உங்களை “உங்களாக்குவது” எது
மனித ஜீனோம் திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு, அறிவியல் அறிஞர்கள் நம்முடைய மரபியல் உருவமைப்பைப் பற்றி அதிகத்தைக் கற்றிருந்தார்கள். அதன் காரணமாகவே “ஜீன்கள்,” “குரோமசோம்கள்,” மற்றும் “டி.என்.ஏ.” போன்ற பதங்கள் அடிக்கடி செய்தி அறிக்கைகளில் தோன்றுகின்றன. நாம் நாமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதை ஆய்வாளர்கள் நம்புவதாக சொல்லும் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து செய்தித்துறை அறிவித்துக் கொண்டிருக்கிறது. மனித ஜீனோம் திட்டம் இப்பொழுது இந்த அடிப்படை விஷயங்களை மேலுமாக விரிவுபடுத்தவும் நம்முடைய முழு மரபியல் தொகுப்பையும் பிரித்தறியவும் முயற்சிசெய்கிறது.
அறிவியல் அறிஞர்கள் இதை எவ்வாறு செய்கின்றனர் என்பதை சிந்திப்பதற்கு முன், இந்தப் பத்திரிகையின் பக்கம் 6-ல், “உங்கள் உருவப்படிவம்” என்ற பெட்டியைத் தயவுசெய்து வாசிக்கவும்.
ஜீன்களின் இடமறிதல்
முந்தையக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடியே, மனித ஜீனோம் திட்டத்தின் முதல் இலக்கு குரோமசோம்களில் நம்முடைய ஜீன்களின் இடத்தை கண்டறிவதே ஆகும். ஜீன்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர், இதை “அயல் நாடு ஒன்றில் பெயர் தெரியாத ஒரு நகரில், அறியப்படாத ஒரு தெருவில், விலாசமில்லாத ஒரு வீட்டில், எரிந்துபோன ஒரு மின்விளக்கை தேடிக்கொண்டிருப்பதற்கு” ஒப்பிட்டுப் பேசுகிறார். இந்தப் பணி “விலாசமில்லாத அல்லது குடும்பப் பெயர் தெரியாத ஒருவரின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிப்பதைப் போன்றே அத்தனை கடினமான ஒன்று,” என்பதாக டைம் பத்திரிகை தெரிவிக்கிறது. அப்படியென்றால், அறிவியல் அறிஞர்கள் இந்தச் சவாலை எவ்விதமாக சமாளிக்கிறார்கள்?
நன்கு அறியப்பட்டுள்ள விசேஷ குணங்கள் மற்றும் நுட்ப உணர்ச்சிகளோடு சுதந்தரிக்கப்பட்ட தனிப்பண்புகளைத் தீர்மானிக்கும் ஜீன்களின் இடமறிவதற்கு ஆய்வாளர்கள் குடும்பங்களை நுணுக்கமாக ஆய்வுசெய்கின்றனர். உதாரணமாக அவர்கள் நிறக்குருடு, இரத்த ஒழுக்கு நோய் மற்றும் மேல் வாய் பிளவு ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கும் நம்முடைய குரோமசோம்களின் மேலுள்ள ஜீன்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். மரபு பிணைப்பு வரைபடங்கள் என்றழைக்கப்படும் இவை தோராயமாக இருக்கின்றன—சுமார் 50 லட்சம் அடித்தள ஜோடிகளுக்குள் மட்டுமே ஜீனின் இடத்தை அவை சுட்டிக்காண்பிக்கின்றன.
அதிக துல்லியமாக இருப்பதற்காக, அறிவியல் அறிஞர்கள் வெளிப்படையான ஒரு வரைபடத்தைத் தொகுக்க முற்படுகின்றனர். ஒரு முறையில், டி.என்.ஏ.-வின் நகல்களை ஒழுங்கற்ற அளவுள்ள துண்டுகளாக ஆக்கிக்கொண்டு, பின்னர் ஓங்கு ஜீன்களின் தொடர் வரிசையைப் பார்வையிடுகின்றனர். நிச்சயமாகவே எந்தளவுக்கு அதிகமான துண்டுகள் இருக்கிறதோ அவற்றை வகைப்படுத்தி பிரிப்பதும் அந்தளவுக்கு கடினமாக இருக்கும். ஒவ்வொரு டி.என்.ஏ. துண்டையும் தெளிவாக குறியிடப்பட்ட ஒரு நூலக அடுக்குக்கு ஒப்பிட்டால், ஒரு ஜீனின் இடமறிவது “ஒரு மேற்கோளுக்காக முழு நூலகத்தையும் தேடுவதைவிட ஒரே புத்தகத்தில் தேடுவதற்கு,” ஒப்பாக இருக்கிறது என்பதாக நியூ சையன்டிஸ்ட் பத்திரிகை விளக்குகிறது. இந்த வெளிப்படையான வரைபடங்கள், தேடுதலை 5,00,000 அடிப்படை ஜோடிகளுக்குள் குறைத்துவிடுகின்றன. பிரான்ஸிலுள்ள பாரிஸில் மனித கூட்டுத்தோற்ற ஆய்வுக்கான மையத்தில் 1993-ன் முடிவில், டாக்டர் டேனியல் கோஹென் தலைமையிலான அறிவியல் அறிஞர்களின் ஒரு குழு டைம் பத்திரிகை அழைத்தவிதமாக “முதலாவது முழுமையான—இன்னும் தோராயமாக இருந்தாலும்—மனித ஜீனோமின் வரைபடத்தை,” உருவாக்கியது.
திட்டத்தின் அடுத்த குறிக்கோள் நம்முடைய 1,00,000 ஜீன்களின் ஒவ்வொன்றினுடைய வேதியல் பகுதிப்பொருட்களின் மற்றும் ஜீனோமின் மற்ற பகுதிகளினுடைய சரியான வரிசை முறையையும் கண்டுபிடிப்பதாகும். ஆனால் அறிவியல் அறிஞர்கள் டி.என்.ஏ.-வை வாசிக்கும் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளும்போது, அவர்கள் எதிர்பார்த்ததைவிட ஜீனோம் அதிக சிக்கல் வாய்ந்ததாக இருப்பதைக் காண்கின்றனர்.
ஜீனோமை வாசித்தறிதல்
நம்முடைய ஜீனோமுக்கு வெறும் 2 முதல் 5 சதவீதம் மாத்திரமே ஜீன்கள் காரணமாயிருக்கின்றன. மற்றவை “உபயோகமற்ற டி.என்.ஏ.” என்பதாக அடிக்கடி அழைக்கப்படுகின்றன. பயனற்ற வரிசைகள் என்பதாக அழைக்கப்படும் இவை தற்செயலாக பரிணாமத்தின்போது வளர்ச்சியடைந்தன என்பதாக சில ஆய்வாளர்கள் ஒரு சமயம் நினைத்தனர். ஜீனில்லாத இந்தப் பகுதிகள் டி.என்.ஏ.-வின் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன என்றும் அணு பிரிதலின்போது குரோமசோம்கள் தங்களை நகல் எடுத்துக்கொள்ள தேவைப்படும் கட்டளைகளை அவை கொண்டிருக்கின்றன என்றும் இப்பொழுது அவர்கள் நம்புகிறார்கள்.
ஒரு ஜீனின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவது என்ன என்பதை அறிவதற்கு ஆய்வாளர்கள் நீண்ட காலமாக ஆவலாக இருந்திருக்கின்றனர். பார்த்துப் படி எடுத்தல் (transcription) காரணிகள் என்றழைக்கப்படும் புரத உற்பத்திக்கான எண்ணிக்கையில் 10,000 வரையிலான நம்முடைய ஜீன்கள் மரபு சங்கேதக் குறிகளை அனுப்புவதாக நியூ சையன்டிஸ்ட் அறிவிக்கிறது. தெளிவாகவே, இவற்றில் பல ஒன்றாகச் சேர்ந்து பின்னர் ஒரு பூட்டில் சாவி பொருந்துவது போல டி.என்.ஏ.-விலுள்ள ஒரு பள்ளத்தில் பொருந்திவிடுகின்றன. அவற்றின் இடத்தில் பொருந்தி இருக்கையில், அவை அருகிலுள்ள ஜீனை செயல்படவோ அல்லது அதன் செயல்பாட்டினை அடக்கிவிடவோ செய்கின்றன.
அடுத்து, வேதியல் சங்கேதக் குறியின் பாகங்களின் பன்முக திருப்புதல்களைக் (repeats) கொண்டிருக்கும் தெற்று ஜீன்கள் என்றழைக்கப்படுபவை உள்ளன. இவற்றில் ஒன்று இயல்பாக CAG மூன்றன் தொகுதியின்—ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தை அடையாளங்காட்டுகிற மூன்று நியூக்ளியோடைடுகள் வரிசையின்—11 மற்றும் 34-க்கு இடைப்பட்ட திருப்புதல்களைக் கொண்டிருக்கின்றன. அது 37 அல்லது அதற்கும் அதிகமான திருப்புதல்களைக் கொண்டிருக்கையில், அது ஹண்டிங்டன்ஸ் கோரியா என்றழைக்கப்படும் ஒரு மூளைக் கோளாற்றை ஏற்படுத்துகிறது.
ஒரு ஜீனில் ஒரு எழுத்தின் மாற்றத்தினுடைய பாதிப்பைக்கூட சிந்தித்துப்பாருங்கள். இரத்த அணுக்களிலுள்ள இரண்டு பகுதிப்பொருட்களில் ஒன்றினுடைய 146-எழுத்து வரிசையில் ஒரு தவறான எழுத்து சிக்கில்-செல் அனீமியாவை உண்டுபண்ணுகிறது. அப்படியிருந்தாலும், செல் பிரிதலின் போது டி.என்.ஏ.-வை பாதுகாக்கும் வகையில் திருத்தம் செய்யும் ஒரு ஏற்பாட்டை உடல் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பில் ஒரு பிழை பெருங்குடல் புற்றுநோயை உண்டுபண்ணக்கூடும். வெறுமனே ஒரே ஒரு மரபு சார்ந்த பிழையின் விளைவாக இல்லாவிட்டாலும் சர்க்கரை வியாதி மற்றும் இருதய நோய்கள் போன்ற மற்ற அநேக வியாதிகள் பிழையுள்ள அநேக ஜீன்களின் ஒருங்கிணைந்த செயலினால்தானே ஏற்படுகின்றன.
ஜீனோமை திரும்ப எழுதுதல்
மருத்துவர்கள் மனிதரின் நோய்களைக் கண்டுபிடித்து சிகிச்சையளிப்பதற்கு உதவக்கூடிய தகவலுக்காக மனித ஜீனோம் திட்டத்தை நோக்கியிருக்கின்றனர். ஏற்கெனவே ஒருசில ஜீன் வரிசையில் குறைகளை வெளிப்படுத்தும் பரிசோதனைகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்கள் மரபியல் பரிசோதனைகளை மனிதவின மேம்பாட்டுக் கொள்கைகளை நிறைவேற்ற பயன்படுத்தக்கூடும் என்பதாக சிலர் கவலைப்படுகின்றனர். தற்போது விந்துவிலும் முட்டை செல்களிலும் ஜீன்களை மாற்றி அமைப்பதை உட்படுத்தும் கருநிலை வரிசை சிகிச்சை முறையை அநேகர் எதிர்க்கின்றனர். மரபு ரீதியில் இயல்பாக இருக்கும் முட்டைக்கருவை உடலுக்கு வெளியே கருத்தரிக்கச்செய்ய நினைக்கும் தம்பதிகளும்கூட திரும்ப பதிய வைக்கப்படுவதற்கு தெரிந்துகொள்ளப்படாத முட்டைக்கருக்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய தீர்மானங்களை எதிர்ப்பட வேண்டும். மேலுமாக, நோய் அறுதியிடல் மரபு சார்ந்த குறை இருப்பதை வெளிப்படுத்துகையில் இன்னும் பிறவாத ஒரு குழந்தைக்கு ஏற்படக்கூடிய பின்விளைவுகளைக் குறித்து சிந்திக்கும் ஆட்கள் கவலை தெரிவிக்கின்றனர். வயது வந்தவர்களுடைய மரபு வரைபடம் அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் விதத்தை, வேலை உயர்வு அளிக்கப்படுவதை, காப்பீடு அளிக்கப்படுவதையும்கூட மாற்றிவிடும் என்ற பயம் அநேகரை கவலைக்குள்ளாக்குகிறது. பின்னர் மரபு பொறியியல் பற்றிய சோர்வு தரும் கேள்வி இருக்கிறது.
“வாழ்க்கைப் புத்தகத்தை வாசிப்பதோடு திருப்தியடையாமல், அவர்கள் அதில் எழுதவும்கூட விரும்புகின்றனர்,” என்பதாக தி எக்கானமிஸ்ட் குறிப்பிடுகிறது. மருத்துவர்கள் இதைச் செய்வதற்கு ஒரு வழி எதிர்நச்சுக்கிருமிகளைப் பயன்படுத்துவதன் மூலமாகும். ஒரு வேதியியல் பையிலுள்ள ஜீன்களின் தொகுப்பாக ஒரு வைரஸ் கருதப்படலாம். மனிதர்களைப் பாதிக்கும் நச்சுக்கிருமியிலிருந்து தொடங்கி, அறிவியல் அறிஞர்கள் நச்சுக்கிருமி தன்னைப் பெருக்கிக்கொள்வதற்குத் தேவைப்படும் ஜீன்களை நீக்கி நோயாளியின் குறையுடைய ஜீன்களுக்குப் பதிலாக சரியான ஜீன்களைப் பொருத்துகிறார்கள். உடலுக்குள் செலுத்தப்பட்டுவிட்டால், நச்சுக்கிருமி உள்ளே புகுந்து செயல்படவேண்டிய செல்லின் மீது செயல்பட்டு குறையுள்ள ஜீன்களுக்குப் பதிலாக அது தாங்கிச் செல்லும் ஆரோக்கியமான ஜீன்களைப் பொருத்திவிடுகின்றன.
தோல் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பளிக்கக்கூடிய ஒரு ஜீனைக் கண்டுபிடித்ததன் அடிப்படையில், அறிவியல் அறிஞர்கள் அண்மையில் எளிய ஒரு சிகிச்சையை அறிவிப்பு செய்தனர். 20 பேரில் ஒருவர் மாத்திரமே இந்த ஜீனைத் தாங்கிச்செல்வதால், இந்த ஜீனை தோல் செல்லுக்குள் புகுத்தும் ஒரு களிம்பில் அதைக் கலந்துவிடுவது இலக்காகும். அங்கே அந்த ஜீன் உடலைத் தாக்கும் புற்று நோயை உண்டுபண்ணும் நச்சுப்பொருட்களைச் சிதைத்துவிடும் என்பதாக மருத்துவர்கள் கருதும் ஒரு என்ஸைமின் உற்பத்தியைத் தூண்டிவிடுகிறது.
இந்தச் செயல்முறைகள் எத்தனை அதிசயமாக இருப்பினும், அதனுடைய சாத்தியமான பின்விளைவுகளைக் குறித்த பொது மக்களின் கவலைகளுக்கு எதிராக அறிவியல் அறிஞர்கள் போராடுகையில் கண்டிப்பான கட்டுப்பாடுகள் மரபுப் பொறியியலின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதாக உள்ளன.
மனித ஜீனோமின் கடுஞ்சிக்கல் வாய்ந்தத் தன்மைகளைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு இன்னும் அதிகம் உண்டு. ஆம், “தனியொரு மனித ஜீனோம் என்று ஒன்று இல்லை,” என்பதாக மரபியல் வல்லுநர் கிறிஸ்டோபர் வில்ஸ் குறிப்பிடுகிறார். “ஐநூறு கோடி ஜீனோம்கள் உள்ளன, உண்மையில் கோளத்திலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஒன்று.” உங்கள் ஜீனோம் உங்களைப் பற்றி அதிகத்தைச் சொல்கிறது. ஆனால் அது எல்லாவற்றையும் சொல்கிறதா?
உங்கள் ஜீனோம் எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறதா?
ஜீன்கள் நாம் நடந்துகொள்ளும் விதமாக நம்மை நடந்துகொள்ளச் செய்யும் சிறிய சர்வாதிகாரிகள் என்பதாக சிலர் நம்புகின்றனர். உண்மையில், மூளைக்கோளாறு, குடிப்பழக்கம், ஒத்த பாலின புணர்ச்சி ஆகியவற்றுக்குக் காரணமாயிருக்கும் ஜீன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அண்மைக் காலங்களில் செய்தித்துறை அறிவித்திருக்கிறது. அநேக அறிவியல் அறிஞர்கள் இந்தச் சாத்தியமான பிணைப்புகளைக் குறித்து எச்சரிக்கின்றனர். உதாரணமாக, ஆசிரியர் கிறிஸ்டோபர் வில்ஸ், சிலருடைய விஷயத்தில் வேறுபட்ட வடிவமுள்ள ஜீன்கள் “தங்களை தாங்கியவர்களைக் குடிப்பழக்கத்திற்கு எளிதில் ஆளாக்கிவிடுகின்றன,” என்பதாக எழுதுகிறார். லண்டனின் தி டைம்ஸ்-ன்படி, அணுமூலக்கூறு மரபியல் நிபுணர் டீன் ஹேமர், மனித பாலின இயல்பு ஒரே ஒரு ஜீனினால் நிர்ணயிக்கப்படுவதற்கு மிக அதிக சிக்கல்வாய்ந்த ஒன்று என்ற கருத்தை வெளியிட்டார். ஆம், 1994 பிரிட்டானிக்கா புக் ஆஃப் தி இயர் அறிவிப்பதாவது: “திட்டவட்டமான எந்த ஒரு ஜீனும் ஒத்த பாலின புணர்ச்சிக்கு எளிதில் ஆளாக்குவதாக அறியப்பட்டில்லை, என்றபோதிலும், இதுவரையாக செய்யப்பட்டுள்ள பணி மற்றவர்களால் உறுதிசெய்யப்பட வேண்டும்.” மேலுமாக, சையன்டிபிக் அமெரிக்கன் பத்திரிகை குறிப்பிடுகிறது: “நடத்தைக்குரிய பண்புகளை வரையறை செய்வது அசாதாரணமாக கடினமானது, உண்மையில் மரபு அடிப்படை என்பதாகச் சொல்லப்படும் ஒவ்வொன்றையும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதாகவும்கூட விளக்கமுடியும்.”
அக்கறையூட்டும் விதமாக, கிராக்கிங் தி கோட் என்ற BBC-யில் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் மரபியல் வல்லுநர் டாக்டர் டேவிட் சுசுக்கி, “நம்முடைய தனிப்பட்ட சூழ்நிலைமைகள், மதம், பாலினம்கூட ஜீன்கள் நம்மை பாதிக்கும் விதத்தை மாற்றக்கூடும். . . . ஜீன்கள் நம்மை பாதிக்கும் விதம் நம்முடைய சூழ்நிலைமைகளைச் சார்ந்துள்ளது,” என்ற கருத்தை வெளியிட்டார். இதன் காரணமாக, அவர் எச்சரிக்கிறார்: “அறிவியல் அறிஞர்கள் குடிப்பழக்கம், அல்லது குற்ற இயல்பு அல்லது புத்திக்கூர்மை, அல்லது வேறு எதுவாக இருப்பினும் அதற்கு காரணமான ஜீன்களைக் கண்டுபிடித்துவிட்டதாக செய்தித்தாள்களில் நீங்கள் வாசித்தால், அதை முற்றிலும் சரியானது என்பதாக நம்பிவிடாதீர்கள். குறிப்பிட்ட ஒரு ஜீன் எவரோ ஒருவரை எவ்விதமாக பாதிக்கிறது என்பதைச் சொல்வதற்கு அறிவியல் அறிஞர்கள் அந்த நபரின் சுற்றுச்சூழலைப் பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும், அதுவும்கூட போதுமானதாக இராது.”
நிச்சயமாகவே இல்லை, ஏனென்றால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை மற்றொரு காரணி பாதிக்கக்கூடும். இது என்ன என்பதையும் அது எவ்விதமாக உங்களுடைய நன்மைக்காக பாதிக்கக்கூடும் என்பதையும் அடுத்தக் கட்டுரை சிந்திக்கிறது.
[பக்கம் 6, 7-ன் பெட்டி/வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உங்கள் உருவப்படிவம்
● உங்கள் உடல் சுமார் 100 லட்ச கோடி செல்களால் ஆனது, அவற்றில் பெரும்பாலானவை உங்களின் முழு உருவப்படிவத்தையும் கொண்டிருக்கின்றன. (என்றாலும், உங்களுடைய இரத்த சிவப்பணுக்களுக்கு உட்கருவும் உருவப்படிவமும் இல்லை.)
● உங்கள் செல்கள் சிக்கலான கட்டடங்களாக, தொழிற்சாலைகளையும், ஆற்றலை சேமித்து வைக்கும் கிடங்குகளையும் உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்கும் திட்டவட்டமான பாதைகளையும் கொண்ட நகரங்களைப் போன்றிருக்கின்றன. உத்தரவுகள் செல்லின் உட்கருவில் பிறப்பிக்கப்படுகின்றன.
● உங்களுடைய செல்லின் உட்கரு, உங்கள் உருவப்படிவத்தின் வீடாக இருக்கிறது. உள்ளூர் அரசாங்க அதிகாரக் குழு பொதுவாக அந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் வரைபடங்களை வைத்திருக்கும் ஒரு நிர்வாக அலுவலகத்துக்கு அதை ஒப்பிடலாம். அவற்றைக் கட்டுவதற்கு ஒருவர் பொருட்களை ஆர்டர்செய்து, வேலைக்குத் தேவையான கருவிகளையும் உபகரணங்களையும் ஏற்பாடு செய்து கட்டுபவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
● உங்கள் குரோமசோம்கள் உங்கள் உருவப்படிவத்தை விவரமாக விளக்குகின்றன. நெருக்கமாக சுருண்டு சுருண்டு காணப்படும் 23 ஜோடி டி.என்.ஏ. மூலக்கூறுகள், அவிழ்க்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டால், அது சுமார் 8,000 தடவைகள் சந்திரன் வரையில் சென்று வரும்!
● உங்கள் டி.என்.ஏ. அடித்தளங்கள் என்றழைக்கப்படும் ஜோடி வேதிப் பொருட்களால் இணைக்கப்படும் பக்கங்களைக் கொண்டிருக்கின்றன, இவை ஒரு ஏணியின் குறுக்குச் சட்டத்தைப் போல, ஆனால் சுருளாக முறுக்கப்பட்ட ஒரு ஏணியைப் போல இருக்கின்றன. அடித்தளமான அடினைன் (A) எப்பொழுதும் தைமின் (T), சைட்டோஸின் (C) குவானின் (G) உடன் சேர்ந்திருக்கிறது. ஒரு ஜிப்பைத் திறப்பது போல ஏணி போன்ற டி.என்.ஏ.-வை பிளந்தால், நீங்கள் அந்த நான்கு எழுத்துக்களாகிய A, C, G, T விவரிக்கப்பட்டிருக்கும் மரபு சங்கேதக் குறிகளை வெளிப்படுத்துகிறீர்கள்.
● உங்கள் ரிபோசோம்கள், நடமாடும் தொழிற்சாலைகளைப் போன்று ஆர்.என்.ஏ.-வின் (ரிபோ நியூக்ளிக் அமிலம்) சங்கேதத் தகவல்களை வாசிப்பதற்கு தங்களை தாங்களே இணைத்துக்கொள்கின்றன. அவ்விதமாகச் செய்கையில், அவை அமினோ அமிலங்கள் என்றழைக்கப்படும் பல்வேறு சேர்மானங்களை ஒன்றாகச் சேர்த்து இணைக்கின்றன, இவையே உங்களை “உங்களாக்கும்” புரதத்தை உண்டுபண்ணுகின்றன.
● உங்கள் ஜீன்கள் உடலின் கட்டுமான பொருட்களாகிய புரதத்தை உண்டுபண்ணுவதற்கு மாதிரியை அளிக்கும் டி.என்.ஏ.-வின் பகுதிகள். இந்த ஜீன்கள் ஒருசில நோய்களுக்கு நீங்கள் எளிதில் பாதிக்கப்படுவதைத் தீர்மானிக்கின்றன. உங்கள் ஜீன்களை வாசிப்பதற்கு என்ஸைம்கள் என்றழைக்கப்படும் வேதியல் கருவிகள் டி.என்.ஏ.-வின் ஒரு பகுதியைத் திறந்து காட்டுகின்றன. மற்ற என்ஸைம்கள் பின்னர் ஜீனை “வாசித்துக்”கொண்டு செல்கின்றன, அவ்விதமாக தொடர்ச்சியாக துணை அடித்தளங்களை நொடிக்கு 25 என்ற வேகத்தில் உண்டுபண்ணிக்கொண்டே செல்கின்றன.
[பக்கம் 8-ன் பெட்டி]
மரபு பக்கத்தோற்ற வடிவம்
மனித திசுவிலிருந்து சிறிய அளவான டி.என்.ஏ.-வை எடுத்து அதை துண்டுகளாக உடைக்கவும். துண்டுகளை ஒரு அரைத் திண்மக் கரைசலில் செருகி, அதனூடாக மின்சாரத்தைக் கடத்தி, கிடைக்கும் புள்ளிகளை மெல்லிய நைலான் சவ்வில் ஊறவைக்கவும். கதிரியக்க ஜீன் கருவியை சேர்த்து புகைப்படம் எடுக்கவும். விளைவு ஒரு டி.என்.ஏ. “கைநாட்டாகும்.”