“இயல்புக்கு மேலான வல்லமையை” உடைய இளைஞர்
நீ ஒரு இளைஞன். 12 வயதுதான். நீ நேசிக்கும் குடும்பம் உனக்கு இருக்கிறது. உனக்குக் களிகூரும் பள்ளித் தோழர்கள் இருக்கிறார்கள். கடற்கரைக்கு, மலைகளுக்கு நீ இன்பச்சுற்றுலா போயிருக்கிறாய். நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கும் இரவு வானத்தைப் பார்க்கும்போது நீ அதிசயத்தில் ஆழ்ந்துவிடுகிறாய். உனக்கு முன்னால் உன் முழு வாழ்க்கையையும் நீ கொண்டிருக்கிறாய்.
ஆனால் இப்போது உனக்குப் புற்றுநோய் இருக்கிறது. அப்படிப்பட்ட செய்தி, நீங்கள் 60 வயதில் இருக்கும்போது, பேரடியாக இருக்கிறது. நீங்கள் 12 வயதில் இருக்கும்போது, இது முழுமையான பேரழிவாக இருக்கிறது.
லனே மார்ட்டினஸ்
அப்படித்தான் 12 வயது லனே மார்ட்டினஸ்-க்குத் தோன்றியது. பரதீஸான பூமியில் என்றும் வாழ்வது அவள் நம்பிக்கை. பைபிள் பயிற்சியினால் இந்த நம்பிக்கை உறுதியளிக்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் அவளுடைய பெற்றோரிடமிருந்து அவள் இந்தப் பயிற்சியைப் பெற்றாள். பூமி என்றென்றைக்கும் இருக்கும் என்றும், அது என்றென்றைக்கும் குடியிருக்கப்படுவதற்காக உண்டாக்கப்பட்டது என்றும், சாந்தகுணமுள்ளவர்கள் என்றென்றைக்கும் அதை சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றும் அவள்தானே பைபிளில் படித்திருக்கவில்லையா?—பிரசங்கி 1:4; ஏசாயா 45:18; மத்தேயு 5:5.
இப்போது அவள் அ.ஐ.மா., கலிபோர்னியா, ஃபிரஸ்னோவில் வேல்லி குழந்தைகள் மருத்துவமனையில் (Valley Children’s Hospital) இருந்தாள். சிறுநீரகம் பாதிப்பு (kidney infection) போன்று தோன்றிய ஒரு காரணத்துக்காக அவள் அங்கு சேர்க்கப்பட்டிருந்தாள். ஆனால், பரிசோதனைகள் அவள் வெள்ளையணுப் புற்றுநோய் உடையவளாக இருக்கிறாள் என்பதை வெளிப்படுத்தின. லனேயுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், பிளாஸ்மா திரவத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சிவப்பு ரத்த அணுக்களும், ரத்தவட்டுகளும் ஏற்றப்படவேண்டும் என தீர்மானித்தனர். வேதியியல் சிகிச்சை உடனே ஆரம்பிக்கப்பட்டது.
லனே, ரத்தம் மற்றும் ரத்தம்கலந்த பொருள்கள் அவளுக்கு வேண்டாம் என்று சொன்னாள். ஏனென்றால், கடவுள் அதை தடைசெய்கிறார் என்பது அவளுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. இது பைபிளின் புத்தகங்களாகிய லேவியராகமம், அப்போஸ்தலர் போன்றவற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. “எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது.” (அப்போஸ்தலர் 15:28, 29) அவளுடைய பெற்றோர் அவளுடைய இந்த நிலைநிற்கையை ஆதரித்தனர். ஆனால் லனே, அது தன்னுடைய தீர்மானம் என்றும் அது தனக்கு மிக முக்கியமான ஒன்று என்றும் அழுத்திக் காண்பித்தாள்.
லனேவிடமும் அவளுடைய பெற்றோரிடமும் டாக்டர்கள் பலதடவைகள் பேசினார்கள். அதைப்போலவே ஒரு பிற்பகல் அவர்கள் வந்தனர். இந்த விஜயத்தைப் பற்றி லனே சொன்னாள்: “வலியின் காரணமாக நான் ரொம்ப பலவீனமாக உணர்ந்தேன். ரொம்ப ரத்தவாந்தியெடுத்தேன். அவர்கள் என்னை அதே கேள்விகள் கேட்டார்கள், ஆனால் வித்தியாசமான வகையில். அவர்களிடம் நான் மறுபடியும்: ‘எனக்கு ரத்தமோ ரத்தம்கலந்த பொருள்களோ வேண்டாம். யெகோவா தேவனுடைய சித்தத்தைச் செய்யவேண்டும் என்று நான் அவரிடம் செய்த வாக்குறுதியை முறிப்பதற்குப் பதிலாக, தேவைப்பட்டால், நான் மரிப்பதையும் ஏற்றுக்கொள்வேன்.’”
லனே தொடர்ந்தாள்: “அடுத்த நாள் காலை அவர்கள் திரும்பி வந்தனர். இரத்தவட்டுகள் அளவு குறைந்து கொண்டிருந்தன. எனக்கு இன்னும் அதிக காய்ச்சல் இருந்தது. இந்த முறை டாக்டர் நான் சொன்னதற்கு அதிகம் செவிகொடுத்தார் என்று நான் சொல்ல முடிந்தது. என் நிலைநிற்கையை அவர்கள் விரும்பாவிட்டாலும், நான் அதிக முதிர்ச்சியுள்ள 12 வயது பிள்ளையாக இருந்தேன் என்று அவர்கள் சொன்னார்கள். பின்பு, குழந்தைமருத்துவர் உள்ளே வந்து, வேதியியல் சிகிச்சையும் ரத்தமேற்றுதல்களும் தவிர வேறு எதுவும் எனக்கு உதவியாக இருக்கப்போவதில்லை என்று என்னிடம் சொன்னார். அவர் என்னிடத்தில் இதைச் சொல்ல வருந்துவதாகவும், திரும்பி வந்துபார்ப்பதாகவும் சொல்லிவிட்டு போய்விட்டார்.
“அவர் போனபோது, நான் அதிகமாக அழ ஆரம்பித்துவிட்டேன், ஏனென்றால் அவர் நான் பிறந்ததிலிருந்தே என்னைக் கவனித்துவருகிறார். இப்போது அவர் என்னைக் கைவிடுவதுபோல் நான் உணர்ந்தேன். பின்னர் அவர் திரும்பிவந்தபோது, அவர் இனிமேலும் என்னைக் கவனித்துக்கொள்ளாததுபோல் என்னை உணர வைத்ததை அவரிடம் சொன்னேன். இது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் தான் சொன்னதைக் குறித்து மனம்வருந்துகிறேன் என்று சொன்னார். அவர் என்னைப் புண்படுத்தும் எண்ணத்தில் அதைச் சொல்லவில்லை. அவர் என்னை ஏறிட்டுப் பார்த்துச் சொன்னார்: ‘சரி லனே, காரியம் அப்படியாக வேண்டுமென்றால், நான் உன்னைப் பரலோகத்தில் சந்திப்பேன்.’ அவர் தன் மூக்குக் கண்ணாடியை கையில் எடுத்துவிட்டு, அவருடைய கண்கள் கண்ணீர்சிந்த, அவர் என்னை நேசிப்பதாக சொல்லிவிட்டு, என்னைக் கட்டியணைத்தார். நானும் அவருக்கு நன்றிகூறி, இவ்வாறு சொன்னேன்: ‘உங்களுக்கு நன்றி. நானும் உங்களை மிகவும் நேசிக்கிறேன் டாக்டர் கலஸ்பீ. ஆனால் உயிர்த்தெழுதலில் பரதீஸான பூமியில் நான் வாழும் நம்பிக்கையில் இருக்கிறேன்.’”
பின்னர் இரண்டு டாக்டர்களும் ஒரு வழக்கறிஞரும் வந்தனர். அவர்கள் லனேவோடு தனியாகப் பேச விரும்பினர் என்று லனேவின் பெற்றோரிடம் சொல்லி, அவ்விடம்விட்டு போகும்படி பெற்றோரை கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் அதைச் செய்தனர். இந்தக் கலந்தாலோசிப்பு முழுவதும், டாக்டர்கள் மிகவும் பரிவுள்ளவர்களாகவும் தயவாகவும் லனேயின் தெளிவாகப் பேசும் திறமையினாலும் அவளுடைய உறுதியான நம்பிக்கையினாலும் ஆழமாகக் கவர்ந்திழுக்கப்பட்டனர்.
அவளோடு தனிமையில் இருந்தபோது, அவள் வெள்ளையணுப் புற்றுநோயால் மரித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவர்கள் அவளிடம் சொன்னார்கள். மேலும் அவர்கள்: “ஆனால் ரத்தமேற்றுதல்கள் உன் வாழ்க்கையை நீட்டிக்கும். நீ ரத்தத்தை மறுத்தால், ஒருசில நாள்களில் மரித்துப் போவாய்.”
“நான் ரத்தம் எடுத்தால், எவ்வளவு காலத்துக்கு அது என் வாழ்க்கையை நீடிக்கச் செய்யும்?” என்று லனே கேட்டாள்.
“ஏறக்குறைய மூன்று முதல் ஆறு மாதங்கள்” என்று அவர்கள் பதிலளித்தனர்.
“ஆறு மாதங்களில் நான் என்ன செய்ய போகிறேன்?” என்று அவள் கேட்டாள்.
“நீ பலமடைவாய். பல காரியங்களை நீ செய்யமுடியும். டிஸ்னி உவர்ல்டுக்கு போகலாம். மற்ற பல இடங்களை நீ காணலாம்.”
லனே சிறிது யோசித்துவிட்டு பதில்சொன்னாள்: “நான் யெகோவாவை என் வாழ்நாளெல்லாம், 12 ஆண்டுகளாக சேவித்துவருகிறேன். நான் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவர் எனக்குப் பரதீஸில் நித்திய ஜீவனைக் கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்திருக்கிறார். ஆறுமாத வாழ்க்கைக்காக இப்போது அவரைவிட்டு நான் விலகமாட்டேன். நான் சாகும்வரை உண்மைத்தன்மையைக் காத்துக்கொள்ள விரும்புகிறேன். பின்பு, அவருக்கே உரிய சமயத்தில் என்னை மரித்த நிலையிலிருந்து அவர் உயிர்த்தெழுப்பி, நித்திய ஜீவனைக் கொடுப்பார். அப்போது நான் விரும்பின அனைத்தையும் செய்வதற்கு ஏராளமான சமயம் இருக்கும்.”
டாக்டர்களும் வழக்கறிஞரும் தெளிவாகவே கவரப்பட்டனர். அவர்கள் அவளைப் பாராட்டிவிட்டு, வெளியே போய், அவளுடைய பெற்றோரிடம் அவள் ஒரு வளர்ந்த பெண் போல சிந்திக்கிறாள், பேசுகிறாள், அவள் தன் சொந்த தீர்மானங்களை எடுக்க முடிந்தவளாக இருக்கிறாள். வேல்லி குழந்தைகள் மருத்துவமனையின் நீதிநெறிக்குழுவுக்கு, லனே ஒரு முதிர்ச்சியுள்ள சிறுமியாகக் (mature minor) கருதப்படவேண்டும் என்று அவர்கள் சிபாரிசுசெய்தனர். இந்தக் குழு, டாக்டர்கள், மற்ற உடல்நல அதிகாரிகள், ஃபிரஸ்னோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் நீதிநெறித்துறையின் பேராசிரியர் ஒருவரையும் உட்படுத்தியதாக இருந்தது. லனே அவளுடைய மருத்துவ சிகிச்சை சம்பந்தமான அவளுடைய சொந்த தீர்மானத்தை செய்வதற்கு அனுமதிக்கும் தீர்மானத்தை அவர்கள் எடுத்தனர். லனேயை ஓர் முதிர்ந்த பிள்ளையாகக் கருதினர். நீதிமன்ற ஆணை நாடப்படவில்லை.
நீண்ட, கடினமான இரவுக்குப் பின்பு, காலை 6:30 மணிக்கு, செப்டம்பர் 22, 1993-ம் தேதி லனே தன்னுடைய அம்மாவின் கரங்களில் மரித்தாள். அந்த இரவின் மேன்மைத்தன்மையும் அமைதியும் அங்கிருந்தவர்களின் மனதில் நன்றாகப் பதிய வைக்கப்பட்டது. ஞாபகார்த்த நிகழ்ச்சிக்கு 482 பேர் வந்திருந்தனர். அவர்கள், லனேயின் விசுவாசம் மற்றும் உத்தமத்தன்மையால் மனங்கவரப்பட்ட டாக்டர்கள், நர்ஸ்கள், டீச்சர்கள் ஆகியோர் அடங்குவர்.
லனேயின் பெற்றோரும் நண்பர்களும், இந்த இளம்பிள்ளையின் முதிர்ச்சியைப் புரிந்துகொள்வதில் புலனுணர்வுடன் செயல்பட்டதுக்காக வேல்லி குழந்தை மருத்துவமனையின் டாக்டர்களுக்கும், நர்ஸ்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மிகவும் நன்றியுணர்வுடன் இருந்தனர். ஏனென்றால், அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு நீதிமன்ற விசாரணை தேவைப்படவும் இல்லை.
கிரிஸ்டல் மோர்
நியூ யார்க் நகரத்தில் கொலம்பியா பிரஸ்பிட்டேரியன் மெடிக்கல் சென்டரில் 17 வயது கிரிஸ்டல் மோர் சேர்க்கப்பட்டபோது, அப்படிப்பட்ட சலுகை கொடுக்கப்படவில்லை. அவள் குடல்வீக்க அழற்சி நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, கிரிஸ்டலும் அவளுடைய பெற்றோரும் ரத்தம் ஏற்றிக்கொள்வதை தொடர்ந்து மறுத்தனர். அவள் மரிக்க விரும்பவில்லை; பதிலாக, அவள் ரத்தத்திற்கு விலகியிருக்கவேண்டும் என்ற பைபிள் கட்டளைக்கு ஒத்ததாக இருக்கும் மருத்துவ சிகிச்சையைப் பெற விரும்பினாள்.—அப்போஸ்தலர் 15:28, 29.
கிரிஸ்டலைக் கவனித்துவரும் மருத்துவ குழு, அவளுடைய நிலைமை ரத்தமேற்றுதலைத் தேவைப்படுத்துகிறது என உறுதியாக இருந்தது. ஒரு டாக்டர் வெடுக்கென்று சொன்னார்: “கிரிஸ்டல் ஜூன் 15, வியாழக்கிழமைக்குள் ரத்தமேற்றுதலைப் பெறவில்லையென்றால், ஜூன் 16, வெள்ளிக்கிழமை அவள் மரித்துப் போயிருப்பாள்!” ஜூன் 16-ல் கிரிஸ்டல் மரிக்கவில்லை. இரத்தமேற்றுதலை வற்புறுத்த அதிகாரம் பெறுவதற்காக, நியூ யார்க் மாகாணத்தின் உச்சநீதிமன்றத்துக்கு மருத்துவமனை மனு செய்தது.
அந்தக் காலையில், மருத்துவமனையில் விசாரணை அவசர அவசரமாக நடத்தப்பட்டது. மருத்துவர்களில் ஒருவர், கிரிஸ்டலுக்கு இரண்டு யூனிட்கள் ரத்தம் உடனே தேவை என்றும் கூடுதலாக ஒருவேளை குறைந்தது பத்து யூனிட்டுகள் ரத்தம் தேவைப்படும் என்றும் வலியுறுத்திக்கூறினார். அவர் மேலுமாக, கிரிஸ்டல் ரத்தமேற்றுதலை எதிர்க்க முயற்சித்தால், அவளுடைய கையையும் காலையும் படுக்கையோடு சேர்த்து கட்டி, ரத்தமேற்றுதலைச் செய்து முடிப்பேன் என்று அவர் சொன்னார். கிரிஸ்டல் டாக்டர்களிடம், அவர்கள் அவளுக்கு ரத்தம் ஏற்ற முயற்சிசெய்தால், அவள் “அலறி கூச்சலிடுவேன்” என்று சொன்னாள். யெகோவாவின் சாட்சியாக அவள், எந்தப் பலவந்தமான ரத்தம் ஏற்றுதலும், கற்பழிப்புக்குச் சமமாக வெறுக்கத்தக்கது என்று கருதியதாகவும் அவள் டாக்டர்களிடம் சொன்னாள்.
விசாரணையின்போது அவளுடைய வக்கீல் மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டபோதும், நீதிமன்றத்தின் முன்பாக கிரிஸ்டல் தன்னுடைய தீர்மானம் எடுக்கும் திறமையைத் தானே பேசி வெளிக்காட்டும் வாய்ப்பை அவளுக்கு நீதிமன்றம் மறுத்தது. கிரிஸ்டல் தன் பள்ளிப்படிப்பு சாதனைக்காகவும், முன்னோடியாக இருந்ததற்காகவும் அவளுடைய மேல்நிலைப் பள்ளியின் சூப்பர் யூத் நிகழ்ச்சியில் அப்போதுதான் ஒரு பரிசை வாங்கியிருந்தாள். ஆனால் வழக்கு விசாரணை செய்யும் நீதிபதி அவள் ரத்தமேற்றுதலுக்கு தன் மறுதலிப்பை நீதிமன்றத்தில் வலியுறுத்திக்கூறுவதற்கு அனுமதிக்கவில்லை. இது வழக்கில் பங்குகொள்ளும் கிரிஸ்டலின் சட்டப்படியான உரிமைகளை, சொந்த உடல் சம்பந்தமான சுய தீர்மானம் செய்யும் உரிமையை, தனிமை உரிமையை, மத சுதந்திரத்தை மறுதலிப்பதுக்குச் சமம்.
வழக்கு விசாரணை நீதிமன்றம் (trial court) கிரிஸ்டலை பேசுவதற்கு அனுமதிக்காவிட்டாலும், நீதிமன்றம் அவளோடு தனியாக அவளுடைய அறையில் சுமார் 20 நிமிடத்துக்குக் கூடியிருந்தது. அந்த விசாரணைக்குப் பின்பு, கிரிஸ்டல் “உண்மையிலேயே அதிக புத்திசாலியாக,” “மிகத் தெளிவாகப் பேசுபவளாக” இருந்தாள்; மேலும் கிரிஸ்டல், “மனதிடமுள்ளவளாக,” “தன்னை முழுவதுமாகப் புரிந்து விளக்கம் கொடுக்க முடிந்தவளாக” இருந்தாள் என்று விசாரணை செய்யும் நீதிபதி சொன்னார். இந்தக் கணிப்புகளுக்கு மத்தியிலும், விசாரணை நீதிமன்றம் பிடிவாதமாகவே கிரிஸ்டல் தன் சொந்த மருத்துவ சிகிச்சை சம்பந்தமாகத் தீர்மானிப்பதற்கு வாய்ப்பளிக்க அனுமதிக்கவில்லை.
ஜூன் 18, ஞாயிறு காலையில், கிரிஸ்டலுக்கு அவசர அறுவைசிகிச்சைத் தேவைப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு அவள் ஒத்துக்கொண்டாள், ஆனால், தொடர்ந்து ரத்தம் வேண்டாம் என்று எதிர்த்தாள். வெறும் 50-100 கன சென்டிமீட்டர் ரத்தம்தான் அறுவைசிகிச்சையின்போது இழக்கப்பட்டது. எனினும், அறுவைசிகிச்சைக்குப் பின்பு ரத்தம் ஏற்றுதல் தேவைப்படலாம் என்று மருத்துவர்கள் வாதாடினர். மற்றொரு டாக்டர் ரத்தம் ஏற்றுதல் தேவையில்லை என்று உறுதியாகச் சொன்னார். கடந்த 13 ஆண்டுகளாக இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு அவர் ரத்தம் இல்லாமலே வழக்கமாகச் சிகிச்சையளித்து வந்திருக்கிறார். அந்த அறுவைசிகிச்சைகளுக்குப் பின்பு ரத்தமேற்றுதல்கள் எப்போதுமே தேவைப்பட்டதில்லை.
ஜூன் 22, 1989-ல் வழக்கு விசாரணை நீதிமன்றம், கிரிஸ்டலின் தற்காலிக பாதுகாப்பு உரிமையை மருத்துவமனைக்கு, “அவளுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக அல்லது பாதுகாப்பதற்காக மட்டுமே” ரத்தமேற்றுதலைப் பயன்படுத்துவதற்காக கொடுத்தது. இந்தப் பாதுகாப்பு உரிமை மருத்துவமனையிலிருந்து கிரிஸ்டல் வெளிவந்தவுடன் முடிவடைந்தது. கிறிஸ்டலுக்கு அப்போதும் ரத்தம் தேவைப்படவில்லை. எதுவுமே எப்போதும் ஏற்றப்படவில்லை. ஆனால் கிரிஸ்டலை நீதிமன்றம் எப்படி நடத்தியது என்பது அதிர்ச்சியளிப்பதாய் இருக்கிறது.
மருத்துவமனையிலிருந்து வெளிவந்த பின்பு, கிரிஸ்டல் சிறப்பு மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சிபெற்றாள். சற்றுப்பிறகு, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுநேர ஊழியராக ஆனாள். அவள் ஜெர்சி நகரின் யெகோவாவின் சாட்சிகளுடைய அசெம்பிளி மன்றத்தில் ஒரு வழிகாட்டியாக ஆனாள். ராஜ்ய மன்றங்களைக் கட்டுகிற, புதுப்பித்துக்கட்டுகிற தொகுதியின் ஒரு அங்கத்தினராக மனமுவந்து, முன்வந்தளித்து ஊழியம்செய்கிறாள்.
எனினும், கொலம்பியா பிரஸ்பிட்டேரியன் மெடிக்கல் சென்டரிலுள்ள டாக்டர்கள், அவள் ஜூன் 15-ம் தேதி ரத்தம் ஏற்கவில்லையென்றால், ஜூன் 16-ம் தேதி செத்துவிடுவாள் என்று சொன்னார்கள். மேலும் அவள் இரத்தமேற்றுதலை மறுத்தால், கையையும் காலையும் கட்டிவைப்பார்கள் என்று சொல்லப்பட்டாள். இரத்தமேற்றுவதற்கு நீதிமன்ற கட்டளைகளுக்காக டாக்டர்கள் விரும்பியபோது, நீதிபதி உடனே கட்டளை கொடுக்காமல் இருந்தால், நோயாளி மரிப்பார் என்று வெளிப்படையாக அறிவித்த டாக்டர்கள், கிரிஸ்டல் மோரின் சம்பவத்தை ஞாபகத்தில் வைத்திருப்பார்களாக.
லிசா கோஸாக்
சுகமில்லாத குழந்தைகளுக்கான டோரன்டோ மருத்துவமனையில் (Toronto’s Hospital for Sick Children) லிசாவின் முதல் நாள் இரவு, கொடுங்கனவைவிட பயங்கரமானதாக இருந்தது. அவள் பிற்பகல் 4 மணிக்கு நோயாளியாகப் பதிவுசெய்யப்பட்டாள். உடனே பலதரப்பட்ட சோதனைகள் செய்யப்பட்டாள். அந்த இரவு பதினொன்னேகால் மணிவரை அவளுக்குப் படுக்கை ஏற்பாடுசெய்யப்படவில்லை. நடு இரவில், ஏன் லிசாவே என்ன நடந்தது என்பதைச் சொல்லட்டுமே. “நடு இரவில் ஒரு நர்ஸ் வந்து இவ்வாறு சொன்னாள்: ‘உனக்கு நான் கொஞ்சம் ரத்தம் கொடுக்கவேண்டும்.’ நான் கூக்குரலிட்டேன்: ‘நான் ரத்தம் எடுக்கமுடியாது, ஏனென்றால் நான் ஒரு யெகோவாவின் சாட்சி! உங்களுக்கு அது தெரியும்னு நினைக்கிறேன்! உங்களுக்கு அது தெரியும்னு நினைக்கிறேன்!’ ‘ஆமா, எனக்குத் தெரியும்,’ என்று அவள் சொன்னாள். உடனே என் IV-ஐ வெடுக்கென வெளியே எடுத்து, ரத்தம்செலுத்துவதற்கு ஊசிபோடும் சாதனத்தை கொடூரமாக உள்ளே செலுத்தினாள். நான் அழுதேன், அடக்கமுடியாதளவு அழுதுகொண்டிருந்தேன்.”
சுகமில்லாத, பயத்திலுள்ள 12 வயது பெண்ணுக்குப் பழக்கமில்லாத இடத்தில் நடு இரவில் என்னே ஓர் உணர்ச்சியற்ற, கொடூரமான கையாளுதல்! சுகமில்லாத குழந்தைகளுக்கான டோரன்டோ மருத்துவமனைக்கு லிசாவின் பெற்றோர் அவளை எடுத்துப்போனதுக்குக் காரணமே, கனிவான, ஒத்துழைக்கும் டாக்டர்களைக் காணமுடியும் என்பதுதான். மாறாக, அவர்களுடைய மகள் நடு இரவில் வதைக்கப்பட்டு ரத்தமேற்றுதலுக்கு ஆளாகும்படி செய்யப்பட்டாள். இது, லிசா மற்றும் அவளுடைய பெற்றோரின் நிலைநிற்கையானது, ரத்தம் அல்லது ரத்தம்கலந்த பொருள்கள் கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமானது, அவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்பதாக இருந்தது என அறிந்திருந்தபோதிலும் செய்யப்பட்டது.—அப்போஸ்தலர் 15:28, 29.
அடுத்தநாள் காலை, மருத்துவமனை ரத்தமேற்றுதலைச் செய்வதற்கு நீதிமன்ற ஆணையை நாடியது. விசாரணை ஐந்து நாட்கள் தொடர்ந்தது. நீதிபதி டேவிட் R. மேன் என்பவரால் நடத்தப்பட்டது. மருத்துவமனையில் ஒரு அறையில் இது நடத்தப்பட்டது. லிசா ஐந்து நாட்களும் ஆஜராயிருந்தாள். கொடிய மைலோ வெள்ளையணுப் புற்றுநோயை (acute myeloid leukemia) உடையவளாக லிசா இருந்தாள். இது பொதுவாக மரணத்துக்கு வழிநடத்தும். குணப்படுதல் 30 சதவிகிதம் என்று டாக்டர்கள் உறுதிசெய்திருக்கின்றனர். அவர்கள் பல ரத்தமேற்றுதல்களையும், தீவிர வேதியல் சிகிச்சையையும் சிபாரிசு செய்திருந்தனர். இந்தச் சிகிச்சை, அதிகமான வலியையும், பலவீனப்படுத்தும் பக்க பாதிப்புகளையும் உட்படுத்தியது.
விசாரணையின் நான்காவது நாள், லிசா சாட்சிக்கொடுத்தாள். வலுக்கட்டயமாக கொடுக்கப்பட்ட அந்த நடு இரவு ரத்தமேற்றுதலை அவள் எப்படி உணர்ந்தாள் என்பது கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று. ஒரு நாய் சோதனைக்குப் பயன்படுத்தப்பட்டதுபோல உணர்ந்ததாகவும், தான் கற்பழிக்கப்பட்டதுபோல உணர்ந்ததாகவும் அவள் விளக்கினாள். அவள் சிறியவளாக இருப்பதால் அவளுக்கு எதையும் செய்துவிடலாம் என்று சிலர் நினைப்பதாக உணர்ந்தாள் என்றும் விளக்கினாள். மற்றொரு நபரின் ரத்தம் அவள் உடம்புக்குள் போவதை அவள் வெறுத்தாள். அவள் ஒருவேளை அதிலிருந்து எய்ட்ஸ் அல்லது ஈரல் அழற்சி அல்லது தொற்றும் மற்ற சில நோய்கள் போன்றவற்றைப் பெறக்கூடும் என்று பயந்தாள். மிக முக்கியமாக, அவள் தன்னுடைய உடம்புக்குள் மற்றொரு நபரின் ரத்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தடைசெய்யும் யெகோவாவின் சட்டத்தை அவள் மீறுவதைக் குறித்து யெகோவா எப்படி உணர்வார் என்பதில் அதிக அக்கறையுடைவளாக இருந்தாள். அது மறுபடியும் நடந்தால், அவள் “போராடி, IV-கம்பத்தை கீழே எத்திவிட்டு, IV-ஐ உருவியெடுத்திவிடுவேன்; அது எவ்வளவு வலியை உண்டுபண்ணினாலும் சரி, நான் கவலைப்படப்போவதில்லை. இரத்தப் பாட்டில்களை உடைத்துப் போட்டுவிடுவேன்,” என்று சொன்னாள்.
அவளுடைய வக்கீல் கேட்டார், “குழந்தைகள் உதவி சங்கம் (Children’s Aid Society) பாதுகாப்பு உரிமையை உன் பெற்றோரிடமிருந்து எடுத்துவிட்டு, அதனுடையதாக ஆக்கிக்கொள்ள கேட்பதைப் பற்றி நீ எப்படி உணர்கிறாய்?”
“அது என்னை மிக மிக கோபமடையும்படி உணரச் செய்கிறது; அவர்கள் கொடூரமானவர்கள் என்று என்னை உணரவைக்கிறது. ஏனென்றால் என் பெற்றோர் என்றைக்குமே என்னை அடித்ததில்லை. அவர்கள் என்னை நேசித்தனர், நான் அவர்களை நேசித்தேன். நான் தொண்டைப் புண் அல்லது சளி அல்லது ஏதாவது சுகமில்லாதுபோகும்போது அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்டார்கள். அவர்களுடைய முழு வாழ்க்கையும் என்னைச் சுற்றியே இருந்தது. யாரோ வித்தியாசப்படுகிறார்கள் என்ற காரணத்துக்காக மட்டுமே இப்போது யாரோ ஒருவர் வந்து, அவர்களிடமிருந்து என்னைப் பிரிப்பது, மிக மிக கொடூரமானது என்று நான் நினைக்கிறேன். அது என் மன அமைதியை அதிகமாகக் கெடுக்கிறது.”
“நீ சாக விரும்புகிறாயா?”
“இல்லை, யாருமே சாக விரும்புவதில்லை. ஆனால் நான் ஒருவேளை செத்துப்போகவேண்டியிருந்தால், அதற்காகப் பயப்படபோவதில்லை. ஏனென்றால் பூமியில் பரதீஸில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையைக் கொண்டிருக்கிறேன் என்று நான் அறிந்திருக்கிறேன்.”
வரப்போகிற அவளுடைய சாவைக் குறித்து, யெகோவாவின்மீது அவளுடைய விசுவாசத்தைக் குறித்து, ரத்தத்தின் புனிதத்தன்மை சம்பந்தமான அவருடைய சட்டத்துக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்ற அவளுடைய தீர்மானம் பற்றி லிசா தைரியமாகப் பேசியபோது, பலர் கண்ணீர்விட்டனர்.
“லிசா,” அவளுடைய வக்கீல் தொடர்ந்தார், “நீதிமன்றம் ரத்தமேற்றுதலை ஆணையிடுகிறது என்று அறிவது ஏதேனும் வித்தியாசத்தை உனக்கு உண்டாக்குமா?”
“இல்லை, ஏனென்றால் நான் இன்னும் என் கடவுளுக்கு உண்மையுள்ளவளாக இருந்து, அவருடைய கட்டளைகளுக்குச் செவிசாய்க்க போகிறேன். ஏனென்றால், எந்த நீதிமன்றத்தையும்விட எந்த மனிதனையும்விட அதிக உன்னதமானவராக கடவுள் இருக்கிறார்.”
“இந்த வழக்கில் நீதிபதி என்ன தீர்ப்பளிக்கவேண்டும் என்று நீ விரும்புகிறாய், லிசா?”
“என்னை வெறுமனே என் பெற்றோரிடம் திரும்ப அனுப்பி, என்னுடைய பாதுகாப்பாளர்களாக இருக்கும் உரிமையை அவர்களுக்கு மீண்டும் கொடுக்கும்படி நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளித்தால், நான் சந்தோஷமுள்ளவளாக இருப்பேன். இவ்வாறு நான் வீட்டுக்குப் போய், சந்தோஷமான சூழ்நிலைகளில் இருப்பேன்.”
அதைத்தான் நீதிபதி மேன்னும் தீர்மானித்தார். அவருடைய தீர்ப்பின் சுருக்கம் பின்தொடர்கிறது:
“லிசா, இந்த நீதிமன்றத்திடம் தெளிவாக, உண்மையோடு சொல்லியிருக்கிறாள், அவளுக்கு ரத்தமேற்றப்படுவதுக்கு முயற்சியெடுக்கப்பட்டால், அவள் அந்த ரத்தமேற்றுதலை எதிர்த்து அவள் எவ்வளவு பலம் காட்டமுடியுமோ அவ்வளவுக்கு பலத்தைப் பயன்படுத்தி போராடுவாள். அவள் சொன்னாள், அவள் கூக்குரலிட்டு, போராடி, அவளுடைய கையிலிருந்து ஊசியிருக்கும் சாதனத்தைப் பிடிங்கியெடுத்து, அவளுடைய படுக்கையின் மேல் தொங்கும் ரத்த பாட்டிலை உடைப்பதற்கு முயற்சிசெய்வாள் என்று அவள் சொல்லியிருக்கிறாள். அவளை நான் நம்புகிறேன். அப்படிப்பட்ட கஷ்டத்துக்குள்ளாக்கும் எந்த ஆணையையும் நான் பிறப்பிக்க விரும்பவில்லை.”
வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்ட அந்த நடு இரவு ரத்தமேற்றுதலைப் பற்றி அவர் சொன்னார்:
“பிரிவு 15(1)-ன்படி அவள் வயதின்பேரிலும், அவளுடைய மதத்தின்பேரிலும் வித்தியாசமாக நடத்தப்பட்டுவந்திருப்பதாக நான் கண்டுணருகிறேன். இந்தச் சூழ்நிலைகளில், ஒரு ரத்தமேற்றுதல் கொடுக்கப்பட்டதன் காரணமாக, பிரிவு 7-ன்படியாக அவளுடைய பாதுகாப்பைப் பெறும் உரிமை மீறப்பட்டிருக்கிறது.”
லிசாவைப் பற்றிய அவருடைய அபிப்பிராயம் அக்கறையைத் தூண்டக்கூடியதாய் இருக்கிறது:
“லிசா அழகானவள், அதிக புத்திசாலியாகவும், தெளிவாகப் பேசுபவளாகவும், உபசரிக்கும்தன்மையுடையவளாகவும், கூருணர்ச்சியுள்ளவளாகவும், மிக முக்கியமாக தைரியமுள்ளவளாகவும் இருக்கிறாள். அவள் அவளுடைய வயதுக்கு மிகவும் அப்பாற்பட்ட ஞானத்தையும் முதிர்ச்சியையும் உடையவள். எந்தப் பெற்றோரும் தன் குழந்தையிடம் எதிர்பார்க்கும் எல்லா சாதகமான குணங்களையும் உடையவள் அவள் என்று சரியாகவே சொல்லப்படலாம் என்று நான் நினைக்கிறேன். அவள் நன்றாக சிந்திக்கப்பட்ட, உறுதியான, தெளிவான மத நம்பிக்கை ஒன்றை உடையவள். என் கருத்துப்படி, எந்த ஊற்றுமூலத்திடமிருந்தும் வரும் எவ்வளவான ஆலோசனையோ அவளுடைய பெற்றோரிடமிருந்து அல்லது மற்ற எந்த நபரிடமிருந்து வரும் அழுத்தமோ இந்த நீதிமன்றத்தின் ஓர் ஆணையும் உட்பட எதுவும் அவளுடைய மத நம்பிக்கைகளை அசைக்கவோ மாற்றவோ முடியாது. இந்த நோயை மதிப்பிற்குரிய வகையிலும், சமாதான மனதோடும், லிசா எதிர்த்துப்போராடுவதற்கு வாய்ப்பு அவளுக்கு அளிக்கப்படவேண்டும் என்று நான் நம்புகிறேன்.”
“விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.”
அந்த நாள் லிசாவும் அவளுடைய குடும்பத்தினரும் மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தனர். லிசா உண்மையில் தன் நோயை மதிப்பிற்குரிய வகையிலும், சமாதான மனதோடும் எதிர்த்துப் போராடினாள். அவள் வீட்டில், அவளுடைய தாய்தகப்பன்மார்களின் அன்பான கரங்களிலே அமைதியாக மரித்தாள். அவ்வாறு செய்வதன்மூலம் யெகோவா தேவனை முதலாவதாக வைத்த இளம் சாட்சிகளாகிய மற்ற பலரின் நிலையை இவளும் அடைந்தாள். இதன் விளைவாக, அவள் அவர்களோடு இயேசுவுடைய வாக்குறுதியின் நிறைவேற்றத்தை அனுபவிப்பாள்: “என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.”—மத்தேயு 10:39, NW, அடிக்குறிப்பு.
எர்னஸ்டின் கிரகரி
எர்னஸ்டின் 17 வயதில் வெள்ளையணுப் புற்றுநோயால் வேதனைப்படுவதாக சோதித்தறியப்பட்டாள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, வேதியியல் சிகிச்சையை ஆதரிப்பதற்காக, அவர்கள் செலுத்த விரும்பின ரத்தம்கலந்த பொருள்களைப் பயன்படுத்துவதற்கு அவள் ஒத்துக்கொள்ளவில்லை. எர்னஸ்டின் மறுத்ததாலும், ரத்தமில்லாத சிகிச்சைக்கான அவளுடைய தெரிவிற்கு அம்மாவின் ஆதரவு இருந்ததாலும், மருத்துவமனை விஷயத்தை அ.ஐ.மா., இல்லினாய்ஸ், சிகாகோவில் உள்ள உடல்நல அதிகாரிகளுக்கு அறிவித்தது. அவர்கள் ரத்தம் பயன்படுத்துவதற்காக நீதிமன்ற ஆணையை நாடினர். ஒரு வழக்கு விசாரணை ஏற்பாடுசெய்யப்பட்டது. அங்கு வழக்கு விசாரணை நீதிமன்றம் எர்னஸ்டின், ஒரு மருத்துவர், ஒரு மனநோய் மருத்துவர், ஒரு வக்கீல், மேலும் உட்பட்டிருந்த மற்றவர்களிடமிருந்தும் சாட்சிகேட்டது.
எர்னஸ்டின் தன்னுடைய டாக்டரிடம், அவளுக்கு ரத்தம் தேவையில்லை என்று சொல்லியிருந்தாள். மேலும், அது அவளுடைய சொந்த தீர்மானம் என்றும், அவள் படிக்கும் பைபிளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றும் சொன்னாள்; நீதிமன்ற ஆணைப்படியான வலியுறுத்தப்பட்டு கொடுக்கப்படுகிற ரத்தமேற்றுதல் கடவுளுடைய சட்டத்தை இன்றும் அவமரியாதை செய்கிறது. நீதிமன்றத்தின் அதிகாரம் இருந்தபோதிலும், அவளைப் பொறுத்தளவில் தவறாகவும்பட்டது. அவள் மருத்துவ சிகிச்சையை எதிர்த்துச் செயல்படவில்லை. அவள் மரிக்க விரும்பவில்லை. அவளுடைய தீர்மானம் ஒரு மரிக்க விரும்புதல் அல்ல, தற்கொலையல்ல. எனினும், மரணத்தைக் குறித்துப் பயப்படவில்லை என்றெல்லாம் அவள் டாக்டரிடம் சொல்லியிருந்தாள்.
ஸ்டான்லி யாக்னன், எம்.டி., “எர்னஸ்டினின் தன்னையறிந்து செயல்படும் முதிர்ச்சியைக் கண்டும்” அவளுடைய மத நம்பிக்கைகளின் உண்மைத்தன்மையைக் குறித்தும் “மனங்கவரப்பட்டதாக” அவர் சான்றளித்தார். மேலும் எர்னஸ்டின் தன் சுகவீனத்தின் தன்மையையும் முடிவுகளையும் குறித்து புரிந்துகொண்டாள். அவளுடைய புரிந்துகொள்ளும் தன்மையின் காரணமாக, டாக்டர் யாக்னன் மனநோய் மருத்துவரையோ மனவியல் வல்லுநரையோ அழைப்பதன் அவசியத்தை உணரவில்லை.
இருந்தபோதிலும், மனநோய் மருத்துவராகிய நிர் லிட்னர், எம்.டி., அழைக்கப்பட்டார். அவர் எர்னஸ்டினுடன் பேசிய பிறகு, 18 வயதிலிருந்து 21 வயதுக்குட்பட்ட ஒரு நபரின் முதிர்ச்சியை அவள் கொண்டிருக்கிறாள் என்ற கருத்துக்கு வந்தார். எர்னஸ்டின் ரத்தம் ஏற்றுக்கொள்தல் அல்லது மறுத்தலின் பின்விளைவுகளை புரிந்துசெயல்படுபவளாக இருந்தாள் என்று அவர் தெரிவித்தார். அவள் இந்த நிலைநிற்கையை எடுப்பதற்குக் காரணம் அவள் மற்றொருவரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்ததற்காக அல்ல, ஆனால் இதை அவளே தனிப்பட்டவிதமாக நம்பினதினாலேயே என அவர் சொன்னார். டாக்டர் லிட்னர் சொன்னார், இந்த விஷயத்தில் எர்னஸ்டின் அவளுடைய சொந்த தீர்மானத்தை எடுப்பதற்கு அனுமதிக்கப்படவேண்டும்.
ஜேன் மெக்காட்டி, மருத்துவமனையின் சார்பாக உள்ள வக்கீல், எர்னஸ்டினிடம் விசாரணை நடத்திய பிறகு, எர்னஸ்டின் தன்னுடைய நோயின் தன்மையை அறிந்துகொண்டாள், அவள் “தன்னுடைய தீர்மானத்தைப் புரிந்துகொள்ளவும் அதன் பின்விளைவுகளை ஏற்கவும் முடிந்தவளாக தோன்றினாள்” என்று அவள் நம்பினாள்.
நீதிமன்றமும் எர்னஸ்டினின் சாட்சியால் மிகவும் கவரப்பட்டது. நீதிமன்றம் எர்னஸ்டின் முதிர்ச்சியுள்ள 17 வயது பெண் என்பதைக் கண்டுகொண்டது; மேலும் எர்னஸ்டின் புத்திசாலித்தனமாக மருத்துவ தீர்மானங்களைச் செய்வதற்கு முடிந்தவளாக இருக்கிறாள் என்றும் உணர்ந்தது. எனினும், நீதிமன்றம், அதிர்ச்சிதரும்வண்ணமாக, ரத்தமேற்றுதல்களைச் செய்ய ஆணையிட்டது. ஆஸ்பத்திரியில் இரண்டு டாக்டர்கள் அருகில் நின்றுகொண்டிருந்தனர்; ரத்தமேற்றுதலுக்குரிய கருவிகளெல்லாம் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன. நீதிமன்றத்தின் தீர்மானம் தெரியவந்த உடனே, எர்னஸ்டின் முழு பலத்தோடு எதிர்த்துப்போராடியபோதிலும், வலுக்கட்டாயமாக அவளுக்கு ரத்தமேற்றப்பட்டது. உடனடியாக, நீதிமன்றத்தின் ஆணை மேல்முறையீடு செய்யப்பட்டது, ஆனால் மருத்துவமனை ரத்தத்தை வலுக்கட்டாயமாக ஏற்றுவதைத் தடுப்பதற்கு முன்பு செய்யப்படவில்லை.
இன்னுமதிகமான ரத்தமேற்றுதல்களைத் தடுப்பதற்காக, விசாரணை நீதிமன்றத்தின் ஆணை, முதலாவது இல்லினாய்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இரண்டுக்கு ஒன்று என்ற தீர்மானத்தில், எர்னஸ்டினின் விருப்பத்துக்கு எதிராக ரத்தமேற்றுதல்களை ஏற்கும்படி அவளை வற்புறுத்தக்கூடாது என்று தீர்ப்புவழங்கியது. எர்னஸ்டினின் முதல் சட்டதிருத்தமாகிய மத சுதந்திரமும், தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்கும் உரிமையும்சேர்ந்து, மத சம்பந்தமான காரணங்களுக்காக ஒரு முதிர்ச்சியுள்ள சிறுமியாக அவள் ரத்தமேற்றுதல்களை மறுக்கும் உரிமையைப் பாதுகாத்தது என்று நீதிமன்றம் வாதித்தது.
இதன்பின், குழந்தைநல அதிகாரிகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை, இல்லினாய்ஸின் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தனர். இல்லினாய்ஸ் உச்சநீதிமன்றம், எர்னஸ்டின் சிறுமியாக இருந்தாலும் அவளுக்குப் பிடிக்காத மருத்துவ சிகிச்சையை ஏற்க மறுப்பதற்கு அவளுக்கு உரிமை இருக்கிறது என்ற தீர்ப்பை உறுதிசெய்தது. இந்த உச்சநீதிமன்றம் உடல் சம்பந்தமான சுய தீர்மானத்தை எடுக்கும் உரிமை என்ற பொதுவான சட்டம் மற்றும் முதிர்ச்சியுள்ள சிறுமி என்ற விதியின் அடிப்படையில் அதன் தீர்மானத்தைச் செய்தது. இல்லினாய்ஸில் முதிர்ச்சியுள்ள இளைஞர் (mature minor) வழக்குகளுக்குப் பின்பற்றவேண்டிய நிலையான முறை இல்லினாய்ஸ் உச்சநீதிமன்றத்தால் பின்வரும் வாக்கியத்தில் சுருக்கிக் கூறப்படுகிறது:
“ஒரு இளம்பெண் தன்னுடைய செயல்களின் பின்விளைவுகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவளாக இருக்கிறாள் என்பதற்கான அத்தாட்சி தெளிவாகவும் நம்பத்தக்கதாகவும் இருக்கும்போது, மேலும் ஒரு முதிர்ச்சியுள்ள பெண்போல தீர்மானம் எடுக்குமளவுக்கு முதிர்ச்சியடைந்தவளாக இளம்பெண் இருக்கும்போது, முதிர்ச்சியுள்ள இளைஞர் கோட்பாடு மருத்துவ சிகிச்சையை ஏற்றுக்கொள்ளும் அல்லது மறுக்கும் பொதுவான சட்ட உரிமையை அவளுக்குக் கொடுக்கிறது.”
எர்னஸ்டின் அதற்குப் பின்பு எந்தவித ரத்தமேற்றுதல்களையும் பெறவில்லை. அவளுடைய வெள்ளையணுப் புற்றுநோயால் அவள் சாகவில்லை. முன்பு குறிப்பிடப்பட்ட இளைஞரைப் போலவே, எர்னஸ்டின் உறுதியாக இருந்தாள், கடவுளை முதலாவதாக வைத்தாள். அனைவரும், ‘இயல்புக்கு மேலான வல்லமையை’ உடையவர்களாக இருந்தனர்.—2 கொரிந்தியர் 4:7.
[பக்கம் 13-ன் பெட்டி]
இரத்தமேற்றுதலின் அபாயங்கள்
தி நியூ இங்கிலாண்ட் ஜர்னல் ஆஃப் மெடிஸின், டிசம்பர் 14, 1989, இதழ் ஒரு தனி யூனிட் ரத்தம் 17.5 லட்சம் நோய்த் தொற்றுகளை உண்டாக்கும் எய்ட்ஸ் கிருமிகளை கடத்தக்கூடும் என்று அறிக்கைசெய்தன!
1987-ல், ரத்த தானம் செய்வோரிடமிருந்து பெறப்படும் ரத்தத்தின்மூலம் எய்ட்ஸ் பரப்பப்படுகிறது என்று அறியவந்தபோது, சுய மற்றும் வழிநடத்தப்பட்ட ரத்தமேற்றுதல் திட்டங்கள் (Autologous and Directed Blood Programs) என்ற புத்தகம் இவ்வாறு புலம்பியது: “அருமையான உயிர்வரம் கொடுக்கும் ரத்தம், மரணத்துக்குக் காரணமாக மாறும் என்பது, எல்லா மருத்துவ கஷ்டங்களிலும் மிகக் கடினமானதாக இருந்தது.”
அ.ஐ.மா., மஸாச்சூசட்ஸில் உள்ள ரத்தமேற்றுதல் இலாகாவின் இயக்குநராக இருக்கும் டாக்டர் சார்ல்ஸ் ஹக்கின்ஸ் சொன்னார்: “மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மிக ஆபத்தான பொருள் ரத்தம்.”
சர்ஜரி ஆனுவல் இவ்வாறு முடிவுக்கு வந்தது: “தெளிவாகவே, கொடுக்கப்படாத ரத்தமேற்றுதலே மிகப் பாதுகாப்பான ரத்தமேற்றுதலாக இருக்கிறது.”
இரத்தமேற்றுதல்கள் பயன்படுத்தப்பட்ட அறுவைசிகிச்சைகள் செய்த பின்பு, மறுபடியும் புற்றுநோய் வரும் கூடுதலான அபாயம் இருக்கிறது. எனவே, தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சர்ஜரியில் செப்டம்பர் 1986 தேதியிட்ட வெளியீட்டில் டாக்டர் ஜான் S. ஸ்பிரேட் இவ்வாறு சொன்னார்: “புற்றுநோய் அறுவை மருத்துவர் ரத்தமில்லாமல் அறுவைசிகிச்சை செய்யும் அறுவை மருத்துவராக ஆகவேண்டிய தேவை இருக்கிறது.”
அவசர மருத்துவம் (Emergency Medicine) என்ற பத்திரிகை சொன்னது: “இரத்தமேற்றுதல்களை அவற்றின் சாத்தியமான சிக்கல்களோடு நாம் ஒருசமயம் நம்பியிருக்க நினைத்தோம். இப்போது, யெகோவாவின் சாட்சிகளோடு நாம் கொண்டிருக்கும் அனுபவம், அப்படி இருக்கவேண்டிய தேவை நமக்கு இல்லை என்பதை அர்த்தப்படுத்துகிறது என்று நாம் சொல்லக்கூடும்.”
ஜர்னல் பெத்தாலஜிஸ்ட் யெகோவாவின் சாட்சிகளுடைய ரத்தமேற்றிக் கொள்வதற்கான மறுப்பைக் குறிப்பிட்டு, இவ்வாறு சொன்னது: “இரத்த வங்கிக்காரர்களிடமிருந்து இதற்கு எதிரான எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அவர்களின் விவாதத்தை ஆதரிக்க போதுமான சான்று இருக்கிறது.”
பாஸ்டன் சட்டக் கல்லூரி பள்ளியில் சட்டப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் சார்ல்ஸ் H. பாரன், யெகோவாவின் சாட்சிகள் ரத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “அமெரிக்க சமுதாயம் முழுவதுமே பயனடைந்துள்ளது. சாட்சிகளுடைய மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழுக்களின் வேலையின் காரணமாக யெகோவாவின் சாட்சிகள் மட்டுமல்ல, ஆனால் நோயாளிகள் பொதுவாகவே தேவையில்லாமல் ரத்தமேற்றுதல்கள் கொடுக்கப்பட குறைந்த வாய்ப்புக்களே உள்ளன.”