ஓர் அகதியாக, மெய்யான நீதியை நான் கண்டடைந்தேன்
இன்னும் குளிராக இருந்து தரையில் பனி படர்ந்திருந்ததால், நான் தடித்த ஒரு மேலுடுப்பை அணிந்தேன். பின்னர் என்னுடைய தனியறையிலே நான் கண்ட விஷமான எல்லாவற்றின், சுத்தம் செய்வதற்கான (கார்பன் டெட்ராக்ளோரைடு) திரவத்தையும் உள்ளடக்கிய, ஒரு கலவையை விழுங்கினேன். இறந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மஸாஸுஸெட்ஸின் கேம்ப்ரிஜில் உள்ள சார்லஸ் நதிக்கு நான் சென்றேன். மரணத்திற்குப் பதிலாக, என்னுடைய மனமுறிவுக்குக் கிடைத்ததெல்லாம் ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை அறையில் ஐந்து நாட்கள்தான். அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையிழந்த நடவடிக்கையை எடுக்க என்னை வழிநடத்தியது எது? என்னுடைய தொடக்கங்களுக்கு நாம் செல்லலாம்.
நான் 1932-ல் பாலஸ்தீனாவில் உள்ள ஜாஃபாவில் பிறந்த ஒரு கிரேக்க பாலஸ்தீனன். நான் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மதத்தில் வளர்க்கப்பட்டேன். அது வாராவாரம் சர்ச்சுக்குப் போவதையும் தேவையானபோது உபவாசம் இருப்பதையும் அர்த்தப்படுத்திற்று. ஆனால் எனக்கு அது அர்த்தமற்ற ஒரு வழக்கமுறையாகவே இருந்தது.
எங்கள் குடும்பத்திற்கு, உணவு மற்றும் மதுபானத்தைப் பரவலாக விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று இருந்தமையால், என்னுடைய பெற்றோர் ஓரளவு பணக்காரர்களாக இருந்தனர். பத்து வயதில், நான் ராமாலாவில் இருந்த ஃப்ரண்ட்ஸ் போர்டிங் ஸ்கூலுக்கும், அதன் பிறகு ஜெரூசலமிலுள்ள செயின்ட் ஜார்ஜ்ஸ் ஆங்கிலிக்கன் ஸ்கூலுக்கும் அனுப்பப்பட்டேன். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட பள்ளி என் மனதில் ஆழ்ந்த பதிவை ஏற்படுத்திற்று—அங்கிருந்த கிறிஸ்தவ, அராபிய, மற்றும் யூத பின்னணிகளிலிருந்து வந்த மாணாக்கர் அனைவரும் ஓரளவு சமாதானத்தோடே ஒருமித்து படித்துவந்தனர். அந்தப் பள்ளி இணங்கி வாழ்தலையும் நல்ல பழக்கவழக்கங்களையும் மரியாதையையும் கற்பித்தது. ஆனால் அந்தப் பள்ளியும் உண்மையில் நடந்தவையும் இரண்டு வித்தியாசமான காரியங்களாக இருந்தன.
என்னுடைய குழந்தைப் பருவத்தில், யூதர்கள், அராபியர்கள், மற்றும் ஆங்கிலேயர்கள் ஒரு புட்டியிலுள்ள தேள்களைப் போல நடந்துகொண்டதால் சமூகக் கலவரம் அப்போது பொதுவானதாக இருந்தது. ஒரு சிறு பிள்ளையாக, எங்களுடைய வீட்டிற்கு வெளியே ஓர் ஆள் கொல்லப்படுவதை நான் பார்த்தேன். பல்முனைத் தாக்குதலில் என் பெற்றோர் பலமுறை மயிரிழையில் தப்பியிருக்கின்றனர். பின்னர் இரண்டாம் உலக யுத்தம் ஹைஃபா என்ற முக்கியமான துறைமுக நகரை ஜெர்மானிய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஓர் இலக்காக்கியது—இன்னுமதிக மரணமும் அழிவும்.
பாலஸ்தீனத்தின் மேல் இருந்துவந்த பிரிட்டிஷ் மேற்பார்வை மே 1948-ல் முடிவுக்கு வரவிருந்ததால், உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்தது. ஜூலை 1946-ல் ஜெரூசலமின் புகழ்மிக்க கிங் டேவிட் ஹோட்டல், தகர்க்கப்பட்டது. பலியானோர் இனப்பாகுபாடின்றி கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர்—41 அராபியர்கள், 28 ஆங்கிலேயர்கள், 17 யூதர்கள், மற்றும் 5 இதர ஆட்கள். எங்கள் குடும்பம் இந்தச் சீர்கெட்ட நிலையிலிருந்து தப்பியோட தீர்மானித்தது. ஒரே இரவில் நாங்கள் சைப்ரஸுக்கு மாறிச்சென்றோம். அங்கு என் அம்மாவுக்கு உறவினர்கள் இருந்தனர். அப்பா தனது வியாபாரத்தையும் மற்றுமநேக சொத்துக்களையும் விட்டுவிட்டார்.
இந்தச் சம்பவங்கள் என்னுடைய இளமைகால மனநிலைகளை வடிவமைத்தன. 16 வயதில், எனக்கு அரசியலில் நாட்டம் ஏற்பட்டு, சம்பவங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமும் செய்தித்தாள்களை வாசித்துவந்தேன். எகிப்திய தலைவர் கமால் அப்தல் நாஸர்தான் என்னுடைய அபிமான தலைவர். அவர் தன்னுடைய நாட்டில் வெளிநாட்டுச் செல்வாக்கைப் பலவீனப்படுத்தினார்.
1950-ல் எங்கள் குடும்பம் ஐக்கிய மாகாணங்களுக்குக் குடிபெயர்ந்தது. கொரியப் போர் நடந்துகொண்டிருந்தது. ஒடுக்கும் சூழ்நிலையிலிருந்து என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றிய ஒரு நாட்டுக்காக என்னுடைய பாகத்தைச் செய்ய நான் விரும்பினேன். நான் விமானப்படை சேவைக்காக என்னையே மனமுவந்து அளித்தேன். அதில் நான் ஆணைபெறாத படைத்துறை உயர் அலுவலரின் பயிற்சி அதிகாரியாக (staff sergeant) பதவி உயர்வுபெற்றேன். இருப்பினும், நான் கொரியாவுக்கு ஒருபோதும் போனதில்லை—நெப்ராஸ்காவின் ஒமஹாவிலுள்ள விமானப்படை தளம் வரை மட்டுமே சென்றிருக்கிறேன்.
இறைமையியல் கல்லூரி ஒன்றில் ஒரு சீர்திருத்தவாதி
விமானப்படையிலிருந்து நான் ஓய்வு பெற்றபின், டெக்ஸஸ் பல்கலைக்கழகத்திற்கும் அதன்பின் ஒஹாயோ பல்கலைக்கழகத்திற்கும் சென்று பொருளாதாரத்தில் பட்டம் பெற்றேன். மத்தியக் கிழக்கில் இழைக்கப்படும் அநீதிகளைக் குறித்து நான் ஒளிவுமறைவின்றி நேரடியாகப் பேசினேன். ஆகவே அப்பொருளின்பேரில் சொற்பொழிவாற்ற அழைக்கவும்பட்டேன். நான் பேசியதைக் கேட்ட பாதிரிவர்க்க பேராசிரியர் டாக்டர் டேவிட் ஆன்டர்ஸன் பாஸ்டனிலுள்ள பாதிரிவர்க்க இறைமையியல் கல்லூரியில் முதுநிலைப் பட்டப் படிப்புக்காக ஓர் உதவித்தொகையை ஏற்றுக்கொள்ளும்படி ஆலோசனை தந்தார். ஊதியமளிக்கப்படும் ஒரு பாதிரிவர்க்கமுறை எனக்குப் பிடிக்காததால், ஒரு பாதிரியாகும் எண்ணம் எனக்கு இல்லாதிருந்தது. இருப்பினும், 1958-ல் நான் அந்தக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.
அந்தப் படிப்பு மனநோய் மருத்துவ நிலையங்களில், அவற்றின் தலைவர்களாயிருந்த பாதிரிகளோடு சேர்ந்து வேலைசெய்வதை உட்படுத்திற்று. அந்தக் கல்லூரியின் வாய்வழி மற்றும் செய்முறைப் பயிற்சியின் அம்சங்கள் மிகவும் ஆர்வமூட்டக்கூடியவையாகவே இருந்தன. ஆனால் நான் உலகில் அதிக செய்கையையும் நீதியையுமே காண விரும்பினேன். ஆகவே “அவருடைய நாமம் சகல தேசத்தார் மத்தியிலும் தெரிவிக்கப்படுகிறது” என்றழைக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கை குழு ஒன்றை நான் நிறுவினேன். அந்தக் கல்லூரி செயல்முறை சார்ந்ததாய் இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். நான் இயேசுவை கல்வி அளவில் அல்ல ஆனால் செயலில் பின்பற்ற விரும்பினேன்.
எனினும், என்னால் ஆலோசனை கூறப்பட்ட சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட போவதில்லை என்பதை விரைவில் நான் கண்டுபிடித்தேன். இறுதியில் நான் கல்லூரியிலிருந்து நின்றுகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். கிட்டத்தட்ட இந்தச் சமயத்தில்தான் நான் ஓர் இளம் மங்கையிடம் காதல்கொண்டேன். என்னுடைய எதிர்காலத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஓர் ஆளுக்கான என்னுடைய தேடுதலின் பலனாக அவள் இருந்தாள். நாங்கள் மிகவும் பொருத்தமான ஜோடியாய் இருந்ததாக நான் உணர்ந்தேன். அவள் என்னுடைய உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு பிரதிபலிக்கவில்லை என்பதைப் பின்பு நான் கண்டுபிடித்தேன். ஒதுக்கித் தள்ளப்பட்ட அந்தத் திடீர் அதிர்ச்சியினால் நான் ஆட்கொள்ளப்பட்டேன். அதுதான் நான் செய்த தற்கொலை முயற்சிக்கு வழிநடத்திய இறுதி காரணமாக இருந்தது.
ஆசிரியனாக ஒரு தொழில்
மறுவாழ்வின் ஒரு காலப்பகுதிக்குப் பிறகு, புவியியலையும் வரலாற்றையும் போதிப்பதற்கான ஒரு முதுநிலை பட்டப் படிப்பைத் தொடர நியூ யார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். இந்தக் காலப்பகுதிகளிலெல்லாம், செயலில் காண்பிக்கப்படும் உண்மைக் கிறிஸ்தவம் என்று நான் அழைத்ததைக் காண இன்னும் தேடிக்கொண்டிருந்தேன். என்னுடைய ஆசிரிய வேலை என்னை நியூ யார்க்கிலுள்ள செளத் க்ளென்ஸ் ஃபால்ஸுக்குக் கொண்டு சென்றது. அங்கு என்னுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டது. 1964-ல் என்னுடைய துணையாகவும் மனைவியாகவும் ஆன ஜார்ஜா என்ற பெயருடைய ஓர் ஆசிரியையை நான் சந்தித்தேன்.
நான் இன்னும் அரசியலில் அதிக நாட்டமுடையவனாகவும் ஜேம்ஸ் ஃபுல் ப்ரைட் என்ற சட்ட மன்ற உறுப்பினரின் சொற்பொழிவுகளைப் பின்பற்றுபவனாகவும் இருந்தேன். அவர் வியட்நாமில் நடந்த போருக்கு எதிராக பேசினார். நானும் அந்தப் போருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவனாய் இருந்தேன். நவம்பர் 1963-ல் ஏற்பட்ட ஜனாதிபதி ஜான் F. கென்னடியின் மரணம் எனக்கு மகா பெரிய அதிர்ச்சியைத் தந்தது. வாஷிங்டனில் அவருடைய சவ அடக்கத்தில் நான் கலந்துகொள்ளுமளவுக்கு பாதிக்கப்பட்டேன்.
கிறிஸ்தவத்துக்கான என்னுடைய தேடுதல்
1966-ல் நாங்கள் நியூ யார்க்கிலுள்ள லாங் ஐலண்டுக்கு மாறிச்சென்றோம். அங்கு நார்த்போர்ட் மேல்நிலை பள்ளியில் நான் ஆசிரியர் பதவியில் அமர்ந்தேன். உலக சம்பவங்களைப்பற்றி நான் ஆழ்ந்த அக்கறையுடையவனாக இருந்தேன். அது போதைமருந்துகளின் உபயோகம், ஹிப்பிகள், மற்றும் இயேசுவின் பித்தர்கள் (Jesus freaks) பிரபலமாகிக்கொண்டுவந்த காலமாக இருந்தது. நான் ஒரு காரிஸ்மாட்டிக் குழுவினரின் கூட்டத்திற்கு ஆஜரானேன். அவர்களிடமும் உண்மைக் கிறிஸ்தவத்தின் செய்தி இல்லாதிருந்து, அவர்கள் செய்கையைவிட உணர்ச்சிவசப்படுதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்ததையும் நான் கண்டேன். மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு பாதிரி ஊழியர் வியட்நாமில் நடந்த போரை ஆதரித்துப் பேசியதையும்கூட நான் கேட்டேன். சில நாத்திகர்கள் சர்ச் ஜனங்களைவிட அதிக மனிதாபிமானம் உடையவர்களாய் இருந்தனர் என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டேன்.
நான் கடவுளில் நம்பிக்கையிழந்தேன், ஆனால் இயேசுவின் மலைப் பிரசங்கத்தின் அரசியல்சார்ந்த மதிப்பில் நம்பிக்கை இழந்துவிடவில்லை. என்னைப் பொருத்தளவில் அவர் வெறுப்பின் சுழற்சியைத் தம்முடைய போதனைகளைக் கொண்டு முறியடித்தார். நான் அதையே மத்திய கிழக்குப் பிரச்னைக்கான தீர்வாகக் கண்டேன். கத்தோலிக்க மதம், இரட்சணிய சேனை, பேப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே போன்ற பல மதங்களில் நான் சேர்ந்துபார்த்தேன். ஆனால் அவர்கள் பூர்வ கிறிஸ்தவர்களின் கிறிஸ்தவத்தைக் கடைப்பிடிப்பவர்களாக இல்லை என்ற ஒரு வெறுமையுணர்ச்சியோடே எப்போதும் வெளியேறினேன். பின்னர், 1974-ல், வீடு மற்றும் நில விற்பனை தரகர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டார்.
அவருடைய பெயர் ஃப்ராங்க் பார்ன். ஏதோவொரு சொத்து விஷயமாக நான் அவரிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டிருந்தேன். அந்த உரையாடலின்போது, அவர் ஒரு பைபிளை வெளியே எடுத்தார். “அந்த நியமங்களைக் கடைப்பிடித்து வாழும் யாரையும் உங்களால் கண்டுபிடிக்கமுடியாது,” என்று சொல்லி நான் உடனடியாக மறுத்துவிட்டேன். அவர் பிரதிபலித்தார்: “என்னோடு வந்து, யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நீங்களாகவே பார்த்துக்கொள்ளுங்கள்.” ஆனால் அவருடைய ராஜ்ய மன்றத்திற்கு நான் போகுமுன் அடிப்படை கேள்விகள் சிலவற்றிற்கு அவர் பதிலளிக்கும்படி விரும்பினேன்.
முதல் கேள்வி: “ஊதியமளிக்கப்பட்ட பாதிரிகள் உங்களிடம் இருக்கின்றனரா?” அவருடைய பதில்: “இல்லை, எங்களுடைய மூப்பர் அனைவரும் அவர்களுடைய உலகப்பிரகாரமான வேலையைக்கொண்டு தங்களையும் தங்களுடைய குடும்பங்களையும் ஆதரிக்கும் வாலண்டியர்களாக இருக்கின்றனர்,” என்பதாக இருந்தது. என்னுடைய அடுத்த கேள்வியானது: “பைபிளைப் படிக்க பூர்வ கிறிஸ்தவர்கள் கூடிவந்ததுபோல தனிப்பட்டோரின் வீடுகளில் கூடிவருகிறீர்களா?” பதில் இதுவாக இருந்தது: “ஆம், சுற்றுவட்டாரத்தின் பல பாகங்களில் இருக்கும் தனிப்பட்டோரின் வீடுகளில் நாங்கள் வாராந்தரக் கூட்டங்களைக் கொண்டிருக்கிறோம்.” என்னுடைய மூன்றாவது கேள்வி அவருக்கு விந்தையாக தோன்றியிருக்கவேண்டும். “ஜனாதிபதியின் பதவி ஏற்பு விழாக்களில் ஜனாதிபதிக்காக ஜெபிக்க உங்களுடைய சர்ச் ஓர் ஊழியரை அனுப்புகிறதா?” ஃப்ராங்க் பதிலளித்தார்: “எல்லா அரசியல் விவகாரங்களிலும் நாங்கள் நடுநிலையை வகிக்கிறோம்; அவற்றில் பங்குகொள்வதில்லை. இன்று மனிதவர்க்கத்தை அல்லல்படுத்தும் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வாக கடவுளுடைய ராஜ்யத்திற்கே எங்கள் பற்றுறுதியைக் காண்பிக்கிறோம்.”
நான் கேட்டுக்கொண்டிருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தக் கிறிஸ்தவர்கள் எங்கு சந்தித்தனர் என்று பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை. நான் எதைக் கண்டேன்? உணர்ச்சிவசப்படுதலையல்ல ஆனால் பைபிளைப் பகுத்தறிவோடு அணுகுதலையே. அவர்களுடைய கூட்டங்கள் கல்விபுகட்டுபவையாகவும், தங்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தை ஆதரித்து விளக்கம்கூற ஜனங்களைத் தகுதிவாய்ந்தவர்களாக ஆக்குபவையாகவும் இருந்தன. கடவுளின் நீதியுள்ள ஆட்சிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஜனங்களைக் கண்டடைய மக்கள் மத்தியில் செல்லும் அவர்கள், செயல்புரியும் ஒரு தொகுதியினராக இருந்தனர். மத்திய கிழக்குப் பிரச்னைக்கான என்னுடைய பதில் இங்கேயே இருந்தது—எல்லா இனங்களையும் மொழிகளையும் பண்பாடுகளையும் சேர்ந்த ஜனங்கள், சர்வலோக பேரரசராகிய யெகோவா தேவனை சமாதானத்தோடு வணங்குவதில் ஒன்றுபட்டிருக்கின்றனர். இவை எல்லாமும் கிறிஸ்துவின் போதனை மற்றும் எடுத்துக்காட்டுக்கு இணங்க செய்யப்படுகின்றன. இங்கு வெறுப்புணர்ச்சியோ சண்டை சச்சரவோ கிடையாது. சமாதானமும் ஐக்கியமும் மட்டுமே.
1975-ல் நான் முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சியானேன். ஐந்து வருடங்கள் கழித்து ஜார்ஜா அதைச் செய்வதில் என்னைப் பின்பற்றினாள். ராபர்ட், ஜான் என்ற இரண்டு மகன்கள் எங்களுக்கு இருக்கின்றனர். அவர்கள் இருவரும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை சுறுசுறுப்பாக அறிவித்துவருகின்றனர்.
மாற்றப்பட்ட மனநிலைகள்
பல ஆண்டுகளினூடே என்னுடைய மனநிலைகள் கனிவுற்றன. நான் முன்பு மற்றவர்களின் கருத்துக்களை சிறிதும் மனதில்கொள்ளாமல் எரிச்சலூட்டும் சண்டைக்காரனாக இருந்தேன். அநேக லட்சக்கணக்கானோரைப் போலவே, என்னுடைய எண்ணம் பொய்மதம் மற்றும் அரசியலால் ஆட்கொள்ளப்பட்டு வந்திருந்தது. ஆனால் இப்போதோ கடவுள் பட்சபாதமற்றவர் என்றும் எல்லா இனத்தைச் சேர்ந்த உண்மைமனதுள்ளவர்களும் அவரை சமாதானத்திலும் ஐக்கியத்திலும் சேவிக்கமுடியும் என்று புரிந்துகொள்கிறேன்.
யெகோவாவின் சாட்சிகள் மத்தியில், அறிந்துகொள்ளக்கூடிய ஒவ்வொரு பின்னணிகளில் இருந்துவரும் ஜனங்களையும், முன்பு மற்றவர்களை வெறுத்த ஜனங்களையும் நான் கண்டேன். இப்போது, அவர்கள் என்னைப்போல, கடவுள் மெய்யாகவே அன்பாய் இருக்கிறார் என்றும் இயேசு நமக்குப் போதிப்பதற்காக வந்த அம்சங்களில் அதுவும் ஒன்று எனவும் அறியவந்திருக்கின்றனர். அவர் சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:34, 35)—கான்ஸ்டன்டைன் லூசிடிஸ் சொன்னபடி. (g93 11/08)
[பக்கம் 21-ன் படம்]
ஃப்ரண்ட்ஸ் பாய்ஸ் ஸ்கூலில் படிக்கும் பத்துவயது கான்ஸ்டன்டைன் லூசிடிஸ்
[பக்கம் 22-ன் படம்]
ஜனாதிபதி ஜான் F. கென்னடியின் மரணம் மகா பெரிய அதிர்ச்சியைத் தந்தது