இளைஞர் கேட்கின்றனர்
அப்பா ஏன் சாக வேண்டும்?
பலமாகவும் திடகாத்திரமாகவும் இருப்பதாக அறியப்பட்டிருந்த அல்லின் தகப்பன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். அப்படியிருந்தும்கூட, தன் அப்பா சீக்கிரத்தில் வீடுதிரும்புவார் என்று அல் நம்பிக்கையாக இருந்தான். ஆனால் திடீரென்று அவருடைய நிலைமை மிகவும் மோசமாகி, அவர் செத்துப்போனார். “அவ்வளவு திடகாத்திரமான ஒருவர் சாகக்கூடும் என்று நான் நம்ப மறுத்தேன்,” என்று அல் புலம்பினான்.
கிம்மின் தகப்பனார் ஒரு அன்பான கிறிஸ்தவ மனிதர். நீண்டநாள் உடல்நல பிரச்சினை ஒன்றின் காரணமாக முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்; ஆனால் அவர் குணமடைந்து வருவதுபோன்று தோன்றினார். பின்னர் ஒரு நாள் அவர் குளியலறையில் விழுந்துவிட்டார். “அவர் செத்துவிட்டார் என்பதை அவரைப் பார்த்த அந்த நிமிடத்திலேயே நான் அறிந்தேன்,” என்று கிம் நினைவுகூருகிறாள். “CPR-ன் (cardiopulmonary resuscitation) ஆரம்ப வடிவமைப்பு ஒன்றைக் கொண்டு அவரைக் காக்கும்படி என் அம்மாவும் அண்ணனும் கடுமையாக முயன்றார்கள். நான் என் அறைக்குச் சென்று ஜெபம் செய்தேன்: ‘யெகோவாவே, இதைச் சம்பவிக்க விடாதேயும். தயவுசெய்து அவரை வாழும்படி அனுமதியும்!’ ஆனால் அவர் ஒருபோதும் சுயநினைவிற்குத் திரும்பவில்லை.”
இந்த உலகில் சாவு என்பது ஒரு கொடூர உண்மையாக இருக்கிறது. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; . . . பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:1, 2) நீங்கள் ஒரு கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டிருந்தால், மக்கள் ஏன் சாகிறார்கள், செத்தவர்களின் நிலை என்ன, உயிர்த்தெழுதல் நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிய பைபிள் போதனைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.a
என்றபோதிலும், உங்கள் பெற்றோர் ஒருவரை இழப்பதால் நீங்கள் அலைக்கழிக்கப்படக்கூடும். வாழ்நாட்காலத்தில் மிகவும் கஷ்டமான அனுபவங்களில் ஒன்று அது. கைவிடப்பட்டவர்களாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களாகவும் அது உங்களை உணரச் செய்யும். உடல்பூர்வமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நீங்கள் இன்னும் வளர்ந்துகொண்டிருக்கிறீர்கள்; ஓரளவு சுதந்திரத்தை நீங்கள் நிலைநாட்டியிருக்கக்கூடும் என்றாலும், பல வழிகளில் உங்களுக்கு இன்னும் உங்கள் பெற்றோர் தேவைப்படுகின்றனர்.b
அப்படியென்றால், பருவவயதினர் ஒருவரின் பிரதானமான பயம், அவன் அல்லது அவளின் பெற்றோரை இழப்பதாகும் என்று ஒரு சுற்றாய்வு வெளிக்காட்டியதில் ஆச்சரியமேதுமில்லை. ஓர் இளம் பெண் ஒத்துக்கொண்டாள்: “பெரும்பாலான சமயங்களில், என் பெற்றோர் எனக்கு உண்மையிலேயே ஒரு நச்சரிப்பாக இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களுக்கு எதுவும் சம்பவித்துவிடுவதை நான் விரும்பமாட்டேன். நான் அதைக் குறித்து கவலைப்படுகிறேன்.”—அமெரிக்க பருவவயதினரின் சொந்த வாழ்க்கை, (The Private Life of the American Teenager).
அப்படியானால், உங்கள் பெற்றோரில் ஒருவர் செத்துப்போயிருந்தால், நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக அதிர்ச்சியடைக்கூடும் என்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. ஏன், ஆரம்பத்திலாவது, உங்களால் அழக்கூட முடியாதபடி அவ்வளவு மரத்துப்போனவர்களாக நீங்கள் உணரக்கூடும். இது இயல்புக்கு மாறானது அல்ல. அதிக அழுத்தத்தின்கீழ் இருந்தபோது, சங்கீதக்காரன் இவ்வாறு கூறினார்: “நான் [மரத்துப்போய், NW] மிகவும் நொறுக்கப்பட்டேன்.” (சங்கீதம் 38:8) குடும்பத்தில் மரணமும் துக்கமும் (Death and Grief in the Family) என்ற புத்தகம் சொல்கிறது: “ஆழமான வெட்டுக் காயத்தை உடைய ஒருவர் அல்லது ஒரு எலும்பு முறிவை உடைய ஒருவர் உடல்சார்ந்த அதிர்ச்சிநிலைக்கு உள்ளாகிறார். இந்த அதிர்ச்சியானது, வேதனையின் பெரும்பாதிப்பு [உடனடியாக] தாக்காதபடி பார்த்துக்கொள்ளும் ஒருவித பாதுகாப்பு ஏற்பாடாக இருக்கிறது. துக்கமும் பெரும்பாலும் அவ்விதத்திலேயே செயல்படுகிறது.” என்றாலும், அந்த ஆரம்ப அதிர்ச்சி தணிந்ததும் என்ன சம்பவிக்கக்கூடும்?
‘நான் அவ்வளவு கோபமாக உணருகிறேன்’
லூக்கா 8:52-ல், அந்தச் சிறு பெண்ணின் மரணத்திற்குப்பின், ‘எல்லாரும் அழுது துக்கங்கொண்டாடினார்கள்,’ என்று வாசிக்கிறோம். ஆம், அன்பான ஒருவரை மரணம் தாக்கும்போது, வருத்தம், குற்ற உணர்வு, பயம்—கோபமும் உட்பட—பல்வேறு பலமான உணர்ச்சிகளை உணருவது இயல்பானதே.
ஏன் கோபம் வரவேண்டும்? ஏனென்றால் நம்முடைய பெற்றோர் நம்மை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் உணர வைக்கிறார்கள். அவர்களில் ஒருவர் செத்துப்போகும்போது, அச்சுறுத்தப்பட்டவர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் உணருவது இயல்பானதே. உங்களுடைய பெற்றோர் வேண்டுமென்றே உங்களை விட்டுவிட்டுச் சென்றார் என்பதனால் அல்ல. ஆனால் மரணம் நமக்குச் சத்துருவாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 15:26) அன்பான ஒருவரை மரணம் கொள்ளை கொள்ளும்போது, அந்த இழப்பு முற்றிலும் நிஜமானதாகவும் மறுக்கமுடியாதபடி வேதனையூட்டுவதாகவும் இருக்கிறது. அதை 18 வயதான வென்டி எவ்வாறு விவரிக்கிறாள் என்பதைக் கவனியுங்கள்: “என்னுடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகு, நான் உலகில் தனிமையானவளாகவும் பயமுள்ளவளாகவும் உணர்ந்தேன். எனக்கு உதவி செய்யும்படி என் தந்தை என்னுடன் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் எத்தனையோ முறைகள் விரும்பினேன்.” நீங்கள் இழந்திருப்பவற்றை—அந்த அன்பு, ஆதரவு, போதனை ஆகியவற்றை—நினைத்துப் பார்க்கும்போது, நீங்கள் கோபமடையக்கூடும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.
உதாரணமாக, இளம் டெபி, தன் மாமாவிடம் நெருங்கிய உறவு கொண்டிருந்தாள். அவருடைய மரணத்திற்குப்பின் அவள் எழுதினாள்: “அவ்வளவு நல்லவரும், அவ்வளவு நன்றாக நேசிக்கப்பட்டவரும், யெகோவாவை அந்த அளவுக்கு நேசித்தவருமாகிய ஒருவர் கஷ்டப்பட்டு, அவர் அனுபவித்ததைப் போன்ற ஒரு வேதனையான மரணத்தை அடையவேண்டுமென்பது நியாயமற்றதாகத் தோன்றுகிறது. நான் ஒரு கிறிஸ்தவளாக வளர்க்கப்பட்டிருந்து, மக்கள் ஏன் வயதாகி மரணமடைகிறார்கள், நல்லவர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் என்றெல்லாம் அறிந்திருந்தாலும், நான் அனுபவித்த அந்தக் கோப உணர்ச்சிகளுக்கு நான் தயாராக இருக்கவில்லை.”
மரணமடைந்த பெற்றோரிடமாகவும்கூட சிலர் ஓரளவிற்குக் கோபமடைகின்றனர். இளம் விக்டோரியா இவ்வாறு ஒத்துக்கொள்கிறாள்: “போன வருடம் என்னுடைய தாத்தா செத்துப்போனார். அவர் செத்துப்போனதற்காக நான் அவரிடம் அவ்வளவு கோபமாக உணர்ந்தேன்; பின்னர் அந்தக் கோபம் மாறியபோது, நான் அவ்வளவு கவலையாக உணர்ந்தேன்.” உண்மையில், சிலர் தங்கள் கோபத்தை பரலோகம்நோக்கி திசைதிருப்பும்படி சோதிக்கப்பட்டிருக்கின்றனர். “எனக்குக் கடவுளிடம் ரொம்ப கோபம் வருகிறது,” என்று தன் தந்தையை திடீர் மாரடைப்பில் இழந்த 14-வயது டெரி ஒப்புக்கொள்கிறாள். “என்னவாக இருந்தாலும் சரி, நான் அப்பாவை நேசிக்கும்போது, அவர் எனக்கு அவ்வளவு தேவையாக இருக்கும்போது, அவர் ஏன் செத்திருக்க வேண்டும்?”
‘நான் இப்போது மிகவும் குற்ற உணர்வுள்ளவளாக உணருகிறேன்’
பெற்றோர் ஒருவரின் மரணத்திற்கு, குற்ற உணர்ச்சி மற்றொரு பொதுவான பிரதிபலிப்பாக இருக்கிறது. ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்,’ என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 3:23) அதன் விளைவாக, அநேக பருவவயதினர் அவ்வப்போது தங்கள் பெற்றோருடன் சண்டைபோடுகின்றனர். ஆனால் பெற்றோர் ஒருவர் மரணமடையும்போது, பழைய சண்டைகளையும் வாக்குவாதங்களையும் பற்றிய நினைவுகள் பெருங்கவலைக்குரிய ஒரு காரணமாகிவிடலாம்.
ஒருவரையொருவர் நேசிக்கும் மக்கள்கூட சில சமயங்களில் பலமான கருத்துவேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்வது உதவிசெய்யக்கூடும். “நான் என் அம்மாவை நேசித்தேன்; அவர்களும் என்னை நேசித்தார்கள் என்று எனக்குத் தெரியும்; ஆனால் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர் எங்களுக்குள் பிரச்சினைகள் இருந்தன. இப்போது அர்த்தமற்றவையாகத் தோன்றுகிற, ஆனால் அப்போது எனக்கு முக்கியமானவையாக இருந்த காரியங்களுக்காக நான் அவர்களிடம் கோபப்பட்டேன். ஒருமுறை, நான் அவர்களிடம் ரொம்ப கோபமாக இருந்தபோது, மேலுள்ள என்னுடைய அறைக்கு அவசரமாக வந்து, அவர்கள் சாக வேண்டுமென்று இரகசியமாக விரும்பியது எனக்கு நினைவிருக்கிறது. அம்மா நோய்வாய்ப்பட்டு திடீரென்று மரணமடைந்தபோது, ஒருவர்மீது ஒருவர் தீர்க்காமல் வைத்திருந்த இந்த உணர்வுகள் யாவும் மேலெழும்பின. நான் இப்போது மிகவும் குற்ற உணர்வுள்ளவளாக உணருகிறேன்.” நீங்கள் என்ன சொல்லியிருக்கக்கூடும் அல்லது நினைத்திருக்கக்கூடும் என்றாலும் சரி, உங்கள் பெற்றோரின் மரணத்திற்கு நீங்கள் காரணமாக இருக்கவில்லை. அது உங்களுடைய குற்றம் அல்ல.
துக்கத்தின் வேதனை
அவ்வாறிருந்தாலும்கூட, நீங்கள் அதிகப்படியான வருத்தத்தையும் துக்கத்தையும் உணரக்கூடும். பைபிள் காலங்களிலிருந்த விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் அதேவிதமான உணர்ச்சிகளை அனுபவித்தனர் என்பதை அறிவதில் ஆறுதலடையுங்கள். யோசேப்பு தன் அன்பான தந்தையை மரணத்தில் இழந்தபோது, “தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான்.” (ஆதியாகமம் 50:1) மேலுமாக, இயேசு கிறிஸ்து, அவருடைய நண்பனாகிய லாசரு இறந்தபோது “கண்ணீர் விட்டார்.”—யோவான் 11:35.
பெற்றோர் ஒருவரின் மரணத்தைக் குறித்து ஒருவர் துக்கித்துக்கொண்டிருக்கும்போது, சில வேளைகளில் நாம் வருத்தத்தால் மூழ்கடிக்கப்பட்டவர்களாக உணருவது இயல்பானதே. சங்கீதக்காரன், தன்னுடைய கவலையை விளக்க முயற்சிக்கையில், ‘தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடப்பவனுக்கு’ தன்னை ஒப்பிட்டுப் பேசினார். (சங்கீதம் 35:14) வருத்தத்தால் ஆழ்த்தப்பட்டு, நீங்கள் ‘துக்கத்தால் தூக்கமின்றி’கூட இருக்கக்கூடும். (சங்கீதம் 119:28, NW) நீங்கள் பசியிழக்கக்கூடும் அல்லது பள்ளியில் கவனிப்பதைக் கஷ்டமானதாகக் காணக்கூடும். நீங்கள் மனச்சோர்வடையவும்கூடும்.
நிலைமையை இன்னும் மோசமாக்கும்விதத்தில், உயிருடன் இருக்கும் உங்கள் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் தங்கள் சொந்த வருத்தத்தில் அவ்வளவு மூழ்கியிருப்பதால் உங்களுக்கு அவ்வளவு உதவியாகவும் ஆதரவாகவும் இருக்கமுடியாது. கிம் இவ்வாறு நினைவுகூருகிறாள்: “என் தந்தையை நாங்கள் அடக்கம் செய்தபின், எங்களுடைய வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப முயன்றோம். இப்போது அம்மா, வீட்டின் தலைவியாக இருந்தார்கள். ஆனால் சில சமயங்களில் எங்களுடைய குடும்ப பைபிள் படிப்பின்போது உணர்ச்சிகளை அடக்க முடியாமல் அழுதுவிடுவார்கள். அப்பாவின் பெயரைச் சொல்லி இராத்திரியில் அவர்கள் அழுவதை என்னால் கேட்க முடிந்தது.”
ஆறுதலைக் கண்டடைதல்
தீர்க்கதரிசியாகிய எரேமியா ஒருமுறை சொன்னார்: “என் சஞ்சலம் எப்படி ஆறும்! என் இருதயம் தளர்ந்ததே.” (எரேமியா 8:18, திருத்திய மொழிபெயர்ப்பு) அந்த வேதனை ஒருபோதும் மாறாது என்பதாகவும் நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். . . . எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.” (2 கொரிந்தியர் 1:3, 4) கடவுள் தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளின் பக்கங்கள் மூலமாக அந்த ஆறுதலை முக்கியமாக அளிக்கிறார். மேலுமாக, அவருடைய ஆவி, தேவையான உதவியையும் ஆறுதலையும் அளிக்கும்படி நண்பர்களையும் குடும்ப அங்கத்தினர்களையும் தூண்டலாம்.
தவறாகத் திசைதிருப்பப்பட்ட கோபம், நீங்கள் கடவுளுடைய இந்த ஆறுதலை நாடுவதிலிருந்து உங்களைத் தடுத்துவிட அனுமதிக்காதீர்கள். நீதிமானாகிய யோபு தன்னுடைய வேதனைமிக்க இழப்புகளுக்குக் கடவுளைக் குற்றஞ்சாட்டும் தவறைச் செய்தார். அவர் மனங்கசந்து இவ்வாறு கூறினார்: “நான் சமாதானத்தோடே வாழ்ந்துகொண்டிருந்தேன், ஆனால் கடவுள் என் பிடரியைப் பிடித்து தூக்கி, என்னை அடித்து, என்னை நொறுக்கிப்போட்டார்.” (யோபு 16:12, 13, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) ஆனால் யோபு தவறாக நினைத்தார். கடவுள் அல்ல, சாத்தானே யோபின் தொந்தரவுகளுக்குக் காரணமாக இருந்தான். “தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே,” என்று இளைஞனாகிய எலிகூ யோபுக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது. பின்னர் யோபு தன்னுடைய அவசரக் கூற்றுகளை முழுமையாகத் தவறென ஒத்துக்கொண்டார்.—யோபு 34:12; 42:6.
அதேவிதமாகவே, காரியங்களை மிக சமநிலையான ஒரு நோக்குநிலையிலிருந்து நோக்கும்படி உங்களுக்கு உதவிசெய்ய யாராவது ஒருவர் உங்களுக்குத் தேவைப்படக்கூடும். கிம் நினைவுகூருகிறாள்: “வயதான கிறிஸ்தவ மூப்பர் ஒருவர், யோவான் 5:28, 29 மற்றும் 1 கொரிந்தியர் 15:20 போன்ற வேதவசனங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்வதன்மூலம் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை எங்களுக்கு நினைவுபடுத்தினார். அவர் சொன்னார்: ‘உங்கள் அப்பா திரும்பி வருவார், ஆனால் பரதீஸில் அவரைப் பார்க்கவேண்டுமானால் நீங்கள் உண்மையாக நிலைத்திருக்க வேண்டும்.’ நான் அதை ஒருபோதும் மறக்கமாட்டேன்! மரணம், மனிதனுக்கான கடவுளுடைய நோக்கம் அல்ல என்பதையும் அவர் சொன்னார். என்னுடைய அப்பாவின் மரணத்திற்கு கடவுள் எவ்விதத்திலும் காரணராக இல்லை என்பதை நான் உணர்ந்தேன்.”
காரியங்களைக் குறித்து வேதப்பூர்வமாக சிந்தித்தது கிம்மின் வேதனையை உடனடியாக நீக்கிவிடவில்லை, ஆனால் அது ஒரு தொடக்கமாகவே இருந்தது. நீங்களும் வேதனை மற்றும் துக்கத்திலிருந்து மீண்டு வரலாம். குறிப்பாக நீங்கள் எப்படி அதைச் செய்ய முடியும் என்பதே இந்தத் தொடரிலுள்ள எங்களுடைய அடுத்த கட்டுரையின் பொருளாக இருக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a மேலுமான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தைப் பார்க்கவும்.
b தாத்தா பாட்டிகள், ஆண்ட்டிகள், அங்கிள்கள் போன்று, இளைஞர் விசேஷமாக நெருங்கிய உறவுகளை அனுபவித்திருந்த மற்ற உறவினர்களையும் இந்தக் கலந்தாலோசிப்பு உட்படுத்துகிறது.
[பக்கம் 26-ன் படம்]
பெற்றோரின் மரணம், வாழ்க்கையின் மிகக் கடினமான அனுபவங்களில் ஒன்றாக இருக்கலாம்