வீட்டை அலங்கரித்தல் பலன்தரும் ஒரு சவால்
உங்களை அழைத்திருக்கும் ஒருவருடைய அடக்கமான வீட்டிற்குள் பிரவேசிக்கிறீர்கள். முதல் பார்வையிலேயே உங்களுக்குப் பிரியமான வகையில் அலங்கரிக்கப்பட்ட ஓர் உறைவிடத்தைக் காண்கிறீர்கள். வண்ணம் செம்மையாகப் பூசப்பட்டிருக்கிறது.
எல்லா வேலைகளும் அந்தக் குடும்ப அங்கத்தினராலேயே செய்யப்பட்டது என்பதை நீங்கள் பின்னரே அறிய வருவது உங்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. வீட்டை அலங்கரிக்கும் சவாலை அவர்கள் மேற்கொண்டார்கள். ஆனால் நீங்களே செய்யும் ஒரு வேலைத்திட்டத்தில் படுகுழிகள் இருக்கக்கூடும். எனவே எந்த ஒரு வீட்டு அலங்கரிப்புத் திட்டத்தையும் மேற்கொள்வதற்கு முன்பு, பின்வரும் காரியங்களைக் கவனியுங்கள்.
பொருட்களை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுங்கள்
உங்களுடைய வீட்டை அலங்கரிக்கும் விதத்துக்கு வருகையில், நீங்கள் தெரிந்துகொள்வதற்கு இருக்கும் பொருட்களில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. உங்களுடைய பிராந்தியத்தில் நடைமுறையாக இருப்பது என்ன? அழகுபடுத்த சுவரில் ஒட்டப்படும் காகிதங்கள் கண்களுக்கு இன்பமான ஒரு தோற்றத்தைத் தருமா? அல்லது நீங்கள் ஒரு வண்ணப் பூச்சு அல்லது ஒரு துணித்திரையைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா? ஒருவேளை சாதாரணமாக ஒரு வண்ணத்தைப் பூசுவது நீங்கள் விரும்பும் தோற்றத்தைக் கொடுக்கும் என்பதாக முடிவு செய்யக்கூடும். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, நடைமுறை அம்சங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். இது செலவு, அதன் நிலைக்கும் தன்மை, பொருத்தப்படும் காரியம் எவ்வளவு எளிமையாகச் செய்யப்படுகிறது, சுவரைச் சுத்தப்படுத்திப் பராமரிப்பதற்கு எடுக்கும் நேரம் மற்றும் முயற்சி ஆகியவற்றை உட்படுத்துகிறது. இந்த அனைத்துக் காரியமும் இந்த வேலையை ஒரு கைதேர்ந்த ஆளை வைத்து செய்வதற்கு என்ன செலவாகும் என்பதோடு ஒப்பிடப்படவேண்டும்.
நீங்கள் அலங்கரிப்புக்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் வண்ணமும் முக்கியமானது. அறையின் மற்ற அம்சங்களுடன் அது ஒத்துச்செல்லுமா? அறை பொதுவாகக் குளிர்ச்சியாக இருந்தால், ஓர் அனல்கொண்ட வண்ணம் அனலான ஓர் உணர்வை உண்டுபண்ணும். இளநீலம் அல்லது பச்சை வண்ணங்கள் வீட்டின் அனலான அறைகள் குளிர்ச்சியாகத் தோன்றச் செய்யும். இருண்ட அல்லது வெளிச்சம் குறைவாக இருக்கும் அறைகள் இளநிற அமைப்பால் வெளிச்சமாகத் தோன்றும்படிச் செய்யலாம்.
உங்கள் வேலையைத் திட்டமிட்டு ஆயத்தம் செய்யுங்கள்
அலங்கரிப்பில் வெற்றி காண்பதன் இரகசியம் நல்ல ஆயத்தத்தில் இருக்கிறது! அலங்கரிப்பைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்கள், வண்ணம் பூசும் வேலைக்கு எடுக்கும் நேரத்துடன் ஒப்பிடுகையில் அதற்கு மேல்பரப்பை ஆயத்தம் செய்வதற்காக எவ்வளவு நேரம் எடுக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்ததுண்டா? அதை நீங்களே செய்வதாயிருந்தால், ஆயத்தப்படும்போது நேரத்தையும் முயற்சியையும் அளந்துகொண்டிருக்காதீர்கள். வறண்ட, சொரசொரப்பற்ற, சுத்தமான ஒரு மேற்பரப்பைக் கொண்டிருப்பதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வெடிப்புகளுள்ள மேற்பரப்புகளை அடைத்துப் பழுதுபாருங்கள். பின்னர் பழுதுபார்த்த அந்த மேற்பரப்பை உப்புக் காகிதம் கொண்டு தேய்க்க வேண்டும். நீங்கள் வண்ணம் பூச ஆரம்பிப்பதற்கு முன்பு, சுவரிலிருந்து தூசியை அப்புறப்படுத்துவதற்காக மேற்பரப்பை ஓர் ஈரத் துணியால் கழுவி, உலர விடுங்கள்.
உங்கள் செயல் திட்டத்தைப் பற்றியது என்ன? உங்கள் முழு குடும்பத்தையும் உட்படுத்த ஏற்பாடு செய்திருக்கிறீர்களா? அனைவரும் செயல்பட உந்தப்படுவார்கள் என்பது மட்டுமல்ல, வேலை முடிந்த பின்னர் அதில் பெருமைப்படுவர், அது நிச்சயமாகவே நல்ல கவனிப்பை செலுத்த ஊக்கமளிக்கிறது. வீட்டை அலங்கரிப்பதை நீங்கள் மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக, நீங்கள் எல்லாரும் செய்ய வேண்டும் என்ற திட்டமாக அதை அமைத்துக்கொள்ளுங்கள். மிகுந்த பலன்கள் உண்டு. (g90 6/22)
[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]
உங்கள் பிரஷ்களுக்கும் உருளைகளுக்கும் கவனம் செலுத்துங்கள்
1. புதிய பிரஷின் மயிர் பாகத்தை வளைத்து அதிலிருந்து தூசியையும் உதிரும் மயிரை முழுவதுமாக எடுத்துவிடுங்கள்.
2. பிரஷைப் வண்ணத்தில் ஆழமாக அமிழ்த்துவதைத் தவிருங்கள். (அளவுக்கு அதிகமான வண்ணம் கைப்பிடியில் பட்டு பதிந்துவிடுவதைத் தவிர்ப்பதற்கு மயிர்ப் பகுதியின் நீளத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கும் பாதிக்கும் இடையளவு மட்டுமே வண்ணத்திலிடப்பட வேண்டும்.)
3. பிரஷை உபயோகத்திற்குப் பின்னர் சுத்தம் செய்யுங்கள். எண்ணை சார்ந்த வண்ணத்துக்கு வெறிய வஸ்துக்களைப் பயன்படுத்துங்கள், நீர் சார்ந்த வண்ணங்களுக்கு மிதமான சுடுநீரைப் பயன்படுத்துங்கள்.
4. சுத்தமான, உலர்ந்த பிரஷை சுத்தமான காகிதத்தில் சுற்றி வைக்கவும், எஞ்சியுள்ள ஈரத்தை அது ஈர்த்து மயிர்ப்பகுதியை சரியான நிலையில் வைத்திட உதவும்.
5. வண்ண உருளைகள் விஷயத்திலும் இதே வழிமுறையைப் பின்பற்றுங்கள். அடுத்த முறை நீங்கள் பயன்படுத்தும்போது வண்ணத்தில் மாறுதலைத் தவிர்க்கவும் எந்த ஓர் உலோகப் பகுதியும் துருப் பிடிக்காதபடிக்கு அவை முழுவதுமாக உலர்ந்துவிட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.