உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 2/22 பக். 23-27
  • ரஷ்யாவிற்கு—மறுவிஜயம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ரஷ்யாவிற்கு—மறுவிஜயம்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எங்கள் மனங்களில் ரஷ்யா
  • அன்பான ரஷ்ய குடும்பம்
  • பைபிளில் நன்கு வேரூன்றியிருத்தல்
  • பூர்வ கிறிஸ்தவத்தோடு ஒத்திருப்பது
  • வளர்ச்சியின் வேகத்திற்கிணங்க இருக்க போராடுவது
  • மத சுதந்திரம் ரஷ்யருக்கு பொக்கிஷம்!
    விழித்தெழு!—2000
  • மாஸ்கோ—நிலைத்திருக்கும் ஒரு நகரம் அதன் 850-வது ஆண்டுவிழா
    விழித்தெழு!—1997
  • இழுத்தடித்த வழக்கும் இனிய வெற்றியும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—ரஷ்யாவில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 2/22 பக். 23-27

ரஷ்யாவிற்கு—மறுவிஜயம்

முன்னாளைய சோவியத் யூனியனில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றங்களில் ஒன்று மதத்தைப் பற்றி பேசுவதற்கான சுதந்திரமாகும். அநேக ரஷ்யர்கள் பைபிள் போதனைகளை ஆராய அந்தச் சுயாதீனத்தைப் பயன்படுத்தி இருக்கின்றனர். முடிவில், அதன் விளைவு நவீன நாளைய அற்புதமாக விளங்கியிருக்கிறது.

ஜூலை 28, 1993 அன்று, நியூ யார்க் டைம்ஸ்-ன் காலை இதழுடைய முதல் பக்கத்தில், மாஸ்கோவில் எடுக்கப்பட்ட மாபெரும் முழுக்காட்டுதல் படத்தைப் பார்த்தபோது எனக்கு என்னே ஓர் ஆச்சரியம்! அதன் தலைப்பு இவ்வாறு இருந்தது: “ரஷ்யாவில் ஏற்பட்ட மதச் சுயாதீனமானது மாஸ்கோவின் லாகாமாடிஃப் ஸ்டேடியத்திற்குள் யெகோவாவின் சாட்சிகளாக மதமாறிய ஆட்களை மாபெரும் முழுக்காட்டுதலுக்குக் கொண்டுவந்தது.”

நானும் என் மனைவியும் ரஷ்யாவிலிருந்து நேற்றுத்தான் திரும்பினோம். 1,489 பேரடங்கிய அந்த முழுக்காட்டுதலுக்கு நாங்கள் ஆஜராயிருந்தோம். ரஷ்யர்கள் காட்டிய கிறிஸ்தவ அன்பும் ஆவிக்குரிய காரியங்களில் அவர்களுக்கிருந்த அக்கறையும் எங்களை உண்மையில் கவர்ந்திழுத்தது. ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் நடைபெற்ற மாநாட்டின் முடிவு நிகழ்ச்சியையடுத்து, எங்களுக்குக் கிடைத்த அனுபவம் இதை விளக்கிக் காட்டுகிறது.

எங்களுடைய ஹோட்டலுக்கு மெட்ரோவில் திரும்பி வந்துகொண்டிருக்கையில், 18, 19 வயதாயிருந்த ஓர் இளம் மனிதனுக்குப் பக்கத்தில் நான் உட்கார்ந்தேன். ரஷ்ய மொழியில் மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?a என்ற பைபிள் துண்டுப்பிரதியை அவர் கையில் கொடுத்தேன். நோட்டமிட்ட பிறகு, தன் அம்மாவிடம் அவர் அதைக் கொடுத்தார். ஆகையால் இன்னொரு துண்டுப்பிரதியை அந்த இளைஞனிடம் கொடுத்தேன். அப்போது அவர், “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்ற ஆரம்பக் கேள்வியைச் சுட்டிக்காட்டி, சந்தேகக் குரலில் “நீங்கள் இதை நம்புகிறீர்களா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.—யோபு 14:14, ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு.

அவர் பக்கமாகத் திரும்பி, நேராக அவரைப் பார்த்தபடி, திட நம்பிக்கையோடு, “உண்மையில் நான் அதை நம்புகிறேன்!” என்று பதிலளித்தேன். அடுத்து இவ்வாறு உடனடியாக சொன்னேன்: “இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். புத்திக்கூர்மையுள்ள, யோசிக்கும் மக்களாக நம்முடைய உயிர்த்தானே ஓர் அற்புதமாக இருக்கிறது. மனிதர்களாக நாம் வளருவதைக் கட்டுப்படுத்திய சட்டங்களுக்கு, யாரோவொரு உன்னத நபர் உத்தரவாதமுள்ளவராக இருக்கவேண்டும். ஆகவே நான் என்ன நம்புகிறேனென்றால் இந்த உன்னதர் செத்த ஒரு நபரை மீண்டும் வாழ மறுபடைப்பு செய்யவும் முடியும்.”

உடனடியாக அந்த இளைஞர், கொடுத்த துண்டுப்பிரதியை வாசிக்கத் துவங்கினார். அவர் வாசித்து முடித்த பிறகு, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?* என்ற சிற்றேட்டை ரஷ்ய மொழியில் அவரிடம் கொடுத்தேன். அவர் மேலுமாகக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார், நாங்களோ அடுத்த சுரங்கவழி நிறுத்தத்தில் இறங்கவேண்டியதாயிருந்தது. அந்த இளைஞனும் அவருடைய அம்மாவும் அவ்விரவு டிரெய்னைப் பிடிக்க வேண்டியிருந்தாலும், இன்னும் ஒருசில நிமிடங்கள் பேசுவதற்காக அவர்கள் அந்தச் சுரங்கவழி நிறுத்தத்தில் எங்களோடே இறங்கினர். எங்களுடைய பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி ரத்தினச்சுருக்கமாகக் கூறின பிறகு, அதிக தகவல் வேண்டி அவர் அந்தச் சிற்றேட்டிற்குப் பின்னாலிருக்கும் முகவரிக்கு எழுதலாம் என்பதைக் காட்டினேன்.

அடுத்த நாளே நாங்கள் ரஷ்யாவிலிருந்து புறப்பட்டோம். ஆனால் இத்தகைய சந்திப்புகள் ஆழமான பதிவை உண்டாக்கின.

எங்கள் மனங்களில் ரஷ்யா

நானோ முன்னாளைய சோவியத் யூனியனில், மார்ச் 1991-ல் யெகோவாவின் சாட்சிகள்மீதான தடையுத்தரவு கடைசியாக நீக்கப்பட்ட பிறகு, முழுக்காட்டுதல் பெற்ற புதிய ஆட்களடங்கிய ஆச்சரியகரமான எண்ணிக்கையைப் பற்றி சிந்தனை செய்துகொண்டிருந்தேன். சீக்கிரத்தில், 1991 கோடைக்கு, ஏழு மாநாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டன, 7,820 பேர் தண்ணீரில் முழுக்காட்டப்பட்டனர். பிறகு, 1993 கோடை மாநாடுகளில்—மாஸ்கோவில் நாங்கள் ஆஜரான மாநாடும் உட்பட—11,238 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர்.

ரஷ்யாவிலிருந்த சாட்சிகளின் சுவிசேஷ ஆர்வத்தை ரஷ்ய மக்களில் பெரும்பான்மையர் கவனிக்காமல் இல்லை. பைபிள் போதனைகளுக்கு ரஷ்யர்கள் பிரதிபலித்ததைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், அது அற்புதமாகத் தெரிகிறது.

‘அத்தகைய வேகமான வளர்ச்சி எவ்வாறு கூடியதாயிற்று?’ என்று நாங்கள் யோசித்தோம். ‘கிறிஸ்தவ போதனைகளில் இந்த ரஷ்யர்கள் எவ்வளவு வேரூன்றியவர்களாக இருந்தனர்?’

மறுபடியும் ரஷ்யாவை நாங்கள் விஜயஞ்செய்தால், தங்குவதற்கான ஏற்பாடுகளை எங்களுக்குச் செய்துகொடுப்பதாக ஒரு மாஸ்கோ தம்பதியினர் சொன்னதால், நாங்கள் அங்குச் செல்வதற்கான திட்டந்தீட்டத் துவங்கினோம். பைபிள் சத்தியங்களில் ரஷ்யர்களுக்கிருந்த அசாதாரணமான அக்கறையைப் பற்றிய கூடுதலான அறிக்கைகளைப் பெற்றதும் அப்பயணத்திற்கான எங்களுடைய எதிர்பார்ப்பு மலர்ந்தது.

அன்பான ரஷ்ய குடும்பம்

மாஸ்கோவில் நாங்கள் தங்கவிருந்த இடத்திற்கு, ஜூலை 24 அன்று சூட்கேஸ்களோடு சென்றடைந்தோம்—எங்களுடைய நண்பர்கள் இருக்கும் அப்பார்ட்மென்ட் கட்டிடத்திலிருந்து சுமார் பத்து நிமிட நடையை உட்படுத்திய இரண்டாவது மாடி அப்பார்ட்மென்ட் ஆகும். நாங்கள் தங்கவேண்டியிருந்த குடும்பத்தினரில், 15 வயது காட்யா என்ற இளம்பெண் மாத்திரம் எங்களை வரவேற்பதற்காக வீட்டிலிருந்தாள். அது ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம், இதனால் குடும்பத்திலுள்ள மீதி அங்கத்தினர்கள் இன்னும் கிறிஸ்தவ ஊழியத்தை முடித்து வரவில்லை.

கொஞ்ச நேரத்தில், குடும்பத்தின் பிற அங்கத்தினர்கள் வீடுதிரும்ப ஆரம்பித்தனர்—தாயாராகிய காலீனா; இளைய மகளாகிய 13 வயது ஷண்யா; கடைசியாக, தந்தையாகிய விக்டர். யாருக்கும் அவ்வளவு ஆங்கிலம் தெரியாது, அதைவிட கொஞ்சமாகத்தான் எங்களுக்கு ரஷ்யமொழி தெரியும். ஆங்கிலம் பேசக்கூடிய எங்களுடைய நண்பர்கள் மொழிபெயர்ப்பாளர்களாக இருக்கையில் பேச்சுத்தொடர்பு ஓரளவு எளிதாக இருந்தது, அவர்கள் போன பின்போ கடினமானது. நாங்கள் ரஷ்ய-ஆங்கில அகராதியையும் விவரிப்பதற்கான சைகைகளையும் பயன்படுத்தினோம். காட்யாவும் ஷண்யாவும் பேச்சுத்தொடர்பு கொள்வதில் வல்லவராக இருந்தனர், ஏனென்றால் அவர்கள் காதுகேளாதவரின் மொழியை அறிந்திருந்தனர்.

முழுக் குடும்பமும் இரண்டு வருடங்களுக்கு முன்பாகத்தான், ஒரே நேரத்தில் முழுக்காட்டுதல் பெற்றிருந்தனர். விக்டர் சபையில் உதவி ஊழியராக இருந்தார், இளம்பெண்கள் தங்கள் பள்ளி விடுமுறை நாட்களை ஊழியத்தில் அதிக நேரம் செலவழிக்கப் பயன்படுத்தினர். பள்ளியில், தங்கள் நம்பிக்கையைக் குறித்து பேசுவதற்கு அவர்கள் தயங்கவில்லை. உண்மையில், அவர்களுடைய பிரசங்க வேலை தங்களுடைய பள்ளிப் பிராந்தியத்திற்குப் புறம்பே இருக்கும் அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தக் குடும்பம் அக்கறையுள்ள ஆட்களோடு 28 வாராந்தர வீட்டு பைபிள் படிப்புகளை நடத்தி வந்ததை அறியவந்தது எங்களுடைய மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்தியது!

தெளிவாகவே, ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரின் கவனமும் பைபிள் படிப்பிலும் கிறிஸ்தவ ஊழியத்திலும் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தது, இதன் மூலம் அவர்கள் வாழ்க்கை நிறைவானதாகியதை எங்களால் காண முடிகிறது. அவர்கள் மகிழ்ச்சியைப் பிரகாசித்தனர்.—அப்போஸ்தலர் 20:35.

பைபிளில் நன்கு வேரூன்றியிருத்தல்

சாயங்காலங்களில் படுக்கைக்குப் போவதற்கு முன்பாக, பைபிள் வசன விளையாட்டு வினாவிடை நிகழ்ச்சியை நான் குடும்பத்தோடு நடத்தினேன். முதலில் வெளிப்படுத்துதல் 21:3, 4 என்ன சொல்கிறது என்று கேட்டேன். கேட்டதும் ஒரே சமயத்தில் அந்த இளம்பெண்கள் அதை எடுத்துரைத்தனர். அடுத்து ஏசாயா 2:4-ஐ கேட்டேன். அதையும் அவர்கள் அறிந்திருந்தனர், பட்டயங்களைக் கலப்பைக்கொழுக்களாக அடிப்பதைக் காட்ட அவர்கள் சைகைகளையும் பயன்படுத்தினர்.

இராஜ்ய ஆட்சியைப் பற்றியும் புதிய உலக ஆசீர்வாதங்களைப் பற்றியும் சொல்லக்கூடிய ஏசாயாவிலுள்ள வசனங்களோடு—ஏசாயா 9:6, 7; 11:6-9; 25:8; 33:24; 35:5, 6; 65:21, 22 ஆகியவற்றோடு—நான் தொடர்ந்தேன். பைபிள்களைப் பார்க்காமலேயே, ஒவ்வொரு வசனத்திலுள்ளவற்றையும் குடும்பத்தினரால் சொல்ல முடிந்தது. ஒரு பிள்ளை சிங்கத்தை நடத்திச்செல்வது போன்ற வசனங்களை, விவரிப்பதற்கான சைகைகளால் அறிந்திருந்தனர் என்று அந்த இளம்பெண்கள் அவ்வப்போது வெளிக்காட்டினர்.

இன்னொரு நாள் சாயங்காலம் கடவுளுடைய தனித்தன்மையைப் பற்றி சொல்லும் வசனங்களை நாங்கள் சிந்தித்தோம், இயேசு கடவுளுக்குக் கீழானவராக இருக்கிறார் என்றும் கடவுளும் இயேசுவும் ஒரே நபராயிருப்பதற்கு மாறாக ஒருமைப்பாட்டில் ஒன்றாயிருக்கின்றனர் என்றும் காட்டக்கூடிய வசனங்களின்பேரில் கவனஞ்செலுத்தினோம். யோவான் 10:30, யோவான் 17:20, 21, மேலும் 1 கொரிந்தியர் 11:3 ஆகிய வசனங்களில் உள்ளவற்றைக் குடும்பத்தால் சொல்ல முடிந்தது. அவர்கள் எவ்வளவு நன்றாக பைபிளை அறிந்திருந்தனர் என்பதைக் கண்டு நானும் என் மனைவியும் வியப்படைந்தோம்.

செவ்வாய்க்கிழமை காலை சுமார் பன்னிரண்டு பேரும் ஒன்றுகூடி, ஓர் அழகிய பூங்காவிற்கு மெட்ரோவில் ஒருங்க பயணஞ்செய்தோம்; அங்கு பைபிளைப் பற்றி மக்களிடம் பேசுவதில் இரண்டரை மணிநேரம் செலவுசெய்தோம். இரண்டு இரண்டு பேராகப் பிரிந்து ஊழியஞ்செய்தோம். நாடியா என்ற ரஷ்ய பெண் என்னுடைய ஒரு பார்ட்னராக இருந்தாள்; இவள் மக்களை அணுகுவதிலும் அவர்களைச் சம்பாஷணையில் உட்படுத்துவதிலும் நல்ல நிதானிப்பைக் காட்டினாள். பைபிளிலுள்ள கடவுளுடைய சிந்தனைகளிடம் கவனத்தைத் திருப்புவதில் திறமைசாலியாக இருந்தாள். ‘இவள் அனுபவமிக்க பிரஸ்தாபி’ என்று நான் எனக்குள்ளாக சொல்லிக்கொண்டேன். பிற்பாடு, அவளுக்கு 17 வயதுதான் ஆகிறது என்றும் அவள் முழுக்காட்டுதல் பெற்று இரண்டு மாதங்களே ஆகின்றன என்றும் கேள்விப்பட்டுப் பிரமிப்படைந்தேன்!

ரஷ்யாவிலுள்ள சூழ்நிலை தனித்தன்மை வாய்ந்தது என்பதை எங்கள் மனதில் பதியவைத்த அத்தகைய பல்வேறு அனுபவங்களை நாங்கள் கொண்டிருந்தோம். கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்ததிலிருந்து, ரஷ்யர்கள் பைபிள் போதனைகளை ஆராய்வதில் தங்களை ஆர்வமுள்ளவர்களாகக் காட்டியிருக்கின்றனர். மிகப் பெரும்பான்மையர் நல்ல கல்வியறிவு உடையவர்களாகவும் வாசிக்கும் விருப்பமுடையவர்களாகவும் இருக்கின்றனர். சாட்சிகள் தடையுத்தரவின் கீழிருந்தபோதிலும், பைபிள் சத்தியங்களைக் கற்றறிந்த ஒரு ரஷ்ய குடும்பத்தைச் சென்று சந்திக்கையில், நாங்கள் கண்டுணர்ந்தபடி, சிறு பிள்ளைகளுங்கூட நன்கு வாசிப்பவர்களாகவும் புரிந்துகொள்பவர்களாகவும் இருக்கின்றனர்.

அந்தத் தம்பதியின் குட்டிப்பையன் ஒரு கேள்வி கேட்க விரும்புவதாகச் சொன்னான். மொழிபெயர்ப்பாளர் மூலமாக அவன் ஒரு வேண்டுகோள் விடுத்தான். அவன் கேட்ட காரியத்தைக் குறித்து மிகவும் தொடப்பட்டவனாக, தன்னுடைய வேண்டுகோளை எழுதித் தந்தால் நான் அதை விழித்தெழு! பிரசுரிப்பாளர்களுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று சொன்னேன். அவன் உடனே உட்கார்ந்து ஒரு கடிதத்தை எழுதினான். அவன் எழுதியதன் மொழிபெயர்ப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. இக்கடிதத்தின் நகல், 25-ம் பக்கத்தில் காணப்படுகிறது.

“ரஷ்யாவிலிருந்து உவாட்ச்டவர் சொஸைட்டிக்கு செராஷா எழுதுவது. எனக்கு வயது ஏழு, நான் இப்பொழுதே அப்பாவோடும் அம்மாவோடும் பிரசங்க வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டேன். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேச எனக்கு ரொம்பவும் பிரியம். விழித்தெழு! பத்திரிகையை வாசிப்பதும் எனக்கு இஷ்டம். ரஷ்யாவுக்கு மாதத்திற்கு ஒருமுறையே ரஷ்யமொழியில் அது வருகிறது, ஆங்கில மொழியிலோ மாதம் இருமுறை வருகிறது. மாதத்திற்கு இருமுறை இந்தப் பத்திரிகை வரவேண்டுமென்று மிகவும் விரும்புகிறேன், ஏனென்றால் எனக்கு இது ரொம்ப, ரொம்ப, ரொம்ப பிடிக்கும். இதைக் கொஞ்சம் செய்யுங்கள்.”

மாஸ்கோவில் கிடைத்த நண்பர்களை விட்டுவருவது சுலபமாக இல்லை. குறுகிய காலப்பகுதியில் நாங்கள் அவர்களை அருமையாக நேசித்தோம்.

பூர்வ கிறிஸ்தவத்தோடு ஒத்திருப்பது

எஸ்டோனியாவிலுள்ள டல்லினுக்குப் போக அன்றிரவே கிளம்பும் டிரெய்னில் புறப்பட்டோம். அழகான, புதிய கட்டிட வசதிகளை அங்கு நாங்கள் கண்டோம்; இங்கிருந்துதான் முன்னாள் சோவியத் யூனியன் குடியரசு நாட்டில், இப்போது பிரசங்க வேலை நிர்வகிக்கப்பட்டுவருகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்குப் போக டிரெய்ன் ஏறினோம். இந்த இரண்டு இடங்களிலும் மாஸ்கோவில் நடைபெற்றுவரும் பிரசங்க வேலையைப் பற்றி உடன் கிறிஸ்தவர்கள் விசாரித்தனர். “அங்கு இருந்துகொண்டு, வளர்ச்சியைக் காண்பது அப்போஸ்தலர் 17-ன் முதல் பாகத்திலும் தெசலோனிக்கேயருக்கு எழுதிய கடிதங்களில் உள்ளவற்றையும் நன்கு புரிந்துகொள்ள எனக்கு உதவியது” என்று நான் பதிலளித்தேன்.

தெரிந்தவிதமாக, அப்போஸ்தலன் பவுல் ஊழியஞ்செய்த ஒருசில வாரங்களில், தெசலோனிக்கேயாவில் ஒரு சபை ஸ்தாபிக்கப்பட்டது என்னை எப்போதுமே மலைக்கவைப்பதாயிருந்தது. மேலும் சுமார் ஒரு வருடத்திற்குள்ளாக, பவுல் இந்தப் புதிய கிறிஸ்தவர்களிடம் உயிர்த்தெழுதல், ‘மேகங்கள்மேல் எடுத்துக்கொள்ளப்படுதல்,’ “கர்த்தருடைய நாள்,” ‘சமாதானத்திற்கும் சவுக்கியத்திற்குமான’ கூக்குரல், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகை” போன்ற ஆழமான ஆவிக்குரிய காரியங்கள் சம்பந்தமாக இரண்டு கடிதங்கள் எழுதியதும் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. (1 தெசலோனிக்கேயர் 4:13-17; 5:1-3; 2 தெசலோனிக்கேயர் 2:1, 2) அந்தப் பூர்வ கிறிஸ்தவர்களின் வைராக்கியமான ஊழியத்தின் பலன் முதல் நூற்றாண்டு அற்புதத்தை உண்டுபண்ணியது—மிகக் குறுகிய காலத்தில் முதிர்ச்சிவாய்ந்த, ஆவிக்குரிய பிரகாரமாக பலமான பிரசங்கிகளடங்கிய சர்வதேச அமைப்பை உருவாக்கியது. சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு, “சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்”டாகிவிட்டது என்று பவுல் எழுதினார்!—கொலோசெயர் 1:23.

ரஷ்யாவில் நடைபெற்றது, முதல் நூற்றாண்டில் நடைபெற்ற காரியங்களுக்கு ஒத்திருந்ததாக எனக்குத் தோன்றியது.

வளர்ச்சியின் வேகத்திற்கிணங்க இருக்க போராடுவது

ரஷ்யா பூமியிலேயே மிகப் பெரிய நாடாகும், ஆதலால், அங்குக் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பற்றி பிரசங்கித்து வருகிற ஆயிரக்கணக்கானோருக்கு வழிநடத்துதலை அளிப்பது தெரிந்தவண்ணமாக, ஒரு மிகப் பெரிய வேலையாக இருக்கிறது.—மத்தேயு 24:14.

முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தைப் பற்றி கேள்விப்பட்டவர்கள் சம்பந்தமாக பைபிள் சொல்கிறது: “கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.” (அப்போஸ்தலர் 11:21) ரஷ்யாவிலுள்ள எங்கள் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு இந்த வார்த்தைகள் மிகவும் பொருந்துவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம்! ரஷ்ய நாடானது ஆவிக்குரிய அறுவடைக்குக் கனிந்திருப்பதாக; மேலும் ஜீவ பாதையில் செல்ல இன்னும் வேறுபலருக்கு உதவும் மதிப்புவாய்ந்த சிலாக்கியத்தில் அங்குள்ள ஆயிரக்கணக்கானோர் பலர் சேர்ந்துகொள்வார்களாக.—அளிக்கப்பட்டது.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்தது.

[பக்கம் 24, 25-ன் படம்]

மேலே: நாங்கள் தங்கியிருந்த குடும்பம்; மேலேயும் வலப்பக்கமும்: பூங்காவில் சாட்சிபகருவது; கீழே வலப்பக்கம்: செராஷாவும் அவனுடைய கடிதமும்

[பக்கம் 26-ன் படம்]

எஸ்டோனியாவிலுள்ள டல்லினில் புதிய உவாட்ச் டவர் கட்டிட வசதிகள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்