இன்றைய செய்திகளின் அர்த்தம்
ஒரு செய்தித்தாளைப் பாருங்கள், அல்லது தொலைக்காட்சியை போட்டுப் பாருங்கள். நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள், கேட்கிறீர்கள் அல்லது பார்க்கிறீர்கள்? கொலை, கற்பழிப்பு, போத மருந்துகள், குடும்ப சீர்குலைவு, திடீர் ஆட்சி மாற்றங்கள், புரட்சிகள், மோசடிகள், மூடி மறைத்தல்களைப் பற்றிய கதைகள், எய்ட்ஸ் போன்ற நோய்கள், நிலநடுக்கங்கள், பசி, வறுமை. இதுவே மாறாமல் இன்றைய செய்தியாக இருக்கின்றது. என்றபோதிலும், செய்தியின் இன்றியமையாத முக்கியத்துவமுள்ள ஓர் அம்சம் பொதுவாக அசட்டை செய்யப்படுகிறது, அது குறிப்பிடப்பட்டாலும்கூட வேகமாக அது மனதிலிருந்து அகற்றப்படுகிறது.
உதாரணமாக, தன்னுடைய முதலாம் பதவி காலத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி ரோனால்ட் ரீகன் அர்மகெதோனைப் பற்றி இவ்விதமாகப் பேசினார்: “அது நிகழ்வதைப் பார்க்கப் போகிற சந்ததி நாமாக இருப்போமோ என்பதாக நான் யோசித்துக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன்.” என்றபோதிலும் அதற்குப் பிற்பாடு அவர் விஷயத்தை முக்கியத்துவமற்றதாகச் செய்து, “நாம் அர்மகெதோனுக்கு இசைவாக திட்டமிட வேண்டும்” என்பதாக தான் ஒருபோதும் சொல்லவில்லை என்பதாக அடித்துக் கூறிவிட்டார்.
என்றபோதிலும், பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல், அர்மகெதோன் வருவதைப் பற்றி பேசுகிறது. “பூலோகமெங்குமுள்ள ராஜாக்கள் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்திற்குக்” கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என்பதாக அது விளக்குகிறது. தொடர்ந்து பைபிள், தேசங்கள், “எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் எனப்பட்ட இடத்திலே” கூட்டிச் சேர்க்கப்படும் என்பதாகச் சொல்லுகிறது.—வெளிப்படுத்துதல் 16:14, 16, கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு.
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் பூமியை அசைவிக்கும் அந்த யுத்தம் எப்போது சம்பவிக்கும்? அது நம்முடைய காலமாக இருக்கக்கூடுமா? ரோனால்ட் ரீகனும்கூட பின்வருமாறு சொல்ல தூண்டப்பட்டார்: “அண்மையில் அந்தத் தீர்க்கதரிசனங்களில் எதையாவது நீங்கள் கவனித்தீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் என்னை நம்புங்கள், அவை நிச்சயமாகவே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் காலங்களை விவரிக்கின்றன.”
மிகுந்த முக்கியத்துவமுள்ள செய்திகள்
பின்வரும் பைபிள் தீர்க்கதரிசனத்தை நீங்கள் கவனித்துப் பாருங்கள்: “மேலும், [இந்தக் காரிய ஒழுங்கு முறையின்] கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” (2 தீமோத்தேயு 3:1–5) இந்தத் தீர்க்கதரிசனம் இப்போது நிறைவேறி வருகிறது என்பதாக நீங்கள் சொல்வீர்களா?
மேலுமாக, தம்முடைய எதிர்கால வந்திருத்தலையும், காரிய ஒழுங்கின் முடிவையும் பற்றி சொல்லுகையில் இயேசு இவ்விதமாக முன்னுரைத்தார்: “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள் . . . ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், . . . பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். . . . அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.” (மத்தேயு 24:3–12) இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறி வருகிறது என்பதையும்கூட நீங்கள் ஒப்புக்கொள்ளமாட்டீர்களா?
இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தின் சமயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கப் போகும் தம்மை பின்பற்றுகிறவர்கள் அவை உண்மையில் எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதை மதித்துணரும் பொருட்டு, இயேசு இந்த உவமையைக் கொடுத்தார்: “அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது, வசந்த காலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். அப்படியே இவைகள் [உண்மையில், இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கும் சம்பவங்கள்] சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.”—லூக்கா 21:29–31.
நிச்சயமாகவே, கடவுளுடைய ராஜ்ய வருகையும் அவருடைய அர்மகெதோன் யுத்தமும் வெகு அருகாமையில் இருப்பதற்கு அத்தாட்சி ஏராளமாக இருக்கிறது! இன்றியமையாத இந்தச் செய்தி உலகின் செய்தி அலைவரிசைகளால் பெரும்பாலும் முழுமையாகவே அசட்டை செய்யப்பட்டிருக்கையில், யெகோவாவின் சாட்சிகள் இதை உலகம் முழுவதிலும் பரப்புவதில் பங்கு கொள்கிறார்கள். அவர்கள் சொல்லும் நற்செய்தி, பூமியை கடவுள் எல்லாச் சீர்கேட்டிலிருந்தும் சுத்திகரிப்பார் என்பது மட்டுமின்றி ஆனால், அவருடைய ராஜ்ய அரசாங்க ஆட்சியின் கீழ், முழு பூமியும் மகிழ்ச்சிதரும் தோட்டம் போன்ற ஒரு பரதீஸாக மாற்றப்படும் என்பதாகும்.
இந்த விஷயங்களைக் குறித்து பைபிள் வாக்களிப்பதாவது: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம் பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டு போவர்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” மேலுமாக: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—நீதிமொழிகள் 2:21, 22; சங்கீதம் 37:11, 29.
மகத்தான இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் வெகு அருகாமையில் இருப்பதற்கு அத்தாட்சியைப் பற்றி மேம்பட்ட வகையில் தகவல் தெரிவிக்கப்பட நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இதை யெகோவாவின் சாட்சிகளிடம் தெரிவியுங்கள். உண்மையில் கடவுளுடைய ராஜ்யம் அருகாமையில் இருக்கிறது, ஆம் புதிய நீதியுள்ள ஓர் உலகம் சமீபத்திலிருக்கிறது என்பதே இன்றைய செய்திகளின் அர்த்தமாக இருப்பதை பகுத்துணருவதற்கு உங்களுக்கு உதவி செய்ய அவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்பர். (g90 8/22)