அவர்கள் வீடுவீடாகப் பிரசங்கிப்பார்களா?
“ரோமின் தெருக்களில் பிரசங்கிமாரைப் போப் அனுப்புகிறார்.” கிரெக் பர்க் என்பவரால் கொடுக்கப்பட்ட ஒரு செய்தி அறிக்கையின் தலைப்பாக அது அமைந்தது. அவர் எழுதினார்: “போப் ஜான் பால், நாட்டில் உள்ள மக்களை மதமாறச் செய்யும் யெகோவாவின் சாட்சிகள் போன்ற பிரிவுகளின் மாதிரியைப் பின்பற்றி வீடுவீடாகப் பிரசங்கிக்கத் துவங்கும்படி இத்தாலியில் உள்ள கத்தோலிக்கரை ஊக்குவித்திருக்கிறார்.
“‘சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படுவதற்கான சமயமல்ல இது, வீடுகள்மேலிருந்து பிரசங்கிப்பதற்கான சமயமே இது,’ என்று ஊரூராகப் போகும் 350 பிரசங்கிமாரிடமும் மதப் போதகர்களிடமும் போப் சொன்னார். . . .
“‘தெருக்களில் சுவிசேஷத்தைப் பிரகடனப்படுத்துவதற்கான உங்களது திட்டம் . . . மிகுதியான கனிகளைக் கொடுக்கும் என நம்புகிறேன், விசுவாசத்தை விட்டு விலகியவர்களையுங்கூட சென்றெட்டும் பிரசங்கிப்பு முறையை நீங்கள் மீண்டும் கண்டுபிடித்திருக்கிறீர்கள்.’ என்று அவர்களிடம் சொன்னார்.”
செய்தித்துறை அறிவிப்பாளர் பர்க் கவனித்ததாவது: “கடந்த இரு பத்தாண்டுகளாக இத்தாலியில் கத்தோலிக்க சர்ச்சின் ஆஜர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது, வீடுவீடாகப் பிரசங்கிப்போருக்கான போப்பின் ஆர்வத்திற்கு, அதன் செல்வாக்கு இழந்து வருவதே பகுதியளவான காரணமாகத் தோன்றுகிறது.”
“வீடுவீடாய் பிரசங்கிக்கத் துவங்கு”வதற்கான அத்தகைய புத்திமதி, முற்றிலும் புதியதாக இல்லை. ஆறாம் பால் என்ற முன்னாள் போப், கத்தோலிக்க சர்ச் “சுவிசேஷிப்பதற்காகவே இருக்கிறது” என்று சொன்னார். இரண்டாம் ஜான் பால் என்ற தற்போதைய போப், பொதுப் பிரசங்கிப்பு செய்வதற்கான இயேசுவின் கட்டளையை நிறைவேற்றுவதற்கான அவசியத்தைக் குறித்து தன்னுடைய சர்ச்சை எச்சரிப்பதற்காக 1991-ல் ரெடெம்டோரிஸ் மிஸ்ஸியோ என்ற சுற்றுக்கடிதத்தை அனுப்பினார்.
லண்டன் கத்தோலிக்க ஹெரல்டில் ரோமன் கத்தோலிக்க எழுத்தாளராகிய பீட்டர் ஹெர்னன் இக்கேள்வியை விடுத்தார்: “சுவிசேஷ வேலைக்கு என்னதான் ஆயிற்று?” இப்போது பல வருடங்களாக, அதிகமாகப் பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிற “சுவிசேஷப் பத்தாண்டு” பற்றி அவர் கவலைப்பட்டார். முன்னேற்றமின்மை பற்றி ஒரு பிஷப்பை அவர் கேட்கையில் பிஷப் பதிலளித்தார்: “அவசரப்படாதீர்கள். 2000 வருடங்களாகத்தான் சர்ச் இருந்துவந்திருக்கிறது.”
“சுற்றுப்புறத்தில் இருக்கும் கிராமங்களிலெல்லாம் சென்று பிரசங்கிக்கும்படி தம் சீஷர்களை இயேசு அனுப்பிவிடுகையில், அவரால் சொல்லப்பட்ட அந்த அவசர உணர்வு எங்கே? அல்லது ‘சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ! (1 கொ 9:16)’ என்று புனித சின்னப்பரால் தெரிவிக்கப்பட்ட அந்த அவசர உணர்வு எங்கே?” என்று ஹெர்னன் கேட்டதில் ஆச்சரியமேயில்லை. நிச்சயமாகவே, வெளியரங்கமாகவும் “வீடுவீடா”கவும் பிரசங்கித்த முற்கால கிறிஸ்தவர்களைக் கத்தோலிக்கர் பின்பற்றுவார்களா?—அப்போஸ்தலர் 5:42; 20:20, ஆங்கில டூயே மொழிபெயர்ப்பு.
வீடுவீடாகச் சுவிசேஷ வேலை செய்வதன் சம்பந்தமாக, ஹெர்னன் என்ன ஒப்புக்கொண்டாரென்றால், “‘கோட்பாட்டளவானதே, நடைமுறையான ஒன்றல்ல’ என்று ஐயுறவுவாதிகள் முணுமுணுப்பதை என்னால் கேட்க முடிகிறது. அது நடைமுறையற்றதல்ல” என்று ஹெர்னன் பதிலளிக்கிறார். “அந்த உரிமைபாராட்டை நியாயப்படுத்த நான் ஒரு ஏற்கத்தகாத வார்த்தையை உபயோகிக்க வேண்டும். அது ஏற்கத்தகாத வார்த்தை என்று எனக்குத் தெரியும், ஏனெனில் கடந்த முறை ஒரு கத்தோலிக்க கட்டுரையில் நான் அதைப் பயன்படுத்துகையில் அந்த முழுப் பகுதியும் நீக்கப்பட்டது (என்றாலும் வேறு எதையும் மாற்றவில்லை). அந்த வார்த்தையே யெகோவாவின் சாட்சி. . . . தெய்வீக செல்வாக்கினால் கிடைத்த அவருடைய உறுதியான உள்ளுணர்வின் காரணமாகத்தானே, அவர் நிச்சயமாகவே ஒரு மிஷனரிதான் என்று ஒவ்வொரு சாட்சிக்கும் போதிக்கப்படுகிறது.”
ஹெர்னன் யெகோவாவின் சாட்சிகளுடைய மதநம்பிக்கைகளோடு ஒத்திணங்கிப் போகாவிட்டாலும், ஒரு நபர் அவர்களுடைய பிரசங்க முறைகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்தால், “அப்போஸ்தலர் நடபடிகளில் வருணிக்கப்பட்டுள்ள பூர்வகால சர்ச்சை எளிதில் நினைவிற்கு கொண்டு வருகிறது” என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.
யெகோவாவின் சாட்சிகள், தங்களுடைய வைராக்கியமான வீட்டுக்கு வீடு ஊழியத்தைத் தொடர்கின்றனர்; இவ்விதமாக, “நீங்கள் . . . பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்ற இயேசு கிறிஸ்துவின் கட்டளையை இந்த நவீன காலங்களில் நிறைவேற்றுகின்றனர்.—அப்போஸ்தலர் 1:8.