மணல்மீது நடப்பது—மேம்பட்ட ஆரோக்கியத்துக்குள் நடப்பது
ஹவாயிலுள்ள “விழித்தெழு!” நிருபர்
சுறுசுறுப்பாக நடப்பது மிகச் சிறந்த உடற்பயிற்சியில் ஒன்று என்பதாக அழைக்கப்பட்டிருக்கிறது. மற்ற நன்மைகளோடுகூட, சுறுசுறுப்பாக நடப்பது இடது பக்க இருதயத்திலிருந்து ஒரு நிமிடத்தில் வெளியேறும் இரத்தத்தின் அளவினை அதிகரிக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இரத்த ஓட்டத்தையும் சருமத்தின் உறுதியையும் மேம்படுத்துகிறது, எலும்புகளையும் தசைகளையும் பலப்படுத்துகிறது என்பதாக சொல்லப்படுகிறது.
என்றபோதிலும், சுறுசுறுப்பாக நடப்பதை முயற்சிசெய்திருக்கும் எவரும் அறிந்திருக்கிறபடி, சுறுசுறுப்பாக நடப்பது பாதத்துக்குத் தீங்குசெய்யக் கூடியதாகவும் இருக்கிறது—தோலின்மேல் தடிப்புகள், கால் ஆணிகள், கொப்புளங்கள் இன்னும் அதிக கவலைக்கிடமான காயங்களும்கூட ஏற்படுகின்றன. அநேகமாக இவை சரியாகப் பொருந்தாத உடற்பயிற்சி காலணிகளை அணிவதன் விளைவாகவே இருக்கின்றன. உங்களுக்கு எப்போதாவது பாதத்தில் புண் இருந்திருந்தால், அது எத்தனை அசெளகரியமாகவும், வேதனையளிப்பதாகவும்கூட இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். உண்மையில், உங்கள் பாதத்தின் நிலை, உங்கள் முழு எலும்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடும்.
ஈருலகங்களின் சிறப்பு அம்சங்கள்
நீங்கள் துன்புறவேண்டிய அவசியமில்லை. “ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் காலணி அணியாத மக்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வுகள், காலணிகளை அணியும் சமுதாயத்தினரைவிட காலணிகளை அணியாதவர்கள் ஆரோக்கியமான பாதங்களையும், குறைவான அங்ககீனங்களையும் உடையவர்களாக சுலபமாக நடமாடுகிறார்கள் என்ற முடிவுக்கு வந்தன,” என்பதாக எலும்புமுறிவு நிபுணர் ஒருவர் அறிவிக்கிறார். ஆகவே வெறுங்காலோடு நடந்து உங்களால் சுறுசுறுப்பாக உடற்பயிற்சி செய்யமுடிந்தால், காலணிகளை அணிவதால் கிடைக்கும் அனுகூலங்களை அனுபவித்துக்கொண்டு அதே சமயத்தில் காலணி அணியாத சமுதாயங்களில் வாழ்பவர்கள் பெறும் நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். உண்மையில், அந்தத் தெரிவைச் செய்வதற்கு அநேக ஆட்களுக்கு வாய்ப்பிருக்கிறது—சுத்தமான கடற்கரையின் உலர்ந்த மணல் அல்லது மணற்குன்றின்மீது நடத்தல்.
“கடற்கரை மணலில் வெறுங்காலோடு, விசேஷமாக மணல் மிதமான சூடாக இருக்கும் போது நடப்பது, தேகத்தைப் பிடித்துவிடும் விளைவைக்கொண்ட ஒரு நல்ல உடற்பயிற்சியாகும்,” என்பதாக மூட்டுவலி உடற்பயிற்சி புத்தகம் (ஆங்கிலம்) சொல்கிறது. “உதிரியான, உலர்ந்த மணலில் நடப்பது பாதம் சமமற்ற மேற்பரப்புக்கு ஏற்றவாறு சரிப்படுத்திக்கொள்ளும்போது பாதத்திலுள்ள ஒவ்வொரு தனி தசைக்கும் பயிற்சியாக அமைகிறது.” அதைத் தவிர, மணல்மீது நடக்கும்போது புல் அல்லது நடைபாதையின்மீது நடப்பதைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு சக்தி செலவாகிறது. உண்மையில், உலர்ந்த மணல்மீது ஓட முயன்றுபாருங்கள், அது தேவைப்படுத்தும் முயற்சியை நீங்கள் விரைவில் கவனிப்பீர்கள்! “நிச்சயமாகவே, கலோரிகளை ‘எரித்துவிடுவதற்காக’ அல்லது உடல் செம்மையை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களில் கடற்கரையோரம் சுறுசுறுப்பாக நடப்பது ஒருவருடைய உடல் சக்தியைக் கூடுதலாக தேவைப்படுத்தும் மிகச் சிறந்த உடற்பயிற்சியை அளிக்கிறது,” என்பதாக உடற்பயிற்சி உடலியல்—சக்தி, ஊட்டம் மற்றும் மனித திறமை என்ற ஆங்கிலப் புத்தகம் முடிக்கிறது.
இவ்விதமாக, மணல்மீது வெறுங்காலில் நடப்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி கிரமத்தின் நன்மைகளை அளிப்பது மட்டுமல்லாமல் பாதத்திலும் கால் கணுக்களிலும் தேய்மானத்தைக் குறைக்கிறது. இலேசான மூட்டுவலி உள்ளவர்களுக்கு பயிற்சியினால் வரும் வலியை இது குறைக்கிறது.
ஓர் எச்சரிக்கை
என்றபோதிலும், அருகிலுள்ள கடற்கரை அல்லது மணற்குன்றுக்கு நீங்கள் விரைந்தோடுவதற்கு முன்பாக, இந்த எச்சரிப்பு குறிப்புகளை நினைவில் வைக்கவும். நீங்கள் வெறுங்காலில் நடக்கும் அந்த மணல் சுத்தமாயும் எந்தக் கூர்மையான பொருட்களையும் கொண்டில்லாமலும் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளவும். சர்க்கரை வியாதி அல்லது இருதயக் கோளாறு போன்ற கவலைக்கிடமான உடல் நல பிரச்சினைகள் உங்களுக்கு ஏதாவது இருக்குமானால், புதிய வகையான எந்த ஒரு உடற்பயிற்சியையும் மேற்கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவருடன் கலந்துபேச வேண்டும். எந்த ஒரு உடற்பயிற்சி திட்டத்திலும் இருப்பது போலவே, மணல்மீது நடப்பதை மெதுவான அல்லது மிதமான வேகத்தில் ஆரம்பித்து, வாரங்கள் செல்லச் செல்ல உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள். இது உங்களுக்கு அதிக பாதுகாப்பான மற்றும் அதிக மகிழ்ச்சியான கிரமமாக செய்யும் உடற்பயிற்சிக்கு உங்களை வழிநடத்தக்கூடும்.
மணலில் வெறுங்காலோடு நடப்பது வேடிக்கையைவிட அதிகத்தைக் குறிக்கிறது; அது உங்களுக்கும் உங்களுடைய பாதங்களின் நல்லாரோக்கியத்திற்கும் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கிறது. கடற்கரையில் அல்லது ஆழமற்ற தண்ணீரில் நீங்கள் மற்ற பொருட்களையும்கூட—சங்குகள், சிறிய மீன்கள், சிறிய நண்டுகள், எல்லா வகையான பறவைகளையும் பூச்சிகளையும் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்புண்டு. ஆகவே உங்கள் உணர்வுகளை விழிப்பாய் வைத்துக்கொண்டு உங்கள் நடையை அனுபவித்து மகிழுங்கள்!