பிரிட்டனின் “மூளைக்கோளாறு பசுவின்” இரண்டகநிலை
பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்
நவம்பர், 1986-ல் பிரிட்டனின் கால்நடைகள் மத்தியில் முதல் முறையாக அச்சந்தரும் ஒரு நோய் தோன்றியது. அப்போது முதற்கொண்டு, 11,000-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு இந்த நோய் பரவி, ஒவ்வொரு வாரமும் 200 புதிய விலங்குகளுக்கு இது பரவிவருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொழில்துறையில் இது கால்நடைச்சார்ந்த உள்துளை மூளைவீக்கம் (bovine spongiform encephalopathy) அல்லது BSE என்பதாக சுருக்கமாக அழைக்கப்படுகையில், செய்தித்துறை இந்த நோயின் வேதனைத்தரும் நோய்க்குறிகளை முன்னிட்டு இதனை “மூளைக்கோளாறுடைய பசு” என்று உடனடியாக குறிப்பிட்டது.
BSE என்றால் என்ன? அது எவ்விதாக ஆரம்பித்தது, அது ஏன் அவ்வளவு கவலைக்குரியதாய் இருக்கிறது?
BSE என்பது, “வழக்கத்துக்கு மாறான நோய்பரப்புகிற ஏஜென்டுகள்” என்பதாக வருணிக்கப்படும் வேறுபட்ட புரதப் பொருட்களினால் மூளையின் பாகங்கள் அழிக்கப்படும் ஒரு வகையான மூளைக்கோளாறாக இருக்கிறது. பூதக்கண்ணாடியில் பார்க்கும் போது, பாதிக்கப்பட்ட உறுப்பு கடற்பாசி போன்ற துளைகள் நிறைந்த ஒரு தோற்றத்தை அளிக்கிறது. வியாதி முற்றும் போது, விலங்கில் அழற்சி ஏற்பட்டு அது எடையை இழக்கிறது. அதனால் நிற்கக்கூட முடியாமல் போகையில், அது மடிந்துவிடுகிறது அல்லது அது கொல்லப்பட வேண்டும்.
கால்நடைகள் பிரிட்டன் தேசத்து ஆடுகளில் பொதுவாக காணப்படும் நெருங்கிய தொடர்புடைய ஒரு கோளாறான சாவுக்கேதுவான வைரஸ் நோயிலிருந்து BSE-ஐ பெற்றுக்கொண்டன. இது எப்படி நடந்தது?
நவீன கால்நடை-தீவனம்
பசு அசைப்போடுகிற, பொதுவாக தாவர உணவை, முக்கியமாக புல்லை மேய்ந்து வாழும் ஒரு விலங்காகும். எனினும், அண்மை ஆண்டுகளில், பிரிட்டன் நாட்டு கால்நடை-தீவன உற்பத்தியாளர்கள் சாதாரணமான தீவனத்தோடு வழக்கத்துக்கு மாறான புரதப் பொருளை சேர்த்திருக்கின்றனர். இது நசுக்கப்பட்டு, சமைக்கப்பட்டு, உலர்த்தப்பட்ட சாவுக்கேதுவான வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஆட்டின் உடல் பாகங்கள் உட்பட இறைச்சிக் கொட்டிலின் கழிவுப்பொருட்களாக இருக்கின்றது. கால்நடைகள் பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அரிதாகக் காணப்படும் அரேபிய மான் உட்பட ஐந்து வகையான மறிமான்களும் மூளை நோயினால் பிரிட்டிஷ் விலங்குக் காட்சி சாலையில் மடிந்திருக்கின்றன. இவை அனைத்துக்கும் இந்தத் தொழில் முறை தயாரிப்பு கால்நடை-தீவனம் கொடுக்கப்பட்டது. அமெரிக்க கால்நடை வளர்ப்புப் பண்ணையிலுள்ள கீரியினத்துக்கு கெட்டுப்போன பச்சையான ஆட்டு இறைச்சி கொடுக்கப்பட்டதன் விளைவாக இதோடு தொடர்புடைய ஒரு நோய் ஏற்பட்டிருக்கிறது.
BSE-யும் சாவுக்கேதுவான வைரஸ் நோயும், உயர் வெப்பத்திற்கும் மின்செறிவூட்டப்பட்ட துகளின் கதிரியக்கத்துக்கும் புற ஊதா ஒளிக்கும் தடுப்பாற்றலைக் கொண்டிருப்பதை சோதனைகள் வெளிப்படுத்துகின்றன. சாதாரணமாக சூடுபடுத்தும் முறைகளும் மற்ற வகையான நோய்நுண்ம ஒழிப்பு முறைகளும் மறைவான இந்த ஏஜென்டுகளை அழிப்பதில்லை. மனிதர்கள் இந்தச் சாவுக்கேதுவான வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு எந்த உறுதியான அத்தாட்சியும் இல்லாவிட்டாலும் இப்பொழுது கவலைக்குரிய கேள்வியானது: மாட்டிறைச்சி பதார்த்தங்களை உண்ணும் மனிதர்களுக்கு BSE என்ன ஆபத்தை விளைவிக்கக்கூடும்?
மனித இணைப்பு?
“இந்தத் தேசத்திலோ அல்லது வேறு எந்தத் தேசத்திலோ எவரும் BSE குறித்து கவலைப்பட வேண்டியதில்லை,” என்பது வேளாண்மை அமைச்சர் ஜான் கும்மர் தெரிவித்த பிரிட்டனின் அதிகாரப்பூர்வமான அரசின் கருத்தாகும். ஆனால் எல்லாரும் அத்தனை நிச்சயமாக இல்லை. இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழக மருத்துவ நுண்ணுயிரியல் பேராசிரியர் ரிச்சர்ட் லேஸி, தி இன்டிப்பெண்டன்ட் செய்தித்தாளில் இவ்வாறு எழுதுகிறார்: “பசு அதன் தீவனத்திலிருந்து நோயை பெற்றுக்கொண்டிருக்குமேயானால், குறைந்தபட்சம் ஆரம்பத்திலாவது நோய் வாய் வழியாக பரவியிருக்கிறது. இது வாய் வழியாக மனிதனுக்குக் கடத்தப்படும் சாத்தியத்தை ஏற்படுத்துகிறது.”
இப்படிப்பட்ட நியாயமான விளக்கத்துக்கு இசைவாகவே, ஜெர்மனி, பிரிட்டன் நாட்டு மாட்டிறைச்சி அனைத்தின் இறக்குமதியையும் தடைசெய்திருக்கிறது. ஏனென்றால் அவை BSE-நீங்கிய மந்தையிலிருந்து பெறப்பட்டது என்பதற்கு ஓர் உறுதியை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டனிலிருந்து கால்நடை, முட்டைக்கரு மற்றும் கால்நடை விந்து இறக்குமதியை தடைசெய்திருக்கிறது. சோவியத் இன்னும் ஒரு படி மேலே சென்று, BSE-ஐ முன்னிட்டு பிரிட்டனின் செம்மறியாட்டு வெள்ளாட்டு இறைச்சியையும், பாற்பண்ணைப் பொருட்களோடு சேர்த்து இறக்குமதியை தடைசெய்திருக்கிறது. இங்கிலாந்திலுள்ள ஒரு சில பள்ளிகள் நோயிலிருந்து விலகியதாக சான்றிடப்படும் மந்தையிலிருந்து வரும் மாட்டிறைச்சியை மாத்திரமே பரிமாற தீர்மானித்திருக்கின்றனர்.
அரசாங்கம் மற்ற நடவடிக்கைகளோடுகூட ஒரு சில தரம் கெட்ட மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்திருக்கிறது. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள் சாண்டுவிச்சுகள், அப்பம் போன்ற மாட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பதார்த்தங்களுக்காக வருடத்துக்கு 3 ஆயிரம் மில்லியன் டாலர்களுக்கு மேலாக செலவழிக்கிறார்கள். இவர்கள் உடல் ஆரோக்கியம் அபாயத்தில் இல்லை என்பது இவர்களுக்கு உறுதியளிக்கப்படுவது அவசியமாகும். என்றபோதிலும், BSE கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கு கடத்தப்படுவதில்லை என்பதற்கு “முழுமையாக உறுதிகொடுக்கப்படுவதற்கு முன்பாக ஒரு பத்தாண்டோ அல்லது அதற்கும் மேலாகவோ ஆகக்கூடும்” என்பதாக அதிகாரப்பூர்வமான அரசாங்க அறிக்கை ஒப்புக்கொள்கிறது. “நோய்க்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறும் காலப்பகுதியே பிரச்னையாக உள்ளது. BSE ஒரு பொது உடல்நல அபாயத்தை உண்டுபண்ணுவதாக இருந்தால், CJD-ல் ஏற்பட்டிருப்பது போல நோயாளிகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பில் இது வெளிப்படுமுன், ஏற்கெனவே இதன் பாதிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் மக்களைக் குறித்து எதையும் செய்ய முடியாதபடி மிகவும் பிந்திவிட்டிருக்கும்,” என்பதாக எடின்பர்க் நரம்புநோய்தோற்றத் துறையின் முன்னாள் நிர்வாகி டாக்டர் ரிச்சர்டு கிம்பர்லின் விளக்குகிறார்.a
இதற்கிடையில், விஞ்ஞானிகள் இந்தப் பயங்களை போக்க புதிய, உடன்பாடான அத்தாட்சிகளை அவசரமாக தேடிக்கொண்டிருக்கின்றனர். பிரிட்டன் அரசு இந்த ஆராய்ச்சியில் உதவி செய்ய 20 மில்லியன் டாலர்களை ஒதுக்கியிருக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை அடக்கமாக குறிப்பிடுவது போலவே: “மாட்டிறைச்சியின் பாதுகாப்பு குறித்து சோதனை இன்னும் செய்யப்படவில்லை, அது சோதிக்கப்பட முடியாமலும் இருக்கலாம்.”
நீங்கள் அதைச் சாப்பிடுவீர்களா?
மனித உடல்நலத்துக்கு என்ன ஏற்படுவதாக இருப்பினும், BSE விவாதம், விலங்குகளின் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பழக்கத்துக்குப் பொது மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பிரிட்டனின் கால்நடைகளும், கோழிகளும் DPM என்று தொழிலில் அறியப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட கோழிக் குஞ்சு கழிவினால் தொடர்ந்து போஷிக்கப்பட்டு வருகிறது. இது கழிவுகள், இறகுகள் மற்றும் இறந்துபோன பறவைகளின் ஒரு கலவையாக இருக்கிறது. காய்ந்து போன பன்றியின் இரத்தம் சாக்கலேட்டோடு நறுஞ்சுவையூட்டப்பட்டு கன்றுகுட்டிகளுக்கு கொடுக்கப்படுகிறது. 1988 ஜூலை முதற்கொண்டு இது சட்டத்துக்கு விரோதமான கால்நடை தீவனமாக இருப்பினும் ஆட்டின் கழிவுப்பொருளோடுகூட, முழு ஆட்டுத் தலைகள் அரைக்கப்பட்டு பன்றிகளுக்கும் கோழிகளுக்கும் தீவனமாக அளிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பழக்கங்கள் “இயற்கைக்கு மாறானது” என்பதாக அதிகாரப்பூர்வமான ஓர் அரசாங்க அறிக்கையில் கண்டனம் செய்யப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியில் விரும்பத்தக்கதாக இருப்பதற்கும் பொருளாதார அடிப்படையிலும் சிலர் அதை நியாயப்படுத்தலாம். ஆனால் உடல்நல ரீதியில் அவை தகுதியுள்ளவையா? (g90 11/8)
[அடிக்குறிப்புகள்]
a CJD குருஸ்ஃபில்டு-ஜேகப் நோய் (Creutzfeld–Jacob disease) BSE-க்கு ஒத்திருந்து இதே போன்ற ஓர் ஏஜென்டினால் மனிதருக்கு ஏற்படும் ஒரு நிலையாக இருக்கிறது. வேகமாக மூளைக்கோளாறு ஏற்பட, நோய் உறுதி செய்யப்பட்டு ஒரு வருடமாவதற்குள் அவதியுறும் நபர் உதவியற்றவராக இருக்கக்கூடும். CJD இரத்தமேற்றுதலினாலும் உடல் திசு மாற்றுச்சிகிச்சைகளாலும் கடத்தப்படலாம். பிரிட்டனில் கிட்டத்தட்ட 2,000 ஆட்களும் ஐக்கிய மாகாணங்களில் 7,000 ஆட்களும் மரித்துப்போன ஆட்களின் கபச்சுரப்பிகளிலிருந்து எடுக்கப்பட்ட வளர்ச்சி இயக்குநீர்களை ஊசி மூலம் ஏற்றிக்கொண்டிருப்பதால், நோய்க்கடத்திகளாக ஆகும் ஆபத்திலிருக்கின்றனர். ஐ.மா. உடல் நல தேசீய நிறுவனத்தின் நிர்வாகி டாக்டர் பால் ப்ரெளண் இவ்விதமாக சொல்கிறார்: “CJ நோயுள்ள ஒரு நோயாளியின் எந்த ஓர் உறுப்பும் சாத்தியமான ஒரு கால-வெடிகுண்டாகும்.”
[பக்கம் 23-ன் படம்]
BSE-யால் பாதிக்கப்பட்ட பசுவின் மூளையில் ஒளிபுகும்தன்மையுள்ள உள்துளைகள்