ய.தனிமை—அதனுடன் போராடி வெல்ல நீங்கள் தீர்மானமாய் இருக்கிறீர்களா?
நீங்கள் தனிமையாய் உணருகிறீர்களா? நீங்கள் திருமணமானவரோ திருமணமாகாதவரோ, ஓர் ஆணோ பெண்ணோ, முதியவரோ இளைஞரோ, தனிமையாய் உணர்வது இயல்பாக இருக்கும் சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன. தனியே இருப்பதுதானே தனிமையை ஏற்படுத்தவேண்டிய அவசியமில்லை என்பதையும் உணருங்கள். தன்னுடைய ஆராய்ச்சியில் மூழ்கியிருக்கும் தனி ஓர் ஆராய்ச்சியாளன் தனிமையாய் உணர்வதில்லை. ஓர் ஓவியத்தைப் படைப்பதில் ஆழ்ந்திருக்கும் தனியொரு கலைஞன் தனிமையாக உணர வாய்ப்பேதுமில்லை. தனிமையில் இருக்கும் சமயங்களை அவர்கள் வரவேற்கின்றனர். அப்போது தனிமை அவர்களுடைய மிகச் சிறந்த நண்பனாகிறது.
உண்மையான தனிமையின் உணர்வு புறத்திலிருந்து உருவாவதைவிட நம்முடைய அகத்திலிருந்தே உருவாகிறது. தனிமையானது ஏதோவொரு துயர சம்பவம்—ஒரு மரணம், ஒரு மணவிலக்கு, வேலை இழப்பு—போன்ற வருத்தம்தரும் ஏதாவது நிகழ்ச்சிகளால் தூண்டிவிடப்படுகிறது. நம்முடைய அக உலகிற்குப் பிரகாசமான ஒளியூட்டுவோமாகில், அந்தத் தனிமையைக் குறையச் செய்யலாம், காலப்போக்கில் மறைந்துபோகும்படியும் செய்யலாம். நம்மை அல்லல்படுத்திய இழப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உட்கிரகிக்கப்படலாம்.
உணர்ச்சிகள் உங்கள் எண்ணங்களில் இருந்து தோன்றுகின்றன. ஓர் இழப்பு உட்கிரகிக்கப்பட்ட பின் அது உருவாக்கிய உணர்ச்சிகள் பின்னணியில் மறைந்துபோகும்படி அனுமதிக்கப்படுகின்றன. உங்களுடைய சுறுசுறுப்பான வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கக்கூடிய கட்டியெழுப்பும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான நேரமாக அது இருக்கிறது.
உங்களையே சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவாருங்கள். செய்வதற்கு நம்பிக்கையான காரியங்கள் இருக்கின்றன. ஆகவே சகஜமாக பழகுபவர்களாக இருங்கள். யாரிடமாவது தொலைபேசியில் பேசுங்கள். ஒரு கடிதம் எழுதுங்கள். புத்தகம் ஒன்றை வாசியுங்கள். உங்கள் வீட்டுக்கு ஆட்களை அழையுங்கள். கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளுங்கள். நண்பர்களைக் கொண்டிருக்க, நீங்களே நண்பர்களாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் மற்றவரைச் சென்றெட்ட உங்களுடைய அகமனிதனைச் சென்றெட்டுங்கள். கொஞ்சம் தயை காட்டுங்கள். ஆறுதலளிக்கும் ஒருசில ஆவிக்குரிய துணுக்குகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். “வாங்குவதைப்பார்க்கிலும் கொடுப்பதிலே அதிக சந்தோஷமிருக்கிறது,” என்ற இயேசுவின் வார்த்தைகள் உண்மையாய் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். “மற்றவர்களுக்குத் தாராளமாக தண்ணீர் பாய்ச்சுகிறவனுக்குத்தானே தாராளமாக தண்ணீர் பாய்ச்சப்படும்,” என்ற மற்றொரு நீதிமொழியின் உண்மையையும் உணர்வீர்கள்.—அப்போஸ்தலர் 20:35, NW; நீதிமொழிகள் 11:25, NW.
அது உங்களைப் பொறுத்திருக்கிறது
செய்வது கடினமா? செய்வதைவிட சொல்வது எளிது என்று யோசிக்கிறீர்களா? பயன்விளைவிக்கும் எதுவுமே செய்வதைவிட சொல்வது எளிதுதான். இதுதான் அதைச் செய்வதை உங்களுக்குத் திருப்தியுள்ளதாக்குகிறது. நீங்கள் விசேஷித்த முயற்சி எடுக்கவேண்டும். உங்களுடைய ஒரு பாகம் கொடுப்பதில் ஈடுபடுகிறது, அப்போது, உங்களுக்குள் ஒளிரும் திருப்தியும் மகிழ்ச்சியும் மிகப் பிரகாசமாக வளர்கின்றன. உங்களை ஆட்டிப்படைக்க வகைதேடிக்கொண்டிருக்கும் தனிமையை முறியடிக்க முயற்சி எடுப்பது உங்களைப் பொறுத்தது. மார்டன் மெச்யூரிட்டி பத்திரிகையில் எழுத்தாளர் ஒருவர் சொன்னார்: “உங்களுடைய தனிமைக்கு வேறு யாரும் பொறுப்பல்ல, ஆனால் அதைப்பற்றி நீங்கள் ஏதாவது செய்யலாம். ஒரு நட்போடு உங்களுடைய வாழ்க்கையை விரிவுப்படுத்துங்கள். உங்களைப் புண்படுத்தியிருப்பதாய் உணரும் யாரோவொருவரை நீங்கள் மன்னிக்கலாம். ஒரு கடிதம் எழுதலாம். தொலைபேசியில் பேசலாம். உங்களுடைய வாழ்க்கையை உங்களால் மட்டுமே மாற்றமுடியும். உங்களுக்காக அதைச் செய்யக்கூடிய வேறு மனிதன் யாருமே இல்லை.” “அந்தக் கருத்தைத் திருத்தமாகக் குறிப்பிடும்” தனக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் ஒரு கடிதத்தை அவர் மேற்கோள் காட்டினார்: “‘தங்களுடைய வாழ்க்கையைத் தனிமையிலிருந்து அல்லது நிறைவேற்றமடையாமல் போவதிலிருந்து காத்துக்கொள்வது அவர்களையே பொறுத்திருக்கிறது என்று நான் ஜனங்களிடம் சொல்வதுண்டு. கவனமாயிருந்து ஏதாவது செய்யுங்கள்!’”
உங்களுக்கு உதவியாய் இருக்கும் நண்பர்கள் மனிதர்களாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. ஒரு கால்நடை மருத்துவர் சொன்னார்: “முதியோரை எதிர்ப்படும் மிகப் பெரிய பிரச்னைகள் சரீரப்பிரகாரமான வியாதிகள் அல்ல, ஆனால் அவர்கள் அனுபவிக்கும் தனிமையும் ஒதுக்கித்தள்ளிவிடுதலுமே. சமுதாயத்திலிருந்து முதியவர்கள் அடிக்கடி விலக்கப்பட்டிருக்கும் ஒரு சமயத்தில், (நாய்களையும் உட்படுத்தும்) ஆசை விலங்குகள் தோழமையைக் கொடுப்பதன்மூலம் . . . நோக்கத்தையும் அர்த்தத்தையும் கொடுக்கின்றன.” பெட்டர் ஹோம்ஸ் அண்ட் கார்டன்ஸ் பத்திரிகை சொன்னது: “உணர்ச்சி சம்பந்தமாக குழப்பமடைந்தோரைக் குணப்படுத்த ஆசை விலங்குகள் உதவுகின்றன; சரீரப்பிரகாரமாக வியாதிப்பட்டிருப்போர், ஊனமுற்றோர், ஏலாநிலையில் உள்ளோர் போன்றோர்க்குத் தூண்டுதலளிக்கின்றன; தனிமையில் உள்ளோருக்கும் வயோதிபருக்கும் மீண்டும் புத்துயிரளிக்கின்றன.” ஆசை விலங்குகளில் புதிதாக ஓர் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் ஆட்களைப்பற்றி மற்றொரு பத்திரிகை கட்டுரை சொன்னதாவது: “வியாதியஸ்தர்களின் கவலைகள் குறைக்கப்பட்டன, ஒதுக்கித்தள்ளப்படுவார்களோ என்ற பயமின்றி தங்களுடைய அன்பைத் தங்களுடைய ஆசை விலங்குகளிடத்தில் அவர்களால் வெளிக்காட்ட முடிந்தது. பின்னர் அவர்கள் ஜனங்களிடத்தில், முதலாவது தங்களுடைய ஆசை விலங்குகளின் பராமரிப்பைப்பற்றி பேசி, பேச்சுத் தொடர்புகொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் ஒரு பொறுப்பை உணர ஆரம்பித்தனர். அவர்கள் தேவைப்பட்டவர்களாக, தங்களை ஏதோ சார்ந்திருப்பதாக உணர்ந்தனர்.”
தனிமையால் துன்பப்படும் ஒரு நபர் மிகவும் அடிக்கடி தனக்கே உதவ, தன் மனமுறிவின் ஆழங்களிலிருந்து தன்னையே தூக்கிவிட, போதுமான அளவு தனக்கே நம்பிக்கையூட்டுவதில்லை. அவன் அந்தளவு கடுமையாக முயற்சி செய்வதற்கெதிராக ஒரு தடையாற்றல் அல்லது ஒரு விருப்பமின்மை இருக்கிறது. ஆனால் அவன் தன்னுடைய தனிமையின் உண்மையான காரணத்தைக் கண்டடைய வேண்டுமானால், அதைச் செய்தே தீரவேண்டும். ஏற்றுக்கொள்ள தங்களுக்குக் கடினமாக இருக்கும் ஆலோசனைகளுக்கான மக்களின் எதிர்ப்பைப்பற்றி டாக்டர் ஜேம்ஸ் லிஞ்ச் எழுதினார்: “நாம் விரும்பாத தகவல்களைக் கேட்கவோ நம்முடைய நடத்தையில் பொருத்தவோ, நாம் பொதுவாகவே எதிர்ப்புத் தெரிவிப்பதுதான் மனித இயல்பாக இருக்கிறது.” ஒரு நபர் தன்னுடைய தனிமையிலிருந்து தப்பித்துக்கொள்ள விரும்பலாம், ஆனால் அந்தத் தப்பித்துக்கொள்ளுதலை நடப்பிக்கத் தேவையான மனோதிடத்தைத் திரட்ட அவனுக்கு மனமில்லாமல் இருக்கலாம்.
நீங்கள் உணர விரும்பும் வகையில் செயல்படுங்கள்
ஆழ்ந்த ஒரு மனச்சோர்வை மேற்கொள்ள, ஒருவர் உண்மையான இன்முகத்தோடுகூடிய தயவான ஒரு போக்கைத் தொடருவதில் நிலைத்திருக்க வேண்டியிருக்கிறது. (அப்போஸ்தலர் 20:35-ஐ ஒப்பிடவும்.) இது அரண்செய்யப்பட்டிருந்த தனிமையின் மனநிலையைத் தகர்த்துக்கொண்டு வெளிவருவதைத் தேவைப்படுத்துகிறது. அதன் சாவுக்கேதுவான சோம்பேறித்தனத்திற்கு நேரெதிராக செயல்படுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. மகிழ்ச்சியுடன் நடந்துகொள்ளுங்கள், நடனமாடுங்கள், ஜாலியான பாட்டு ஒன்றைப் பாடுங்கள். மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பது எதுவானாலும் அதைச் செய்யுங்கள். அதை மிகையாக செய்யுங்கள், அளவுக்குமீறி செய்யுங்கள், வருத்தம்தோய்ந்த மனநிலையை மகிழ்ச்சியான எண்ணங்களால் மொய்க்கச் செய்யுங்கள். எதைப்போன்ற மகிழ்ச்சியான எண்ணங்கள்?
பிலிப்பியர் 4:8-ல் உள்ளவற்றைப் போன்றவை: “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.”
தேவை என்னவென்றால் உங்களுடைய வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தத்தைக் கொடுக்கவேண்டியதே. உங்களுடைய வாழ்க்கைக்கு ஏதோ அர்த்தம் உண்டு என்று உணர்வீர்களேயானால், அதற்குப் பிரதிபலித்து அதை நிறைவேற்ற நாடும்படி நீங்கள் ஊக்குவிக்கப்படுவீர்கள். நம்பிக்கையற்ற தனிமையுணர்ச்சியினுள் விழ உங்களுக்கு வாய்ப்பில்லை. அர்த்தத்திற்கான மனிதனுடைய ஆராய்ச்சி (Man’s Search for Meaning) என்ற விக்டர் ஃப்ராங்க்லின் புத்தகத்தில் இது ஆர்வத்துக்குரிய வகையில் காட்டப்பட்டிருக்கிறது. அவர் இதை ஹிட்லரின் சித்திரவதை முகாம்களில் இருந்த சிறைக்கைதிகளை ஒப்பிட்டுக் கலந்தாலோசிக்கிறார். தங்களுடைய வாழ்க்கையில் உள்ள அர்த்தத்தைப்பற்றிய உணர்ச்சியே இல்லாதிருந்தவர்கள் தனிமையால் ஆட்கொள்ளப்பட்டு வாழ்வதற்கான விருப்பமற்று இருந்தனர். ஆனால் “ஒருவருடைய உள் மதிப்பின் உணர்வு, உயர்வான, அதிக ஆவிக்குரிய காரியங்களில் நங்கூரமிடப்பட்டிருக்கிறது. ஆகவே, அது முகாம் வாழ்க்கையால் அசைக்கப்படுவதில்லை.” அவர் தொடர்ந்து சொன்னார்: “துன்பம் ஏதோவொரு வழியில்—தியாகத்தின் அர்த்தம் போன்ற—ஓர் அர்த்தத்தைக் கண்டடையும் கணத்தில் அது துன்பமாகவே தோன்றுவதில்லை. . . . மனிதனுடைய முக்கிய அக்கறை மகிழ்ச்சியைத் தேடுவது அல்லது வேதனையைத் தவிர்ப்பதல்ல, அதைவிட அவனுடைய வாழ்க்கையில் ஓர் அர்த்தத்தைக் கண்டடைவதேயாகும். ஆகவேதான் மனிதன் அவனுடைய துன்பம் நிச்சயமாக ஓர் அர்த்தத்தை உடையதாக இருக்கிறதா என்ற நிபந்தனையின்பேரில், துன்பத்தை அனுபவிக்கக்கூட தயாராயிருக்கிறான்.”
உங்களுக்குத் தேவைப்படும் மிக உயர்ந்த உறவுமுறை
உண்மையான ஓர் ஆவிக்குரிய மனநிலையை அடைவதற்கான வழி, கடவுளிடமும் அவருடைய வார்த்தையாகிய பைபிளிடமும் நம்மையே ஒப்படைத்துவிடுவதாகும். கடவுள் மீதுள்ள நம்பிக்கையும் அவரிடம் செய்யும் மனமார்ந்த ஜெபமும் நம்முடைய வாழ்க்கையில் அர்த்தத்தைக் கொடுக்க முடியும். அப்போது, மனித உறவுமுறைகள் நொறுங்கினாலும், நாம் தனிமையில் இருப்பதில்லை, தனிமையில் கைவிடப்படுவதில்லை. ஃப்ராங்கில் கூறியதுபோல, அர்த்தத்தோடுகூடிய துன்பம் சகிக்கப்படக்கூடியதாக இருக்கிறது, அது சந்தோஷத்தின் ஓர் ஊற்றுமூலமாகக்கூட இருக்கும். மனித இயல்பைப்பற்றி குறிப்பிடும் ஒருவர் சொன்னார்: “கழுமரத்தில் தொங்கும் ஒரு தியாகி, தனது சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் ஒரு ராஜா பொறாமைப்படக்கூடிய மகிழ்ச்சியைக்கூட கொண்டிருக்கலாம்.”
மனிதரால் துன்புறுத்தப்பட்டபோது கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் யெகோவாவிடமிருந்து வந்த மகிழ்ச்சியை அனுபவித்தனர். அத்தகைய துன்புறுத்துதல் அவர்களுக்குப் பெரிய அர்த்தத்தைக் கொண்டதாக இருந்தது. “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.” (மத்தேயு 5:10-12) இதேபோன்ற ஒரு பிரதிபலிப்பு அப்போஸ்தலர் 5:40, 41-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது: “அவர்கள் அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.”
நீங்கள் ஒரு ரோஜா வளர்க்கும்போது, ஒரு முட்செடி வளரமுடியாது
உங்கள் மனமென்னும் நிலத்தை அழகிய, நம்பிக்கையான நோக்கங்களின் விதைகளால் நிரப்புங்கள்; எதிர்நிலையான நம்பிக்கையின்மை மற்றும் வெறுமையான தனிமையின் விதைகளுக்கு இடங்கொடாதீர்கள். (கொலோசெயர் 3:2; 4:2-ஐ ஒப்பிடவும்.) செய்வது கடினமா? குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் முடியாததாகத் தோன்றலாம். ஒரு கவிஞர் குறிப்பிட்டார்: “நீங்கள் ஒரு ரோஜா வளர்க்கும்போது, . . . ஒரு முட்செடி வளரமுடியாது.” இது மீண்டும் நம்பிக்கையான முயற்சியையும் தீர்மானமான மனோதிட பயிற்சியையும் தேவைப்படுத்துகிறது. ஆனால் அது செய்யப்படக்கூடும், செய்யப்பட்டும் வருகிறது.
லாரல் நிஸ்பட்டின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 36 வயதில் அவர் போலியோவால் தாக்கப்பட்டு ஒரு செயற்கை நுரையீரலில் வைக்கப்பட்டார். அதில் அவர் 37 வருடங்களாக மல்லாந்து படுத்துக்கிடந்தார். கழுத்திலிருந்து கீழே முழுவதும் செயலற்றுப்போனதால், அவர் தலையை அசைக்க முடியும், ஆனால் அவ்வளவுதான் செய்யமுடியும். முதலில் அவர் நம்பிக்கையிழக்கும் அளவுக்கு வருந்தினார். பின்னர், சுமார் ஒரு நாள் முழுவதும் தன்னிரக்க உணர்வுக்குப்பின், ‘இந்தத் தன்னிரக்கமெல்லாம் போதும்!’ என அவர் தீர்மானித்தார். வளர்ப்பதற்கு இரண்டு பிள்ளைகளும் கவனித்துக்கொள்வதற்குக் கணவனும் அவருக்கு இருந்தனர். அவர் தன் வாழ்க்கையைத் திரும்பவுமாக அமைக்கத் தொடங்கினார்; செயற்கை நுரையீரலில் இருந்த வண்ணமே வீட்டைப் பராமரிக்கக் கற்றுக்கொண்டார்.
லாரல் மிகக் குறைந்த நேரம்தான் உறங்கினார். அவர் அந்த நீண்ட இரவு நேரங்களை எவ்வாறு கழித்தார்? தனிமையிலா? இல்லை. தன்னுடைய பரலோக பிதாவாகிய யெகோவாவிடம் ஜெபம் செய்தார். தன்னுடைய பலத்துக்காகவும், தன்னுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்காவும், கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி மற்றவர்களுக்குச் சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளுக்காகவும் ஜெபித்தார். பிரசங்கிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்து, யெகோவாவின் நாமத்திற்காக அவர் கொடுத்த சாட்சியால் அநேகரைக் கவர்ந்திழுத்தார். தனிமையின் முட்செடிகள் வளர அவர் அனுமதிக்கவில்லை; ஆனால் ரோஜாக்களை வளர்ப்பதில் சுறுசுறுப்பாக இருந்தார்.
ஹெரல்ட் கிங் என்ற உவாட்ச் டவர் மிஷனரி ஒருவருடைய அனுபவத்திலும், அதுவே உண்மையாக இருந்தது. சீன சிறை ஒன்றில் ஐந்து வருடங்களுக்குத் தனிமைச் சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டார். அவர் நீண்ட கால தனிமையை அனுபவிக்க முடிந்தவராகவே இருந்தார். அந்த நம்பிக்கையற்ற மனநிலையைத் தள்ளிவிட்டார். எனினும், வேண்டுமென்றே செய்த மனோதிடத்தின் ஒரு பயிற்சி அவருடைய மனதை வித்தியாசமான ஒரு போக்கில் கருத்தூன்றச் செய்தது. பின்னர் அவர் அதை பின்வருமாறு விவரித்தார்:
“‘பிரசங்கம்’ செய்யும் நடவடிக்கைக்கான ஒரு திட்டத்தை நான் ஏற்பாடு செய்தேன். ஆனால் தனிமைச் சிறைவாசத்தில் இருக்கும் ஒருவர் யாருக்குப் பிரசங்கம் செய்ய முடியும்? எனக்கு ஞாபகம் இருந்த விஷயங்களிலிருந்து பொருத்தமான சில பைபிள் பிரசங்கங்களை உருவாக்கி, கற்பனை ஆட்களுக்குப் பிரசங்கிக்க நான் முடிவுசெய்தேன். பின்னர் நான் பிரசங்க வேலைக்கு வெளியே போவதைப்போல் தொடங்கினேன். ஒரு கற்பனைக் கதவைத் தட்டி கற்பனை வீட்டுக்காரர் ஒருவருக்குச் சாட்சிகொடுத்தேன். இவ்வாறு அந்தக் காலைப்பொழுதில் அநேக வீடுகளுக்குச் சென்றேன். காலப்போக்கில் ஓரளவு அக்கறை காட்டிய, திருமதி கார்ட்டர் என்ற ஒரு கற்பனை நபரைச் சந்தித்தேன். அநேக மறுசந்திப்புகளுக்குப் பிறகு நாங்கள் ஒழுங்கான பைபிள் படிப்பு ஒன்றை ஏற்பாடு செய்தோம். ‘தேவனே சத்தியபரர்’ (Let God Be True) என்ற புத்தகத்திலிருந்த முக்கிய தலைப்புகள் எனக்கு ஞாபகம் இருந்ததால், இந்தப் படிப்பு நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் அவற்றைச் சிந்தித்து முடித்தோம். இக்காரியங்களின் சப்தம் அவற்றை என் மனதில் இன்னும் ஆழப்பதியச் செய்வதற்காக நான் இதையெல்லாம் சத்தமாகவே சொன்னேன்.”
ஹிட்லரின் சித்திரவதை முகாம்களில் சிறைவாசத்தில் இருந்த ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள், வெறுமனே தங்களுடைய விசுவாசத்தைத் துறந்திருந்தால் விடுதலை அடைந்திருக்க முடியும். வெகு சிலரே அவ்வாறு செய்தனர். ஆயிரக்கணக்கானோர்—சிலர் தூக்கிலிடப்பட்டும், சிலர் வியாதியாலும் ஊட்டச் சத்துக் குறைவினாலும்—உண்மையுள்ளவர்களாக மரித்தனர். சிறையிலடைக்கப்பட்ட—யோசஃப் என்னும் பெயருடைய—ஒரு சாட்சி வேறு முகாம்களில் தன்னுடைய இரண்டு அண்ணன்மாரைக் கொண்டிருந்தார். ஒருவர் மல்லாக்கக் கிடத்தப்பட்டுத் தன்னுடைய தலையைத் துண்டித்தெறிந்த கத்தி இறங்கி வருவதைக் காணும்படி செய்யப்பட்டார். யோசஃப் விவரித்தார்: “முகாமில் இருந்த மற்றவர்கள் இதைப்பற்றி கேள்விப்பட்டபோது அவர்கள் என்னை வாழ்த்தினர். அவர்களுடைய நம்பிக்கையான மனநிலை என்னை ஆழமாகத் தொட்டது. உயிர்வாழ்வதைக்காட்டிலும் எங்கள் உண்மைத்தவறாமையைக் காத்துக்கொள்வது எங்களுக்குப் பெரிதாக இருந்தது.”
அவருடைய மற்றொரு அண்ணன், சுட்டுக் கொல்லும் படையினரை எதிர்ப்பட்டபோது, அவர் ஏதேனும் சொல்ல விரும்புகிறாரா என்று கேட்கப்பட்டார். ஒரு ஜெபம் செய்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதியும் கொடுக்கப்பட்டது. அது நெஞ்சைத் தொடும் இரக்கமும் உள்ளார்ந்த மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருந்ததால், சுடும்படி ஆணையிட்டபோது, படையினரில் ஒருவரும் கீழ்ப்படியவில்லை. மீண்டும் மீண்டும் ஆணையிடப்பட்ட பிறகு ஒரே ஒரு முறை சுடப்பட்டது; அதுவும் அவருடைய உடலையே தாக்கிற்று. இதைக் கண்டு சீற்றமடைந்த, கட்டளைப் பிறப்பித்த அந்த அலுவலர், பின்னர் தன்னுடைய சொந்த கைத்துப்பாக்கியை உருவி தண்டனையை நிறைவேற்றினார்.
வாழ்க்கையை உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக்க வல்லது எது
இந்த எல்லா அனுபவங்களிலுமே கடவுள் மீதுள்ள உறுதியான விசுவாசம் உட்பட்டிருந்தது. மற்றெல்லாவற்றையும் முயற்சி செய்து தோல்வியடையும்போது, தனிமையின்மீது வெற்றியைத் தரவும், ஒருகாலத்தில் வெறுமை நிறைந்திருந்த வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாகச் செய்யவும் விசுவாசம் எப்பொழுதுமே இருக்கிறது. உலகப்பிரகாரமாக அர்த்தம் நிறைந்ததாக கருதப்படும் அநேகருடைய வாழ்க்கை உண்மையில் அர்த்தமற்றதாகவே இருக்கிறது. இது ஏன் அவ்வாறு? ஏனென்றால் அவற்றின் முடிவு மரணமாகவே இருக்கிறது. அவர்கள் மண்ணுக்குத் திரும்பி, மறைந்தொழிகின்றனர். அவர்கள் மனிதவர்க்கமெனும் கடல்களில் சிற்றலையையும், காலமெனும் மணற்பரப்பில் காலடித்தடத்தையும் விட்டுச் செல்லவில்லை. இது பிரசங்கி 9:5 சொல்கிறதுபோல: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.” யெகோவாவின் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு இணைக்கப்படும் அர்த்தத்தைப்பற்றிய எந்த உணர்வும் வெற்று மாயையே.
விண்மீன்கள் நிறைந்த வானத்தைப் பாருங்கள். தலைக்குமேல் விரிந்து கிடக்கும் பரந்த இந்த இருண்ட வான வளாகத்தை உணருங்கள். அர்த்தம் நிறைந்ததாக உள்ள உங்களுடைய உணர்வு ஒன்றுமில்லாமல் போகிறது. “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்,” என சங்கீதக்காரன் தாவீது எழுதியபோது அவருடைய உணர்ச்சிகளை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தாவீதின் மகன் சாலொமோன் மனிதனுடைய கிரியைகளை “எல்லாம் மாயை,” என்று சொல்லி விலக்கிவிட்டு, “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே,” என்ற முடிவுக்கு வந்தார்.—சங்கீதம் 8:3, 4; பிரசங்கி 12:8, 13.
பின்னர், ஆராய்ச்சியின் இறுதியில், தனிமையாக உணரும் ஒரு நபர், அல்லது வேறு யாராவது ஒருவராக இருந்தாலும்சரி, தனது வாழ்க்கைக்கு எவ்வாறு அர்த்தமூட்டமுடியும்? தன்னுடைய வாழ்வில் கடவுள் பயத்தோடு, கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு வாழ்வதன் மூலமே. அப்போதுதான் அவன், இப்பரந்த அண்டத்தின் சிருஷ்டிகராகிய கடவுளுடைய நோக்கங்களில் பொருந்தி, அந்த நித்தியகால தெய்வீக ஏற்பாட்டின் ஒரு பாகமாயிருக்க முடியும்.
கடவுள் உங்களோடிருந்தால், நீங்கள் ஒருபோதும் தனிமையிலில்லை
கொடிய துன்புறுத்துதலையும் ஒதுக்கித்தள்ளப்பட்ட உணர்ச்சியையும் சகித்த பிறகு, உண்மையுள்ள ஆப்பிரிக்க யெகோவாவின் சாட்சி ஒருவர், அவருடைய மனித உறவுமுறைகள் கைவிட்டபோதிலும், இன்னும் அவர் தனியாக இருந்ததில்லை என்று கூறினார். சங்கீதம் 27:10-ஐ அவர் மேற்கோள் காட்டினார்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்.” இயேசுவும் அவ்விதமாகவே உணர்ந்தார்: “இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.”—யோவான் 16:32.
இயேசு தனித்திருக்க பயந்ததில்லை. அடிக்கடி அவர் விருப்பப்பட்டே தனிமையைத் தெரிந்துகொண்டார். தனியாய் இருந்தபோது அவர் தனிமையாய் உணரவில்லை. அவர் கடவுளுடைய ஆவி தமக்கும் ஊற்றப்படுவதற்குத் தம்மையே திறந்துவைத்தார். கடவுளின் சிருஷ்டிப்புகளால் சூழப்பட்டிருக்கும்போது அவரோடு நெருக்கமாக உணர்ந்தார். அவர் தனியாக கடவுளுடைய கூட்டுறவில் மட்டும் சஞ்சரிக்கும்படி, சிலசமயங்களில் மனிதர்களின் கூட்டுறவைத் தவிர்த்தார். அவர் ‘தேவனிடத்தில் நெருங்கி வந்தார்; தேவன் அவரிடத்தில் நெருங்கி வந்தார்.’ (யாக்கோபு 4:8, NW) சந்தேகமின்றி அவர் கடவுளின் மிக நெருங்கிய நண்பராயிருந்தார்.
வேத எழுத்துக்கள் விவரிப்பதைப் போன்ற அத்தகைய ஒரு நண்பர் கிடைப்பதற்கரிய விலையேறப்பெற்றவர். (நீதிமொழிகள் 17:17; 18:24) யெகோவாவின் மீது அவருக்கிருந்த முழுமையான விசுவாசத்தாலும், அவருக்குக் காட்டிய ஐயத்திற்கு இடங்கொடாத கீழ்ப்படிதலாலும், ஆபிரகாம் “‘யெகோவாவின் சிநேகிதன்’ என்றழைக்கப்பட்டார்.” (யாக்கோபு 2:23, NW) இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.”—யோவான் 15:14, 15.
யெகோவா, கிறிஸ்து இயேசு போன்ற நண்பர்களைக் கொண்டிருக்கும்போது, விசுவாசம் உள்ளவர்கள் தனிமைக்கெதிரான தங்களுடைய போராட்டத்தில் வெற்றி பெறுவதில் எப்படி தவறமுடியும்? (g93 9/22)
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
ஜெபமும் மற்ற நடவடிக்கைகளும் தனிமையைத் தவிர்க்க உங்களுக்கு உதவுகின்றன
[பக்கம் 10-ன் படம்]
சித்திரவதை முகாம்களில் ஹெரல்ட் கிங் மற்றும் ஆயிரக்கணக்கான மற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள், கடவுள்மேல் உள்ள விசுவாசம் மிக மோசமான சூழ்நிலைகளின்கீழ் அனுபவிக்கும் தனிமையையும் மேற்கொள்ள வல்லது என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன