ஓர் உயர்ந்த ஊழியத்திற்காக நான் குருத்துவத்தைத் துறந்தது ஏன்
ஜூலை 31, 1955, அன்று 24-ம் வயதில் நான் ஒரு கத்தோலிக்க குருவாக நியமிக்கப்பட்டேன். இந்தியாவின் கோவாவில் உள்ள ராகோல் என்ற ஊரில் உள்ள தலைமை பங்கின் குருமடத்தில் நான் கழித்த 12 உருவாகும் வருடங்களின் உச்சகட்டமாக இருந்தது அது. ஒரு குருவாவதற்கான ஓர் ஆசையை என்னில் தூண்டிவிட்டிருப்பது எது?
நான் இந்தியாவில் உள்ள பம்பாயில் செப்டம்பர் 3, 1930-ல் பிறந்தேன். அதற்கடுத்த வருடம் என் தந்தை ஓய்வுபெற்று, எங்கள் குடும்பம் இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரையில் உள்ள கோவாவின் பார்டஸில் உள்ள சேல்வடார் டோ மூன்டோ என்ற ஊரில் குடியேறிற்று. நான்கு பிள்ளைகளில் நான்தான் கடைசி பையன். குழந்தைப் பருவத்திலிருந்தே போர்ச்சுகீஸிய கத்தோலிக்கரின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் நான் வளர்க்கப்பட்டேன். இப்பண்பாடும் பாரம்பரியமும் போர்ச்சுகீஸியர் கோவாவில் குடியேறிய 1510 முதற்கொண்டே நிலவி வந்திருக்கிறது.
தங்களுடைய விசுவாசத்திற்கு உண்மையுள்ளவர்களாயிருந்த என் பெற்றோர் வைராக்கியமுள்ள கத்தோலிக்கர்களாக இருந்தனர். ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ், நோன்பு நாட்கள், ஈஸ்டர், கன்னி மரியாளையும் பல ‘புனிதர்களையும்’ கனப்படுத்தும் நாட்கள் போன்ற விழாக்களைக் கொண்டாடிவந்தனர். இவ்விழாக்களில் பங்குபெற்ற குருக்கள் பெரும்பாலும் எங்கள் வீட்டிலேயே, சில சமயங்களில் தொடர்ச்சியாக பத்துநாட்களுக்குமேல், தங்கவைக்கப்பட்டனர். இதன் காரணமாக, அவர்களோடு நாங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தோம். ஓர் இளைஞனாக நான் அவர்களால் கவர்ந்திழுக்கப்பட்டேன்.
கோவா, சேலமேங்க்க, மற்றும் ரோமில் என்னுடைய சேவை
என்னுடைய குருத்துவ சேவையை நான் பேரார்வத்தோடு தொடங்கினேன். கத்தோலிக்க சர்ச்சின் எந்தக் கோட்பாடுகள், பழக்கங்கள் போன்றவற்றின் உண்மைத்தன்மையைப்பற்றி எந்த சந்தேகமும் எனக்கு இருந்ததில்லை. கோவாவில் என்னுடைய முதல் ஏழு வருட ஊழியத்தில், கோவாவின் தலைநகரமாகிய பனஜியில் உள்ள செயின்ட் தாமஸ் ஆலயத்தில் நான் சமூககுருவின் பொறுப்புகளை (sociopastoral duties) கவனித்துவந்தேன். அதேசமயம், முன்னாள் போர்ச்சுகீஸிய அரசாங்க பாலிடெக்னிக்கில், பேராசிரியராகவும் அதன் வளாகத்தின் இயக்குநராகவும் ஓர் இரட்டைப் பொறுப்புடைய—அரசாங்க உத்தியோகத்தையும் நான் ஏற்றிருந்தேன்.
1962-ல், நான் ஸ்பெயினிலுள்ள சேலமேங்க்க பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு சட்ட (Law) மற்றும் கிறிஸ்தவ சமயச் சட்ட (Canon Law) தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றேன். என் சட்டப் பயிற்சி காலத்தில், நான் படித்த சில பாடங்கள், முக்கியமாக ரோம சட்டம் மற்றும் கிறிஸ்தவ சமயச் சட்டத்தின் வரலாறு போன்றவை, கத்தோலிக்க சர்ச்சின் சட்டமைப்புத் தோன்றியது எவ்வாறு, ‘சர்ச்சின் மீதுள்ள அதிகார வரம்பின் தலைமை ஸ்தானத்தை’ கொண்ட போப்பைப் பேதுருவின் வாரிசாக அடையாளம் காணுமளவுக்கு உருவானது எவ்வாறு என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்க என்னைத் தூண்டிற்று.
இத்தாலியிலுள்ள ரோமில் நான் இறையியலில் டாக்டர் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்று சந்தோஷமாக இருந்தேன். அங்குச் சர்ச்சின் குருக்களாட்சியைப்பற்றி (hierarchy) அதிகம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் கொண்டிருந்தேன். 1965-ன் கோடைகாலத்தில் நான் ரோமுக்குப் புறப்பட்டுச் சென்றேன்.
அச்சமயம் இரண்டாம் வத்திகன் சங்கம் அதன் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. என்னுடைய இறையியல் படிப்பைத் தொடர்ந்தபோது, சங்கத்திலிருந்த தீவிரபழமைவாதிகளை (ultraconservatives) எதிர்த்த பல இறையியலரோடும் “சங்கத்தின் குருக்களோடும்” ஆர்வமூட்டக்கூடிய கலந்துரையாடல்களைக் கொண்டிருந்தேன். அப்போது போப்பாக அதிகாரத்தில் இருந்தவர் பால் VI. நான் ரோமிலுள்ள இந்திய குருக்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அவரோடு தனிப்பட்ட தொடர்பு வைத்திருந்தேன்.
தொடக்கத்தில் எழுந்த முரண்பாடுகளும் சந்தேகங்களும்
என்னுடைய டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைக்கான இந்தத் தொடர்புகள், படிப்புகள், மற்றும் ஆராய்ச்சி நிறைந்த இந்தக் காலகட்டத்தில், கத்தோலிக்க சர்ச்சின் அடிப்படை அமைப்பின் வளர்ச்சியையும் வரலாற்றையும்பற்றி மேலுமதிக உட்பார்வையைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்தேன்.a பயசு XII (1939-58) நடத்தியதைப் போன்ற பூரண முடியாட்சிக்குப் பழகிப்போன, சங்கத்திலுள்ள பழமைவாதிகளின் (conservatives) கருத்துக்களுக்கு எதிராக, சர்ச்சின்மீது கோட்பாட்டுறுதிமிக்க சட்ட அமைப்பிற்கான (லத்தீன் தலைப்பு, லூமன் ஜென்டியும், தேசங்களின் ஒளி) சங்கத்தின் அங்கீகாரத்தைத் தாராளவாதிகள் (liberals) இறுதியாக சமாளித்துப் பெற்றனர். மற்ற காரியங்களோடு, அதிகாரம் 3-ல் சர்ச்சின்மீது போப்புக்கு இருக்கும் முழு மற்றும் மேலான அதிகாரத்தோடு பங்கேற்கும் பிஷப்புகளின் அதிகாரத்தைப்பற்றி விளக்குகிறது. இந்தக் கோட்பாடு பாரம்பரியத்தில் ஆழ வேரூன்றியிருந்தது, ஆனால் இது திருச்சபைக்கு முரணான மற்றும் புரட்சிகரமான கோட்பாடாக பழமைவாதிகளால் கருதப்பட்டது.
சுவிசேஷத்தின் சத்தியம் அவற்றில் இல்லாத காரணத்தால், இந்த இரண்டு கருத்துக்களையுமே ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாக நான் கண்டேன். அவை மத்தேயு 16:18, 19-ஐ புரட்டி, முன்பிருந்த மற்றும் இனியும் வரவிருக்கும் எல்லா வேதப்பூர்வமற்ற சர்ச்சின் கோட்பாடுகளுக்கும் கொள்கைகளுக்கும் உரிமம் வழங்குகின்றன.b இந்த வசனத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும், கிரேக்க வார்த்தைகள் “ஒரு கற்பாறை” என்றர்த்தப்படுத்தும் பெட்ரா (பெண்பால்), “பாறைத்துண்டு” என்றர்த்தப்படுத்தும் பெட்ரோஸ் (ஆண்பால்) என்பவை இயேசுவால் ஒருபொருட்பன்மொழிகளாக (synonyms) பயன்படுத்தப்படவில்லை என்பதை நான் கவனித்தேன். மேலும், மூலைக்கல்லைப்போன்று, கற்பாறையாக பேதுருக்குத் தலைமைத்துவம் கொடுக்கப்பட்டிருந்தால், பின்னர் தங்களுக்குள் யார் பெரியவர் என்று அப்போஸ்தலர் மத்தியில் வாக்குவாதம் எழுந்திருக்காது. (மாற்கு 9:33-35; லூக்கா 22:24-26-ஐ ஒப்பிடுக.) பேதுரு “சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை,” கண்டு பவுல் எல்லாருக்கும் முன்பாக அவரைக் கடிந்துகொள்ள துணிந்திருக்கமாட்டார். (கலாத்தியர் 2:11-14) ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்துவின் சீஷர்கள், இயேசுவைத் தங்களுடைய அஸ்திபார மூலைக்கல்லாகக் கொண்டு, அனைவருமே கல்லைப்போன்று சமமானவர்களே என்ற முடிவுக்கு நான் வந்தேன்.—1 கொரிந்தியர் 10:4; எபேசியர் 2:19-22; வெளிப்படுத்துதல் 21:2, 9-14.
கல்வித் தகுதியிலும் குரு ஸ்தானத்திலும் நான் எந்தளவு உயர்நிலையை அடைந்தேனோ, எவ்வளவு அதிக கருத்துப் பரிமாற்றம் செய்தேனோ, அவ்வளவதிகம் என் மனதிலும் இருதயத்திலும் கத்தோலிக்க சர்ச்சின் பல்வேறு கொள்கைகளிலிருந்து விலகிப்போனேன். முக்கியமாக அப்பமும் மதுவும் இயேசுவின் உடலும் இரத்தமுமாக மாறுகின்றன என்ற கோட்பாடுகளாகிய (transubstantiation)—“திருப்பலிப் பூசை,” “திவ்விய நற்கருணையாகிய திருவருட் சாதனம்” போன்றவற்றின் சூழமைவில் குருத்துவ நியமிப்பைப்பற்றிய கொள்கைகளிலிருந்து விலகிப்போனேன்.
கத்தோலிக்கரின் பேச்சு வழக்கில், “திருப்பலிப் பூசை” என்பது இயேசுவின் “சிலுவை” பலியைத் தொடர்ந்து ஆசரித்தலும் இரத்தமின்றி புதுப்பித்தலும் ஆகும். ஆனால் பொதுவாக கிறிஸ்தவ வேத எழுத்துக்களும் குறிப்பாக எபிரெயருக்குப் பவுல் எழுதிய கடிதமும், இயேசுவின் பலி ஒரு பரிபூரண பலியாக இருந்ததென்பதைப் புரிந்துகொள்ள எனக்குப் போதியளவு தெளிவாயிருந்தது. அவருடைய சேவை முழுமையானதாக இருந்தது. எந்தவித கூட்டல்களும், திரும்பச்செய்தல்களும், அல்லது திருத்தங்களும் செய்வதற்கான தேவைகளோ அதற்கில்லை; மேலும் அவற்றிற்கு அது இடமளிப்பதுமில்லை. அந்தப் பலி “ஒரேதரம்” செலுத்தப்பட்டது.—எபிரெயர் 7:27, 28.
சத்தியத்திற்கான என் ஆராய்ச்சி தொடர்கிறது
என்னையே சோதித்துக்கொள்ள, மேற்கு ஐரோப்பாவிலுள்ள அநேக பங்குகளிலும் தலைமை பங்குகளிலும், நியூ யார்க்கின் தலைமை பங்கிலும், அலாஸ்காவின் ஃபேர்பாங்க்ஸ் பங்கிலும் தொடர்ந்து சேவை செய்துவந்தேன். சத்தியத்திற்கான என் ஆராய்ச்சியில் அது வேதனைதரும் ஒன்பது வருட சோதனையாகவே இருந்தது. நான் முக்கியமாக நிர்வாக விவகாரங்களிலும், குருக்குல சட்டத்துறையிலும், நீதிவிசாரணை நடவடிக்கைகளிலுமே ஈடுபடுத்தப்பட்டேன். திருவழிபாட்டுச் சடங்காச்சாரங்கள் மற்றும் விழாக்களைப் பொருத்தவரையில் நான் என்னால் முடிந்தளவு விலகியிருந்தேன். எனக்கிருந்த மிகப் பெரிய சவால் தினந்தோறும் பூசை நடத்துவதாகும். உணர்ச்சிகளிலும் உணர்வுகளிலும் ஆழ்ந்த ஒரு முரண்பாட்டை அது என்னில் தோற்றுவித்தது. காரணம் இரத்தமின்றி கிறிஸ்துவின் பலியைத் திரும்பசெய்தலை அல்லது அப்பமும் மதுவும் இயேசுவின் உடலும் இரத்தமுமாக மாறுகின்றன என்ற கோட்பாட்டை நான் நம்பவில்லை. அப்பத்தையும் மதுவையும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றும் ‘மாயவித்தையை’ அதிகாரத்துடனும் முறைப்படியும் நடத்தவேண்டியிருந்த பூமிக்குரிய குருத்துவத்தையும் நான் நம்பவில்லை.
இரண்டாம் வத்திகன் சங்கத்தின்போது, இந்த ‘மாயவித்தையைப்பற்றி’ பெருங்கூச்சல்குழப்பம் இருந்தது. டச்சு கத்தோலிக்க குருக்களாட்சியால் வழிநடத்தப்பட்ட தாராளவாதிகள், அப்பமும் மதுவும் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் அர்த்தப்படுத்துகின்றன அல்லது பிரதிநிதித்துவம் செய்கின்றன (“transignification”) என்பதையே ஆதரித்தனர். மறுபட்சத்தில், இத்தாலிய கத்தோலிக்க குருக்களாட்சியால் வழிநடத்தப்பட்ட தீவிரபழமைவாதிகளோ, அப்பம், மது போன்ற பொருட்கள் பூசையின்போது சொல்லப்படும் “புனித வார்த்தைகளால்” கிறிஸ்துவின் உடல், இரத்தம் போன்ற உண்மையான மற்றும் மெய்யான பொருட்களாக மாறுகின்றன (“transubstantiation”) என்பதைத் தீவிரமாக ஆதரித்தனர். ஆகவேதான், ‘ஹாலந்தில் அப்பத்தையும் மதுவையும் தவிர மற்றெல்லாம் மாறுகின்றன, ஆனால் இத்தாலியிலோ அப்பத்தையும் மதுவையும் தவிர வேறொன்றும் மாறுவதில்லை’ என்ற சொல்வழக்கு வந்தது.
நான் விலகுகிறேன்
கிறிஸ்துவும் அவருடைய சுவிசேஷமும் அவ்வாறு தவறாக பிரதிநிதித்துவம் செய்யப்படுவதன் காரணமாக, கடவுளை மகிமைப்படுத்தி ஆத்துமாக்களை ரட்சிப்பதற்கான என்னுடைய குறிக்கோள் பொய்க் கோட்பாடுகளால் தகர்க்கப்பட்டதே என்று நான் மிகவும் ஏமாற்றமடைந்து நிலைகுலைந்துபோனேன். ஆகவே, என்னுடைய பொறுப்பிலிருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டு, ஜூலை 1974-ல் இறுதியாக சுறுசுறுப்பான ஊழியத்திலிருந்து நான் ஓய்வுபெற்றேன். பைபிள் ஆதாரமேயில்லாத ஒரு குருத்துவத்தின் உறுதிமொழிகளிலிருந்து விதிவிலக்குக் கோருவது எனக்கு நியாயமற்றதாயும் ஏற்றுக்கொள்ளப்படாததாயும் இருந்தது. அதன் விளைவாக ஜூலை 1974 முதல் டிசம்பர் 1984 வரை மதத் தொடர்பின்றி ஒதுங்கியிருந்தேன். கிறிஸ்தவ மண்டலத்தின் மற்ற எந்த மதங்களோடும் நான் கூட்டுறவுகொள்ளவில்லை. காரணம் அவற்றில் எதுவும் திரித்துவம், ஆத்துமா அழியாமை, நீதிமான்களாகிய எல்லா ஜனங்களும் நித்திய ஜீவனையடைய பரலோகத்திற்குச் செல்லும் கொள்கை, முடிவிலா நரக அக்கினி தண்டனை போன்றவற்றிற்கு எதிரான என் முடிவுகளை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தக் கோட்பாடுகளையெல்லாம் புறமத கோட்பாடுகளாகவே நான் கருதினேன்.
உள்ளான சமாதானமும் மகிழ்ச்சியும்
டிசம்பர் 1984-ல் நான் மதத் தொடர்பின்றி ஒதுங்கியிருந்த காலம் முடிவுக்கு வந்தது. அலாஸ்காவின் ஆங்கரேஜில் ஒரு வியாபார நிறுவனத்தின் கடன் மற்றும் கடன் வசூலிப்புத் துறையின் மேலாளர் என்ற அதிகாரத்தில், பார்ப்ர லெர்ம என்ற ஒரு நுகர்வோரோடு நான் பல பொருள் விவரப் பட்டியலைப்பற்றி கலந்தாலோசிக்க வேண்டிய தேவை இருந்தது. அவள் அவசரத்தில் இருந்தாள், மேலும் தான் ஒரு ‘பைபிள் படிப்புக்கு’ ஆஜராக வேண்டியிருந்தாள் என்று சொன்னாள். “பைபிள் படிப்பு” என்ற சொற்றொடர் என் கவனத்தை ஈர்த்தது. நான் அவளிடம் ஒரு சில பைபிள் கேள்விகளைக் கேட்டேன். அவள் உடனடியாக, திறம்பட்ட வகையில் வேதபூர்வமான பதில்களைக் கொடுத்தாள். அவை கோட்பாடுகளைப்பற்றிய என்னுடைய சொந்த முடிவுகளுக்கு ஒத்திசைவாக இருந்தன. எனக்கு இன்னுமதிக கேள்விகள் உண்டென்பதைக் கண்ட பார்ப்ர, அலாஸ்காவில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் இருந்த ஜெரல்ட் ரங்க்கோ என்பவரோடு எனக்குத் தொடர்பு ஏற்படுத்தி வைத்தாள்.
அதைத் தொடர்ந்து வந்த கட்டியெழுப்பும் பைபிள் கலந்துரையாடல்கள் எனக்கு உள்ளார்ந்த சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவந்தன. நான் இதுவரை தேடிக்கொண்டிருந்தது இவ்வகையான ஜனங்களே—கடவுளுடைய ஜனங்கள். வழிநடத்துதலுக்காக நான் கடவுளிடம் ஜெபித்தேன். காலப்போக்கில் யெகோவாவின் சாட்சிகளோடு முழுக்காட்டுதல் பெறாத ஒரு நற்செய்தியின் பிரசங்கியாக கூட்டுறவுகொள்ளத் தொடங்கினேன். இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் நான் சேவை செய்த மன்ஹாட்டன், புனித குடும்ப சர்ச்சிற்கு ஒரு சில மைல் தொலைவில் உள்ள நியூ யார்க்கின் புரூக்ளினில்தான் உண்டென்று அறிவது உண்மையிலேயே என்னை ஆச்சரியப்படவைத்தது. அங்கு நான் (1969, 1971, மற்றும் 1974-ல்) ஐக்கிய நாடுகளின் பங்கு சர்ச்சில் இணை பாதிரியாக சேவை செய்திருக்கிறேன்.
சத்தியத்தைக் கண்டடைய என் குடும்பத்தினருக்கு உதவுதல்
ஆங்கரேஜில் யெகோவாவின் சாட்சிகளோடு ஆறு மாதங்களாக கூட்டுறவுகொண்டபின், ஜூலை 31, 1985-ல் நான் பென்ஸில்வேனியாவுக்கு மாறிச்சென்றேன். இங்கு என்னுடைய அக்கா மகள், மைலினி மன்டான்யவுக்கு யெகோவாவின் ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் சிலாக்கியத்தைப் பெற்றேன். அவள் அங்கு ஸ்க்ரேன்டன் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியலில் பட்டப் படிப்புக்காக படித்துக்கொண்டிருந்தாள். நான் யெகோவாவின் சாட்சிகளைத் தேடிக்கொண்டிருப்பதை மைலினி அறிந்தபோது, அவள் ஆச்சரியப்பட்டுப்போனாள். ஏனென்றால் அந்தக் கூட்டத்தினர் ஒரு கருத்து வேறுபாட்டுத்தொகுதி என்று தவறாக அவள் முன்பே கேள்விப்பட்டிருந்தாள். தனது மாமா என்ற முறையிலும் ஒரு குரு என்ற முறையிலும் அவள் எனக்கு மரியாதை காண்பித்ததாலும் என்னுடைய கல்வி மற்றும் குருத்துவ சாதனைகளுக்காக பெருமதிப்பு வைத்திருந்ததாலும் முதலில் அவள் என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை.
அதற்கடுத்த ஞாயிற்றுக் கிழமை, மைலினி கத்தோலிக்க சர்ச்சுக்குப் பூசை காண போயிருந்தாள், நானோ பைபிள் பிரசங்கத்திற்காகவும் காவற்கோபுர படிப்புக்காகவும் ராஜ்ய மன்றத்திற்குச் சென்றிருந்தேன். அன்று மாலையே நாங்கள் இருவரும், அவள் கத்தோலிக்க ஜெருசலம் பைபிளோடும் நான் பரிசுத்த வேத எழுத்துக்களின் புதிய உலக மொழிப்பெயர்ப்புடனும், ஒன்றாக உட்கார்ந்தோம். அவளுடைய பைபிளிலிருந்து யாவே (Yahweh) என்ற பெயரையும் அதற்குச் சமமான யெகோவா என்ற பெயரை புதிய உலக மொழிபெயர்ப்பில் இருந்தும் நான் காட்டிக்கொடுத்தேன். கடவுள் ஒரு பெயரைக் கொண்டிருக்கிறார், மேலும் நம்முடைய வணக்கத்தில் அவருடைய பெயரை உபயோகிக்கும்படி அவர் விரும்புகிறார் என்று கற்றுக்கொள்வதில் அவள் கிளர்ச்சியடைந்தாள். திரித்துவம், அப்பமும் மதுவும் இயேசுவின் உடலும் இரத்தமுமாக மாறுகின்றன, ஆத்துமா அழியாமை போன்ற கோட்பாடுகள் பைபிளுக்கு எவ்வளவு முரண்பட்டவையாக இருக்கின்றன என்பதையும் சொல்லி, சம்பந்தப்பட்ட வசனங்களை எடுத்துக் காட்டினேன். அவள் அப்படியே மலைத்துப்போய்விட்டாள்!
பூமியில் பரதீஸில் நித்திய ஜீவனுக்கான நம்பிக்கையைப்பற்றி சொன்னபோது மைலினியின் ஆர்வம் இன்னுமதிகம் தூண்டிவிடப்பட்டது. அதற்குமுன் தனக்கு மரணத்தில் என்ன நேரிடுமோ என்று கவலையுற்றிருந்தாள். நேரடியாக பரலோகத்திற்குப் போகுமளவுக்கு அவள் பரிசுத்தமானவள் அல்ல என்று நினைத்தாள், ஆனால் நரக அக்கினியின் நித்திய வாதைக்குத் தள்ளப்படுமளவுக்கு மோசமானவள் அல்ல என்றும் நினைத்தாள். ஆகவே, அவள் மனதில் இருந்த ஒரே ஒரு நம்பிக்கை உத்தரிக்கும்ஸ்தலம்தான். அங்கிருந்து அவளைப் பரலோகம்வரை அனுப்ப ஜனங்களின் ஜெபத்திற்காகவும் பூசைக்காகவும் அவள் காத்திருக்கத்தான் வேண்டும் என்று நினைத்தாள். இருப்பினும், பூமியில் பரதீஸில் நித்திய ஜீவனுக்கான நம்பிக்கையைப்பற்றி அநேக வசனங்களை அவளுக்குக் காட்டி விளக்கிய பிறகு, இந்த அதிசயமான நற்செய்தியைப்பற்றி அதிகம் கற்றுக்கொள்ள பேராவல் உள்ளவளாக இருந்தாள். மைலினி என்னோடு ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு ஆஜரானாள். நாங்கள் உள்ளூர் சாட்சிகளிடம் முறையான ஒரு பைபிள் படிப்பைத் தொடங்கினோம். சிறிது காலத்திற்குப்பின், மே 31, 1986-ல் யெகோவா தேவனுக்கு எங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றோம்.
என் குடும்பத்தினர், முக்கியமாக என் மூத்த அண்ணன் ஆர்லன்டோ, நான் குருத்துவத்தை விட்டுவிலகியதைக் கேட்டு வருத்தப்பட்டனர். அவர் என்னுடைய அக்கா, மைர லோபோ மன்டான்யவோடு ஆலோசனை நடத்தினார். என்னுடைய அக்காவோ, “நாம் இதைப்பற்றி ஒன்றும் கலக்கமடைய வேண்டாம், ஏனென்றால் அலினியோ மிகவும் நல்ல ஒரு காரணமின்றி தன்னுடைய எல்லா 43 வருட கடின வேலையையும் துறந்திருக்கமாட்டான்” என்று சொல்லி அவரை சமாதானப்படுத்தினார். செப்டம்பர் 1987-ல் மைராவும் அவருடைய குடும்பத்தினரும் அ.ஐ.மா., விஸ்கான்ஸினில் இருந்த என்னோடு வந்து தங்கினர். கத்தோலிக்க கோட்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் அநேகமும் வேதபூர்வமற்றவையாக இருக்கின்றன என்பதை அவர்கள் காணும்படி செய்வது எனக்குக் கடினமாக இருந்ததில்லை. பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்வதற்கு அவர்கள் ஆழ்ந்த அக்கறையுடன் இருந்தனர். உடனடியாக நானும் மைலினியும் அவர்களோடு பைபிள் படிப்பைத் தொடங்கினோம். அவர்கள் ஃப்ளாரிடாவிலுள்ள ஓர்லண்டோவிற்கு மாறிச்சென்றபோது, தங்களுடைய படிப்பைத் தொடர்ந்தனர்.
நாங்கள் அனைவரும் அனுபவித்த சமாதானமும் மகிழ்ச்சியும் யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைக் கனடாவின் டோரன்டோவில் வாழும் என் மூத்த அக்கா, ஜெஸ்ஸி லோபோவோடு பகிர்ந்துகொள்ளும்படி எங்களைத் தூண்டிற்று. அவர் ஏற்கெனவே 1983-ல் சாட்சி கொடுக்கப்பட்டிருக்கிறார். எனினும், ஒரு குருவாக இருக்கும் ஒரு தம்பியைக் கொண்டிருப்பதால், தன்னுடைய விசுவாசத்தை எதுவும் மாற்றிவிடமுடியாது என்பதாக அவர் நினைத்தார். யெகோவாவின் சாட்சிகளோடு கொண்டிருந்த அந்த முதல் கலந்துரையாடலைத் தொடர்ந்த நான்கு வருடங்களுக்குப்பின், நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறிவிட்டதையும், மைராவும் அவருடைய குடும்பத்தினரும் நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்களாக இருந்ததையும் அவர் கண்டபோது, ஒரு சாட்சியோடு தொடர்பு கொண்டார். அந்தச் சாட்சியும் உடனடியாக ஒரு பைபிள் படிப்பை ஏற்பாடு செய்தார். ஜெஸ்ஸி ஏப்ரல் 14, 1990-லும், மைராவும், என் மைத்துனன் ஆஸ்உவல்டும், என் அக்கா மகள் க்ளினஸும் பிப்ரவரி 2, 1991-லும் முழுக்காட்டப்பட்டனர். மகா உன்னதராகிய யெகோவாவுக்குச் சேவை செய்ய அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கின்றனர்.
கத்தோலிக்க சர்ச்சிலுள்ள பழமைவாதிகளான பாரம்பரியக்காரர்களும், தாராளவாதிகளான முன்னேற்றக்காரர்களும் நிச்சயமாகவே புத்திக்கூர்மை உள்ளவர்கள்தான். அவர்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்துகொண்டிருப்பதாக எண்ணுகின்றனர். இருப்பினும், “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்,” என்ற உண்மையை நாம் அசட்டை செய்துவிடக்கூடாது. (2 கொரிந்தியர் 4:4) அப்படியானால், இவ்வொழுங்குமுறையின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது என்பது தெளிவாகவே இருக்கிறது. (1 கொரிந்தியர் 3:18, 19) தமது வார்த்தையின் திருத்தமான அறிவின் மூலம் யெகோவா “பேதையை ஞானியாக்கு”கிறதற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாகவும் மகிழ்ச்சியுள்ளவனாகவும் இருக்கிறேன்.—சங்கீதம் 19:7.
ஒரு கத்தோலிக்க குருவாக என்னுடைய 19 வருட சேவை கடந்த காலமாகிவிட்டது. இப்போது நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறேன். யெகோவாவின் வழிகளில் நடந்து, அவருடைய குமாரனும், நம்முடைய ராஜாவும் ரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதே என்னுடைய ஆசை. மெய்க் கடவுள் யெகோவாவின் மகிமைக்கு, மற்றவர்கள் யெகோவாவைப்பற்றி அறிந்துகொள்வதால் பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனாகிய பரிசைப்பெற தங்களைத் தகுதியுள்ளவர்களாக ஆக்கிக்கொள்ள நான் அவர்களுக்கு உதவிசெய்ய விரும்புகிறேன்.—அலினியோ ட சேண்ட ரிட லோபோ கூறியபடி. (g93 9/8)
[அடிக்குறிப்புகள்]
a நான் சேலமேங்க்கவிலிருந்து திரும்பி வந்துவிட்டேன். இருப்பினும் கிறிஸ்தவ சமயச் சட்ட ஆராய்ச்சிக் கட்டுரைக்காக ஆராய்ச்சியைத் தொடர்ந்து, 1968-ல் அதை சமர்ப்பித்தேன்.
b இந்த வசனத்தின் பாகம் கத்தோலிக்க நியூ அமெரிக்கன் பைபிளின் பிரகாரம் இவ்வாறு கூறுகிறது: “நான் உனக்குச் சொல்கிறேன், நீ ‘பாறை,’ இந்தப் பாறையின் மீது என் சர்ச்சைக் கட்டுவேன் . . . பூமியில் கட்டப்பட்டதாக எதை அறிக்கையிடுகிறாயோ அது பரலோகத்திலும் கட்டப்படும்; பூமியில் கட்டவிழ்க்கப்பட்டதாக எதை அறிக்கையிடுகிறாயோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்.”—பெட்டியைப் பார்க்கவும், பக்கம் 21.
[பக்கம் 21-ன் பெட்டி]
ராஜ்யத்தின் திறவுகோல்கள்
‘பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை’ பொருத்தளவில், இயேசு மதத் தலைவர்களுக்குத் தெரிவித்த இந்தக் கண்டனத்தைக் கவனிக்கையில் அதன் அர்த்தம் தெளிவாகிறது: “அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள்.” (லூக்கா 11:52) “பிரவேசித்தல்” என்பது ‘பரலோகராஜ்யத்திற்கான’ நுழைவாயிலைக் குறித்துக்காட்டுகிறது என்பதை மத்தேயு 23:13 மேலும் விளக்குகிறது.
இயேசு பேதுருவுக்கு வாக்களித்திருந்த திறவுகோல்கள், பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கான விசேஷ வாய்ப்புகளைத் தனிப்பட்டவர்களுக்குத் திறந்துவைக்கும் தனிச்சிறப்பான ஒரு கல்வி திட்டத்தால் ஆனதாக இருந்தன. பேதுரு யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் புறஜாதிகளுக்கும் உதவிய, மூன்று சந்தர்ப்பங்களில் இந்த சிலாக்கியத்தை உபயோகித்தார்.—அப்போஸ்தலர் 2:1-41; 8:14-17; 10:1-48; 15:7-9.
அந்த வாக்களிப்பின் நோக்கம், பேதுரு பூமியில் எதைக் கட்டவேண்டும் அல்லது கட்டக்கூடாது என்றும் கட்டவிழ்க்கவேண்டும் அல்லது கட்டவிழ்க்கக்கூடாது என்றும் பரலோகத்திற்குக் கட்டளையிடுவதல்ல, ஆனால் பரலோகத்தின் கருவியாக குறிப்பிட்ட மூன்று நியமிப்புகளுக்கு உபயோகப்படுத்தப்படுவதே. இயேசு சபையின் உண்மையான தலையாய் இருந்துவருவதால் அது அவ்வாறாகிறது.—ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 4:15, 16; கொலோசெயர் 2:8-10; எபிரெயர் 8:6-13.
[பக்கம் 22-ன் படம்]
இப்பொழுது ஒரு சாட்சியாயிருக்கும் அலினியோ ட சேண்ட ரிட லோபோ