பைபிளின் கருத்து
நாம் நேர்ந்துகொண்டவற்றை நிறைவேற்றவேண்டுமா?
மற்றெல்லாவகையிலும் சந்தோஷமாய் இருந்த திருமணமான ஒரு தம்பதி கடுந்துயரளிக்கும் ஒரு பிரச்னையை எதிர்ப்படுகின்றனர். ஆண்டுகட்குமுன், தொல்லை கொடுக்கும் ஒரு குழப்பமான குடும்ப இக்கட்டில் அவர்கள் ஆழ சிக்குண்டிருந்தனர். அப்போது தங்களுடைய தொல்லைகளிலிருந்து கடவுள் அவர்களை விடுவிப்பாரேயானால் தங்களுடைய வருமானத்தில் பத்திலொரு பகுதியை அவருக்கு நன்கொடையாகக் கொடுப்பதாக நேர்ந்துகொண்டனர். இப்பொழுதோ, வயோதிப வயதில் எதிர்பாராத பணப்பிரச்னைகளினால் அழுத்தப்பட்டிருக்கும் அவர்கள், “நேர்ந்துகொண்ட இந்தக் காரியத்தை நாம் கட்டாயமாக நிறைவேற்றியே தீரவேண்டுமா?” என யோசிக்கின்றனர்.
அவர்களுடைய இந்த இக்கட்டான நிலை யோசனையின்றி அவசரப்பட்டுப் பேசுதற்கெதிரான ஞானவானின் ஆலோசனையை அழுத்திக்காட்டுகிறது: “நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம். உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திப்பிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே.”—பிரசங்கி 5:5, 6.
நொண்டிச் சாக்குகள் வேண்டாம்
விளையாட்டுத்தனமான உறுதிமொழிகளும் மழுப்பலான வாக்குறுதிகளும், மனம்போன போக்கில் வாழும் இன்றைய சமுதாயத்தின் நடைமுறைப் பழக்கங்களாகிவிட்டிருக்கின்றன. இருப்பினும் திட்டமிட்டுச் சொல்கிற சாக்குப்போக்குகளைக் கடவுள் நம்பவேண்டுமென்று நாம் எதிர்ப்பார்க்கமுடியாது. வியாபாரிகளுங்கூட அதைவிட நன்கு அறிந்திருக்கின்றனர். இன்டஸ்ட்ரி உவீக் என்ற வியாபார பத்திரிகையின், “வியாபாரத்தில் உண்மைத்தன்மை: ஒரு முரணணியா?” என்ற கட்டுரை இவ்வாறு வருத்தம் தெரிவிக்கிறது: “மக்கள் உண்மை சொல்வார்கள், தங்களுக்கு விருப்பமானதை அல்ல ஆனால் சரியானதைச் செய்வார்கள், தாங்கள் ஒப்புக்கொண்ட பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என்றெல்லாம் இனியும் நாங்கள் அவர்களை நம்புவதில்லை.” “இதோ காசோலை (cheque) இப்போது அஞ்சலில் வருகிறது,” என்பதைப் போன்ற சந்தர்ப்பப் பொய்களைக் கொண்டு ஒருவேளை மனித கடன்காரர்களிடம் காலந்தாழ்த்தலாம். ஆனால் தேவதூதர்கள் ஒருபோதும் ஏமாற்றப்படுவதில்லை.
இது பழிக்கஞ்சாத வட்டிக்கடைக்காரர்கள் பரிதாபமான பலியாட்களிடமிருந்து போக்கிரி கூட்டத்தினரைப் பயன்படுத்தி, அச்சுறுத்தி அதிக வட்டிக் கடனைப் பெறுவதுபோல, நேர்ந்துகொண்டதைக் கட்டாயப்படுத்தி கேட்க கடவுள் தேவதூதர்களை உபயோகிக்கிறார் என்று அர்த்தப்படாது. அதைவிட தேவன் தம்முடைய தூதர்களை, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக [கட்டியெழுப்புகிற] ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளா”யிருக்கும்படி செய்கிறார். (எபிரெயர் 1:14) அவ்வாறாகவே, தேவதூதர்கள் நம்முடைய உண்மையான ஜெபத்திற்குப் பதிலளிப்பதில் ஒரு பங்கை வகிக்கக்கூடும், வகித்தும்வருகிறார்கள்.
இருப்பினும், நம்முடைய ஜெபங்களில் தொடர்ந்து வீண்வாக்குறுதிகளைக் கொடுத்து வருவோமானால், நாம் நியாயமாகவே கடவுளுடைய ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கமுடியுமா? ஞானவான் சொல்கிறார்: “தேவன் [ஓரளவாவது] உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை [சிறிதளவேனும்] அழிப்பானேன்?”—பிரசங்கி 5:6ஆ.
இதன் காரணமாக, பழிவாங்கும் ஒரு தூதனுக்கான பயமல்ல, ஆனால் சாக்குப்போக்குகள் சொல்வதே நாம் நேர்ந்துகொண்டதைச் செய்ய நம்மை அசைவிக்கவேண்டும். அதற்குப்பதிலாக, கடவுளோடுள்ள ஒரு நல்ல உறவுமுறையை நாம் மதித்து, நம்முடைய செயல்மீது கடவுளுடைய ஆசியை நேர்மையாக நாடவேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட தம்பதி மிக அழகாக இதை விவரித்ததுபோல: “கடவுளுக்குமுன் ஒரு சுத்தமான மனச்சாட்சியைக் கொண்டிருந்து, அவருடைய சித்தத்திற்கு இசைய செயல்பட நாங்கள் விரும்புகிறோம்.”
ஒரு நல்ல மனச்சாட்சியைக் கொண்டிருங்கள்
நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் விஷயத்தில் ஒரு நல்ல மனச்சாட்சியைக் கொண்டிருக்க, நாம் நம்மோடுதானே நேர்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். உதாரணமாக: ஒருவர் உங்களுக்கு ஒரு பெரிய தொகையைக் கடன்பட்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் ஏதோவொரு இக்கட்டான நிலை அவருக்கு ஏற்பட்டு உங்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கமுடியாத நிலைமையிலிருக்கிறார். உங்களை எது அதிக சந்தோஷப்படுத்தும்—திருப்பி கொடுக்கமுடியவில்லை என்று முழுத்தொகையையுமே அபகரித்துவிடுவதா, அல்லது தனக்கு முடிந்தளவு சிறியதொகைகளாக, ஒழுங்காக திருப்பிக்கொடுக்க ஏற்பாடு செய்வதா?
இதைப்போலவே, ஒருவருடைய முழுநேரத்தையோ, மற்ற பொருள் வளத்தையோ தகுந்த கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்கு அற்பணிப்பதாக அவசரப்பட்டு நேர்ந்ததை, நிறைவேற்றமுடியாமல் போய்விடுகிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். தற்போதைய சூழ்நிலைகள் அனுமதிப்பதைப்பொறுத்துக் கிட்டத்தட்ட நிறைவேற்றுமளவுக்குச் செய்யவேண்டும் என்ற கடமையுணர்ச்சி இருக்கவேண்டாமா? “கொடுப்பதற்கு உள்ளத்தில் ஆர்வம் இருந்தால்,” நம்மிடம் கொடுப்பதற்கு அதிகமிருந்தாலும் சரி அல்லது குறைவாகவே இருந்தாலும் சரி, “அது ஏற்புடையதாகும்,” என்று பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 8:12, கத்தோலிக்கப் பைபிள்) ஆனால் திருத்தமான பைபிள் அறிவைப் பெறுமுன் ஒருவர் நேர்ந்துகொண்டவற்றைப்பற்றி என்ன?
தவறான அல்லது வேதப்பூர்வமற்ற நேர்த்திக்கடன்கள்
நாம் நேர்ந்துகொண்டது அசுத்தமானது அல்லது ஒழுக்கக்கேடானது என நாம் கற்றுக்கொள்வோமேயானால், அதைக் கையில் பிடித்திருக்கும் நெருப்பைப்போல விட்டுவிடவேண்டும். (2 கொரிந்தியர் 6:16-18) அசுத்தமான நேர்த்திக்கடன்களுக்கு உதாரணங்களாவன:
◻ பாபிலோனிய ‘வானரசி’யைப்போன்ற பொய் தேவர்களுக்கோ, தேவதைகளுக்கோ நேர்ந்துகொண்டது.—எரேமியா 44:23, 25.
◻ அப்போஸ்தலன் பவுலை கொல்லுமளவும் ஒன்றும் புசிப்பதில்லை என்று 40 பேர் எடுத்த சபதத்தைப்போன்ற சட்டவிரோதமான நேர்த்திக்கடன்கள்.—அப்போஸ்தலர் 23:13, 14.
◻ “பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து . . . விவாகம்பண்ணாதிருக்கவும், விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜன பதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடு”வதுபோலுள்ள விசுவாச துரோக நேர்த்திக்கடன்கள்.—1 தீமோத்தேயு 4:1-3.
எனவே, சந்தேகமில்லாமல், சில கடந்தகால நேர்த்திக்கடன்களை வீணானது என நாம் அறிவிக்கவேண்டியிருக்கலாம். ஆனால் வேதப்பூர்வமல்லாத ஒன்றும் உட்படாத நேர்த்திக்கடன்களில் ஏன் சாக்குப்போக்குகளைத் தேடவேண்டும்? நம்முடைய தற்போதைய திருத்தமான அறிவு கடந்தகால நேர்த்திக்கடன்களுக்கு எப்போதிருப்பதைப்பார்க்கிலும் அதிக மரியாதை காண்பிக்கும்படி செய்யவேண்டாமா?
உங்களுடைய கடந்தகால மற்றும் எதிர்கால நேர்த்திக்கடன்களை எண்ணிப்பாருங்கள்
நம்முடைய வணக்கத்திற்கு எந்த எதிர்கால நேர்த்திக்கடன்களையும் கூட்டுமுன் நாம் ஆழ்ந்து யோசிக்கவேண்டியதும் தொடர்கிறது. கிறிஸ்தவ வணக்கத்தில் செலவுசெய்யும் ஒருவருடைய நேரத்தை அதிகரிப்பது, அளவுக்குமீறி உண்பதிலிருந்து விலகியிருப்பது போன்ற சில காரியங்களைச் செய்யவோ, செய்யாமலிருக்கவோ ஓர் ஆளை வெறுமனே தூண்டிவிட இந்த நேர்த்திக்கடன்கள் பயன்படுத்தப்படக்கூடாது. உதாரணமாக இயேசு, ஒரு நீதிமன்றத்தில் தேவைப்படுகிறதைப் போன்ற எல்லா உறுதிமொழிகளுக்கும் எதிராக இருந்ததில்லை. ஆனால் அவர் தெளிவாகவே கண்மூடித்தனமான உறுதிமொழிகள் சம்பந்தமாக வரம்பை நிர்ணயித்தார். ஏனென்றால் அவர் இவ்வாறு எச்சரித்தார்: “பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்.” (மத்தேயு 5:33, 34) அவர் ஏன் இந்த நிலைநிற்கையை எடுத்தார்? நேர்த்திக்கடன்கள் முன்பிருந்ததைப்போல் அத்தனை பொருத்தமில்லாததாய் ஆகிவிட்டதா?
பூர்வகால உண்மையுள்ளோர் கொடுத்த உறுதிமொழிகள் பெரும்பாலும் நிபந்தனைக்குட்பட்டவையாய் இருந்தன. யெகோவாவிடம் செய்யும் தங்களுடைய இருதயப்பூர்வமான ஜெபத்தில், ‘இந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவர எனக்கு உதவிசெய்தால், நான் இந்தந்த காரியங்களை உமக்காக செய்வேன்,’ என்று அவர்கள் யெகோவாவுக்கு உறுதிமொழி கொடுக்கிறார்கள். ஆனால் இயேசு சொன்னார்: “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்கிறதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.” தம்முடைய நாளைய உண்மையுள்ளோருக்கு நிபந்தனைக்குட்பட்ட நேர்த்திக்கடன்களைச் சிபாரிசு செய்வதைவிட அவர் அவர்களுக்கு உறுதியளித்தார்: “இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.”—யோவான் 16:23, 24.
இயேசுவின் நாமத்தில் அல்லது அவரது ஸ்தானத்தில் உள்ள இந்த நம்பிக்கை, கடவுளுக்கு “தன் உதடுகளினால் பதறி” ஆணையிட்டு—தான் முயன்றும்—அதை நிறைவேற்றமுடியாததனால் குற்றமுள்ளவர்களாக உணரும் ஆட்களுக்கு ஆறுதல் அளிக்கவும்வேண்டும். (லேவியராகமம் 5:4-6) எனவே நம்முடைய கடந்தகால நேர்த்திக்கடன்களை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளாமல், நாம் இயேசுவின் நாமத்தில் ஜெபம் செய்வதுமட்டுமல்லாமல், நம்முடைய பாவங்களுக்காக இயேசுவின் கிருபாதார பலியைப் பிரயோகிக்க கடவுளை வேண்டிக்கொண்டு, இயேசுவின் நாமத்தில் மன்னிப்பும் கேட்கலாம். இவ்வாறு நாம் “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட [சுத்திகரிக்கப்பட்ட] இருதயமுள்ளவர்களாய் . . . விசுவாசத்தின் பூரண நிச்சயத்”தைப் பெற்றுக்கொள்ளலாம்.—எபிரெயர் 10:21, 22. (g93 4/8)