இளைஞர் கேட்கின்றனர்
இவ்வளவு அதிக வீட்டுப்பாடத்தைப்பற்றி நான் என்ன செய்யமுடியும்?
இளைஞர் மத்தியில் உள்ள அழுத்தங்களுக்கான மிகப் பொதுவான காரணங்களில் “அளவுக்கதிகமான பள்ளிப்பாடமும்” ஒன்றாகக் குறிக்கப்பட்டது
“நீங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்படவில்லை யென்றால், அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதில் அதிக நேரத்தை இழக்கிறீர்கள்”
‘எங்களுக்குப் போதுமான நேரம் இல்லை!’ இவ்வாறு உயர்நிலைப் பள்ளி மாணவர் தொகுதி ஒன்று முறையிட்டது. இப்பிரச்னைக்குக் காரணம்? பள்ளி மற்றும் வீட்டுப்பாடத்தின் வற்புறுத்துதல்கள்தான். “என்னுடைய பள்ளி காலை 8:00 மணிக்குத் தொடங்கி மாலை 5:30-க்கு முடிகிறது. நான் வீட்டுக்கு வரும்போது, 6:30 மணி. மிகக் கடினமாக இருக்கிறது. பள்ளியில் இருப்பது ஒரு சொகுசான வாழ்க்கை என்பதாக பெற்றோர் கருதுகின்றனர். பள்ளியிலிருப்பது அழுத்தம் நிறைந்ததாயும், சோர்வடையச் செய்வதாயும் இருக்கும், பின்னர் வீடு வந்துசேரும்போது வீட்டுப்பாடம் இருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை,” என்பதாக இளம் வெரோனிக் கூறுகிறாள். பதினேழு வயதுடைய ஸான்ட்ரின் மேலும் கூறுகிறான்: “வீட்டுப்பாடத்திற்காக ஒவ்வொரு இரவிலும் இரண்டிலிருந்து மூன்று மணிநேரமும், வார இறுதி நாட்களையும் நான் செலவிடுகிறேன்.”
ஐரோப்பாவிலேயே ஒரு நாளில் அதிக நேரம் பள்ளியில் செலவிடும் மாணவர்களைக் கொண்ட பிரான்ஸில் வெரோனிக்கும் ஸான்ட்ரினும் வாழ்கின்றனர். இதேபோல அநேக நாடுகளில் உள்ள மாணாக்கர்கள் தங்களுடைய நேரத்திற்கான எல்லா வற்புறுத்தல்களினால், அழுத்தப்பட்டவர்களாயும், ஏமாற்றமடைந்தவர்களாயும், சமாளிக்கமுடியாதவர்களாயும் உணருகின்றனர். இளைஞர் மத்தியில் உள்ள அழுத்தங்களுக்கான மிகப் பொதுவான காரணங்களில் “அளவுக்கதிகமான பள்ளிப்பாடமும்” ஒன்றாகக் குறிக்கப்பட்டது.
உலகின் பெரும்பாலான பகுதிகளில் வேலை கிடைப்பது எப்போதிருந்ததைவிட கடினமாக இருக்கிறது. ஆகவே அநேக இளைஞர் வேலைபார்க்கும் உலகில் ஒரு நல்ல கல்வி பெறுவதைத் தங்கள் எதிர்காலத்திற்கு இன்றியமையாததாகக் காண்கின்றனர். உயர்நிலைப் பள்ளி மாணவி வியோலேன் கூறுகிறதுபோல: “ஒரு போதிய அளவு ஊதியமுடைய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளைப் பெறுவது மிகக் கடினமாக ஆகிவிட்டிருக்கிறது. இதன் காரணமாக பிள்ளைகள் ஒரே ஒரு காரியம் மட்டும் செய்யமுடியும் என்பதாக உணர்கின்றனர்—படித்தல்!”
நேரம் போதவில்லையா?
எனினும், பள்ளியிலே நன்றாகப் படிப்பவர்கள், அது அதிக சமயத்தையும் சக்தியையும் தேவைப்படுத்துகிறது என்பதை அறிந்திருக்கின்றனர். நீங்கள் ஒரு கிறிஸ்தவ இளைஞராக இருந்தால், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராவது, பைபிளைப் படிப்பது, உங்கள் விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுதல் போன்ற உங்கள் சமயத்திற்கான கூடுதல் தேவைகளையும் கொண்டிருக்கிறீர்கள். (யோவான் 17:3; ரோமர் 10:10; எபிரெயர் 10:24, 25) “நகைக்க ஒரு காலமுண்டு” மற்றும் சந்தோஷமான நேரத்தைக் கொண்டிருக்கவும் ஒரு காலமுண்டு என்று பைபிள் மேலும் கூறுகிறது. (பிரசங்கி 3:1, 4; 11:9) மற்ற பெரும்பாலான இளைஞரைப்போல, பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுநேரத்தைக் கொண்டிருக்க சிறிது நேரத்தையாவது கொண்டிருக்கவேண்டும் என்று ஒருவேளை நீங்களும் விரும்பலாம். ஆனால் உங்களுடைய பள்ளிப்பாடமோ நீங்கள் செய்துமுடிக்கவேண்டிய காரியங்களைச் செய்ய குறைந்த நேரத்தையே—நீங்கள் செய்ய விரும்பிய காரியங்களைச் செய்ய மிகக் குறைந்த நேரத்தையே—அனுமதிப்பதாகத் தோன்றலாம்.
இருப்பினும் நேரமின்மை மட்டுமே அடிக்கடி பிரச்னையாக இருப்பது கிடையாது. தங்களுடைய “நேரத்தைச் சரியாக உபயோகிக்காததும்,” “ஒழுங்கமைக்காததும்” உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏன் கல்வி பிரச்னையைக் கொண்டிருந்தனர் என்பதற்கான முக்கிய காரணங்களில் இரண்டாகும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி வெளிப்படுத்திற்று. ஆலிவ்யே என்ற ஓர் இளைஞன் கண்டுபிடித்தபடி, சரியான சொந்த ஒழுங்கமைத்தல் இல்லாதிருப்பது மதிப்பெண்களைவிட அதிகத்தைப் பாதிக்கும். அவன் சொல்கிறான்: “நீங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்படவில்லையென்றால், அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதில் அதிக நேரத்தை இழக்கிறீர்கள்.” அப்படியானால், உங்களையே நீங்கள் எவ்வாறு ஒழுங்கமைத்துக்கொள்ளமுடியும்?
பள்ளிப்பாடத்தைப்பற்றிய ஒரு சமமான நோக்குநிலை
முதலாவது, உங்களுடைய பள்ளிப்பாடத்தைத் தகுந்த இடத்தில் வைக்கவேண்டும். ‘அதிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்,’ என்று பைபிள் நமக்குக் கூறுகிறது. (பிலிப்பியர் 1:10, NW) இதைப்பற்றி நினைத்துப்பார்க்கையில், உங்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான காரியம் உண்மையில் எதுவாக இருக்கவேண்டும்? அது உங்களுடைய ஆவிக்குரிய கடமைகளல்லவா? மொத்தத்தில், இயேசு தம்முடைய சீஷர்களுக்கு இவ்வாறு சொன்னார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.” (மத்தேயு 6:33) அதன் அர்த்தம் கிறிஸ்தவக் கூட்டங்கள், ஜெபம், படிப்பு, மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கும் வேலை போன்றவற்றிற்கு முதலிடம் கொடுப்பதாகும்.
அப்படியானால், பள்ளிப்படிப்பு முக்கியமற்றது என்று இது அர்த்தப்படுகிறதா? இல்லவே இல்லை. ஆனால் ஒரு கிறிஸ்தவனாக, நீங்கள் கல்வியை நாடுவதன் நோக்கம் ஏதோவொரு உலகப்பிரகாரமான வேலைக்கு உங்களைத் தகுதியாக்கிக்கொள்வதாக இருக்கக்கூடாது. அதைவிட, கடவுளுடைய ஊழியனாக உங்கள் வாழ்க்கைப்பணியில் உபயோகமுள்ளதாய் இருப்பதாக நிரூபிக்கும் திறமைகளைக் கற்றுக்கொள்வதாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் உங்களை, ஒருவேளை ஒரு நாள் குடும்பத்தைக்கூட கவனித்துக்கொள்ளும்படி, ஒரு வேலையைப் பெறுவதற்கு உங்களையே தயார் செய்துகொள்கிறீர்கள். (1 தெசலோனிக்கேயர் 4:11, 12; 1 தீமோத்தேயு 5:8) இதை அறிந்திருப்பது நீங்கள் பள்ளியில் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு முயற்சிக்க உங்களுக்கு உதவிசெய்யவேண்டும். அதே சமயம், ஆவிக்குரியவகையில் உறுதியானவர்களாக இருப்பதற்கு நியாயமான முயற்சிகளை எடுக்கவேண்டும்.
ஆவிக்குரிய கடமை, அனுதின வீட்டுவேலைகள், பொழுதுபோக்கு, மற்றும் பள்ளிப்படிப்பு போன்றவற்றிற்காக “காலத்தை வாங்குவது” ஓர் உண்மையான சவாலாக இருக்கலாம், ஆனால் அதைச் செய்யமுடியும்.—எபேசியர் 5:15, 16, NW.
ஒரு வழக்கமுறையை ஸ்தாபித்தலின் மதிப்பு
காலத்தை வாங்குவதற்கான ஒரு வழி நீங்கள் படிக்கும்விதத்தில் மிகத் திறம்பட்டவர்களாக ஆவது. இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தின் 18-ம் அதிகாரம் உபயோகமுள்ள அநேக ஆலோசனைகளைக் கொடுக்கிறது.a உதாரணமாக, பள்ளிப்படிப்புக்கான ஓர் அட்டவணையை உருவாக்க அல்லது ஒரு வழக்கமுறையை ஏற்படுத்த நீங்கள் முயற்சித்ததுண்டா?—பிலிப்பியர் 3:16-ஐ ஒப்பிடவும்.
“சந்தேகமின்றி, படிப்பதில் மிகப் பொதுவாகக் கடினமாக இருப்பது வெறுமனே ஒழுங்கான ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்தோடு செய்யவேண்டிய வேலையைத் தொடங்கத் தவறுவதாகும்,” என்று படிப்பதெப்படி (How to Study) என்ற புத்தகத்தில் ஹேரி மேடக்ஸ் எழுதுகிறார். உங்களைப்பற்றியதென்ன? உங்களுக்கு வேலை செய்யும் மனநிலை வரும்வரை அல்லது செய்வதற்கு வசதியாகத் தோன்றும் நேரம் வரும்வரை நீங்கள் வேலை செய்வதைத் தள்ளி வைக்கிறீர்களா? “காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்,” என்று பிரசங்கி 11:4 எச்சரிக்கிறது.
ஹேரி மேடக்ஸ் மேலும் குறிப்பிடுகிறார்: “சிறிது சிறிதாக பெருமளவு நேரத்தை வீணடிப்பது மிகவும் எளிது. ஓர் அட்டவணையை உங்கள்மீது சுமத்தி கட்டாயப்படுத்தி பின்பற்றவில்லையானால், படிக்கவேண்டிய நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பது, பத்திரிகையைப் படிப்பது, . . . அல்லது பலவீனமான மாணவர்கள் படிப்பதைவிட மனமுவந்து உடனே செய்யும் வேறு அநேகக் காரியங்களைச் செய்வதில் நேரம் செலவழிக்க ஒருவேளை அதிக வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் ஒரு கால அட்டவணையைக் கொண்டிருந்து அதைத் தவறாமல் கடைப்பிடித்தால், அது மீறக்கூடாத ஒரு சட்டத்திற்கு இருக்கும் அனைத்து வல்லமையும் அதற்கு இருக்கும். காலப்போக்கில் முயற்சியே இல்லாமல்கூட அதைப் பின்பற்றமுடியும், மேலும் அது உங்களுடைய வாழ்க்கையின் ஓர் இயற்கை பாகமாகக் கருத ஆரம்பிக்கிறீர்கள்.”
உங்கள் பள்ளிப்பாடங்களை ஒரு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சிட்சிக்கப்பட்ட முறையில் கைக்கொள்வீர்களானால், உங்களுக்கு அதிக நேரம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உங்களுடைய பாகத்தில் நன்கு திட்டமிடுதல், உங்களுடைய பள்ளிப்பாடங்களை முடிப்பதற்கும், சபை கூட்டங்களில் ஆஜராயிருத்தல் போன்ற உங்களுடைய கிறிஸ்தவ கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இடையேயுள்ள முரண்பாடுகளைத் தவிர்க்க உங்களுக்கு உதவிசெய்யும்.
உங்கள் நேரத்தை ஒழுங்கமையுங்கள்!
அனுதின வீட்டுவேலைகள் போன்ற நீங்கள் செய்யவேண்டிய, செய்ய விரும்புகிற மற்ற வேலைகளைப்பற்றியதென்ன? இதிலுங்கூட ஒழுங்கமைத்தலே திறவுகோலாக இருக்கிறது. கீழ்க்கண்ட ஆலோசனைகளைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்:
செய்யவேண்டிய வேலைகளின் ஒரு பட்டியலை வைத்திருங்கள். நேர-நிர்வாக ஆலோசகர் ஸ்டெஃப்னி உவின்ஸ்டன், ஒரு பாக்கெட் அளவு குறிப்பேட்டை எல்லா நேரங்களிலும் உங்களோடு வைத்துக்கொண்டுசெல்வதைச் சிபாரிசு செய்கிறார். “ஒவ்வொரு எண்ணத்தையும், கொடுக்கப்பட்ட பள்ளிவேலையையும், தொலைபேசி உரையாடலையும், திட்டத்தையும், கற்க வேண்டிய பாடத்தையும், அல்லது பயணத்திட்டத்தையும்—சிறியதோ பெரியதோ, சாதாரணமானதோ முக்கியமானதோ—அவ்வப்போது, தோன்றுகையில் குறித்துவைக்க அதனை உபயோகப்படுத்துங்கள்.” முதல் பார்வையில், உங்கள் பட்டியல் கையாளமுடியாத அளவு பெரியதாய்த் தோன்றலாம். ஆனால் கீழ்க்கண்ட ஆலோசனைகளை உபயோகித்து, அதை ஒவ்வொன்றாய்க் குறைத்து, கையாளமுடிந்த அளவுக்குக் கொண்டுவரலாம்.
காரியங்களை முதல் முக்கியத்துவ முறையில் வரிசைப்படுத்துங்கள். உண்மையிலேயே செய்யப்படவேண்டிய காரியங்களின்பேரில் நீங்கள் கவனம் செலுத்த இது உதவக்கூடும். அதேசமயம், காத்திருந்து செய்யப்படக்கூடிய அல்லது செய்வதற்கு நேரமில்லாத காரியங்களை நீங்கள் அதிலிருந்து நீக்கிவிடலாம்.
ஒரு கால அட்டவணையைத் தயாரியுங்கள். ஆம், உங்களுடைய பட்டியலை ஒரு செயல் திட்டமாக (plan of action)—ஓர் எழுதப்பட்ட கால அட்டவணையாக—மாற்றுங்கள். ஒரு சிறிய பாக்கெட் நாட்காட்டி, அல்லது நாட்குறிப்பேடு இவ்விஷயத்தில் உங்களுக்கு ஒரு நல்ல உதவியாக இருக்கலாம். உங்கள் சுயாதீனத்தைக் கட்டுப்படுத்துவதைவிட, ஒரு நல்ல சமநிலையான-கால அட்டவணை உங்கள் நேரத்தின்மீது நல்ல கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க உதவிசெய்யும்.
நடைமுறையாக செயல்படுங்கள். சோதனை வகையில் காரியங்களைச் செய்து பார்ப்பதன்மூலம் (trial and error) சில காரியங்களைச் செய்ய மிகச் சிறந்த சமயம் எது என்பதைக் கண்டுபிடியுங்கள். உதாரணமாக, உங்களுடைய வீட்டுப்பாடம் செய்யும்வேளைகளை பகல்நேரத்தில் கூடியளவு விரைவில், உங்கள் மனது இன்னும் சுறுசுறுப்பாக இருக்கும்போதே, அட்டவணைப்படுத்துவதை நீங்கள் அனுகூலமாகக் காணலாம்.
இருப்பினும், உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கண நேரத்தையும் திட்டமிடவேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எதிர்பாராமலும், அவ்வப்போது தானாகவும் தோன்றும் காரியங்களுக்கு இடமளிக்கும் வகையில், உங்களுடைய கால அட்டவணையைத் தளர்த்தப்படக்கூடியதாக வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் உங்களுடைய கால அட்டவணையை முடிந்தளவு கைக்கொள்ளுங்கள். குறிப்பு: ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்துமுடிக்க உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தைவிட அதிக நேரத்தை மதிப்பிடுவது, வழக்கமாகவே மிகச் சிறந்ததாக இருக்கிறது. நீங்கள் முன்னதாகவே செய்துமுடித்தால் எப்போதுவேண்டுமானாலும் மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.
உங்களுடைய சொந்த கெடுவை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். சில காரியங்களைச் செய்துமுடிக்க கடைசி நிமிடம் வரை காத்திருக்கும் மனப்போக்கைத் தவிர்க்க இது உங்களுக்கு உதவிசெய்கிறது. ஒரு பள்ளி திட்டவேலையைக் கொண்டிருப்பீர்களானால், அதைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்கு வெகு முன்னதாகவே நீங்கள் முடிக்கவேண்டிய ஒரு கெடுதேதியை நிர்ணயிக்க முயற்சிசெய்யுங்கள்.
உங்கள் கால அட்டவணையைக் கைக்கொள்ள உங்களையே சிட்சித்துக்கொள்ளுங்கள். இறுதிக்கட்டத் தேர்வுகளுக்காக வீட்டில் தங்கி படிக்கவேண்டிய சமயத்தில், ஒரு நண்பரின் வீட்டிற்குச் செல்வதற்குப் பலமான ஆசை ஏற்படலாம். உங்களுடைய படிப்பில் சிறுக விதைப்பீர்களேயானால், பின்னர் மதிப்பெண்களையும் சிறுகவே அறுப்பீர்கள். (2 கொரிந்தியர் 9:6-ஐ ஒப்பிடவும்.) மேலும், உங்களுடைய வேலையை முடித்துவிட்டீர்களானால் உங்களுடைய ஓய்வுநேரத்தை வழக்கமாகவே அதிகம் அனுபவித்து மகிழ்வீர்கள். உதவியாக இருக்கும் நியமம் என்னவென்றால், முக்கிய காரியங்கள் முதலில், பொழுதுபோக்குக் காரியங்கள் பிறகு.
கால அட்டவணையிடுதல், உங்களையே ஒழுங்கமைத்தல் போன்றவை, நேரம், பொறுமை, கணிசமான சுயசிட்சை போன்றவற்றைத் தேவைப்படுத்தும். ஆனால் எல்லாக் காரியங்களிலும் தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்ளும்படி கிறிஸ்தவர்கள் சொல்லப்படுகிறார்கள். (1 கொரிந்தியர் 9:25) ஒரு கால அட்டவணையைக் கைக்கொள்ள கற்றுக்கொள்வது, இந்த நியமத்தை அப்பியாசிப்பதில் நல்ல பயிற்சியாக இருக்கிறது. அதனுடைய விளைவுகளோ, காரியங்களைச் செய்துமுடித்ததன் திருப்தி, உங்கள் வாழ்க்கையின்மீது அதிகக் கட்டுப்பாடு, நீங்கள் செய்ய விரும்பிய மற்றும் செய்யவேண்டிய காரியங்களைச் செய்வதற்கான அதிக நேரம் போன்றவையாக இருக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அன்ட் டிராக்ட் சொஸையிட்டி வெளியிட்டது.
[பக்கம் 15-ன் படம்]
ஒரு படிப்புக் கால அட்டவணையை ஸ்தாபித்து அதைக் கைக்கொள்ளுங்கள்