பைபிளின் கருத்து
நமக்கு ஆசாரியர்கள் உண்மையிலேயே தேவைதானா?
“குருத்துவத்தின் பரிசுக்காக நன்றி செலுத்துங்கள்,” என்று 1992-ன் “புனித வியாழன்” அன்று குருக்களுக்குத் தான் எழுதிய வருடாந்தர கடிதத்தில் இரண்டாம் ஜான் பால் சொன்னார். கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாது, மற்றவர்கள்கூட தங்களுடைய சொந்த குற்றங்களை வேதனைதரும் வகையில் உணருபவர்களாய் ஆகியிருக்கின்றனர். கடவுளுடைய சித்தத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தவும், அவருக்கு ஒரு பலி செலுத்தவும், தங்களுக்காக கடவுள் முன்னிலையில் பரிந்துபேசவும், கடவுளுக்கு ஏற்புடைய யாரோ ஒருவர் தேவை என்பதை உணர்ந்திருந்தனர். அத்தகைய ஒரு நபரே குரு என்று அழைக்கப்படுகிறார். கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெற உதவுவதற்கு நமக்கு ஓர் ஆசாரியன் உண்மையிலேயே தேவைதானா?
ஆசாரியர்களையும் பலிகளையும்பற்றிய எண்ணம் மனிதனின் மனதில் தோன்றியதல்ல. ஆனால் கடவுளிடமிருந்து தோன்றியவையே. கடவுளுக்கெதிராக பாவங்கள் இல்லாமல் இருந்திருந்தால், ஆசாரியர்களுக்கான தேவையே இருந்திருக்காது. ஏதேனில், பரிபூரண ஆதாமுக்கு ஆசாரியர்களின் தேவையே இல்லாதிருந்தது. அவன் பாவமற்றவனாக படைக்கப்பட்டான்.—ஆதியாகமம் 2:7, 8; பிரசங்கி 7:29.
முதல் ஆசாரியர்களாக இருந்தவர்கள் யாவர்?
ஆதாம் வேண்டுமென்றே பாவம் செய்தான். நாம் அவனுடைய பிள்ளைகள். ஆகவே நாம் அனைவருமே இன்று பாவத்தன்மையைச் சுதந்தரித்துக் கொண்டிருக்கிறோம். (ரோமர் 3:23) முதல் மனிதன் ஆதாமின் மகன் ஆபேல், இதை உணர்ந்தவனாக இருந்தான். அவனைப்பற்றி பைபிள் சொல்கிறது: “விசுவாசத்தினாலே ஆபேல் . . . பலியை தேவனுக்குச் செலுத்தினான்.” (எபிரெயர் 11:4) ஆபேலும்—நோவா, ஆபிரகாம், யோபு போன்ற—மற்ற விசுவாசமுள்ள பூர்வீக மனிதர்களும் ஆசாரியர்கள் என்று அழைக்கப்படவில்லை. எனினும், அவர்கள் தங்கள் சார்பாகவோ தங்களுடைய குடும்பங்கள் சார்பாகவோ கடவுளுக்குப் பலிகளை செலுத்தினர். உதாரணமாக, பைபிள் யோபுவையும் அவருடைய குமாரர்களையும்பற்றி இவ்வாறு சொல்கிறது: ‘யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்திருப்பர் என்று சொல்லி, [யோபு] அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.’ (யோபு 1:5) இருந்தாலும், ஆசாரியர்களும் பலிகளும் அத்தனையனேக பண்பாட்டினருக்கும் பொதுவாக ஆனது எவ்வாறு?
பூர்வீக முற்பிதா நோவாவைச் சூழ்ந்திருந்த சம்பவங்களை கவனியுங்கள். நோவாவும் அவருடைய குடும்ப அங்கத்தினர் மட்டுமே பூகோள ஜலப்பிரளயத்தைத் தப்பிய மனிதர்கள் ஆவர். கழுவித் துப்புரவாக்கப்பட்ட பூமியில் அவர்கள் கால் வைத்தபோது, நோவா ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவின் இரக்கத்திற்கும் பாதுகாக்கும் அவருடைய கரத்திற்கும் போற்றுதல் காண்பிக்கும்வண்ணம் பலிகளைச் செலுத்தினார். எல்லா தேசத்தினரும் நோவாவின் சந்ததியினராகையால், அவர்கள் அவருடைய முறையைப் பின்பற்றினர் என்பதில் சந்தேகமில்லை. காலப்போக்கில் பாவத்திற்காக பரிந்துபேசுபவர்கள், பலிகள் சம்பந்தமான பல்வேறு பாரம்பரியங்களையும் ஏற்படுத்தினர்.—ஆதியாகமம் 10:32.
ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்துக்குப் பின்னர், பாபேல் நகரத்தில் கடவுளுக்கு எதிராக ஒரு கலகம் எழும்பியது. கடவுள் ஜனங்களின் மொழியைத் தாறுமாறாக்கினார்; ஆகவே அவர்கள் சிதறிப்போனார்கள். (ஆதியாகமம் 11:1-9) மாறுபட்ட, தரக்குறைவான நம்பிக்கைகளை இப்போது ஆதரித்துவரும் சில ஆசாரியர்கள், அவர்கள் சிதறிப்போன தேசங்களில் பயங்கரமான சடங்காச்சாரங்களை உருவாக்கினர். இருந்தபோதிலும், ஒரு பிரதான ஆசாரியனையும் உதவி ஆசாரியர்களையும் கொண்ட உண்மையான ஓர் ஆசாரியத்துவத்தைப் பற்றியும், தமக்குகந்த பலிகளைப்பற்றியும் தம்முடைய வணக்கத்தாருக்குக் கற்பிக்கவேண்டிய தேவையைக் கடவுள் கண்டார்.
கடவுள் ஏன் ஆசாரியர்களை நியமித்தார்
காலப்போக்கில் யெகோவா இரண்டு அடிப்படை பணிகளை நிறைவேற்றிய ஆசாரியர்களை இஸ்ரவேல் தேசத்தாருக்குக் கொடுத்தார். முதலாவதாக, அவர்கள் நியாயாதிபதிகளாகவும் கடவுளுடைய சட்டத்தின் போதகர்களாகவும் மக்களுக்கு முன் கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்தனர். (உபாகமம் 17:8, 9; மல்கியா 2:7) இரண்டாவதாக, அவர்கள் ஜனங்கள் சார்பாக கடவுளுக்குப் பலிகளைச் செலுத்தி கடவுளுக்கு முன் ஜனங்களைப் பிரதிநிதித்துவம் செய்தனர். எபிரெய கிறிஸ்தவர்களுக்குப் பவுல் எழுதிய கடிதம் விவரிக்கிறது: “மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காகத் தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான். . . . தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.”—எபிரெயர் 5:1, 4.
இஸ்ரவேலரின் ஆசாரியத்துவம்தான் ஜனங்களைத் தம்மோடு ஒப்புரவாக்குவதற்கான கடவுளின் இறுதி வழி அல்ல என்று பவுல் தொடர்ந்து விவரிக்கிறார். ஆசாரியர்களின் பணிகள் மேம்பட்ட காரியங்களை ‘பரலோகத்திலுள்ளவைகளை’ குறிப்பிட்டுக்காட்டும் அடையாளங்களாக இருந்தன. (எபிரெயர் 8:5) பரலோகத்திலுள்ள அந்தக் காரியங்கள் நிறைவேறியபோது அந்த அடையாளங்கள் இனியும் தேவையற்றவையாக இருந்தன. இதை விளக்க: உங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு பொருளுக்கான ஒரு விளம்பரத்தை உங்களோடு வைத்திருக்கக்கூடும். ஆனால் அந்தப் பொருளை நீங்கள் பெற்றுக்கொண்ட பிறகு அந்த விளம்பரத்தை எறிந்துவிட மாட்டீர்களா?
இஸ்ரவேல் தேசம் உருவாவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, கடவுள் ஓர் ஆசாரியத்துவத்திற்காக நோக்கம் கொண்டிருந்தார். இந்த ஆசாரியத்துவம் இஸ்ரவேலரின் ஆசீர்வாதத்திற்காக மட்டுமல்ல, ஆனால் முழு மனிதவர்க்கத்தின் ஆசீர்வாதத்திற்காகவும் சேவை செய்யும். முதன் முதலில், அந்த ஆசாரியத்துவத்தின் அங்கத்தினரைக் கொடுக்கும் வாய்ப்பை இஸ்ரவேல் கொண்டிருந்ததால் சிலாக்கியம் பெற்றிருந்தது. அந்தத் தேசத்தினர் உருவாக்கப்பட்டபோது, யெகோவா இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: ‘நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்பீர்களானால், நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.’ (யாத்திராகமம் 19:5, 6; ஒப்பிடவும்: ஆதியாகமம் 22:18.) வருந்தத்தக்க வகையில், அந்தத் தேசத்தினர் கடவுளுடைய குரலுக்கு செவிசாய்க்கவேயில்லை. இதன் காரணமாக, இயேசு ஆசாரியர்களிடமும் பரிசேயர்களிடமும் இவ்வாறு சொன்னார்: “தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.” மனிதவர்க்கத்தின் ஆசீர்வாதத்திற்காக இப்போது ஆசாரியர்களாக சேவை செய்யவேண்டியவர்கள் யார்?—மத்தேயு 21:43.
கிறிஸ்தவர்களுக்குத் தேவையான ஆசாரியத்துவம் எது?
ஆதாமிடமிருந்து நாம் பாவத்தைச் சுதந்தரித்திருப்பதால், இயேசுவால் கொடுக்கப்பட்ட பரிபூரண பலியின் வழியாக மட்டுமே நித்திய ஜீவனுக்கான நம்முடைய ரட்சிப்பு சாத்தியமாயிருக்கிறது. (1 யோவான் 2:2) இஸ்ரவேலரின் ஆசாரியத்துவத்தில் முன்படமாக்கப்பட்டிருந்ததுபோல, இயேசுதானே, பிரதான ஆசாரியராக நமக்காக பரிந்துபேசுகிறார். எபிரெயர் 9:24 சொல்லுகிறதாவது: “மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமூகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.” இதனால், கிறிஸ்துவின் மகா மேன்மைமிக்க பிரதான ஆசாரியத்துவம், பரிந்துபேசுபவர்களாக மனித ஆசாரியர்களின் தேவையை நடைமுறையற்றதாக்குகிறது. எனினும், உதவி ஆசாரியர்களின் சேவை இன்னும் தேவையாகவே இருக்கிறது. எவ்வகையில்?
ஆசாரியர்கள் ‘இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தவேண்டும்.’ (1 பேதுரு 2:5) இந்தப் பலிகளின் தன்மையைப்பற்றி, பவுல் இவ்வாறு எழுதினார்: “உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை . . . எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” (எபிரெயர் 13:15) ஆகையால், இன்னும் பூமியில் இருந்துகொண்டே அந்த ராஜரீக ஆசாரியத்துவத்தை உண்டுபண்ணுபவர்கள், மனிதருக்குமுன் கடவுளை, பரிந்துபேசுபவர்களாக அல்ல, ஆனால் அவரது சாட்சிகளாக பிரதிநிதித்துவம் செய்கின்றனர். பின்னர், இயேசு கிறிஸ்துவோடு பரலோகத்தில், அவர்கள், கிறிஸ்துவுடைய பலியின் நன்மைகளை நிர்வகித்து எல்லா வியாதிகளையும் குணப்படுத்தி, கடவுளுக்குமுன் மனிதரைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.—மாற்கு 2:9-12-ஐ ஒப்பிடவும்.
விசுவாசிகள் அனைவரும் சாட்சிகளாக இருக்கவேண்டியிருந்தாலும், ஒப்பிடுகையில் ஒரு சிலரே பரலோக ‘ஆசாரிய ராஜ்யத்தில்’ சேவை செய்வார்கள். இயேசு சொன்னார்: “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.” (லூக்கா 12:32; வெளிப்படுத்துதல் 14:1) இவர்கள் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டு, “தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”—வெளிப்படுத்துதல் 20:6.
இந்தப் பரலோக ஆசாரியர்கள், எந்த ஆசாரியர்களும் இதுவரை செய்திருக்க முடியாத வகையில், ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமான ஓர் அர்த்தத்தில் காரியங்களைச் செய்வதற்குக் கடவுள் ஏற்பாடு செய்திருக்கிறார். விரைவில், இயேசுவுடைய மீட்புப் பலியின் நன்மைகளை அவர்கள் பிரயோகிக்கும்போது, விசுவாசம் வைக்கும் மனிதவர்க்கத்தினர் எல்லாரையும் மனித பரிபூரணத்திற்குத் திரும்ப கொண்டுவருவதில் பங்குகொள்ளும் சாத்தியத்தைக் கொண்டிருப்பர். அப்போது, ஏசாயா 33:24 அதிசயக்கத்தக்க ஒரு நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கும். அது சொல்வதாவது: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.” (g93 10/8)
[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]
“Benediction of the Wheat at Artois” 1857, by Jules Breton: France / Giraudon/Art Resource, N.Y.