உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 11/22 பக். 20-23
  • இனியும் பாறையாகவோ தீவாகவோ இல்லை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இனியும் பாறையாகவோ தீவாகவோ இல்லை
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் சாட்சிகள் சந்திக்க வருகின்றனர்
  • அதே சாட்சி திரும்பவருகிறார்
  • அன்பு காட்டவும் அன்பு காட்டப்படவும் படைக்கப்பட்டிருப்பது
  • பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
    காவற்கோபுரம்: பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
  • என்னை உண்மையில் நேசித்த குடும்பம்
    விழித்தெழு!—1995
  • மிக மோசமான ஒன்று எய்ட்ஸைவிட
    விழித்தெழு!—1990
  • கடவுளிடம் நெருங்கிவருவது சமாளிக்க எனக்கு உதவிற்று
    விழித்தெழு!—1993
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 11/22 பக். 20-23

இனியும் பாறையாகவோ தீவாகவோ இல்லை

ஒரு பாட்டு வரி இவ்வாறு இருந்தது: ‘நான் ஒரு பாறை/நான் ஒரு தீவு/பாறைக்கு நோவு தெரியாது/தீவு அழவே அழாது.’ இது 60-களில் வந்த பாட்டு. எனக்கு ரொம்பவும் பிடித்த பாட்டு, ஏனென்றால் அப்படித்தான் நான் வாழ்ந்துவந்தேன். அன்பு, கருணை, தயை போன்ற உணர்ச்சிகளை மற்ற ஆட்கள் தாங்கள் உணர்வதாகச் சொன்னபோது, அந்த விதமாக உணர்ந்தமாதிரியே எனக்கு ஞாபகமில்லை. அப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருப்பதுபோல நடிப்பேன், மற்றவர்களும் அவ்வாறுதான் செய்ததாக நம்பினேன். வளர்ந்த மனிதனாக, அழுத ஞாபகமேயில்லை. இப்போதோ 50 வயதுள்ளவனாக, இங்கே கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பனாகச் சேவித்துக்கொண்டு, வீட்டில் ஒண்டியாக இருந்துகொண்டு, படித்துக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை நினைத்து தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருக்கிறேன். இந்தப் ‘பாறைக்கு,’ இந்தத் ‘தீவுக்கு’ இது எப்படி நடக்கும்?

நான் 1936-ல் பாஸ்டனிலுள்ள புறநகரில் பிறந்தேன், எட்டு பிள்ளைகளில் நான்தான் நான்காவது. அப்பாவும் அம்மாவும் குடிகாரர்கள். நாங்கள் உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டதாகவோ கட்டித்தழுவியதாகவோ எந்தவிதத்திலும் அன்பை வெளிக்காட்டியதாகவோ நினைப்பே இல்லை. நான் ஆறு மாதக் குழந்தையாயிருக்கையில், யாரோ என்னை குளிக்கிற தொட்டிக்குள் இருக்கவிட்டு, அடைப்பானை போட்டு, தண்ணீரை திறந்துவிட்டு போய்விட்டார்கள். வேலைக்காரி பார்த்ததனால் பிழைத்தேன். குழந்தையாகப் பயம், கிலி, ஆத்திரம், உடம்பு வலி போன்ற உணர்ச்சிகளே எனக்கு இருந்தது.

இவற்றை அப்பாதான் கற்றுக்கொடுத்தார், அவர் என்மேல் எரிந்து விழுந்து என்ன பண்ணுவாரென்றால், எப்பொழுது பார்த்தாலும் என் பிஞ்சு உடம்பை அடித்து உதைப்பார். அந்த நேரங்களில் அவருடைய முகத்தை பார்க்கவேண்டுமே, இன்னமும் அரை நூற்றாண்டுக்கு அப்புறமும் அந்த முறைப்பு என்னை மிரண்டுபோகச் செய்கிறது. அந்த அடி உதையெல்லாம், ஒரு கேடுகெட்ட பையனாக இருந்ததால்தான் என்று பெரும்பாலும் என் வாழ்நாள் பூராவும் நினைத்துவந்தேன். ஆனால் இப்பொழுது தான் விளங்குகிறது, அவர் எனக்கு விரோதமாகக் கோபப்பட்டதற்கும், நான் நல்லவனாகவோ கெட்டவனாகவோ இருந்ததற்கும் சுத்தமாகச் சம்பந்தமில்லை என்று.

ஐந்தாறு வயதிருக்கும், அப்போது குடும்ப டாக்டர் என்னைப் பால் சம்பந்தமாக மோசமாக நடத்தினார். நான் பள்ளிக்கு போக தொடங்கும்போது, நாங்கள் 2,50,000 வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த ஆங்கிலோ-சாக்ஸன் புராட்டஸ்டன்டினர்கள் (WASP) இருக்கும் நகரத்தில் வாழ்ந்து வந்தோம். இதனால் யூதப் பொடியனாகிய என்னை பள்ளி சகாக்கள் படாத தொல்லைப்படுத்தி, என் பின்னாலேயே துரத்திவந்தனர். கும்பலாக 10, 12 பேர் சேர்ந்துகொண்டு, என்னைப் பிடித்து, அம்மணமாக்கி, மொத்தி, போட்டிருந்த துணிகளை தூக்கி மரங்கள் மேல் எறிந்துவிடுவார்கள். ஒன்றும் போட்டில்லாமல், மரங்களில் ஏறி துணிகளை எடுக்கவேண்டிய நிலை, எனக்கு.

18-வது பிறந்த நாள் வருவதற்கு ஒரு மாசத்துக்கு முன்பாக, வீட்டை விட்டு வெளியேற இராணுவத்தில் சேர்ந்தேன். அதுவரை குடியென்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் சேர்ந்து கொஞ்ச நாள் கூட ஆயிருக்காது, குடிக்கத் தொடங்கி, உடனடியாக அதற்கு அடிமையானேன். 20 வருஷங்களாக இராணுவத்தில் வேலை பார்த்தேன். எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்பொழுதெல்லாம் பிச்சையெடுத்தாவது, கடன் வாங்கியாவது, திருடியாவது ஒரு பாட்டில் பீரை அடித்து, வெறித்துக் கிடந்தேன். 24 வயசில் கல்யாணத்தை முடித்தேன். பிறகு ஒரு பையன் பிறந்தான். ஆனால் என் மனைவியும் பையனும் குடிகாரனாகிய என்னால் அடக்கியொடுக்கப்பட்ட வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். இல்லாத குறைக்கு இவர்களை பாரமாகவும் வீண் செலவாகவுந்தான் நான் கருதினேன்.

1974-ல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றேன். கொஞ்ச நாளைக்கு பிஸ்னஸ் செய்து பார்த்தேன். ஆனால் சீக்கிரத்தில் அதையும் இழுத்துமூடினேன். இனியும் என்னால் குடிக்க முடியவில்லை, குடித்தால் உடம்பு ஒத்துக்கவில்லை. ஒன்று, இரண்டு பீர் குடித்தால் போதும், உடம்பில் அங்கங்கு உப்பிவிடும். இப்போது போதை வஸ்துக்களை எடுப்பதில் இறங்கினேன், அநேகமாக மரிஹுவானா. வேறு சரக்கு கிடைத்தால், அவற்றை எடுத்தேன். இதனால் உருப்படியாக ஒரு வேலையிலும் இருக்க முடியவில்லை, என் மனைவி டானாவை வேலைக்கு போகவிட்டு வீட்டு வேலைகளை நான் பார்த்துக் கொண்டேன்.

யெகோவாவின் சாட்சிகள் சந்திக்க வருகின்றனர்

ஒரு நாள் காலை, என் மனைவி வேலைக்கு போக கிளம்பினாள். 7:30 மணிதான் ஆனது, அப்போதே நான் போதையிலிருந்தேன். வந்ததே அவளுக்கு ஆத்திரம். வீட்டை விட்டுப் போவதற்கு முன்பாக முன்வாசல் பக்கத்திலிருந்த ஒரு சைன் பலகையை என்மேல் தூக்கியெறிந்து, “அவர்கள் வந்து உயிரை உண்டில்லையென்று ஆக்கினால் நல்லாயிருக்கும்,” என்று சத்தம்போட்டுவிட்டு போனாள். அந்த சைன் பலகையை ஜன்னலில் எல்லாருக்கும் தெரிகிற அளவுக்கு அவள் எப்போதும் வைத்திருப்பாள். அதில் “யெகோவாவின் சாட்சிகள் வரக்கூடாது” என்று பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்தது. நான் அதையெடுத்து குப்பைத்தொட்டியில் போட்டேன். அடுத்த நாள் காலை என் வீட்டிற்கு இரண்டு பெண்மணிகள் வந்தார்கள், இவர்கள் யெகோவாவின் சாட்சிகளாயிருந்தார்கள்.

இதற்குள்ளாக நான் புத்தமதத்திற்கு மாறினேன். என்னுடைய யூத, கத்தோலிக்க பெற்றோருடைய வெளிவேஷத்தைப் பார்த்து, பைபிளை வெறுத்தொதுக்கி ரொம்ப காலம் ஆகியிருந்தது. கொஞ்ச காலமாகக் கடவுளைத் தேடிப்பார்த்தேன், ஆனால் கடவுள் இல்லை என்று நினைத்து தேடுவதை நிறுத்திவிட்டேன். பரிணாமத்தை நம்பினேன். மின்னலடிக்கிற மழைக் காலத்தில் வெட்டவெளியிலே நின்று, அண்ணாந்து பார்த்து வாய்க்கு வந்தபடி எல்லா அசிங்கமான பெயராலும் கடவுளை கூப்பிட்டு “நீ இருந்தாயென்றால், என்னை சாகடித்துப்போடு” என்று சொல்லி, கடவுளே இல்லை என்பதை நிரூபித்ததாக உணர்ந்தேன். நான்மட்டும் கடவுளாயிருந்தால், அப்படித்தான் செய்திருப்பேன். அவர் என்னை சாகடிக்காததால், கடவுள் இல்லை என்று முடிவுகட்டினேன். மனிதரால் உலகம் நாசமடைவதை நிறுத்த முடியாததால் உலகம் அழியத்தான் போகிறது என்று நான் நினைத்தேன். போதையிலிருந்துகொண்டே இதை எல்லாம் டிவியில் பார்க்கலாம் என்றிருந்தேன்.

நடந்தது என்னவென்றால், அதற்கடுத்த நாள் காலை அந்த இரண்டு பெண்மணிகளும் வந்தார்கள். நான் போதையிலிருந்தேன். எப்படி பொழுதுபோக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சுமார் 20 நிமிடங்களுக்கு நாங்கள் சும்மா வீணாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்புறம் 25 சென்ட்டுக்கு ஒரு சின்ன புளூ கலர் புஸ்தகத்தை அளித்துவிட்டுப் போனார்கள். 20 நிமிடம் நேரத்தை ஓட்டியதற்கு 25 சென்ட்டு கொடுப்பது நியாயந்தான் என்று நினைத்து, புஸ்தகத்தை வாங்கி அலட்சியமாக மேசையில் விசிறிப்போட்டேன்.

அடுத்த நாள் காலை, கொஞ்ச நேரம் மரிஹுவானா எடுப்பதை தடுக்கவேண்டி வாசிக்க ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். அந்தச் சின்ன புளூ புஸ்தகம் கண்ணுக்கு பட்டது, சுமார் ஒரு மணிநேரத்தைப் போக்குவதற்கு அது போதும் என்று நினைத்து, அதையெடுத்து வாசித்தேன். நான்கு மணிநேரம் ஆன பிறகு பார்த்தால், முழு புஸ்தகத்தையும் படித்து முடித்துவிட்டிருந்தேன். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற அதன் தலைப்பு சொன்ன மாதிரியே அது இருந்தது என்று முற்றிலுமாக நம்பினேன். வீட்டில் போதை வஸ்துக்கள் இருந்தன. அதனால் இந்தப் புஸ்தகத்தைக் கீழே வைத்தவுடன் திரும்பவும் போதையிலிறங்கி படித்ததெல்லாம் காற்றோடு போய்விடும் என்பது எனக்குத் தெரியும். அந்தப் புஸ்தகத்தின் கடைசி பக்கத்தில் ஒரேவொரு டாலர் அனுப்பினால் ஒரு பைபிள் கிடைக்கும் என்று எழுதியிருந்தது. ஆதலால் தபாலுறையில் ஒரு டாலரை போட்டு போஸ்ட் பண்ணிவிட்டதற்கு அப்புறம், கடவுளை பார்த்து, “கடவுளே, என்னால் செய்ய முடிந்ததெல்லாம் இவ்வளவுதான், மீதியெல்லாம் நீர்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்று சொன்னேன், வாழ்க்கையில் நான் ஜெபித்ததே கிடையாது. போஸ்ட் பண்ணிவிட்டு, போதையிலிறங்கி, கொஞ்ச நேரத்துக்கு முன்பாக என்னை அதிகமாகத் தொட்ட எல்லா விஷயங்களையுமே உதாசீனமாக உதறித்தள்ளினேன்.

போஸ்ட்டில் பைபிள் வந்தது, ஆனால் அதை ஒரு மூலையில் தூக்கிப்போட்டேன். கொஞ்ச நாள்களுக்குள்ளாக, இரண்டு சாட்சிகள் என்னை வந்து சந்தித்து பைபிள் படிப்பு நடத்துவதாகச் சொன்னார்கள். சொன்னதற்கு நானும் தலையாட்டினேன். படிப்பு நன்றாயிருந்தாலும் எந்த முன்னேற்றத்தையுமே காணோம். ஏனென்றால் என்னுடைய தத்துவஞானத்தை வைத்து முடிந்தவரை நான் அவர்களை கவர்ந்திழுக்கப் பார்த்தேன். அதோடு, அவர்கள் போனார்களோ இல்லையோ, உடனே போதை வஸ்துக்களை எடுத்தேன். இதனால் அந்த நாளில் ஏதாவது முன்னேற்றத்தைச் செய்திருந்தாலும் எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடும்.

கடைசியாக, ஒரு வருஷத்துக்கு அப்புறம், ஜிம் என்ற ஒரு சாட்சி வீட்டிற்கு வந்து எசேக்கியேல் 33:9-ஐ வாசிக்கச் சொன்னார். அதை வாசித்தேன். அது என்ன சொன்னதென்றால், “துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.” வாசித்த பின்பு, அர்த்தம் விளங்குகிறதா என்று என்னைக் கேட்டார். “நீங்கள் திரும்பி வரப்போவதில்லை, நானும் சாகப்போகிறேன்,” என்று அவர் கேட்டதற்கு சொன்னேன். “சரியாக சொன்னீர்கள்” என்று கூறி, வீட்டை விட்டார்.

அதே சாட்சி திரும்பவருகிறார்

எனக்கு இன்னும் மனச்சாட்சி இருந்தது என்று கண்டுபிடித்ததை சொல்வதில் நான் மிகவும் சந்தோஷமடைகிறேன், என்ன நினைத்திருந்தேன் என்றால் மனச்சாட்சியை நான் எப்போதோ மரக்கச்செய்தேன் என்று. பைபிளில் பார்த்த எதிர்காலத்தின் பேரில் எனக்கு ஏதோ ஏக்கம் இருந்ததால் போதை வஸ்துக்களை விட்டொழிப்பதில் இறங்குவதற்கு தீர்மானம் பண்ணினேன். வாரக்கணக்காக நானாகவே முயற்சி செய்து பார்த்தேன், எந்த லாபமுமில்லை. ஒரு நாள் சாயந்திரம் என் மனைவி, “அந்த நண்பரை” வரச் சொல்லும்படியாக யோசனை கூறினாள். அவள் சொன்னது சாட்சியாயிருந்த ஜிம். அவர் என்னிடம் வரமாட்டேன் என்று முன்பே சொல்லிவிட்டார், எனக்கு அவருடைய டெலிஃபோன் நம்பரும் தெரியாதே என்று அவளிடம் சொன்னேன். எனக்கு பொட்டு நம்பிக்கைகூட இல்லை.

சொன்ன அடுத்த நாளே, எங்களுடைய வாசலில் காவற்கோபுரம் செருகியிருப்பதை பார்த்தோம், ஜிம்மின் டெலிஃபோன் நம்பர் அதில் இருந்தது. அவருடைய மனைவி “எந்தவொரு விசேஷ காரணமுமில்லாமல்” அதை வைத்துப் போயிருக்கிறார்கள். அவருக்கு ஃபோன் பண்ணி, எனக்கிருந்த குடிப்பழக்கத்தையும் போதைப்பழக்கத்தையும் சொல்லி, அவரால் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டேன். போதைப்பழக்கத்தை விட்டேனானால், தான் வந்து என்னோடு ஒவ்வொரு நாளும் படிப்பதாக அவர் சொன்னார்.

இதில் தொடங்கியதுதான், மும்முரமான படிப்பில் இறங்கினோம். காலையும் மாலையும் படிப்புமயமாகவே இருந்தன. ஒவ்வொரு நாளும் என்னுடன் படிப்பதோடு கூட அவர் பைபிள் படிப்பு புஸ்தகங்களையும் காவற்கோபுர கட்டுரைகளையும் கொடுத்தார். இராத்திரியில் நான்கு மணிநேரம் மாத்திரம் தூங்குவது குடிகாரர்களுக்கிருக்கும் சகஜமான பிரச்சினையாகும்; இதனால் மிச்ச நேரமெல்லாம் பைபிள் படிப்பும் கையுமாக இருந்தேன். போதை வஸ்துக்களை உட்கொள்வதை நிறுத்தியதால், போன வருஷம் கற்றுக்கொண்ட எல்லா விஷயங்களோடு ஒவ்வொரு நாளும் சுமார் 18, 20 மணிநேரங்கள் படிப்பதிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் எல்லாமே உடனடியாக மனதில் பதிந்தன.

அதுபோக, சாட்சிகளின் எல்லா கூட்டங்களுக்கும் ஒழுங்காகப் போக தொடங்கினேன். சில வாரங்கள் கூட ஆகவில்லை, வாழ்க்கையிலேயே முதல் தடவையாக உண்மையில் ஜெபம் பண்ணும் அளவுக்கு முன்னேற்றம் செய்தேன், இதுதான் என்னுடைய ஒப்புக்கொடுத்தல் ஜெபமுங்கூட. வீடுவீடாகப் போய், தெரிந்த ஆட்களுக்கெல்லாம் பிரசங்கிக்க தொடங்கினேன். ஏழு படிப்புகளைத் தொடங்கினேன். இதில் ஐந்து படிப்புகள், என் மனைவியையும் மகனையும் சேர்த்து, முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு முன்னேறியிருந்தார்கள். “அந்த நண்பனை” வரச் சொல்லி மூன்றே மாசங்கள் தான், மே 23, 1976 அன்று நடந்த வட்டார மாநாட்டில் நான் முழுக்காட்டுதல் எடுத்தேன். பயனியர் சேவை (முழு நேர பிரசங்க வேலை) செய்ய தொடங்கி 13 வருஷங்களாகத் தொடர்ந்து செய்து வந்தேன்.

இது இந்தக் கதையின் தொடக்கத்தில் நான் சொன்ன காரியத்துக்கு என்னை கொண்டு வருகிறது, 50 வயதுள்ளவனாக, வீட்டில் ஒண்டியாக உட்கார்ந்து, ஒரு புஸ்தகத்தை வைத்து அழுதுகொண்டிருந்தது. தனிப்பட்ட முன்னேற்றத்திற்கான புஸ்தகங்கள் 80-களில் மிகவும் பிரபலமாக இருந்தன. அந்தப் புஸ்தகங்களில் ஒன்றை நான் வாசித்தேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், தனிப்பட்ட முன்னேற்றத்திற்கான அந்தக் குறிப்பிட்ட பாகம் எனக்குப் பிரயோஜனமாக இருக்கவில்லை. அதில் சொல்லப்பட்டிருந்த உலகப்பிரகாரமான கருத்தைப் பின்பற்ற நான் விரும்பவில்லை. ஆனால், குழந்தைப்பருவத்தின்போது காயப்பட்டுக் கிடந்த வருஷங்களும் அன்பிற்காக வாடிக்கிடந்த உணர்ச்சிப்பூர்வமான தேவைகளும், உணர்ச்சிப்பிரகாரமாக என்னை எந்தளவு முடமையாக விட்டுவைத்திருந்தது என்பதை அந்தப் புஸ்தகமானது முதல் தடவையாக உணர்த்தியது. எனக்கு இரண்டு விதமான கண்ணீரும் வந்தன. ஆனந்தக் கண்ணீருக்கான காரணம், உணர்ச்சிப்பூர்வமான திறமையில் ஏன் நான் எப்போதும் அவ்வளவு குறைவுபட்டிருந்தேன் என்பதை இப்போது விளங்கிக்கொள்ள முடிவதை நினைத்து. அதோடு மனவருத்தந்தரும் கண்ணீருக்கான காரணம், உணர்ச்சிப்பூர்வ மானிடனாக 50 வருஷங்களாக உணர்ச்சிபிரகாரமாய் பிரதிபலிக்க முடியாமல் கஷ்டப்பட்டுவந்த அந்தப் பெரிய இழப்பை நினைத்து. என் வாழ்க்கை பூராவும் அனுபவித்த சோர்வுணர்வின் அநேக தாக்கல்களை அது தெளிந்துணரச் செய்தது.

போகப்போக, யெகோவாவை பற்றியும் அவருடைய அன்பை பற்றியும் என்னையுங்கூட அவர் அன்புகூருகிறார் என்பதையும் பைபிளில் படித்தபோது உணர்ச்சியில் அப்படியே ஆழ்ந்துவிட்டேன். முன்பெல்லாம் இப்படி உணர்ந்ததே இல்லை. என் மனைவியிடமும் என் மகனிடமும் கடவுளுடைய சபைகளிலுள்ள சகோதர சகோதரிகளிடமுமான அன்பை உணர்ந்ததே கிடையாது. அதோடு இங்கே பூமியில் கடவுள் வாக்குக்கொடுத்திருக்கும் நீதிநிறைந்த புதிய உலகில் என்றும் வாழ்வதற்கான வாய்ப்பை அளிக்கும்படி நான் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பற்றி பிரசங்கிக்கும் ஆட்களிடமான அன்பையும் உணர்ந்ததே கிடையாது.

அன்பு காட்டவும் அன்பு காட்டப்படவும் படைக்கப்பட்டிருப்பது

அன்பு காட்டவும் அன்பு காட்டப்படவும் நாம் படைக்கப்பட்டோம். பிறந்தவுடன், ஒரு குழந்தைக்கு இந்த அன்பும், ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் என்ற உணர்ச்சியும் தேவை. ஒரு குழந்தை அதன் பெற்றோரிடமிருந்து அன்பையும் ஏற்றுக்கொள்ளுதலையும் பெற்று வரவில்லையென்றால், அது அன்பு காட்டப்படாததாக நினைத்து, தன்மான உணர்ச்சிகள் இல்லாமற்போகிறது. நான் பொடிப்பயலாக இருந்தபோது, யாராவது என்னை தூக்கியெடுத்துவைத்து கொஞ்சவேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன். வீட்டிற்கு விஜயம் செய்யும் ஆட்கள் என்னை விளையாடும் இடத்தில் பார்க்கும்போது, தூக்குவார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டே இருப்பது எனக்கு இன்னுங்கூட ஞாபகமிருக்கிறது. அவர்கள் என்னை தூக்கவே மாட்டார்கள். யாருமே என்னை தூக்காததால், அழத் தொடங்கிவிடுவேன்.

குழந்தையாயிருக்கும்போது இருந்த அந்தத் தழும்புகள்தான் கணவருக்கான பாகத்தையும் குடும்பத் தலைவனுக்கான பாகத்தையும் பண்ண முடியாமல் என்னை முடக்கிப்போட்டு பரலோக பிதாவாகிய யெகோவாவால் என்மேல் அன்பு காட்ட முடியும் என்பதை நம்பமுடியாதபடி வைத்தது. யெகோவாவைப் பற்றிய சத்தியம் என்னை மெதுவாக மாற்றியமைத்தது; அவரைப் பற்றி எனக்கிருந்த கருத்தை மூளையிலிருந்து அகற்றிவிட்டு, இருதயத்தைச் சென்றெட்டியது; இதனால் யெகோவா என்னை மனப்பூர்வமாக அன்புகூருகிறார் என்று இப்போது எனக்குத் தெரியும். அந்த அன்பை வேறு எப்படியாவது சம்பாதிக்க முடியாது என்பதையும் அறிந்திருக்கிறேன். அன்பின் தேவனாகிய யெகோவா தேவனிடமிருந்து கிடைக்கும் தகுதியற்ற தயவே இது.

இதெல்லாவற்றைக் காட்டிலும் மிக முக்கியமானது என்னவென்றால், யெகோவாவின் ஆசீர்வாதங்களாலேயே என் மனைவியும் நானும் இப்போது ஒரு நல்ல வாழ்க்கையை அனுபவித்து வருகிறோம். ராஜ்ய பிரசங்கிகளுடைய தேவை அதிகமாக இருக்கும் இடத்தில் தற்போது சேவித்து வருகிறோம். அப்படியாக இருப்பதுதான் அரிஜோனா மலைகளில் இருக்கும் ரசனையான சின்ன ஊரில் உள்ள அன்பான ஒரு சிறிய சபை. சபையின் நடத்தும் கண்காணியாக நான் சேவிக்கிறேன். சபை புத்தகப் படிப்பு ஒன்றை நடத்துவதோடு தேவராஜ்ய ஊழியப் பள்ளியை நடத்துவதுங்கூட அதிக சந்தோஷமாக இருக்கிறது. ஓய்வூதியத்தைப் பெறுவதோடு, ஜன்னல்களை சுத்தம்செய்யும் ஒரு சிறு தொழிலையும் செய்துவருகிறேன். இதனால் பொருளாதார விதத்தில் தேவையானதெல்லாமே எங்களுக்கு இருக்கிறது; எங்கள் ஊழியத்தைச் செய்வதற்கும் எங்களுடைய அன்பான பரலோக பிதாவுக்கு இதர சேவைகளைச் செய்வதற்கும் போதுமான நேரமும் இருக்கிறது.

“யெகோவாவின் சாட்சிகள் வரக்கூடாது” என்ற சைனை என்னுடைய மனைவி தூக்கியெறிந்தபோது எங்கே இருந்தேன் என்பதை திரும்பவும் யோசித்துப் பார்க்கையில், என்னுடைய பரலோக பிதா எனக்கு செய்திருப்பதை பற்றி நன்றி உள்ளவனாயிருக்கிறேன். உருப்படியாக ஒரு வேலை செய்யமுடியாதிருந்த போதைக்கு அடிமையான நபராக, என்னோடு சேர்ந்து எல்லாரும் கொலைசெய்யப்படுவதைப் பார்க்கும் நம்பிக்கையைக் கொண்டிருந்தவனாகிய நான், பூமியிலுள்ள யெகோவாவின் காணக்கூடிய அமைப்பில் ஒரு அங்கத்தினனாக இருந்து, உலகத்திற்கான ஒரே நம்பிக்கையாயிருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை எவ்வளவு ஆட்களுக்கு முடியுமோ அவ்வளவு ஆட்களுக்கு தெரியப்படுத்துவதற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறேன். நான் எப்போதும் ஏங்கிய காரியங்களாகிய அன்பு, நம்பிக்கை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை அளிக்கும் ஆட்களால் யெகோவா என் வாழ்க்கையை நிரப்பியிருக்கிறார்.

மேலும் எந்த நோவும் உணராத “பாறை”யாகவோ அறவே அழாத “தீவா”கவோ இருக்க இனியும் முயற்சி செய்யப்போவதில்லை.—லேரி ரூபன் சொன்னபடி.

[பக்கம் 23-ன் படம்]

லேரி ரூபனும் அவருடைய மனைவி டானாவும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்