ஒரு மனித-கடவுளுக்குப் பக்தி ஏன்?
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போதும் அதற்கு முன்பும் ஒரு பேரரசருக்குக் காண்பிக்கப்பட்டுவந்த பக்தியின் ஆழத்தை இன்று வாழும் அநேகரால் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. “பள்ளியில் விசேஷமான ஒரு புனித ஸ்தலத்தில் ஹீரோஹிட்டோவின் ஒரு படம் வைக்கப்பட்டிருந்தது,” என்று மித்சுக்கோ தாக்கஹாஷி நினைவுக்குக் கொண்டுவருகிறாள், “ஒவ்வொரு நாள் காலையும் மாணவர்கள் அந்தப் புனித ஸ்தலத்தைப் பார்த்து ஒரு வணக்கச் செயல் செய்யவேண்டும்.”
“பேரரசர் கடந்து சென்றபோது, எங்களுடைய தலைகளைத் தாழ பணிய வேண்டும்,” என்று சொல்லுகிறாள் மசாட்டோ சாக்கமோட்டோ. “சாதாரண மக்கள் நேரடியாகக் பார்க்கக் கூடாதளவுக்குப் பேரரசர் பிரமிக்கத்தக்கவர் என்பதை நாங்கள் நம்பும்படிச் செய்யப்பட்டோம்.” உண்மையில் அவருடைய முகத்தைப் பார்த்தார்களானால் குருடாகிவிடுவார்கள் என்றும் பிள்ளைகளிடம் சொல்லப்பட்டது.
பேரரசர் பேரில் பக்தியை வளர்த்திட ஐப்பானிய இராணுவமும் அரசியல் தலைவர்களும் கல்வி நிறுவனங்களைப் பயன்படுத்தினர். “‘மரிக்க மனமுள்ளவர்களாயிருங்கள்,’ என்று நான் சிறு பிள்ளைகளுக்குக் கற்பித்தேன்” என்கிறார் போர்க் காலத்தையும் உட்படுத்திய 50 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவமுடைய கசுவோ மட்சுமோட்டோ. “நான் அநேக இளைஞரை போர்முனைக்கு அனுப்பியிருக்கிறேன். என்னுடைய இந்தக் கடந்த காலப் பழிக்கு என்னால் ஒரு பிராயச்சித்தமும் செய்ய முடியவில்லை.”
பேரரசரின் குடிகள் ஆவேஹிட்டோகுசா அல்லது “வளரும் மனித களைகள்” என்றும் அவர்கள் அவருக்குக் கேடயமாக இருந்து அவரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ஜப்பானிய இளைஞரிடம் சொல்லப்பட்டது. பிலிப்பீன்ஸில் பல தற்கொலைத் தாக்குதல்களில் பங்கேற்று உயிர்தப்பிய தோஷியோ மஷிக்கோ இப்படியாக விளக்கினார்: “பேரரசருக்கு மரிப்பது அவருடைய பிரஜைகளுக்கு உயர்ந்த கனம்பொருந்திய காரியம் என நாங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டோம்.”
பேரரசரின் இரட்சிக்கும் வல்லமையில் அநேகர் உள்ளான நம்பிக்கை கொண்டிருந்தனர், ஆகையால் பயமற்ற மனப்பான்மையுடன் போருக்கு ஓடினர். உதாரணமாக, மக்களுக்குக் கற்பிக்கப்பட்டபடி தான் “தெய்வீக தேசத்தின்” ஒரு போர்வீரனாக இருப்பதால், துப்பாக்கிக் குண்டுகள் தன் உடலைத் துளைக்காது என்று ஷூனிச்சி இஷிகுரோ நினைத்தார்.
போர் அலை ஜப்பானுக்கு எதிரே திரும்பிய போது இஸாமு என்ற ஓர் இளைஞன் தன் அச்ச உணர்வுகளைத் தன் தாயிடம் வெளிப்படுத்திய போது, ஷின்டோ மதத்தைத் தழுவிய தாய் அவனிடம், “நீ கவலைப்படாதே,” என்று சொல்லி பொதுவாக நிலவிய கருத்தையே திரும்பவும் தெரிவித்தாள்: “நாம் ஒருபோதும் தோல்வியுற மாட்டோம், ஏனென்றால் கமிக்காஸேa (தெய்வீகக் காற்று) நம்முடைய பகைவர்களை அடித்துச்சென்றுவிடும்.”
ஒரு கடவுள் ஆனால் அபூர்வமாகவே அரசர்
ஜப்பானில் பேரரசரைத் தொழுதுகொள்ளுதல் நீண்டதொரு சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது, ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அது மக்களுடைய வாழ்க்கையின் ஒரு பாகமாக இருந்துவந்திருக்கிறது. மத பாரம்பரியத்தை அழிப்பது அரிது. உதாரணமாக, கிறிஸ்தவமண்டலத்திலுங்கூட மக்கள் பின்வருமாறு சொல்லுகின்றனர்: ‘என்னுடைய மதம் என் பெற்றோருக்கு நல்லதாக இருக்குமானால், அது எனக்கும் நல்லதுதான்.’ மற்றும், ‘எல்லாருமே இதை நம்புகிறார்கள், அவர்கள் எல்லாருமே தவறாக இருக்க முடியாது.’ ஆனால் கடந்த நூற்றாண்டுகளில், தங்களுடைய தலைவர்கள் தெய்வீகமானவர்கள் என்று நம்புவதில் இலட்சக்கணக்கானோர் தவறாயிருக்கின்றனர்! ஜப்பானிய பேரரசரின் சரித்திரத்தைச் சுருக்கமாகக் கவனியுங்கள்.
கடந்த நூற்றாண்டுகளில் அவர் வகித்த பாகம் வெகுவாக வித்தியாசப்படுகிறது. “பேரரசர் தெய்வங்களை அமைதிப்படுத்திட அல்லது பரிந்துபேசுவதற்கான மந்திர சக்திகளைப் பெற்றிருப்பதாக நம்பப்பட்டது,” என்று ஜப்பான் கொடன்ஷா என்சைக்ளோபீடியா (Kodansha Encyclopedia of Japan) விவரிக்கிறது. “ஆனால் அவரைச் சூழ்ந்த மகிமையின் காரணத்தால், பேரரசர் அரசாங்க அலுவல்களின் பேரில் ஈடுபாடுடையவராயிருப்பது பொருத்தமற்றது என்றும் கருதப்பட்டது. அந்த வேலை, அரசாங்க விதிமுறைகளை ஏற்படுத்துவதையும் அதை நிறைவேற்றுவதையும் உட்படுத்திய அந்த வேலை பேரரசருக்குப் பணியாற்றிய மந்திரிகளைச் சார்ந்ததாயிருந்தது.”
எனவே பேரரசர் அடிப்படையில் ஒரு மத ஆசாரிய உத்தரவாதத்தையே நிறைவேற்றுகிறவராயிருந்தார், அரசியல் உத்தரவாதத்தை அல்ல. “பேரரசர் இரண்டு பணிகளையும் ஒன்றுசேர்த்து செயல்படுத்திய ஒரே காலப் பகுதி 7-வது நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த டென்ஜி ஆட்சி முதல் எட்டாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 9-வது நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த கம்மு ஆட்சி முடிய,” என்று மேற்குறிப்பிடப்பட்ட என்சைக்ளோபீடியா குறிப்பிடுகிறது.
அந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியைத் தவிர வேறு எந்தச் சமயத்திலும் ஜப்பானிய பேரரசர்கள் உண்மையில் ஆளுகிறவர்களாக இருக்கவில்லை. ஒன்பதாவது நூற்றாண்டுக்குப் பின்னால், பேரரசரின் அதிகாரம் குறைந்தது. காலப்போக்கில் “இராணுவ தளபதி”யைக் குறிப்பிடும் ஷோகன் அரசியல் அதிகாரத்தைச் செலுத்த ஆரம்பித்தார். பேரரசர்தானே கொள்கையளவில் ஷோகனை நியமித்தபோதிலும், ஷோகன்தானே உண்மையான அரசராக இருந்தார். ஆனால் ஜப்பானில் பல நூற்றாண்டு ஆட்சிக்குப் பின்பு 1867-ல் ஷோகுனேட் அரசு அதன் அதிகாரத்தைப் பேரரசருக்கு ஒப்படைத்தது.
அந்த ஆண்டில் ஹீரோஹிட்டோவின் தாத்தா பேரரசர் மீஜி ஜப்பானின் அரசராக்கப்பட்டார். பேரரசர் “புனிதமானவரும் மீறத்தகாதவரும்” என்றுரைத்த ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தன் குடிமக்களுக்குக் கொண்டுவந்தார். ஆனால் முரணாயிருந்தது என்னவென்றால், பேரரசருக்கு அரசியல் அதிகாரம் அளிக்கப்பட்ட போதிலும், அவருக்கு அரசியல் வல்லமை அளிக்கப்படவில்லை. அவர் ஆளுகை செய்தார், ஆனால் உண்மையில் ஆட்சி செய்யவில்லை.
அந்த அரசியல் அமைப்புச் சட்டம் குறிப்பிட்டதாவது: “தேசத்தின் உரிய மந்திரிகள் பேரரசருக்குத் தங்களுடைய ஆலோசனையை [உதவியை] அளிப்பார்கள், அதற்குப் பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பார்கள்.” கொடன்ஷா என்சைக்ளோபீடியா குறிப்பிடுகிறபடி, “அரசியல் பொறுப்பு பேரரசர் மீது அல்ல, ஆனால் மந்திரிகள் மீதே இருந்தது என்பதைத் தெளிவாக அர்த்தப்படுத்தியது.”
எனவே அரசு மந்திரிகள் தாமே உண்மையில் அரசியல் வல்லமை பெற்றிருந்தனர். என்றபோதிலும், பேரரசர் தேசத்தின் மீது முழு அதிகாரமுடைய ஒரு கடவுளாகவே மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டார். இப்படியாக, பொது மக்கள் கீழ்ப்பட்டிருக்க அந்த அதிகார வகுப்பு பேரரசரின் பரம்பரையான மற்றும் அதிகாரப்பூர்வமாக வளர்க்கப்பட்ட தெய்வீகத்தைப் பயன்படுத்தினர். இந்த 20-வது நூற்றாண்டில் நடந்த போர்கள் பேரரசரின் பெயரில் நடந்த போர்களாகும். அவர் அற்புத சக்திகளையுடைய ஒரு கடவுள் என்பதாகவே மக்கள் பொதுவாக நம்பினார்கள்.
என்றபோதிலும், ஹீரோஹிட்டோ தன்னுடைய தெய்வீகத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. “நான் என்னை ஒரு கடவுளாகக் கருதியதேயில்லை,” என்று இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின்னர் அமெரிக்க இராணுவ தளபதியிடம் சொன்னார். “பேரரசர் தெய்வீகமானவர், ஜப்பானிய மக்கள் மற்ற இனத்தவரைவிட மேலானவர்கள் என்ற தவறான கருத்தை” மறுதலித்துப் பேசிய பின்பு, அவர் தன்னுடைய மனைவியைப் பார்த்து, “நீ ஏதாவது வித்தியாசத்தைப் பார்க்கிறாயா? இப்பொழுது நான் உன் பார்வைக்கு அதிகமாய் மனிதனாகத் தென்படுகிறேனா?” என்று கேட்டதாக அறிக்கை செய்யப்படுகிறது.
உண்மைதான், மற்ற ஜப்பானிருங்கூட தெய்வீகத்தின் தோற்றத்தைப் பார்த்து உண்மை நிலையைப் புரிந்துகொண்டார்கள். அவர்கள் அத்தாட்சியை வைத்து பகுத்தாராய்ந்தனர். உதாரணமாக, பேரரசரின் இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய மினொரு யமனாக்கா இப்படியாக விளக்கினார்: “பேரரசரின் தந்தை 47-வது வயதில் மரித்தார், அவருடைய தாத்தா 59-வது வயதில் மரித்தார், மற்ற அநேகரைவிட சீக்கிரமே மரித்தனர். எனவே பேரரசர் ஒரு கடவுள் என்று நான் எண்ணியதில்லை.”
யார் பொறுப்பு என்ற கேள்வி
ஹீரோஹிட்டோவின் நோயும் மரணமும் கூருணர்வுடைய ஒரு கேள்விக்கு இடமளித்தது: ஜப்பானின் இராணுவ தாக்குதலுக்குப் பேரரசர் என்ன பொறுப்பை ஏற்றார்? ஹீரோஹிட்டோ ஒரு தனி நபராக போர விரும்பாதவர், ஆனால் அவர் தன்னுடைய மந்திரிகளின் தீர்மானத்துக்கு இணங்கிச்செல்ல வேண்டியிருந்தது என்பது பெரும்பான்மையினருடைய கருத்து. எனவே, 1941-ல் ஐக்கிய மாகாணங்களைத் தாக்குவதற்கான தன்னுடைய மந்திரிகளின் திட்டங்கள் குறித்து அவர் கூறியது: “நான் அவர்களுடைய தீர்மானத்துக்கு எதிராகச் செயல்படமுடியவில்லை. இது ஜப்பானிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு இசைவாக இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன்.”
மறுபட்சத்தில், சரணடைவது குறித்த தீர்மானத்தில் தன்னுடைய மந்திரிகள் கருத்து வேறுபாடு கொண்டிருந்த சமயத்தில் ஹீரோஹிட்டோ முன்சென்று சரணடைவதற்கான தீர்மானத்தை எடுத்தார். அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு ஒரு சில நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 15, 1945-ல் முதல் முறையாக தேசிய வானொலியில் சரணடைதல் அறிவிப்பை செய்த அவருடைய குரலைக் கேட்டு அவருடைய குடிமக்கள் அதிர்ச்சியுற்றனர். “தாங்க முடியாததைத் தாங்கிக்கொள்ளும்படியும் சகித்துக்கொள்ள முடியாததைச் சகித்துக்கொள்ளும்படியும்” அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
மாதங்கள் கழிந்தன, பிரிட்டிஷ் அரசு பின்வரும் அறிக்கையைக் கொடுத்தது: “ஜப்பானியரைச் சரணடையச் செய்தது அணுகுண்டு அல்ல, அப்படிச் செய்யும்படியாகப் பேரரசர் விடுத்த ஆணைதான். அது இல்லாமல் இருந்திருந்தால், நம்முடைய படையெடுப்பு அதிக செலவை உட்படுத்தியிருக்கும்.”
எனவே போர் முடிந்த பின்பு ஹீரோஹிட்டோவைப் போர்க் குற்றவாளியாக விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்ற குரல் எழுப்பப்பட்டபோது, ஜப்பானைக் கைப்பற்றிய ஐ.மா. இராணுவ தளபதி ஜெனரல் டக்ளஸ் மக்-ஆர்தர் அதைக் கடுமையாக ஆட்சேபித்தார். அவர் பின்னர் விளக்கியதாவது: “பேரரசர் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டு தூக்கிலிடப்பட்டால், ஜப்பான் முழுவதும் இராணுவ ஆட்சியை அமல்படுத்தவேண்டியதாயிருக்கும், அநேகமாய்க் கொரில்லா போர் மூளக்கூடும் என்று நான் நம்பினேன்.”
செப்டம்பர் 26, 1945 அன்று மக்-ஆர்தர் ஹீரோஹிட்டோவை சந்தித்தார், வெகுவாகக் கவரப்பட்டார். போருக்கான பொறுப்பை உதறித்தள்ளுவதற்குப் பதிலாக, பேரரசர் தாமே “போர் நடவடிக்கை சம்பந்தமாகத் [தன்னுடைய] மக்கள் எடுத்துள்ள ஒவ்வொரு அரசியல் மற்றும் இராணுவ முடிவுக்கும் தான் முழு பொறுப்பையும் ஏற்பதாகக்,” கூறினார்.
என்றபோதிலும், பெரும்பாலான ஜப்பானியர், தன்னுடைய மந்திரிகளால் தூண்டப்பட்ட ஒரு போருக்கு ஹீரோஹிட்டோவைப் பொறுப்புள்ளவராக ஆக்குவதில்லை. எனவே, ஒரு வருடத்துக்கு முன்பு பேரரசர் தன் மரண படுக்கையில் இருந்தபோது, நாகசாகி மாநகர் முதல்வர் (மேயர்) ஷிட்டோஷி மோட்டோஷிமா, “படைத்துறைக் கல்வியில் என் சொந்த அனுபவத்திலிருந்து நான் சொல்லுவது என்னவென்றால், போருக்குப் பேரரசரே பொறுப்பு என்று கருதுகிறேன்,” என்று பகிரங்கமாகச் சொல்வதன் மூலம் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பைக் கிளப்பினார்.
போர்க் காலத்தில் இராணுவத்தில் சேர்ந்தவர்களுக்குப் போதனையளித்த ஒரு படைத்துறை அதிகாரியாக, மோட்டோஷிமா, “பேரரசர் நாமத்தில் மரிக்கும்படியாக மக்களிடம் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக,” குறிப்பிட்டார். தன்னுடைய குடிமக்களால் கடவுளாக வணங்கப்பட்ட பேரரசரின் குரல் போருக்கு எதிராக எழுப்பப்பட்டிருந்தால் பலத்த செல்வாக்குடையதாயிருந்திருக்கும் என்று மற்றவர்களைப் போலவே மோட்டோஷிமா உணருகிறார்.
கவலைக்குரிய ஒரு காரியம்
“ஆனால், அதெல்லாம் சரித்திரம்,” என்று சிலர் சொல்லிவிடக்கூடும். அப்படியிருக்கலாம், ஆனால், பரம்பரை நம்பிக்கைகள் அவ்வளவு எளிதாக மறைந்துவிடுவதில்லை. மத்திய ஜப்பானில் இஸே என்ற இடத்திலுள்ள அந்தப் பிரபலமான ஷின்டோ புனித ஸ்தலத்தில் ஒரு ஷின்டோ மத குரு அண்மையில் இப்படியாகச் சொன்னார்: “நம்முடைய பேரரசருக்கும் ஜப்பானிய இனத்தவருக்கும் தெய்வீக முதாதையராக சூரிய தேவதையைத் தொழுதுகொள்வதற்காக அநேகர் இங்கு வருகின்றனர்.”
பேரரசரிடம் காண்பிக்கப்பட்ட பக்தியின் அளவு, போருக்குப் பேரரசர் பொறுப்பேற்கவேண்டும் என்ற மோட்டோஷிமா கூறியதற்காக அவரைக் கொல்ல அச்சுறுத்தின காரியத்திலிருந்து விளக்கப்படுகிறது. ஒரு டின் பெட்ரோலுடன் மோட்டோஷிமாவின் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற ஒரு மனிதன் கைது செய்யப்பட்டான். “மோட்டோஷிமாவுக்கு மரணம்” என்பதை நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒலிபெருக்கியில் தெரு தெருவாக ஒலித்துக்கொண்டு சென்றன. வேறுவழிகளிலுங்கூட பேரரசருக்குப் பக்தி காண்பிக்கப்பட்டது.
உதாரணமாக, ஹீரோஹிட்டோவின் உடல் நிலை மோசமான போது, தங்கள் செயல்களைப் பல வழிகளில் கட்டுப்படுத்திக்கொள்ளும் ஒருவித அலை பரவியது. விழாக்களும் கொண்டாட்டங்களும் விருந்துகளும் ரத்து செய்யப்பட்டன. இது சந்தோஷமான விழாக்கால வியாபாரத்தை வெகுவாகப் பாதித்தது. பள்ளிப்பிள்ளைகள் தங்களுடைய விளையாட்டுப் போட்டிகளை ரத்துசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். யக்கூஃஜா, அல்லது சண்டைக் குழுக்களுங்கூட தங்கள் சண்டைகளையும் நிறுத்திக் கொண்டனர். ஜப்பானில் வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தி டெய்லி யொமியுரி (The Daily Yomiuri) சொன்னதாவது: “பேரரசரின் நோய்க்குத் தேசம் அளவுக்கு மிஞ்சி பிரதிபலிப்பு காண்பித்திருக்கிறது.”
இந்த வைராக்கிய செயல்களைக் கண்டு சிலர் அதிர்ச்சியடைந்தனர். அதை அவர்கள் ஏற்க மறுத்தாலும், அதை அவர்கள் பொதுவாகப் பொறுத்துக்கொண்டார்கள், அல்லது கண்டு காணாமல் இருந்தனர்; தாங்கள் எதிராக இருந்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஒருவேளை எண்ணிப்பார்த்திருக்கக்கூடும். “இந்த நிலையில் அப்படியே இருந்துவிடுவதுதானே பாதுகாப்பான காரியம்,” என்கிறார் ஓர் உளநூலர். ஆனால் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் இப்படியாகப் புலம்புகிறார்: “மக்கள் மற்றவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் பார்த்துக்கொண்டும் அதையே செய்துகொண்டுமிருக்கிறார்கள். நம்மைப் போருக்குள்ளாக்கிய அதே கட்டத்திற்குள்தான் நாம் இருக்கிறோம்.”
ஆனால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், விசேஷமாக யாரை வணங்க வேண்டும் என்பது நம்மைச் சூழ வாழ்பவர்களின் நடத்தையையும் வணக்கத்தையும் சார்ந்து தீர்மானிக்கப்படவேண்டுமா? சரியான ஆதாரமற்ற மத நம்பிக்கைகள் எந்தப் பலனுமில்லாத போர்களில் தங்களுடைய உயிரை இழக்கச் செய்திருக்கும் இலட்சக்கணக்கானோரை எண்ணிப்பாருங்கள்! கண்மூடித்தனமாக கும்பலோடு கும்பலாகப் போவது பேரழிவுக்கு வழிநடத்துவதாக இருக்கக்கூடும். இந்தச் சரித்திரப்பூர்வமான சம்பவங்களை எண்ணிப்பார்ப்பது, ‘நாம் அறியாததைத் தொழுதுகொள்ளுதல்’ பெருந்துன்பத்துக்கேதுவானதாக இருக்கக்கூடும் என்ற பாடத்தை நமக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். (யோவான் 4:22) அப்படியிருக்க, நாம் உண்மையிலேயே அறிந்திருப்பதை நாம் வணங்குகிறோமா என்பதை சோதித்துப் பார்ப்பது எவ்வளவு முக்கியம்! (g89 12/22)
[அடிக்குறிப்புகள்]
a ஒரு குறியிலக்கை (ஒரு கப்பல் போன்று) நோக்கித் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட ஜப்பானிய விமானப் படையின் அங்கத்தினர்களும் கமிக்காஸே என்று அழைக்கப்பட்டனர்.
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
பேரரசர் பெயரில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர்
[படத்திற்கான நன்றி]
Above: Official U.S. Navy photo.
[படம்]
போருக்குத் தான் பொறுப்பை ஏற்பதாக ஹீரோஹிட்டோ இராணுவ தளபதி டக்ளஸ் மக்-ஆர்தரிடம் ஒப்புக்கொண்டார்