பறவையின் பாடல் வெறுமனே இன்னொரு இனிய ராகந்தானா?
நிகழ்ச்சிக்காக நன்கு உடையணிந்திருக்கும், பாடகர்குழுவின் அங்கத்தினர்கள் தங்களுடைய இடங்களில் தயாராகிக்கொண்டிருக்கும்போது, தூரத்திலிருக்கும் மேடைவிளக்குத் தனது ஒளியை அவர்கள் மீது வீசத் தொடங்குகிறது. குடும்பப் பாரம்பரியமாக சிறுவயது முதற்கொண்டே பயிற்சியளிக்கப்பட்ட அவர்கள் ஒவ்வொருவரும் இருதயத்திலிருந்து எளிதில் பாடுகின்றனர். அவர்களில் ஒருசிலர் முன்னாயத்தமின்றிப் பாடும் கலையில், தானாகவே புதிய மற்றும் வித்தியாசமான ராகங்களைப் படைக்கும், திறம்படைத்தவர்களாகக்கூட தோன்றுகின்றனர்.
இந்நிகழ்ச்சி எங்கே நடத்தப்படுகிறது? அது எந்தவொரு உலகப்புகழ்பெற்ற இசையரங்கிலும் அல்ல. மாறாக, சிறகுகளுள்ள சிறுபடைப்புகளாலான திரளான அணிகளை வெளிப்படுத்த இரவின் இருள்திரை விலகுகிறது. மரங்கள், மதில்கள், தந்திக் கம்பிகள் போன்றவற்றின் மேல் உள்ள பலவகையான பாடும் பறவைகள் தங்களின் குரல்களை உலகிலேயே மிகவும் திளைப்பூட்டும் பல்லவிகளில் ஒன்றாக இணைக்கின்றன. அவற்றின் நீள்முரல்விசைகள், கமகங்கள், சீழ்க்கைகள், புல்லாங்குழல் தொனிகள், இவை யாவும் ஒரு புதிய நாளுக்கு உவகையூட்டும் வாழ்த்துதலை ஒலிக்கின்றன.
ஆனால் இவை வெறுமனே மகிழ்ச்சிதரும் ஒலிகள் மட்டுமல்ல. பறவைகளின் இப்பாடல்களுக்கு நம்முடைய செவி உடனடியாகக் கேட்பதைவிட மிக அதிகமுண்டு. பறவைகள் பாடுவதேன்? இப்பாடல்களுக்கு அர்த்தம் இருக்கிறதா? பறவைகள் தங்களுடைய பாடல்களை எவ்வாறு கற்கின்றன? அவை எப்பொழுதாவது புதிய பாடல்களைக் கற்கின்றனவா?
மறைந்திருக்கும் செய்திகள்
மிகவும் உயிரூட்டமுள்ள பாடல்கள் விடியல்களிலும் மாலைப்பொழுதுகளிலும் கேட்கப்படுகின்றன. அந்தப் பல்லவிகளில் நீங்கள் பெரும்பாலும் ஆண்குரல்களையே கேட்க வாய்ப்பிருக்கிறது. அவற்றின் செய்தி இரட்டைச் செய்தியாகும். அது தங்களுடைய வட்டார எல்லைகளை மீறாதிருக்கும்பொருட்டு மற்ற ஆண் பறவைகளுக்குக் கொடுக்கும் கடுமையான ஓர் எச்சரிக்கையாக இருக்கிறது. அதே சமயம் பெண் பறவைகளுக்கு அது தனித்து வாழும் தகுதிவாய்ந்த ஆண் பறவையிடமிருந்து வரும் அழைப்பாகவும் இருக்கிறது. பாடும்பறவைகள், ஒரு மொழி பேசப்படும் பல அசையழுத்தங்களைப் போலவே, தங்கள் சொந்த வட்டார பாட்டுகளை உருவாக்குகின்றன. இணைசேர் (mating) பாட்டுகளின் தனித்தன்மை வாய்ந்த கிளைமொழி, பாடகரின் குறிப்பிட்ட வட்டாரத்திலுள்ள பெண் பறவைகளை மட்டுமே கவர்ந்திழுக்கும். மிகவும் உயிர்த்துடிப்புள்ள மற்றும் சிக்கலான பாடல்கள் இணைசேர் பருவத்தின்போது கேட்கப்படுகின்றன. இப்பருவம் பெண் பறவைகளை மயக்குவதற்காக அளிக்கப்படும் காட்சியாக இருக்கிறது.
அவனுடைய ராகத்தால் அந்தப் பாடகன் தன்னுடைய இருப்பிடத்தை நண்பருக்கும் பகைவருக்கும் ஒரே மாதிரி அறிவிக்கிறான். எனவே, வண்ணமிகு பறவைகளும் திறந்தவெளிகளை விரும்பும் பறவைகளும் தேவையற்ற கவனத்தை ஈர்க்காதிருக்கும்படி உரக்கப் பாடுதலை ஞானமாகத் தவிர்க்கின்றன. மறுபட்சத்தில், நன்கு உருமறைக்கப்பட்ட (camouflaged) பறவைகளும் அடர்க் கானகங்களில் வசிக்கும் பறவைகளும் சப்தமாக எவ்வளவு வேண்டுமானாலும் பாடலாம். ஏனென்றால் அவை கண்டுபிடிக்கப்படுவதற்கான அபாயமில்லை.
சில சமயங்களில் நீங்கள் கேட்பது நம்முடைய சிறகுள்ள நண்பர்களின் உண்மையான பாட்டாக இல்லாமல் இருக்கலாம். அது வெறுமனே இணைகளுக்கிடையில் தொடர்பை ஏற்படுத்தும் அல்லது கூட்டத்தைக் கூட்டியிணைக்கும் ஒரு சமிக்கையாகவே இருக்கலாம். அது உறுதியாக ஏற்படவிருக்கும் அபாயத்தைக் குறித்து விடுக்கும் எச்சரிப்பாகவுங்கூட இருக்கலாம், அல்லது ஒரு பூனையையோ அல்லது உட்புகுந்த மற்றவரையோ திரண்டெழுந்து தாக்குவதற்காக விடுக்கும் அழைப்பாகவுங்கூட இருக்கலாம். தங்களுடைய குரல்களால், பறவைகள் தங்களுடைய மனநிலையையும்—கோபமாக இருந்தாலும் சரி திகிலடைதல் அல்லது கலக்கமடைதலாக இருந்தாலும் சரி—தங்களுடைய இணைசேர் நிலையையும் தெரியப்படுத்த முடியும்.
திறமையும் நுணுக்கமும் உடைய இசைக்கலைஞர்கள்
பாடும் பறவைகளின் பாட்டுத் திறமை உண்மையிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தவையாய் இருக்கின்றன. சில பறவைகளால் ஒரே சமயத்தில் மூன்று அல்லது நான்கு தனிக்குரல் இசைகளை (notes) பாடமுடியும். மற்றவற்றால் ஒரு நொடிக்கு 80 தனிக்குரல் இசைகள் வரை பாடமுடியும். மனித செவிக்கு, இவை ஒரே தொடர் தனிக்குரல் இசையாகத் தோன்றலாம். ஆனால் பறவைகளின் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலினால் அவை இவற்றைப் பிரித்தறிய முடியும்.
பறவைகளுக்கு இசைநுட்பத்தை உணரும் திறம் இருக்கிறதா என்று ஆராய்ச்சியாளர்கள் சிந்தித்திருக்கின்றனர். பாக்குவின் ஆர்கன் இசைக்கும் ஸ்ட்ராவின்ஸ்கியின் “ரைஃட் ஆஃப் ஸ்ப்ரிங்” இசைக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் பறவைகளால் பிரித்தறிய முடியுமா? சரியான இசையமைப்பாளரைக் கண்டுபிடிப்பதற்காக இரண்டு இசைத்தட்டுகளில் ஒன்றைக் கொத்தியெடுத்து அதற்கு ஓர் உணவுப் பண்டத்தைப் பரிசாகப் பெறும்படி ஆராய்ச்சியாளர்கள் நான்கு புறாக்களைப் பழக்கினர். விரைவில் அந்தப் புறாக்களால் பாக்குவின் 20 நிமிட இசையில் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் கேட்டுச் சரியான இசைத்தட்டைத் தெரிந்தெடுக்க முடிந்தது. சிறிய விதிவிலக்குகளைத் தவிர, மற்ற இசையமைப்பாளர்களால் இயற்றப்பட்ட அதைப்போன்ற இசையைக் கேட்டாலும்கூட சரியான இசைத்தட்டைத் தெரிந்தெடுக்க அவற்றால் முடிந்தது.
வெப்பமண்டலங்களில் வாழும் குறிப்பிட்ட பறவைகள் ஜோடிப்பாடல்களை (duets) உருவாக்கி பாடுகின்றன. இணைசேர்ந்த ஒரு பறவைஜோடி, முதலில் ஒன்றும் பின் மற்றொன்றுமாக மாறி மாறி பாடுகிற அல்லது அழைப்பதும் அதற்குப் பதிலளிப்பதுமான பாணியில் பாடும் பாட்டுகளின் கூறுகள் அடங்கிய முதல்முறை உருவாகும் பாட்டைப் படைக்கும்வரை அவை பயிற்சி செய்து முயற்சிப்பதாகத் தோன்றுகிறது. கேட்டுப் பழக்கப்படாத ஒரு செவிக்கு, ஒரே ஒரு பறவை ஒரே பாட்டைத் தொடர்ந்து பாடுவதுபோலத் தொனிக்குமளவுக்கு, அவை துல்லியமாகப் பாடுகின்றன. ஒவ்வொரு துணைப் பறவையும் பாடலின் இரண்டு பாகத்தில் ஒன்றைப் பாடக்கூடும் அல்லது தனது துணையில்லாத சமயங்களில் முழுப்பாட்டையும் தானே தனியாகப் பாடக்கூடும். தனித்தன்மை வாய்ந்த இந்தத் திறமையே தெளிவாக அடர்ந்த மழைக்காடுகளில் வாழும் பறவைகள் தங்களுடைய சொந்த துணைகளை அடையாளம் கண்டுகொள்ளவும் அதன் இருப்பிடத்தை அறிந்துகொள்ளவும் உதவுகிறது.
இசையமைப்பாளர்களும் பாவனைக்காரர்களும்
பறவைகள் எவ்வாறு தங்கள் பாட்டுக்களைக் கற்றுக்கொள்கின்றன மற்றும் உருவாக்குகின்றன என்பது இன்னும் ஆராயப்பட்டுவரும் ஒரு பொருளாக இருக்கிறது. ஆனால் ஒன்று நிச்சயம்: அவை கற்றுக்கொள்ளும் முறைகளோ விதவிதமானவை. பறவை உலகில் காணப்படும் விதவிதமான இம்முறைகளின் மாதிரிகள் இங்குக் கொடுக்கப்படுகின்றன.
ஆண் ச்சேஃபின்ச் பறவை தான் பிறக்கிற சமயத்திலேயே தன்னுடைய பாட்டின் பாதியளவாவது மூளையில் பதிக்கப்பட்டே பிறக்கிறது. மற்ற பறவைகளிலிருந்து முழுவதும் பிரிக்கப்பட்டு ஒண்டியாய் வளர்ந்தாலும்கூட, அதன் பாட்டு இயல்பாக இல்லாமலிருக்கலாம்; ஆனாலும் அது ச்சேஃபின்ச் இனப்பாட்டிற்குரிய அதே எண்ணிக்கை தனிக்குரல் இசைகளையும் சுமார் அதே நீளத்தையும் கொண்டதாக இருக்கிறது. எனினும், அதன் மாதிரிப் படிவத்தைச் சரியாக உருவாக்க, அது பாடும் வயதை அடையும் முன்பு மற்ற ஆண் ச்சேஃபின்ச் பறவைகள் பாடுவதைக் கேட்கவேண்டும். மேலும் அது அந்தப் பாட்டை அடுத்த இளவேனிற்காலத்தில் திரும்பவும் கேட்கவேண்டும். அதன் பிறகு, மனித பாடகரைப் போல, இந்தச் சிறகுள்ள இசைக்கலைஞன் தன் இளங்குரலைத் தனது மனதில் பதிந்துள்ள ராகத்திற்கு இசைவாகக் கொண்டுவர தன்னுடைய பாட்டை மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பயிற்சி செய்து—முழுமையாக்கவேண்டும்.
ஓரகான் ஜங்க்கோ தன்னினப் பாடலைக் கேட்கவில்லையெனில், தன்னுடைய சொந்தப் பாடல்களை உருவாக்குகிறது. ஆனால் தெளிவான, எளிமையான ஜங்க்கோ பாடலை அது ஒருமுறை கேட்குமானால், புதிதாகப் பாடுவதை நிறுத்திவிட்டு, மற்ற ஜங்க்கோ பறவைகளைப்போலவே தொனிக்கிறது. மறுபட்சத்தில், அரிஸோனா ஜங்க்கோ ஒரு வளர்ச்சியடைந்த ஜங்க்கோ பாடுவதைக் கேட்பதனால் அதன் படைப்புத்திறன் தூண்டப்படுகிறது. அது கேட்பதைப் பாவனை செய்வதில்லை. ஆனால் தனித்தன்மை வாய்ந்த தன்னுடைய சொந்தப் பாட்டைக் கண்டுபிடிக்கும்படி தூண்டிவிடப்படுகிறது.
சில பாட்டுகள் பிறப்பிலேயே பதித்துவைக்கப்படுகின்றன என்பதற்கு “அடைகாத்தலில் ஒட்டுண்ணிகள் (brood parasites)” மிகவும் உறுதியான அத்தாட்சியை வழங்குகின்றன. உதாரணமாக, கக்கூ தனது முட்டைகளை வளர்ப்புப் பெற்றோராய்ச் செயல்புரியும் மற்ற வகை பறவைகளின் கூடுகளில் இடுகிறது. குஞ்சுபொறித்த பிறகு தான் தன்னுடைய வளர்ப்புத் தந்தையைப் போலல்ல, எனவே அதைப்போலவே பாடக்கூடாது என்றெல்லாம் குஞ்சு கக்கூவுக்கு எப்படி தெரியும்? அதன் பிறப்பின்போது அந்தக் கக்கூ பாட்டு அதன் மூளையில் ஆழப் பதிக்கப்பட்டு இருக்கவேண்டும்.
எனவே பல பறவைகளின் விஷயத்தில், பறவையின் பாடல் மரபுவழியாய் வருவதாகவே தோன்றுகிறது. ஒரு பறவை தன்னுடைய சொந்த இனப் பாடலை ஒருபோதும் கற்கவில்லையென்றாலும், வெறுமனே மற்ற வகை பறவையின் பாட்டைப் பாவனை செய்து பாடுவதில்லை. தன்னினப் பாடலின் ஒரு மங்கலான மாதிரிப்படிவம் பறவையின் மூளையில் பதிந்திருக்கிறது. ஆகவே அது தான் கேட்பதை ஆராய்ந்து பார்த்துத் தன்னுள் இருக்கும் மாதிரிப்படிவத்திற்கு நெருங்கி ஒத்திருக்கும் ஒலியையே பாவனை செய்ய முடிகிறது என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
என்னே தனிச்சிறப்புள்ள மூளைகளை அவை கொண்டிருக்கின்றன! பாடும் பறவைகளின் மூளைகள் அதன் செயல்களுக்கு ஏற்றாற்போல் பிரிக்கப்பட்டிருக்கிறது என்று வியப்பூட்டும்வகையில் கண்டுபிடித்தார் விஞ்ஞானி ஃபெர்னான்டோ நடபோம். அதாவது அது தனக்குரிய குறிப்பிட்ட வேலைகளைக் கொண்ட வலது மற்றும் இடது பக்கங்களாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. பாடல் கற்றுக்கொள்ளும் திறமை பறவையின் மூளையில் ஒரு விசேஷித்த பகுதிக்கு உரியதாக இருக்கிறது என்று அவர் கண்டுபிடித்தார். வளர்ந்துவரும் ஆண் கேனரி பறவைகளில், இந்த விசேஷித்த பகுதி, நெருங்கிக்கொண்டிருக்கும் இணைசேர் பருவத்திற்கான புதிய ராகங்களைக் கற்கும் தேவைக்கேற்ப சுருங்கி விரிகிறது. இந்தக் கேனரி பறவைகள் வாழ்க்கையின் மிக இளம்பருவத்திலேயே பாட முயற்சிக்கின்றன. இருப்பினும் பாடலின் இந்த ஆசான்களும்கூட எட்டு அல்லது ஒன்பது மாத வயதை அடையும்வரை இசைத்திறத்தின் தனிச்சிறப்பை அடைவதில்லை.
மற்றப் பாடும் பறவைகள் ஒரு பாட்டின் பொருளில் வித்தியாசங்களை உண்டுபண்ணுவதில் விசேஷ திறமையை வளர்க்கின்றன. இதை ஏற்கெனவே மற்றப் பறவைகளால் உருவாக்கப்பட்ட பாடலை விவரிப்பதனால் அல்லது அப்பாடலின் தனிக்குரல் இசைகளை அல்லது ராகங்களை மாற்றுவதனால் அவ்வாறு செய்கின்றன. பாவனை செய்ய, முக்கியமாக மனித குரல்களைப் பாவனை செய்ய அல்லது மனிதனைப் போல் “பேச” தங்களுடைய திறமைகளை உபயோகிக்கும் அத்தகைய பறவைகள் வெகுகாலமாகவே நமக்குக் கிளர்ச்சியூட்டும் ஒன்றாக இருந்துவந்திருக்கின்றன. பறவை உலகில் பாவனை செய்து பாடும் பறவைகளில் ஆஸ்திரேலியாவின் யாழ்வடிவத் தோகையையுடைய பறவை (lyrebird), ஐரோப்பாவின் சதுப்புநில உவாப்ளர் (marsh warbler), மற்றும் ஸ்டார்லிங் பறவை (starling), வட அமெரிக்காவின் மஞ்சள்நிற மார்புப் பகுதியையுடைய பேசும் பறவை (yellow-breasted chat) மற்றும் நையாண்டி பறவை (mockingbird) போன்றவையும் உள்ளடங்கும். இறுதியில் கூறப்பட்ட பறவை தனது இசைத் தொகுதியில் தவளையை அல்லது சிள் வண்டைப் போன்ற பாவனையும் உட்பட, டஜன் கணக்கான பாட்டுகளைக் கொண்டிருக்கலாம். பறவையுலகின் நன்கு அறியப்பட்ட பழைய பாட்டுகளிலிருந்து எடுக்கப்பட்ட துணுக்குகளின் கதம்பத்தை நையாண்டி பறவை சந்தோஷமாகப் பாடுவதைக் கேட்பது உண்மையிலேயே ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது.
சிறகுள்ள இந்தப் படைப்புகள் தங்களுடைய இனிமையான ராகங்களைப் பாடும்போது, நீங்கள் கேட்பதுமட்டுமல்ல ஆனால் போற்றுதலோடு உற்றுக்கேட்கவும் முடியும். நாளைய நிகழ்ச்சி அதிகாலையில் துவங்கும். அதை நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்களா?(g93 6/22)
[பக்கம் 19-ன் பெட்டி]
குரலின் பழக்கப்பட்ட ஒரு தனிப்பண்பு
அநேக பாடும் த்ரஷ் பறவைகளின் பாடல்களில் ஒன்றில் குரலின் பழக்கப்பட்ட ஒரு தனிப்பண்பை பிரிட்டனில் உள்ள விஞ்ஞானி ஒருவர் கவனித்திருக்கிறார். அந்தப் பாட்டை அவர் பதிவுசெய்துவைத்து அதை மின்னணுக்களின் உதவியால் ஆராய்ந்து பார்த்திருக்கிறார். அவருக்கே ஆச்சரியமுண்டாகுமளவிற்கு, அது பிரிட்டனின் தொலைபேசி நிறுவனத்தால் வழங்கப்பட்டு அநேக வீடுகளில் உபயோகிக்கப்பட்டுவந்த நவீன தொலைபேசியின் ஒலிக்கு மிகவும் ஒத்திருந்தது. தெளிவாகவே, பாடும் பறவைகள் அந்த ஒலியைக் கேட்டுக் கற்றுக்கொண்டு, அதைத் தங்களுடைய இசைத் தொகுதியில் சேர்த்துக்கொண்டன. பாடும் இந்தத் த்ரஷ் பறவைகள், தங்கள் பாட்டினால் சந்தேகப்படாத சில பிரிட்டிஷ் ஆட்களைத் தங்கள் தொலைபேசியை எடுக்க விரையும்படி செய்திருக்கலாம்.