பரிபூரண சிறிய வீடுபராமரிப்போர்
தென் ஆப்பிரிக்காவிலுள்ள விழித்தெழு! நிருபர்
ஆப்பிரிக்க மழைக்காடுகளில் இடைவெளிகள், உள்ளே வெற்றிடத்தை கொண்ட கிளைகளையுடைய பார்ட்டீரியா என்றழைக்கப்படுகிற ஒரு மரத்தால் பெரும்பாலும் நிரப்பப்பட்டிருக்கின்றன. அதன் உச்ச உயரத்தை அடைய, காட்டின் விதானத்தை (canopy) எட்டும் அந்தப் போராட்டத்தில் மற்ற மரங்களோடு இது போட்டியிடவேண்டும். இந்தப் போராட்டத்தில், மூச்சடைக்கச்செய்யும் படரும்கொடிகளிலிருந்தும் இலைகளுக்கு வெளிச்சம் வராமல் தடுக்கும் பாசியிடமிருந்தும் விடுபட்டு வெற்றிபெற பார்ட்டீரியாவுக்கு உதவி தேவைப்படுகிறது. இங்குதான் கொடுக்குள்ள கருப்பு எறும்புகள் வீடுபராமரிப்போர் போல முக்கியமான பங்கை வகிக்கின்றன. எறும்புக்கும் மரத்துக்கும் இடையேயுள்ள உறவு, காமரூனின் ஒரு மழைக் காடாகிய கோரூப்பில் எடுக்கப்பட்ட ஆப்பிரிக்காவின் மழைக்காடு: கோரூப் (African Rainforest: Korup) என்ற ஒரு டிவி விளக்கவுரைப் படமாக (TV documentary) ஃபில் அக்லண்டு, மைக்கல் ரோஸன்பர்க் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.
ஒரு புதிய ராணி எறும்பு பார்ட்டீரியா மரத்தைத் தேடுவதை அந்த விளக்கவுரைப் படம் காண்பிக்கிறது. இயல்புணர்ச்சியாகவே, அவள் தன்னுடைய புற்றைக் கட்டுவதற்கு அதன் வெற்றிடமான கிளைகள் பொருத்தமான இடம் என்பதை அறிந்திருக்கிறாள். கிளையில் ஒரு துளையிட்டபின்பு, அவள் தன்னுடைய முட்டைகளை அதனுள் இடுகிறாள். மிகச் சிறிய செதிற்பூச்சிகளுக்கும் (scale insects) வீடாக வெற்றிட கிளைகள் இருக்கின்றன. இந்தச் செதிற்பூச்சிகள் மரத்தின் சாற்றை உணவாகக் கொள்கின்றன. எறும்புகள் இந்தப் பூச்சிகளை கால்நடைகளைப் பராமரிப்பதுபோல் பராமரிக்கின்றன. மேலும் எறும்புகள் ஊட்டச்சத்துமிக்க பானத்தை இவற்றிடமிருந்து பெறுகின்றன.
எறும்புப் புற்று போதுமானளவுக்குப் பெரியதாக ஆனவுடன், அதில் வசிக்கும் மற்றவற்றை வெளியேற்ற ஆரம்பித்து, மரத்தைச் சுத்தப்படுத்துகிறது. இந்தப் புத்திக்கூர்மைமிக்க சிறிய வீடுபராமரிப்போரை உற்றுக் கவனிப்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது! சில, மரத்தின் அடிப்பகுதிக்குக் கீழேயிரங்கிப்போய், அதை மூச்சுமுட்டசெய்ய முயற்சிசெய்யும் படரும்கொடிகளை எதிர்த்துத் தாக்குகின்றன. இடைத்தண்டு வழியாக கொறித்து, படரும்கொடிகளைக் கொலைசெய்கின்றன. மற்ற எறும்புகள் மரத்தின் இலைகளிலிருந்து கழிபொருள்கள், காளான்கள், மரப்பாசிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி இலைகளைச் சுத்தப்படுத்துவதைக் காணலாம். ஒரு இலையின் அடியில் மறைந்திருக்கும் கம்பளிப்பூச்சியும்கூட நீக்கப்படுகிறது.
அந்த டிவி விளக்கவுரைப் படம் இவ்வாறு விளக்குகிறது, “எறும்புகள் அசுத்தங்கள் அனைத்தையும் மிக நுட்பமாக சுத்தப்படுத்துகின்றன. அழிவுண்டாக்கும் பூச்சிகளிலிருந்தும் படரும்கொடிகளிலிருந்தும் சுத்தப்படுத்தப்பட்டு, எறும்புகளால் பாதுகாக்கப்பட்ட பார்ட்டீரியா இப்போது மற்ற மரங்களோடு முனைப்பாக போட்டியிட வந்திருக்கிறது. பிரதிபலனாக, பார்ட்டீரியாவின் வெறுமையான கிளைகளை அந்த எறும்புகள் தங்கள் உணவின் ஒரே ஊற்றுமூலமாக இருக்கும் தங்களுடைய செதிற்பூச்சிகளைப் பேணிகாப்பதற்கும், மேலும் தங்களுடைய குட்டி எறும்புகளை வளர்ப்பதற்கும் பயன்படுத்துகின்றன.”
இந்த எறும்புகள் எவ்வளவு கடின உழைப்பாளிகளாக இருக்கின்றன! ஒரு பண்டைக்கால நீதிமொழி சொல்கிறது: “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.”—நீதிமொழிகள் 6:6.