பைபிளின் கருத்து
எல்லா மதப்பண்டிகைகளும் கடவுளைப் பிரியப்படுத்துகின்றனவா?
உண்மையுள்ள அந்த, 20,000 பேர், நகரின் சதுக்கத்தில் ஒரு விசேஷ பூசையை ஆசரிக்கின்றனர். பூசை முடிந்தவுடன் ஊர்வலம் தொடங்குகிறது. பக்தர்களின் கூட்டம் இப்போது 60,000 பேராக அதிகரிக்கிறது. அவர்கள் எல்லாரும் பிரேஸிலின் பாதுகாப்புப் “புனிதர்” நாஸ்ஸா செனினோரா அபாரசிடா-வின் (Nossa Senhora Aparecida) சிலையைப் பின்பற்றி தெருக்களினூடே மெல்ல நடந்து செல்கின்றனர். மதியவேளையில், புனித யாத்திரிகர்கள் பிரகாசமான வானவேடிக்கைகளைக் காண்பித்ததனால் தேவாலயத்தின் அருகே பலத்த வெடி சப்தங்கள் கேட்கின்றன.
இப்படிப்பட்ட மதப்பண்டிகைகளும் அவற்றின் ஊர்வலங்களும் பல நாடுகளில் பொதுவானவையாய் இருக்கின்றன. ஆனால் ஊர்வலத்தில் கலந்துகொள்ளும்படி அக்கூட்டத்தாரை அசைவிப்பது என்ன? பாரம்பரியமும் தெய்வபக்தியும் கத்தோலிக்கர், புத்தமதத்தினர், மற்றும் வேறு மதப்பிரிவினருக்குள்ள அடிப்படை நோக்கங்களில் இரண்டு. அதுமட்டுமல்லாமல் கடந்தகாலத்தில் இருந்ததுபோல, பொழுதுபோக்கும்கூட ஒரு முக்கிய காரணமாயிருக்கலாம். இடைக்காலங்களில் “பல மதப்பண்டிகைகள் பொழுதுபோக்கை அழுத்திக்காட்டின. அவை மக்கள் தங்கள் அனுதின வாழ்க்கையின் கஷ்டங்களை மறந்துவிட்டிருக்க உதவின” என்பதாக தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா (The World Book Encyclopedia) சொல்கிறது. பெரும்பாலும் இன்றும் இதுவே உண்மையாயிருக்கிறது. உதாரணமாக, பிரேஸிலுள்ள சல்வடோர், தனது மத மற்றும் பிரபல பண்டிகைகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும். இங்கு பண்டிகையாக மாறும் பல கொண்டாட்டங்களிலும் களியாட்டங்களிலும் வழிபாட்டுக்காரியங்கள் மற்றும் இன்பப் பொழுதுபோக்குகள் போன்றவை கலக்கப்படுகின்றன. எனினும், சில மத ஊர்வலங்கள் இன்பக் கொண்டாட்டங்களுக்கென்று இருந்தாலும் மற்றவை உண்மையில் தெய்வ பக்திக்குரியதாயிருக்கின்றன.
“சிலையோடும் பாதிரிகளோடும் சேர்ந்து சிலர் ஒரு கீர்த்தனையைப் பாடிக்கொண்டு போகும்போது, மற்றவர்கள் அமைதியாக அவர்களைப் பின்பற்றினர்,” என்பதாக பிரேஸிலில் எடுத்துக்காட்டான ஓர் ஊர்வலத்தைக் கண்ட ஒரு பார்வையாளர் குறிப்பிடுகிறார். “ஆனால் ஊர்வலத்தில் மேலோங்கியிருந்தது என்னவென்றால், ஒரு சவஅடக்கத்தில் பங்குகொள்வதைப்போன்ற அந்தக் கூட்டத்தின் சீரிய அமைதி அல்லது அதைவிட துக்கமாகும்.” மேலும் பிரேஸிலின் வடபகுதியிலிருந்துவரும் லூசியோ சொல்கிறார்: “நான் ஒரு காலத்தில் செய்ததுபோல, மக்கள் குடும்ப அல்லது பொருளாதார பிரச்னைகளுக்கு ஒரு நிவாரணம் அல்லது பரிகாரத்தை ஊக்கமாகத் தேடுகிறார்கள். ஒரு பாதுகாப்புப் “புனிதருக்கு” காட்டக்கூடிய பக்தி, அநேகமாக உருவத்தை முத்தமிடுதல், ஒருவர் முழங்காலில் படியேறுதல், அல்லது ஒருவரது தலையில் ஒரு கல்லைச் சுமந்துகொண்டு நெடுந்தூரம் நடத்தல் போன்றவற்றை உள்ளடக்குகிறது.”
அந்த விசுவாசத்தில் இல்லாதவர்களுக்கு தானே ஏற்று நிறைவேற்றும் இப்படிப்பட்ட தியாகங்கள் வினோதமாகத் தோன்றலாம். எனினும் அவற்றில் பங்கேற்பவர்கள் தாங்கள் கடவுளைப் பிரியப்படுத்துவதாக உணருகின்றனர். ஆனால் அவர்கள் அவ்வாறு பிரியப்படுத்துகிறார்களா? அப்படிப்பட்ட மதப்பண்டிகைகளும் ஊர்வலங்களும் கடவுளைப் பிரியப்படுத்துகின்றனவா இல்லையா என்பதை அறிந்து கொள்ள பைபிள் நமக்கு உதவி செய்கிறது.
அவை கடவுளின் ஆதரவைக் கொண்டுவருகின்றனவா?
பண்டைய இஸ்ரவேலர் வருடாந்தர மற்றும் காலமுறை பண்டிகைகளை மகிழ்ந்து கொண்டாடினர் என்பதாக வரலாறு நமக்குக் கூறுகிறது. அப்படிப்பட்ட விருந்துகள் யெகோவா தேவனை மகிமைப்படுத்தின. (உபாகமம் 16:14,15) பைபிள் காலத்து விருந்துகளைப்பற்றி, தி இல்லஸ்ட்ரேட்டட் பைபிள் டிக்ஷ்னரி (The Illustrated Bible Dictionary) சொல்கிறது: “வெளிக்காட்டப்பட்ட மகிழ்ச்சி இருதயப்பூர்வமானது. மத பொறுப்புகள் கடவுளிடமிருந்து வந்த பரிசாக கருதப்படும் பொருள்சம்பந்தமான காரியங்களிலிருந்து பெறப்படும் சந்தோஷத்திற்கு முரண்பாடானதல்ல.” மத கொண்டாட்டங்கள் இருந்தபோதிலும், ஆசாரியர்களும் இஸ்ரவேல் மக்களும் அவர்களுடைய ஆவிக்குரிய தன்மையை அசட்டை செய்தனர். (ஏசாயா 1:15-17; மத்தேயு 23:23) எனினும், இப்பொழுது கேள்வி என்னவென்றால், மத ஊர்வலங்கள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தின் பாகமாக இருந்தனவா?
இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட சில யூத பண்டிகைகளை ஆசரித்திருந்தபோதிலும், இயேசுவோ அவருடைய அப்போஸ்தலர்களோ மத ஊர்வலங்களைத் தொடங்கிவைக்கவில்லை. தி என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா சொல்கிறது: “கான்ஸ்டன்டைன் 4-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தைத் தேசத்தின் மதமாக அங்கீகரித்துச் சிறிது காலத்திற்குப் பிறகு ஊர்வலங்கள் நடைமுறையில் வந்ததாக தோன்றுகிறது.” மேலும் தி உவோர்ல்டு புக் என்ஸைக்ளோபீடியா கூறுகிறது: “சர்ச் பண்டிகைகள் [அதனுடைய ஊர்வலங்களோடு] பல புறமத பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றிற்குப் புதிய அர்த்தங்களையும் கொடுத்தன.”
கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட மதப்பண்டிகைகளிலும் ஊர்வலங்களிலும் கலந்துகொள்ளவேண்டுமென்று எந்தக் கடமையுமில்லை. பூர்வீக இஸ்ரவேலர்களிடத்திலிருந்து கடவுளுடைய சட்டம் தேவைப்படுத்திய பண்டிகைகளைப் பற்றி குறிப்பிடும்போது, அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.” (கொலோசெயர் 2:16, 17) கொலோசெயிலிருந்த கிறிஸ்தவர்கள், மோசேயின் நியாயப்பிரமாணத்திலுள்ள பண்டிகைகளைக் கொண்டாடுவதின் அடிப்படையில் கடவுளுக்கு முன்பாகவுள்ள தங்களுடைய நிலைநிற்கையை யாரும் குற்றப்படுத்தக்கூடாதவர்களாயிருந்தனர்.
ஊர்வலங்களைவிட சிறந்தது
சடங்காச்சாரங்களோடு தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையை அடையாளப்படுத்திக்கொள்வது கொலோசெயர் தங்களுடைய விசுவாசத்திலிருந்து பின்வாங்கியதை அர்த்தப்படுத்தும். பவுலின் விவாதமானது, ஏன் சத்தியத்தின் நிழலை மட்டும் பின்பற்றவேண்டும்? உண்மையான சத்தியம் கிறிஸ்துவிலிருக்கிறதே. எனவே, ஒரு தீர்க்கதரிசன நிழலை மட்டும் பின்பற்றுவது, அப்பொருள்கள் குறிப்பிட்டுக் காட்டிய ஆவிக்குரிய மெய்ம்மையை மங்கலாக்குவதாகும். ஏன்? ஏனென்றால், பவுல் சொன்னதுபோல, “அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.” இவ்வாறு, அப்படிப்பட்ட இன்றைய மத ஆசாரங்கள் உண்மை கிறிஸ்தவ வழிபாட்டின் பாகமல்ல.
எனவே, கிறிஸ்தவர்கள், இந்தத் தெய்வீக தொடக்கமுள்ள பழக்கவழக்கங்களையே அனுசரிக்க வேண்டிய தேவையில்லாதிருக்கிறார்கள், மற்றும் கேளிக்கை விருந்துகளையும் உருவங்களைப் பயன்படுத்துவதையும் உட்படுத்தக்கூடிய புறமத தொடக்கமுள்ள பண்டிகைகளை நிச்சயமாகவே தவிர்க்கவேண்டும். (சங்கீதம் 115:4-8) அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது?” (2 கொரிந்தியர் 6:14, 15) அதாவது, நாம் கடவுளைப் பிரியப்படுத்தவேண்டுமானால், நாம் உண்மை வணக்கத்தைப் பொய் வணக்கத்தோடு கலக்கக்கூடாது. கடவுளுடைய சித்தத்தை அசட்டை செய்துகொண்டே எப்படி அவரைப் பிரியப்படுத்தமுடியும்?—மத்தேயு 7:21.
இல்லை, புறமத பண்டிகைகளையும் அவற்றின் ஊர்வலங்களையும் கடவுள் அங்கீகரிப்பதில்லை. உண்மையில், கடவுளுடைய வார்த்தையில் முன்னறிவிக்கப்பட்டபடி, யெகோவாவை கனவீனம் செய்கிற எல்லா பழக்கவழக்கங்களோடும் அவை மறைந்துபோய்விடும். வெளிப்படுத்துதல் 18:21, 22-ல், பொய்மதமும் அதன் பழக்கங்களும் புறமத நகரமாகிய பாபிலோனோடு இணைத்துக்காட்டப்படுகின்றன. அது இவ்வாறு வாசிக்கிறது: “அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும். சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும், நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதில்லை.” பாபிலோனிய மத பண்டிகைகள் கடவுளுக்கு வெறுப்பை உண்டாக்குகின்றன என்று உணர்ந்த பிறகு, நீங்கள் என்ன செய்வீர்கள்?
நீங்கள் ஒரு முக்கியமான இடத்திற்குப் போய்க்கொண்டிருக்கும்போது வழிதவறிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் போகவேண்டிய இடத்திற்குப் பத்திரமாக போய் சேர ஒருவர் அன்புடன் வழிகாட்டுகிறார் என்றால், சரியான வழியைக் கண்டுகொண்டதற்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கமாட்டீர்களா? அதேபோல, மத ஊர்வலங்களைக் கடவுள் எப்படி கருதுகிறார் என்றறிந்த பிறகு, எது அவரைப் பிரியப்படுத்துமென அவருடைய வார்த்தையிலிருந்து ஏன் இன்னும் அதிகத்தைத் தெரிந்துகொள்ளகூடாது? நீங்கள் பைபிளிலிருந்து எதைக் கற்றுக்கொள்கிறீர்களோ அதன்பேரில் செயல்படுவது கடவுளோடு ஒரு நல்ல உறவில் விளைவடையும்—அது மதப்பண்டிகைகளையும் ஊர்வலங்களையும் ஆசரிப்பதைவிட மிகச் சிறந்தது.—யோவான் 17:3. (g92 11/8)