நினைத்துக்கொள்வேன். மீதமுள்ள உரையாடலுக்கு அவளுடைய சந்தோஷம் பறிபோய்விட்டது என்று அறிவேன்.”

இவற்றையும் உரையாடலுக்கான மற்ற தடைகளையும் எவ்வாறு மேற்கொள்ளலாம்? இந்தக் கலைக்கு என்ன பண்புகள் அவசியமாக இருக்கின்றன? அவை எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கப்படலாம்?

‘நான் என்ன சொல்வது?’

‘நான் எதைப் பற்றி பேசுவது?’ ‘எனக்கு ஒன்றும் தெரியாது.’ ‘நான் சொல்வதைக் கேட்க யாருக்குமே இஷ்டமில்லை.’ இதைப் போன்ற எண்ணங்கள் உங்களுக்கு இருக்கக்கூடும் என்றாலும், அவை உண்மையற்றவையாக இருக்கலாம். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அதிகத்தை அறிந்தவர்களாய் இருக்கிறீர்கள்; அந்தத் தகவல்களில் சில மற்றவர்களின் அக்கறைக்குரியவையாய் இருக்கும் சாத்தியமும் உண்டு. உதாரணமாக, ஒருவேளை நீங்கள் சமீபத்தில் எங்காவது பயணப்பட்டிருப்பீர்கள். மக்கள் தாங்கள் வாழும் இடத்தோடு ஒப்பிடுகையில் அந்த இடம் எப்படிப்பட்டது என்று அறிய விரும்பக்கூடும்.

மேலுமாக, வாசிப்பதன்மூலம் பல்வேறு பொருள்களைப்பற்றிய உங்கள் அறிவை நீங்கள் அதிகரிக்கலாம்; அவ்வாறு அதிகரிக்கவும் வேண்டும். ஒவ்வொரு நாளும் எதையாவது வாசிப்பதற்கான நேரத்தை எடுத்துக்கொள்வது ஒரு நல்ல பழக்கமாக இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களில் பைபிளைப் பற்றியும் பொது அக்கறைக்குரிய பாடங்களைப் பற்றியும் தகவல்கள் அடங்கியிருக்கின்றன. எவ்வளவு அதிகமான தகவல்களை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்களோ அவ்வளவு அதிகமாகப் பகிர்ந்துகொள்ளலாம். யெகோவாவின் சாட்சிகளால் பயன்படுத்தப்படும் தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் என்ற சிறு புத்தகத்தில் உள்ள தினவாக்கியம் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும், வித்தியாசமான ஒன்றைப் பற்றி சிந்திப்பதற்கும் உரையாடலில் பயன்படுத்துவதற்கும் அது எதையாவது உங்களுக்கு அளிக்கிறது.

உரையாடலில் ஈடுபடுவது என்றால், ஒருவரே எப்போதும் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. இரு சாராரும் தங்கள் உள்ளக்கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும். மற்ற நபரைப் பேசுவதற்கு அனுமதியுங்கள். அவர் அமைதலாக இருந்தால், சாதுரியமான கேள்விகள் மூலமாக அவரை நீங்கள் உற்சாகப்படுத்தலாம். வயதான ஒருவரோடு பேசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய கடந்தகால சம்பவங்களைப்பற்றி நீங்கள் அவரிடம் கேட்கலாம்; அவர் இளமையாக இருந்த சமயத்திலிருந்து, உலகம் அல்லது குடும்ப வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்பதைப்பற்றியும் கேட்கலாம். அவர் சொல்வதைக் கேட்பதை நீங்கள் அனுபவித்துக்களிப்பீர்கள்; மேலும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.

நன்கு செவிகொடுத்துக் கேட்பவராக இருங்கள்

கவனமாகச் செவிகொடுத்துக் கேட்பது உரையாடலுக்கு மதிப்புவாய்ந்த ஒரு அம்சமாகும். நாம் மற்றவர்களுக்குச் செவிகொடுத்துக் கேட்கும் விதம், பாரங்களைச் சுமந்துகொண்டு உதவிக்காக நாடுபவர்களுக்கு ஆதரவளிக்கலாம். ‘மனித இனத்தின் குப்பைக்கூளத்தில்’ இருப்பதாகத் தன்னைக் கருதிய ஒரு மனிதன் துயர்மிகுந்தவராக உணர்ந்து, உதவிக்காக ஒரு நண்பரைத் தொலைபேசியில் அழைத்தார். அது மிகவும் சாதகமற்ற ஒரு நேரமாக இருந்தபோதிலும், அந்த நண்பர் தயவாக—இரண்டு மணிநேரங்களுக்கு—செவிகொடுத்துக் கேட்டார்! அந்த ஒரு உரையாடலையே தன் வாழ்வில் ஒரு திருப்புக்கட்டமாக அவர் இப்போது கருதுகிறார். அந்த வித்தியாசத்தை உண்டுபண்ணியது எது? “வெறுமனே நன்கு செவி கொடுத்துக் கேட்கும் ஒருவராக இருந்ததே,” என்று கவனித்துக்கேட்ட அந்த நண்பர் ஒத்துக்கொள்கிறார். “ஞானமுள்ள எந்த வார்த்தைகளையும் பேசியதாக எனக்கு நினைவில்லை. நான் வெறுமனே பொருத்தமான கேள்விகளைக் கேட்டேன், ‘நீங்கள் ஏன் அந்த விதமாக உணருகிறீர்கள்?’ ‘அது ஏன் உங்களுக்கு மனக்கவலையை உண்டாக்குகிறது?’ ‘எது உதவிசெய்யக்கூடும்?’ என்னுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லுகையில் அவர் தாமே தன் சொந்த கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் அளித்துவிட்டார்!”

தங்களுடன் உரையாடுவதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளும் பெற்றோரைப் பிள்ளைகள் அருமையாக நினைத்துப் போற்றுகிறார்கள். ஸ்காட் என்ற இளைஞன் கருத்துத் தெரிவிக்கிறான்: “உங்கள் பெற்றோர் உங்களிடத்தில் வந்து உங்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லது. கொஞ்சநாட்களாக அப்பா அதைச் செய்துகொண்டிருக்கிறார்; அது உதவியாக இருக்கிறது, ஏனென்றால் வெறுமனே நீங்களாகவே கையாள முடியாத சில காரியங்கள் இருக்கின்றன.”

“உங்கள் பிள்ளைகள் உங்களோடு பேசுவதற்கேற்ற ஒரு சூழலை நீங்கள் உருவாக்கவேண்டும்,” என்று ஒருவர் ஆலோசனை கூறுகிறார். அவர் தன்னுடைய நான்கு பிள்ளைகளில் ஒவ்வொருவரோடும் தனித்தனியாக நேரத்தை ஒழுங்காகச் செலவு செய்கிறார்; ஏனென்றால், நன்கு பொருந்தி அமைத்துக்கொள்ளக்கூடிய ஆளுமை உள்ளவர்களாக இளைஞர் உருவாவதற்கு பெற்றோர்கள் கவனமாக, பரிவிரக்கத்தோடு செவிகெடுத்துக் கேட்பது அத்தியாவசியம் என்று அவர் உணருகிறார். அவர் எதைப் பரிந்துரை செய்கிறார்? வாய்ப்புகள் ஏற்படும்போது, ஒரு பிள்ளை பேச விரும்பினால், செவிகொடுத்துக் கேட்க தயாராக இருங்கள். “நீங்கள் எவ்வளவு களைப்பாக அல்லது பாரமடைந்தவராக இருந்தாலும் சரி, ஒருபோதும் அவர்களைத் தடைசெய்து விடாதீர்கள்! செவிகொடுத்துக் கேளுங்கள்,” என்று அவர் சொல்லுகிறார்.

நேர்மையான அக்கறைக்குப் பிரதிபலிப்பு உண்டு

பேச்சுத்தொடர்பு கொள்பவர்களாகி உரையாடலில் தங்களை வெளிப்படுத்துவதற்கு அநேகருக்கு உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு தேவை. ஒரு இளைஞன் இவ்வாறு வருத்தமாகக் கூறினான்: ‘நான் யாராவது ஒருவரோடு பேசவேண்டும், ஆனால் யாரிடம் போவது? பேசுவது எனக்கு எளிதான காரியமல்ல. என்னிடத்தில் அக்கறை காட்டும் ஒருவர் எனக்குத் தேவை!’ உண்மையான, நேர்மையான அக்கறை, நம்பிக்கையான மற்றும் பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கலாம்; அதில் ஒருவர் மற்றவரோடு பேசி தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துவது எளிதாக இருக்கிறது.

ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “பல வருடங்களுக்கு முன்பு, குடும்ப நிலைமைகளைக் கையாளுவதில் சில பிரச்சினைகள் எனக்கிருந்தபோது, ஒரு நண்பரோடு உரையாட முயன்றேன். அவர் சொன்னதெல்லாம் இதுவே, ‘கஷ்டமான நிலைமையைப் பொறுத்துக்கொண்டு, உங்களை நீங்களே கடினமாக்கிக்கொள்ளுங்கள், எல்லாம் சரியாகிவிடும்.’ எந்த ஒரு சம்பாஷணையும், எந்த ஒரு உரையாடலும் இருக்கவில்லை, அது பயனற்றதாக இருந்தது. உண்மையில், அது மறுபடியும் என்னை மெளனத்திற்குள் ஆழ்த்தியது. இதற்கு எதிர்மாறாக, யெகோவாவின் சாட்சிகளுடைய கண்காணி ஒருவருடன் பின்னர் நான் பேசினேன். அவருடைய பார்வை, முகபாவனை, தயவான பாங்கு ஆகியவற்றிலிருந்து அவர் பரிவிரக்கமுள்ளவர் என்பதை அறிந்தேன். அதன் காரணமாக, நான் மனம்விட்டு பேசுபவனாகி, அதிகமாக உரையாடத் தொடங்கினேன், ஏனென்றால் அவர் உண்மையிலேயே அக்கறை உள்ளவராக இருந்தார். அவர் சொன்னார்: ‘உங்களுடைய நிலைமையில் உங்களுக்கு ஆதரவாய் இருப்பதற்கு எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யப்போகிறோம்.’ அப்படிப்பட்ட மக்களிடமாக நீங்கள் நன்கு பிரதிபலிப்பீர்கள்!”

நம்மில் அதிகமானோர் நம் இருதயங்களை விரிவாக்கி, அர்த்தமுள்ள உரையாடலில் பங்குகொள்ளும்படி மற்றவர்களைத் தூண்டுகிறோமா? ஒரு தொகுதியிலிருந்து ஒருவர் உரையாடுவதற்கு அதிக கூச்சமுள்ளவராக, தனியாக விடப்பட்டிருப்பதைப் பார்க்கையில், அந்த நபரை நம்முடைய உரையாடலில் சேர்த்துக்கொள்ள முயலுகிறோமா? முன்னர் குறிப்பிடப்பட்ட ஜான் இவ்வாறு சொல்கிறார்: “என்னால் அந்த உணர்ச்சியைப் புரிந்துகொள்ள முடிகிறது, ஏனென்றால் என்னை அவருடைய இடத்தில் வைத்துப் பார்க்க முடிகிறது, நானும் அவரோடு சேர்ந்து வேதனைப்படுகிறேன்!” அவர் மேலுமாகச் சொல்கிறார்: “அவரிடமாக அணுகி அவரையும் உட்படுத்துவது எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது. நாம் அந்தக் காரியத்தைக் குறித்து மெளனமாக ஒரு ஜெபத்தையுங்கூட செய்யலாம்.”

டான் ஒரு நண்பரைக் குறித்து சொல்கிறார்: “உரையாடக்கூடிய தன்னுடைய திறமையைக் குறித்து ராய் அவ்வளவு நம்பிக்கையற்றவராய் இருந்ததால், ஒரு தொகுதியினர் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் எப்போதும் ஒருசில அடிகள் பின்னால் தள்ளியே நிற்பார். ஆகவே நான், ‘சொல்லுங்க ராய், அந்த விஷயத்தைப் பற்றி அல்லது இந்த விஷயத்தைப் பற்றி நீங்க ஏதோ சொன்னீங்களே, அது என்ன?’ என்று அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்பேன். பின்னர் அவர் பேசத் தொடங்குவார். அதன் விளைவாக, மற்றவர்கள் அவரிடம் இல்லை என்பதாக நினைத்திருந்த அம்சத்தை அவரில் கண்டார்கள்.” டான் இவ்வாறு உந்துவிக்கிறார்: “ஒருவரிடம் உரையாடுவதையும் அவரைத் தாராளமாகப் பேசவைப்பதையும் கடினமாகக் கண்டால் விட்டுவிடாதீர்கள். அவருக்குள் பேச விரும்பக்கூடிய ஒரு நல்ல ஆளுமை இருக்கிறது என்று உங்களுக்கு நீங்களே நினைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து அவரை மனம்விட்டுப் பேசச்செய்து, அதில் முயன்று கொண்டே இருங்கள்.”

நீங்கள் கூச்சவுணர்வு பிரச்சினை உள்ளவர்களாக இருந்தால்கூட, மற்றவர்களில் ஓர் அன்பான, நேர்மையான அக்கறையை வளர்த்துக்கொள்வதன்மூலம் பயனடைவீர்கள். தன்னைத் தனியே பிரித்துவைத்துக்கொள்ளும் மனச்சாய்வை மேற்கொள்வதற்கு இது தனக்கு உதவியாக இருந்ததாக ஜான் கண்டார். “அன்பு . . . தற்பொழிவை நாடாது,” என்று அவர் விளக்குகிறார். (1 கொரிந்தியர் 13:5) “அன்பான காரியத்தைச் செய்வதற்கு, மற்றவர்களிடம் பேசி அவர்கள் நலத்தைப்பற்றி விசாரிக்கவேண்டும். உங்கள் குறைபாடுகளுக்கு இடங்கொடுத்துச் செல்வது போதுமானதாக இருப்பதில்லை. நீங்கள் ஜெபத்தோடு உங்கள் சொந்த மனச்சாய்வுகளை மேற்கொள்ள முடியும்.” அவர் மேலுமாகச் சொல்கிறார்: “அவ்வாறு செய்வதால் அவ்வளவு அதிகமான பலன் இருக்கிறது. மற்றவர்கள் பிரதிபலிப்பதையும் அவர்கள் எவ்வாறு கட்டியெழுப்பப்படுகிறார்கள் என்பதையும் காணும்போது, நீங்களும் கட்டியெழுப்பப்படுகிறீர்கள். அதுதானே அடுத்த முறையும் அதற்கடுத்த முறையும் அவ்வாறு தொடர்வதற்கான தைரியத்தை உங்களில் புகட்டவேண்டும்.”

ஒற்றுணர்வு—உரையாடலின் அடித்தளம்

மனித தனிக்கூறுகளில் மிகவும் மதிப்புவாய்ந்ததாகக் கருதப்படுவது ஒற்றுணர்வாகும். சரியாக, ஒற்றுணர்வு என்றால் என்ன? ஒற்றுணர்வு என்பது ‘மற்றொருவரின் உணர்வுகளையும் நோக்குநிலையையும்—அவரோடு நீங்கள் ஒத்துக்கொண்டாலும் சரி ஒத்துக்கொள்ளாவிட்டாலும் சரி—போற்றக்கூடிய திறமையாகும்,’ என்று பென்ஸில்வேனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பர்னார்ட் கர்னி கூறுகிறார். உரையாடலில் ஒற்றுணர்வு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? “அதுவே அடித்தளம்! மற்ற அனைத்தும் அதன்மீது கட்டப்படும் அஸ்திவாரம் அதுவே.”

எல்லா நல்ல உறவுகளுக்கும் உரையாடல் இன்றியமையாததாக இருக்கிறது என்று டாக்டர் கர்னி விளக்குகிறார். நிச்சயமாகவே, கருத்துவேறுபாடுகள் இருப்பது வழக்கமானதே. அவற்றைச் சரிசெய்து உறவைக் காத்துக்கொள்வதற்கு, நாம் அந்தப் பிரச்சினையைப் பற்றி பேச மனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். அநேகர் அதைச் செய்வதைத் தவிர்க்கிறார்கள்; ஏனென்றால் மற்ற நபரை தற்காப்பு வாதம் செய்யவும் கோபம் அடையவும் தூண்டாமல் எப்படிப் பேசுவது என்று அவர்களுக்குத் தெரியாது. டாக்டர் கர்னி கூறுகிறபடி, “மற்றொரு நபரின் நிலைக்கு போற்றுதலையும் மதிப்பையும் காண்பிப்பதை, அந்த நிலையுடன் ஒத்துப்போவதோடு அநேகர் குழப்பிக்கொள்கிறார்கள். அதன் காரணமாக, அவர்கள் ஒத்துப்போகவில்லை என்றால், போற்றுதலையும் மதிப்பையும் காண்பிப்பதில்லை. ஒத்துப்போவதும் போற்றுதல் காண்பிப்பதும் வெவ்வேறு காரியங்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஒற்றுணர்வு உதவுகிறது.”

மனதில் மற்றவர்களுடைய நிலையில் உங்களை வைத்துப் பார்ப்பது, அவரைப் போலவே உணரவும் சிந்திக்கவும் உதவுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலைமைகளின்கீழ், நீங்கள் ஒத்துப்போகாத சமயங்களில்கூட, புரிந்துகொள்ளுதலும், போற்றுதலும், மதிப்பும் வளரலாம் என்பதைக் காண்பீர்கள்.

நான்கு பேருக்குத் தாயான ஜேனட்டைக் குறித்துச் சிந்தியுங்கள். ஒருமுறை அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாகவும் பிரயோஜனமற்றவர்களாகவும் உணர்ந்தார்கள். ஒருவருக்கு உதவிசெய்யும்போது ஒற்றுணர்வு எவ்வளவு அவசியமானது என்று அவர்கள் இப்போது உணருகிறார்கள். அவர்கள் சொல்வதாவது: “என்னுடைய செயல்கள் யாவும் முற்றிலுமாக ஒன்றுக்கும் பிரயோஜனமற்றவை என்று நினைத்துக்கொண்டிருந்தேன்; என்னுடைய கணவரோ என்னோடு பேசி, நான் உதவியாக இருக்கக்கூடிய வித்தியாசமான வழிகளை எனக்கு விவரித்தது ஞாபகம் இருக்கிறது. என் கண்கலங்க நான் சொல்வதை அவர் மிக அன்பாகக் கேட்டு, பின்னர் என்னைக் கட்டியெழுப்பினார். ஆனால் அப்போது என்னுடைய சிந்தனையை அவர் மதிப்புக்குறைவாகவோ ‘ஓ, அதெல்லாம் முட்டாள்தனமானது,’ என்றோ அல்லது அதைப்போன்ற ஏதோ ஒன்றையோ சொல்லியிருந்தால், நான் மிகவும் அமைதலாகி எனக்குள்ளேயே வைத்து புழுங்கிக்கொண்டிருப்பேன். அதற்குப் பதிலாக, நீண்டநேர, அர்த்தமுள்ள உரையாடல் ஒன்றை அன்று மாலை அனுபவித்தோம்.”

‘நீங்கள் அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்று ஒற்றுணர்வு காண்பிக்கிறது. அநேக மக்கள் விரும்புவதும் அவர்களுக்குத் தேவையுமான அந்தப் பேச்சுத்தொடர்பை, பரஸ்பர பரிமாற்றத்தை அது வளர்க்கிறது,’ என்று கூறி நிறைவு செய்கிறார் டாக்டர் கர்னி.

அதை உங்களால் செய்ய முடியும்!

நீங்கள் ஒரு நல்ல உரையாடல் வல்லுநராக இருக்கலாம். உரையாடல் கலையில் தேர்ச்சி அடைவதற்கான சில அத்தியாவசியமான காரியங்களை நாம் கவனித்திருக்கிறோம்; ஆனால் இன்னும் ஏராளமான காரியங்கள் உள்ளன. சிநேகப்பான்மையாக இருத்தல், நகைச்சுவை திறம், சாமர்த்தியம் ஆகியவை அவற்றில் உட்படும் ஒருசில அம்சங்கள். ஆனால், வனப்புமிக்க ஓர் ஓவியத்தை உருவாக்குவதற்கு ஓவியர் ஒருவர், பயிற்சி மற்றும் பழக்கத்தினால் தன் தூரிகையை வைத்து கான்வாஸ் துணியின்மீது திறம்பட்ட விதத்தில் சரளமாக தீட்டுவதுபோல, தேவைப்பட்ட இந்தப் பண்புகளை வளர்ப்பதற்குப் பிரயாசப்படவேண்டும்.

உதாரணமாக, டானியல் நன்கு உரையாடுபவராக மாறியிருக்கிறார். எப்படி? குறுக்கிட்டுப் பேசுவதற்கும் உரையாடல்களில் மேலோங்கி நிற்பதற்குமான மனச்சாய்வை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டதன் மூலமாகவே. அவர் இவ்வாறு ஒத்துக்கொள்கிறார்: “ஒரு உரையாடலில் மேலோங்கி நிற்பதைத் தவிர்ப்பதற்கு நான் மனமார பிரயாசப்பட வேண்டியிருக்கிறது. எனக்கு, என் நாக்கைக் கட்டுப்படுத்துவதை அது குறிக்கிறது. சிறிய துணுக்குகளைச் சேர்த்து சொல்லவேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறபோது, மனதில் அதைத் தடுத்துநிறுத்துவேன்! ஒரு குறிப்பு, உரையாடலை திசைதிருப்பும் என்றோ மற்றொருவர் உரையாடுவதைத் தடுத்துவிடும் என்றோ எனக்குத் தோன்றினால், நான் அதைச் சொல்வதில்லை!”

இலேனுக்கு உதவியாயிருந்தது என்ன? பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றபின், பேசுவதற்கு மதிப்புவாய்ந்ததும் பிரயோஜனமுள்ளதுமான ஏதாவது விஷயத்தை அவர்கள் கொண்டிருந்ததாக உணர்ந்தார்கள். அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: “என்னிடத்திலிருந்து கவனத்தைத் திருப்பி மற்றவர்களிடம் ஆவிக்குரிய காரியங்களைப் பற்றி பேசத் தொடங்கினால், உரையாடுதல் எனக்கு அதிக சுலபமாக இருக்கிறது. நாம் பெறுகிற பைபிள்-அடிப்படையிலான பிரசுரங்களை ஒழுங்காக வாசிப்பதும் உதவியாக இருக்கிறது. இவற்றை நான் தவறாமல் வாசித்திருக்கும்போது, பகிர்ந்துகொள்வதற்கு புத்தம்புதிதான ஏதோவொன்று இருப்பதால், மிக எளிதாக உரையாட முடிகிறது.”

இந்த இன்றியமையாத பண்புகளை உங்கள் உரையாடலில் வளர்த்துக்கொள்ள முயலுங்கள். அப்போது நீங்களும் மற்றவர்களுக்குப் புத்துணர்வையும் இன்பத்தையும் கொண்டுவந்து, உண்மையிலே மனித தேவை ஒன்றைப் பூர்த்தி செய்யும் ஒரு கலையில் தேர்ச்சி பெற்றிருக்கும் திருப்தியையும் கொண்டிருக்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்