வாழ்வின் வெகுமதியா அல்லது சாவின் முத்தமா?
“எத்தனை பேர் சாகவேண்டியதாயிருக்கிறது? உங்களுக்கு எத்தனை பேர் சாக வேண்டும்? இது நடக்கிறது என்பதை நம்புவதற்காக, நீங்கள் விரும்பும் மரண வாயிலை எமக்குத் தாருங்கள்.”
டான் ஃப்ரான்சிஸ், ஐ.நா. நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (CDC) ஓர் அதிகாரி, இரத்தச் சேமிப்பு வங்கித் தொழில் இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் நடந்த ஒரு கூட்டத்தில் தன்னுடைய கையை மேசையில் தட்டி மேற்கூறிய வார்த்தைகளைச் சொல்லி கூச்சலிட்டார். எய்ட்ஸ் நோய் தேசத்தில் கிடைக்கப்பெறும் இரத்தத்தின் மூலம் பரவுகிறது என்று CDC இரத்த வங்கியரை நம்பவைக்க முயன்றுகொண்டிருந்தனர்.
இரத்தச் சேமிப்பு வங்கியர் நம்பவில்லை. கொடுக்கப்பட்ட அத்தாட்சியை வலுவற்றது—ஒரு சில சம்பவங்களே—என்று சொல்லி, இரத்தப் பரிசோதனையை மேம்படுத்தவேண்டியதில்லை எனத் தீர்மானித்தனர். அது ஜனவரி 4, 1983 ஆகும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இரத்தச் சேமிப்பு வங்கிகளின் அமெரிக்கச் சங்கத்தின் தலைவர் உறுதிப்படுத்தியதாவது: “பொது மக்களிடையே எந்தவித ஆபத்தும் இல்லை.”
அநேக நிபுணர்களுக்கோ செயல்படுவதைத் தேவைப்படுத்தும் அத்தாட்சிகள் போதுமானதாக இருந்தது. அதுமுதல், அந்த “ஒரு சில சம்பவங்கள்” கவலைக்குரிய விதத்தில் உயர எழும்ப ஆரம்பித்துவிட்டன. 1985-க்கு முன்பு, எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் HIV (Human Immunodeficiency Virus [மனிதரில் நோயை எதிர்க்கும் சக்தியை இழக்கச் செய்யும் நோய் வைரஸ்]) சேர்ந்த இரத்தம் ஏறக்குறைய 24,000 மக்களுக்கு ஏற்றப்பட்டது.
எய்ட்ஸ் வைரஸ் பரவுவதற்கு மிகத் திறமையான வழி மாசுபட்ட இரத்தமாகும். புதிய இங்கிலாந்து மருத்துவ பத்திரிகை (டிசம்பர் 14, 1989) கூறுகிறபடி, ஒரு யூனிட் இரத்தம் 17.5 லட்சம் பேருக்கு நோயைப் பரப்பக்கூடிய நச்சுக் கிருமிகளை கொண்டிருக்கக்கூடும்! ஜூன் 1990-க்குள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் இரத்தமேற்றுதலாலும், இரத்தப் பகுதிப்பொருட்களாலும் இழைம மாற்றத்தாலும் ஏற்கெனவே 3,506 பேர் எய்ட்ஸ் நோயைப் பெற்றுவிட்டனர் என்று CDC விழித்தெழு!விடம் கூறியது.
ஆனால் அவை வெறுமென எண்கள்தான். உட்பட்டிருக்கும் தனிப்பட்ட சேதங்களின் ஆழத்தை அவை வெளிப்படுத்திட முடியாது. உதாரணமாக, 71 வயது ஃப்ரான்சிஸ் பார்ஷெல்ட்டின் கவலைக்கிடமான முடிவை எண்ணிப்பாருங்கள். தனக்கு இரத்தமேற்ற வேண்டாம் என்று அவள் மருத்துவர்களிடம் திரும்பத் திரும்பக் கூறினாள். அப்படியிருந்தும் அவளுக்கு இரத்தமேற்றப்பட்டது. அவளுடைய குடும்பம் பார்த்துக்கொண்டிருக்க, அவள் எய்ட்ஸ் வேதனையில் மரித்தாள்.
அல்லது 17 வயது இளம் பெண்ணின் அவல முடிவைக் கவனியுங்கள். மாதவிடாய் இரத்தப் போக்கு கடுமையாக இருக்க, வெறுமென அவளுடைய இரத்தச் சோகயை சரிசெய்வதற்காக இரண்டு யூனிட் இரத்தம் செலுத்தப்பட்டது. அவள் 19 வயதில் கர்ப்பிணியாக இருக்கும்போது, தனக்கு ஏற்றப்பட்ட இரத்தம்தானே எய்ட்ஸ் வைரஸைத் தனக்குக் கடத்தியிருக்கிறது என்பதைக் கண்டாள். 22 வயதாயிருக்கும்போது எய்ட்ஸ் வந்தது. தான் எய்ட்ஸ் நோயால் மரிக்கப்போகிறாள் என்பதை அறியவந்ததுடன், அந்த நோயைத் தன்னுடைய குழந்தைக்குக் கடத்தியிருக்கிறாளோ என்பது குறித்து கவலைப்பட ஆரம்பித்தாள். இப்படியாக இந்த அவல முடிவுகளின் பட்டியல் உலகமுழுவதும் குழந்தை முதல் முதியோர் வரை போய்க்கொண்டே இருக்கிறது.
1987-ல் ஆட்டொலோகஸ் அண்டு டைரக்டட் பிளட் புரோகிராம்ஸ் என்ற புத்தகம் இப்படியாகப் புலம்பியது: “நோயைக் கடத்தும் ஆபத்தான அந்த ஆரம்ப தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதும், நினைத்துப்பார்க்கக்கூடாத ஒன்று நிகழ்ந்தது: இந்த உயிர்க்கொல்லி நோய் [எய்ட்ஸ்] முன்வந்து இரத்தமளிப்பவர்களின் இரத்தத்தால் கடத்தப்படக்கூடும், கடத்தப்பட்டுவருகிறது என்பது செயல்விளக்கமாய்த் தெரியவந்தது. இதுதானே மிகவும் மோசமான மருத்துவ வஞ்சப்புகழ்ச்சியாக அமைந்தது; உயிரளிக்கும் இரத்தத்தின் விலையேறப்பெற்ற ஈவு மரணத்திற்குக் கருவியாக இருக்கக்கூடும்.”
பிளாஸ்மாவிலிருந்து எடுக்கப்படும் மருந்துகளுங்கூட இந்த வாதை உலகெங்கிலும் பரவுவதற்கு உதவியது. தங்களுடைய நோய்க்கு சிகிச்சையாக இரத்தக் கசிவை நிறுத்த பிளாஸ்மா ஆதார பொருட்களைப் பயன்படுத்துகின்ற பெரும்பான்மையான இரத்தக்கசிவு நோயாளிகள் உயிரிழந்தனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் HIV வைரஸை ஒழிப்பதற்கு மருந்தை சூடுபடுத்தி-பக்குவப்படுத்துவதற்காக ஒரு செயல்முறையை ஏற்படுத்துவதற்கு முன்னர் 60 முதல் 90 சதவீதத்தினருக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது.
இருந்தாலும், இன்றுவரை, இரத்தம் எய்ட்ஸ் நோய்க்கு விலகியதாயில்லை. இரத்தமேற்றுதலின் ஆபத்து எய்ட்ஸ் நோய் மட்டும் அல்ல. இன்னும் அதிகம் இருக்கிறது.
எய்ட்ஸ் நோயை சிறுமைப்படுத்திடும் ஆபத்துகள்
“மருத்துவத்தில் நாம் பயன்படுத்தும் மிக ஆபத்தான பொருள் இதுவே,” என்று இரத்தத்தைக் குறித்து டாக்டர் சார்ல்ஸ் ஹகின்ஸ் கூறுகிறார். அவருக்குத் தெரிய வேண்டும்; அவர் மாஸஷுசட்ஸ் மருத்துவமனை இரத்தமேற்றும் பிரிவின் இயக்குநர். இரத்தமேற்றுதல் என்பது இரத்தப் பிரிவு ஒன்றாக இருக்கும் ஒருவரைக் கண்டுபிடிப்பது போன்று எளியதோர் காரியம் என்பதாக அநேகர் நினைக்கின்றனர். ஆனால் செயல் முறையில் ABO இரத்தப் பிரிவு மற்றும் Rh-அம்சம் ஒத்திருக்கிறதா என்பது சர்வசாதாரணமாய் கவனிக்கப்படுவது தவிர 400-க்கும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கக்கூடும், இவை ஒத்திருக்கின்றனவா என்பது கவனிக்கப்படுவதில்லை. இருதய அறுவை மருத்துவர் டென்டன் கூலே குறிப்பிடுவதாவது: “இரத்தமேற்றுதல் மாற்று உறுப்பு சிகிச்சையாகும். . . . அநேகமாய் அனைத்து இரத்தமேற்றுதல்களிலும் சில ஒவ்வாத அம்சங்கள் இருக்கின்றன என்று நான் கருதுகிறேன்.”
அப்படிப்பட்ட ஒரு சிக்கலான பொருளை ஏற்றுதல் உடலின் நோய்எதிர்ப்பு இயக்கத்தைக் “குழப்பிவிடுவது” குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஓர் அறுவை மருத்துவர் கூறுகிறார். உண்மை என்னவெனில், இரத்தமேற்றுதல் நோய் எதிர்ப்பு இயக்கத்தை ஓர் ஆண்டுவரை மட்டுப்படுத்தக்கூடும். சிலருடைய விஷயத்தில் இதுதானே மிகவும் ஆபத்தான அம்சமாக இருக்கக்கூடும்.
பின்பு தொற்றும் தன்மைவாய்ந்த நோய்களும் இருக்கின்றன. உதாரணமாக அவற்றிற்கு சாகாஸ் நோய், ஸைட்டோமிகலோவைரஸ் போன்று வேற்றுப்பெயர்கள் உள்ளன. இவற்றின் பாதிப்புகள் காய்ச்சல் முதல் உடல் குளிர்ந்த நிலையை எட்டி மரணம் ஏற்படுவது வரையாக இருக்கிறது. கானல் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜோசஃப் ஃபெல்டுஷு கூறுவதாவது, இரத்தமேற்றுதலால் பத்து பேரில் ஒருவருக்கு ஏதோ ஒரு வகை நோய்க் கடத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. பத்து அறை கொண்ட துப்பாக்கி கொண்டு ரஷ்ய சுழல் மைய மேசைக் கவறாட்டம் ஆடுவது போல் இருக்கிறது. புற்று நோய் அறுவை சிகிச்சையின் போது இரத்தமேற்றுதல், புற்றுநோய் மறுபடியும் வருவதற்கான ஆபத்தைக் கூட்டுகிறது என்பதை அண்மை ஆய்வுகள் காண்பித்திருக்கின்றன.
இரத்தமேற்றுதல் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குணமடைவதற்கு மிகப் பெரிய தடையாக இருக்கக்கூடும் என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி குறிப்பிட்டதில் ஆச்சரியமில்லை. கல்லீரல் அழற்சி நூறாயிரக் கணக்கான ஆட்களைப் பாதிக்கிறது, மற்றும் எய்ட்ஸ் நோயால் மரிப்பவர்களைக் காட்டிலும் அதிகமானவர்களை இரத்தமேற்றுதல் கொன்றிருக்கிறது, ஆனால் இது அதிகமாக விளம்பரமாகவில்லை. இதனால் எந்தளவுக்கு ஆட்கள் மரிக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது, ஆனால் ஆட்களை முழுமையாகக் கொண்டிருக்கும் ஒரு DC-10 விமானம் மாதத்திற்கு ஒரு முறை என்ற கணக்கில் விபத்துக்குள்ளாவதற்கு இணையாக இந்த எண்ணிக்கை இருக்கக்கூடும் என்று பொருளியலர் ராஸ் எக்கர்ட் கூறுகிறார்.
ஆபத்துகளும் இரத்தச் சேமிப்பு வங்கிகளும்
தங்களுடைய இரத்தப் பொருட்களில் இருக்கும் இந்த ஆபத்துகள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதற்கு இரத்தச் சேமிப்பு வங்கிகள் எவ்வாறு பிரதிபலித்திருக்கின்றனர்? நல்ல விதத்தில் அல்ல என்று ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். 1988-ல் எய்ட்ஸ் அச்சுறுத்தலுக்குப் பிரதிபலிப்பதில் “அனாவசியமாக தாமதிப்பது” குறித்து மனிதரில் நோயை எதிர்க்கும் சக்தியை இழக்கச் செய்யும் நோய் வைரஸ் பேரில் தலைமை கமிஷன் அறிக்கை குற்றஞ்சாட்டியது. உயர் ஆபத்துடைய தொகுதியினர் இரத்த தானம் செய்வதை ஊக்கப்படுத்துவதைத் தவிர்க்கும்படி இரத்தச் சேமிப்பு வங்கிகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இரத்தத்தையே சோதனை செய்யும்படியாக, உயர் ஆபத்துப் பிரிவை சேர்ந்த ஆட்கள் தானம் செய்யும் இரத்தத்தையே சோதனை செய்யும்படி துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இரத்தச் சேமிப்பு வங்கிகள் தாமதித்தன. உட்பட்டிருந்த ஆபத்துகளை பைத்தியம் என்று எண்ணி அசட்டை செய்தனர். ஏன்?
சில இரத்தச் சேமிப்பு வங்கியர் மேலுமாக பரிசோதனை செய்வதை “அநேகமாய் வருமானத்தின் அடிப்படையில்” மறுத்தனர் என்று இசைக் குழுவினர் தொடர்ந்தனர் என்ற தன்னுடைய புத்தகத்தில், ரேண்டி ஷில்ட்ஸ் குற்றஞ்சாட்டுகிறார். பெரும்பாலும் செஞ்சிலுவை சங்கம் போன்ற இலாபம் கருதாத அமைப்புகளால் நடத்தப்பட்டாலும், இரத்தத் தொழிலின் ஆண்டு வருமானம் நூறு கோடி டாலர்களாக மிகுந்த பணத்தைக் குறித்தது. ஆண்டுதோறும் 35 லட்சம் பேருக்கு இரத்தமேற்றுதலின் வியாபாரம் அச்சுறுத்தப்பட்டது.”
மேலும் ஏராளமான இரத்தச் சேமிப்பு வங்கிகள் மனமுவந்து இரத்ததானம் செய்பவர்களின் பேரில் சார்ந்திருப்பதன் காரணமாக, குறிப்பாக ஓரினப்புணர்ச்சிக்காரரைப் போன்று சில ஆபத்தான பிரிவினரைத் தவிர்ப்பதன் மூலம் அவர்களில் எவரையும் புண்படுத்த பின்வாங்குகிறார்கள். இரத்த தானத்தைத் தடை செய்வது தங்களுடைய பொது உரிமைகளைத் தடை செய்வதாக இருக்கிறது என்றும் இன்னொரு சகாப்தத்தின் கான்சன்ட்ரேஷன் மனப்பான்மையை முத்தத்தோடு வரவேற்பதாக இருக்கும் என்றும் ஓரினப்புணர்ச்சிக்காரர் உரிமைகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் கடுமையாக எச்சரித்தனர்.
இரத்த தானம் செய்கிறவர்களை இழப்பதும் புதிய பரிசோதனைகளை மேற்கொள்ளுவதும் கூடுதல் செலவை உட்படுத்தும். 1983-ன் இளவேனிற் பருவத்தின் போது, ஸ்டன்ஃபோர்டு பல்கலைக்கழக இரத்தச் சேமிப்பு வங்கி இரத்தத்தின் பேரில் ஒரு துணைப் பரிசோதனையை செய்த முதல் வங்கியாகத் திகழ்ந்தது, இது எய்ட்ஸ் நோய் கடத்தும் ஆபத்துடைய இரத்தம் தானம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைக் காட்டக்கூடும். மற்ற இரத்தச் சேமிப்பு வங்கியர் இந்தச் செயலைக் கூடுதல் நோயாளிகளைக் கவர்ச்சிப்பதற்கான ஒரு வியாபாரத் தந்திரம் என்பதாகக் குறைகூறினர். பரிசோதனைகள் விலைகளைக் கூட்டுகிறது என்பது உண்மைதான். ஆனால் தங்களுக்குத் தெரியாமல் இரத்தம்செலுத்தப்பட்ட ஒரு குழந்தையின் பெற்றோர் சொன்னதாவது: “அப்படிப்பட்ட பரிசோதனைக்காக இருபது அவுன்சுக்கு கூடுதலாக 5 டாலர் நிச்சயமாகவே கொடுத்திருப்போம்.” அவர்களுடைய குழந்தை எய்ட்ஸ் நோயால் மரித்தது.
தற்காப்பு அம்சம்
இரத்தச் சேமிப்பு வங்கிகள் இரத்தத்தினால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையில் பிரதிபலிப்பதில் சோம்பலாக இருப்பதற்குக் காரணம், தங்களுடைய சொந்த தோல்விகளின் விளைவுகளுக்குத் தாங்கள் பதில்சொல்ல வேண்டியதில்லை என்று சில நிபுணர்கள் சொல்லுகிறார்கள். உதாரணமாக, தி பிலெடெல்ஃபியா இன்குவயரர்-ன் அறிக்கைபடி, FDA (அமெரிக்க ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம்) இரத்தச் சேமிப்பு வங்கிகள் உயர்ந்த தரத்தைக் காத்துக்கொள்வதை மேற்பார்வையிடும் பொறுப்பையுடையதாயிருக்கிறது, ஆனால் அந்தத் தரத்தை நிர்ணயிப்பதற்கு இரத்தச் சேமிப்பு வங்கிகளையே மிகுதியாக சார்ந்திருக்கிறது. FDA நிறுவனத்தின் அதிகாரிகளில் சிலர் இரத்த தொழில் இயக்கத்தில் முன்னாள் தலைவர்களாக இருந்தவர்கள். இப்படியாக, எய்ட்ஸ் நெருக்கடி வெளிப்படுகையில் இரத்தச் சேமிப்பு வங்கிகளை அடிக்கடி ஆய்வு செய்வது உண்மையில் குறைந்தது!
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இரத்தச் சேமிப்பு வங்கிகள் தங்கள் மீது தொடரப்படும் உரிமைக் கோரிக்கை வழக்குகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆதரவையும் தேடியிருக்கின்றன. அநேகமாக அனைத்து நாடுகளிலுமே, இரத்தம் ஒரு சேவை, ஓர் உற்பத்திப் பொருள் அல்ல என்று இப்பொழுது சட்டம் சொல்லுகிறது. அப்படியென்றால், ஓர் இரத்தச் சேமிப்பு வங்கி மீது உரிமை வழக்கு தொடருகிறவர், வங்கியின் பாகத்தில் கவனக்குறைவு இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்—ஒரு கடுமையான சட்டமுறைத் தடையாகும். இப்படிப்பட்டச் சட்டங்கள் இரத்தச் சேமிப்பு வங்கிகளை உரிமை வழக்குத் தொடரப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது, ஆனால் நோயாளிகளுக்கு இரத்தத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதில்லை.
பொருளியலர் ராஸ் எக்கர்ட் விவாதிப்பதாவது, இரத்த சேமிப்பு வங்கிகள் தாங்கள் சேகரிக்கும் இரத்தத்துக்கு பொறுப்புடையவர்களாக ஆக்கப்பட்டால், அதன் தரத்தை நிச்சயப்படுத்துவதற்கு அவர்கள் அதிகத்தைச் செய்வார்கள். ஓய்வு பெற்ற இரத்தச் சேமிப்பு வங்கியர் ஏரன் கெல்னர் ஒப்புக்கொள்கிறார்: “ஓரளவு சட்ட வாதத்தின் மூலம் இரத்தம் ஒரு சேவையாக ஆனது. எல்லாருமே விடுவிக்கப்பட்டனர், எல்லாருமே, “குற்றமற்ற பலியாளாக இருக்கும் அந்த நோயாளியைத் தவிர.” அவர் மேலும் கூறுகிறார்: “நாம் நேர்மையின்மையையாவது குறிப்பிட்டுக் காட்டியிருக்கலாம், ஆனால் நாம் அதைச் செய்யவில்லை. நாம் நம்முடைய சொந்த இக்கட்டான நிலையைக் குறித்தே அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம்; நோயாளியின் பேரில் நம்முடைய அக்கறை எங்கே?”
முடிவு நம் கவனத்தைத் தப்பாது. இரத்தச் சேமிப்பு வங்கித் தொழில் இரத்தப் பொருட்களின் இன்னல்களிலிருந்து நோயாளிகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக தன்னைப் பொருளாதார ரீதியில் பாதுகாத்துக்கொள்வதில்தான் அதிக அக்கறையாயிருக்கிறது. ‘ஆனால் உயிரைக் காப்பதற்கு இரத்தம் மட்டுமே சிகிச்சையின் ஒரே வழியாக இருக்குமானால் இந்த இன்னல்கள் அனைத்துமே உண்மையிலேயே பொருட்படுத்தப்பட வேண்டியதாயிருக்குமா? நன்மைகள் ஆபத்தான விளைவுகளைவிட அதிகமாக இருப்பதில்லையா?’ என்று சிலர் விவாதிக்கக்கூடும். இவை நல்ல கேள்விகள்தான். அந்த இரத்தமேற்றுதல் எல்லாம் எந்தளவுக்கு அவசியமாயிருக்கின்றன? (g90 10/22)
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
தாங்கள் சிகிச்சையளிக்கும் நோயாளிகளின் இரத்தத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மருத்துவர்கள் வெகுதூரம் செல்கின்றனர். ஆனால் ஏற்றப்பட்டிருக்கும் இரத்தத்திலிருந்து நோயாளிகள் போதியளவுக்குப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனரா?
[பக்கம் 8, 9-ன் பெட்டி/படம்]
இன்று இரத்தம் எய்ட்ஸ் நோயிலிருந்து பாதுகாப்புள்ளதா?
“அது இரத்த நற்செய்தி,” என்று அக்டோபர் 5, 1989, நியு யார்க் டெய்லி நியூஸ் தலையங்கம் அறிவித்தது. இரத்தமேற்றுதல் மூலம் எய்ட்ஸ் நோய் கடத்தப்படும் வாய்ப்புகள் 28,000-ற்கு 1-ஆக இருக்கிறது என்று அந்தக் கட்டுரை அறிக்கை செய்தது. இந்த வைரஸை இரத்த இருப்பிலிருந்து விலக்கிவைக்கும் வாய்ப்பு இப்பொழுது 99.9 சதவீதமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட நன்னம்பிக்கை இரத்த வங்கித் தொழிலிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. ‘சேமிக்கப்பட்டிருக்கும் இரத்தம் இதுவரை இருந்ததைவிட அதிக பாதுகாப்பாக இருக்கிறது,’ என்று அவர்கள் உரிமைபாராட்டுகின்றனர். இரத்தத்திலிருந்து எய்ட்ஸ் நோய் பெறும் ஆபத்து “அநேகமாய் நீக்கப்பட்டுவிட்டது” என்று இரத்த வங்கிகளின் அமெரிக்க சங்கத்தின் தலைவர் கூறினார். ஆனால் இரத்தம் பாதுகாப்பானதாக இருக்குமானால், நீதிமன்றங்களும் மருத்துவர்களும் ஏன் இரத்தத்தை “நச்சு” என்றும் “தவிர்க்கமுடியாதளவுக்குப் பாதுகாப்பற்றது” என்றும் குறிப்பிட்டுள்ளனர்? இரத்தத்துடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதற்காக சில மருத்துவர்கள் ஏன் விண்வெளி ஆடை போன்று காணப்படும் முகத்தை மூடியும் காலணிகள் அணிந்தும் அறுவை சிகிச்சை செய்கின்றனர்? இரத்தமேற்றுதலின் தீய பாதிப்புகளின் பொறுப்பிலிருந்து தங்களை விடுவித்திடும் ஒப்புதல் கடிதங்களில் கையொப்பமிட நோயாளிகளை அநேக மருத்துவமனைகள் கேட்டுக்கொள்வதற்குக் காரணம் என்ன? இரத்தம் உண்மையிலேயே எய்ட்ஸ் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறதா?
அந்தப் பாதுகாப்பு இரத்தத்தைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் இரண்டு வழிமுறைகளை சார்ந்ததாயிருக்கிறது: இரத்த தானம் செய்கிறவர்களை முழுமையாகப் பரிசோதித்தலும், இரத்தத்தைத்தானே சோதனை செய்வதுமாகும். எய்ட்ஸ் நோய் பெற்றிருக்கும் உயர் ஆபத்துடைய பிரிவினரில் தங்களைக் காணும் ஒரு வாழ்க்கைப் பாணியை உடையவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் எல்லா முயற்சிகளின் மத்தியிலும் சிலர் தப்பிவிடுகின்றனர் என்று அண்மை ஆய்வுகள் காண்பித்திருக்கின்றன. அவர்கள் வினாக்களுக்குத் தவறான பதில்களைக் கொடுத்து இரத்த தானம் செய்கின்றனர். தாங்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை விவேகத்துடன் அறிந்துகொள்வதற்கு சிலர் விரும்புகின்றனர்.
எய்ட்ஸ் வைரஸை எதிர்த்துப்போராடுவதற்குரிய எதிர்ப்புக்கூறுகள் இரத்தத்தில் இருக்கின்றனவா என்பதை இரத்தச் சேமிப்பு வங்கிகள் 1985-ல் பரிசோதிக்க ஆரம்பித்தன. இந்தப் பரிசோதனையில் பிரச்னை என்னவென்றால், பரிசோதனை கணிக்கக்கூடிய எதிர்ப்புக்கூறுகளை விருத்திசெய்வதற்கு முன்பு ஒரு நபர் எய்ட்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இந்த முக்கியமான இடைவெளிதான் இடைவெளிக் காலம் என்று அழைக்கப்படுகிறது.
எய்ட்ஸ் பெறும் வாய்ப்பு 28,000-க்கு 1 என்ற கருத்து புதிய இங்கிலாந்து மருத்துவப் பத்திரிகை வெளியிட்ட ஓர் ஆய்வின் பலனாகும். அந்தப் பத்திரிகை இந்த இடைவெளிக் காலம் சராசரியாக எட்டுவாரங்களாக இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டது. என்றபோதிலும், ஒருசில மாதங்களுக்கு முன்பு, ஜூன் 1989-ல், அதே பத்திரிகை ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது, அதாவது இந்த இடைவெளிக் காலம் இன்னும் நீண்டதாக இருக்கக்கூடும்—மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கக்கூடும். இப்படிப்பட்ட நீண்ட இடைவெளிக் காலங்கள் ஒருசமயத்தில் கொள்ளப்பட்ட கருத்தைவிட அதிகப் பொதுவான ஒன்றாயிருக்கக்கூடும், மற்றும் அதைவிட மோசமானது, சில நோயளிகள் அந்த வைரஸுக்கு எதிர்க்கூறுகளை விருத்தி செய்யாமல் இருக்கக்கூடும் என்று இந்த ஆரம்ப ஆய்வுகள் குறிப்பிட்டன! என்றபோதிலும், அதிக நம்பிக்கைதரும் ஓர் ஆய்வு, இவற்றை “நன்கு விளங்கிக்கொள்ளப்படாதவை” என்று சொல்லி இந்தக் கண்டுபிடிப்புகளை உட்படுத்தவில்லை.
எய்ட்ஸ் பேரில் தலைமைக் கமிஷனைச் சேர்ந்த டாக்டர் கோரி செய்வாஸ் இப்படியாகக் கூறினதில் ஆச்சரியமில்லை: “இரத்த இருப்பு அதிக பாதுகாப்பானதாய் இருக்கிறது என்று இரத்த வங்கிகள் சொல்லிக்கொண்டிருக்கலாம், ஆனால் அது சரியல்ல என்பதை உணர்வதால் பொதுமக்கள் அதை இனிமேலும் வாங்குவதில்லை.”
[படத்திற்கான நன்றி]
CDC, Atlanta, Ga.
[பக்கம் 11-ன் பெட்டி]
ஏற்றப்பட்ட இரத்தமும் புற்றுநோயும்
உடலில் ஏற்றப்பட்ட இரத்தம் உடலின் நோய் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடும் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்புத் திறன் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட நோயாளிகள் பிழைப்பதை வெகுவாகப் பாதிக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கற்றுவருகின்றனர். பிப்ரவரி 15, 1987 இதழில் புற்றுநோய் என்ற பத்திரிகை நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட விளக்கமான ஓர் ஆய்வு தகவலின் பேரில் அறிக்கைசெய்தது. “பெருங்குடல் புற்றுநோய் நோயாளிகளில் நீண்டகாலம் உயிர் பிழைத்திருப்பதன்பேரில் குறிப்பிடத்தக்கப் பாதிப்பு இருப்பது காணப்பட்டது. இந்தத் தொகுதியில் மொத்தமாக 5 ஆண்டுகளுக்கு உயிர்பிழைத்திருக்கும் வாய்ப்பு இரத்தமேற்றப்பட்டவர்களில் 48%, இரத்தமேற்றப்படாத நோயாளிகளில் 74% ஆகும்.”
புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளில் இரத்தமேற்றிக்கொண்டவர்களாயிருந்த அநேகருக்கு அது மீண்டும் ஏற்பட்டது என்று தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்டனர். காது, மூக்கு மற்றும் தொண்டை ஆராய்ச்சியின் ஆண்டு தொகுப்பேடுகள், மார்ச் 1989, இந்த மருத்துவர்கள் செய்த ஓர் ஆய்வின்பேரில் அறிக்கைசெய்தது: “குரல்வளையின் எல்லாவித புற்றுநோய்களில் மறுபடியும் மறுபடியுமாக வரும் விகிதம் இரத்தமேற்றிக்கொள்ளாதவர்களுக்கு 14%-மும், இரத்தமேற்றிக்கொண்டவர்களுக்கு 65%-முமாக இருந்தது. வாயறை, தொண்டை, மற்றும் மூக்கு அல்லது மூக்கிணை எலும்பு உட்புழை புற்று நோய்க்கு, திரும்பத் திரும்ப நிகழும் விகிதம் இரத்தமேற்றுதல்கள் இல்லாதபோது 31%-மும், இரத்தமேற்றுதல்களுடன் 71%-முமாக இருந்தது.”
“புற்றுநோய்க்கான இரத்தமேற்றுதல்களும் அறுவை சிகிச்சையும்” என்ற தன்னுடைய கட்டுரையில் டாக்டர் ஜான் S. ஸ்பிராட் முடிவாகக் கூறினார்: “புற்றுநோய் அறுவை நிபுணர் இரத்தம் உபயோகிக்காத அறுவை நிபுணராக மாறவேண்டிய அவசியமேற்படலாம்.”—அமெரிக்க அறுவை சிகிச்சைப் பத்திரிகை, செப்டம்பர் 1986.
[பக்கம் 10-ன் படங்கள்]
இரத்தம் உயிர்காக்கும் மருந்து என்பது வாதத்துக்குரியது, ஆனால் அது மக்களைக் கொல்லுகிறது என்பது வாதத்துக்குரியதாயில்லை