குப்பைக் குவியல்—அதில் நாம் புதைந்து விடுவோமா?
அது உண்மையிலேயே ஒரு புரியாப் புதிர். இந்தச் சந்ததியில் மனிதன் சந்திர மண்டலத்திற்குச் சென்று திரும்பியிருக்கிறான். நவீன அறிவு முன்னேற்றத்தின் அடிப்படையிலமைந்திருக்கும் செயற்கைக்கோள்கள் உயர் ஆய்வு நிழற்படக் கருவிகள் பொருத்தப்பெற்றவையாய் ஏவுகணைகளின் மூலம் விண்வெளியில் கோடிக்கணக்கான மைல்களுக்குச் செலுத்தப்படுகின்றன; அவை தொலைதூரத்தில் இருக்கும் கோள்களின் நுண்விளக்கப் படங்களை அனுப்புகின்றன. மனிதன் சமுத்திரங்களின் ஆழத்திற்கு இறங்கி, யுகங்களாய் மூழ்கிக் கிடக்கும் கடற்கலங்களைக் கண்டுபிடித்து, நெடுங்காலத்திற்கு மறந்துபோன சகாப்தத்தின் பொக்கிஷங்களைக் கரையில் சேர்த்திருக்கின்றான். மனிதனுக்கு நன்மையளிப்பதற்காகவோ அல்லது பூமியிலிருந்து அனைத்து நகரங்களையும் அதன் குடிகளையும் முழுவதுமாக அழித்துவிடுவதற்காகவோ விந்தையாய் அமைந்த அணுவின் ஆற்றலை விஞ்ஞானிகள் பயன்படுத்தியிருக்கின்றனர். மனிதனின் ஒரு விரல்நகத்திலும் பெரியதாயிராத ஒரு சில மிகச் சிறிய சிலிக்கான் கம்ப்யூட்டர் சில்லுகளில் முழு பைபிள் வாசகமும் உடனடியாகப் போட்டுப்பார்ப்பதற்கென பதிவுசெய்யவும் முடியும். ஆனால், அதே சமயத்தில், செயல்திறன் மற்றும் புத்திக்கூர்மையின் பொக்கிஷத்தைப் புதையலாய்ப் பெற்றிருக்கும் மனிதர் தங்களுடைய சொந்த வீட்டுக் குப்பைகளைச் சேர்த்து தகுந்த விதத்தில் அப்புறப்படுத்த முடியாதவர்களாய், தங்களுடைய சந்ததி அதில் உயிரோடு புதைக்கப்படும் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கவும் முடியாத நிலையில் இருக்கின்றனர்.
ஆரம்பமாக, ஐக்கிய மாகாணங்களின் கழிவுகளைப் போக்குவதில் இருக்கும் இரண்டகநிலையைக் கவனியுங்கள். அறிக்கைகளின்படி, அமெரிக்கர் ஒவ்வொரு நாளும் 4,00,000 டன்கள் குப்பை கொட்டுகின்றனர். சாக்கடைக் கழிவு மற்றும் கட்டிடக் கழிவுப் பொருட்களைச் சேர்க்காமல், ஒவ்வொரு ஆண்டும் 16 கோடி டன்கள் குப்பை கொட்டப்படுகிறது—1,000 கால் பந்தாட்ட மைதானங்களில் “30 மாடி உயரத்திற்குப் பரப்பிட போதுமானது, சந்திர மண்டலத்துக்குப் பாதி தூரம் வரையாக ஒன்றன்பின் ஒன்றாக நிற்கும் குப்பை லாரிகளை நிரப்பிட போதுமானது,” என்று நியுஸ்வீக் பத்திரிகை அறிக்கை செய்தது. இந்தக் குப்பைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக பள்ளங்களை மேடுபடுத்துவதற்காக எடுத்துச்செல்லப்படுகின்றது, இவை தரை மட்டத்திற்கு நூற்றுக்கணக்கான அடிகள் உயரத்திற்கு எழும்பிநிற்கும் குப்பைக் குன்றுகளாக எழும்புமளவுக்குக் கொட்டப்படுகிறது.
உதாரணமாக, நியு யார்க் மாநகர் உலகிலேயே மிகப் பெரிய நகர குப்பைக் கிடங்கைக் கொண்டிருக்கிறது—நியு யார்க் ஸ்டடன் தீவில் 2,000 ஏக்கர்கள் (800 ஹெக்டேர்கள்). இந்த மலைப்பிரதேசக் குப்பைக் கிடங்குக்கு ஒவ்வொரு நாளும் 24,000 டன்கள் குப்பை சேர்க்கப்பட்டு இருபது படகுகள் வாயிலாக இருபத்து நான்கு மணிநேரமும் கொண்டுவரப்படுகிறது. ஏறக்குறைய 2000-வது ஆண்டை எட்டுவதற்குள் இந்தக் குப்பைக் கோபுரம் “விடுதலைச் சிலையின் உயரத்தில் பாதிக்கும், எகிப்தின் மகா பிரமிடைவிட அதிக கன அடிகளை எடுக்கும்.” இந்த இடம் குப்பைகளால் நிரப்பப்படும் அந்தச் சமயத்திற்குள், பத்து ஆண்டுகளுக்குள், இது 150 மீட்டர் உயரத்தை எட்டிவிட்டிருக்கும். நியு யார்க் மாநகர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டேவிட் டின்கின்ஸ் பதவி ஏற்றபோது, சுகாதார ஆணையர் பின்வரும் செய்தியால் வாழ்த்தினார்: “நகர மன்றத்துக்கு வரும் தங்களுக்கு நல்வரவு. அதே சமயத்தில், குப்பையைப் போடுவதற்கு உங்களுக்கு இடம் இல்லை.”
“அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு பெரிய நகரமும் குப்பைகளால் நிரப்பப்படும் பிரச்னை இருக்கிறது,” என்று ஒரு நிபுணர் கூறினார். “அமெரிக்காவின் குப்பைக் கிடங்குகள் வேகமாக நிரம்பிக்கொண்டிருக்கின்றன, புதியவையும் உண்டாக்கப்படுவதில்லை,” என்று யு.எஸ்.நியுஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் அறிக்கை செய்தது. “1995-க்குள் இப்பொழுது இருக்கும் அப்படிப்பட்ட கிடங்குகளில் பாதி மூடப்பட்டுவிடும். அவற்றில் பல நவீன சுற்றுப்புறச் சூழல் தராதரங்களைப் பூர்த்தி செய்வதில்லை,” என்று அந்த அறிக்கை தொடர்ந்தது.
கலிஃபோர்னியாவில் சராசரி குடிமகன் ஓராண்டுக்கு ஏறக்குறைய 1,100 கிலோ கிராம் எடை குப்பைக்கூளத்தைக் கொட்டுகிறான். “லாஸ் ஆன்ஞல்ஸ் பகுதியில் ஒன்பது நாட்களுக்கு ஒருமுறை போல் டாட்ஜர் விளையாட்டு அரங்கத்தை நிரப்புமளவான குப்பையை நாங்கள் உண்டாக்குகிறோம்,” என்றார் ஒரு சுற்றுப்புறச்சூழல் நிபுணர். லாஸ் ஆன்ஞல்ஸிலுள்ள குப்பைக் கிடங்குகள் 1995-க்குள் முழு அளவில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கணக்குத்தீர்க்கவேண்டிய நாள் எதிர்பார்த்திருப்பதைவிட சீக்கிரமாக வரும் என்று கலிஃபோர்னியா சுற்றுப்புறச்சூழல் ஆய்வாளர் குறிப்பிட்டார்: “உண்மையில் ஒவ்வொரு நாளும் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடம் இல்லாமல் குப்பை லாரிகள் நகரைச் சுற்றி வருகின்றன.”
சிக்காகோ தனது 33 கிடங்குகளை இந்தப் பத்தாண்டின் முதல் பாதியில் மூடிவிடும் நிலையை எதிர்ப்படுகிறது. குப்பைக்கூள வாதையை எதிர்ப்பட்டுள்ள மற்ற பெரிய நகரங்கள் தங்கள் குப்பைகளை மாகாணங்கள் கடந்து கொட்டிவருகின்றன. இது மற்றவர்களுடைய தேவையற்ற குப்பையைப் பெற்றிடும் மாகாணங்களில் எதிர்ப்பைக் கூட்டியிருக்கிறது. அமெரிக்காவின் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஏறக்குறைய 28,000 டன்கள் குப்பை லாரிகளில் எடுத்துச்செல்லப்படுகையில் ஒருவர் அவற்றைக் கொட்டுவதற்கான இடத்தைக் கண்டுபிடிக்கும் நோட்டத்தில் இருக்கிறார். நியு யார்க், நியு ஜெர்சி, மற்றும் பென்சில்வேனியா ஒரு வருடத்துக்கு எண்பது லட்சம் குப்பையை ஏற்றுமதிசெய்கிறது என்று அறிக்கைசெய்யப்படுகிறது. ஆம், கழிவை அகற்றுவதற்கான ஒரு விலையுயர்ந்த ஏற்பாடு. “அதைவிட மோசம்,” என்று நியுஸ் வீக் பத்திரிகை தொடருகிறது, “கிழக்குப் பகுதிக்கு குளிர்சாதன வசதி படைத்த வாகனங்களில் இறைச்சியை ஏற்றிச் செல்லும் சில லாரி உரிமையாளர்கள் திரும்ப வரும்போது பூச்சிப்புழுக்களையுடைய குப்பையை மேற்குப் பகுதிக்கு ஏற்றிவருகிறார்கள்.” உடல் நல ஆபத்துகள் இருப்பதால் இந்தப் பழக்கத்தைத் தடை செய்வதுகுறித்து அரசு சிந்தித்துவருகிறது.
குப்பைக்கூள பிரச்னை ஐக்கிய மாகாணங்களுக்கு மட்டுமே ஒரு பிரச்னையாக இல்லை. இந்தக் குப்பைக் குவியல் பிரச்னையால் மற்ற தேசங்களும் அச்சுறுத்தப்படுகின்றன. உதாரணமாக, ஜப்பான், இந்தப் பிரச்னையை மேற்கொள்ள முயலுகிறது. 2005-க்குள் டோக்கியோவும் அதன் அண்மை நகரங்களும் 30.43 லட்சம் டன்கள் குப்பையைக் கூடுதலாகக் கொண்டிருக்கும். அவற்றை ஏற்றுமதி செய்யும் நிலையை அவர்களும் சந்திக்கிறார்கள். “சந்தையில் விற்பனைகாணாத ஒரு ஜப்பானிய ஏற்றுமதி குப்பை,” என்றார் ஓர் எழுத்தாளர்.
சில நாடுகள் இன்னும் வீட்டுக் குப்பையை அப்புறப்படுத்தும் இந்த வாதையால் அவதியுறவில்லை என்றாலும், தங்களுடைய தொழிற்சாலைக் கழிவுகளை என்ன செய்வது என்ற பிரச்னையை அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, தங்களுடைய குப்பைகளை எரித்துவிடுவதற்கு இராட்சத எரிதொட்டிகளைப் பயன்படுத்தும் நாடுகள் ஆயிரக்கணக்கான டன்கள் சாம்பலைப் பெற்றிருக்கும் பிரச்னையை சந்திக்கின்றனர், அதில் பெருமளவு உயர்ந்த நச்சுத்தன்மை வாய்ந்தது. என்னுடைய வீட்டுக் கொல்லைப்புறத்தில் வேண்டாம் (NIMBY [Not in my back yard]) என்பதுதான் அண்மையில் குப்பைகள் கொட்டப்படும் பிரச்னையை எதிர்ப்படும் குடிமக்களின் ஓங்கியெழும் குரலாக இருக்கிறது. அந்தக் குப்பைகளை என்ன செய்வது என்பது அதைக் குறித்து அக்கறையுள்ளவர்களுக்கு சிக்கலான கேள்வியாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான டன்கள் குப்பைக்கூளத்தைச் சுமந்துகொண்டிருக்கும் கடற்கலங்கள் அயல் நாட்டுக் கரைகளில் ‘கொல்லைப்புறத்திற்காக’ தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் அநேகம் திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. எங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் வேண்டாம், என்ற தீர்மானமான நோய்க்குறிக்கு ஒத்திசைந்துவிட்டனர்.
அண்மை ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான டன்களாயிருக்கும் வேண்டாத குப்பைக்கூளத்திற்கு வளரும் நாடுகள் குப்பைக் கிடங்குகளாக ஆகியிருக்கின்றன. அவற்றில் சில பிறர்நலம் கருதாத மனிதரால் வயல்வெளிகளிலேயே கொட்டப்பட்டிருக்கின்றன. “ஐரோப்பியரும் அமெரிக்கரும் தங்களுடைய சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாப்பது என்பது மற்றவர்களுடைய நிலங்களை மாசுபடுத்துவதாயிருக்கிறது என்பதைக் காணவருகின்றனர்,” என்று உவர்ல்டு பிரஸ் ரிவ்யு என்ற பத்திரிகை எழுதியது.
சுவிட்சர்லாந்தின் ஸூரிச் அதன் எஞ்சிய குப்பையை ஃபிரான்சுக்கு ஏற்றுமதி செய்கிறது என்றும், கானடா, ஐக்கிய மாகாணங்கள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா கிழக்கு ஐரோப்பாவின் “கொல்லைப்புறத்தின்” குப்பை மைதானங்களில் இடம் கண்டுள்ளனர் என்றும் அக்டோபர் 1988 தி ஜெர்மன் ட்ரிபியூன் அறிக்கை செய்தது.
இப்படியாக இது தொடருகிறது. “குப்பைக்கூள பிரச்னை நாம் இதுவரை எதிர்ப்பட்டிருப்பது போன்றவை அல்ல,” என்றார் ஓர் ஐ.மா. அதிகாரி. “வறட்சி ஏற்பட்டால், மக்கள் தண்ணீரைக் குறைத்துக்கொள்கின்றனர். ஆனால் இந்த ஆபத்தான பிரச்னையிலோ, நாம் குப்பையைக் கூடுதலாக உண்டுபண்ணுகிறோம்.” (g90 9/22)
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
‘சந்திர மண்டலத்துக்குப் பாதி தூரம் வரையாக ஒன்றன்பின் ஒன்று நிற்கும் குப்பை லாரிகளை நிரப்பிட போதுமானது’
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“சந்தையில் விற்பனைகாணாத ஒரு ஜப்பானிய ஏற்றுமதி குப்பை”