உங்கள் பிள்ளையில் அழுத்தத்தின் அடையாளங்களைக் கண்டுபிடித்தல்
“அழுத்த உணர்ச்சிகள் எளிதில் வெளிப்படுவதில்லை: அவை வழக்கமாகவே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கான அல்லது சூழ்நிலைகளுக்கான பிரதிபலிப்புகளாகவே இருக்கின்றன.” —டாக்டர் லில்யன் G. காட்ஸ்.
இருண்ட மூடுபனி நிறைந்த இரவில் ஒரு விமானத்தை ஓட்டும் விமானி தான் எங்கே போய்க்கொண்டிருக்கிறான் என்று எவ்வாறு பார்க்கமுடியும்? நிலத்திலிருந்து எழுந்து மீண்டும் நிலத்தில் இறங்கும்வரை, அவன் சுட்டுக்குறி செய்திகளை (signals) சார்ந்திருக்கிறான். ஒரு பெரிய விமானத்தின் விமானி தளத்தில் உள்ள பலகையை நூற்றுக்கும் அதிக கருவிகள் நிரப்பியிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் முக்கிய தகவல்களைக் கொடுத்துக்கொண்டும், பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகளைப்பற்றி விமானியை எச்சரித்துக்கொண்டும் இருக்கின்றன.
அழுத்தம்-நிறைந்த நம்முடைய உலகில் வளர்ந்துவருவது, ஒரு புயலின் மத்தியில் பறப்பதைப் போன்றாகும். குழந்தைப்பருவத்திலிருந்து வயதடையும்பருவம் வரை பெற்றோர் தடைகளற்ற ஒரு பறத்தலுக்கு எவ்வாறு துணைபுரியலாம்? அநேகப் பிள்ளைகள் தங்கள் அழுத்தங்களைப்பற்றி பேசாததால், பெற்றோர் அடையாளங்களைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
சரீரம் “பேசுகிறது”
ஒரு பிள்ளையின் அழுத்தம் பெரும்பாலும் அதன் சரீரத்தின் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. வயிற்றுக் கோளாறுகள், தலைவலி, களைப்பு, சரிவர தூக்கம் வராமை, உடற்கழிவுகளை வெளியேற்றுதலில் பிரச்னைகள் போன்றவை உட்பட்ட உளஞ்சார்ந்த உடல் பிரதிபலிப்புகள் (psychosomatic reactions) ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதைக் காட்டும் அடையாளங்களாக இருக்கலாம்.a
ஷேரனின் காதுகேளாமை, கடுமையான தனிமை கால உச்சக்கட்டமாக இருந்தது. ஏமி பள்ளிக்குச் சென்றபோது, அவளுடைய வயிற்றில் ஏற்பட்ட தசைப்பிடிப்புகள், தன்னுடைய தாயிடமிருந்து பிரிக்கப்பட்டுவிடும் பயத்தால் தூண்டிவிடப்பட்டவையே. தன்னுடைய பெற்றோரிடையே நடந்த வன்முறை சண்டையைக் கண்டதால் ஜானுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டது.
பாலுறவுக்காகத் தாக்கப்பட்டதுதானே பத்து வயது ஆஷ்லிக்குச் சரீரப்பிரகார பின்விளைவுகளைக் கொண்டிருந்தது. “[கற்பழிப்பைத் தொடர்ந்து] உடல்நிலை சரியில்லாததால், ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாதது எனக்கு ஞாபகம் இருக்கிறது,” என்று அவள் நினைவுபடுத்திப் பார்க்கிறாள். உங்கள் பிள்ளை பாலுறவுக்காகத் தாக்கப்பட்டிருக்கும்போது (When Your Child Has Been Molested) புத்தகம் விவரிக்கிறது: “பாலுறவுக்காகத் தாக்கப்பட்ட அனுபவ பாரம் ஒரு பிள்ளை ஆரோக்கியமற்று இருக்குமளவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம்.” தெளிவான காரணமே இல்லாமல் உண்டாகும் சிதைவுகள், உடற்கழிவுகள் வெளியேறும்போது வேதனை, அடிக்கடி ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, எலும்பு அல்லது தசை வலி போன்றவை அத்தகைய அதிர்ச்சிகளால் ஏற்பட வாய்ப்பிருக்கும் சரீர அடையாளங்களில் அடங்கும்.
வியாதி உளஞ்சார்ந்த உடல்நோய்களாகத் தோன்றும்போது பெற்றோர் அந்த அடையாளங்களுக்குச் சீரிய கவனம் செலுத்தவேண்டும். “பிள்ளைப் பாசாங்கு செய்கிறதோ இல்லையோ அது முக்கியமல்ல. முக்கியமென்னவென்றால் அதனடியில் புதைந்து கிடக்கும் பிரச்னையே,” என்று டாக்டர் ஆலிஸ் S. ஹோனிக் கூறுகிறார்.
வார்த்தைகளைப் பார்க்கிலும் செயல்கள் சத்தமாய்ப் பேசுகின்றன
நடத்தையில் ஏற்படும் ஒரு திடீர் மாற்றம் பெரும்பாலும் உதவிக்கான ஓர் அழைப்பாகும். வார்த்தைகளில் தெரிவிக்கும் வருத்தம் (Giving Sorrow Words) புத்தகம் குறிப்பிடுகிறது: “நன்றாகப் படிக்கும் ஒரு மாணவன் தோல்வி மதிப்பெண்களைப் பெற தொடங்குகிறான் என்றால், அது கவனத்தைத் தேவைப்படுத்துகிறது. இதற்குமுன் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த ஒரு பிள்ளை நன்னடத்தையின் எடுத்துக்காட்டாக மாறினாலும் இதுவே உண்மையாக இருக்கிறது.”
தன்னுடைய தாய் அவளுடைய வேலையில் முழுமையாக ஈடுபட்டிருந்தபோது, ஏழு வயது டிம்மியின் பொய்ப்பேசும் திடீர் பழக்கம் தொடங்கிற்று. தன் பள்ளிப்படிப்பில் குறையுள்ளவனாக இருக்கிறான் என்ற உணர்ச்சிகளில் வேரூன்றியிருந்தது ஆறு வயது ஆதாமின் திடீர் முரட்டுத்தன நடத்தை. ஏழு வயது கார்ல் மீண்டும் படுக்கையில் சிறுநீர் கழிக்கத் தொடங்கியது, இப்போது அவனுடைய தங்கையை ஏற்றுக்கொள்வதாகத் தோன்றும் தன் பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான அவனுடைய ஏக்கத்தை வெளிக்காட்டியது.
தன்னழிவை ஏற்படுத்திக்கொள்ளும் நடத்தை முக்கியமாகக் கலக்கமூட்டக்கூடியதாக இருக்கிறது. பன்னிரண்டு வயது சாராவுக்கு அடிக்கடி ஏற்பட்ட விபத்துகளுக்கு வெறுமனே அவள் செயல் நயமற்றவளாக இருப்பதைக் காரணமாகக் காட்டமுடியாது. அவளது பெற்றோர் மணவிலக்குச் செய்துகொண்டதிலிருந்து, தன்னையே புண்படுத்திக்கொள்வதுதான் தன்னோடு இல்லாத தகப்பனின் அன்பை மீண்டும் பெறுவதற்காக தன்னுணர்வற்ற நிலையில் அவள் முயற்சிசெய்யும் அவளுடைய வழியாகும். தனக்குத்தானே உண்டாக்கிக்கொண்ட சாதாரண சிறிய காயமாக இருந்தாலும் சரி அல்லது தற்கொலை முயற்சி போன்ற வினைமையான காரியமாக இருந்தாலும் சரி, தனக்குத்தானே தீங்கு செய்துகொள்ளும் தன்னழிவை ஏற்படுத்திக்கொள்ளும் நடத்தை கடுமையான அழுத்தத்தின் ஓர் அடையாளமாக இருக்கிறது.
இருதயத்திலிருந்து பேசுதல்
இயேசு கிறிஸ்து சொன்னார்: “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.” (மத்தேயு 12:34) எதிர்மறையான உணர்ச்சிகளால் நிறைந்திருக்கும் இருதயம் வழக்கமாகவே அந்தப் பிள்ளைக் கூறுவதிலிருந்து வெளிப்படுகிறது.
“‘என்னை யாருமே விரும்புகிறதில்லை’ என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்கு வரும் பிள்ளைகள் உண்மையில் தாங்களே தங்களை விரும்புகிறதில்லை என்பதை உங்களுக்குச் சொல்கின்றனர்,” என டாக்டர் லரேன் ஸ்டெர்ன் கூறுகிறார். தற்பெருமை பேசுவதிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. தாழ்ந்த சுய-மதிப்பின் எதிர்ப்பதத்தை வெளிப்படுத்திக்கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், உண்மையான அல்லது கற்பனை செய்துகொண்ட சாதனைகளைப்பற்றி தற்புகழ்ச்சி பேசுதல் குறையுள்ளவன் என்ற ஆழ்ந்த உணர்ச்சிகளை வெல்லுவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம்.
எல்லா பிள்ளைகளும் வியாதிப்படுகிறார்கள், அவ்வப்போது தவறாக நடந்துகொள்கின்றனர், இடையிடையே தங்களுக்குத் தாங்களே ஏமாற்றத்தை அனுபவிக்கின்றனர் என்பதெல்லாம் உண்மையே. ஆனால் அத்தகைய பிரச்னைகள் ஒரு மாதிரிப்படிவமாக மாறி, அதற்கான எந்த நேரடி காரணமும் தெளிவாக இல்லாதபோது, பெற்றோர் அந்த அடையாளங்களின் அர்த்தத்தை நன்கு சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
மிகக் கடுமையான வன்முறைத் தாக்குதல் குற்றத்தைச் செய்த ஆறு பருவவயதினரின் பிள்ளைப்பருவ நடத்தை மாதிரிப்படிவங்களை ஆராய்ந்த பின், மேரி சூஸன் மில்லர் குறிப்பிட்டார்: “எல்லா அடையாளங்களும் இருந்தன. அந்தப் பையன்களும் தங்களுடைய வாழ்க்கைமுறையில் அந்த அடையாளங்களை வருடக்கணக்கில் வெளிக்காட்டியிருக்கின்றனர், ஆனால் யாரும் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. வயதுவந்தவர்கள் கவனித்தனர், ஆனால் அவர்களும் அலட்சியமாக இருந்துவிட்டனர்.”
எப்பொழுது இருந்ததையும்விட இப்போது, பெற்றோர் பிள்ளைப்பருவ அழுத்தத்தின் அடையாளங்களைக் கண்டுபிடித்து அவற்றின்பேரில் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு விழிப்புள்ளவர்களாக இருக்கவேண்டும்.
[அடிக்குறிப்புகள்]
a கற்பனை செய்துகொள்ளப்படும் பிணிகளை ஈடுபடுத்தும், கற்பனைப்பிணியை (hypochondria) போல் அல்லாமல், ஓர் உளஞ்சார்ந்த உடற்பிணி (psychosomatic illness) உண்மையானது. இருப்பினும், அதன் காரணம் சரீரப்பிரகாரமாக இருப்பதைவிட உணர்ச்சிசம்பந்தமாக இருக்கிறது.
[பக்கம் 8-ன் பெட்டி]
கருப்பையில் அழுத்தம்?
ஒரு கருவுங்கூட தன்னுடைய தாய் இரத்த ஓட்டத்தில் நடைபெறும் ரசாயன மாற்றங்கள் வழியாகக் கடத்தும் அழுத்தம், பயம், கவலை போன்றவற்றை உணரக்கூடும். “கருத்தரித்துள்ள தாய் உணருகிற மிகச் சிறியளவு இறுக்கத்தையும் வளர்ந்துவரும் கரு உணருகிறது,” என்று ஃக்ரோயிங் அப் டைவர்ஸ்ட் புத்தகத்தில் எழுதுகிறார் லின்டா பர்ட் ஃப்ராங்க்க. “கருவின் நரம்பு மண்டலத்திற்கும் அந்தப் பெண்ணின் நரம்பு மண்டலத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், இந்த இருவருக்குமிடையே துண்டிக்கப்படமுடியாத ஒருவழித் தொடர்பு இருக்கிறது.” டைம் பத்திரிகையின்படி, 18 மாதம் மற்றும் அதற்கும் குறைந்த வயதுள்ள குழந்தைகளில் மதிப்பிடப்பட்ட 30 சதவீதத்தினர் ஏன் உணர்ச்சிசம்பந்தமாகப் பின்வாங்குதல் முதல் கவலையின் தாக்குதல்கள் வரையுள்ள அழுத்தம் சார்ந்த பிரச்னைகளால் துன்பப்படுகின்றனர் என்பதை இது நன்கு விவரிக்கலாம். “மகிழ்ச்சியற்ற, துன்புற்ற பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளும் பெரும்பாலும் மகிழ்ச்சியற்றும் துன்புற்றும் இருக்கின்றன,” என்று ஃப்ராங்க்க முடிக்கிறார்.
[பக்கம் 9-ன் பெட்டி]
ஒரு பிள்ளை தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்யும்போது
“நான் ஒரு நூறு வருடங்கள் தூங்கிவிட்டால் என்ன ஆகும்?” லெட்டி தன்னுடைய தகப்பனிடம் கேட்டாள். அது ஒரு சிறுபிள்ளைத்தன கேள்வி என்று அவர் நினைத்தார். ஆனால் லெட்டி விளையாட்டுத்தனமாய் அதைக் கேட்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு ஒரு முழுப் பாட்டில் தூக்கமாத்திரைகளை முழுங்கியதால் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
உங்களுடைய பிள்ளைத் தற்கொலையைப்பற்றி யோசித்தாலோ உண்மையிலேயே தற்கொலை செய்துகொள்ள முயன்றாலோ நீங்கள் என்ன செய்யவேண்டும்? “வல்லுநர்களின் உடனடி உதவியை நாடுங்கள்,” என்று சோர்வு—குடும்பங்கள் அறிந்திருக்கவேண்டியது (Depression—What Families Should Know) புத்தகம் வற்புறுத்துகிறது. “தற்கொலை செய்துகொள்ள தீவிரமாக முயலுபவர்களுக்குச் சிகிச்சையளிப்பது பொழுதுபோக்கு ஆலோசகர்களின், ஏன் சோர்வடைந்த ஆளைப்பற்றி ஆழ்ந்த அக்கறையுடையவர்களின் வேலையுங்கூட அல்ல. அவனோ அவளோ அமைதியாக இருப்பதால் தற்கொலை செய்யவேண்டாமென்று நீங்கள் உங்களுடைய குடும்ப அங்கத்தினரைச் சமாதானப்படுத்திவிட்டீர்கள் என ஒருவேளை நினைக்கலாம். அவரோ எல்லா உணர்ச்சிகளையும் உள்ளத்தில் புதைத்து வைத்து இறுதியில் அவை கொடூர விளைவுகளோடு வெடிக்கும்வரை அமைதியாக இருந்துகொண்டிருக்கிறார்.”
தகுந்த சிகிச்சை பெற்றால் தற்கொலை செய்துகொள்ள முயலும் ஒரு பிள்ளை நல்ல நிலையை அடையும் நம்பிக்கையிருக்கிறது. “தற்கொலை செய்துகொள்ள முயலும் பெரும்பாலான ஜனங்கள் உண்மையிலேயே தங்களையே கொலைசெய்துகொள்ள விரும்புவதில்லை,” என்று மேலே குறிப்பிடப்பட்ட புத்தகம் கூறுகிறது. “அவர்கள் வெறுமனே தாங்கள் புண்படுவதை நிறுத்த விரும்புகின்றனர். அவர்களுடைய முயற்சிகள் உதவிக்கான கூக்குரலாக இருக்கின்றன.” கிறிஸ்தவ சபையில், பிள்ளைகளின் தற்கொலை மனநிலைகளைக் கையாள முடியாத பெற்றோர் மூப்பர்களின் அன்பான ஆதரவையும் வேதப்பூர்வமான நல்ல அறிவுரையையும் பெறலாம்.