தொழிலாளர் இயக்கம் எதை நோக்கிச்—செல்கிறது?
கானடாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
“செல்வம் குவிகிறது, மனிதன் சீரழிகிறான்,” என்று குறிப்பிட்டான் ஒரு கவி. என்றபோதிலும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் பொருள் செல்வங்களின் கவர்ச்சியினால் அநேகர் ஈர்க்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே வரலாற்றின் இடைநிலைக்காலத்தில் முதலாளித்துவம் தோன்றியது.
அநேகருக்கு, வாழ்க்கைத் தரத்தில் சீரழிவு அநேகமாக முதலாளித்துவத்தோடு சேர்ந்தே வந்ததைத் தொழிலாளிகள் உணர்ந்தனர். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் தொழிற்சங்கங்களை ஏற்படுத்தினார்கள். முதலாளித்துவம் தழைத்தோங்கிய இடமெல்லாம், தொழிலாளர் இயக்கம் வளர்ந்தது.
என்றபோதிலும், குறைகாண்பவர்களும் ஒருசில ஆதரவாளர்களும்கூட, ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் தொகுதி சீரழிந்துகொண்டிருக்கக்கூடும் என்று கவலைத் தெரிவிக்கின்றனர். பத்திரிகையில் குறிப்பிட்ட பத்தியில் தொடர்ந்து எழுதி வரும் அந்தோனி வெஸ்டெல் இவ்விதமாகக் குற்றஞ்சாட்டுகிறார்: “தொழிலாளர் இயக்கம் இறந்த காலத்தில் இருந்துகொண்டு, மாறுவதற்கு இயலாமலோ அல்லது மனமில்லாமலோ இருக்கிறது.” “எண்ணிக்கையில் குறைந்துவரும் சகோதரர்களின் குழு” என்ற தலைப்பின் கீழ் பொருளியலர் பிரிட்டிஷ் தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் “குறைந்தபட்சம் 20 லட்சமாவது” குறைந்துவிட்டது என்பதாக குறிப்பிடுகிறது. இல்லினாஸிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் அடால்ப் ஸ்டர்ம்தால் “சர்வ தேசீய தொழிலாளர் இயக்கத்தில் நெருக்கடி” பற்றி எழுதுகிறார்.
இவர்களின் முடிவுகளைப் புள்ளிவிவரம் ஆதரிப்பது போல தெரிகிறது. ஜப்பான் குவார்ட்டர்லி ஜப்பானின் தொழிற்சங்க தொழிலாளிகள் 1960-ல் 32 சதவீதத்திலிருந்து 1984-ல் 29 சதவீதமாகவும், ஐக்கிய மாகாணங்களில் 33 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகவும் சரிந்துவிட்டிருப்பதை அறிவிப்பு செய்தது. பிரிட்டனும் மேற்கு ஜெர்மனியும் அதிகரிப்பு இருப்பதாக உரிமைப்பாராட்டுகையில், தி ஜெர்மன் ட்ரிப்யூன், “எண் இலக்கங்கள் சுட்டிக் காண்பிக்கிறபடி, விவகாரம் அத்தனை நம்பிக்கையூட்டுவதாக இல்லை” என்பதாகச் சொன்னது. உறுப்பினர்கள் ஈடுபாட்டை இழந்துவிட்டிருப்பதையும் பொருளாதாரத்தில் தொழிற்சங்க ஆதரவற்ற பிரிவுகள் அதிகரித்திருப்பதையும் அது குறிப்பிட்டது. ஆஸ்திரேலிய தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை 55 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டபோதிலும் இதை “அசெளகரியமான நெருக்கடியான உணர்வும்கூட பற்றிக்கொண்டிருக்கிறது” என்பதாக ஃபார் ஈஸ்டர்ன் எக்கனாமிக் ரிவ்யூ சொல்லுகிறது.
தொழிலாளர் இயக்கத்தினுள்ளிருக்கும் பிரச்னைகள்
வெற்றிபெற, தொழிலாளர் தொகுதி ஐக்கியமாக இருக்கவேண்டும். என்றபோதிலும் அநேக தொழிலாள இயக்கங்கள் ஐக்கியப்பட்டதாக இல்லை. வேலையைப் பற்றிய மனநிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதால், “தனியொரு தொழிலாளர் கருத்து சந்தேக கண்கொண்டு பார்க்கப்படும்: அங்கு தனியுரிமைப் பெற்றவர் எவருமில்லை” என்பதாக லண்டனில் வெளியாகும் தி டைம்ஸ் குறிப்பிட்டது. ஆஸ்திரேலிய வேலை நிறுத்தங்களுக்கு அநேகமாக தொழிற்சங்கங்களுக்கிடையே ஏற்படும் அதிகார எல்லை மோதல்களே காரணமாக உள்ளது. கானடாவில் தொழிற் சங்கங்கள் தொழிற்சங்கங்களோடு மோதுவதால், ஐக்கிய மாகாணங்களை தலைமையிடமாகக் கொண்ட தொழிற்சங்கத்தின் பலாத்கார சூழ்ச்சியைக் குறித்து தொழிற்சங்க ஆட்கள் மூர்க்கமடைந்ததாகச் சொல்லப்பட்டது. கானடாவில் வேலையிலிருந்து தற்காலிகமாக விலக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள், “பேரத்தில் அவசரப்பட்டுவிட்டதற்காக” இரண்டு தொழிற்சங்கங்களை குற்றஞ்சாட்டினார்கள். இது அவர்களுடைய வேலைகளைக் காப்பாற்றியிருக்கும்.
தொழிற்சங்கங்களை நெருக்கித் தாக்கும் இரண்டாவது உள் பிரச்னை ஈடுபாடு குறைவாகும். ஒருசமயம், முக்கியமாக உடலுழைப்பு வேலையைச் செய்த உழைப்போர் வர்க்கமாக இருந்தது, இப்பொழுது அதிகமதிகமாக எழுத்தாயரைச் சார்ந்த, தொழில்நுட்ப அல்லது வாழ்க்கைத் தொழிலிலுள்ள ஆட்களாலானதாகிவருகிறது. உடலுழைப்பற்ற தொழிலாளப் பிரிவு “வழிவழியாக தொழிற்சங்கங்களால் ஊடுருவிப் பார்க்க இயலாததாக இருந்துவந்திருக்கிறது” என்பதாகக் கானடாவில் தொழில்சட்டமும் தொழிலாள உறவுகளும் குறிப்பிடுகிறது.
அநேகருக்குத் தொழிற்சங்கம் ஒன்றில் உறுப்பினராயிருப்பது இன்றியமையாததாக உள்ளது. அரசுத் துறை ஒன்றில் பணிபுரிகிறவர்களைச் சேர்ந்து கொண்ட பொறியியல் பட்டதாரியை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அவர் விழித்தெழு!விடம் சொன்னதாவது: “நான் தொழிற்சங்கத்தை சேர்ந்திருப்பதும்கூட எனக்கு தெரிவிக்கப்படவில்லை. என்னுடைய பெயர் உறுப்பினர் பட்டியலில் இருந்தது. வேலை நிறுத்தத்துக்காக வாக்கு மூலம் கருத்து தெரிவிக்கும்படி சுற்றறிக்கை வந்தபோது, எனக்கு எந்தவகையிலும் விருப்பமில்லாததால், நான் அதிலிருந்து ஒதுங்கிவிட்டேன்.”
இலஞ்ச ஊழலும் குற்ற நடவடிக்கையும் அமைதியைக் கெடுக்கத் துணைபுரிகிறது. நியு யார்க் நகரில், பேர் போன குற்றவாளி கும்பலின் ஒரு பெரிய வழக்கு விசாரணையின் போது அது மிகப் பரவலான தொழிற்சங்க ஈடுபாட்டை வெளிப்படுத்தியது. ஒரு சில ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்களில் “குற்றவாளிகள் பரவலாக” இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கானடாவில் சமீப கால வேலைநிறுத்தத்தின் போது, சட்டமீறிய செயல்களில் மாகாண அரசியல் தலைவர் உட்பட 700-க்கு மேற்பட்டவர்கள் கைதாவதில் விளைவடைந்தது.
தொழிற்சங்க கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிரச்னைகள்
தொழிற்சங்க கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட மற்றக் காரியங்கள் தொழிற்சங்கத் தலைவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்குகிறது. மனித சமுதாயம் கொந்தளிப்பில் இருக்கிறது. தொழிற் சங்க உறுப்பினர்களின் தோழமை உணர்ச்சி படிப்படியாக அழிந்துவிட்டிருக்கிறது. 49 வருடங்களாக, இயந்திர கொதிக்கலம் செய்பவராகவும் சிறிது காலத்துக்கு தொழிலாளர் பிரதிநிதியாகவும் இருந்த ஒரு மனிதன், அவர் ஓய்வுபெற்றபோது அது உடன் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எத்தனை அற்பமாக இருந்தது என்பதை விழித்தெழு!விடம் சொன்னார்: “என்னுடைய கடைசிநாளில், அவர்கள் பணம் திரட்டி, எனக்கு ரூ. 560 கொடுத்தார்கள். ஒரு சில ஆட்கள் என் கைகளைக் குலுக்கினார்கள். தளர்ச்சி பருவத்தின்போது நான் தற்காலிகமாக வேலையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்ததால், 50 ஆண்டுகளுக்கு ஆறு மாதங்கள் எனக்கு குறைவாக இருந்தது, ஆகவே சாதாரணமாக கொடுக்கப்படும் தங்க கைகடிகாரம் எனக்கு கிடைக்கவில்லை!”
கடந்த கால லட்சியங்களுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க தவறுவதினால் ஓரளவு நட்புப் பிரிவு ஏற்படுகிறது. ஒருசில தொழிற்சங்க உரிமைகள் மிகப் பெரிய சாம்ராஜ்யங்களாக வளர்ந்துவிட்டிருக்க, தொழிற்சங்கமே முதலாளியாக இருக்கிறது. கான்பெரா டைம்ஸ் பிரகாரம் ஜெரால்ட் ஸ்டியுவார்ட் சொல்வதாவது: “தொழிற்சங்கங்கள், முதலாளித்துவத்தின் குறைந்த கவர்ச்சியுள்ள அம்சங்களைப் பின்பற்றியபோது முதலாளித்துவத்தில் குறைகாணும் தார்மீக உரிமையை இழந்துவிட்டன.”
தொழிற்சாலையில் உறுப்புகளை ஒன்றாக இணைத்து உருவாக்கும் ஒரு பணியில், வரிசையாக நின்று ஒவ்வொருவரும் ஒரு வேலையை செய்து முடிக்கும் ஏற்பாடு, தொழில்நுட்ப மாற்றங்களினாலும் விலைமந்தத்தினாலும் குறைவாகிவிட்டிருக்கிறது. மில்வாக்கியில் உடலுழைப்பைத் தேவைப்படுத்தும் வேலை, 1979-ல் 2,23,600 ஆக இருந்தது 1986-ல் 1,71,300 ஆக குறைந்துவிட்டிருப்பதை டைம் பத்திரிகை அறிவிப்பு செய்தது. மேலுமாக, குறிப்பிட்ட தனித்திறமைகளைக் கொண்ட இளைஞர்களுக்கு புதுமாறுதலுடைய வேலைகள் கவர்ச்சியாக இருக்கிறது. தொழிற்சங்கம் தனித்தன்மையளிக்கப்பட்ட இந்தத் தொழிலாளிக்கு எப்போதும் பொருத்தமானதாக இல்லை.
தொழிலாளிகள் வெறுமென பணத்தைக் காட்டிலும் அதிகத்தை எதிர்பார்க்கிறார்கள். குழந்தைக் காப்பகப் பணிகள், குறுகிய வேலை–வாரங்கள், எளிதில் பின்பற்றத்தக்க சுற்றுமுறைகள், வேலையை பகிர்ந்து கொள்ளுதல், ஆரோக்கிய திட்டங்கள் ஆகியவை ஒருசில தொழிலாள வர்க்கத்தினருக்கு மாத்திரமே பிரயோஜனமாயிருக்கக்கூடும். ஒரே ஓர் அமைப்பு இத்தனை நலன்களை கவனிப்பது அதிக கடினமாகும். அநேகமாக முதலாளிகள், தொழிலாளிகளுக்கு நேரடியாக ஆக்கப்பூர்வமான நிதியுதவி அளிப்பதன் மூலம் தொழிற்சங்கங்களை ஏமாற்றிவிடுகின்றனர்.
ஒரு சில தேசங்களில், தொழிற்சங்கங்களின் அரசியல் அல்லது மத ஈடுபாடு அதன் உறுப்பினர்களின் கடுமையான விமர்சனத்தை வரவழைத்திருக்கிறது. அவர்கள் ஒத்துக்கொள்ளாத நடவடிக்கைகளை ஆதரிக்க உறுப்பினர் கட்டணம் பயன்படுத்தப்படுவதை அவர்கள் விரும்பாதிருக்கக்கூடும். இப்படிப்பட்ட அடிப்படையில் தொழிற்சங்கத்துக்குச் செலுத்த வேண்டிய பணத்தைக் கட்ட மறுத்த உறுப்பினரின் உரிமையை கானடா நீதிமன்றம் ஆதரித்தது.
தொழிற்சங்கத்தின் இறுதியான கருவி வேலைநிறுத்தமாக இருக்கையில், முன்னிருந்ததைவிட இப்போது அது குறைந்த அளவே வெற்றிபெறுகிறது. கானடாவில், ஒரு மாகாண நீதித்துறை மந்திரி, வேலை நிறுத்தம் செய்ய காவல் துறையினரின் உரிமை நீக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார், குயுபெக், சுகாதார பிரிவிலுள்ளவர்களின் முறைகேடான வெளிநடப்புகளை சமாளிக்க கடுமையான சட்டங்களை அமல்படுத்தியது. ஐக்கிய மாகாணங்களில், விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்தபோது கூட்டரசு அரசாங்கம் குறுக்கிட்டு கூட்டத்தைக் கலைத்தது. ஆஸ்திரேலியா போன்ற மற்ற தேசங்கள் கட்டாய நடுவர் தீர்ப்புகளை கொண்டிருக்கின்றன.
தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்துபவர்கள், தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக சூழ்ச்சிமுறைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். பெருஞ்சுமையாயுள்ள தொழில் ஒப்பந்தங்களைத் தவிர்ப்பதற்காக பலபெரிய கூட்டுரிமை குழுக்கள் ஒருவகையான நொடிப்புக்கு ஆளாகிவிடுகிறார்கள். சிலர் நச்சரிப்புக்காக வழக்குத் தொடருகையில் மற்றவர்கள் தொழிலாள இயக்கத்துக்கு ஓர் ஐக்கிய முன்னணியாகக் காட்சி அளிப்பதற்காக ஒன்றாகச் சேர்ந்து தங்களைக் குழுவாக அமைத்துக்கொள்கின்றனர்.
நீடித்திருக்க சரிமாற்றங்கள்
அநேக அம்சங்களில் தொழிலாளர் இயக்கம் ஆரம்பமாவதற்குக் காரணமாயிருந்த தேவைகள் இனிமேலும் அங்கு இல்லை. கூட்டு ஒத்துழைப்புடைய தொழிலாளர் தொகுதியின் ஆலோசனையின் பேரில் தோற்றுவிக்கப்பட்ட பொதுநலச் சட்டங்கள் இப்பொழுது பிள்ளைகளுக்குப் பாதுகாப்பளிக்கிறது, குறைந்தபட்ச வேலைவாய்ப்பு தராதரங்களை நிர்ணயிக்கிறது, கூட்டுபேரத்துக்குப் பாதுகாப்பளிக்கிறது. ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் பெரிய வியாபாரங்களின் வலிமையையும் ஒருசில தேசங்களிலுள்ள அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டத்தையும் தொடர்ந்து தங்களுடைய தேவைக்கு அத்தாட்சியாகக் காண்கிறார்கள்.
தொழிற்சங்கத் தலைவர்களின் புதிய தலைமுறைகள், ஆதரவை புதிதாக தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். தொழிற்சங்கங்கள் இனிமேலும் பெரும்பாலான பொதுமக்களின் பாராட்டுக்குரியதாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டு, மேசையை அடித்துக்கொண்டிருப்பதற்கு பதிலாக “தொழிற்சங்கத் தலைவர் இன்று ஆயத்தங்களையும் ஆராய்ச்சியையும் அதிக நுணுக்கமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்பதாக ஒரு தொழிற்சங்க முதல்வர் சொல்லுகிறார். அவர்களுடைய வெற்றி அமைப்பிலும் தொழிற்சங்கங்களின் முறைமைகளிலும் மாற்றங்களைத் தேவைப்படுத்தும்.
ஒருசில தொழிற்சாலைகளில், மாறுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்து தொழிலாளர் இயக்கம் பிழைத்திருக்கிறது. மோட்டார் வண்டி உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை தொழிற்சங்கத்திலிருந்து உற்பத்தியைப் பெருக்குவதற்காக அநேக சலுகைகளைப் போரடிப் பெற்றனர். இயந்திர மனிதனை பயன்படுத்திக் கொண்டு தொழிலாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் புதிய உற்பத்தி தொழிற்சாலைகளும்கூட தொழிற்சங்க ஆதரவைக் கவர்ந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையின் சம்பந்தமாக, “இது கவலையுண்டுபண்ணுவதாக இருக்கிறது, ஆனால் நம்முடைய ஆட்கள் ஒரு பங்கைக் கொண்டிருந்தனர் என்பதில் ஒரு சாதனை உணர்வும்கூட இருக்கிறது,” என்பதாக தொழிற்சங்க அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டார்.
வேலையாட்கள் படையைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஒருசில தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்ற போதிலும், மற்றவர்கள் நிர்வாகத்தோடு ஒத்திணங்கி வேலையைக் பகிர்ந்துகொள்ளுதல் அல்லது சுற்றுமுறையில் வேலையை செய்வது மூலம் முடிவு காண தற்காலிக முயற்சிகளை எடுக்கின்றனர். கானடாவின் கடற்பயண வாழ்வில் ஈடுபட்டோரின் சர்வ தேசீய தொழிற் சங்கம் ஓர் உதாரணமாகும். சோதனைமுறையான ஒரு திட்டம் நான்கு மனிதர்களைக் கொண்ட தொகுதி சுற்றிவருமுறையில் ஒரே சமயத்தில் 90 நாட்களுக்கு வேலை செய்து பின்னர் 30 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்வதற்கு வகைசெய்கிறது. “அதிகமான கடலோடிகளுக்கு வேலை கிடைப்பது முக்கிய அனுகூலமாக இருக்கிறது” என்பதாக டோரான்டோவின் க்ளோப் அண்டு மெயில் அறிவிப்பு செய்கிறது.
பெரிய தொழிற்சாலைகளின் தொழிற்சங்கங்களில் குறிப்பிடத்தக்க தோல்விகள் இருந்தபோதிலும், சிறிய தொழில் முதல்வர்கள் மத்தியில் தொழிற்சங்கங்கள் இன்னும் வெற்றியைக் காண்கின்றன. கானடா மாகாணங்களிலொன்றில், ஓர் ஆண்டில் தகுதி சான்று பெற்ற 704 புதிய தொழிற்சாலைகளில் 42 மாத்திரமே நூறுக்கும் மேற்பட்ட ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருந்தது. “ஆனால் தொழிற்சங்கங்கள் கணிசமான அளவுகளில் பெரும் எண்ணிக்கையில் ஆட்களை சேர்க்கக்கூடிய காலமெல்லாம் பெரும்பாலும் மறைந்துவிட்டது” என்பதாக கருத்தறிவிப்பவர் ஒருவர் குறிப்பிட்டார்.
தொழிலாளர் இயக்கத்தில் சீரழிவுக்குரிய அநேக காரணங்கள், பொதுவாக சமுதாயத்தின் சீரழிவில் இருப்பது போலவே மனித கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாயிருப்பது தெளிவாக இருக்கிறது. மேம்பட்ட ஓர் உலகிற்கான ஆசையின் காரணமாக தொழிலாளர் இயக்கத்திற்குள் கவர்ந்திழுக்கப்படும் ஆண்களும் பெண்களும் தங்கள் உடன்மானிடருக்கு உதவி செய்வதற்கு அவர்கள் எடுக்கும் உண்மையான முயற்சிகளுக்காகப் பாராட்டப்பட தகுதியுள்ளவர்கள். பாதுகாப்பான சிறந்த வேலை நிலைமைகளை பெறும் கடின முயற்சிகளாக இவற்றை நல்லறிவு நிலையிலுள்ள மக்கள் கண்டுணருகின்றனர். என்றாலும் தொழிற்சங்கங்களின் தற்போதைய நிலைமை, நம்முடைய நெருக்கடியான காலங்களில் நிச்சயமாகவே திசைதிரும்பிவிட்டிருக்கும் நல்ல நோக்கமுள்ள ஆனால் வெறுமென ஒரு மனித நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதற்கு இன்னும் ஓர் அத்தாட்சியைக் கொடுக்கிறது.—2 தீமோத்தேயு 3:1–5. (g90 4/8)
[பக்கம் 22-ன் பெட்டி]
முதலாளித்துவம்
அகராதி ஒன்றின்படி, “தனிமனிதனுக்குச் சொந்தமான உற்பத்தி மற்றும் விநியோக வழிமுறைகளை இலாபத்துக்காக நடத்தும்” ஓர் அமைப்பே முதலாளித்துவமாகும்.
ஜெர்மனியிலுள்ள ஆக்ஸ்பர்க்கில் வரலாற்றின் இடைநிலைக் காலத்தைச் சேர்ந்த செல்வந்த வியாபாரி ஜேகப் ஃபஜ்ஜர், தண்டனைக்குறைப்புக்காகக் கட்டணம் வசூல்செய்த போப்பின் பொது ஏஜென்ஸியையும்கூட நடத்தி வந்தார். முதலாளித்துவம் ஃபஜ்ஜரில் ஆரம்பமானது என்பது சரித்திராசிரியர் எரிக் காஹலரின் கருத்தாக இருக்கிறது. அவர் எழுதுவதாவது:
“ஒருசில நவீன பொருளியல் ஆய்வாளர்களும் மனித சமுதாய வளர்ச்சி ஆய்வாளர்களும் முற்காலத்திய முதலாளித்துவத்தின் தடயங்கள் பாபிலோனில் காணப்பட்டன என்பதை நிரூபிக்க முயற்சி செய்துவந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் கண்டுபிடித்தது முதலாளித்துவம் அல்ல. முதலாளித்துவம் பொருள் வளமாகவும் இடம்விட்டு இடம் பெயரும் உடைமையாகவும் இல்லை, பணம் சம்பாதிப்பதும் பணம் கடன்கொடுப்பதாகவும் இல்லை. உடைமையை ஆக்க வளமுடைய முதலீடு செய்வதாகவும்கூட அது இல்லை. இவை அனைத்துமே தன்னில்தானே முதலாளித்துவமாக இல்லை. ஏனென்றால் இவை அனைத்தும் பொருளாதார குறிக்கோளுக்கு அந்நியமாக இருக்கும் வாழ்க்கை லட்சியம் ஈடேற உதவி செய்யக்கூடும். அது ஒரு மனிதநோக்கத்துக்காக, மனித குறிக்கோளுக்காக, ஒரு மனிதன் அனுபவித்துக் களிப்பதற்காக செய்யப்படலாம். ஆனால் இங்கே, முதல் முறையாக, . . . வியாபாரம் தானேயும், பணம் சம்பாதிப்பது தானேயும் பொருட்களை உற்பத்தி செய்வதும் செளகரியங்களைக் குவிப்பதும், மனிதன் மீது அத்தனை செல்வாக்கை எடுத்துக்கொண்டதன் காரணமாக அவன் தன்னுடைய எல்லா உயிராற்றலையும், அவனுடைய இருதயத்தையும், அவனுடைய எல்லா தற்காலத்தையும் எதிர்காலத்தையும் சொல்லர்த்தமான கருத்தில் அவனுடைய எல்லா மனித வாழ்க்கையையுமே செலவழித்துவிட்டான். ஓய்வில்லாமல், விடாப்பிடியாக வளர்ந்துவரும் மற்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும் உற்பத்தியில், எதனுடைய கடைசி பொருளை அவன் முழுமையாக இழந்தும் மறந்தும்விட்டிருக்கிறானோ அந்த உற்பத்தியில் அவன் செலவழித்துவிட்டான்.
“மனிதனை முதல் அடக்கி ஆளுகின்ற, மனித இருதயத்தை பொருளாதார செயல்முறை அடக்கி ஆளுகின்ற இதுவே முதலாளித்துவத்தின் ஆரம்பமாகும். இயற்கைக்கு ஓய்வுதராது வரம்பில்லாமல் சுரண்டுவதில் முன்னேற்றமும் எவருமே இனிமேலும் அனுபவித்துக் களிப்பதற்கு ஓய்வுநேரத்தை அல்லது ஆற்றலை கொண்டில்லாத பண்டங்களின் உற்பத்தியுமாக பொருளாதாரத்தின் தன்னாட்சி இங்கே ஆரம்பமாகிறது. இந்த வளர்ச்சியின் பின்விளைவுகள் இன்று தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.”—மனிதன் அந்த அளவு.
[பக்கம் 23-ன் பெட்டி]
தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு
“தொழிலாளர் இயக்கம்” என்பது “தற்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் தங்களுடைய சொந்த நிலைமைகளின் மேம்பாட்டினை நோக்கமாகக் கொண்டு கூலிக்கு வேலை செய்பவர்கள் செய்யும் எல்லாக் கூட்டிணைவான நடவடிக்கைகளையும் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் சொல்லாகும்.”—அமெரிக்க மக்களின் என்சைக்ளோப்பீடியா.
எகிப்தில் எபிரெய அடிமைகள் வைக்கோல் இல்லாமல் செங்கல் செய்ய மறுத்தது, முதல் தொழிலாளர் வேலை நிறுத்தம் என்பதாக சிலர் வாதாடுகிறார்கள். ஆனால் இஸ்ரவேலர் கூலி வேலை செய்பவர்களாக இல்லாமல் அடிமைகளாக இருந்தனர். (யாத்திராகமம் 5:15–18) அதேவிதமாகவே அப்போஸ்தலனாகிய பவுல், ஒநேசிமுவைத் திரும்ப பிலேமோனிடம் அனுப்பி வைத்தது கூலி வேலை செய்பவர்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால் ஒநேசிமு ஓர் அடிமையாக இருந்தான்.—பிலேமோன் 10–20.
ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கூட்டுக்குழு வளர்ச்சி, தொழிலாளிகளையும் பணிபயில்பவர்களையும் வேலைக்கு அமர்த்திய கைவினைஞர்களின் சங்கம், 14-வது மற்றும் 15-வது நூற்றாண்டுகளில் தொழிற்சங்கங்கள் உருவாக வழிசெய்தது. 1383-ல் தொழிற்சங்கங்களின் வரலாறுபடி கூலிக்கு அமர்த்தப்பட்ட மனிதர்கள் “தங்கள் ஆளுநர்களுக்கும் மேலாளர்களுக்கும் எதிராக ஒன்றுசேர்ந்தார்கள்.”
இங்கிலாந்தில் முதல் தொழிலாளர் சட்டம் தொழிலாளிகளின் உரிமைச் சட்டமாக இருந்தது. (1349 அல்லது 1350) பணிபயில்பவர்களின் எழுத்துவடிவச் சட்டம், (1563) பல தலைமுறைகளாக இங்கிலாந்தில் தொழிலாளர் உறவுகளை முறைப்படுத்தியது. 20-ம் நூற்றாண்டிற்குள், பெரும்பாலான தேசங்கள் தொழிற்சங்கங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைத் தளர்த்திவிட்டன.
சர்வதேசீய தொழிலாளர் சங்கம், சர்வதேச சங்கத்தின் கூட்டு ஒப்பந்தத்தின் 23-வது வாசகத்தின் கீழ் 1919-ல் ஸ்தாபிக்கப்பட்டது, இன்னும் இருந்துவருகிறது. சர்வதேசீய தொழிலாளர் சங்கத்தின் கூட்டு ஒப்பந்தங்கள் பெரும்பாலான தேசங்களின் சமுதாய சட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
தொழிற்சங்கங்கள் பெரும்பாலான தேசங்களின் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அவை வேலையில் சேர்ந்தவுடன் தொழிலாளிகள் தொழிற்சங்கங்களை சேர்வதையோ சேராமலிருப்பதையோ அனுமதிக்கும் நிறுவனங்களாக இருக்கலாம் அல்லது வேலைக்கு ஒரு நிபந்தனையாக அதில் உறுப்பினராயிருப்பதை கட்டாயப்படுத்தும் நிறுவனங்களாக இருக்கலாம்.