இளைஞர் கேட்கின்றனர் . . .
என் பெற்றோர் சண்டைப்போட்டுக்கொண்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
உலகில் வேறு எவரைக் காட்டிலும் உங்களால் அதிகமாக நேசிக்கப்படும் இருவர் புண்படுத்தும் வார்த்தைகளால் ‘ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தார்களானால்,’ வாழ்க்கை அனுதின கொடுங்கனவாக இருக்கக்கூடும். (கலாத்தியர் 5:15) உண்மைதான், மிகச் சிறந்த விவாகங்களுங்கூட சில “உபத்திரவத்தை” கொண்டிருக்கும். (1 கொரிந்தியர் 7:28) ஆனால் பெற்றோரின் சண்டை கடுமையாக, வன்மையாக அல்லது வன்முறை கலந்ததாகவும் இருக்குமானால், ஏதோ கவலைக்குரிய விதத்தில் தவறாகிவிட்டிருக்கிறது.
அப்படியிருக்க, தங்களுடைய பெற்றோரின் விவாகம் முறிந்துவிடாதபடிக்கு ஒட்டுப்போட சில இளைஞர் முற்படுகின்றனர் என்பதில் ஆச்சரியம் இல்லை. “சண்டைப்போடுவதை நிறுத்துவதற்காக நான் அவர்களுக்கு இடையில் சென்று என்னுடைய தந்தையை அறைக்கு வெளியே கொண்டு செல்ல முயன்றேன்” என்றான் ஓர் இளைஞன். மற்றவர்கள் நிலைகுலைந்துபோய் அமைதியாக ஒதுங்கிவிடுகிறார்கள். “இப்படியாக அவர்கள் சண்டைப்போடும்போது நான் தூரமாக இருந்துவிட முற்படுவேன், நான் சோர்ந்துவிடாதிருக்கவே அவ்விதம் செய்வேன்,” என்றாள் ஓர் இளம் பெண். “ஆனால் உதவியளிக்க முற்படாததற்காக நான் பின்னர் வருந்துவேன்.”
எனவே ஒரு குடும்ப சண்டை எழும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
என்ன செய்யக்கூடது
அவர்களை அவமரியாதையாக நடத்தாதீர்கள்: சண்டைப்போடுகிற பெற்றோரைச் சலித்துக்கொள்வது மிகவும் எளிது. அவர்கள் உங்களுக்கு நல்ல முன்மாதிரியை வைக்க வேண்டியவர்கள்—கெட்ட மாதிரியை அல்ல. என்றாலும் பெற்றோரில் ஒருவரைக் கசந்துகொள்வது குடும்ப அழுத்தங்களைக் கூட்டிடவே உதவும். மிகவும் முக்கியமான காரியம், தங்களுடைய பெற்றோருக்கு மரியாதையையும் கீழ்ப்படிதலையும் காண்பிக்கும்படியாக யெகோவா தேவன் இளைஞர்களுக்குக் கட்டளையிடுகிறார்; அப்படிச் செய்வதை அவர்கள் கடினமாக்குகிறபோதிலும்.—யாத்திராகமம் 20:12; நீதிமொழிகள் 30:17-ஐ ஒப்பிடவும்.
யார் பக்கமும் சேராதீர்கள்: “சில சமயங்களில் என்னுடைய பெற்றோர் வாதாடிக்கொண்டிருக்கும்போது, அவர்களில் ஒருவர் நான் என்ன நினைக்கிறேன் என்று என்னைக் கேட்பார்கள்,” என்றாள் ஓர் இளம் பெண். “அது உண்மையிலேயே எனக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது.” உண்மைதான், உங்களை நேரடியாக உட்படுத்தும் ஒரு விவாதம் இருக்குமானால், அமைதலான, மரியாதையான பதில் பொருத்தமாயிருக்கும்.—நீதிமொழிகள் 15:1.
அல்லது உங்களுடைய பெற்றோரில் ஒருவர் கிறிஸ்தவராக இருக்கலாம், மற்றவர் அவிசுவாசியாக இருக்கக்கூடும். மத சிக்கல்கள் ஏற்படலாம், அதில் நீங்கள் உங்களுடைய தேவபயமுள்ள பெற்றோருடன் சேர்ந்து நீதிக்காக நீங்கள் நிலைநிற்கை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்படலாம். (மத்தேயு 10:34–37) அப்படியிருந்தாலும், அவிசுவாச பெற்றோரை என்றைக்காவது ஆதாயப்படுத்திக்கொள்வதற்காக “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” அப்படிச் செய்ய வேண்டும்.—1 பேதுரு 3:15.
ஆனால் ஒரு விவாதம் தெளிவாகவே அவர்களுடைய சச்சரவாக இருக்குமானால், நடுநிலை வகிப்பது ஞானமான காரியம்.a நீதிமொழிகள் 26:17 எச்சரிக்கிறது: “வழியே போகயில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.” நீங்கள் யார் பக்கமாவது சேர்ந்துவிடுவீர்களானால், உங்களுடைய பெற்றோரில் ஒருவருடைய விரோதத்தை வளர்ப்பவர்களாய்—ஒருவேளை ஒருவரைப் பிரித்துப்போடும் ஆபத்துக்குள்ளாகிறீர்கள்.
பெற்றோருடைய சண்டையில் ஒருவர் சார்பாக சேர்ந்துவிடும் ஓர் இளைஞன் “புரிந்துகொள்வதற்கு உண்மையிலேயே அதிக சிக்கலாக இருக்கும் ஒரு நிலையின் கைப்பிடியைப் பற்றிக்கொள்ள முற்படுகிறான்.” குடும்ப ஆலோசகர் மிட்செல் ரோசன் டீன் பத்திரிகையில் இப்படியாகச் சொன்னார். விவாக சண்டைகள் “ஏராளமான அம்சங்களை உட்படுத்துகின்றன, அவள் சரி, அவன் சரியில்லை என்ற ஒரு காரியம் அல்ல,” என்றார். ஒரு சண்டையின் கருவில் பெரும்பாலும் பல ஆண்டு காலமாக படிப்படியாக வளர்ந்த குறைபாடுகளும் விரோதங்களும் இருக்கின்றன. எனவே சாப்பாடு ஒரு சில நிமிடங்கள் தாமதமாகிவிட்டது என்றோ, அல்லது குளியலறை அசுத்தமாக விடப்பட்டிருக்கிறது என்றோ தாய் அல்லது தந்தை குறைகூறுகிறார் என்றால், கண்ணுக்குத் தெரிந்த காரியங்களைவிட அதிகம் உட்பட்டிருக்கலாம்.
பைபிள் பின்வருமாறு புத்திமதி அளிக்கிறது: “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” (ரோமர் 12:18) எனவே நடுநிலைமையோடிருக்க முயலுங்கள். உங்களுடைய பெற்றோர் உங்களை ஒரு சார்பாக இருக்க வற்புறுத்தினால், அப்பொழுது என்ன? “அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்,” என்று பைபிள் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 17:27) ஆம், உங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிவிப்பதிலிருந்து—அல்லது அதைவிட மோசம், கூச்சலிடுவதிலிருந்து—விலகுங்கள். ஒருவேளை இப்படியாகத் தயவுடன் சொல்லுவதன் மூலம் நீங்கள் விடைபெற்றுக்கொள்ளலாம்: ‘அம்மா, அப்பா, நான் உங்கள் இருவரையுமே நேசிக்கிறேன். ஆனால் என்னை எவர் பக்கமும் சேரச் சொல்லாதீர்கள். இது நீங்களே உங்களுக்குள் தீர்த்துக்கொள்ளவேண்டிய விஷயம்.’
சண்டையில் சேராதீர்கள்: இரண்டு பலத்த சப்தங்கள் சேர்ந்தாலே மோசம். அந்தப் பல்லவிக்கு ஏன் மூன்றாவது குரலைக் கூட்ட வேண்டும்? நீதிமொழிகள் 15:18 சொல்லுகிறது: “கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.” சச்சரவில் குதித்திட மறுத்துவிடுங்கள். ஒரு சண்டை ஏற்படப்போகிறது என்பதை உணர்வீர்களானால், நீதிமொழிகள் 17:14-ஐ நினைத்துக்கொள்ளுங்கள்: “சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.”
ஒருவேளை உங்கள் அறைக்குச் சென்று வாசிக்கவோ, படிக்கவோ, அல்லது இசை இசைக்கவோ செய்யலாம். அல்லது ஒரு நண்பரை சந்திக்கச் செல்வதற்கு அது தகுந்த நேரமாக இருக்கக்கூடும். ஏதாவது பிரயோஜனமானதை செய்வது சச்சரவின் காட்சியிலிருந்து உங்களை விலக்குவது மட்டுமின்றி அந்தக் காரியங்களை உங்கள் மனதிலிருந்து விலக்குகிறது.
ஒரு விவாக ஆலோசகராக இருக்க முயலாதீர்கள்: ஒரு நீதிமொழி கூறுவது போல்: “விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.” (நீதிமொழிகள் 18:19) சண்டைப்போடும் பெற்றோர் பெரும்பாலும் “கோட்டைத் தாழ்ப்பாள்கள்” போன்ற விரோதமாகிய மாபெரும் தடையை அமைத்துக்கொள்கின்றனர். அந்தத் தடையை முறித்திடுவதற்கான அறிவோ அல்லது அனுபவமோ உங்களுக்கு இருக்கிறதா? அநேகமாக இருக்காது.
உங்களுடைய பெற்றோரின் விவாகப் பிரச்னைகளில் உங்களை உட்படுத்திக்கொள்வது அவர்களுக்குக் காரியங்களைக் கடினமாக்கக்கூடும். நீதிமொழிகள் 13:10 சொல்லுகிறது: “அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.” ஆம், தனிமையில் ஒருவரோடொருவர் காரியங்களைப் பேசிக்கொள்வதன் மூலம் உங்கள் பெற்றோர் தங்களுடைய பிரச்னைகளை நல்ல விதத்தில் தீர்த்துக்கொள்ள முடியும்.—நீதிமொழிகள் 25:9-ஐ ஒப்பிடவும்.
மற்றும், குடும்ப மத்தியஸ்தர் ஸ்தனம் நீங்கள் நினைப்பதைவிட அதிகத்தைக் கேட்பதாயிருக்கும். விவாக ஆலோசகராக இருப்பதில் தன்னுடைய சாமர்த்தியத்தைக் காண்பிக்க முயன்ற கோர என்ற ஓர் இளம் பெண்ணைப் பற்றி பருவ வயதுப் பிரச்னைகள் என்ற தன் புத்தகத்தில் கேரலின் மக்ளென்ஹான் வெஸ்ஸன் கூறுகிறார். விளைவு என்ன? அவளுடைய பெற்றோரின் விவாக உறவு முன்னேற்றம் கண்டது, ஆனால் கோரவுக்கு வயிற்றுக் கோளறுகள் ஏற்பட ஆரம்பித்தது. கேரலின் வெஸ்ஸன் இப்படியாக முடிக்கிறார்: “உங்களுடைய பெற்றோர் தங்களுடைய பிரச்னைகளைக் கையாளட்டும். வளரிளமைப் பருவத்தினராகக் கையாளுவதற்கு உங்களுக்குப் போதுமான காரியங்கள் இருக்கின்றன.”
உங்களுக்குச் சாதகமாக அமைய பெற்றோருக்குள் விரோதத்தை உண்டாக்காதீர்கள்: குடும்பப் பிரச்னைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள சில இளைஞர் சதி செய்கின்றனர். அம்மா “வேண்டாம்!” என்று சொல்லும்போது, அவர்கள் அப்பாவின் உணர்ச்சிகளின் பேரில் செயல்படுகிறவர்களாக அவருடைய வாயிலிருந்து ஒரு “சரி”யை வரவழைக்கின்றனர். புத்திசாலித்தனமாகப் பெற்றோரைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள திட்டங்களை செயல்படுத்துவது ஒருவருக்கு சில சுதந்திரத்தை அளிப்பதாயிருந்தாலும், காலப்போக்கில் அது குடும்பச் சண்டையை நீட்டிக்கத்தான் செய்கிறது. தன்னுடைய பெற்றோரை உண்மையிலேயே கனப்படுத்தும் ஓர் இளைஞன் அப்படிப்பட்ட அதிகார துர்ப்பிரயோக செயலில் ஈடுபடமாட்டான்.
நிலைமையை மோசமாக்காதீர்கள்: சோம்பலான அல்லது முரட்டுத்தனமான நடத்தை, பள்ளியில் மோசமாக நடப்பது, உங்களுடைய மார்க்குகள் குறைவது—இவை வெறுமென உங்களுடைய பிரச்னைகளைக் கூட்டுகின்றன. உங்களுடைய செயல்களுக்குரிய பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும், உங்களுடைய கட்டுப்பாடற்ற நடத்தைக்கு உங்களுடைய பெற்றோரின் சிக்கல் காரணமாக இருக்க அனுமதியாதேயுங்கள். உதவியாயிருப்பதிலும் ஒத்துழைப்பதிலும் உங்களாலான அனைத்தையும் செய்யுங்கள்.
குடும்ப நெருக்கடியினூடே வாழ்வது
தெளிவாகவே, உங்கள் பெற்றோரை நீங்கள் மாற்ற முடியாது. என்றபோதிலும், அவர்களில் நீங்கள் நல்ல செல்வாக்கைச் செலுத்திட முயலலாம். உங்களாலானமட்டும் நம்பிக்கையான சந்தோஷமான மனநிலை கொண்டவர்களாக இருக்க முற்படுங்கள். நினைவிருக்கட்டும், அன்பு “சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.” (1 கொரிந்தியர் 13:7) காரியங்கள் முன்னேற்றம் காண ஜெபிப்பதை நிறுத்திவிடாதீர்கள். (பிலிப்பியர் 4:6, 7) குடும்ப ஆலோசகர் க்ளேட்டன் பார்போ மேலும் பரிந்துரை செய்வதாவது: “அவர்கள் ஒவ்வொருவரையும் நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை [உங்கள் பெற்றோர்] அறிந்துகொள்ளட்டும்.” அதுமட்டுமே குடும்ப அழுத்தங்களைத் தளர்த்திடும்.
உதவியைப் பெற்றுக்கொள்ளும்படியாக உங்கள் பெற்றோரைத் துரிதப்படுத்திப் பார்க்கலாம். ஒரு சூடான வாக்குவாதத்தின் போது அப்படிச் செய்யக்கூடது. நீதிமொழிகள் 25:11 ‘ஏற்ற சமயத்தில் சொன்ன சரியான வார்த்தை’ குறித்து பேசுகிறது. காரியங்கள் அமைதலான பின்னர் மற்றும் உங்களுடைய பெற்றோர் செவிகொடுக்கும் மனப்பக்குவத்தில் இருக்கும்போதும் அப்படிச் செய்யலாம். (பெற்றோரில் ஒருவர் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படுவோராய் இருந்தால், காரியங்களை நியாயமான விதத்தில் கலந்துகொள்ளும் மனச்சாய்வுடைய ஒருவரை அணுகிப்பாருங்கள்.)
உங்களுடைய அன்பை உறுதிப்படுத்துவதன் மூலம் ஆரம்பியுங்கள். அவர்களுடைய சண்டை உங்களை எவ்விதம் பாதிக்கிறது என்பதை அமைதலாக விளக்குங்கள். இது செய்வதற்கு எளிதல்ல. வீட்டில் பிரச்னை என்ற தன் புத்தகத்தில் சாரா கில்பர்ட் ஒப்புக்கொள்வதாவது, அப்படிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளும் போது, “அது உன்னுடைய வேலை இல்லை—அதில் தலையிடாதே!” என்ற வார்த்தைகளை சந்திக்க நேரிடும். என்றபோதிலும், “அது உங்களுடைய வேலையாக இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று அவள் ஆலோசனை கொடுக்கிறாள். அவர்களுடைய சண்டை எப்படி உங்களை பயப்படுத்துகிறது, சோர்வுண்டாக்குகிறது, எரிச்சலடைய செய்கிறது என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் தலையிட நீங்கள் விரும்பாவிட்டாலும், அவர்களுடைய சண்டை உங்கள் வாழ்க்கையின் அமைதியைக் குலைக்கிறது! உங்களுடைய பெற்றோர் உதவியை நாடும்படி—ஒருவேளை நம்பிக்கையுள்ள ஒரு கிறிஸ்தவ மூப்பரை நாடும்படி சொல்லிப்பாருங்கள்.b
அவர்களுடைய விவாகச் சண்டையின் பாதிப்புகளை நேரடியாகக் காணும்படிச் செய்வதன் மூலம், தங்களுடைய பிரச்னைகளுக்குப் பரிகாரம் தேடும் காரியத்திற்கு அதிக கவனம் செலுத்திட—ஒருவேளை சண்டைப்போடுவதை நிறுத்திடவும் உங்கள் பெற்றோர் தூண்டப்படலாம். (g89 12/8)
[அடிக்குறிப்புகள்]
a மூர்க்கமான ஒரு தந்தை தன் குடும்பத்தை வன்முறையால் அச்சுறுத்தும் சூழ்நிலைகளை நாங்கள் குறிப்பிடவில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், குடும்ப அங்கத்தினர்கள் தங்களை சரீரப் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக வெளி உதவியை நாடிட வற்புறுத்தப்படலாம்.
b உங்களுடைய பெற்றோர் நியாயமற்றவர்களாக அல்லது செவிகொடுக்க மனமற்றவர்களாக இருந்தால், முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவரிடம் தனிப்பட்ட விதத்தில் சொல்லுவது ஞானமாயிருக்கக்கூடும். அவரோ அல்லது அவளோ உங்களுடைய பெற்றோரின் விவாக வாழ்க்கையில் தலையிடுகிறவராக இருக்க முடியாது, ஆனால் வரவேற்கப்படத்தக்க உணர்ச்சிப்பூர்வ ஆதரவையும் நல்ல ஆலோசனையையும் கொடுக்கலாம்.
[பக்கம் 26-ன் படம்]
பெற்றோரின் சச்சரவுகளுக்கு இடையே இளைஞர் வெற்றிகரமான மத்தியஸ்தராய் இருக்க முடியுமா?