இளைஞர் கேட்கின்றனர் . . .
சரியான உடைகளைத் தெரிந்துகொள்வதில் இருக்கும் இரகசியம் என்ன?
மைக் ஆடைகளைத் தெரிந்தெடுப்பதை—அவற்றைச் சரியான விலைக்கு வாங்குவதையும் அறிந்துவைத்திருந்தான். சில சமயங்களில் அவனுடைய குடும்ப அங்கத்தினர் தங்களுக்குரிய ஆடைகளை வாங்கும் பொறுப்பை அவனிடம் விட்டுவிடுவர்! அவன் ஒருமுறை கடைக்குச் சென்றபோது, தன் தாய்க்காகவும், விவாகமான சகோதரிக்காகவும், உடன்பிறந்தாரின் எட்டு வயது மகளுக்காகவும்—அவர்கள் எதிர்பார்த்த சரியான அளவிலும் பாணியிலும் அமைந்த ஆடைகளை வாங்கிவந்தான்! அவற்றை வாங்கும் சமயத்தில் தனக்காகவும் ஒரு மேலாடையைக் கால் விலையில் வாங்கினான். மைக்குக்கு இது ஒரு பாரமாகத் தோன்றவில்லை, ஆனால் உண்மையான மகிழ்ச்சியைக் காணும் ஒன்றாக இருந்தது.
மைக்கின் வாங்கும் திறமை ஒருவேளை உங்களுக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் அநேக இளைஞரைப் போல, நீங்கள் பள்ளியிலும், வேலையிலும், விளையாட்டிலும் சிறந்த தோற்றத்தைக் கொண்டிருக்க விரும்புவீர்கள். ஆனால் பிரச்னை என்னவென்றால், ஒரு சில பாணிகள் இளைஞர் மத்தியில் நவநாகரிகமானது என்று கருதப்படுவதுதானே அது உடுத்துவதற்குச் சரியான உடை என்பதையோ, அல்லது “வந்திருக்கிற ஒன்றை” வாங்குவதுதானே உங்களுடைய பணத்தை சிறந்தவிதத்தில் உபயோகிப்பதாகும் என்பதையோ குறிக்காது. எனவே, உங்களுடைய சொந்த உடையைத் தெரிந்துகொள்வதற்கான சுதந்திரத்தை நீங்கள் கொண்டிருப்பதற்கு உங்கள் பெற்றோர் அனுமதித்திருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன், சரியான உடைகளைத் தெரிந்துகொள்வதும் வாங்குவதும் எப்படி என்பதன்பேரில் இங்கு ஒரு சில துப்புகளைக் காண்பீர்கள்.
சரியான “உடையைத்” தெரிந்துகொள்ளுதல்
முதலில், உடை சம்பந்தப்பட்ட காரியத்தில் எதுவும் பொருந்தும் என்ற எண்ணத்தை தவிர்த்துவிடலாம். உங்களுடைய வயது கூடிக்கொண்டே போகிறது, எனவே உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கைப் பணியைக் கொண்டிருப்பதும், ஒருவேளை ஒரு குடும்பத்தை ஆதரிக்க வேண்டிய எதிர்பார்ப்பும் உங்களுக்கு முன்னால் இருக்கிறது. நீங்கள் எவ்விதம் உடை உடுத்துகிறீர்கள் என்பது உங்களுடைய வேலை வாய்ப்புகளை மட்டும் பாதிப்பதாயில்லை, ஆனால் நீங்கள் மற்றவர்களால் எவ்விதம் நோக்கப்படுவீர்கள், நடத்தப்படுவீர்கள் என்பதையும் பாதிக்கும். அதைவிட முக்கியமாக, கிறிஸ்தவர்களாகிய நாம் “நமக்கே பிரியமாய் நடவாமல்,” ஆனால் நாம் என்ன செய்கிறோம்—அல்லது உடுத்துகிறோம்—என்பது மற்றவர்களை எப்படி பாதிக்கும் என்பது குறித்தும் அக்கறை கொள்ள வேண்டும்.—ரோமர் 15:1.
நீதிமொழிகள் 25:20 “குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்” பற்றி பேசுகிறது. என்னே பொருத்தமற்றது! எனவே சமய சந்தர்ப்பத்திற்குப் பொருந்தாத ஒரு நவநாகரிக உடையை உடுத்துவதும் அந்தளவுக்குப் பொருத்தமற்றதாயிருக்கிறது. ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் ஒரு நடிகர் தன்னுடைய பாத்திரத்திற்கேற்ற உடையைத் தெரிந்துகொள்வதில் கவனமுள்ளவராயிருக்கிறார். உண்மையான வாழ்க்கையிலும் நம்முடைய பாகம் வித்தியாசமான “உடைகளைத்” தேவைப்படுத்துகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு வேலைத் தேடி நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறீர்களா? அப்பொழுது வியாபாரத் துறையினர் அணியும் உடை பொருத்தமாக இருக்கும். நீங்கள் பள்ளிக்குப் போகிறீர்களா? அப்பொழுது உங்களுடைய தோற்றம் சாதாரணமாகவும், ஆனால் ஒழுங்காகவும் இருப்பதை விரும்புவீர்கள்.
யெகோவாவின் சாட்சியாயிருந்த மில்லி வன்முறைச் சூழல் இருந்த ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். ஒரு கிறிஸ்தவ கூட்டத்துக்கு செல்லும் விதத்தில் உடுத்தியிருப்பது மற்றவர்களுடைய கவனத்தை அளவுக்கு மிஞ்சி ஈர்ப்பதாயிருக்கும். எனவே அவள் பள்ளி நேரத்தில் ஒரு ஜோடி அடக்கமான ஜீன்கள் அணிந்தாள், அது அவளுடைய பள்ளியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் பள்ளி நேரத்திற்குப் பின்பு அவள் பைபிள் கல்வி சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபட்டதால், அவள் இன்னொரு ஆடையை உடன் எடுத்துச்சென்றாள். வித்தியாசமான பாகம், வித்தியாசமான உடை.
யெகோவாவின் சாட்சிகளின் மத்தியிலிருக்கும் இளைஞர்கள் கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் பொதுவாகச் செய்யப்படும் பிரசங்க வேலைக்கும் தாங்கள் என்ன உடை உடுத்துகிறார்கள் என்பதற்கு அதிக கவனம் செலுத்துகின்றனர். உதாரணமாக, ஜீன்களும் ஸ்னீக்கர்களும் பள்ளிக்குப் பொருத்தமாயிருந்தாலும், வணக்கத்திற்குச் செல்லும் சமயங்களுக்குப் பொருத்தமற்றதாகிறது; கடவுளுடைய ஊழியராயிருக்கும் ஒருவருடைய உரிமைப்பாராட்டலுக்கு விலக்காயிருக்கிறது.—2 கொரிந்தியர் 6:3-ஐ ஒப்பிடவும்.
பழமைப் பேணிய உடை உடுத்துவதின் மதிப்பு
உடையின் பேரில் இளம் ரூடியின் தத்துவம் உங்களுக்கு அதிசயமாயிருக்கக்கூடும். அவன் சொல்லுகிறான்: “மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக உடுத்திவந்திருக்கும் உடையை நான் விரும்புகிறேன்.” சந்தேகத்திற்கு இடமின்றி காலங்கடந்தவனா? இல்லவே இல்லை. “இவ்வுலத்தின் வேஷம் கடந்துபோகிறது” என்றாலும் அடிப்படைப் பாணியில் மாற்றமில்லை என்பதை ரூடி கற்றிருக்கிறான். (1 கொரிந்தியர் 7:31) அவனுடைய கொள்கை என்னவென்றால்: அதிக பிரபலமாக இருக்கும் எதையும் உடுத்தவேண்டாம், அது சீக்கிரத்தில் இல்லாமற்போகும்! “இப்படியாக நீங்கள் எப்பொழுதுமே ஒரு பாணியில் இருக்கிறீர்கள்,” என்று ஆலோசனைக் கூறுகிறான் ரூடி.
நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். உதாரணமாக பழமைப் பேணிய வெட்டுகள் “மேன்மையான முதலீடாகும்” என்று அலுவல்துறை அறிவுரையாளர் அமீலியா ஃபேட் கூறுகிறார். அவை உண்மையிலேயே காலங்கடந்தவை அல்ல, ஏனென்றால் அதன் தோற்றம் குறிப்பாக அமைந்தில்லை. ஊக்க ஊதியம் என்னவென்றால், பழமைப் பேணிய பாணிகளை உங்களுடைய அலமாரியிலுள்ள மற்ற உடைகளுடன் பொருத்திக்கொள்வது பொதுவில் எளிதாய் அமைகிறது.
சில நவநாகரிகப் பாணிகள் கிறிஸ்தவர்களுக்குப் பொருத்தமற்றது. மற்றவை விரும்பத்தகுந்தது. ஒரு குறிப்பிட்ட பாணியில் அமைந்த உடை உங்களுக்கு நன்றாயிருப்பதுமட்டுமின்றி, உங்களுடைய அலமாரியிலுள்ள மற்ற உடைகளுக்கும் பொருந்துவதாயிருக்கிறது என்றால், உங்களுடைய பெற்றோர் அதை அங்கீகரிக்கிறார்கள் என்றால், அதை அணிந்துகொள்வது குறித்து நீங்கள் யோசிக்கக்கூடும். ஆனால் புதுப்பாணிகளுக்கு அடிமையாவது குறித்து எச்சரிக்கையாயிருங்கள்! புதுப்பாணிகளின் ஆலோசகர் கேரல் ஜாக்சன் கூறுகிறார்: “புதுப்பாணியில் ‘இருக்க’ வேண்டும் என்ற புதுப்பாணிப் போக்கை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்றால், தற்போதைய போக்கு உங்களுக்குப் பொருத்தமாக இல்லாமலிருந்தாலும், நீங்கள் உங்களையே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்.”
உடையில் பழமைப் பேணியவர்களாயிருப்பதில் மற்ற அனுகூலங்களும் உண்டு. இது பள்ளிகளிலும் வேலை செய்யும் இடங்களிலும் பாலுணர்வு சம்பந்தப்பட்ட தொந்தரவுகளையும் அழுத்தங்களையும் ஊக்குவிப்பதில்லை என்பதைச் சில இளம் பெண்கள் காண்கிறார்கள். மேலும், பரம்பரைப் பாணிகளைப் பற்றியிருக்கும் ஓர் இளம் பெண்ணோ அல்லது பையனோ மற்றவர்களால் முதிர்ச்சியுள்ளவள்[வன்], நிலையானவள்[வன்], புதுப்பாணியின் ஒவ்வொரு அலையாலும் அடித்துச்செல்லப்படத ஒருத்தி அல்லது ஒருவன் என்றும் நோக்கப்படுவாள்[வான்].
உதாரணமாக, டேமி முழு நேர சுவிசேஷகியாகப் சேவிக்கும் ஓர் இளம் பெண். தான் வசிக்கும் இடத்தில் முழங்காலுக்கு மேல் அணியும் உடை புதுப்பாணியாக இருந்தாலும், அவள் சொல்லுகிறாள், “எனக்கோ முழங்காலுக்குச் சற்றே கீழ் அமைந்த உடை வசதியாக இருக்கிறது.” இது கிறிஸ்தவ அடக்கத்துக்கு ஏற்றது. (1 தீமோத்தேயு 2:9) உண்மைதான், அடக்கமான உடை என்பதில் தராதரம் உலகமெங்கிலும் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகிறது. ஒரு குறிப்பிட்டப் பாணி பொருத்தமா இல்லையா என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்குமானால், பெற்றோரிடமோ அல்லது வயதில் பெரிய ஒரு நண்பரிடமோ அதைப் பற்றிப் பேசுங்கள்.
வாங்குவதில் கைதேர்ந்தவர்களாயிருத்தல்
“திறம்பட்ட வழிநடத்துதலைக் கொண்டு யுத்தம் பண்ணு,” என்று பைபிள் நீதிமொழிகள் 20:18 (NW) அறிவுரை கூறுகிறது. கடைகளில் பொருட்கள் வாங்குவது போன்ற வாழ்க்கை சார்ந்த காரியங்களுக்குங்கூட திறம்பட்ட வழிநடத்துதல் தேவை. உதாரணமாக, உங்களை மேம்படுத்திக் காட்டும் உடைகளைக் கண்டுபிடிப்பது கஷ்டமாயிருக்கிறதா? ஒரு பொது நூலகத்திற்குச் சென்று சற்று ஆராய்ச்சியை உட்படுத்துவதன்மூலம் நீங்கள் திறம்பட்ட வழிநடத்துதலைப் பெறலாம்! முக வடிவம், கழுத்து அளவு, உடற்கட்டு போன்ற காரியங்களில் பிரச்னையை ஈடுசெய்வதற்கு நீங்கள் வித்தியாசமான வெட்டுகள், வண்ணங்கள் மற்றும் பாணிகளைப் பயன்படுத்துவது குறித்து புத்தகங்களும் கட்டுரைகளும் இருக்கின்றன.
நீங்கள் வாங்கும் துணியின் தரத்தைப் பற்றியது என்ன? இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது ஓரளவுக்கு ஏழ்மையிலிருந்தாலும், அவரை மரணத்துக்குட்படுத்தியவர்கள் அதை யார் எடுத்துக்கொள்வது என்பதன் பேரில் சீட்டுப்போட்டுப் பார்க்குமளவுக்கு அது உயர்ந்த தரமுடையதாயிருந்தது! (யோவான் 19:23, 24) அதுபோல, உங்களுடைய நிதி நிலை அளவோடு இருந்தாலும், வாங்குவதற்கு முன்பு நீங்கள் பணத்தைச் சேர்த்து வைக்கவேண்டியிருப்பினும் நீங்கள் தரமுள்ள ஆடைகளைக் கொண்டிருக்க முற்பட வேண்டும். காலப்போக்கில், நீடித்து உழைக்கும் அதிக விலையுள்ள, ஆனால் தரமான உடை குறைவாக உழைத்திடும் “பேரத்தை” விட மலிவாக அமைந்திடும்.
தரத்தைப் பார்க்கும் திறனை நீங்கள் எப்படி விருத்திசெய்யலாம்? தரமுள்ள துணிமணிகளை விற்பனை செய்யும் விலையுயர்ந்த கடைகளில் பாருங்கள். நல்ல உடைகள் பார்ப்பதற்கும் அணிவதற்கும் எப்படி இருக்கிறது என்பதை அறிய வாருங்கள். நேர்த்தியான தோற்றம் என்ற புத்தகம் கூறுகிறது: “ஒரு பெயர் உங்களை கவர்ந்திட வேண்டாம். அந்தத் துணி அதன் சொந்த கால்களில் நிற்க வேண்டும் . . . பொறிக்கப்பட்ட உரிமைத் தகவல் என்னவாயிருந்தாலும், தரத்தில் குறைந்த துணி பேரமாக இருக்க முடியாது.” துணியைத் தொட்டுப் பாருங்கள். கழுத்துப்பட்டை, உள்துணி மற்றும் பட்டன் துவாரங்களைப் பாருங்கள். இரட்டைத் தையல் இருக்கிறதா என்று பாருங்கள்.
மைக் (ஏற்கெனவே குறிப்பிடப்பட்டவன்) தரத்தைப் பார்க்கும் திறனை விருத்திசெய்திருக்கிறான். இப்படியாக, அவன் வாங்கிய மேலாடை பேரம்பேசப்பட்டு உண்மையிலேயே மலிவாக வாங்கப்பட்ட ஒன்று! என்றபோதிலும், “‘பேரங்களால்’ ஏமாற்றமடைந்து விடாதீர்கள்,” என்று எச்சரிக்கிறாள் அமீலியா ஃபேட். உங்களுடைய அலமாரியிலிருக்கும் அநேக உடைகளுக்குப் பொருந்தும் முழு விலை கொடுத்து வாங்கப்படும் கம்பளிச் சட்டை எதற்குமே பொருந்தாத “பேரச்” சட்டையைவிட அதிகமாக உழைத்திடக்கூடும். நீதிமொழிகள் 21:5 கூறுகிறது: “பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.” நீங்கள் அவசரத்தில் இருக்கும்போது வாங்குவதைத் தவிருங்கள். கடைகளில் அதிக கூட்டம் இல்லாதபோது வாங்கச் செல்லுங்கள். நீங்கள் என்ன வாங்கப் போகிறீர்கள் என்பதை அறிந்தவர்களாயிருங்கள். உடையின் தரம், பாணி, வண்ணம், மற்றும் விலை ஆகியவற்றை உங்கள் மனதில் எந்தளவுக்குக் கொண்டிருக்கிறீர்களோ, அந்தளவுக்கு உங்களுக்கு உண்மையிலேயே தேவையற்ற ஒன்றை வாங்கும் பக்கப் பாதையை எடுக்கமாட்டீர்கள்.
உங்களுடைய தேவையைத் திட்டவட்டமாகத் தெரிவிப்பீர்களானால், விற்பனையாளர் உங்களுக்கு அதிக உதவியாயிருக்கக்கூடும். (ஆம், ஒரு பெண் விற்பனையாளரின் உதவியோடுதான் மைக் தன்னுடைய குடும்பத்தின் பெண் அங்கத்தினருக்கு உடைகள் வாங்க முடிந்தது.) ஆனால் விற்பனையாளர்களின் புகழ்ச்சி உங்கள் நிதானத்தை இழந்துவிடுவதற்கு வழியாக அமைந்திடுவதற்கு இடங்கொடுக்காதீர்கள். “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.
நீங்கள் கடைக்குச் செல்லும்போது, அதற்குத் தகுந்தவாறு உடுத்தி, தலைசீவி செல்லுங்கள். ஒரு சூட் ஜாக்கட் உங்கள் மேல் நன்றாக இருக்கிறது என்பதை நீங்கள் ஒரு T-ஷர்ட் போட்டிருந்தால் எப்படி சொல்ல முடியும்? நீங்கள் ஸ்னீக்கர் அணிந்திருப்பீர்களானால், ஒரு மேலாடை நேர்த்தியாக இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும்? நீங்கள் கவலையீனமாக உடுத்தியிருந்தால், “மட்டுப்பட்ட விருப்பமுடையவர்கள்/அல்லது செலவு செய்வதற்குப் பணம் இல்லாதவர்கள்” என்று விற்பனையாளர் உங்களை எடைபோட்டுவிடக்கூடும், மற்ற வாடிக்கையாளரைக் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று ஓர் எழுத்தாளர் குறையாகக் கூறுகிறார்.
கடைசியாக, கடைக்குச் செல்லும் அநேக சமயங்களில் “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்,” என்பதைக் காண்பீர்கள். (பிரசங்கி 4:9) ஓர் உடை பின்னே பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது, பெரியதாக இருக்கிறதா, அதிக இறுக்கமாக இருக்கிறதா, அல்லது வேறு வழியில் அடக்கமற்றதாயிருக்கிறதா என்பதை ஒரு நண்பனோ அல்லது ஒரு பெற்றோரோ உங்களுக்குச் சொல்லக்கூடும்.
அதிக முக்கியமான காரியங்கள்
பிலிப்பியர் 1:9-ல் கிறிஸ்தவர்கள் ‘அதிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று புத்திமதி அளிக்கப்படுகிறார்கள். வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காரியங்கள் கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றிருப்பது—உடை அல்ல. சில இளைஞர்கள் குறையற்றவிதத்தில் உடை உடுத்தினாலும், தங்களுடைய விசுவாசத்தை வெளியரங்கமாக அறிக்கை செய்வதில் ஒழுங்கற்று இருக்கிறார்கள் என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கவேண்டியிருக்கிறது.
எனவே பொருட்களை வாங்குவதில் திறம்பட்டவர்களாயிருப்பதும் உங்களுடைய நிதி நிலை இடமளிப்பதற்கு ஏற்ப நல்ல தோற்றமுடைய விதத்தில் காணப்படுவதும் நல்லது என்றாலும், ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவனாவதில் கவனம் செலுத்துங்கள். அந்தப் பாகத்தை வாழக் கற்றுக்கொள்ளுங்கள், அதற்காக உடுத்துவது என்பது இயல்பாகவே வந்துவிடும். (g89 10/8)
குறிப்பிட்ட போக்குடைய உடைகளின் பாணி காலங்கடந்ததாகிவிடுகிறது. வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அமையும் பழமைப் பேணிய பாணிகள் நிலைக்கக்கூடியவை