பொருளாதார செழுமை மகிழ்ச்சிக்கு உத்தரவாதமளிக்க முடியுமா?
“எங்கள் பள்ளியில் உள்ள சுமார் 50 மாணவர்களில், 1 அல்லது 2 மாணவர்கள் மட்டுமே ஷூக்களை அணிந்திருந்தனர்,” என்று தெற்கு தைவானில் 1950-களில் வாழ்ந்து வந்த 45 வயதான போச்சின் என்பவர் நினைவுபடுத்தி சொல்கிறார். “எங்களால் அவற்றை வாங்க முடியவில்லை. என்றாலும், நாங்கள் எங்களை ஏழைகளாக கருதவில்லை. தேவையானது எல்லாம் எங்களிடம் இருந்தன.”
அது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு. அச்சமயத்திலிருந்து, போச்சின் என்பவருக்கும் அத்தீவில் வாழும் 2 கோடி மக்களுக்கும் வாழ்க்கை மிகவும் வியப்பூட்டும் வகையில் மாறியுள்ளது. “தைவான் வேளாண்மை சமுதாயத்திலிருந்து அதிக சுறுசுறுப்பான தொழில்வளர்ச்சி சமுதாயமாக மாற்றப்பட்டது” என்று உண்மைகளும் கணக்குகளும்—தைவான் மீது அமர்ந்திருக்கும் சீன குடியரசு (ஆங்கிலம்) என்ற புத்தகம் விளக்குகிறது. 1970-களின் பிற்பகுதிக்குள், தைவான் “ஒரு நிலையான, செழுமையான சமுதாயமாக” கருதப்பட்டது.
உண்மையிலேயே செழுமையின் அத்தாட்சி தைவான் முழுவதும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. அதிநவீன பல மாடி கட்டடங்களுள்ள அலுவலக வளாகங்கள் தைவான் முழுவதும் அதிவிரைவாக கட்டப்பட்டு வருகின்றன, விலையுயர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் நெடுஞ்சாலை முழுவதும் அதிகமாக காணப்படுகின்றன. தைவானின் பொருளாதார செழுமை, மற்ற வளரும் நாடுகள் பொறாமைப்படுவதற்குரிய ஒன்றாக உள்ளது. சைனா போஸ்ட் என்ற தைவானின் முதன்மையான ஆங்கிலமொழி செய்தித்தாள், “சீன சரித்திரத்திலேயே மிகவும் உயர்வான வாழ்க்கைத் தரத்தை இன்று தைவான் மக்கள் அனுபவிக்கின்றனர்” என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது.
‘முட்போன்ற பிரச்சினைகள் ஏராளம்’
இத்தனை பொருளாதார செழுமை மக்களுக்கு மெய்யான சந்தோஷத்தையும் திருப்தியையும் கொண்டு வந்துள்ளதா? தைவான் மக்கள் பெருமைப்படுவதற்கு அநேக காரியங்கள் இருந்தபோதிலும், இந்த வெற்றி கதைக்கு மற்றொரு பக்கமும் உள்ளது. சைனா போஸ்ட் தொடர்ந்து திட்டவட்டமாக குறிப்பிடுகிறபடி, “இந்தப் பேரளவான செழுமையோடுகூட சிக்கலான முட்போன்ற பிரச்சினைகள் வந்துள்ளன.” தைவானின் பொருளாதார செழுமை அதனுடைய தீய பக்கவிளைவுகளின்றி வந்துவிடவில்லை.
முன்பு குற்றச்செயல் அவ்வளவு நடந்திராத இத்தீவை நெருக்கித் தாக்கும் “சிக்கலான, முட்போன்ற பிரச்சினைகளைக்” குறித்து சைனா போஸ்ட் சொல்கிறது: “எங்களுடைய செழுமையான சமுதாயத்தில் சமீப ஆண்டுகளில் குற்றச்செயலும் ஒழுங்கின்மையும் கவலைக்குரிய விதத்தில் அதிகரித்துள்ளன, இவை சட்டத்துக்குக் கீழ்ப்படியும் எல்லா குடிமக்களின் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் அதிகரித்து வரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.” “செல்வம் தைவானை சிற்றின்ப வேட்கையுள்ள தேசமாக ஆக்குகிறது” என்ற தலைப்பையுடைய கட்டுரையில் போஸ்ட் இவ்வாறு சொல்கிறது: “பெண்கள் நிறைந்த சிற்றுண்டிச்சாலைகள், மதுக்கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் சட்டவிரோதமான விலைமகளிர் இல்லங்கள் போன்றவை” தழைத்து வளரும் பிரச்சினைகளை இகழ்ந்துரைக்கிறது. அச்சுறுத்திப் பணம் பறிப்பது, பணத்துக்காக ஆட்களை கடத்திச் செல்வது மற்றொரு பிரச்சினையாக ஆகியுள்ளது. பிள்ளைகளை கடத்திச் செல்வது “தைவானில் அதிக விரைவாக பிரபலமாகிக் கொண்டிருக்கும் வியாபாரமாக ஆகிவருகிறது” என்று ஓர் அறிக்கை சொல்கிறது. சூதாட்டம் அல்லது மற்ற பணநஷ்டங்களின் காரணமாக ஏற்படும் செலவைத் தீர்ப்பதற்கு அநேகர் இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பிள்ளைகள் குற்றச்செயல்களுக்கு பலியாட்களாகும் வெறும் அப்பாவிகள் அல்லர். குற்றச்செயல்களில் அவர்கள் உட்பட்டிருப்பது அதிகரித்து வருகிறது. 1989-ல் மட்டும் பிள்ளைகளால் இழைக்கப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்தது என்று அறிக்கைகள் காண்பிக்கின்றன. குடும்பச் சீர்குலைவு இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்று சிலர் சொல்கின்றனர், புள்ளிவிவரங்கள் இதை ஆதரிப்பதாக தோன்றுகிறது. உதாரணமாக, 1977-லிருந்து 1987 வரை, மணம் செய்துகொண்ட தைவான் தேசத்து தம்பதிகளின் எண்ணிக்கை குறைந்தது, ஆனால் விவாகரத்து எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்தது. ஒரு நிலையான சமுதாயத்தில் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை சீன நாகரீகம் பாரம்பரியமாக அழுத்திக் காண்பித்து வருவதால், மோசமாகிக்கொண்டே போகும் நிலைமைகளைக் குறித்து அநேகர் அதிகமாக கவலைப்படுகின்றனர் என்பது ஆச்சரியமாயில்லை.
பிரச்சினைக்கு மூலகாரணம்
செல்வச்செழிப்புள்ள சமுதாயத்தின் மத்தியில் சமூக ஒழுங்கு சீர்குலைந்து போவதற்கான காரணத்தைத் தீர்மானிப்பதற்கான முயற்சியில் பலவகையான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. சில ஆட்கள், தத்துவரீதியில், அது வெறுமனே வெற்றியை பெறுவதற்கு ஆன செலவு என்று சொல்கின்றனர். ஆனால் குற்றத்தை வெற்றி அல்லது செல்வச்செழிப்பின் பேரில் போடுவது, பெருந்திண்டியாய் இருப்பதற்குக் காரணம் உணவு என்று குறை சொல்வது போல் இருக்கிறது. உண்பவர்கள் எல்லாருமே பெருந்திண்டியினர் அல்லர், அல்லது செல்வச்செழிப்புள்ளவர்களாய் இருப்பவர்கள் அனைவருமே பொருளாசையுடையவர்களாகவோ அல்லது குற்றவாளிகளாகவோ இருப்பதில்லை. பொருளாதார செழுமைதானே குற்றச்செயலையும் சமூக ஒழுங்கற்ற நிலையையும் உண்டாக்குவதில்லை.
சைனா போஸ்ட்-ல் வெளியான தலையங்கக் கட்டுரை ஒரு பெரிய காரணத்தைக் குறிப்பிட்டுக் காட்டியது. அது சொன்னது: “நாம் பல பத்தாண்டுகளாக, பொருளாதார வளர்ச்சியின் பேரில் அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். இது, இன்று நம் சமுதாயத்தில் ஒழுக்க மதிப்பீடுகள், ஆவிக்குரிய மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்து வருவதற்கு காரணமாயிருக்கிறது.” (எங்களால் நேரெழுத்துக்களாக்கப்பட்டிருக்கின்றன) ஆம், பொருளுடைமைகளை நாடிச்செல்வதன் பேரில் அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பது, பொருளாசை, பேராசை போன்ற மனநிலைகளுக்கு வழிநடத்துகிறது. அது சுயநலத்தை முன்னேற்றுவிக்கிறது. அப்படிப்பட்ட மனநிலைதானே குடும்பச் சீர்குலைவுக்கும் சமுதாயத்தின் மீது எதிர்மறையான பாதிப்புகளை உடைய காரியங்களுக்கும் வழிநடத்துகிறது. பைபிள் 2,000 வருடங்களுக்கு முன்பே சொன்னது இன்னும் உண்மையாயிருக்கிறது: “பண ஆசை (பணம் தானே அல்ல) எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.”—1 தீமோத்தேயு 6:10.
ஓர் உலகளாவிய பிரச்சினை
தைவானிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சமாதானம், அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றை நாடி மற்ற நாடுகளுக்குச் சென்று குடியேறியிருக்கின்றனர். ஆனால் தைவான் அனுபவிக்கும் பிரச்சினைகள், தைவானுக்கு மட்டுமே உரியதாய் இல்லை. அவை உலகமுழுவதும் பரவியுள்ளன.
அ.ஐ.மா.-ல் உள்ள கலிபோர்னியாவின் செல்வச்செழிப்புள்ள நகரில் விவாகரத்து வீதம் அத்தேசத்திலேயே அதிக உயர்ந்ததாக இருந்தது என்று சில வருடங்களுக்கு முன்பு நடத்திய ஆராய்ச்சி காண்பித்தது. அந்நகரின் சில இடங்களில் நடந்த சொத்து விற்பனைகளில் 90 சதவீதம் முறிந்துபோன திருமணங்களின் விளைவுகளே. தேசிய சராசரியைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான தற்கொலைகள் அறிக்கை செய்யப்பட்டன. மதுப்பழக்க வீதம் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலேயே மிகவும் உயர்வாக இருந்த எண்ணிக்கைகளில் ஒன்றாக இருந்தது. மனநல மருத்துவர்களையும், மற்ற மனநோய் நீக்குபவர்களையும் குறித்ததில் ஒரு நபருக்கு இத்தனை மருத்துவர்கள் என்ற விகிதம் ஐக்கிய மாகாணங்களில் வேறு எங்கு இருப்பதைக் காட்டிலும் அந்நகரில் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இயேசு கிறிஸ்து பின்வருமாறு சொன்னபோது ஒரு அடிப்படையான சத்தியத்தை குறிப்பிட்டுக் காட்டினார்: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” (மத்தேயு 4:4) பொருளுடைமைகள் எவ்வளவு அதிகம் இருந்தாலும், அவை ஒரு நபரின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்திசெய்ய முடியாது, மகிழ்ச்சியைக் கொண்டுவர உத்தரவாதமளிக்கவும் முடியாது. அதற்கு மாறாக, அது பெரும்பாலும் ஒரு சீனப் பழமொழி அதைச் சொல்கிறபடி, “ஒருவர் நன்றாக உண்டு சுகமாக இருக்கையில், அவருடைய எண்ணங்கள் மிதமிஞ்சிய காரியங்கள், மாம்சப்பிரகாரமான ஆசைகள் ஆகியவற்றிடமாக திரும்புகின்றன.” இது தைவானிலும் மற்ற இடங்களிலும் நடைபெறும் காரியங்களால் காண்பிக்கப்படுகிறது—பொருளாதார செழுமைதானே அவ்வப்போது ஒழுக்க மற்றும் சமூக சீர்குலைவுக்கும் அதோடு வரும் பிரச்சினைகளுக்கும் முன்னோடியாக இருக்கிறது.
அப்படியென்றால், பொருளாதார செழுமை மெய்யான, நிரந்தரமான சந்தோஷத்தின் ஒரு பாகமாக ஆவதற்கு என்ன தேவைப்படுகிறது? பதிலைப் பெறுவதற்கு பின்வரும் கட்டுரையை தயவுசெய்து வாசியுங்கள்.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“ஒருவர் நன்றாக உண்டு சுகமாக இருக்கையில், அவருடைய எண்ணங்கள் மிதமிஞ்சிய காரியங்கள், மாம்சப்பிரகாரமான ஆசைகள் ஆகியவற்றிடமாக திரும்புகின்றன.”
சீனப் பழமொழி
[பக்கம் 5-ன் படம்]
பொருளாதார செழுமை சிறு பட்டணங்களை, சந்தடியான செவ்வொளி விளக்குகள் எரியும் நகரங்களாக மாற்றியுள்ளது