எக்காளம்—போர்க்களம் முதல் இசையரங்கம் வரை
அரசனாகிய அபியாவின் காலத்தில், யூதாவின் போர்வீரர்கள், பதுங்கியிருந்த போர்வீரர்களின் மத்தியில் சிக்கிக்கொண்டனர். 8,00,000 பகைவீரர்களால் சூழப்பட்டு, 2-க்கு 1 என்ற வீதத்தில் எண்ணிக்கையில் விஞ்சப்பட்டிருந்தனர். தப்புவது சாத்தியமற்றதாகத் தோன்றியது. திடீரென்று, எக்காளங்களின் சத்தம் எங்கும் ஊடுருவியது! யூதாவின் ஆண்கள், அவர்களுடைய நரம்புகளின் வழியே அட்ரீனலின் பொங்கியெழ, எங்கும் எதிரொலிக்கும் போர் முழக்கத்தை எழுப்பி, போருக்குள் புகுந்தனர். அவர்களுக்கு எதிரான சாதகமற்ற நிலையின் மத்தியிலும், யூதேயர்கள் பகைவரைத் தோற்கடித்தனர்.—2 நாளாகமம் 13:1-20.
அந்த எக்காளங்களின் தொனியைக் கேட்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருந்திருக்கும்! அது சந்தேகமின்றி யூதேயர்களுக்கு யெகோவாவின் வாக்குறுதியை நினைவுபடுத்தியது: “உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவீர்கள்.” (எண்ணாகமம் 10:9) யூதாவுக்கு யெகோவாவிலிருந்த நம்பிக்கையை எக்காளங்களை ஊதுவது வெளிக்காட்டியது; மேலும் அந்த நம்பிக்கை பலனளிக்கப்பட்டது.
எக்காளத்தின் வரலாறு, இந்த பைபிள் சம்பவத்திற்கும் வெகு முன்னான காலத்திற்குச் செல்கிறது. உலோக எக்காளம், கிறிஸ்துவுக்கு சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னர் எகிப்து வரையாகச் செல்கிறது. இந்தப் பண்டைக்கால எக்காளங்கள், நாம் தற்காலத்தில் அறிந்திருப்பவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டவை. ஈர்க்கக்கூடிய இந்தக் கருவியின் வளர்ச்சியைக் கவனியுங்கள்.
ஆரம்ப நிலைகள்
அதன் ஆங்கில வார்த்தையாகிய “ட்ரம்பட்” என்பது யானையின் தும்பிக்கையைக் குறிக்கக்கூடிய பழைய பிரெஞ்சு வார்த்தையாகிய ட்ராம்ப் என்பதிலிருந்து வருகிறது. சான்றுகளின்படி, ஆரம்பகால எக்காளங்கள், யானையின் தும்பிக்கையைப் போல காணப்பட்டன. கிரேக்க நாடகாசிரியரான எஸ்கலஸ் (பொ.ச.மு. 525-456), எக்காள தொனியை “தகர்க்கவைக்கும்” தொனி என்றழைத்தார். அதன் உபயோகம் போர் சமிக்கைகளுக்கும், சவ அடக்கம் அல்லது கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளுக்கும், மற்ற பொது சம்பவங்களுக்கும் மட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இஸ்ரவேலின் எக்காளங்கள் இராணுவ சமிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கையில், அவை ஆலயத்திலும் இசைக்கப்பட்டன. வெள்ளியிலிருந்து உயர்தர கருவிகளை உண்டாக்குவதற்காக திறம்பட்ட கைவினைஞர்கள் அமர்த்தப்பட்டனர். ஆலயத்தில், “[பரிபூரண ஒருங்கிசைவுடன், டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்] ஒரே குரல் கேட்கும்படி செய்ததாக” விவரிக்கப்பட்ட அளவிற்கு, எக்காளம் ஊதியவர்கள் ஒத்திசைவாக ஊதியிருக்கின்றனர்.—2 நாளாகமம் 5:13, NW.
ஆகவே இஸ்ரவேலின் எக்காளங்கள் எவ்விதத்திலும் கண்களுக்கோ காதுகளுக்கோ கலைநயமற்றவையாக இருக்கவில்லை. என்றபோதிலும், சூழப்பட்டிருந்த தேசங்களிலிருந்த எக்காளங்களைப்போலவே, அவர்கள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான தொனிகளை மட்டுமே உண்டாக்க முடியும். எக்காளத்தின் திறமைகள் மேம்படுத்தப்படுவதற்குள் நூற்றாண்டுகள் கடந்து சென்றுவிடும்.
நவீன எக்காளத்தின் வளர்ச்சி
எக்காள தொனியின் வேறுபாட்டெல்லையை அதிகரிப்பதற்காக, அதன் திட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். முதலாவதாக, நீளம் அதிகரிக்கப்பட்டது. ஒரு நீளமான கருவி, ஸ்வரங்களின் பெரிய தொகுப்பைக் கொண்டிருக்கும் என்று காரணங்காட்டப்பட்டது. (புய்ஸின் என்று அழைக்கப்பட்ட) இடைக்கால எக்காளம் ஒன்று உண்மையில் 1.8 மீட்டர் நீளமுடையதாய் இருந்தது! நினைத்துப்பார்க்கக்கூடிய விதமாகவே, அது வாசிப்பதற்குப் பொருத்தமற்றதாக இருந்தது. இதன் காரணமாக, 14-ம் நூற்றாண்டில், கையாளுவதற்கு வசதியாக, எக்காளம் S-வடிவத்தில் வளைக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர், மூன்று இணை கிளைகளை உடைய ஒரு நீள்வட்ட வளையத்தை அது பெற்றது.
புதிய எக்காளம் அதிக தொனிகளை இசைக்கமுடியும்; ஆனால் உயர்ந்த விசையாற்றல் அளவில் மட்டுமே அவ்வாறு இசைக்கமுடியும். இந்த ஸ்வரங்களை அடையப்பெறுவது கடினமாக இருந்தது. இருந்தபோதிலும், உயர்ந்த சுருதிவேறுபாடுகள் உள்ள பகுதிகளுக்குப் பொருந்தும்வகையில், சிலர் கிளாரினோவுக்கு இசை எழுத ஆரம்பித்தனர். அந்தச் சகாப்தத்தின் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் யோஹான் ஸேபாஸ்டியான் பாக் (1685-1750) என்பவர்.
முடிவாக, க்ரூக்குகள் என்றழைக்கப்பட்ட கூடுதலான வளைவுகளுள்ள குழல்கள் எக்காளத்தோடு சேர்க்கப்பட்டன. அந்தக் கருத்து எளிமையானது: கூடுதலான குழல்பகுதி, முக்கியமான காற்றுப் பகுதியின் நீளத்தை அதிகரித்தது; இவ்வாறாக தொனியில் அதிகப்படியான வேறுபாட்டளவை ஏற்படுத்துகிறது. க்ரூக்குகள், எக்காளத்தின் பொதுவான தொனியை F-ஸ்வரத்திலிருந்து தாழ்ந்த B-ஃப்ளாட் ஸ்வரம் வரையாக இசைக்கச் செய்கிறது.
இவ்வாறு, வால்ஃப்காங் ஆமாடேயுஸ் மொஸார்ட் (1756-1791) என்பவரின் சமயத்தில் உயர்தொனியுள்ள கிளாரினோ இசைத்தல் மறைந்துவிட்டது. கிளாரினட் உயர்ந்த விசையாற்றல் நிலையையும் ஓரளவு எளிதாக சமாளித்தது; அதேநேரத்தில் எக்காளம் இப்போது நடுத்தர தொனியளவைக் கவனித்தது.
இந்தப் புதிய எக்காளம் தங்குதடையின்றி இழைந்தியங்குவதாய் இருந்தது. ஆனால் அது இன்னும் இசைப்பதற்கு செளகரியமற்றதாக இருந்தது; ஏனென்றால் க்ரூக்ஸை சரியமைத்துக்கொள்ள இரு கைகளையும் பயன்படுத்தவேண்டியதாய் இருந்தது. எனவே, மேலுமான மாற்றங்கள் விரும்பத்தக்கதாய் இருந்தன.
சுருதிக்கட்டைகளுள்ள ஒரு எக்காளம்
சுமார் 1760-ல், கால்பல் என்ற ஒரு ரஷ்ய இசைக்கலைஞர் ஒரு திடீர் கண்டுபிடிப்பைச் செய்தார். எக்காளத்தின் மணிவடிவ வாயருகில் ஒரு துளையை அமைத்து, அடைப்பானாக செயல்படும் பஞ்சுத்திண்டு கட்டையால் அதை மூடினார். இந்தச் சுருதிக்கட்டையைத் திறப்பது எந்த ஸ்வரத்திலும் எக்காளத்தின் தொனியை அரைப் படி கூட்டியது. 1801-ல், வியன்னாவைச் சேர்ந்த எக்காளம் ஊதுபவரான ஆன்டோன் வைடிங்கர் என்பவர் ஐந்து சுருதிக்கட்டைகளை உடைய ஒரு எக்காளத்தை உண்டாக்குவதன்மூலம் கால்பல்லின் திட்டமைப்பைவிட முன்னேற்றுவிக்கப்பட்ட ஒன்றை அமைத்தார். கடைசியாக, ஸ்வரவரிசைப்பட்டியின் எல்லா ஸ்வரங்களையும் உண்டாக்கக்கூடியதும், இசைப்பதற்கு எளிதானதுமாக இருக்கும் ஒரு எக்காளம் கிடைக்கக்கூடியதாயிற்று.
என்றபோதிலும், வைடிங்கரின் எக்காளம்கூட ஒரு பெரிய குறைபாட்டைக் கொண்டிருந்தது. அந்தச் சுருதிக்கட்டைகளைத் திறப்பது அந்தக் கருவியின் ஒலியலை அதிர்வுடன் குறுக்கிட்டது; எக்காளத்தின் வேறுபடுத்திக் காட்டும் ஒலியை அது பெருமளவிற்கு மாற்றியது. ஆகவே சுருதிக்கட்டைகளுள்ள எக்காளம் நிலைக்கவில்லை. எக்காள திட்டமைப்பிலேயே முற்றிலும் புதிய ஒரு அணுகுமுறைக்குச் சாதகமாக அது சீக்கிரத்தில் கைவிடப்பட்டது.
முதல் வால்வு எக்காளம்
1815-ல் சைலேசியாவைச் சேர்ந்த ஹைன்ரிக் ஷ்டோல்ஸல், பிஸ்டன்களை அல்லது வால்வுகளை எக்காளத்திற்குப் பொருத்திய ஒரு கண்டுபிடிப்புக்காக தனிக்காப்புரிமை பெற்றார். திட்டமிட்டு அமைக்கப்பட்ட துளைகளின் வழியாக, ஒவ்வொரு வால்வும் காற்றுப் படலத்தை முக்கிய குழாய் பகுதியிலிருந்து பொருத்தப்பட்டுள்ள ஒரு க்ரூக்குக்கு திசைதிருப்புகிறது. இவ்வாறு, வெவ்வேறு நீளங்களிலுள்ள பல க்ரூக்குகள் ஒரேசமயத்தில் எந்தவித கூட்டிணைப்பாகவும் பயன்படுத்தப்படலாம். மேலுமாக, வால்வுகள் ஸ்பிரிங் பொருத்தப்பட்டவை என்பதால், உடனடியான பிரதிபலிப்பு சாத்தியமாக இருந்தது.
முதலில் இந்த எக்காளத்தில் துல்லியமான இசையலை அதிர்வுகளைப் பெறுவதில் பிரச்சினைகள் இருந்தன. என்றபோதிலும், வருடங்கள் கடந்துசென்றபோது, இந்தக் குறைகள் சரிசெய்யப்பட்டன; வால்வு எக்காளம் இன்று வரையாகவும் நிலைத்திருக்கிறது.
தங்குதடையின்றி இழைந்தியங்குவதற்குப் பிரபலமானது
நடைமுறையில் எல்லா வகையான இசையிலும் எக்காளம் ஒரு இடத்தைக் கொண்டிருக்கிறது. குரலோடும் மற்ற கருவிகளோடும் அது இதமாக இழைகிறது. அதன் கெம்பீரமான, போருக்குரிய தொனி அதை முழக்கங்களுக்கும் அணிவகுப்புகளுக்கும் ஏற்றதாக ஆக்குகிறது. அதே நேரத்தில், அதன் முனைப்பான, அதிர்கிற ஒலியலை அதிர்வானது இசைப்பாடல்கள், இசைநாடகங்கள் மற்றும் நவீன ஜாஸுக்கும் நன்கு பொருந்துகிறது. மேலுமாக, அதன் கருத்துமிக்க, உணர்ச்சிப்பாடல்களுக்குரிய தன்மைகளின் காரணமாக நாட்டுப்பாடல்களுக்கும் தனிப்பாடல்களுக்கும் ஏற்றவாறு எக்காளம் வளைந்துகொடுக்கிறது.
ஆம், எக்காளத்திற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. ஒரு போர்வீரன் கையிலுள்ள அடையாளக் கருவியாக அது இனிமேலும் இல்லை. இப்போது, ஒரு இசைக்கலைஞனின் கைகளிலாவது அது உண்மையான இசைக் கலையை உருவாக்க வல்லது. நீங்கள் எவ்வகை இசையை விரும்புகிறவராக இருந்தாலும் சரி, சந்தேகமின்றி, அதைக் கேட்பதற்கான இன்பத்தை அது உங்களுக்கு அளித்திருக்கிறது. எக்காளத்தைப் போன்ற அப்பேர்ப்பட்ட இசைக் கருவிகளைக் கண்டுபிடிப்பதற்கான திறமையை மனிதர்களுக்கு வழங்கியதற்காக நம்முடைய படைப்பாளருக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்!