பொதுவான ஐந்து போலி வாதங்கள் அவற்றால் மோசம்போக வேண்டாம்!
“ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.”a இந்த ஆலோசனை ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டது, இருந்தாலும் அது எப்பொழுதும் போல் உண்மையாகவே ஒலிக்கிறது. இன்று நம்மை இணங்கச்செய்யும் குரல்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம்: திரையுலக நட்சத்திரங்கள் ஒப்பனைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள், அரசியல்வாதிகள் கொள்கைகளைப் பரப்புகிறார்கள், விற்பனையாளர் பொருட்களை சந்தையில் தள்ளுகிறார்கள், குருமார்கள் கோட்பாடுகளை விளக்குகிறார்கள். அநேக சமயங்களில் இணங்கச் செய்யும் அந்தக் குரல்கள் வஞ்சிப்பவையாய் நிரூபிக்கின்றன—வீண்வார்த்தைகளுக்குச் சற்றே அதிகமாக இருந்திருக்கின்றன. என்றபோதிலும், மக்கள் பொதுவாக மிக எளிதாய் மோசம்போய்விடுகின்றனர்.
அநேக சமயங்களில் இப்படியிருப்பதற்குக் காரணம், மக்கள் உண்மைக்கும் போலிவாதத்துக்குமுள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியாதிருப்பதே. நியாயமான விவாதத்தின் பாதைக்கு விலகிய எதையும் விவரிப்பதற்கு காரணக் காரியங்களின் அடிப்படையில் சிந்திக்கும் மாணவர்கள் “போலி வாதம்” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். எளியவிதத்தில் சொல்லவேண்டுமானால், போலி வாதம் என்பது மோசம்போக்கும் அல்லது ஆதாரமற்ற விவாதமாகும், முடிவு முன் சொல்லப்பட்ட கூற்றுகளை அல்லது வியாக்கியானங்களைத் தொடரும் ஒன்றாக இருக்காது. என்றபோதிலும், போலி வாதம் மிகுந்த வல்லமையான விதத்தில் இணங்கச்செய்யும் தன்மையுடையவையாய் இருக்கக்கூடும், ஏனென்றால் அவை உணர்ச்சிகளை நோக்கி செலுத்தப்படுகின்றன, நியாய உணர்வுக்கு அல்ல.
வஞ்சிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு ஓர் அடிப்படை போலி வாதம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிந்திருப்பதாகும். எனவே நாம் ஐந்து பொதுவான போலிவாதங்களைக் கடவுள் கொடுத்திருக்கும் “பகுத்தறியும் ஆற்றலை” கூர்மைப்படுத்தும் நோக்குடன் சற்று கவனிப்போம்.—ரோமர் 12:1, NW.
போலி வாதம் எண் 1
ஆளைத் தாக்குதல் இப்படிப்பட்ட போலி வாதம் மிகவும் சரியான விவாதத்தை அல்லது கூற்றைத் தவறென நிரூபிக்க அல்லது காண்பிக்க அதை அளித்திடும் ஆள் மீது சம்பந்தமில்லாத தாக்குதலை நடத்த முற்படுணகிறது.
பைபிளிலிருந்து ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு முறை இயேசு தமக்கு நேரிடப்போகிற மரணத்தையும் தம்முடைய உயிர்த்தெழுதலையுங் குறித்து மற்றவர்களுக்குத் தெளிவுபடுத்திட முனைந்தார். மற்றவர்களுக்கு இவை புதிய மற்றும் புரிந்துகொள்வதற்குக் கடினமான கருத்துகளாகும். ஆனால் இயேசுவின் போதனைகளின் மதிப்புகளை சீர்தூக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக, “இவன் பிசாசு பிடித்தவன்,” என்று சிலர் இயேசுவையே சொல்லால் தாக்கினர்.—யோவான் 10:20; அப்போஸ்தலர் 26:24, 25 ஒப்பிடவும்.
ஒருவன் அல்லது ஒருத்தி சொல்வதைக் கேட்க நமக்கு விருப்பமில்லாத போது அவளை அல்லது அவனை “முட்டாள்,” “பைத்தியம்,” அல்லது “ஒன்றும் தெரியாதவன்” என்று சொல்லிவிடுவது எவ்வளவு எளிது. அது போன்று ஒருவரை மறைமுகமாகக் குத்தலான வார்த்தைகளில் தாக்குவது மற்றொரு வகையாகும். இதற்கு உதாரணங்கள்: “காரியத்தை நீ உண்மையிலேயே புரிந்திருப்பாயானால், உனக்கு அந்த நோக்குநிலை இருக்காது,” அல்லது “நீ நம்பவேண்டும் என்று சொல்லப்படுவதால் தானே நீ அதை நம்புகிறாய்.”
ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள், மறைமுகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்களை மிரட்டுவதாகவும் இணங்கச்செய்வதாகவும் இருக்கக்கூடும் என்றாலும், சொல்லப்பட்டதை அவை ஒருபோதும் தவறென்று நிரூபிக்காது. எனவே இந்தப் போலிவாதத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!
போலி வாதம் எண் 2
அதிகாரத்திடம் திரும்புதல் இவ்வகையான சொல் மிரட்டல் நிபுணர்கள் அல்லது பிரபலமானவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களிடமாகக் திரும்புவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. உண்மைதான், ஆலோசனைக்கு நம்மைவிட அதிகமாகத் தெரிந்திருக்கும் ஆட்களிடம் திரும்புவது இயல்பான காரியமே. ஆனால் அதிகாரத்திடமாகத் திரும்புவது எல்லாமே சரியான விவாதத்தின் பேரில் சார்ந்திருக்க முடியாது.
உதாரணமாக, உங்களுடைய மருத்துவர் உங்களிடம், “உங்களுக்கு மலேரியா இருக்கிறது,” என்று சொல்லுகிறார். அதற்கு நீங்கள், “உங்களுக்கு எப்படித் தெரியும், டாக்டர்?” என்று கேட்கிறீர்கள். அதற்கு அவர், “இதோ பாருங்கள், நான் ஒரு டாக்டர், இந்தக் காரியங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருப்பதைவிட எனக்கு அதிகமாகத் தெரியும். நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்கு மலேரியா இருக்கிறது,” என்று சொல்வது எவ்வளவு நியாயமற்றதாக இருக்கும். அவருடைய கணிப்பு அநேகமாய்ச் சரியாக இருந்தாலும், அவர் அப்படிச் சொல்வதனால் உங்களுக்கு மலேரியா இருக்கிறது என்று நியாய விவாதம் செய்வது போலிவாதமாகும். உங்களில் காணப்படும் நோய்க்குறிகள், இரத்தப்பரிசோதனை முடிவுகள் போன்ற உண்மைகளை உங்களோடு கலந்துபேசுவது எவ்வளவோ மேலானதாக இருக்கும்.
அதிகாரத்திடம் கவனத்தைத் திருப்புகிற மிரட்டலுக்கு இன்னொரு உதாரணம் யோவன் 7:32-49-ல் விவரிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் இயேசு கிறிஸ்துவைக் கைது செய்ய அனுப்பப்படுகிறார்கள் என்று அதில் வாசிக்கிறோம். என்றபோதிலும் அவருடைய போதனையால் அதிகமாகக் கவர்ந்திழுக்கப்பட்டவர்களானதால், அவரைக் கைது செய்வதற்குப் பதிலாகத் தங்களுடைய அதிகாரிகளிடம், “அந்த மனுஷன் பேசினதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை,” என்றார்கள். அதற்கு பதிலளிப்பவர்களாய், இயேசுவின் எதிரிகள், “நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?” என்று கேட்டார்கள். இயேசுவின் போதனையை மறுத்துப்பேசுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைக் கவனியுங்கள். மாறாக இயேசு சொன்ன எதையும் அவமதிப்பதற்குக் காரணமாக அந்த யூத தலைவர்கள் மோசயின் நியாயப்பிரமாணத்தில் “தேறினவர்கள்” என்ற தங்களுடைய சொந்த அதிகாரத்தினிடமாகத் திரும்பினர்.
அக்கறைக்குரிய காரியம் என்னவென்றால், இன்றைய குருமார்களும் திரித்துவம், ஆத்துமா அழியாமை மற்றும் எரிநரகம் போன்ற போதனைகளை பைபிளிலிருந்து நிரூபிக்க முடியாதபோது, அதேவிதமான முறைகளுக்குத் திரும்புகின்றனர் என்பது தெரிந்ததே.
செயலற்ற அதிகாரத்திடமாகத் திரும்புதல் விளம்பரத்திலும் நிரம்பியிருக்கிறது. இதில் புகழ்பெற்றவர்கள் தங்களுடைய துறைக்கு வெகுவாக தூரமாயிருக்கும் காரியங்களுக்குச் சாட்சி பகர்கின்றனர். குழிப்பந்தாட்டத்தில் புகழ்பெற்ற ஒருவர் புகைப்பட நகல் எடுக்கும் கருவியை நீங்கள் வாங்கும்படி ஊக்குவிக்கிறார். ஒரு கால்பந்தாட்டக்காரர் குளிர்சாதனப் பெட்டிகளுக்குப் பரிந்துரை செய்கிறார். ஒலிம்பிக் உடற்பயிற்சித்துறை வல்லுநர் ஒரு குறிப்பிட்ட காலைச் சிற்றுண்டிப் பணியாரத்துக்கு தானியவகையை சிபார்சு செய்கிறார். அப்படிப்பட்ட “அதிகாரிகள்” விற்பனைசெய்யும் அப்படிப்பட்ட பொருட்களைக் குறித்து சற்றே அறிந்திருக்கிறார்கள், அல்லது ஒன்றும் அறியாதிருக்கிறார்கள் என்பதை அநேகர் நின்று யோசிப்பது இல்லை.
தகுதிவாய்ந்த நிபுணர்களுங்கூட—மற்றவர்களைப்போல—ஒருதலைப்பட்சமாய் இருக்கக்கூடும். நம்பிக்கைக்குரிய சான்றளிக்கிற ஆய்வாளர் புகைபிடிப்பது தீங்கற்றது என்று உரிமைப்பாராட்டக்கூடும். ஆனால் அவரோ அல்லது அவளோ புகையிலைத் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட “நிபுணர்” சாட்சியம் சந்தேகிக்கப்படவேண்டியதாய் இருக்காதா?
போலி வாதம் எண் 3
‘கூட்டத்தைச் சேர்ந்துகொள்ளுங்கள்’ இதில் கவனம் உணர்ச்சிகள், தப்பெண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளிடம் திருப்பப்படுகிறது. மக்கள் பொதுவாகவே இணங்கிச்செல்ல விரும்புகின்றனர். இன்று இருந்துவரும் அபிப்பிராயங்களுக்கு எதிராகப் பேசுவது என்ற எண்ணமே நம்மைப் பின்வாங்கச்செய்கிறது. பெரும்பான்மையினரின் அபிப்பிராயம் அப்படியே சரியாக இருக்கிறது என்று கருதும் மனச்சாய்வு ‘கூட்டத்தைச் சேர்ந்துகொள்ளுங்கள்’ என்ற போலிவாதத்தில் சக்திவாய்ந்த விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு பிரபல பத்திரிகையில் ஒரு விளம்பரம் புன்முறுவல் கொண்ட பலரைக் காட்டியது, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கிளாஸ் ரம் மதுவை அனுபவித்துக்களிக்கிறார்கள். அந்தப் படத்தில் ஒரு சுலோகம்: இதுதான் நடக்கிறது. அமெரிக்கா முழுவதும் மக்கள் மாறிச்செல்கிறார்கள் . . . ரம்முக்கு.” இதுதான் ‘கூட்டத்தைச் சேர்ந்துகொள்வதற்காக’ கவனத்தைத் திருப்புதல்.
ஆனால் மற்றவர்கள் ஒரு காரியத்தை யோசிக்க அல்லது செய்யக்கூடியவர்களாய் இருந்தாலும், நீங்கள் அப்படிச் செய்ய வேண்டும் என்று அது அர்த்தப்படுத்துமா? மற்றும் பிரபலமான அபிப்பிராயங்கள் உண்மைக்கு ஒரு நம்பத்தகுந்த அளவுகோல் அல்ல. கடந்த நூற்றாண்டுகளினூடே எல்லா வகையான கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன, பின்னர் அவை தவறு என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. என்றபோதிலும், ‘கூட்டத்தைச் சேர்ந்துகொள்ளுங்கள்’ என்ற போலி வாதம் தொடர்ந்திருக்கிறது. ‘எல்லாரும் செய்கிறார்கள்,’ என்று தொடர்ந்து எழுப்பப்படும் குரல் மக்களைப் போதமருந்துகளுக்கும், விபசாரம் செய்வதற்கும், முதலாளிகளிடமிருந்து திருடவும் வரிசெலுத்துவதில் ஏமாற்றுவதற்கும் தூண்டுகிறது.
உண்மை என்னவெனில், எல்லாருமே அந்தக் காரியங்களைச் செய்வதில்லை. அவர்கள் அப்படிச் செய்தாலும், அதை நீங்கள் செய்வதற்கு எந்தக் காரணமுமில்லை. யாத்திராகமம் 23:2-ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனை ஒரு நல்ல பொது நடத்தை விதியாக அமைகிறது: “தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக.”
போலி வாதம் எண் 4
இது/அல்லது அது விவாதம் இந்தப் போலி வாதம் தெரிந்துகொள்வதற்கு இருக்கும் வாய்ப்புகள் ஏராளமாய் இருக்க, அதை இரண்டுக்கு மட்டும் குறைத்துவிடுகிறது. உதாரணமாக ஒருவரிடம் இப்படியாகச் சொல்லப்படலாம்: ‘நீங்கள் இரத்தமேற்றுதலை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது நீங்கள் மரித்துவிடுவீர்கள்.’ காரணம் எந்த வகையிலும் ‘இரத்தத்திலிருந்து விலகியிருக்கவேண்டும்’ என்ற யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் ஆதாரமுடைய தீர்மானத்தினால் அவர்கள் அநேக சமயங்களில் இப்படிப்பட்ட விவாதத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. (அப்போஸ்தலர் 15:29) இப்படியாக விவாதிப்பதன் பலவீனம் யாது? இது மற்ற சாத்தியமான காரியங்களைத் தள்ளிவிடுகிறது. மாற்று சிகிச்சைகள் இருக்கின்றன என்றும் அநேக அறுவைசிகிச்சைகள் இரத்தமேற்றுதல் இல்லாமல் செய்யப்படலாம் என்றும் உண்மைகள் காண்பிக்கின்றன. திறமை வாய்ந்த மருத்துவர்கள் இரத்த இழப்பு குறைவாக இருக்கும் வகையில் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இன்னொரு சாத்தியக்கூறு என்னவெனில், இரத்தமாயிராத திரவங்கள், பிளாஸ்மா கனஅளவைப் பெருக்கும் பொருட்கள் பயன்படுத்தப்படுதலாகும்.b மேலும், அநேகர் இரத்தமேற்றி மரித்துமிருக்கின்றனர். அதேசமயத்தில் அநேகர் இரத்தமேற்றிக்கொள்ள மறுத்து உயிருடனுமிருந்திருக்கின்றனர். இது/அல்லது அது விவாதத்தில் காணப்படும் துவாரம் பெரியதொன்று.
எனவே இது/அல்லது அது விவாதத்தை நீங்கள் சந்திக்கும்போது, உங்களை இப்படியாகக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘தெரிந்துகொள்வதற்கு உண்மையிலேயே இரண்டு காரியங்கள்தான் இருக்கின்றனவா? மற்றவையும் இருக்கக்கூடுமா?’
போலி வாதம் எண் 5
மிகுதியாக எளிமைப்படுத்துதல் இதில் ஒரு கூற்று அல்லது விவாதம் சிந்திக்கவேண்டிய காரியங்களை அசட்டைசெய்துவிடுகிறது, ஒரு சிக்கலான பிரச்னையை மிகுதியாக எளிமைப்படுத்திவிடுகிறது.
ஒரு சிக்கலான பொருளை எளிமைப்படுத்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை—நல்ல ஆசிரியர்கள் எப்பொழுதும் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் ஒரு காரியம் திரிக்கப்படுமளவுக்கு எளிதாக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் இப்படியாக வாசிக்கலாம்: ‘அதிவேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகையே வளரும் நாடுகளில் வறுமைக்குக் காரணமாயிருக்கிறது.’ அதில் ஓர் உண்மை இருக்கிறது, ஆனால் அரசியல் நிர்வாகம், வர்த்தகக் கொள்ளை, மற்றும் வானிலை அமைப்புகள் போன்ற கவனிக்கவேண்டிய மற்ற முக்கியமான காரியங்களை அசட்டைசெய்துவிடுகிறது.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைக் குறித்ததில் மிகுதியாக எளிமைப்படுத்துதல் அநேக கருத்துவேற்றுமைகளில் விளைவடைந்திருக்கிறது. உதாரணமாக அப்போஸ்தலர் 16:30, 31-லுள்ள விவரப்பதிவைக் கவனியுங்கள். அங்கு ஒரு சிறைச்சாலைக்காரன் இரட்சிப்பைக் குறித்து ஒரு கேள்வி கேட்டான். பவுல் கொடுத்த பதில்: “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது . . . இரட்சிக்கப்படுவீர்கள்.” எனவே இரட்சிப்புக்குத் தேவையானதெல்லாம், இயேசுவை வெறுமென மனதில் ஏற்றுக்கொள்வது என்ற முடிவுக்கு அநேகர் வந்திருக்கின்றனர்!
இது மிகுதியாக எளிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒன்று. உண்மைதான், நம்முடைய மீட்பராக இயேசுவில் நம்பிக்கை கொண்டிருப்பது அவசியம். ஆனால் இயேசு கற்பித்த மற்றும் கட்டளையிட்ட காரியங்களை நம்புவதும், பைபிள் சத்தியங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளுவதும் அவசியம். அதைத் தொடர்ந்து பவுலும் சீலாவும் “அவனுக்கும் அவனுடைய வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்” என்ற உண்மை இதைத் தெளிவுபடுத்துகிறது. (அப்போஸ்தலர் 16:32) இரட்சிப்பு கீழ்ப்படிதலையும் உட்படுத்துகிறது. இயேசு “தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணர்” ஆனார் என்று பவுல் பின்னர் எடுத்துக்காட்டினான்.—எபிரெயர் 5:9.
பூர்வக்கால நீதிமொழி ஒன்று சொல்லுகிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) எனவே போலிவாதங்களுக்குப் பலியாகிவிடாதீர்கள். சொல்லப்படும் காரியத்தின்பேரில் நேர்மையான தாக்குதலுக்கும் ஆட்களின்பேரில் கொண்டுவரப்படும் அற்ப தாக்குதலுக்கும் இடையே வித்தியாசத்தைக் கண்டுகொள்ள கற்றுக்கொள்ளுங்கள். “அதிகாரத்திடம்” கவனத்தைத் திரும்பும் செயலற்றக் காரியங்களால், ‘கூட்டத்தைச் சேர்ந்துகெள்ள’ கொடுக்கப்படும் தூண்டுதலால், இது/அல்லது அது விவாதத்தால், அல்லது மிகுதியாக எளிமைப்படுத்துதலால்—விசேஷமாக மத சத்தியம் போன்ற முக்கியமான ஒன்று உட்பட்டிருக்கும்போது—மோசம்போகாதீர்கள். அனைத்து உண்மைகளையும் சோதித்துப் பாருங்கள், அல்லது பைபிள் குறிப்பிடுவதுபோல் “எல்லாக் காரியங்களையும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:21, NW. (g90 5/22)
[அடிக்குறிப்புகள்]
a பைபிளில் எபேசியர் 5:6-லிருந்து எடுக்கப்பட்டது.
b உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொசைட்டி பிரசுரித்திருக்கும் யெகோவாவின் சாட்சிகளும் இரத்தத்தைப்பற்றி கேள்வியும் (Jehovah’s Witnesses and the Question of Blood) என்ற ஆங்கில சிறுபுத்தகத்தைப் பாருங்கள்.