உங்கள் உணவு எவ்வளவு ஊட்டச்சத்துள்ளது?
பிரேஸிலில் உள்ள “விழித்தெழு!” நிருபர்
உங்கள் உணவை நீங்கள் எவ்வாறு தெரிவு செய்கிறீர்கள்? உணவை வாங்கும்போது, என்ன காரணிகள் உங்கள்மீது செல்வாக்கு செலுத்துகின்றன? புதுமையான மேலுறையா? விலையா? எளிமையாக தயாரிக்கமுடிவதா? விளம்பரங்களில் தூண்டுவிக்கும்வகையில் வற்புறுத்திக் கூறப்படுபவையா? அல்லது வெறுமனே உணவின் தோற்றங்களும் சுவைகளுமா? சரியான தெரிவைச் செய்வது நீங்கள் சாப்பிடுவது ஊட்டச்சத்துள்ள உணவையா அல்லது கலோரிகள் உயர்வாயும் ஊட்டச்சத்துக் குறைவாயுமுள்ள உணவையா, உங்கள் ஆரோக்கியம் மேம்படுமா அல்லது கெடுக்கப்படுமா என்பதைத் தீர்மானிக்கக்கூடும்.
ஊட்டச்சத்துக் குறைவுக்கு முக்கிய காரணம் வறுமையே. அநேகருக்கு ஏராளமான உணவைக் கொண்டிருப்பது சாதாரணமான அனுபவமாக இருக்கையில், லட்சக்கணக்கான மற்றவர்கள் அபூர்வமாகவே ஊட்டச்சத்துள்ள சாப்பாட்டை அனுபவித்துக் களிக்கிறார்கள். “இங்கே இந்நாட்டில் நாங்கள் எங்களுக்கு கிடைக்கும் எதையும் சாப்பிடுகிறோம்” என்பதாக, ஆறு பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கும் பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ஒரு கொத்தனார் சொன்னார். பொதுவாக அது பழைய ரொட்டி, தண்ணீராக இருக்கும் காப்பி அல்லது அரிசியும் மொச்சை வகைகளுமாக இருக்கிறது. உண்மையில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினுடைய ஒரு அறிக்கையின்படி, உலக மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் பசியினால் வாடுகிறார்கள். ஒருசில ஆப்பிரிக்கத் தேசங்களில் பஞ்சம் பரவலாக இருந்தபோதிலும், ஆசியாவில் பேரளவான எண்ணிக்கையில் ஆட்கள் பசியாயிருக்கின்றனர். ஐக்கிய மாகாணங்களில்கூட, மக்கள் தொகையில் 12 சதவீதத்தினருக்கு அல்லது மூன்று கோடி ஆட்களுக்கு, சாப்பிடுவதற்கு போதிய அளவு இல்லை என்பதாக சொல்லப்படுகிறது.
போதுமான ஊட்டச்சத்தின்மை தீங்கிழைப்பது மட்டுமல்லாமல் அது கொல்லவும்கூடும். “குழந்தைகளுக்கு மோசமான போஷாக்குப் பழக்கங்களினால் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைவு உண்மையான பஞ்சத்தினால் கொல்லப்படுகிறவர்களைவிட 10 மடங்கு அதிகமானவர்களைக் கொன்றுவிடுகிறது,” என்பதாக ஆய்வாளர் வில்லியம் சாண்ட்லர் குறிப்பிடுகிறார். “வயிற்றுப்போக்கு நீரிழப்போடு சேர்ந்து ஊட்டச்சத்துக் குறைவு உலகில் மரணத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.” யுனசெஃப் (உலகநாடுகள் குழந்தை நல நிறுவனம்) இவ்வாறு அறிக்கை செய்கிறது: “எந்தக் கொள்ளைநோயும், எந்த வெள்ளமும், எந்த நிலநடுக்கமும் அல்லது போரும் ஒரே வாரத்தில் 2,50,000 பிள்ளைகளின் உயிரை பறித்துக்கொண்டது கிடையாது.” ஆனால் அது, அந்த ஐநா ஏஜென்ஸியின் பிரகாரம் ஊட்டச்சத்துக் குறைவினாலும் அதன் விளைவாக ஏற்படும் நோயினாலும் உலகம் முழுவதும் மாண்டுபோகும் பிள்ளைகளின் எண்ணிக்கையாக உள்ளது. உண்மையில், ஊட்டச்சத்துக் குறைவினால் உண்டாகும் சேதத்தை மதிப்பிட்டு அறியமுடியாது: கற்றுக்கொள்ளும் திறமை குறைவுபடுகிறது, உழைப்பாளர் சக்தி வலுவிழக்கிறது, உற்பத்தி திறனும் தரமும் நலிவுறுகிறது.
என்றபோதிலும், சரியான உணவைப் போதுமான அளவு உட்கொள்வதால் தேவைக்குக் குறைவான ஊட்டச்சத்தையும் இரத்த சோகை, மற்றும் வேறு பிணிகள் போன்ற பக்க பாதிப்புகளையும் மேற்கொள்ள முடியும். பள்ளி மதிய உணவு, சத்துணவு போன்ற அரசாங்க உதவி சில சமயங்களில் ஊட்டச்சத்துக் குறைவைத் தணிக்க உதவினாலும் யுனசெஃப் அதிகாரிகளின் பிரகாரம், வயிற்றுப்போக்கு, கபவாதம் மற்றும் சின்னம்மையினால் பிள்ளைகளுக்கு ஏற்படும் மரணத்தைக் குறைப்பதற்கு ஆண்டுக்கு 2,500 கோடி டாலர் பணம் தேவைப்படுகிறது. ‘அது அதிகமான பணம்,’ என்பதாக சிலர் சொல்லக்கூடும். ஆனால் அது அமெரிக்கர்கள் விளையாட்டு காலணிகளுக்கும் ஐரோப்பியர்கள் மதுபானத்துக்கும் ஒரு வருடத்துக்குச் செலவழிக்கும் பணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மற்றொரு கடினமான பணி வீண்செலவைக் குறைப்பதாகும். 3.2 கோடி பிரேஸில் நாட்டவர் பசியால் வாடிக்கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கையில், “அறுவடைக்குப் பின்பு சரக்கை ஏற்றிச்செல்கையில் அல்லது சேமித்து வைக்கையில், தேசத்தின் வேளாண்மை உற்பத்தியில் 18-லிருந்து 20 சதவீதம் [150 கோடி டாலர் மதிப்புள்ளவற்றிற்கு] நஷ்டம் ஏற்படுவதாக பிரேஸில் நாட்டு வேளாண்மைத் துறை அறிவிப்பு செய்கிறது.” வேளாண்மை, நீர்ப்பாசனம், உணவு சேமிப்பு, போக்குவரத்து ஆகியவற்றில் பெரிய பிரச்சினைகள் இருந்தபோதிலும், பூமி இன்னும் அனைவருக்கும் அபரிமிதமாக உணவளிக்க முடியும். ஆகவே உங்கள் குடும்பத்துக்கு உணவளிக்கும் சவாலை நீங்கள் எவ்வாறு எதிர்ப்படலாம்?
பணம் மட்டும் போதாது
வளரும் தேசங்களில் மக்கள் இரண்டு அல்லது மூன்று வேலைகளைக் கொண்டிருப்பதன் மூலம் தங்கள் குடும்பத்துக்கு உணவளிப்பதை அடிக்கடி சமாளித்துவிடுகிறார்கள். பிரேஸில் நாட்டில், ஆண்டுதோறும் 15 லட்சம் மக்கள் வேலையையும் உணவையும் தேடிக்கொண்டு குடும்பத்தை அல்லது நண்பர்களைவிட்டு பெரிய நகரங்களுக்கு இடம் மாறிச் செல்கின்றனர். ஓரளவுக்கு உடல் ஆரோக்கியம் மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதையே பொருத்ததாக இருந்தபோதிலும், அவர்களுடைய வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் பகுதி உடை, வசிப்பிடம் மற்றும் போக்குவரத்துக்குமே செலவிடப்படுகிறது.
அரிசி, மொச்சை, சோளம், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழைப்பழம் போன்ற சாதாரண உணவுப் பொருட்களிலிருந்தும் கொஞ்சம் மாம்சம் மற்றும் மீன் உணவுகளைச் சேர்ப்பதாலும் உலகம் முழுவதிலுமுள்ள குடும்பங்களுக்கு முக்கியமாக ஊட்டச்சத்து கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருக்கிறது. பிரேஸில் நாட்டு சத்துணவு நிபுணர் ஷ்யூஸ் இடுவார்டூ டி ஓலிவேரர் டூட்ரா இவ்விதமாகச் சொன்னார்: “மொச்சையும் அரிசியும் சேர்ந்து உயர்ந்த ஊட்டச்சத்தை அளிக்கிறது. எளிமையான, மலிவான உணவுத்திட்டத்தினால் [தேசத்தில்] பஞ்சத்தை முடிவுக்குக் கொண்டுவருவது சாத்தியமே.” ஆம், நீங்கள் வாழும் இடத்தில் மலிவான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கக்கூடும். அல்லது நீங்களே உங்கள் உணவுப்பொருட்களில் சிலவற்றை பயிர்செய்யக்கூடும்.
போதுமான பணம் உங்களுக்கு இருந்தாலும், உங்கள் குடும்பத்துக்கு ஊட்டச்சத்துள்ள உணவுக்காக அதை நீங்கள் செலவழிக்கிறீர்களா? அல்லது தந்திரமான மற்றும் இடைவிடாத விளம்பரங்களின் செல்வாக்கினால், இனிப்பு பண்டங்களையும் கலோரிகள் உயர்வாயும் ஊட்டச்சத்துக் குறைவாயுமுள்ள உணவையும் விரும்பி புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்களுக்கான தேவையை நீங்கள் அசட்டை செய்துவிடுகிறீர்களா? ஆரோக்கியத்தைவிட சுவை அதிக கவர்ச்சியாக இருக்கிறதா? தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “நல்ல ஆரோக்கியத்தை முயன்று பெற்று காத்துக்கொள்வதற்கு, மக்கள் மனித உடலைப்பற்றியும் அது எவ்வாறு வேலைசெய்கிறது என்பதைப்பற்றியும் அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதானே எது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் அல்லது உதவாது, தீங்கிழைக்கும் அல்லது தீங்கிழைக்காது என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கற்பது ஒவ்வொரு நபரின் கல்வியின் பாகமாக இருக்கவேண்டும்.”
உண்மைதான், நாம் வெறுமனே உண்பதற்காகவே வாழ்வதில்லை, ஆனால் உணவு நம்முடைய வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பாகமாக இருக்கிறது. பைபிள் நன்றாக சாப்பிடுவதை ஊக்கமான வேலைக்குக் கிடைக்கும் வெகுமதியாக பேசுகிறது. அது இவ்வாறு சொல்கிறது: “மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.” (பிரசங்கி 3:13) ஆரோக்கியமான உணவை மதிப்புள்ளதாகவும் அவசியமுள்ளதாகவும் நீங்கள் கருதுகிறீர்களா? அப்படியானால், சரியான ஊட்டச்சத்துணவு எவ்விதமாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பிரயோஜனமாயிருக்கும் என்பதன்பேரில் பின்வரும் கட்டுரையை தயவுசெய்து ஆராய்ந்து பாருங்கள்.