இளைஞர் கேட்கின்றனர்
இவ்வுணர்ச்சிகளை எவ்வாறு நான் போக்க முடியும்?
“ஒத்த பாலின புணர்ச்சி அத்தனை அருவருப்பானதாக நான் இப்போது காண்கிறபோதிலும், சில சமயங்களில் அதனிடமாக கவர்ந்திழுக்கப்படுவதைக் காண்கிறேன். இந்த உணர்ச்சிகள் என் அமைதியைக் குலைக்கின்றன, சில சமயங்களில் இரவு பகலாக அப்படியிருக்கிறது. ‘இந்தப் பயங்கரமான உணர்ச்சிகளை என்னைவிட்டகற்றும்!’ என்பதாக யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபித்து வந்திருக்கிறேன். அவை என்றாவது ஒழிந்துபோகுமா?”—டென்னிஸ்.a
அநேக கிறிஸ்தவ இளைஞர்—ஆணும் பெண்ணும்—நம்பிக்கை இழந்து உதவிக்காக இதே விதமாக முறையிட்டிருக்கின்றனர். ஒத்த பாலின புணர்ச்சியிடமாக மனம்சாய்வதை அவர்கள் உணருகின்றனர், ஆனால் அந்த வாழ்க்கை பாணியைத் தனிப்படுத்திக் காட்டும் வரைமுறையற்ற பாலுறவு, நோய் மற்றும் ஒழுக்கத்தில் சீரழிவு போன்றவற்றில் எந்தப் பங்கையும் கொண்டிருக்க விரும்புவதில்லை. அதிக முக்கியமாக, அவர்கள் கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகின்றனர், அவருடைய வார்த்தையில் அவர் திட்டவட்டமாக ஒத்த பாலின புணர்ச்சியைக் கண்டனம் செய்கிறார்.—ரோமர் 1:26, 27; கொலோசெயர் 1:10.
ஒத்த பாலின புணர்ச்சியில் ஈடுபடுகிறவர்கள் மாற முடியாது என்பதாக அநேகமாக சொல்லப்படுகிறது. என்றபோதிலும் இது உண்மையல்ல. சில பூர்வ கிறிஸ்தவர்கள் முற்காலங்களில் ஒத்த பாலின புணர்ச்சியில் ஈடுபட்டனர், ஆனால் அவர்கள் மாறிவிட்டனர். (1 கொரிந்தியர் 6:9-11) ஆம், பிரபலமான கட்டுக்கதைகளுக்கு எதிர்மாறாக, மக்கள் மாற முடியும், மாறவும் செய்கிறார்கள். என்றபோதிலும், ஒரு இளைஞன் ஒத்த பாலின புணர்ச்சி செயல்களை வெற்றிகரமாக தவிர்க்க முடிந்தாலும், அவனோ அல்லது அவளோ ஒத்த பாலின புணர்ச்சிக்குரிய ஆசையை முற்றிலும் ஒழித்துவிடுவதைக் கடினமாகக் காணலாம். ஒரு இளம் மனிதன் பின்வருமாறு ஒப்புக்கொண்டான்: “என்னுடைய உணர்ச்சிகளை மாற்றிக்கொள்ள முயற்சிசெய்திருக்கிறேன். உதவிக்காக யெகோவாவிடம் ஜெபித்திருக்கிறேன். பைபிளை வாசிக்கிறேன். அந்தப் பொருளின்பேரில் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அடுத்து உதவிக்காக எங்கே செல்வது என்பது எனக்குத் தெரியவில்லை.”
மாயமான அல்லது உடனடியான பரிகாரம் எதுவும் இல்லை. டென்னிஸ் நினைவுகூருகிறான்: “ஒரு ‘ஆணாக’ ஆகும் முயற்சியில் வரைமுறையில்லாமல் எதிர்பாலாரோடு உடலுறவுகொள்வதற்கு என்னை நானே பலவந்தப்படுத்திக் கொண்டேன். இவை அனைத்தும் வீணாகவே இருந்து அதிகமான மனவேதனையை மாத்திரமே உண்டுபண்ணியது.” என்றபோதிலும், பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் இப்படிப்பட்ட உணர்ச்சிகளைச் சமாளிக்க முடியும்.
தவறாக சிந்திக்கும் விதத்தை அடையாளம் கண்டுகொள்ளுதல்
முதலாவதாக சிந்தனைகள் செயல்களுக்கு முன்னால் செல்வதை உணர்ந்துகொள்ளுங்கள். (ஏசாயா 55:6, 7; யாக்கோபு 1:14, 15) ஆம், டாக்டர் உவேன் டபிள்யூ. டையர் குறிப்பிடுகிறார்: “முதலாவது ஒரு சிந்தனையைக் கொண்டில்லாமல் உங்களால் ஒரு எண்ணத்தைக் (உணர்ச்சி) கொண்டிருக்க முடியாது.” ஆகவே ஒத்த பாலின புணர்ச்சிக்குரிய ஆசைகளின் மூலக்காரணம், ஒருவர் தன்னைப்பற்றி, எதிர் பாலாரைப்பற்றி, காதல் மற்றும் இது போன்றவற்றைப் பற்றி இயல்புக்கு மாறான விதத்தில் சிந்திப்பதால் இருக்கலாம். ஒருவர் தன் ‘மனதைப் புதிதாக்கி’ இப்படிப்பட்ட சிந்தனைகளை மாற்றிக்கொள்வதற்கு முன்பாக முதலில் அவர் அதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். (ரோமர் 12:2) அப்படிச் செய்வது ஒருவர் ஏன் அதே பாலினத்திலுள்ள உறுப்பினர்களிடமாக கவர்ந்திழுக்கப்படுகிறார் என்பதைக் குறித்து மதிப்புள்ள உட்பார்வையைக் கொடுக்க முடியும்.
ஒருவர் அதை எவ்விதமாகச் செய்யலாம்? ஒரு வழியானது சங்கீதக்காரன் செய்ததுபோல ஜெபிப்பதாகும்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று [பாரும்]”. (சங்கீதம் 139:23, 24) ஒருவர் தன்னுடைய உணர்ச்சிகளைக் குறித்து விவேகமும் முதிர்ச்சியும் வாய்ந்த ஒரு கிறிஸ்தவரிடம் கலந்துபேசுவதுகூட உதவியாக இருக்கலாம். நீதிமொழிகள் 27:17 சொல்கிறவிதமாகவே, ‘இரும்பை இரும்பு கருக்கிடும்.’ புரிந்துகொள்கிறவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருப்பதற்கு அறியப்பட்டிருந்த ஒரு கிறிஸ்தவ மூப்பரிடம் ஓர் இளம் மனிதன் இவ்விதமாக நம்பிக்கையுடன் தெரிவித்தான். தன் இரகசியத்தை நம்பகமான ஒருவரிடம் சொல்வது அவனுக்கு ஒருபோதும் சுலபமாக இருக்கவில்லை, ஆனால் மதிப்புள்ள ஒரு உறவு வளர்ந்தது. “அவரிடம் நான் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசமுடியும்,” என்று அவன் சொல்கிறான். மூப்பர் செவிகொடுத்துக் கேட்பது மட்டுமல்லாமல் திறமையாக கேள்விகளைக் கேட்பதன் மூலம், அந்த இளம் மனிதனின் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் வெளிக்கொண்டுவர உதவுகிறார்.—நீதிமொழிகள் 20:5-ஐ ஒப்பிடுக.
ஓர் ஆண் வெறுத்து ஒதுக்கிய அல்லது துர்ப்பிரயோகம் செய்த ஒரு தகப்பனை உடையவராக இருந்திருந்தால், ஒத்த பாலினத்தவரிடமாக அவருடைய கவர்ச்சி உண்மையில் தகப்பனுக்குரிய அன்புக்கான தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஒரு வீண் முயற்சியாக இருப்பதைக் காணக்கூடும். ஒரு ஆண்மகனின் கடமையை நிறைவேற்ற முன்மாதிரியாக ஒருவரை ஒருபோதும் கொண்டிராத காரணத்தால், டாக்டர் ஜோசப் நிக்கோலோசி குறிப்பிடும் விதமாக “பலவீனமான உணர்வையும் ஆண்மையோடு சம்பந்தப்பட்ட குணங்களாகிய சக்தி, தன்னுறுதி மற்றும் பலம் போன்றவற்றின் சம்பந்தமாக தகுதியின்மையையும்” உணரக்கூடும். தான் குறைவுபடுவதாக உணரும் குறிப்பிட்ட பண்புகளை ஒவ்வொன்றாக ஒருவர் சிந்திக்கையில், மற்ற ஆண்களில் அவர் கவர்ச்சியானதாகக் காணும் இந்தப் பண்புகள் தானே தன்னிடமிருப்பதைக் கண்டுபிடிப்பதில் ஆச்சரியமடைவார்.
கடந்த காலங்களிலிருந்து துக்ககரமான “பாடங்கள்”
மற்ற இளைஞர் தங்களுடைய பிரச்சினை கடந்தகால மன அதிர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டதாய் இருப்பதாக உணருகின்றனர். ஒரு பெண் நினைவுகூருகிறாள்: “ஒத்த பாலின புணர்ச்சிப் பொருளோடு சம்பந்தப்பட்ட ஆபாசமான புத்தகங்களைக் காண நேர்ந்தது. நான் இயற்கைக்கு மாறான ஆசைகளை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன்.” ஒரு இளம் மனிதன் சொல்கிறான்: “என்னுடைய அப்பாவின் முறைதகா புணர்ச்சிகளுக்கு நான் பலியாளாக இருந்தேன். இதன் விளைவாக, ஒரு ஆணோடு பாலுறவு கொள்வது எனக்கு இயல்பானதாக தோன்றியது.” இப்படிப்பட்ட வேதனையான அனுபவங்கள் எதிர்பாலாரை வெறுக்க அல்லது அவர்களைக் கண்டு பயப்படவும்கூட அல்லது அன்பை உடல் நெருக்கங்களோடு சமமாக கருதும்படி பலியாட்களுக்குக் கற்பிக்கக்கூடும். ஒரு பலியாள் தன்னுடைய பாலுறவு ஆசைகளை “சரீரப்பிரகாரமான தேவையாக இல்லாமல் உணர்ச்சிப்பூர்வமானதாக—மென்மைக்கும் புரிந்துகொள்ளுதலுக்குமான தேவையாக” விவரிக்கிறாள்.
ஒப்புக்கொள்ளும் விதமாக, ஆனால் ஒத்த பாலின புணர்ச்சிக்கான காரணங்கள் சிக்கலானவையாக, அநேகருடைய விஷயத்தில் எளிய ஒரு விளக்கத்துக்கு எதிர்மாறாக இருக்கின்றன.b எனினும் தவறான சிந்தனையைத் தூண்டுவித்தது எதுவாக இருப்பினும் அதைத் திருத்திக்கொள்வதற்கு ஒருவர் அதிகத்தைச் செய்ய முடியும்.
மனதைப் புதிதாக்குதல்
மிகச் சிறந்த வழி கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துவதாகும். உதாரணமாக, தனக்கில்லாத அவன் நினைக்கும் அந்த ஆண்மைக்குரிய பண்புகளை வெளிப்படுத்தும் ஆண்களிடமாக தான் கவர்ந்திழுக்கப்படுவதைக் காணும் ஒரு இளம் மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். அல்லது எதிர்பாலாரைப் பார்த்து பயப்படும் ஒரு இளம் பெண்ணின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இரு சாராருமே ஆண்மையைக் குறித்து ஆரோக்கியமான ஒரு கருத்தை வளர்த்துக்கொள்வதற்கு ஒரு வழி இயேசுவின் முன்மாதிரியைப் படிப்பதாகும். (1 பேதுரு 2:21) ஆண்மைக்குரிய சக்தியை மென்மையினால் சமநிலைப்படுத்திய ஒரு பரிபூரண மாதிரியாக அவர் இருந்தார். (மத்தேயு 19:14; யோவான் 19:5) இதன் காரணமாக ஒரு இளம் மனிதன் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தைப் படிப்பது பயனுள்ளதாக காண்கிறான்.c “இயேசுவை அறிந்துகொள்வது ஒரு ஆண் எவ்விதமாக இருக்கவேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளச் செய்கிறது,” என்பதாக அவன் சொல்கிறான்.
பாலினம், காதல் மற்றும் ஒத்த பாலினத்தவரின் நட்பு போன்ற பொருட்களின்பேரில் கடவுளுடைய கருத்தைக் கலந்தாராயும் பைபிள் வசனங்களைத் தியானம் செய்வது ஒருவருடைய சிந்தனையைத் திருத்திக்கொள்வதில் அதேவிதமாகவே உதவியாக இருக்கிறது.—ஆதியாகமம் 1:27, 28; ரூத் 1:16, 17; 1 சாமுவேல் 18:1; நீதிமொழிகள் 5:18, 19; 1 கொரிந்தியர் 13:4-8.
தவறான உணர்ச்சிகளின்மீது ஆழ்ந்த யோசனையைத் தவிர்ப்பதும்கூட முக்கியமாகும். அநேக சமயங்களில் ஒருவர் தனிமையாக, சோர்வாக, அல்லது ஏமாற்றமடைந்தவராக இருக்கையில் விசேஷமாக இந்தத் தூண்டுதல்கள் பலமாக இருக்கின்றன. (நீதிமொழிகள் 24:10) “நாம் என்னவாக இருக்கிறோமோ அதை மாற்றிக்கொள்வதற்கு ஒரே வழி கெட்ட உணர்ச்சிகளை நல்லவையாக மாற்றுவதாகும்,” என்பதாக ஒரு கிறிஸ்தவப் பெண் சொல்கிறாள். நெறி தவறிய ஒரு தூண்டுதல் தனக்குள் வரும்போது ஒத்த பாலின புணர்ச்சி பற்றிய கடவுளுடைய கருத்தைக் குறித்து அவள் தனக்குத்தானே நினைப்பூட்டிக்கொள்கிறாள். பருவ வயது பையன் ஒருவன் சொல்கிறான்: “ஒத்த பாலின புணர்ச்சிக்கான தூண்டுதல் ஏற்படுகையில், நான் எனக்குப் பிரியமான பைபிள் வசனத்தை தியானம் செய்கிறேன்.” (ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 10:4; பிலிப்பியர் 4:8) மற்றவர்கள் பைபிள் அடிப்படையில் அமைந்த உவாட்ச் டவர் சொஸைட்டி ஆடியோ காசட்டுகளைக் கேட்டுக்கொண்டே தூங்கிப் போவது உதவியாக இருப்பதாக கண்டிருக்கின்றனர்.
சிந்திப்பது நாம் செயல்படும் விதத்தைப் பாதிப்பது போலவே, நாம் செயல்படுவது சிந்திக்கும் மற்றும் உணரும் விதத்தையும் பாதிக்கலாம். ஆகவே தவறான ஆசையைத் தூண்டும் அல்லது தீவிரமாக்கும் நடத்தையையும் கூட்டுறவையும்கூட ஒருவர் விட்டுவிட வேண்டும். (1 கொரிந்தியர் 15:33) சோதனைக்குள்ளாக நேரிடும் பொது கழிவு அறைகள், கடற்கரைகள், தனிப்பூட்டு நிலையடுக்கு வசதிவாய்ப்புடைய பொதுக் கூடங்களுக்கும் வரும்போது ஒருவர் ‘எச்சரிப்பாய்’ இருப்பதும்கூட அவசியமாயிருக்கிறது.—சங்கீதம் 119:9, NW.
தற்புணர்ச்சி தவிர்க்கப்படவேண்டிய மற்றொரு ஆரோக்கியமற்ற பழக்கமாகும். ஒத்த பாலின புணர்ச்சியில் ஈடுபடும் அநேக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது கட்டுப்பாடு மீறிய நிர்ப்பந்தமாகும். “நான் ஆறு வயதாயிருக்கும் போதிலிருந்து தற்புணர்ச்சி பிரச்சினை எனக்கு இருந்தது,” என்பதாக ஒரு இளம் மனிதன் ஒப்புக்கொள்கிறான். “பாலுறவைக் குறித்து மனக்கற்பனை செய்வது ஒத்த பாலின புணர்ச்சிக்குரிய உணர்ச்சிகளை அதிகமாக்கியது.” இந்த அசுத்தமான பழக்கத்திற்கெதிராக போராடுங்கள்!d—கொலோசெயர் 3:5.
மறுபட்சத்தில், ஆரோக்கியமான நடக்கை முறைகளை ஒருவர் ஏற்படுத்திக்கொள்வதும்கூட முக்கியமாக இருக்கிறது. ஒரு இளம் மனிதன் ஆண்மைக்குரிய பண்புகளை வளர்த்துக்கொள்ளும்போது அவன் மற்ற ஆண்களிடமாக அவ்வளவு கவர்ந்திழுக்கப்பட மாட்டான் என்பதாக சிலர் ஆலோசனை கூறியிருக்கின்றனர். நிச்சயமாகவே, ஒரு இளம் மனிதன் சிறு பிள்ளையாக இருந்தபோது பின்பற்ற தூண்டுவிக்கும் சிறந்த ஆணின் முன்மாதிரியை அவன் ஒருபோதும் கொண்டில்லாமல் இருந்தால் இதை எவ்வாறு செய்வது என்பதை அறியாமலிருக்கலாம். அவன் தன் சொந்த உடலைக் குறித்து அசெளகரியமாகவும் சங்கடமாக அல்லது ஆண்மையற்றவனாகவும் உணரக்கூடும். அடிக்கடி சரீரப்பிரகாரமான வேலை, மிதமான உடற்பயிற்சி, அல்லது ஓய்வுநேரங்களில் விளையாடுவது போன்றவை இதன் சம்பந்தமாக உதவியாக இருக்கின்றன. (1 தீமோத்தேயு 4:8-ஐ ஒப்பிடுக.) ஆனால் இளம் மனிதனாகிய தீமோத்தேயு அப்போஸ்தலன் பவுலுக்கு ஒரு மகனைப் போன்று ஆனது போலவே, ஒருவர் சமநிலையுள்ள வயதான கிறிஸ்தவ மனிதரோடு ஆரோக்கியமான புரிந்துகொள்ளுதலை வளர்த்துக்கொள்வது விசேஷமாக பயனுள்ளதாக இருப்பதை காண்பார். (பிலிப்பியர் 2:19-22; 2 தீமோத்தேயு 3:10) நடத்தைக்குரிய எல்லைகளை வரையறை செய்துகொண்டு ஒளிவு மறைவற்ற பேச்சுத்தொடர்பை வளர்த்துக்கொள்வதன் மூலம் இப்படிப்பட்ட ஒரு உறவு கனிவானதாகவும் நம்பகமானதாகவும், அதே சமயத்தில் காமம் சார்ந்த எந்த உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டதாகவும் இருக்கக்கூடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவர் பலமான ஆவிக்குரிய தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டும். பைபிளை ஒழுங்காக வாசிப்பது, ஜெபம் செய்வது, மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்வது போன்றவை ஆவிக்குரிய பாதையில் ஒருவருடைய மனதை வைக்க உதவிசெய்கின்றன. (சங்கீதம் 55:22; 119:11; ரோமர் 10:10) சில சமயங்களில் தகுதியற்றவர் என்னும் உணர்வுகள் உடன் கிறிஸ்தவர்களோடு இருப்பதைக் கடினமாக ஆக்கிவிடக்கூடும், ஆனால் ஒருவர் தனியே பிரிந்து செல்வதற்கு எதிராக பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 18:1) இரு பாலாராகிய கிறிஸ்தவர்களுடனும் ஆரோக்கியமான கூட்டுறவு, சமநிலையைக் காத்துக்கொள்ள ஒருவருக்கு உதவக்கூடும்.—எபிரெயர் 10:24, 25.
ஒத்த பாலின புணர்ச்சிக்கான ஆசை உங்களைத் தொந்தரவு செய்வதாக இருந்தால், இந்த ஆலோசனைகள் பயனுள்ளதாக நிரூபிக்கலாம். ஆனால் கெட்ட உணர்ச்சிகள் இன்னும் நீங்காதிருந்தால் அளவுக்கு அதிகமாக சோர்வடைந்து விடாதீர்கள். கடவுள் உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார், அவரை சேவிப்பதற்காக போராடுபவர்களுக்கு அவர் இரக்கமுள்ளவராக இருக்கிறார். (1 யோவான் 3:19, 20) புதிய உலகில் நம்மைத் தொல்லைப்படுத்தும் எல்லா நோய்களிலிருந்தும் குணப்படுவதை மனிதவர்க்கம் அனுபவிக்கும். (வெளிப்படுத்துதல் 21:3, 4) இதற்கிடையில், கடவுள்மீது சார்ந்திருந்து தவறான ஆசைகளுக்கு எதிராக போராடுங்கள். (கலாத்தியர் 6:9) காலத்தோடும் திடதீர்மானத்தோடும், ஒருவேளை தவறான ஆசைகள்தாமே மறைந்துபோகக்கூடும்.
(எமது அடுத்த இதழ் தொடங்கி, “இளைஞர் கேட்கின்றனர் . . . ” மாதம் ஒரு முறை இடம் பெறும்.)
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b எமது பிப்ரவரி 8, 1995 இதழில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரையைக் காண்க.
c உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்துள்ளது.
d இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் (உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்த) புத்தகத்தில் அதிகாரங்கள் 25 மற்றும் 26 இந்தக் கெட்ட பழக்கத்துக்கு அடிமையான ஒரு இளைஞனுக்கு உதவ நடைமுறையான ஆலோசனைகளைக் கொண்டிருக்கிறது.
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
இயேசுவின் முன்மாதிரியைப் படிப்பதன் மூலம் ஆண்மையைக் குறித்து ஆரோக்கியமான ஒரு கருத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்