உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 5/8 பக். 26-27
  • துக்கிப்பது தவறா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • துக்கிப்பது தவறா?
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அவர்கள் துக்கித்தனர்
  • ‘மற்றவர்களைப்போலத் துக்கித்து இருக்கக்கூடாது’
  • துக்கப்பட்டாலும், நாம் நம்பிக்கையற்றவர்களாக இல்லை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • இறந்தவர்களுக்கு உறுதியான நம்பிக்கை
    நீங்கள் நேசிக்கிற ஒருவர் இறக்கும்போது...
  • இப்போது மரித்தவர்களாயிருக்கும் கோடிக்கணக்கானோர் திரும்பவும் உயிருடன் வாழ்வார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • “உன் சகோதரன் எழுந்திருப்பான்”!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 5/8 பக். 26-27

பைபிளின் கருத்து

துக்கிப்பது தவறா?

“நான் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை உறுதியாக நம்புகிறேன். மற்றவர்களுக்கு முன்பாக என் துக்கத்தைக் காட்டுவது தவறு என்று நினைத்தேன். அவ்வாறு துக்கத்தைக் காட்டுவதன்மூலம் அப்பேற்ப்பட்ட ஓர் உறுதியான நம்பிக்கையை நான் கொண்டிருந்தேனோ என அவர்கள் சந்தேகப்படக்கூடும் என்று நான் நினைத்தேன். உயிர்த்தெழுதலில் நிஜமாகவே நம்பிக்கை வைத்திருந்ததால், அவ்வளவு ஆழமாக துக்கப்படக்கூடாது என்று நினைத்தேன்.”—முழுக்காட்டுதல் பெற்ற ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக 21 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் ஷார்லின்.

நீங்கள் அன்புகூரும் ஒருவர் மரிக்கும்போது, நீங்கள் எதிர்பார்த்திராத உணர்ச்சிகளும் எண்ணங்களும் வரலாம்—பயம், கோபம், குற்றவுணர்ச்சி, மனச்சோர்வு. ஒரு கிறிஸ்தவனுக்கு, கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ் பரதீஸான பூமியில் உயிர்த்தெழுதல் உண்டு என்ற இருதயத்திற்குப் புத்துயிரூட்டும் பைபிளின் வாக்குறுதி, அதிர்ச்சியான நிலையைச் சமாளிக்க உதவிசெய்யும். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 21:1-4) ஆனால், ஷார்லினின் வார்த்தைகள் குறிப்பிடுவதுபோல், அன்பானவர்கள் மரிக்கும்போது, சில கிறிஸ்தவர்கள் தேவையில்லாத பாரத்தைச் சுமக்கின்றனர். அதாவது, துக்கமடைவது தவறு என்றும், துக்கிப்பது உயிர்த்தெழுதல் பற்றிய கடவுளுடைய வாக்குறுதியில் ஏதோவொரு வகையில் விசுவாசக்குறைவை வெளிப்படுத்துகிறது என்றும் உணர்கின்றனர்.

ஆனாலும், துக்கிப்பதைப் பற்றி பைபிள் என்னதான் சொல்கிறது? அன்பான ஒருவர் மரிக்கையில் துக்கமடைவது தவறா?

அவர்கள் துக்கித்தனர்

ஆபிரகாமின் விசுவாசம் பிரபலமானது. சோதனைக்குட்பட்டபோது, ஆபிரகாம் “[தன் குமாரன்] ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.” (எபிரெயர் 11:17; ஆதியாகமம் 22:9-13) தெளிவாகவே, அவருடைய காலத்திற்கு முன்பு யாருமே எப்போதும் உயிர்த்தெழுப்பப்படவில்லை, ஆனால் ஆபிரகாம், தேவைப்பட்டால் ‘மரித்தோரிலிருந்து [தன் குமாரனை] எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறார்’ என்று விசுவாசித்தார். (எபிரெயர் 11:18) ஆபிரகாமின் விசுவாசம் சோதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பின்பு, அவருடைய மனைவி சாராள் இறந்துபோனாள். விசுவாசமுள்ள அந்த மனிதர் எப்படிப் பிரதிபலித்தார்? அவர் ‘வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதார்,’ என்று பைபிள் விளக்குகிறது.a (ஆதியாகமம் 23:2) ஆம், கடவுள் மரித்தோரை உயிர்த்தெழுப்ப முடியும் என்ற விசுவாசத்தையுடைய மனிதர் வெளிப்படையாகத் துக்கித்தார். ஆனாலும், ஆபிரகாம் விசுவாசத்திற்கு ஒரு முனைப்பான முன்மாதிரியை வைத்ததாகக் குறிப்பிடப்படுகிறார்.—எபிரெயர் 11:8-10.

அன்பான ஒருவரை இழந்ததால் வெளிப்படையாக துக்கித்து, மனதை மிகவும் உருக்கின முன்மாதிரிகளில் ஒருவர் இயேசு கிறிஸ்துதாமே ஆவார். இயேசுவின் நெருங்கிய நண்பன் லாசருவின் சாவைப் பற்றி, நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். இயேசு கண்ணீர் விட்டார்.”—யோவான் 11:32-35.

கடவுளுடைய பரிபூரண குமாரன் வெளிப்படையாக துக்கிப்பதில் வெட்கப்படவில்லையென்று அறிவது உண்மையில் ஆறுதல் அளிப்பதாய் இருக்கிறது. “கண்ணீர் விட்டார்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூலமொழி வார்த்தை (டேகிரியோ) “அமைதியாக கண்ணீர் விடுவதை” அர்த்தப்படுத்துகிறது. முன்பு இரண்டு நபர்களை—நாயீன் ஊர் விதவையுடைய மகனையும் யவீருவின் மகளையும்—உயிர்த்தெழுப்பியிருந்த இயேசு, லாசருவையும் உயிர்த்தெழுப்ப முழு மனமுள்ளவராக இருந்தார் என்பதே மிகவும் குறிப்பிடத்தக்கது. (லூக்கா 7:11-15; 8:41, 42, 49-55; ஒப்பிடுக, யோவான் 11:11.) சற்று முன்புதான், அவர் மார்த்தாளிடம் சொல்லியிருந்தார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” (யோவான் 11:25) எனினும், அப்படிப்பட்ட ஆழ்ந்த உணர்ச்சிகள் இயேசுவின் கவனத்தை ஈர்த்து, அவருடைய கண்கள் கண்ணீரினால் நிரம்பிவழியும்படி செய்தது.

மிக முக்கியமான மற்றொன்றும் இருக்கிறது. இயேசு, “அவருடைய [யெகோவாவுடைய] தன்மையின் சொரூபமுமாயிரு”க்கிறார். (எபிரெயர் 1:3) எனவே, ஓர் அன்பானவரை மரணத்தில் இழப்பதில் காட்டப்பட்ட இயேசுவின் கனிவான, ஆழ்ந்த உணர்ச்சிகள், நம் பரலோக தந்தை யெகோவாவின் மனதுருகிய காட்சியை படம்பிடித்துக்காட்டுகிறது. அவை கடவுள் தம்முடைய ஊழியர்களின் துக்கத்திற்காக, அவருடைய இருதயம் பொறுக்கமுடியாத வலியால் சித்திரவதைக்கு உள்ளாகிறது என்பதை சித்தரிக்கின்றன.—சங்கீதம் 56:8-ஐ ஒப்பிடுக.

எனவே, மிகத் தெளிவாகவே, நீங்கள் அன்புகூரும் ஒருவர் மரிக்கையில் துக்கிப்பது தவறல்ல. ஆபிரகாம் சாராளின் மரணத்தின் காரணமாகப் புலம்பினார். இயேசு, லாசரு மரித்தபோது வெளிப்படையாகவே துக்கப்பட்டார். யெகோவா தேவன் நம்முடைய வேதனையை அறிகிறார். ஏனென்றால், நம்மீது “அவர் அக்கறை உள்ளவராய் இருக்கிறார்.”—1 பேதுரு 5:7, NW.

ஆனாலும், கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றி என்ன? அது வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதா?

‘மற்றவர்களைப்போலத் துக்கித்து இருக்கக்கூடாது’

தெசலோனிக்கேயில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவச் சபையிலிருந்த சிலர், உடன் விசுவாசிகள் மரித்தபோது துக்கித்தனர். அந்தச் சமயத்தில் அப்போஸ்தலன் பவுல் அவர்களை ஆறுதல்படுத்த முயற்சிசெய்தார். அவர் எழுதினார்: “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.” (1 தெசலோனிக்கேயர் 4:13) ஆம், உயிர்த்தெழுதல் நம்பிக்கை இல்லாதவர்களைவிட, மரித்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவர் என்ற கடவுளுடைய வாக்குறுதியில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள் மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.b அது எப்படி?

மரணத்தை எதிர்ப்படுகையில், உயிர்த்தெழுதல் நம்பிக்கையில்லாதவர்கள் மனமுறிவடைந்துவிடுகின்றனர். ஏதோ ஒருவகையான மறுபிறவியில் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்திருப்பதாக உரிமைபாராட்டினாலும், அதிலிருந்து வெகுசிலரே உண்மையான ஆறுதலைப் பெறுகின்றனர். மற்ற பலருக்கு, அவர்களுடைய துயரம், அன்பானவர்கள் மரணத்தால் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையின் காரணமாக மட்டுமல்லாமல், அந்தப் பிரிவு அவர்களுக்கு நிரந்தரமானது என்ற உண்மையாலும் உண்டாக்கப்படுகிறது. உயிர்த்தெழுதலைப் பற்றி தெளிவான புரிந்துகொள்ளுதல் இல்லாமல், அவர்கள் தங்களுடைய அன்பானவர்களைப் புதைக்கும்போது, அவர்களுடைய எதிர்கால நம்பிக்கைகளையும் சேர்த்து புதைத்துவிடுகிறார்கள்; அவர்களைப் பொருத்தமட்டில், அவர்களை அவர்கள் இனி ஒருபோதும் காணப்போவதில்லை.—1 கொரிந்தியர் 15:12-19, 32-ஐ ஒப்பிடுங்கள்.

உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு இது வித்தியாசப்படுகிறது. மரணம், பவுல் விளக்கினதுபோல, ஒரு தூக்கம்போன்றது—அது ஆழ்ந்த தூக்கத்தைப்போல உணர்ச்சியற்ற நிலை என்பதன் காரணத்தால் மட்டுமல்ல, அதிலிருந்து உயிர்த்தெழுதல்மூலம் விழித்தெழ வைக்கமுடியும் என்ற காரணத்தினாலும் ஆகும். (சங்கீதம் 13:3; பிரசங்கி 9:5, 10) அந்த பைபிள் அடிப்படையிலான நம்பிக்கை வித்தியாசத்தை உண்டாக்குகிறது.

அவிசுவாசிகள் எப்படி மறைந்துபோன கூட்டுறவை, நன்கறிந்த நபரின் இழப்பை, அன்பான குரலின் மறைவை ஆழமாக உணர்கிறார்களோ அதேபோல ஒரு கிறிஸ்தவர் அன்பான ஒருவரை மரணத்தில் இழக்கும்போது உணர்கிறார். உயிர்த்தெழுதல் நம்பிக்கையானது, இருதயத்தை உணராதபடி இருக்கச்செய்வதில்லை. ஆனாலும், அது உண்மையில் துக்கிப்பதைத் தணிய அல்லது சமநிலைப்படுத்தச் செய்கிறது. இல்லை, அந்த நம்பிக்கை துக்கிப்பதன் அவசியத்தை நீக்குவதில்லை. ஆனால் வேதனையைப் பொறுத்துக்கொள்ளும்படியாக அதிக எளிதாக்குகிறது.

[அடிக்குறிப்புகள்]

a “புலம்பு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையைப் பற்றி, தியாலஜிக்கல் உவர்ட்புக் ஆஃப் தி ஓல்டு டெஸ்டமென்ட் சொல்கிறது: “பிரிந்தவரின் இழப்பை உணர்ந்தவர்கள் தங்களுடைய துக்கத்தை, அந்தக் குடும்ப அங்கத்தினரோடு பகிர்ந்துகொள்வதற்கு வருவர் . . . கீச்சுக்குரல் அழுகையும் அல்லது சத்தமான ஒப்பாரியும் துக்கப்படுதலோடு பெரும்பாலும் சேர்ந்துவந்தன.” “அழு” என்பதன் எபிரெய வார்த்தையைப் பற்றி அதே புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “கண்ணீர் கண்களோடு தொடர்புடையதாக இருக்கிறது, அழுதலோ குரலோடு தொடர்புடையதாக இருக்கிறது; செமிட்டிக் இனத்தவர் அமைதியாக அல்ல, சப்தமாக அழுகிறவர்கள். . . . ப[ழைய] ஏ[ற்பாடு] முழுவதும் அழுவது சர்வசாதாரணமானது, ஆழமான உணர்ச்சியின் உடன் வெளிப்பாடு ஆகும்.”

b பவுல் யாருக்காக அதை எழுதினாரோ அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பரலோகத்துக்கு உயிர்த்தெழுந்துபோகும் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். அங்கு அவர்கள் கிறிஸ்துவின் உடன் ஆட்சியாளர்களாக சேவைசெய்வார்கள். (1 தெசலோனிக்கேயர் 4:14-17; ஒப்பிடுக, லூக்கா 22:29, 30.) இவ்வாறு பவுல் அவர்கள் மத்தியில் மரித்திருந்த உண்மையுள்ளவர்கள் கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது உயிர்த்தெழுப்பப்பட்டு, கிறிஸ்துவோடும் ஒருவருக்கொருவரும் ஐக்கியப்பட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையால் ஒருவரையொருவர் தேற்றும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார். ஆனாலும் மரிக்கிறவர்களில் பெரும்பான்மையோருக்கு மறுபடியும் ஸ்தாபிக்கப்பட்ட பூமிக்குரிய பரதீஸில் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பைபிள் கொடுக்கிறது.—யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:1-4.

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

Jean-Baptiste Greuze, Le fils puni, Louvre; © Photo R.M.N.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்