வன்முறை குடும்பத்தைப் பாதிக்கும்போது
“மனித வன்முறை—ஓர் அறை அல்லது ஒரு தள்ளு, ஒரு கத்திக்குத்து அல்லது ஒரு துப்பாக்கிச்சூடு இவற்றில் எதுவானாலும் சரி—நம்முடைய சமுதாயத்தில் வேறு எங்கு நடப்பதைப் பார்க்கிலும் குடும்ப வட்டாரத்துக்குள் அடிக்கடி நடக்கிறது.”—பிஹைன்ட் க்ளோஸ்ட் டோர்ஸ்.
அமெரிக்காவில் எந்தத் தெருவில் வேண்டுமானாலும் நடந்து செல்லுங்கள். இந்த வருடத்தில் ஒருமுறையேனும் ஒவ்வொரு இரண்டாவது வீட்டிலும் ஏதாவது ஒரு வடிவில் குடும்பத்தில் வன்முறை நடக்கும். மேலும் 4 வீடுகளில் ஒன்றில், அது அடிக்கடி நடைபெறும். எதிர்பார்ப்பதற்கு நேர்மாறாக, இரவில் தெருக்களில் நடக்கவே பயப்படுகிற அநேகர், வீட்டில் அதைவிட ஆபத்தில் இருக்கின்றனர்.
ஆனால் குடும்பத்தில் வன்முறை அமெரிக்காவில் மட்டும் நடைபெறும் சம்பவமல்ல. உலகமுழுவதும் அது நடைபெறுகிறது. உதாரணமாக, டென்மார்க்கில் நடைபெறும் 3 கொலைகளில் 2 கொலைகள் குடும்பத்திற்குள் சம்பவிக்கின்றன. அந்தந்த நாட்டைப்பொருத்து, நடைபெறும் எல்லா கொலைகளிலும் 22 முதல் 63 சதவீதம் வரை குடும்பத்திற்குள் சம்பவிக்கின்றன என்பதாக ஆப்பிரிக்காவில் நடத்திய ஆராய்ச்சி காண்பிக்கிறது. மேலும் லத்தீன் அமெரிக்காவில் அநேக ஆட்கள், குறிப்பாக பெண்கள், இழிவுபடுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, அல்லது மூர்க்கர்களினால் கொல்லப்படுகின்றனர்.
கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் நூறு பெண்கள் அவர்களுடைய கணவன்மார்களாலோ திருமணமாகாமல் ஒருமித்துவாழும் துணைவர்களாலோ கொல்லப்படுகின்றனர். கனடாவைப்போல் கிட்டத்தட்ட பத்து மடங்கு ஜனத்தொகையுள்ள ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு வருடமும் சுமார் 4,000 பெண்கள் துர்ப்பிரயோகிக்கும் கணவன்மார்களாலோ காதலர்களாலோ கொல்லப்படுகின்றனர். கூடுதலாக, ஒவ்வொரு வருடமும் சுமார் 2,000 குழந்தைகள் அவர்களுடைய பெற்றோராலும், அதே எண்ணிக்கையுள்ள பெற்றோர் அவர்களுடைய குழந்தைகளாலும் கொல்லப்படுகின்றனர்.
இவ்வாறு, உலகமுழுவதும், கணவன்மார் மனைவிமாரைத் தாக்குகின்றனர், மனைவிமார் கணவன்மாரை அடிக்கின்றனர், பெற்றோர் குழந்தைகளை அடிக்கின்றனர், குழந்தைகள் பெற்றோரைத் தாக்குகின்றனர் மற்றும் குழந்தைகள் ஒருவருக்கொருவர் வன்முறையாக நடந்துகொள்கின்றனர். குடும்பங்கள் சண்டையிடும்போது (When Families Fight) என்ற புத்தகம் இவ்வாறு உறுதிப்படுத்துகிறது: “வயதுவந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அனுபவிக்கும் பெரும்பாலான கோபமும் வன்முறையும் ஒரு ரத்த உறவினரால் காண்பிக்கப்படுவதோ ரத்த உறவினரிடத்தில் காண்பிப்பதோவாகும். மற்றும் கோபம் வேறு எந்த உறவில் அனுபவிப்பதைவிட கடுமையாயிருக்கிறது.”
குடும்பம் யுத்தத்தில்
துணைவர் துர்ப்பிரயோகம்: மிக அடிக்கடி, கணவன்மார் திருமண உரிமத்தைத் தங்களின் மனைவிமாரை அடிப்பதற்கான உரிமம் என்பதாகக் கருதுகின்றனர். பெண்கள் ஆண்களை அடித்தாலும், அதனால் வரக்கூடிய கேடு, வழக்கமாகவே ஆண்கள் தங்கள் துணையைத் தாக்கும்போது விளைவிப்பதைப்போல் மிகுதியாய் இருப்பதில்லை. “அறிக்கை செய்யப்பட்ட [தீவிர] துணைவர் கொடுமைகளில் 95 சதவீதத்திற்குமேல் ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தாக்கியது உட்பட்டிருந்தது,” என்பதாக பேரன்ட்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது.
நியூ யார்க்கின் மாவட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்: “அமெரிக்க சமுதாயத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை தீவிரமாகப் பரவும் அளவில் நிலவியுள்ளது. ஒவ்வொரு வருடமும் 60 லட்சம் பெண்கள் தாக்கப்படுவதாக . . . FBI கணக்கிட்டுள்ளது.” இந்தச் சம்பவங்களின் எண்ணிக்கை நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், பெரும்பாலான நாடுகளில் இல்லையென்றாலும், அநேக நாடுகளில் பெண்கள் ஆண்களால் தாக்கப்படுவது தீவிரமாக பரவிவருகிறது என்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன.
ஐக்கிய மாகாணங்களில், “10 பெண்களில் ஒருவர் தங்களுடைய திருமண வாழ்நாளின்போது எப்போதாவது தங்களுடைய கணவன்மார்களினால் மிகக்கடுமையாக (இடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, கடிக்கப்பட்டு அல்லது மோசமாக) தாக்கப்படுவார்கள்,” என மதிப்பிடப்பட்டுள்ளது. அவ்வளவு கடுமையில்லாத சம்பவங்களையும் உட்படுத்தும்போது, “ஐக்கிய மாகாணங்களில் இரண்டு பெண்களில் ஒருவர் குடும்பத்தில் வன்முறையை அனுபவிப்பார்,” என ஃபேமிலி ரிலேஷன்ஸ் என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது.
உண்மையிலேயே, “கற்பழிப்பு, கொள்ளைக்காரரின் தாக்குதல், மற்றும் வாகன விபத்துக்கள் ஆகிய இவை எல்லாம் ஒன்றுசேர்ந்து உண்டுபண்ணும் காயங்களைவிட மனைவியை அடிப்பது அதிக காயங்களை உண்டுபண்ணுகிறது,” என்பதாக நியூ யார்க்கின் மாவட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார்.
டாக்டர் லாய்ஸ் G. லிவிஸி குறிப்பிடுகிறார்: “பெண்களுக்கெதிரான வன்முறையும் குடும்பத்திற்குள் வன்முறையும் சர்வசாதாரணமாகிவிட்டது என்பதும் . . . கொடுமை செய்பவர்கள் . . . சாதாரண மக்கள் என்பதும் தெளிவாயிருக்கிறது. . . . இது மக்கள்தொகையின் எல்லா வகுப்பினரிடையேயும் இனத்தவரிடையேயும் ஒரு வினைமையான பிரச்னையாய் இருக்கிறது.”
தன்மதிப்புக் குறைவதில் விளைவடையும் வகையில், சிலசமயங்களில் பலியானோர் துர்ப்பிரயோகத்திற்குத் தங்கள்மீதே பழிசுமத்திக்கொள்கின்றனர். பேரன்ட்ஸ் பத்திரிகை இவ்வாறு விவரிக்கிறது: “தன்னம்பிக்கையற்று தன்மீது குறைந்த மதிப்பையே வைத்திருக்கிற பெண் துர்ப்பிரயோகப்படுத்தப்படுவதற்குத் தன்னையே இலக்காக ஆக்கிக்கொள்கிறாள். . . . துர்ப்பிரயோகிக்கப்பட்ட பெண் தன்னலனுக்காக எதையும் திட்டமிட்டு அதை நடப்பிக்க பயப்படுகிறாள்.”
கணவனின் வன்முறை குழந்தைகள்மீது தீங்கான ஒரு பாதிப்பைக்கூட கொண்டிருக்கிறது. மற்றவர்களை மேற்கொள்ள வன்முறையைப் பயன்படுத்தக்கூடும் என்று அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். தங்கள் குழந்தைகள் அவர்கள் நினைத்ததைச் செய்ய “அப்பாவிடம் சொல்லி அடி வாங்கவைப்பேன்,” என்பதைப்போன்ற பயமுறுத்தல்களைக்கூட தங்களுக்கெதிராகப் பயன்படுத்துகின்றனர் என்பதாக சில தாய்மார்கள் அறிக்கை செய்கின்றனர்.
குழந்தை துர்ப்பிரயோகம்: ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான குழந்தைகள் கவலைக்கிடமாக தங்களைக் காயப்படுத்தி, முடமாக்கி, அல்லது கொல்லக்கூடிய கடுமையான சரீர தண்டனையை எதிர்ப்படுகின்றனர். அறிக்கை செய்யப்படுகிற ஒவ்வொரு துர்ப்பிரயோக சம்பவத்திற்கும் 200 சம்பவங்கள் அறிக்கை செய்யப்படுவதில்லை என்று மதிப்பிடப்படுகிறது. “அடிக்கடி குழந்தைகளுக்கு, வீடு தங்குவதற்குப் பேராபத்தான இடமாயிருக்கிறது,” என்பதாக சோஷியாலஜி ஆஃப் மேர்ரேஜ் அன்ட் தி ஃபேமிலி என்ற புத்தகம் அறிக்கை செய்கிறது.
துர்ப்பிரயோகம், ஒரு குழந்தை தனது பிற்கால வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பாதிக்கும், மிகவும் பலம்வாய்ந்த வீட்டுச் செல்வாக்கு என்று பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் E. பேட்ஸ் கூறுகிறார். டாக்டர் சூசன் ஃபார்வர்ட் சொல்கிறார்: “வேறு எந்த வாழ்க்கை நிகழ்ச்சியும் வயதுவந்த பருவத்தில் மக்களின் தன்மதிப்பில் அந்தளவு அழியாத வடு ஏற்படுத்தியதையோ உணர்ச்சி சம்பந்தமான பெருங்கஷ்டங்களுக்கு ஆளாக்கியதையோ நான் பார்த்ததில்லை.” கடினமான சூழ்நிலைகளில் சண்டையிடும் தன்மையின் அடையாளங்களை நான்கு முதல் ஐந்து வயதுவரையுள்ள குழந்தைகளில்கூட கவனிக்கமுடியும். அவர்கள் வளர்ந்துவரும்போது, அப்படிப்பட்ட குழந்தைகள் போதைப்பொருள் துர்ப்பிரயோகம், மதுபான துர்ப்பிரயோகம், குற்றச்செயல் நடத்தை, மனநோய் தொந்தரவு, தாமதித்த வளர்ச்சி போன்றவற்றில் அதிக வீதத்தைக் காட்டுகின்றனர்.
புரிந்துகொள்ளக்கூடியவிதமாகவே, துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட அநேக குழந்தைகள் துர்ப்பிரயோகம் செய்த பெற்றோர்மீதுள்ள கோபத்தை மனதில் இருத்திவைக்கின்றனர். ஆனால் வன்முறையைத் தொடர அனுமதித்ததற்காக துர்ப்பிரயோகம் செய்யாத பெற்றோர்மீதும் அவர்கள் அடிக்கடி கோபமாயிருக்கிறார்கள். ஒரு குழந்தையின் மனதில், துர்ப்பிரயோகத்தைத் தடுக்காத பெற்றோர் உடந்தையாகக் கருதப்படலாம்.
முதியோர் துர்ப்பிரயோகம்: கனடாவின் ஓய்வுபெற்ற முதியோர்களில் கணக்கிடப்பட்ட 15 சதவீதத்தினர் தங்களுடைய வயதுவந்த பிள்ளைகளின் கைகளில் சரீரப்பிரகாரமாகவும் மனச்சம்பந்தமாகவும் துர்ப்பிரயோகத்தை அனுபவிக்கின்றனர். “ஜனத்தொகையின் அதிகம்பேர் முதியோராகி, அவர்களுடைய பிள்ளைகள்மீது பொருளாதார மற்றும் உணர்ச்சிசம்பந்தமான பாரங்கள் வளர்ந்துவரும்போது நிலைமைகள் மோசமாகத்தான் மாறக்கூடும்,” என ஒரு மருத்துவர் முன்னறிவிக்கிறார். இதைப்போன்ற பயங்கள் உலகமுழுவதிலும் உணரப்படுகின்றன.
பெரும்பாலும், முதியவர்கள் துர்ப்பிரயோகத்தை அறிவிக்க தயங்குகின்றனர். அவர்கள் துர்ப்பிரயோகம் செய்பவர்கள் ஆதரவில் இருக்கலாம், இதன் காரணமாக பயங்கரமான சூழ்நிலைமைகளின்கீழ் தொடர்ந்து வாழ்வதைத் தெரிந்துகொள்கின்றனர். தன்னுடைய மகனையும் மருமகளையும் எப்போது அதிகாரங்களிடத்தில் ஒப்படைக்கப்போகிறாள் என்று ஒரு வயதுமுதிர்ந்த பெண்மணியிடம் கேட்டபோது, ஒவ்வொரு தடவையும் ஒரு மாற்றமுமின்றி “அடுத்த முறை” என்பதுதான் அவள் கொடுத்த பதிலாகும். அவள் ஒரு மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்படவேண்டிய அளவுக்கு அவர்கள் அவ்வளவு மோசமாக அவளை அடித்திருந்தனர்.
உடன்பிறந்தோர் துர்ப்பிரயோகம்: இது பரவலாயிருக்கும் குடும்ப வன்முறையின் ஒரு வடிவமாகும். சிலர் “பையன்கள் அப்படித்தான் இருப்பார்கள்,” என்று சொல்லி அற்பமாகக் கருதுகின்றனர். எனினும், ஒரு சுற்றாய்வில் பாதிக்கு மேற்பட்ட உடன்பிறந்தோர், குடும்பத்திலிருந்து வெளியே உள்ளவர்களுக்கெதிராக செலுத்தப்பட்டிருந்தால் குற்றவழக்குத் தொடர்வதற்குப் போதுமான வினைமையுள்ள செயல்களைச் செய்திருந்தனர்.
உடன்பிறந்தோர் துர்ப்பிரயோகம் வயதடைந்த பருவத்தினுள் கொண்டுச்செல்லப்படும் ஒரு மாதிரியைப் போதிக்கிறது என்பதாக அநேகர் எண்ணுகின்றனர். இது தங்கள் பெற்றோரிடையே வன்முறையைக் கவனித்திருந்ததைவிட சிலருக்குத் தங்களுடைய பிற்கால குடும்ப வன்முறைக்குப் பெரிய காரணமாகக்கூட இருக்கலாம்.
அபாயகரமான போர்க்களம்
மற்ற எல்லா குற்றச்செயல் சம்பவங்களையும்விட குடும்ப சச்சரவுகளைக் கையாளுவதற்கு மிகவும் அடிக்கடி காவல்துறையினர் அழைக்கப்பட்டனர் என்று ஒரு சட்ட ஆராய்ச்சியாளர் ஒருமுறை கணக்கிட்டார். மற்ற ஒரு வகையான அழைப்புக்குப் பதிலளித்ததைவிட குடும்ப பிரச்னைகளுக்குப் பிரதிபலித்த காவல்துறையினர் அதிகம் கொல்லப்பட்டனர் என்றும் அவர் வலியுறுத்தினார். “ஒரு கொள்ளையடிக்கும் சம்பவத்திலாவது நேரிடுவதை எதிர்ப்படுவதற்கு நீங்கள் தயாராயிருக்கமுடியும், ஆனால் யாரோ ஒருவருடைய வீட்டில் நுழையுங்கள் . . . என்ன சம்பவிக்குமென்று உங்களுக்குத் தெரியாது,” என்று ஒரு காவல்துறையினர் சொன்னார்.
குடும்பத்தில் வன்முறையைப்பற்றிய ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, போர்க்கால இராணுவத்திற்கடுத்து இருக்கும் மிக வன்முறையான சமூக தொகுதி குடும்பமே என்று அமெரிக்காவிலுள்ள ஓர் ஆராய்ச்சிக்குழு முடிவுக்கு வந்துள்ளது.
குடும்பத்தில் வன்முறையைத் தூண்டுவது எது? அது எப்போதாவது முடிவடையுமா? அது எப்போதாவது நியாயப்படுத்தி காட்டப்படுகிறதா? பின்வரும் கட்டுரை இக்கேள்விகளை ஆய்வுசெய்யும்.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
“அமெரிக்க சமுதாயத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை தீவிரமாகப் பரவும் அளவில் நிலவியுள்ளது.”—ஒரு மாவட்ட வழக்கறிஞர்
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“அடிக்கடி குழந்தைகளுக்கு, வீடு தங்குவதற்குப் பேராபத்தான இடமாயிருக்கிறது.”
—சோஷியாலஜி ஆஃப் மேர்ரேஜ் அன்ட் தி ஃபேமிலி