நீங்கள் பாசமுள்ள ஒரு பெற்றோரா?
நீங்கள் உங்கள் குழந்தைகளை நேசிக்கிறீர்களா? அவர்களைப்பற்றி பெருமைப்படுகிறீர்களா? ஒவ்வொரு குழந்தையும் சிறப்புவாய்ந்த, நிகரில்லா, மாற்றீடு செய்ய இயலாத தனிநபர்களென்று உணருகிறீர்களா? அநேக பெற்றோர் அவ்விதம் உணருகின்றனர். ஆனால் நீங்கள் அவ்வாறு உணருகிறீர்களென்று உங்கள் குழந்தைகளிடம் சொல்கிறீர்களா? அவர்கள் ஏதேனும் ஒரு காரியத்தை நல்லமுறையில் செய்யும்போது அவர்களைக் குறிப்பாக போற்றுகிறீர்களா? வேறுவழிகளில்—இதமான விளையாட்டு, நம்பிக்கையூட்டும் தொடுதல், அன்பான அரவணைப்பு போன்றவற்றின்மூலம் நீங்கள் பாசத்தை வெளிக்காட்டுகிறீர்களா?
“ஆனால் நான் காரியங்களைச் செய்யும் விதம் அப்படியல்ல,” என்று சிலர் மறுப்புத் தெரிவிக்கலாம். “என்னுடைய உணர்ச்சியை வெளிப்படையாக காட்டுபவனல்ல நான்.” உண்மைதான், எல்லாருமே உணர்ச்சிகளைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் காட்டும் சுபாவமுடையவரல்ல. எனினும், உங்கள் குழந்தைகளிடத்தில் பாசம் காட்டுவது நீங்கள் இதுவரை உணர்ந்திருப்பதைவிட அதிக முக்கியமானதாகும்.
விஞ்ஞானிகள் குழு ஒன்று 1951-ல் 400 பாலர் பள்ளி குழந்தைகளை வைத்து நடத்திய ஆராய்ச்சி ஒன்றைச் சமீபத்தில் தொடர்ந்தனர். அவர்களால் கண்டுபிடிக்கமுடிந்த 94 ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் காரியங்களைத் தெரிவிக்கும் சில எடுத்துக்காட்டுகளைக் கண்டனர். தி நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளின்படி, பாசமும் அன்பும் உள்ள பெற்றோரைக்கொண்டிருந்த குழந்தைகள், பெரியவர்களான பிறகு வாழ்க்கையில் காரியங்களை நல்லமுறையில் செய்யும் இயல்புடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அடிப்படையாகவே வெற்றிகரமான திருமணவாழ்க்கையை அமைத்துக்கொண்டு, குழந்தைகளை வளர்த்தனர், செய்யும் வேலையை அனுபவித்தனர், மற்றும் நெருக்கமான உறவைக் காத்துக்கொண்டனர். “அவர்கள் மனநிலையில் ஆரோக்கியத்தைக் காட்டினர். தங்களோடும் தங்கள் வாழ்க்கையோடும் ஓர் ஆர்வம் மற்றும் திருப்தியான உணர்வைக் காட்டினர்,” என்பதாக அந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான டாக்டர் கேரல் ஃப்ரான்ஸ் அந்தச் செய்தித்தாளிடம் சொன்னார்.
எதிர்மாறாக, “பாசமற்ற, குழந்தைகளை அசட்டை செய்கின்ற பெற்றோரைக் கொண்டிருந்த குழந்தைகள் தங்களுடைய வேலை, சமூகத்தோடு இசைந்து வாழ்தல், மற்றும் மனநிலையில் ஆரோக்கியம் போன்ற பிற்கால வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும்—மிகக் கடினமான நேரத்தைக்கொண்டிருந்தனர்,” என்பதாக ஃப்ரான்ஸ் கண்டுபிடித்தார். உண்மையிலேயே, பெற்றோர் பாசம் இல்லாதிருத்தல், பெற்றோரின் விவாகரத்து, குடிவெறிப் பழக்கம், அல்லது ஏழ்மை போன்றவற்றைக் காட்டிலும் முடிவில் அதிக கேடு விளைவிக்கக்கூடியதாக இருக்கும் என்று ஆராய்ச்சி குறிப்பிடுகிறது.
உண்மையான பைபிள் மாணாக்கர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கவேண்டியதில்லை. இயேசு குழந்தைகளை எவ்வாறு நடத்தினார் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அவர்களை மதிப்புள்ளவர்களாக கருதினார், தன்னிடமாக சேர்த்துக்கொண்டார், மற்றும் அவர்களுக்கான தன்னிடமாக பாசத்தை வெளிக்காட்டினார். (மாற்கு 10:13-16; லூக்கா 9:46-48; 18:15-17) சந்தேகமின்றி, இந்த விஷயத்தில் அவர் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனாயிருக்கிற தம்முடைய பரலோகப் பிதாவை மட்டுமே பின்பற்றினார். (சங்கீதம் 68:5) யெகோவா பரிபூரண பெற்றோராய் இருக்கிறார்; சந்தோஷகரமாகவே தம்மை நேசிப்பவர்களுக்கு அபூரண பெற்றோரில் என்ன குறைவுபடுகிறதோ அதை ஈடுசெய்கிறார்.—2 கொரிந்தியர் 6:18. (g92 10/22)