எல்லாருக்கும் திருப்தியளிக்கும் ஒரு புதிய உலகம்
நம்புவதற்கு அவ்வளவு கடினமாக இருந்தாலும், உண்மையில் ஒரு புதிய உலகம் அண்மையிலுள்ளது. அது உயிரை ஆதரிப்பதற்கான நம்முடைய பூமியின் ஆற்றல் முழுவதும் அழிக்கப்படுவதற்குமுன் பூமியைக் காப்பாற்ற தகுந்த நேரத்தில் வந்தடையும். இந்தப் புதிய உலகம் மனிதன் தொடர்ந்து வாழ்ந்திருப்பதை அச்சுறுத்தும் எல்லா அபாயங்களையும் நீக்கிப்போடும். அது இதை எவ்வாறு செய்யும்?
உலக நிலைமையின் நெருக்கடி தன்மையைச் சுட்டிக்காட்டிய பிறகு, வரலாற்று ஆசிரியர் ஆர்னல்ட் ஜே. டாய்ன்பீ பல வருடங்களுக்குமுன் கேட்டார்: “காப்பாற்றப்படுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?” தம்முடைய கேள்விக்குப் பதிலளிக்கும்வண்ணம் இவ்வாறு சொன்னார்: “அரசியலில் கூட்டுறவு முறை அரசமைப்புச் சட்டங்களாலான உலக அரசாங்கத்தை நிறுவவேண்டும்.”
எனினும், ஒரு “கூட்டுறவு முறை”யாக இருந்தாலும், வரவிருக்கும் புதிய உலகம் “அரசியலில்” உட்பட்டதாயிராது. அது குடியரசு அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கொள்கையையும் தழுவியதாயிராது. இப்புதிய உலகம் தனது குறிக்கோள்களை நிறைவேற்றியேதீரும், ஏனென்றால் ஒரே அரசாங்கம் மட்டும் அதன்மீது ஆட்சிசெலுத்தும். ஒரு திகைப்பூட்டும் தொடர்வரிசையான செய்கைகளினால், இந்த உலக அரசாங்கம் இன்று மனிதகுலத்தை எதிர்ப்படும் பிரச்னைகளையெல்லாம் ஒழித்துபோடும். எப்படி? இந்தப் பிரச்னைகளுக்கான காரணங்களையும், இவற்றைச் சரிசெய்ய எடுக்கும் முயற்சிகளை அடிக்கடி தோல்வியுறச் செய்யும் தடைகளையும் நீக்குவதன்மூலமே.
உண்மையில், அதை எப்போதாவது எப்படி நிறைவேற்றமுடியும்? ஊழல் நிறைந்தவர்களாகவும், மனிதனின் பிரச்னைகளைத் தீர்க்க திறமையற்றவர்களாகவும் நிரூபித்த அபூர்ண மனிதர்கள் இன்னும் ஆட்சிசெய்துகொண்டிருப்பார்களல்லவா? சரி, தன்னலமின்றி தங்களுடைய பிரஜைகளின் அக்கறைகளை இருதயத்தில்கொண்ட, இந்த உலக அரசாங்கத்தின் பரிபூரண ஆட்சியாளர்கள் இருந்திருந்தால், நிலைமையைக் கற்பனை செய்துபாருங்கள். அப்போது பிரச்னைகள் எவ்வாறு தீர்க்கப்படக்கூடும் என்பதை எண்ணிப்பாருங்கள்.
உடனிகழ்வாக தீர்வுகள்
பரிபூரண ஆட்சியாளர்களைக்கொண்ட ஓர் உலகளாவிய அரசாங்கம் இருக்கும்போது, ஒவ்வொரு நாடும் அதனுடைய குறிப்பிட்ட வடிவிலான அரசாங்கமும் இனி இருப்பதில்லை. ஆட்சி வல்லுநர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், மற்ற அரசியல்வாதிகள் போன்றவர்கள் அநேக தேசங்கள், கோத்திரங்கள், மற்றும் மனித இனங்கள்மீது இனியும் அதிகாரம் செலுத்துவதில்லை. அநேக மாநில, தேசிய தலைநகரங்களும், அதோடுகூட அவற்றின் கட்டிடங்களும் அலுவலகக் குடியிருப்புகளும் இனி தேவைப்படுவதில்லை. அப்படிப்பட்ட பெரிய கட்டிடங்களை அதிகம் செலவு செய்து பேணிப்பராமரிப்பதை இது முடிவுக்குக்கொண்டுவரும். அதேபோல, அதிகாரிகள் கூட்டங்கள், குழுக்கூட்டங்கள், தேசீய மாநாடுகள், உச்சி மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்கான பயணச்செலவுகளும் நிறுத்தப்படும். வீணான அரசாங்க அதிகாரவர்க்கங்களும் அதனுடன் அவற்றின் அநேக உதவியாளர்களும் செயலர்களும் எழுத்தர்களும், அவர்களின் வேலையின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும் சிக்கலான அலுவல்செய்முறைகளினால் ஏற்படும் தாமதமும் கடந்துவிட்டிருக்கும்.
சமாதானம் உண்மையில் அடையக்கூடிய ஒன்றாயிருக்கும், ஏனெனில் பிரிவினையை உண்டுபண்ணுகிற தேசப்பற்று ஒழிக்கப்பட்டு, ஐக்கியப்படுத்தும் ஓர் உலகளாவிய அதிகாரத்தினால் மாற்றீடு செய்யப்பட்டிருக்கும். தரைப்படைகளும், கடற்படைகளும், விமானப்படைகளும் அவற்றின் அனைத்து ஆயுதங்களோடும், உயர்பதவிகளிலிருக்கும் படைத்தலைவர்களாலான குழுக்களோடும், சார்நிலை அலுவலர்களோடும், ஒவ்வொரு நாட்டின் அரசுரிமையைப் பாதுகாக்கவேண்டிய தேவை இனியுமிராது. எந்தவொரு வேவுபார்க்கும் அமைப்பும் இருப்பதில்லை. பரிபூரண ஆட்சியாளர்களைக் கொண்ட ஓர் உலகளாவிய அரசாங்கத்தின்கீழ், ஆயுதங்கள் விற்பனை செய்யக்கூடிய கட்டுப்பாடற்ற சந்தையோ அல்லது கள்ளச் சந்தையோ இராது; வழக்கிற்குட்பட்ட பகுதிகளும் காணப்படாது. பூமியின் அனைத்து மக்களும் பிரிக்கப்படமுடியாத ஒரே சகோதரத்துவத்தில் இருப்பர். ஆகவே, தேசப்பற்று மறைந்துபோகும்.
பரிபூரண ஆட்சியாளர்களைக்கொண்ட ஒரு பிரிக்கப்படாத அரசாங்கத்தின்கீழ் உள்ள மக்களுக்கு ஏற்படுகிற கூடுதலான பலன்களைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். ஆயுத உற்பத்தியாளர்களைப் போன்ற பலம் மிக்க வியாபாரிகள், அரசியல்வாதிகள்மீது எந்த வழியிலும் செல்வாக்குச் செலுத்த முடியாது. எனவே அவர்கள் அந்த நாசம் விளைவிக்கும் பொருட்களைத் தொடர்ந்து உற்பத்திசெய்து விற்கமுடியாது. அதிகாரிகளோடுள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களுடைய வட்டார அக்கறைகளை மட்டும் பாதிக்கக்கூடிய மசோதாக்கள் அல்லது சில சட்டங்களை அமல்படுத்தச்செய்யும் மகாபுத்திசாலிகள் இனிமேலும் இருக்கமாட்டார்கள்; ஒரே காரியத்தில் தம்முள் முரண்பாடான திட்டங்களை நிறைவேற்றுவதன்மூலம் குழப்பத்தை உண்டாக்கி, ஒரு சிலருக்கு மட்டுமே நன்மைபயக்கும் பயனற்ற திட்டங்களின்மீது அதிகளவில் செலவிடும் விசேஷித்த அரசு துறைகள் இனியிராது; (இலாபத்தை உயர்நிலையில் வைக்கும்) சுயநல வியாபார காரணங்களுக்காக தூய்மைக்கேட்டை ஒழிப்பதற்கான சட்டதிட்டங்களோடு ஒத்துழையாமை இராது; முழு அழிவை எதிர்ப்படும் அபாயத்திலுள்ள விலங்குகளைப் பாதுகாக்க இயற்றப்படும் சட்டங்களைப் பலமிக்க விசேஷித்த அக்கறைகள் தோற்கடிப்பதில்லை.
மற்ற பிரச்னைகள் சரிசெய்யப்படுகின்றன
அப்படிப்பட்ட ஒரு பரிபூரண உலக அரசாங்கம் அநீதியைப் பொறுத்துக்கொள்ளாது. அது பொறுப்பேற்றபின் குற்றச்செயல்கள் தகுந்த, நியாயமான முறையில் கையாளப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்ளும். இவ்வாறு, மிக ஆபத்தான கொலையாளிகள் திரும்பவும் திரும்பவும் கொன்றுபோடக்கூடும் என்ற பயத்திலிருந்து பிரஜைகள் விடுவிக்கப்பட்டிருப்பார்கள்.
மேலும் உலகளாவிய குற்றச்செயல்களை நடத்தும் குழுக்கள் மற்றும் பலம் மிகுந்த சட்டவிரோதமான போதைப்பொருள் வணிக ஸ்தாபனங்களைப்பற்றியதென்ன? ஒரு பரிபூரண உலக அரசாங்கம் இவற்றை முற்றிலுமாக ஒழிக்கமுடியும். குற்றவாளியை (குற்றமிழைத்த நாட்டுக்கு) திருப்பியனுப்புதலைத் தடுக்கும் தேசீய சட்டம் அப்படிப்பட்ட சர்வதேசிய குற்றவாளிகளுக்கு இனிமேலும் ஒரு பாதுகாப்பான புகலிடமாயிராது. உள்ளூர் சட்டங்களிலுள்ள தப்பித்துக்கொள்ளும் வழிகளும் தங்களுக்குள்ள செல்வாக்கான அரசியல் தொடர்புகளும் இப்படிப்பட்ட சட்டத்தை மீறுபவர்களால் விவேகமாக உபயோகப்படுத்தப்படுவது ஒரு கடந்த கால காரியமாயிருக்கும். குற்றத்தையொழிக்கும் இந்த ஒரே நடவடிக்கையானது, சூதாட்டம், எதிர்க்கூட்டங்களுக்கிடையேயான சண்டை, ஆபாசம், விபசாரம், கள்ளக்கடத்தல் போன்ற சமுதாயத் தீமைகளையும்கூட பூமியிலிருந்து நீக்கிப்போடும். என்னே ஒரு திறம்பட்ட, வீணழிவைத் தடுக்கும் சரிசெய்தல்!
ஆம், மனிதகுலத்தின் அதிக புத்திக்கூர்மை உடையவர்களையும்கூட திணறடித்துக்கொண்டிருக்கிற குழப்பமூட்டும் எல்லா சிக்கலான பிரச்னைகளும் இப்படிப்பட்ட புதிய உலகில் முற்றிலும் தீர்த்துவைக்கப்படும். மேலும் ஒவ்வொன்றும் நிரந்தரமாக—முடிவாக சரிசெய்யப்படும். பின்னர் வரும் தலைமுறைகள் அவற்றை மீண்டும் ஒருபோதும் அனுபவிக்கத் தேவையில்லை.
கனவுலகில் கட்டும் ஒரு கோட்டையல்ல
‘ஆனால், அப்படிப்பட்ட ஒரு புதிய உலகத்தில் ஆட்சி செய்ய பரிபூரண ஆட்சியாளர்கள் எங்கிருந்து வருவார்கள்?’ என்பதாக நீங்கள் கேட்கலாம். மனிதனைப் படைத்தவர் அவர்களைக் கொடுப்பார்! இது நம்பமுடியாததாகத் தோன்றுகிறதா? சரி, இதைச் சிந்தித்துப் பாருங்கள்: மிகுந்த துயரத்தை விளைவிக்கும் பூமியின் நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உங்களுக்கு வல்லமை இருந்திருந்தால், அவ்வாறு செய்யமாட்டீர்களா? நிச்சயமாகவே செய்வீர்கள்! அப்படியானால், நம்மைப் படைத்தவர் அவ்வாறு செய்யமாட்டார் என நினைக்கலாமா?
உண்மை என்னவென்றால், நம்முடைய அன்பார்ந்த சிருஷ்டிகர் ஒரு புதிய உலகைப் படைக்க நோக்கங்கொண்டிருக்கிறார். அதனை நிறுவுவதற்கான வழியே நீதியுள்ள ஓர் உலக அரசாங்கம். இதற்காகத்தான் இந்த வார்த்தைகளில் ஜெபிக்கும்படி, அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மனிதர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:10.
அந்த ராஜ்யம் ஓர் உண்மை அரசாங்கம், ஓர் உலக அரசாங்கம். அதன் ராஜா, இயேசு கிறிஸ்து, “ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார் [பிரஜைகளைக்கொண்டிருப்பார், NW].” (சங்கீதம் 72:8) அது விரைவில் எல்லா மனித அரசாங்கங்களையும் மாற்றீடு செய்யும். ஏனென்றால் கடவுளுடைய வார்த்தை இவ்வாறு உறுதியளிக்கிறது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [கடவுளால் நியமிக்கப்பட்ட அரசர், இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் அரசாங்கத்தை] எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த [தற்கால] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
பரலோகத்தின் தேவனால் எழுப்பப்பட்ட இந்த உலக அரசாங்கம் தெய்வீக ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்படும். ஆகையால் மனித ஆட்சியாளர்களால் செய்யமுடியாத எல்லா நல்ல காரியங்களையும் அது நிறைவேற்றும். அரசர் இயேசு கிறிஸ்துவையும் அவருக்கு உதவிசெய்யும் 1,44,000 ஆவி ஆட்களடங்கிய குழுவையும் அடக்கியுள்ள பரலோக அரசாட்சி என்பதாக பைபிள் கடவுளுடைய அரசாங்கத்தை விவரிக்கிறது. இந்த ஆட்சியாளர்கள் எல்லாரும் நம்பகரமான ஆட்களாக இருப்பர். இவர்கள் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டதற்குமுன் பூமியில் தங்களுடைய வாழ்க்கையின்போது குறையற்ற உத்தமத்தைக் காண்பித்தவர்கள். அவர்கள் எல்லாரும் மனிதகுலத்தின் நலனுக்குச் செயல்படுவதற்கான மிகச் சிறந்த நிலையில் இருப்பார்கள், ஏனென்றால் அவர்கள் பூமியில் வாழ்ந்தபோது மனிதத் தேவைகளை உணர்ந்திருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 14:1-3.
இது ஒழித்துப்போடுகிற பிரச்னைகளை எண்ணிப்பாருங்கள். இவர்களுக்கு அழியாமை இருப்பதால் இந்த ஆவி ஆட்சியாளர்கள் ஒருபோதும் சோர்வடையவோ அல்லது மரிக்கவோ மாட்டார்கள். (1 கொரிந்தியர் 15:50, 53) நீதியைப் புரட்டுவதற்கான தூண்டுதல்களாலோ, அன்பளிப்புகளுக்குப் பதில் சலுகை காட்டுவதற்கோ அவர்களைக் கறைபடுத்த முடியாது. அழியாமையுள்ள ஓர் ஆவி ஆளுக்கு ஒருவன் இலஞ்சமாக என்ன கொடுத்துவிட முடியும்? பணம், ஒரு பெட்டி நிறைய விலையுயர்ந்த மதுபானம், ஒரு வெளிநாட்டுத் தீவுக்குப் பயணம், அல்லது நடன இசை நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டு? இது போன்ற பொருள்சம்பந்தப்பட்ட காரியங்கள் மனிதர்களுக்கு ஆசைகாட்டலாம், ஆனால் இந்த ஆவி சிருஷ்டிகளுக்கல்ல. எனவே இந்த ஆட்சியாளர்களால் ஆளப்படும் ஜனங்கள், இன்று சாதாரணமாகக் காணப்படும் அரசாங்கங்களின் ஊழல்களினால் வரும் துன்பத்தை அனுபவிப்பதில்லை.
புதிய உலகம் உங்களைத் திருப்திப்படுத்தும்
நீங்கள் வயதான ஒருவரா? பல வருடங்களாக நீங்கள் பெற்றுக்கொண்ட அறிவு, திறமை, அனுபவம் போன்ற எல்லாவற்றையும் நினைத்துப் பாருங்கள். உங்களுடைய மனம் அல்லது மனோசக்தி நன்றாயிருக்கலாம், ஆனால், உடல் வலிமை படிப்படியாக தொடர்ந்து குறைந்துகொண்டேபோகிறதை கவனித்தீர்களா? ஒரு காலத்தில் செய்ததுபோல உங்கள் உடல் உங்கள் மனதின் கட்டளைகளுக்குப் பிரதிபலிப்பதில்லை. ஆம், உங்கள் அனிச்சை செயலானது தாமதித்து இயங்குகிறது, உங்கள் பலம் குன்றிகொண்டிருக்கிறது, உங்கள் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டிருக்கிறது. உங்களது கண்பார்வையும் கேட்கும்திறமையும் மோசமாகிக்கொண்டிருக்கின்றன. உங்கள் தசைகள் பலவீனமாகி அடிக்கடி வலியேற்படுகிறது.
ஆனால் நீங்கள் உங்கள் இருபதுகளில் கொண்டிருந்த உடலைவிட ஓர் ஆரோக்கியமான உடலில், வாழ்க்கையில் அநேக வருடங்களாக பெற்றுக்கொண்ட ஞானத்தைச் சிந்தித்துப்பாருங்கள்—ஆம், உங்கள் மனதிற்கு நிகரான உடல்திறமை. உங்களுடைய ஆரோக்கியமான உடலைக்கொண்டு செய்யக்கூடிய அநேகக் காரியங்களை நினைத்துப்பாருங்கள்! ஏன், உங்கள் முதிர்ச்சியடைந்த மனதின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும், அப்படிப்பட்ட நல்ல ஆரோக்கியமான உடலைக்கொண்டு நீங்கள் மேற்கொள்கிற எந்த வேலையிலும் அதிக சந்தோஷத்தைக் காணமுடியும். உங்களுடைய அனுபவம் நீங்கள் காரியங்களை அதிக திறம்பட்டவகையில் செய்வதற்கு உதவும். இது உங்கள் திருப்திக்கு மிக அதிகத்தைக் கூட்டும். நீங்கள் ஓர் இளைஞராக இருந்தால், ஞானம், அறிவு, அனுபவம் போன்றவற்றை என்றென்றுமாக பெற்றுக்கொண்டேயிருக்கும்போது உங்கள் இளமையையும் பலத்தையும் காத்துக்கொள்வதனால் வரும் கிளர்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள்.
இப்பொழுது, ஒரு படி மேலேசென்று, உங்கள் உடன்வேலையாட்கள், நண்பர்கள், கூட்டாளிகள், உறவினர் எல்லாருமே அதே நிலைமையிலிருப்பதை எண்ணிப்பாருங்கள். நீங்களெல்லாரும் கட்டிடம் கட்டுவதிலோ அல்லது கைத்திற வேலைகளிலோ என்னெல்லாம் சாதிக்க முடியும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். கலைவல்லுநர்கள், இசைவல்லுநர்கள், திட்டமைப்பாளர்கள், நிலத்தோற்றத்தை அழகுசெய்வோர், தோட்டக்கலை வல்லுநர்கள், தாவரவியல் வல்லுனர்கள் போன்ற திறமையுள்ள ஆட்களுக்கு இது என்னே ஓர் அதிசயமான வாய்ப்பைக்கொண்டிருக்கிறது! அவர்களுடைய வேலைப்பாடுகள் அதிசயக்கத்தக்கவையாய் இருக்கும். கண்ணைக் கவரும் வரைபடங்கள், வீடுகள், தோட்டங்கள், பூங்காக்கள்—ஆம், நல்ல இசைக்கருவிகளும் அவற்றைக் கற்கும் கலைகளும் அவற்றுள் வெகு சிலவே.
இந்தப் புதிய உலக அரசாங்கம், மனித இனத்தைச் சரீரப்பிரகாரமான பரிபூரண நிலைக்குத் திரும்ப கொண்டுவருவதைத் தன் நோக்கங்களில் ஒன்றாகக்கொண்டிருக்கிறது. உங்கள் கண்பார்வையும் கேட்கும் திறமையும் மற்ற புலன்களும் தங்களுடைய உச்ச நிலையில் வேலைசெய்யும். எவ்வளவு காலம்? சரி, ஒரு மனித அரசாங்கம் உங்களுடைய சரீர வேலைகளில் 50-சதவீதத்தை ஒரு வருடகாலத்திற்கு மிகக்குறைந்த கட்டணச் செலவில் புதுப்பிக்கும் உத்தரவாதத்தை அளிக்கும் சிகிச்சை தருமானால், அதைப் பெற நீங்கள் வரிசையில் முதல்வராக இருக்கமாட்டீர்களா? இந்தப் புதிய உலக அரசாங்கம் ஒரு முழு, 100-சதவீத புதுப்பித்தலை இலவசமாக உத்தரவாதமளிக்கிறது—ஒரு வருடத்திற்கோ, 5 வருடங்களுக்கோ, அல்லது 50 வருடங்களுக்கோ அல்ல, ஆனால் நித்தியகாலத்திற்கும்.
இதே பூமியில்தானே மனிதர்களால் நிச்சயமாய் அனுபவிக்கப்படும் இந்த அதிசயமான வாய்ப்பை நம்பமுடியாததென உதறித் தள்ளிவிடாதீர்கள். கடவுளில் அன்பு கூருகிறவர்கள் அனுபவிக்கப் போகிற ஆசீர்வாதங்களில் சிலவற்றைப் பக்கங்கள் 7 முதல் 10-ல் கவனியுங்கள். (g92 10/22)
[பக்கம் 7 முதல் 10-ன் பெட்டி/படங்கள்]
புதிய உலகம் எதைக் கொண்டுவரும்
குற்றச்செயலுக்கும் வன்முறைக்கும் ஒரு முடிவு
“துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்.”—நீதிமொழிகள் 2:22.
யுத்த ஒழிப்பு
“அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” —ஏசாயா 2:4.
உண்பதற்கு எல்லாருக்கும் ஏராளமான நல்ல உணவுப்பொருட்கள்
“பூமியில் திரளான தானியங்களிருக்கும்; மலையின் உச்சியில் உணவு வழிந்தோடும்.”—சங்கீதம் 72:16, NW.
எல்லாருக்கும் அழகிய வீடுகளும் மகிழ்ச்சிதரும் வேலையும்
“வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், . . . அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை.” —ஏசாயா 65:21, 22.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையில் சமாதானம்
“அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; . . . ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.”—ஏசாயா 11:6.
நோயோ, முதுமையோ, மரணமோ இனிமேலும் இல்லை
“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
மரித்த அன்பானவர்களின் உயிர்த்தெழுதல்
“கல்லறையில் இருப்பவர்கள் எல்லாரும் அவருடைய [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவர்.”—யோவான் 5:28, 29, கத்தோலிக்க மொழிபெயர்ப்பு.